அத்தியாயம்: 1
சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது.
இந்தியாவில் தவிர்க்க முடியாத நகரம். நம் தலைநகரும் கூட. அது எப்பொழுதுமே பிஸியாகத்தான் இருக்கும்.
மெட்ரோ ரயில், மெரினா பீச், கட்சி ஊர்வலங்கள், மறியல் போராட்டம் எனப் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத அந்த நகரில் பைக் ரிப்பேராகி ஓர் இளைஞன் அதனுடன் போராடிக் கொண்டிருந்தான்.
"நமக்கு ஒரு நல்லது நடக்க போதுன்னா இதுக்கு பொறுக்காதே… ச்ச... " எனக் காலால் அதை உதைத்தவனின் அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது.
"மச்சான் எங்க இருக்க? அவங்க வந்துட்டாங்கடா.. அடுத்து நீ தான்.. " என நண்பன் கதற,
"இதோ டூ மினிட்ஸ். " என்றவன் பைக்குடன் போராடிக் கொண்டிருந்தான்.
"வந்திடு மச்சான். இல்லன்னா என்ன நடக்கும்னு தெரியும் தான! " என மிரட்டலாக கேட்க…
" ஆன் தி வே. அதுவர சமாளி. " என்றவன் பைக்கை ஓரங்கட்டி லாக் செய்து விட்டு, பின் இருக்கையில் இருந்த ஒரு பார்சலை மட்டும் எடுத்துக் கொண்டு ஆட்டோவிற்காகக் கை அசைத்தான்.
அவனின் அவசர தேவை புரியாது எந்த ஆட்டோக்காரரும் நிப்பாட்டவில்லை. மணிக்கட்டைப் பார்ப்பதும் பின் நிமிர்ந்து சூரியனைப் பார்ப்பதுமாக இருந்தவனின் முன் ஆபத்பாந்தவனாய் ஒரு ஆட்டோ நிற்க, இடத்தைச் சொல்லி விட்டு ஏறி அமர்ந்தான்.
இரண்டு நிமிடம் என்பது இருபது நிமிடங்களைக் கடந்து விட்டது.
"என்னை இறுதி ஊர்வலத்துல தூக்கிட்டு போற டெட் பாடிய விட மெதுவாக் கொண்டு வந்து விட்டதுக்கு நன்றி. சொல்ல போனா எனக்கும் இன்னைக்கு தான் இறுதி நாள். பட் டெட் பாடி நான் இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்துல அனுப்பி வைக்கிறேன்." என்றவன் காசு தராது கீழே இறங்க,
ஆட்டோக்காரன் கழுத்தில் கத்தி வைக்காதக் குறையாகக் கத்தினான்.
" எங்கயா போய்டப்போறேன்? இதுக்குள்ள தான! வெளில வந்து தான ஆகணும்.. வெய்ட் பண்ணு. பேசுன காச விட நாலு மடங்கு… இல்லை நாப்பது மடங்கு அதிகமாக தாரேன்." என்க,
"யோவ் நீ ஆன காச மட்டும் குடு போதும். வெயில் மண்டயப் பொழந்திட்டு இருக்கு. வெயிட் பண்ண சொல்ற. நான் அடுத்த கிராக்கி பாக்க வேண்டாமா. " என்றான் ஆட்டோகாரன்.
"ஒரு மணி நேரம் தானய்யா காத்திருக்கச் சொல்றேன். " என்றவனை ஆட்டோ டிரைவர் முறைக்க,
"அந்த ஓரமா மரம் இருக்கு பாரு... பார்க் பண்ணிட்டு படுத்து தூங்கு.. நான் வேலை முடியவும் சந்தோஷமா உனக்கு கால் பண்றேன்.. சரியா... நான் கால் பண்ணதும் எடுத்து பேசு. உள்ள இருந்து நான் வெளில வரும் போது இந்த பார்சல்ல இருக்குற பட்டாச வெடிச்சு என்னோட வெற்றிய ஊரே வேடிக்க பாக்குற மாதிரி நீ, நான் என்னோட உயிர் நண்பன் எல்லாரும் சேந்து கொண்டாடுவோம்.. சரியா!"
"யோவ்… இங்க பட்டாசுலாம் வெடிக்க கூடாதுயா."
"அப்படில்லாம் சட்டம் இருக்கா என்ன… அப்படியே இருந்தாலும் அத மீறுறதுல தப்பில்ல… " எனப் புதியதொரு தத்துவம் பேசியவனை முறைத்தான் ஆட்டோ மேன்.
"நான் யாருன்னு தெரியுமா உனக்கு?" என்றவன் அவனின் காதில் எதுவோ சொல்ல, ஆட்டோகாரனின் வாய்ப் பிளந்து கொண்டது.
"அந்த மரியாத இருக்கட்டும். அண்ணே சொல்றபடி கேட்டா உன்ன வெகு சிறப்பா கவனிக்கிறேன்.. " என்றவன்
அங்கிருந்த ரேடியோவில் ஒளிபரப்பான பாடலானா
'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்.. அதை வாங்கித்தந்த பெருமையும் என்னையே சேரும்.. ' என பாடலை மாடிஃபை செய்து பாடியபடி உள்ளே சென்றான்.
அவனைக் கண்டதும் ஒருவர் அவனை நோக்கி கை அசைத்து அருகில் வரும் படி சமிக்ஞை செய்ய,
"என்ன ஸார்... இன்னைக்காது ஆகிடும்ல. "
"அது உங்ககைல... இல்ல உங்க வாய்ல தான் இருக்கு." என்றார் அந்த மனிதன்.
"அப்ப வாங்க உள்ள போகலாம். " என்க,
"ஏப்பா…. இது என்ன உன் வீடா.. நீ பாட்டிக்கி உள்ள போற… உன்னைக் கூப்பிடுற வர நீ காத்திருக்கணும்.. போய் அந்த சேர்ல உக்காரு. " என்றார்.
"ஏன்.. அடுத்து நான் தான்னு எம் ஃப்ரெண்டு சொன்னானே... "
"அது அப்ப… "
"அப்ப இப்ப... "
"தம்பி இது சாப்பாட்டு நேரம்.. "
‘ஒரு கவர்மென்ட் ஆஃப்ஸருக்குக் கடம தான் ப்ரேக் ஃபாஸ்ட்…. மத்ததெல்லாம் நெக்ஸ்ட் தான்.’ என்று முறைத்தபடி முணுமுணுத்தவனை ஏற இறங்க பார்த்த அவர்.
"சாப்பிட்டுடு அந்தம்மா வருவாங்க. வந்து உன்னைக் கூப்பிடு வாங்க. " என்று கறாராகச் சொல்லிவிட்டு எழுந்து உணவுன்ன சென்றார்.
" மக்களுக்கு கவர்மெண்ட் மேல இருக்குற நம்பிக்கைய இப்படி அலட்சியமாப் பேசி பேசியே அழிச்சிடுங்க.. எப்பத்தான் இவங்களுக்கு பொறுப்பு வருமோ… ச்ச.. " என தாமதமாக வந்துவிட்டு தத்துவம் பேச, அவனின் நண்பன் வந்தான்..
" என்னடா வந்துட்டாளா? " என்றவனின் கண்கள் பரபரத்தது. யாரையோ தேடுகிறான் போலும்.
"அந்தப் பக்கம் உக்காந்திருக்கா. "
"அவளுக்கு வெயிட் பண்றது பிடிக்காதே. இன்னேரம் சாமி ஆடிட்டு இருப்பாளே. " என்க,
அவன் சொன்னது போலவே அந்தப் பக்கம் ஒரு பெண் கத்திக் கொண்டு இருந்தாள்.
" வாட்ஸ் திஸ்... எதுக்கு என்னை வர சொல்றீங்க. நாந்தா இதெல்லாம் வேண்டாம், எனக்கு இஷ்டம் இல்லன்னு உங்ககிட்ட தெளிவா சொன்னேனே.. அப்றம் ஏன் என்னைப் படுத்தி எடுக்குறீங்க.." எனத் தன் அன்னையிடம் பொரிய,
" உனக்கு இஷ்டமா கஷ்டமான்லாம் பாக்குற நிலமைய தாண்டியாச்சி. நீ வராமலேயே முடிச்சிடலாம்னு தான் நினைச்சேன்... ஆனா அந்தம்மா தான் உங் கையெழுத்து இல்லாம எதுவும் பண்ண முடியாதுனு சொல்லுச்சி. " என்றவர் அவளின் அன்னை.
'கைனாட்டு வாங்கிட்டு வரட்டுமாம்மா..' என்று கேட்ட அவளின் அன்னையிடம் மகளை நேரில் அழைத்து வந்தே ஆகவேண்டும் அது தான் நடைமுறை என்று விட்டார் அவர்.
எவர்? எவரோங்க...
எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று கடவுளைத் தொந்தரவு செய்துகெண்டிருந்த அன்னையை முறைத்தபடியே அவளின் அருகில் வந்த ஒருவருடன் பேசிக் கொண்டு நடந்தாள் அவள். சிறிது நேரத்தில் அவளின் பெயரை அழைத்ததும் அந்த கோர்ட் வளாகத்திற்குள் நுழைந்தாள் பெண்.
அது குடும்ப நல நீதி மன்றம்..
அரைமணி நேர காத்திருப்புக்குப் பின் உள்ளே வந்த இளைஞன், நீதிபதி சீட்டில் அமர்ந்திருந்த பேரிளம் பெண்ணைக் கெத்தாக ஒரு பார்வை பார்த்து பொதுவான வணக்கத்தை வைத்தான். அங்கிருந்த பெஞ்சில் இரு கரத்தையும் தூக்கி பின்னால் வைத்துக்கொண்டு கெத்தாக கால் மேல் கால் போட்டு ஆடவன் அமர, ஜர்ஜம்மா இவனைக் கண்டு கொள்ளவில்லை.
"சொல்லும்மா என்ன பிரச்சன உங்களுக்குள்ள?" எனப் பெண்ணிடம் கேட்க,
"நீங்க அதக் கேக்கவேண்டிய ஆள் நான் தான். " எனத் தானாக முன்வந்தான் அந்த இளைஞன்.
'இவனா.. ஐய்யோ வாய திறந்தா மூட மாட்டானே.. ' என மனதிற்குள் அவனை அர்ச்சனை செய்தவர். பொறுப்பில் இருக்கும் போது கடமையைத் தட்டிக்கழிக்க கூடாது அல்லவா! அதனால், " அப்ப சொல்லுப்பா என்ன பிரச்சன? எதுக்கு வந்திருக்கீங்க.. " என்று கேக்க,
"விவாகரத்து வாங்க கோர்ட்டுக்கு வரமா அமேசான் ஆப்லயா வாங்க முடியும்." என்று இதழ் திறக்காது அவன் சொல்ல, அவர் முறைத்தார்.
"பிரச்சன... அதான்ன மேடம். இதோ நிக்கிறாளே இவளே ஒரு பிரச்சன தான் மேடம். பிரச்சனையோட மொத்த உருவமே இவ தான். இவளப் பாக்கும் போதெல்லாம் எனக்கு தோணும், பிரச்சன பண்றது இவளோட குணமா! இல்ல யாரோ பண்ற பிரச்சனைக்குள்ள அவ போய் சிக்கிக்கிறாளான்னு. பட் சந்தேகமே வேண்டாம், யாரும் பிரச்சன பண்ண முடியாத பிரச்சனையின் செல்ல குழந்தை இவ தான். சில நேரம் பிரச்சன கூட இவளப் பாத்தா எதுக்கு பிரச்சனன்னு ஒடிப் போய்டும். அவ்ளோ பிரச்சன பிடிச்சவ மேடம். உடம்பு முழுக்க சதைக்குப் பதிலா பிரச்சனைய வச்சி பிரம்மன் படைச்சி விட்ட பிரச்சன மேடம் இவ... " என்க,
'ஒரு வார்த்த கேட்டதுக்கேவா ..' என நொந்து கொண்டவர், நிமிர்ந்து அந்தப் பெண்ணை பார்க்க… 'என்ன பிரச்சனன்னு புரிஞ்சிச்சா மேடம்..' என்பது போல் பார்த்தாள் அவள். அவர் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.
இருவரும் கணவன் மனைவி. இது விவாகரத்து வழக்கு. வழக்கு தொடுத்தது கணவன். மூன்று மாதமாக அழைகிறான். விவாகரத்து மட்டும் தான் கிடைக்க வில்லை.
"உங்களுக்கே தலை சுத்துதில்ல மேடம். இவ கூட நாலு வர்ஷம்… அதுக்கு மேலயும் ஆகிடுச்சின்னு நினைக்கிறேன். ஆனா குடும்ப நடத்துன எனக்கு எப்படி இருக்கும்? இனி ஒரு நாள் கூட இவளுக்கு புருஷனா இருக்க முடியாது. என்னோட கஷ்டத்த புரிஞ்சிட்டு சீக்கிரம் முடிச்சி விட்டுடுங்க. இல்லனா… " என அடுத்த வார்த்தை பேசுவதற்குள் அவர் 'போதுப்பா நிப்பாட்டீடு..' என்பதை போல் கை அசைத்தவர் அந்த பெண்ணிடம் பேச தொடங்கினார்..
" உங்க கூட வாழ விருப்பம் இல்லன்னு உன்னோட புருஷெ இந்த கேஸ்ஸ போட்டிருக்காரு. அவருக்கு உங்களப் பிரிஞ்சி வாழ்றதுல முழு சம்மதம். நீங்க என்னம்மா சொல்றீங்க? " என கேட்டார்.
"எனக்கு விருப்பம் இல்ல மேடம். நான் வாழ்ந்தா அவரு கூடாதான்." என்க,
"அவரா... " அவன் அதிரும் முன் அவளின் அன்னை அதிர்ந்தார்.
" என்னம்மா நடிக்கிறா எம்பொண்ணு. " என வாயை பிளக்க,
'நீயெல்லாம் ஒரு தாயா! மகள மருமகெங்கூட சேந்து வாழ சொல்லி அட்வைஸ் பண்ணாம! கோர்ட்டு வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்டியே. என்ன அம்மாவோ நீ!.. ' என விழி உருட்டி முணுமுணுத்தாள்.
" மேடம் என்னால முடியாது. இவ கூட தான் நான் வாழணும்னா உங்க கைக் காசப் போட்டு எனக்கு ஒரு முழம் கயிறு வாங்கிக் குடுங்க. அப்படிக் காசு செலவழிக்க மனசில்லன்னா ப்ரெக் பிடிக்காத தண்ணீ லாரியாப் பாத்து தள்ளி விட்டுடுங்க.. இவ கூட வாழ்றத விட மரணத்த முத்தம் குடுப்பதே மேல்..." என வசனம் பேச,
" நீ உறுதியாத்தா சொல்றியாம்மா… இவெ… ம்க்கிம்… இவரு கூடக் கண்டிப்பா வாழ்ந்துத்தா ஆகப்போறியா? "
"ஆமா மேடம்... என்னால அவரு இல்லாம இருக்க முடியாது. என்னோட உலகமே அவரு தான்."
" பொய்யி... பொய்யி.... இவ என்னோட இருண்ட பக்கம் மேடம்... இவ கூட இருந்தா எவ்வாழ்க்க கருகிடும்… சூரிய ஒளி கூடப் படாம வாடிப் போய்டும்... " எனப் பேசிக் கொண்டே போக, நீதிபதி டென்ஷன் ஆகிவிட்டார் போலும்.
" அப்படி என்ன தான் பிரச்சன உங்களுக்குள்ள? எதுக்காக விவாகரத்து கேக்குறீங்க." என ஜர்ஜம்மா மீண்டும் கேட்க,
அதற்குப் பதில் சொல்லாமல் மீண்டும் பிரச்சனையைப் பற்றி பிரச்சாரம் செய்தான். ஆனால் எதற்குப் பிரிய நினைக்கிறான் என்று சொல்லவே இல்லை.
'அவெ சரிப்பட்டு வர மாட்டான்.'
"ஏம்மா அப்படி என்ன நடந்ததுன்னு உங்கிட்ட அவெ விவாகரத்து கேக்குறான். சந்தேகப்படுறியா… உனக்கு முன்னால் காதல்... தற்போதைய காதல்ன்னு... " என அவர் கேட்க, அவள் தலை அசைக்கும் முன் அவன் வேகமாக இல்லை என்றான்.
"நீங்க சொல்ற மாதிரி எதுவும் கிடையாது மேடம். எங்களுக்குள்ள சின்ன மிஸ் அண்டர்ஸ் ஸ்டான்டிங் தான். ஒரு பத்து நிமிடம் நாங்க தனியாப் பேசுனா சரியாகிடும். ப்ளிஸ் அதுக்கு அலோ பண்ணுவீங்களா. நானும் அவரும் பேசணும்." என்றாள் பெண்.
"என்னைப் பாடைல தூக்கி உக்கார வைக்க பத்து நிமிஷம் போதுமா உனக்கு. " என மனைவியைப் பார்த்து கேட்டவன், நீதிபதியிடம் திரும்பி,
"மேம்… பத்து நிமிஷம் கூப்பிடுறது எதுக்குன்னு நான் சொல்ல தேவையில்லை.. என்னை மார்சரிக்கி அனுப்ப பாக்குற இந்த நடமாடும் எமன் கூட நான் இருக்க மாட்டேன். என்னை விட்டுடுங்க. நா உயிரோட வாழணும் ஜர்ஜம்மா.” என்றவன்,
‘இந்த உலகத்துக்காக நான் உயிரோட இருக்கணும்.. நாலு பேருக்கு நல்லது நடக்க நான் இருக்கணும்.. " என்பது போல் நடித்தான்.
அவர் அந்தப் பெண்ணை பார்த்தார். ' இவெ உனக்கு கட்டாயம் வேண்டும்மா.. ' என்பது போல்.
அவளோ.. ' கணவனே கண்கண்ட தெய்வம்.. ' என்பது போல் திருப்பி பார்க்க,
"கவுன்சிலிங் போய் பேசலாமே... " என்றார் அவர்.
‘முடியாது முடியாது… எத்தன கவுன்சிலிங்… எத்தன வாட்டி தான் போய் போய் பேசுறது. என்னாலலாம் இதுக்கு மேல விவாகரத்துக்காக அழைய முடியாது. இப்பவே வெட்டி விடுங்க. இல்லன்னா நாளைக்கி நான் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டா வந்து அரஸ்ட் பண்ண மாட்டேன். போலிஸ்க்குப் போக மாட்டேன்னு எழுதி குடுக்க சொல்லுங்க.’ என்பது போல் பேச,
அவளோ ‘அவன் இல்லாமல் நான் இல்லை…’ என்று பாடிய பாட்டை பாட… இவனும் ‘இவா இருந்தா நான் இருக்க மாட்டேன்’ என்று பாட, இந்தழ் பாட்டைக் கடந்த சில மாதங்களாகக் கேக்கும் அந்தம்மாக்குக் கடுப்பாகிவிட்டது போலும்..
என்ன பிரச்சனை என்றே சொல்லாமல் கண்டதைப் பேசி கடுப்பேற்றியதால், நீங்க ரெண்டு பேருமே பிரிந்து இருப்பது தான் நமக்கு நல்லது என்று பிரித்து விட்டு விட்டார்.
"இனி நீங்க ரெண்டு பேரும் சட்டப்படி கணவன் மனைவி கிடையாது. " என்று சொல்லி எழுந்து சென்றார் அவர்.
"ஹப்பி இன்று முதல் ஹப்பி.. ஹப்பி இன்று முதல் ஹப்பி... " என்று தன் மொபைலில் பாடல் ஒன்றை ஒலிக்க விட்டவனல ஜர்ஜ் திரும்பி பார்த்தார்.
"நன்றி அம்மா... நன்றி..” என்று இதழ் திறக்காது கூறி கரம் உயர்த்தியவன்,
“நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தை இல்லை எனக்கு...
நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க நான்தான் விரும்பறேன்
நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீங்க கிடைச்சிங்க
பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே….” என அவன் ஓடி வந்து அந்தம்மாவை கட்டி அணைத்து தூக்கி சுற்று சுற்றென்று சுற்றி பாட...
" நன்றி ம்மா.. என்னை வாழ வச்ச தெய்வம் நீங்க.. நன்றி.. உங்கள நான் மறக்கவே மாட்டேன்.. நான் சொந்தமா வீடு வாங்குனதும்… உங்க பேர்ல எங்கவீட்டு மொட்ட மாடில சின்ன சைஸ்ல சிலை செஞ்சி வச்சி, ஆறு வேளையும் பூஜ பண்றேன்..." என்றவனை விசித்திரமாக பார்த்தனர் அனைவரும்..
ஆனால் எதைப் பற்றியும் நான் கண்டு கொள்ள மாட்டேன் என்பது போல் மனைவியிடம் இருந்து கிடைத்த விடுதலையையும் விவாகரத்தையும் மகிழ்ச்சியுடன் குதுகலமாய் ஆடினான்..
"இனி என்னோட வீட்ட குப்ப தொட்டியா மாத்த யாரும் இல்ல… நிம்மதியா தூங்குற என்னைத் தொல்ல பண்ண யாரும் இல்ல... வீட்டுக்கு வந்தா கதவ தட்ட தேவையில்ல... நான் சம்பாதிக்கிற பணத்த ப்யூட்டி பார்லருக்கு செலவழிக்க வேண்டியது இல்லை... நான் வாங்கிட்டு வர்றத கொற சொல்ல யாருமில்ல…
காலைல வெல்லன எந்திரிச்சி பால் பாக்கெட் வாங்கிட்டு வர தேவயில்ல… வாங்கிட்டு வந்த பாக்கெட்ட உடச்சி காச்சி காஃபி போட்டு யாரையும் எழுப்ப தேவயில்ல...
சமயலுங்கிற பேர்ல கண்ட கருமத்த சாப்பிட சொல்லி டார்ச்சர் பண்ண யாருமில்ல… பேசி பேசி என் உயிரெடுக்க யாரும் இல்லை... வீடே பழைய படி நிசப்தமா இருக்கும்.. ஹெய்.. இனி நான் சுதந்திரமாத் திரியப் போறேன்... ய்யே.. " எனக் கத்த, அவனின் மனைவி... மன்னிக்கவும்.. முன்னாள் மனைவிக்குத் தான் கடுப்பாக இருந்தது.
ஜர்ஜம்மா, 'இவனுக்குப் புருஷனுக்குன்டான குவாலிபிகேஷன் தான் இல்லன்னு நினைச்சேன்.. ஆனா இவனுக்கு மனுஷனுக்கான எந்தத் தகுதியும் இல்ல போலயே.. நல்ல வேள அந்தப் பொண்ணு வேண்டாம்னு சொல்லியும் விவாகத்து தந்திட்டோமேன்னு ஒரு பக்கம் வருத்தமா இருந்தது.
சரியான வேலை தான் செஞ்சிருக்கோம். இவெங்கிட்ட இருந்து அந்தப் பொண்ண காப்பாத்திட்டோம்.. ' என நிம்மதியுடன் சென்றார் அவர்.
‘இப்ப கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா…’ என்று கோர்ட் வளாகக்தைப் பாராது ஆட்டோகாரனுடனும் நண்பனுடனும் ஆடி பாடிக் கொண்டே தன் சுதந்திர தினத்தை பட்டாசு வெடித்து கொண்டாடினான், அந்த இளைஞன்.
அவனின் மனைவியோ, அவனையும் அவனுடன் ஆடிய ஆட்டத்தை வாய்ப் பார்த்துக் கொண்டு நின்ற அன்னையை முறைத்து பார்த்து படி சென்றாள்.
தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..