நின்னை - 29
பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம் இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான்.
அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க,
"இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான்.
"டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர்.
வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான்.
சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.
யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில்.
பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.
ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்தை காட்டி "இது மாதிரி" என்று விட்டார், அதில் சாத்வி அழகாக இருப்பாள் என்ற கற்பனையுடன்.
அவர் எதிர்பாராதது கழுத்தை இறக்கி வெட்டி ஆழமாக்குவான் என்பதையே.
சாத்வி அணிந்துள்ள முழங்கைக்கும் கீழ் வரும் நீளமான கையும் ஆழமான 'பானா' கழுத்தும் வைத்த ப்ளவுஸ் பிறந்த கதை இது தான்.
அதை அணிந்து புடவையை உடுத்தி முடித்த சாத்வி, முந்தானையை அடுக்கி குத்தி சுவரில் மாட்டி இருந்த மார்பளவு கண்ணாடியை பார்க்க, முன் கழுத்தையும் இறக்கித் தான் வைத்து இருந்தான்.
"இந்த மாதிரி தைக்க ஏன் இவர் அளவு ப்ளவுஸ் வாங்கிப் போனார்.. முதுகுல வர வேண்டிய துணிய வெட்டி கைக்கு வச்சிருக்கு.." என கோபம் வந்தது அவளுக்கு.
தன்னைக் கவர்ச்சியாக காட்டுவது போல உருத்த, முகம் சுருக்கி யோசித்தாள்.
"வேண்டாம்! போகாதே.. சாரியை கழட்டு" என்றது குரங்கு மனம்.
"ஹாசினி, இதுல இருக்கு நீங்க போட வேண்டிய ட்ரெஸ்.."
"ஹாசினி ரெடி ஆகுங்க.. நேரம் போகுது.."
இன்று முழுவதும் ஆசையாக அவன் இதைப் பற்றியே பேசியதை நினைத்து அவன் எதிர்பார்ப்பை உடைக்க மனம் வரவில்லை.
"சரி நைட் பங்க்ஷன் தானே.. யார் கண்ணையும் உறுத்தாது" என தலையை வாரி முதுகை மறைக்க கூந்தலை விரித்து விட்டு க்ளிப் மாட்டியவள், முடிந்தளவு மேனி வெளிப்படாமல் பின் பண்ணி தயார் ஆனதும் வாமனைத் தேடினாள்.
வாமன் வெளியே ஃபோன் பார்த்துக் கொண்டிருக்க, கதவு திறந்தவளை நிமிர்ந்து பார்த்தவன் கண்கள் அவளில் ஆர்வமாக ஊன்றின.
சாத்விஹாசினி இப்போது தான் ஹாசினிக்குரிய உடையுடன் மாடலாக நின்றாள்.
"you look gorgeous" மனம் திறந்து பாராட்டினார்.
சாத்திக்கு கண் இடுங்க,
பக் என சிரித்தவன், "வடிவா இருக்கிங்க ஹாசினி.." என எழுந்து உள்ளே சென்றான்.
சாத்வி வெளியே வந்து புனிதாவுக்கு அழைத்து பேசிய சில நிமிட இடைவெளியில் தயாராகி வந்தவன் கருப்பு பேண்ட் கருப்பு முழுக் கை சட்டையில் கலக்கலாக இருந்தான்.
என்ன, அவனுடைய கவர்ச்சி அவனுடைய மங்குனி மனைவிக்கு தெரியவில்லை என்பது தான் வருத்தம்.
குவார்ட்ஸை பூட்டி விட்டு இறங்கினர்.
கார் லாக் எடுத்தவன் இந்தப் பக்கம் வந்து கதவை திறந்து விட, அது ஏதோ பெரிய உபசாரம் போல சாத்வியை நிறுத்தி நிதானித்து ஏறி அமர வைத்தது.
பார்க்கிங் இருந்து இறக்கி சாலையில் சேர்ந்ததும் "சீட் பெல்ட் போடுங்க" என்றான்.
முதல் முதலாக சாத்வி கார் ஏறியது அவளுடைய கல்யாணத்தில் மணப் பெண் அழைப்பின் போது தான். அப்போதும் பின் இருக்கையில் தானே ஏறி இருந்தாள். இன்று அவன் அருகில் முன் ஆசனத்தில் அமர்ந்து இருப்பவளுக்கு பெல்ட் போடுங்க என்றால் எப்படி போடுவது என தெரியவில்லை.
காரை ஓரம் கட்டி அவள் பக்கமாக சாய்ந்து பெல்ட் பிடிக்க, அவன் அண்மையும் பெர்ஃப்யூமும் சாத்வியை சீட்டோடு ஒன்ற வைத்தது.
லேசாக சிரித்தவன் "நான் கழுத்த நெரிக்க வாற மாதிரியே ரியாக்ஷன் தாரிங்க ஹாசினி.." என சிரித்த படி மாட்டி விட்டான்.
சில வினாடிகள் தான்..
எப்படி போட்டு விட்டான் என கவனிக்கத் தவறிப் போனாள். கவனித்து இருந்தால் இனி இறங்கும் போதும் அவன் அண்மையில் மூச்சு முட்டுவதை தவிர்க்கலாம் இல்லையா??
பதுளை நகரில் ஆங்கிலேயர் காலத்து மாளிகை போல அமைந்திருந்தது ப்ரபசர் ரணசிங்கவின் வீடு.
வீட்டுக்கு பக்கத்தில் சில பர்ச் நிலத்தை பிடித்து உருவாக்கி இருந்த கார்டனில் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் களை கட்டி இருந்தது.
இரவை அதிர வைக்காத சிங்கள வயலில் இசை உருக, கண்ணை உறுத்தாத மின் விளக்குகளால் கார்டனில் நட்சத்திரப் பந்தல் மின்னியது.
வாகன நிறுத்தம் செய்ய தனியாக வீட்டு காம்பவுண்டில் இடம் ஒதுக்கி இருக்க, மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் விருந்தினர்கள் வருகை தந்திருந்தனர்.
காரை நிறுத்தியதும் வாமன் சாத்விக்கு பெல்ட் கழட்டி விட்டான். இந்த தடவை கவனமாக அந்த நுட்பத்தை கிரகித்தாள்.
வரும் போது, "கார் இருக்கு எண்டா.. ஏன் பஸ்ல வந்திங்க?" என தனது பொன்னான வாயை திறந்து அவனிடம் அவள் கேட்டதால் அதன் கதையை கூறிக் கொண்டு வந்தான்.
இருவருக்கும் இடையே அழுத்திய அமைதி விலகி, இதயத்தில் அவன் அண்மைக்கு பழகிவிட்டிருந்தாள்.
வயலில் இசை கசிய, வாமதேவன் திரு. ரணசிங்க பண்டாரவுக்கு வாழ்த்து சொன்னான்.
'மனைவி' என திருமதி ரணசிங்கவிற்கு சாத்வியை அறிமுகம் செய்து வைத்தான்.
நெஞ்சில் கை குவித்து அந்தப் முதிர்ந்த பெண்மணி வணக்கம் வைக்க சாத்வியும் அதே போல் இல்லை என்றாலும் ஓரளவுக்கு வணக்கம் செலுத்தினாள்.
வெண்ணிற ஆடையில் வலம் வந்த பேரர்கள் இருவரையும் மேசைக்கு அழைத்து சென்றனர்.
எல்லாம் பிரம்மிப்பாக இருந்தது சாத்விக்கு. அவள் ஒரு சாதாரண பி.ஏ பட்டதாரி. இங்கே விஜயம் புரிந்து இருக்கும் எல்லாரும் பல்கலைக்கழக மேல் மட்ட கல்விமான்கள். அவர்களுக்குள் அவளும் ஒருத்தியாக..
வாமனை பார்த்தாள். யாருடனோ ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தான். பலர் வந்து கைக்குலுக்கினர். சிலரிடம் அவனே சென்று பேசினான்.
"என்ன ஹாசினி.. சைலண்ட் ஆகிட்டிங்க.."
இதற்கு முன்பு அவள் அருவி போல பேசிக் கொட்டியது போல் அவன் கேட்க,
"இவங்கள்ள பாதி பேர் நம்மட வெடிங் ரிசப்ஷனுக்கு வந்திருந்தாங்க என?"
"ம்ம்.. அதெல்லாம் நோட்டிஸ் பண்ணிருக்கிங்க என.." என கிண்டலாக கேட்டான்.
சாத்வி வரவேற்பு மேடையில் அவன் அருகில் நின்று இருந்தாளே தவிர தவறியும் அவன் புறம் திரும்பவில்லையே. இருவரும் எதையும் பேசிக் கொள்ளவும் இல்லை.
பேரர் கூல்ட்ரிங்ஸ் வைத்தான். சாத்வி எடுத்து இதழ் வைத்து மீண்டும் மேசைக்கே பாரம் கொடுக்க,
"வொய்?? ஜஸ்ட் சொஃப்ட் ரிங்ஸ் ஹாசினி.." அருந்திப் பார்க்கச் சொல்ல,
அவனுக்காக எடுத்து இன்னும் ஒரு மிடறு எடுத்துப் பார்த்தாள்.
"இல்ல வேணாம்.." அவளுக்கு அதன் சுவை பிடிக்கவில்லை.
"தட்ஸ் ஓகே.." என தனக்கானதையும் சேர்த்து எடுத்துக் கொண்டு எழுந்தான்.
"எங்க போறிங்க.." அவன் கை பற்றினாள்.
கூட்டி வந்து வேற்று கிரகத்தில் விட்டு விட்டு அவன் நழுவப் போவது போல அவளுடய பாவனை இருக்க,
கையை இறுக்கி இருந்த விரல்களை பார்த்தவன், சின்னப் புன்னகையுடன் "எனக்கும் இந்த ஃப்ளேவர் பிடிக்க இல்ல.." என வேறு ஃப்ளேவர் கேட்கப் போனான்.
அவன் நகர்ந்த நொடி சாத்வி தனித்துப் போன மேசையில் அவசரமாக வந்து தொற்றிய இளம் பெண் ஒருத்தி "ஒயா கௌத அரயாட்ட" எனக் கேட்டாள்.
சாத்வி அவளை பார்த்து புருவம் சுருக்க,
"What is his relationship with you??" என வாமனை காட்டிக் கேட்டாள் அவள் நுனி நாவால்.
கேள்வி புரிந்தது. ஆனால் அது ஏன் உனக்கு என்பது போல சாத்வி அவளை நோக்க,
அந்தப் பெண் தனது கைக்கு வலிக்காத மாதிரி ஏமாற்றமாக மேசையில் குத்தி, இவளுக்கு புரியவில்லையே என எரிச்சல் அடைந்தது.
உடனே எழுந்து யாரிடமோ சென்றவள் மறைக்க வேண்டிய பாகத்தை மாத்திரம் துணியால் கவர் செய்து கண்ணாடித் துணியில் ஜாக்கெட் போட்டு சாம்பல் நிறத்தில் ஒசரி கட்டி இருந்தாள்.
பார்த்ததும் பற்றிக் கொள்ளும் படு கவர்ச்சியான வளைவுகள் அவள் புடையில் வெளிப்பட்டன.
சாத்விக்கு இந்த சிங்கள கலாச்சாரம் புதிதில்லை. பல்கலைக்கழகத்தில் கண்டியில் கண்டு கடந்து இருக்கிறாள்.
ஆனால் இந்த மேனாமெனிக்கு வாமனுக்கும் அவளுக்குமான உறவு முறையை அறியத் துடிப்பது ஏன்?? என கேள்வி வந்தது.
சென்றவள் யாரிடமோ பேசுவது தெரிந்தது. தலையில் தட்டிக் கொண்டு வருந்தி ஃபோன் திரையை தடவுவதை கண்டாள்.
ம்ம் முகம் பிரகாசிக்க திரும்பி இவளிடம் வருகிறாள்..
இவர் எங்கே போனார் என சாத்வி வாமனை தேட, யாரோ இருவர் அவனை பிடித்து வைத்து கதைத்து களிப்பது தெரிந்தது.
சாத்வி அந்த சாம்பல் ஒசரியை பார்க்க, வேகமாக வந்த பெண் சாத்தியை ஒட்டிக் கதிரையை இழுத்து போட்டு அமர்ந்து, "உங்களுக்கு வாமதேவன் என்ன உறவுமுறை?" என கொச்சைத் தமிழாக எழுத்து கூட்டி உச்சரித்தாள்.
சட்டென ஒரு நிமிர்வும் ஒரு விறைப்பும் தனது மனதில் உடலில் உணர்ந்தாள் சாத்வி.
அவள் ஃபோன் திரை பார்த்து மீண்டும் அதை உச்சிக்க,
"நான் அவர்ட வைஃப்" என்றாள்.
காற்று போன பலூன் போலானது அந்த அழகுப் பெண்ணின் வதனம். ஓம்! சந்தணக் கடைசல் போல அழகுச் சிலை தான் அவள்!
அது சரி, நீங்கள் யார்? என சாத்வி கேட்க நினைக்கும் போதே வெடுக்கென எழுந்தவள் சென்று விட்டாள்.
சும்மா வெறுப்பு ஏற்றுகிறாளோ?? விளையாடுகிறாளோ?? சந்தேகம் வந்தது.
வாமன் கல்யாணம் செய்தது தெரயாமல் இருக்குமா..
மனைவியை அழைத்து வந்திருக்கிறான் என ஊகிக்க முடியாதா??
இதில் முக்கால் வாசி பேர் கல்யாண வரவேற்புக்கு ஹால் வந்திருந்தனரே!!
சாத்விக்கு சுருக் என்றது.
ஒரு வேளை வேறொரு பார்டியில், வேறொரு இடத்தில், வேறு யாருடனும் கண்டு இருப்பாளோ வாமனை.. இது யார் புதிதாக என அவளைப் பார்த்து குழம்பினாளோ..
"இத ட்ரை பண்ணி பாருங்க ஹாசினி.. லெமன் வித் மின்ட்.." என வந்து சேர்ந்தான் வாமன்.
சாத்வி மண்டைக்குள் சாம்பல் ஒசரி கிளப்பி விட்ட சந்தேக விதை முளைத்து துளிர் விட்டு கிளை பரப்பி நிமிடத்தில் விருட்சமாக, இரவு உணவுக்கு அழைப்பு வந்தது.
ஃவுஃபே சிஸ்டத்தில் டின்னர் சேவ் பண்ணிக் கொண்டனர்.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் தரத்திலான உணவுகள் சாத்வி தொண்டைக்குழியை சோதிக்க,
அவள் ப்ளேட்டை அளைவதை கண்டு "என்ன ஹாசினி.. ஃபுட் பிடிக்கல்லயா.. வேற ஏதாவது ட்ரை பண்றிங்களா...."
"எனக்கு என்ன பிடிக்க இல்ல எண்டாலும் உடனே அதுக்கு ஒரு ஒப்ஷன் தருவிங்களா.." சாத்வி வெடுக்கென கேட்டாள்.
"முடிஞ்சத என்னால ஏலுமானத கண்டிப்பா தருவன்.." அவனும் சளைக்காமல் பதில் அளித்தான் வசீகர புன்னகையுடன்.
அந்த புன்னகை அவளை ஏதோ செய்ய, தலையை குனிந்து ப்ளேட்டை விரல்களால் உழுதாள்.
"ஹாய் வாமதேவன்.." ப்ளேட்டுடன் வந்தான் வாமனின் டிபார்ட்மென்ட் லெக்சரர் குணதிலக்க.
சாத்விக்கு அவனை அறிமுகம் செய்ய, அப்படியா? இருந்து விட்டு போ என்பது போல ஒரு பார்வை மட்டும் தான் அவளிடம் இருந்து.
"உன்னை வந்த உடனே தேடினேன் திலக்" (சிங்கள உரையாடல் தமிழில்)
"நான் ஹர்ஷனி டீமுடன் தாமதமாக தான் வந்து சேர்ந்தேன்... விஷயம் தெரியுமா உங்களுக்கு, தில்ருக்ஷி மனம் உடைந்து போனாளாம்.. தண்ணி உணவு இரண்டும் இறங்கவில்லையாம்"
"ஏன்.. " வாமன் சிரிக்க,
"அவளுடைய தமிழ் க்ரஷ் பெடியன் கல்யாணம் செய்து விட்டானாம்.."
"யார் அவன்?"
"நீ தான்.."
"நானா!!! புவர் மீ"
சிரிப்பலை பரவ,
"நான் கல்யாணம் செய்து ஒரு வாரமும் இரண்டு நாளும் ஆகிறது.. இத்தனை நாள் கோமாவில் இருந்தாளாமா அவள்!?"
"அவள் தந்தைக்கு விபத்து ஏற்பட்ட மெடிக்கல் லீவு முடித்து இந்த வாரம் தானே திரும்பி வந்தாள்.. அவள் தைரியத்தை பார் நீங்கள் யார் என உன் மனைவியிடமே வந்து நேரடியாக கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே சோகம் அனுஷ்டிக்கிறாளாம்"
"ஓ!" என சாத்வியை பார்த்த வாமனுக்கு அவளுக்கு இது விளங்குகிறதா இல்லையா என்பது டவுட்!!
"எப்படி அவள் தந்தைக்கு இப்போது! சுகமா?"
"ஆம்! தேறி இருக்கிறாராம்..."
அவர்கள் உரையாடல் தொடர ஆங்கிலம் சிங்களம் கலந்த இந்த கதையில் சாத்வி மனம் புத்தி இரண்டு தெளிந்து இருந்தது.
தனக்கு அருகில் உட்கார்ந்து முள்ளுக் கரண்டியால் நூடுல்ஸ் தின்பவனை பார்த்தாள்.
வாமன் சீனியர் வாமன் சீனியர் என ஜூனியர் பெண்கள் கண் வைத்தவனுக்கு இங்கேயும் ரசிகர் தொல்லையாமே..
அப்படி என்ன இவரில்!!??
ப்ளெக் அன்ட் ப்ளெக் இல்.. க்ளீன் ஷேவ் கன்னங்கள். நேர் நாசி அடர் புருவம்.. சிகரெட் பழக்கம் இல்லாத சிவந்த உதடு. கழுத்து.. முதல் பட்டன் திறந்த சட்டை..
தன்னை மறந்து அவனை கவனித்தாள். கண் சுழட்டி அந்த தில்ருக்ஷியை தேடினாள். ருக்ஷி கண்ணுக்கு கிடைக்கவில்லை.
கேக் கட்டிங் புகைப்பட கிளுக்கல்கல் முடிந்ததும் பரிசும் பொருட்களை கையளித்தனர்.
எல்லாம் சரியாக தான் போனது. "டென்னுக்கு போவம் ஹாசினி" என்றவனுக்கு, ஒரு அழைப்பு வர "வெயிட்" என சென்றான்.
ஒரு பக்கமாக லிக்கர் பார்ட்டி களை கட்ட, வாமனை அழைத்து ஒரு பெக் எடு மச்சான் என கரைச்சல் கொடுத்தனர்.
நழுவிப் பார்த்தவன் முடியாது என தெரிந்து நாகரிகம் கருதி எடுத்துக் கொண்டான். கண்ணாடி க்ளாஸை கையில் ஏந்தியதும் நிவேதா வீட்டில் சாத்வி அவனை சுவரில் தள்ளி விட்டது தான் ஞாபகம் வந்தது.
டம் என தலையில் இடித்துக் கொண்டானே..
கண் சுழட்டினான். அவள் புலப்படாத புறமாக தான் வந்திருந்தான்.
"என்ன நண்பா.."
"ம்ம்.. ஒன்றும் இல்லை.."
"மனைவிக்கு பயமோ??"
சிரித்தான்.
பயம் தான். உங்கள கேக்காம குடிக்க மாட்டன் ஹாசினி என உறுதி வேறு கொடுத்து இருக்கிறான்.
ஒரு பெக் தானே! மாற்றம் தெரியாத வகையில் நடந்து கொள். வாயை திறக்காதே. முக்கியமாக பல்லைக் காட்டாதே. காரை எடுத்து குவார்டஸ் போய் குஷனில் கவிழ்ந்து விடு!!
தனக்கு தானே கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டு வந்தவன் "போவம் ஹாசினி" என,
நிகழ்வுகளோடு ஒன்றி வேடிக்கை பார்த்து இருந்தவள், "ம்ம்.." என எழுந்து கொண்டாள்.
எல்லாம் சரியாக தான் போனது. இருப்பிடம் வந்து காரை நிறுத்தி வீடு வந்து கதவு திறந்து ஹாலுக்கு கூட வந்து விட்டான்.
குஷனில் படுக்க போர்வையை உதற, கக்கத்தில் இடுக்கி வைத்திருந்த தலையணை தவறியது.
குனிந்து அதை எடுத்து நிமிரும் போது நச் என தலையில் இடித்தது மேலே சுவரோடு அடித்து இருந்த புத்த பெருமானின் பலகைச் சட்டம்.
"ஆஆ" என வலியில் முனக, புடவை மாற்றப் போன சாத்வி எட்டிப் பார்த்தாள்.
"என்ன.."
"இல்ல, அடிச்சிட்டு"
சித்தாலேப தைலம் எடுத்து வந்து தலைக்கு தேய்த்து விடப் போனாள்.
"வேணாம் ஹாசினி" என பதறி விலகியவன் அங்கு தான் சறுக்கினான்.
மறுபடியும் பலகையில் இடித்துக் கொண்டவன் வலி பொறுக்காமல் தடுமாறி சாத்வியை பிடித்தான்.
பிடிமானத்துக்காக அவன் பற்றிய இடம் சாத்வியின் வெற்றிடை!!
வளரும்....
-ஆதுரியாழ் ❤️

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..