நின்னையல்லால் - 01
"சாத்வி.."
சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர்.
"வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா,
"பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள்.
உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட,
"நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா.
சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது.
"என்ன சித்தி.. அதுக்குள்ள.."
"என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?"
"இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.."
"அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக.
சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள்.
அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் தங்கை புனிதா பராமரிப்பிலும் வளர்ந்தவள்.
புனிதாக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். தரம் ஐந்து மற்றும் மூன்றில் கல்வி பயிலும் சிறுமிகள் இருவரும். கணவன் நேசன், மத்திய கிழக்கில் ஓட்டுனராக பணி புரிகிறான்.
அக்கா மகளை அம்மா ஸ்தானத்தில் இருந்து கவனித்தாலும் புனிதாக்கும் சாத்விக்கும் இடையே பத்து வயதே வித்தியாசம்.
பல்கலைக்கழக பட்டப்படிப்பு முடித்து ஒரு வருடமாக வீட்டில் இருக்கும் இருபத்தைந்து வயது நிரம்பிய சாத்விக்கு தரகர் மூலம் மூன்று வருடங்களாகவே வரண் தேடுகிறார் செல்லம்மா.
சில பல காரணங்களால் பலதும் தட்டிப் போயிருக்க, இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்த தரகர் கச்சிதமான பொருத்தங்களுடன் ஒரு சாதகத்தை கொண்டு வந்திருந்தார்.
"பெடியன் ஊவா வெல்லச யூனிவர்சிட்டில லெக்சரரா இருக்கிறார்.. நல்ல குடும்பம்.. அக்கா தங்கச்சி எண்டு ரெண்டு சகோதரம்.. ரெண்டு பேரும் கல்யாணம் கட்டிட்டாங்கள்.." தரகர் சொன்ன விஷயங்கள் புனிதாக்கு ஏக திருப்தி.
"நல்ல இடம் அம்மா.. இத முடிப்பமே.."
"நானும் அத தான் யோசிக்கன் புள்ள. பாத்து பாத்து வளத்து பட்டம் எடுக்கிற வர படிப்பிச்சிட்டம். அதுட தரத்துக்கு ஏத்த படிச்சவனா பண்பானவனா நல்ல ஒருத்தன்ர கையில புடிச்சி குடுக்கணும் எண்டு தான் பாக்கிறன்.." மூத்த மகள் வாழக்கை போல அல்லாமல் இழந்த மகளின் அம்சமாக நிற்கும் பேத்தியை நன்றாக வாழ வைத்து பார்க்கும் அவா செல்லம்மாக்கு.
"உன்ர புருஷனுட்டயும் ஒரு வார்த்த கேளு.." என்றார்.
சவுதிஅரேபியாவில் பணி புரியும் கணவனுடன் இரவு பூராகவும் பேசி முடிவெடுத்து விட்டாள் புனிதா.
நேசன் மனைவி பிள்ளைகள் மீதும் அவள் குடும்பத்தின் மீதும் பற்றும் பாசமும் நிறைந்தவன். தனது முதல் பெண் குழந்தை போலவே சாத்வியையும் பாவிப்பவன்.
"பிள்ளைக்கு புடிச்சிருக்கு எண்டா சரிதான்.. ஒண்டுக்கு நூறு தரம் பொடியன பற்றி விசாரிச்சி நல்லம் எண்டா மட்டும் தொடர்ந்து கொண்டு போங்க" என்றான்.
புனிதா விசாரித்த வகையில் மாப்பிள்ளை பெடியன் குணம் கொள்கை சுத்தம் என உறுதியானதும் சாத்வியிடம் கேட்டாள்.
"உங்களுக்கு சரி எண்டா எனக்கும் சரிதான் சித்தி.." பளிச் என தெரிவித்தாள் சாத்வி. அவளுக்கு மறுக்க காரணம் எதுவுமில்லை.
பெற்றவர்களை இழந்த தன்னை வளர்த்து ஆளாக்கி இந்த நிமிஷம் வரை பொறுப்புடன் இருக்கும் அம்மம்மா சித்தி அவளுக்காக எது செய்தாலும் அது நன்மைக்கே. அதில் அவளுக்கு பூரண சம்மதமே.
ஆனால், அவள் புனிதாக்கு தலை ஆட்டிய அடுத்த நாளே, "நாள் நல்லா இருக்கு.. இண்டைக்கே நீங்க வரலாம் எண்டு விருப்பப்படுறாங்க பெடியன் வீட்ட" என தரகர் அறிவித்தது தான் சாத்விக்கு வயிற்றில் ஏதேதோ படபடக்கவும் சிறகடிக்கவும் செய்தது.
செல்லம்மாவின் தங்கை மகள் மற்றும் கணவனுடன் புனிதாவும் சென்று முறையாக பேச்சை ஆரம்பித்து விட்டு வந்தாள்.
அடுத்த நாளே அவர்கள் பெண் பார்க்க வருவதாக அறிவித்தனர்.
சாத்விக்கு இந்த வேகம் அன்றிரவு நித்திரையை தூரமாக்கியது.
"அது அப்டி தான் இருக்கும் சாத்வி.. உங்கட சித்தப்பா வீட்ட இருந்து என்ன முதல் முதல் பாக்க வந்த அண்டைக்கு அவங்க வந்து போகும் மட்டும் பச்ச தண்ணி பல்லுல படல்ல எனக்கு.." என தன்னை பெண் பார்க்க வந்த கதையை சொன்னாள் புனிதா.
அம்மா அப்பா என இருவர் மாத்திரமே வந்திருந்தனர். அறுபது வயது மதிக்கத்தக்க தம்பதி முன்பு மஞ்சள் சுடிதாரில் வந்து நின்றாள் சாத்வி.
"இருங்க ம்மா" என்றார் வேட்டி சட்டையில் இருந்த மாப்பிள்ளையின் தந்தை கனிவாக.
கதிரையில் அமர்ந்தவளை பட்டுப் புடவையில் இருந்த மாப்பிள்ளையின் அம்மா ஆழ் பார்வையில் அளந்தார்.
புனிதா தேநீர் பரிமாற, அவள் பெண் பிள்ளைகள் இரண்டும் கேக், பழ தட்டுகளை எடுத்து வந்து அவர்களை உபசரிக்க, தங்கள் குடும்ப நிலை பற்றி மனம் திறந்து விளக்கமாகவே பேசினார் செல்லம்மா.
அரை மணி நேரம் கூட எடுத்திருக்க மாட்டார்கள். "எங்களுக்கு பிள்ளைய பிடிச்சிருக்கு. நாளும் கனக்க இல்ல. மகனுக்கு லீவு கொஞ்சம் சிக்கல். நாள் குறிச்சிட்டு சொல்லுறம்" என புறப்பட்டு விட்டனர்.
ஆண்கள் பங்கு சாத்விஹாசினி வாழ்வில் மிக மிக குறைவு. நினைவு தெரிந்து அம்மம்மா சித்தி தான் அவளுக்கு எல்லாம். படித்தது தனி மகளிர் பாடசாலையில். அவளுடைய பதினைந்து வயதில் சித்தப்பாவாக வந்த தவநேசன் அவளை, "புள்ள" என அன்பாக அழைத்த போது வித்தியாசமாகவே உணர்ந்தாள்.
பெயர் சொல்லாது புள்ள என அவன் கூப்பிடுவது ஒரு ஆணின் பரிவை அறிமுகம் செய்ய, அதை அவள் ஏற்க தயாராகும் போதே, நேசனுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து சவுதி சென்று விட்டான். இப்போது வரை பிழைப்பு அங்கே தான் அவனுக்கு. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இரண்டு கிழமை விடுமுறையில் வருகிறான் தான்.
சாத்வி படிப்பில் மூழ்கிய காலத்தில், பல்கலைக்கழகம் சென்றதில் சித்தப்பனை நேரில் கண்டதே மிக குறைவு.
வரண் தேடுகிறார் அம்மம்மா என்று தெரியும். கல்யாணம் செய்து வைக்க போகிறார் என்றும் அறிவாள். புருஷன்.. வாழ்க்கை துணை.. இந்த வார்த்தைகள் எதிர் பாலினத்தவன் ஒருவன் அவள் வாழ்வில் கட்டாயம் வந்தே தீருவான் என்பதில் தெளிவாகவே இருந்தாள். சித்திக்கு நடந்தது போல பத்து பதினைந்து நாள் கொண்டாட்டமாக அவளுக்கும் கல்யாணம் நடக்கும் என்றும் தெரியும்..
இருந்தாலும் யாரோ ஒரு முன் பின் தெரியாத ஒருத்தனை..
அதற்காக, தெரிந்து பழகி காதல் கல்யாணம் செய்யலாமா என்றால், அதற்கு வாய்ப்பில்லை.
சாத்வி ஸ்கூல் படிக்கும் போது லவ்வில் விழுந்த பதின்ம வயது தோழிகளை கிருமியை போல பார்த்தவள். தீண்ட தகாத நோயாளியை ஒதுக்குவது போல அவர்கள் நட்பை துண்டித்து விட்டவள்.
பல்கலைக்கழகத்தில் அது முடியாதே. எங்கும் காதல் எதிலும் காதல். காதல் வித விதமாக கடை பரப்பி கிடக்கும். அவள் அதை கண்டும் காணாமல் ஒதுங்கப் பழகி இருந்தாள்.
இப்படி பட்டவளுக்கு தான் இரண்டு நாளாக, முன் பின் தெரியாத ஒருத்தன் முன் சென்று நின்று, 'நீ என்னை பார் நான் உன்னை பார்க்கிறேன்.. நமக்குள் பிடித்திருந்தால்... இல்லை இல்லை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இன்றிலிருந்து நாம் ஜோடி' என ஒத்துக் கொள்வதா என்று மனம் அரித்தது.
புனிதா கொடுத்த கவரை பார்த்தாள்.
உறையின் உள்ளே உறங்கும் புகைப்பட காரர் தான் மாப்பிள்ளை. இவருடன் தான் எதிர்காலம். உங்களுக்கு சரி எண்டா எனக்கும் சரி என்று சம்மதம் சொல்லி பேச்சு வார்த்தை முற்றும் பெற்று விட்டது. இனி மாற்றம் இல்லை.
இது சும்மா ஒரு சம்பிரதாயத்துக்கான சந்திப்பு ஏற்பாடு..
நாளைக்கு வாறார் எண்டால் எங்க வாறார்..? கோயில் எண்டு சொல்லிச்சே சித்தி..! எந்த கோயில்..?? நான் என்ன உடுப்பு உடுத்தணும்? சாரியா? சல்வாரா?
மறு நாள் காலையில், "பத்து மணிக்கு பெரிய பிள்ளையார் கோயிலுக்கு போங்கோ ம்மா. மகன் நேரா அங்க வந்திருந்தார்" என புனிதாக்கு அழைத்து சொன்னார் மாப்பிள்ளை பெடியனின் தந்தை.
சாத்வியை அழைத்து கொண்டு ஒன்பது மணிக்கு எல்லாம் புறப்பட்டாள் புனிதா. அவள் புதல்விகள் இருவரும் அக்காவின் இரண்டு பக்கமும் கை பிடித்து பட்டுப் பாவாடை சட்டையில் நடந்து வந்தனர்.
கோயில் குழாயில் கால் கழுவும் போது, நிறுத்தி கிடந்த இரு சக்கர வாகனங்களையும் அடுக்கிக் கிடந்த செருப்புகளையும் தான் பார்த்தாள் சாத்வி, இதில் எது அவள் வருங்கால துணைவருடையது எனும் சிந்தனையோடு.
"போட்டோவ வச்சி மதிச்சிருவா தானே சாத்வி?"
"இல்ல சித்தி.. நான் போட்டோ பாக்க இல்ல.."
"பாக்கல்லயா!! ஏன்..??"
"இல்ல.. போட்டோ பாத்து பிடிக்காம போனா.. நேருலயே பாப்பமே.."
"என்ன சாத்வி நீ.. இப்ப எப்டி அவர கண்டு பிடிக்கிற..?"
"ஏன் சித்தி, நீங்க பாக்கல்லையா?"
"நான் பாத்தன்.. ஆனா போட்டோக்கும் நேருல காண்றதுக்கும் வித்தியாசம் இருக்கே.. இதுல யார் எண்டு நான் தேட..??"
செவ்வாய் கிழமை என்பதால் கோயிலில் கூட்டம் இருந்தது. இளம் பெடியன்களாக உற்றுப் நோக்கினாள் புனிதா.
"என்ன இது! அந்த பெடியன் லெக்சரர் எல்லா. ரவுசர் சேட்ல வருமா? வேட்டி கட்டி வந்திருக்குமா?"
"தெரியாதே சித்தி"
"அந்தா போறாரே.. அவரா? மதிக்க ஏலாம இருக்கே. அவருக்கும் உன்ர போட்டோ குடுத்திருக்கு தானே. அவரே உன்ன கண்டு பிடிச்சி வரட்டும். வா நாங்க முதல் கோயில சுத்தி கும்பிடுவம்...."
சாத்விக்கு இயல்பு கெட்டது. சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் அவளை பெண் பார்க்க வந்தது போல தான் வயிற்றில் பட்டாம்பூச்சி படபடத்தது.
கோயில் வலம் வருவது போல் பெயருக்க புனிதா பின்னால் அலைந்தாள். வாண்டுகள் இரண்டும் அவள் சுடிதார் துப்பட்டாவின் இரண்டு அந்தங்களையும் பிடித்துக் கொண்டு சுற்றி வந்தன.
புனிதா எந்த பதட்டமும் இன்றி சாமியை வேண்டியபடி வலம் வந்தாள், அக்கா மகள் வாழ்க்கை துலங்க வேண்டும் எனும் பிரார்த்தனையுடன்.
வசந்த மண்டபத்தில் வீற்றிருந்த கணபதியின் தரிசனம் பெறுகையில் அவளுக்கு நேரெதிரில் மண்டப தூணை ஒட்டி, ஃபோர்மல் உடையில் நின்றிருந்த அவன் சாத்வியை எந்த தயக்கமும் இன்றி நேர் பார்வை பார்த்தான்.
சாத்விஹாசினியும் அவனை கண்டாள். அவள் வயிற்றில் பட்டாம்பூச்சிக்கு பதில் ஆலா வட்டம் போட்டது!
வளரும்...
வில்லன், வில்லி, குடும்ப அரசியல் கலக்காது இருவரை பற்றி மட்டும் பேச போகிறது 'நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ'.
அழுத்தமான ஹாசினிக்கும் ஜாலியான வாமனுக்கும் இடையிலான 'கல்யாணத்திற்கு பின் காதல்' தான் கரு.
சாத்விஹாசினி வாமதேவன் நிச்சயம் உங்களை கவர்வர்.
ப்ரியமுடன்,
-ஆதுரியாழ் ❤️

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..