அத்தியாயம்: 57
பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். "
"சொல்லுங்க என்ன கேஸ்ஸு?"
"இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல…"
"எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. "
"இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க,
‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி.
"எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க,
"இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும்.
"ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?"
"ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?"
"இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?"
"நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என நேம் போர்டை காட்டியவன், "ஆமா நீ பாக்க வந்த வக்கீலுக்கு பேரு எதுவும் வைக்கலயா."
"ஆளப் பாத்தது இல்ல. பேரு பவதாரிணி விக்னேஸ்வரன்னு சொன்னாங்க. "
"பவதா மேடமா! உள்ள ஒரு மீட்டிங்ல இருக்கங்க. வெய்ட் பண்ணு." என்றான் அவன்.
'இவன் காவ(த)லனா கதையில் நாயகியை வக்கீலாக்கி பார்க்கும் ஆசையில் இந்தக் கதையில் வரவைத்துள்ளேன்.'
படிப்பை முடித்து விட்டு ஜூனியராக சில காலம் காலத்தை ஓட்டியவள் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பத்து வருடங்களில் ராசியான வக்கீலாக பிரபலமடைந்து விட்டாள் பவதாரணி. பல பொது நல வழக்குகளைத் தானே முன் வந்து நடத்தி வெற்றியும் பெற்றுள்ளாள். இப்போது அரசனூர் வழக்கை நான்கு ஆண்டுகளாக அவள் தான் நடத்தி வருகிறாள்.
அரசனூர் வழக்கை பற்றிய எந்த ஒரு தகவலயும் பைரவிக்கு கூற யாரும் முன்வராததால் அதை ஏற்று நடத்தும் வக்கீலான பவதாரணியைப் பார்த்து கேஸ் டீடெய்ல்ஸ் கேட்க வந்துள்ளாள்.
இந்த கேஸ் காரணமாக டவர் வைத்திருக்கும் கம்பெனியின் முதலாளி சிராஜிற்கும், வழக்கு தொடுத்த கண்ணாயிரத்திற்கும் உள்ள பிரச்சனை என்ன? அது சுடரின் மரணத்திற்குக் காரணமாக இருக்கலாமா? எனக் கண்டு பிடிக்க டிடெக்டிவ் வேலை செய்ய வந்துள்ளாள் பைரவி.
"என்ன கேஸ்? டைவர்ஸ்ஸா!" என்ற அபினாஷ், பவதாவிடம் ஜூனியராக வேலை பார்க்கிறான். அவன் கேட்டதற்கு பதிலாக பைரவி தலையசைத்து மறுக்கும் முன்,
"அதத்தா ஏற்கனவே இந்தப் பொண்ணு வாங்கிடுச்சே. மறுபடியும் மறுபடியும் எதுக்கு வாங்கணும். வேற எதுக்காது வந்திருப்பாங்க. என்ன மேடம் சரியா?" என்றாள் ரதியா. அவளும் ஜூனியர் வக்கீல் தான்.
"என்ன!! ஆகிடுச்சா?? நாங்க வாங்கி குடுக்காம எதுக்கு நீங்களா தனியா போய் டைவர்ஸ் வாங்குறிங்க. அடுத்து மொற கல்யாணம் பண்ணி டைவர்ஸ் வாங்கணும்னா முதல்ல எங்கிட்ட தான் வரணும். புரியுதா?" என பைரவியை பார்த்து சொன்னவன்,
"ஆமா இந்தப் பொண்ணுக்கு டைவர்ஸ் ஆனது உனக்கு எப்படி தெரியும்?" என்க,
"அதா அந்தப் பொண்ணோட ஹஸ்பெண்ட் கோர்ட்டு வாசல்ல சந்தோஷமா ஆடுனத பாத்தேனே."
"வீடியோலயா!!" என பைரவி அதிர்ந்து கேட்க,
"இல்ல லைவ் டெலிக்காஸ்ட். நானும் அங்க தான் இருந்தேன். உங்களுக்கு முந்தின டைவர்ஸ் கேஸ். டைலர்ஸ்லாம் கிடைச்சிடுச்சி. ஆனா என்னோட க்ளைண்ட் உன் புருஷன் மாதிரி சந்தோஷமா ஆடிட்டே போல. அவ்ளோ தான்." எனச் சோகமாக சொல்ல, பைரவி மனத்திற்குள் மதுசூதனனுக்குத் தணல் அபிஷேகம் செய்துபடி பவதாவின் கேபினுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
அந்த அலுவலகமே சற்று பிஸியாக இருந்தது ஆட்கள் இங்கும் அங்கும் நடமாடிக் கொண்டே இருக்க, பைரவியின் விழிகள் அங்கிருந்த அலமாரிகளில் வளம் வந்தது.
"சட்டத்த மிக்ஸில போட்டு ஜூஸ்ஸாக்கி குடிச்சிருப்பாங்க போல. எவ்ளோ பெரிய பெரிய புக்கெல்லாம் இருக்கு." என மெட்சிக் கொள்ள, பைரவிக்கான அழைப்பு வந்தது. எழுந்து உள்ளே சென்றவள் கண்டது, பாத்தமான அரக்கு நிற காட்டன் புடவையில் மிடுக்காய் அமர்ந்திருந்த பவதாரணியை.
"குட் மார்னிங் மேடம்."
"குட் மார்னிங்… யாரு நீங்க? எதுக்கு பாக்க வந்திங்க?" என்ற குரல் கணீரென்று இருந்து.
'இந்த வாஸ்ஸே போதுமே, கேக்குற எதிர்கட்சி வக்கீலு வாய்தா வாங்கிட்டு போக.' பைரவியின் மைண்ட் வாய்ஸ்.
"உக்காரம்மா. சாந்தாக்கா ஒரு காஃபி." என்றவள் பைரவி பக்கம் பார்த்து என்ன விடயமாய் வந்தாய் எனப் புருவம் ஏற்றி இறக்க,
"மேம் என்னோட பேரு பைரவி. ஆல்ரெடி நான் உங்களுக்கு கால் பண்ணிருந்தேன். பட் நீங்க அத அட்டன் பண்ணி பேசுற மூடுல இல்ல போல. அதா நேர்ல பாத்து கேட்டுட்டு போலாம்னு வந்தேன். "
"என்ன கேக்கணும்?"
"நீங்க தான் அரசனூர் கண்ணாயிரம் அங்கிள் கேஸ்ஸ எடுத்து நடத்துறதா கேள்வி பட்டேன். எனக்கு அந்த கேஸ் டிடெய்ல்ஸ் வேணும் மேம்."
"எதுக்கு?" என முதலில் கோபமாக ஆரம்பித்தாள் பின் பொறுமையாக கொடுக்க முடியாது எனப் பேச தொடங்கினாள். ஏனெனில் அரசனூர் வழக்கை எடுத்து நடத்த ஆரம்பித்ததில் இருந்து ஏகப்பட்ட மிரட்டல்கள். நேரில் வந்தோ! ஃபோனில் மிரட்டியோத்தான் பார்க்கின்றனர். ஆனால் அவளின் கணவன் காக்கி உடையில் இருக்கையில் பயம் எதற்கு எனத் துணிந்து எடுத்து நடத்துகிறாள்.
"சொல்லு உனக்கு கண்ணாயிரம் ஐயாக்கும் என்ன உறவு? உனக்கு எதுக்கு அந்த கேஸ் டீடெய்ல்ஸ்."
"உறவெல்லாம் கிடையாது மேம். சாரதா மேம் எனக்கு தெரிஞ்சவங்க. அங்க பொண்ணு சுடர் கொலைக்கு காரணமானவங்கள கண்டுபிடிக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அதுக்கும் இந்த கேஸ்க்கும் சம்மந்தம் இருக்கான்னு தெரிஞ்சிக்கலாம்னு வந்தேன்." என்ற போதே சாரதாவின் அனுமதி இன்றி எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்று உறுதியாக கூறி எழுந்து சென்றாள். வந்த காஃபியைக் கூட குடிக்காது பைரவி கெஞ்சியபடி பவதாவின் பின்னால் நடந்தாள்.
"மேம்… மேம்… உங்களுக்கே தெரியும் சுடர் எப்படி இறந்தாங்கன்னு. ரெண்டு கேஸ்க்கும் சம்மந்தம் இருக்கணும். அது என்னன்னு கண்டுபிடிக்கணும் மேம். நீங்க சொல்ல போறதுல எனக்குச் சின்ன நூல் கிடைச்சாக் கூட போதும். அதப் பிடிச்சி ஆரம்பத்த கண்டுபிடிக்க என்னால முடியும்." என நம்பிக்கையுடன் பேச, பவதா இரக்கம் இன்றி சாரதாவிடன் அனுமதி கேட்டு வரச் சொன்னாள்.
"அவங்க சொல்லிருந்தா நான் ஏன் உங்கள பாக்க வரப்போறேன். மேம்… மேம்… " என்றவளைக் கவனியாது காரில் ஏறிக் கொள்ள, பைரவி ஓடத் தொடங்கி காரின் முன் வந்து இரு கரத்தையும் விரித்து நின்றாள்.
"முட்டாள்…" என்ற குரல் காரின் ஓட்டுனர் இருக்கையில் இருந்து கேட்க,
" எனக்கு அரசனூர் கேஸ் டீட்டெய்ல்ஸ் வேணும். ப்ளிஸ் மேம்." என்றபடி காரை நோக்கி வந்தாள் பைரவி. பவதா கோபமாகி ஜன்னலை திறந்து திட்டும் முன், பைரவியே கார் கதவின் அருகில் வந்து,
"குட் மார்னிங் சார்." என விரைப்பாய் சல்யூட் அடித்தாள் உள்ளிருந்த பவதாவின் கணவனும் SP விக்னேஷ்வரனை பார்த்து. புருவம் சுருக்கி யார் என அவன் யோசிக்க, தன்னை தானே அறிமுகம் செய்து கொண்டாள் பைரவி.
"ஸார் நானும் உங்கள மாதிரி போலிஸ் தான். எனக்கும் உங்கள மாதிரி நிறைய ஸ்டார் வைச்ச பெரிய போலிஸ்ஸா மாறணும் ஆசை. என்னோட ட்ரீமே அது தான். நீங்க தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். ரோல் மாடல். நீங்க ஹேண்டில் பண்ண எல்லா கேஸ்ஸையும் நான் கூர்ந்து கவனிச்சிட்டு வந்திருக்கேன். யூ ஆர் ரியலி க்ரேட் ஸார். " எனப் புகழாரம் சூட்ட,
'போதும்மா உன்னோட முகஸ்துதிய நிப்பாட்டிக்க.' என்பது போல் பார்த்தவன் மனைவியின் பக்கம் திரும்பி நடந்ததைக் கேட்க, பவதா கண்களால் பேசினாள். அதை மொழி பெயர்க்க இயலாத பைரவி.
"போலிஸ்க்கு போலிஸ் உதவி செஞ்சிக்கணும் ஸார். இல்லன்னா நமக்கு யாரும் உதவ மாட்டாங்க. அதுனால நீங்க தான் உங்க வைஃப்க்கிட்ட சொல்லி. நான் கேட்ட டீடெய்ல்ஸ்ஸ வாங்கி தரணும்"
"கண்டிப்பா என்னோட வைஃப் உதவி பண்ணுவாங்க."
"தேங்க்யூ சோ மச் ஸார். எனக்காக நீங்க…" என ஆரம்பிக்கும் போதே,
"இது உனக்காக இல்ல. உன்னோட ஹஸ்பெண்ட் மதுசூதனனுக்காக." என்றான் புன்னகையுடன். கணவனின் பெயரை கேட்டதும் மகிழ்ந்து போனவள்,
"உங்களுக்கு என்னோட ஹஸ்பெண்ட்ட தெரியுமா?"
"ம்… தெரியும்… Blue whale bodyguard security agent owner சிதம்பரத்தோட அண்ணே பையன். இப்ப கூட DOT sports academy வச்சிருக்கானே."
"ஹாங்… அவரு தான். எங்க அகாடமி எல்லா ஸ்போர்ட்ஸ்க்கும் கோச்சிங் தர்றோம். அவரோ கோல்டு மெடலிஸ்ட் தான்." என கணவனின் புகழ் பாட,
"அண்ணா உங்களுக்கு விபரம் தெரியாதுன்னு நினைக்கிறேன். இந்த பொண்ணுக்கு டைவர்ஸ் ஆகிடுச்சாம். அப்படி பாத்தா நீங்க சொன்ன மதுசூதனன் இப்ப இந்த பொண்ணோட ஹஸ்பெண்ட் இல்ல. இன்னொரு விசயம் அவரு டைவர்ஸ் கிடைச்ச சந்தோஷத்துல கோர்ட்டு வாசல்ல குத்தாட்டம் போட்டாராம். நம்ம ஆளு ஒருத்தர் லைல்ல பாத்தாளாம். " அபினாஷ் சொல்ல, பவதாவும் விக்னேஷும் சிரித்து விட்டனர். பைரவி முறைப்புடன் நிற்க,
"பரவாயில்லை. மதுவோட முன்னால் மனைவிக்கி உதவி செய்ததா இருக்கட்டும்." என்றான் விக்னேஷ் புன்னகையுடன்.
"உன்னோட திங்கஸ் எல்லாத்தையும் அபிட்ட குடுத்திட்டு. நீ மட்டும் கார்ல ஏறிக்க." பவதாவின் குரலில் அடக்கப்பட்ட புன்னகை தெரிய,
'இந்த தயிர் சாதத்தால இன்னும் என்னென்ன பட வேண்டி இருக்கோ!' என நொந்து கொண்டவள் தன் ஃபோன், சாப்பரின் கீ உட்பட ஹேண்ட் பேக்கை அபினாஷின் கையில் கொடுத்து விட்டு விக்னேஷின் காரில் ஏறி அமர்ந்தாள். ஏனெனில் அது கெஞ்சும் ஆபத்தான கேஸ். சுவற்றிற்கும் காது உண்டு என்பதை அந்த கேஸ் எடுத்து நடத்தும் போது தான் உணர்ந்தாள் பவதா.
ஒரு அடி முன்னே எடுத்து வைத்தால் பல அடிகள் சறுக்கி விழ நேர்ந்தது அந்த வழக்கில் தான். அதனால் தான் பைரவிக்கு அலுவலகத்தில் வைத்து எந்தத் தகவலையும் வழங்காது தனித்து அழைத்து செல்கின்றனர்.
பவதா, "கண்ணாயிரம் அங்கிள் எதுக்கு கேஸ் போட்டாருன்னு தெரியுமா?"
"ஏதோ நில பிரச்ச. அந்த நிலத்துல தான் டவர் இருக்கு. அதுனால பிரச்சனையா மாறி அந்த கம்பெனிக்காரெ மேல கேஸ்ஸாகிருக்கு." என்று பைரவி சொல்ல, பவதா சின்ன தலையசைப்புடன் வழக்கைப் பற்றிய முழு தகவலையும் சொல்லத் தொடங்கினாள்.
முதலில் நில மோசடி வழக்காக கண்ணாயிரத்தின் அண்ணன் வேலாயுதத்தின் மீது போடப்பட்ட வழக்கு. அந்த டவரைக் காரணம் காட்டி ஊருக்குள் நடமாடும் சில சமூக விரோதிகளால் கம்பெனிக்காரன் மீது வெகு சாதாரண வழக்காகத்தான் சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது.
ஒரு தீ விபத்து. டவருக்கு அருகில் குடிசை போட்டு தங்கியிருந்த அதன் பாதுகாவலரும், அவர் வளர்த்த சில ஆடுகளும் தீயில் கருகி உயிரிழந்திருந்தது. தீ அருகில் இருந்த சில மோட்டார் வீடுகளுக்கும் பரவி, இரவில் வயல்களுக்கு காவலுக்கு இருந்த பலரின் உயிரை குடித்து தணிந்தது.
"மொத்தம் பத்து பேரு. வந்து முகம் பாத்து அடையாளம் காட்டி வாங்கிக்கங்க." என ஊர் மக்களுக்கு ஊரின் முக்கியஸ்தர்கள் சொல்ல. வாழை இலையில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தவர்களை அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டி அழுது தீர்த்தனர். அந்தப் பத்தில் இரண்டு அடையாளம் தெரியாத உடல்களாக இருந்தன. யார் என்றே தெரியாத அவர்களும் தீயில் கருகியிருப்பது மர்மமாக இருந்தது.
"எப்படி தம்பி ஆகிருக்கும்?" விசாரிக்க வந்த லோக்கல் போலிஸ்ஸிடம் கேட்க,
"கெழடு குடிச்சிட்டு பீடி இழுத்த மேனிக்கே கவுந்திருக்கும். அது குடிசைல பட்டு அடுத்தடுத்துன்னு பிடிச்சிருக்கு. இதுல அந்த டவரு கம்பெனிக்கு தான் நட்டம் அதிகம். டவரு மொத்தமும் எரிஞ்சி போச்சில்ல. கம்பெனிக்காரெ கேஸ் குடுக்குறதுக்கு முன்னாடி சீக்கிரம் அடக்கம் பண்ணுங்க. ஏன்னா தப்பு கெழடு மேலல்ல இருக்கு." எனக் காவலர்கள் ஈசியாக இறந்த ஒருவரின் மீது குற்றத்தைச் சுமத்தி விட்டு வழக்கை மூடி வைத்தனர்.
அப்போது இறந்த போன உடலைப் பரிசோத்தித்த ஒரு மருத்துவர், சிலரின் உடலை மட்டும் சுட்டிக்காட்டி, "இது தீயில கருகியிருக்கு தான்.. ஆனா உயிர் அதுனால போல. இறந்து போன உடம்புல தான் தீ பட்டிருக்குன்னு தோணுது. எதுக்கும் பிரத பரிசோதன பண்ணி பாத்திடலாம்." என்றார் அவர்..
தீ பரவும் முன்னே இறந்து போனவர்களா? ஏன்? அது வெளிவர கூடாது என்பதற்காக தீ வைத்து மறைக்க முயன்றுள்ளனர்.
"எது அறுக்க போறியா. எங்க ஊருல அது வழக்கமே கிடையாது. போய்யா அங்கிட்டு. முழுசா கருகிப்போன பொணத்த கூறு போட்டு பாக்க போறானாம்." என ஊரில் சிலர் எதிர்ப்பு தெரிவிக்க,
கண்ணாயிரம், ‘உடலை பிரேதபரிசோதனை செய்ய வேண்டும். காரணம் என்ன எனத் தெரிய வேண்டும்.’ என்றார்.
"இவெ சொல்ற மாதிரி கேஸ் கீஸ்ன்னு போனா நாள் தான் போகும். அந்த டவரு காரெ தலைக்கி ரெண்டு லட்சம் தர்றதா சொல்லிருக்கான். நம்ம அமைச்சரு ஒன்னு. தலைவரு ஒன்னுன்னு நாலு லட்சம் வரும். கேஸ் போட்டா காரணம் தெரியுற வர காச பாக்க முடியாது. ஆள இழந்திட்டு நிக்கிற குடும்பத்துக்கு அடுத்தடுத்து செலவு இருக்கும்ல. வயசு பிள்ளைங்க இருக்கு. படிப்பு இருக்கு. காலம் இருக்கு. இதுல கேஸ்ன்னு சொல்லி கோர்ட்டுக்கு அழையச் சொல்றீங்களா?
உசுரோட இருக்கும் போது தான் வருமானத்துக்கு வழியில்லாம இருந்தானுங்க. செத்தும் சம்பாதிச்சி குடுத்திருக்கான்னு சந்தோஷப்பட்டு, வந்த வரைக்கும் வாங்கிட்டு போய்க்கிட்டே இருப்போம். கேஸ் போட்டா மட்டும் செத்தவெ எந்திரிச்சி வந்திடவா போறானாக்கும்." எனப் பேசி பேசியை இறந்து போன எந்த மனித உடலையும் பிரேதப் பரிசோதனைச் செய்யாது புதைக்கும் முயற்சியில் இறங்க வைத்தார் வேலாயுதம்.
ஆனால் கண்ணாயிரம் விட வில்லை. அதன் மர்மத்தை அவிழ்த்து ஏற்கனவே சிராஜ் மீது போட்ட வழக்கை வலுப்படுத்தி டவரை அகற்றச் சொல்லி போராடத்தொடங்கினார்.
அது தான் தொடக்கம். முடிவு தெரியாது நகர்ந்து கொண்டே செல்கிறது பலரின் உயிரைக் குடித்தபடி.
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..