நின்னையல்லால் - 04
ஒதுக்கமாக வந்து வாமன் இலக்கத்திற்கு அழைத்தாள் சாத்வி.
சில ரிங்கில் அழைப்பு ஏற்கப்பட, "ஹெலோ!" என்றது வாமன் ஆண்மைக் குரல்.
யார் என்றே தெரியாமல் பேசுவது போல அவன் தொனி விளங்க, நம்பர் சேவ் பண்ணல்லயோ என சாத்வி யோசிக்கும் போது வாகன இரைச்சலும் கேட்டது.
"ஹெலோ நான் சாத்வி கதைக்கிறன்.."
"சொரி!"
"நான் சாத்விஹாசினி கதைக்கிறன்.." சத்தமாக சொன்னாள்.
"சாத்விஹாசினி.. ஹா, சொல்லுங்க! நம்பர் பார்க்கல்ல நான்.."
அவன் பைக்கில் போய் கொண்டிருக்கிறான் என விளங்கியதும், வீட்டுக்கு கூட போய் சேரவில்லை அதற்குள் அழைக்கிறாளே என பிழையாக நினைத்திருப்பானோ என சங்கடம் கொண்டவள்,
"ஒண்டும் இல்ல, நீங்க வீட்ட பொயிட்டிங்களா எண்டு சித்தி கேக்க சொன்னாங்க.." என்றாள்.
"ஒன் தி வே.. ரீச் ஆகிட்டு நான் எடுக்கிறனே உங்களுக்கு.."
"சரி" என்று வைத்தவள் புனிதாவிடம் வந்தாள்.
அரிசி கழுவிக் கொண்டிருந்த புனிதா, "இன்னும் போய் சேரல்லயா! சரி! அவரே எடுக்கட்டும். நீ யோசிக்காத. உனக்கு விருப்பம் இல்லாத ஒண்டயும் நாங்க செய்ய மாட்டம் சாத்வி. அம்மாக்கு தான் கவலையா இருக்கும். இவ்வளோ தூரம் வந்த சம்மந்தம் சரி வராம போனா. நீ இப்போதைக்கு ஒண்டும் அவைக்கு சொல்லாத சாத்வி.."
புனிதா மதிய சமையலில் மும்முரமாக சாத்வி தங்கள் வீட்டுக்கு சென்றாள்.
செல்லம்மா ஆச்சி தனது சீதன வளவை (கல்யாணத்தின் போது பெண்ணுக்கு தாய் வீட்டில் கொடுக்கும் வீட்டுக் காணி) இரண்டாக பிரித்து மூத்த மகள் தவமலர், இளைய மகள் புனிதமலர் இருவருக்கும் ஆளுக்கு பாதி கொடுத்திருந்தார்.
செல்லம்மா வாழ்ந்த வீடு தான் தவமலருக்கு சொந்தமானது. தவமலருக்கு பிறகு அது சாத்விக்கு உரித்தாகிறது. அதில் தான் அம்மம்மா பேத்தி இருவருமாக வசிக்கின்றனர்.
புனிதா வீட்டுக்கும் சாத்வி வீட்டுக்கும் இடையேயான மதில் சுவர் மத்தியில் போக வர சிறிய வழி உண்டு. இது உன் வீடி இது என் வீடு என்ற பிரிவினை இன்றி இரண்டு வீட்டையும் பொதுவாகவே ஆள்வர்.
சாத்வி வீட்டு வாசலில் அக்ஷி நம்சி விளையாடிக்கொண்டிருக்க, இவள் யோசனையுடனே வந்தாள். செல்லம்மா எப்படியும் ஆவலுடன் கேட்பார் மாப்பிள்ள பொடியன் வந்தாரா என கேள்விகளை அடுக்குவார்.
சித்தி சொன்னது போல எதுவும் உறுதியாக தெரியாமல் அம்மம்மாவிடம் வாய் விட கூடாது என தீர்மானித்தவள், நேரம் நண்பகலை கடப்பதால் முதலில் சமையலை முடிக்க நினைத்தாள்.
காலையில் கோயிலுக்குச் செல்ல முன் சுத்தம் செய்து விட்டு போன சமையல் கட்டில் தாளிப்பு வாசனை வீச, அடுப்பில் சோற்றுப் பானையும் சமையல் மேடையில் கறி சட்டிகளும் மூடி இருக்க, எல்லாவற்றையும் திறந்து பார்த்த சாத்வி சமையலை முடித்து விட்ட செல்லம்மாவை தேடினாள்.
இருட்டாக கிடந்த அவர் அறையில் தரையில் அமர்ந்து இருந்தார் செல்லம்மா.
"என்ன, இருட்டில இருக்கிறிங்க?" என ஜன்னலை திறந்து விட்டாள்.
மடியில் அவர் மூத்த மகளின் சட்டப் படம் இருக்க, சுருங்கிய செல்லம்மாவின் கன்னங்களில் ஈரம் தெரிந்தது.
மகள் ஞாபகம் வந்து இருட்டில் உட்கார்ந்து அழ என்ன நடந்தது இப்போது?
"என்ன அம்மம்மா??" அவர் அருகில் முட்டி போட்டாள் சாத்வி.
"சொர்ணமும் மகனும் வந்து போறாங்க" என்றார் செல்லம்மா நசுங்கிய குரலில்.
சாத்விக்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்து போனது.
சொர்ணம் என்பவள் சாத்வியை பெற்றவனின் கூடப் பிறந்த அக்கா. அண்ணன் காரன் குடி வெறி என கெட்டு மனைவியை துன்புறுத்தி இளம் வயதில் பொல்லாத அநியாயங்கள் பல செய்து இடைநடுவில் குடும்பத்தில் இருந்தே காணாமல் போயிருக்க, அவனுடைய அக்கா சொர்ணம் தம்பி வாழ்க்கை நாசமாக காரணமே அவன் தேடிக் கொண்ட மனைவி தவமலர் தான் என்று தூற்றுபவள்.
அப்படி இருந்தும் தவமலர் வயிற்றில் பிறந்தவளை தனது ஒரே மகனுக்கு கட்டித் தரக் கேட்டு பல வருடங்களாகவே பிரயத்தனம் செய்கிறாள். அது பல வகையில் மிரட்டலாகவே வந்திருக்கிறது.
உள்ளூர் சம்மந்தங்கள் சாத்விக்கு அமையாது போனதற்கு காரணம் சொர்ணமும் அவள் மகனுமே. தரகரின் கடந்த கால முயற்சிகள் தோல்வியில் முடிந்ததற்கு காரணமும் அவர்களே தான்.
வெளியூரில் இருந்து யாரோ வந்து திருமணம் பேசி முற்றானது என அயலவர்களால் சேதி கேள்வியுற்று வந்து விட்டாள் போல இன்று.
இப்போது வந்திருக்கும் விரிவுரையாளர் சம்மந்தம் சுணக்கம் இன்றி துரித கதியில் முன்னெடுக்கப்படுகிறது. மாப்பிள்ளை வந்து சாத்வியை பார்த்தது கூட சம்பிரதாயத்துக்காக தான்.
இன்னும் ஐந்தாறு நாளில் அவள் திருமணம் முடிந்து தன் பாரம் இறங்கி விடும் என மகிழ்ந்து இருந்த செல்லம்மா, பல நாள்களுக்கு பிறகு அவரே மதிய சமையலை செய்தார்.
சாத்வி பல்கலைக்கழகத்தில் இருந்த வரை மூன்று வேளை சாப்பாட்டை புனிதாவே கொடுத்து விடுவாள் தாய்க்கு.
சாத்வி பட்டப்படிப்பு முடித்து வந்த பிறகு அவளே சமையல் வீட்டு நிர்வாகம் கவனிப்பதால் செல்லம்மாக்கு சுமை என்பதே இல்லை.
இன்று கோயிலுக்கு போன பேத்திக்கு விருப்பமான கறியை சமைத்து வைத்து அவர் காத்திருக்க, நடுவில் வந்து ஆடி விட்டு போயிருக்கிறாள் சொர்ணம்.
"அவங்கள ஒரு மனிசரா மதிக்கிறிங்களா நீங்க? நீங்க குளறினா எல்லாம் சரியா போகுமா அம்மம்மா?" அருகில் அமர்ந்து அவர் கன்னங்களை துப்பட்டாவால் துடைத்து விட்டாள் சாத்வி.
"வந்த சம்மந்தம் எல்லாம் அத இத சொல்லி தட்டிப் போய் இது ஒண்டு தான் மாப்பிள்ள பொடியன் நேர்ல வந்து பாக்கிற மாதிரி வந்திருக்கு. காதும் காதும் வச்ச மாதிரி அந்த பொடியன்ர ஊர்லயே உன்ன கூட்டி போய் கல்யாணத்த கட்டி வைப்பம் எண்டு பாத்தன்.."
"அது நடக்கிறத பாப்பமே எண்டு சவால் போட்டுத்து போறாள் இந்த அகங்காரி. எனக்கு இனி நம்பிக்க இல்ல புள்ள. இந்த மாப்பிள்ள வீட்டையும் என்ன வழி பட்டாவது தேடி அறிஞ்சி போய் இல்லாத பொல்லாதத சொல்லி உன்ர கல்யாணத்த கலச்சி போடுவாள் அவள்..."
"என்ர மகள்ட வாழ்க்கய போல பேத்திட வாழ்க்கையயும் இப்புடி கெடுக்க நிக்கிறாங்களே. அந்த ஆண்டவனும் இத பாத்துட்டு இருக்கானே. எனக்கு முன்னுக்கு சாமியா போன என்ர மகள் தான் அவள்ட புள்ளைக்கு துணையா நிக்கணும்...." செல்லம்மா கண்களில் நீரோட சாத்விக்கு மனம் பிசைந்தது.
இந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என அவள் இலகுவாக சொல்லி விட்டாள்!
இந்தக் கல்யாணம் நடக்கா விட்டால் அவளுக்கு இனி வாழ்க்கையே இல்லை என்பது போல வயதான அம்மம்மா அழுகிறாள்!
இப்போது என்ன செய்வது?
சாத்விக்கு சின்ன வயதில் இருந்தே பிரச்சினைகளை கண்டு கண்டு மனம் மரத்ததாலோ என்னவோ அழுகை அத்தனை சீக்கிரம் வந்து விடாது. மனம் கலங்கும், தன்னுள் குறுகுவாள்.
வலி வேதனை எல்லாம் தன்னுள்ளேயே அடக்கிக் கொள்வாள். எதையும் முகத்தில் வெளிப்பட, கண்ணில் கசிய விட மாட்டாள். அவள் உணர்ச்சிகள் பிறர் முன் வெளிப்படுவது அரிது.
"போதும் அம்மம்மா எழும்பி வாங்க சாப்பிடுவம்.. எனக்கு பசிக்குது"
"நீ போய் சாப்பிடு புள்ள, உனக்கு விருப்பமான பலாக்கா கறி ஆக்கி வச்சிருக்கன்"
"நீங்களும் வாங்க"
அவர் எழுந்து வராமல் அவள் உண்ண மாட்டாள் என்று தெரியும் அவருக்கு. புடவை தலைப்பால் மகள் படத்தை துடைத்து இருந்த இடத்தில் அதை வைத்து எழுந்தார்.
அவருக்கு உணவு வைத்துக் கொடுத்து அவளும் உண்டாள். விரிவுரையாளர் மாப்பிள்ளை வந்து போனதை சொன்னாள்.
என்ன பேசினீர்கள் அவருக்கு உன்னை பிடித்ததா.. உனக்கு அவரை பிடித்து இருக்கிறதா எதுவும் கேட்கவில்லை செல்லம்மா. அவரை பொறுத்த வரை பெண் பார்க்கும் படலம் முடிந்து போனது. சொர்ணம் சூழ்ச்சி எதுவும் பலிக்காது போனால் அடுத்து கல்யாணம் தான்.
பலிக்காது போக வேண்டுமே...
உண்டதும் செல்லம்மா முந்தானையை விரித்து மண்டபத்தில் படுத்துக் கொள்ள, பாத்திரங்களை ஒதுக்கி வைத்து படுக்கை அறை வந்த சாத்வி மடிக்கணினியை திறந்து தனது முகநூல் பக்கத்தினுள் நுழைந்தாள்.
அவள் கை தானாக Bamadevan Nadarasa என டைப் செய்தது.
ஏதோ ஒரு விரிவுரை மண்டபத்தில் மேசையில் சாய்ந்து கால்களை குறுக்காக வைத்து கையில் மாக்கருடன் எதிரில் இருப்பவர்களை பார்க்கும் புகைப்படம் ஒன்றை வைத்திருந்தான் ப்ரொஃபைலாக.
அதை க்ளிக் செய்து வைத்தவளுக்கு கோயிலுக்கு வந்தவன் கை தந்து குலுக்கியது தானாக நினைவில் வந்தது.
ஆயிரக் கணக்கில் ஃபாலோவர்கள் இருந்தனர். பதிவுகள் அனைத்தையும் பொதுவில் (public) விட்டிருந்தான்.
இன்றில் இருந்து நான்கைந்து வருடங்களை முன்னால் சென்று பார்வை இட்டாள் சாத்வி.
கல்வி முறைமைகள் பற்றிய பதிவுகளையே அதிகம் பகிர்ந்து இருந்தான். அங்கங்கே அவனுடைய அக்கா தங்கை பிள்ளைகளுடன் வந்தான். அவர்கள் பிறந்த நாள்களுக்கு வாழ்த்து சொல்லி இருந்தான்.
அம்மா அப்பா திருமண நாளுக்கு அவர்களுடன் கோயிலுக்கு போயிருந்தான். கண்டி அழகையும் பதுளை எழிலையும் படங்களாக பதிவேற்றி இருந்தான். சொந்த வாழ்க்கை பற்றி வேறு எந்த அலட்டலும் இல்லை அதில்.
இதில் எங்கே போய் பிரஷாந்தியைத் தேட? அவள் தொடர்பில் எந்த சுவடும் இல்லை.
இதில் இல்லா விட்டால் என்ன? அவளுடைய முகநூல் பக்கத்திற்கே சென்றால்...
இருப்பாளா??
நிச்சயம் இருப்பாள். பிரஷாந்தி இருந்த அட்வான்ஸூக்கு அவள் இந்நேரத்தில் சமுக வலைதளங்களை கலக்கலாம்.. இன்ஸ்டாவில் எத்தனை ரீல்ஸ்களோ.. டிக்டாக்கில் எத்தனை ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனரோ..?!
சாத்வி பிரஷாந்தி பெயரை டைப் செய்ததும் நூற்று கணக்கில் பிரஷாந்திகள் ப்ரொஃபைல் காட்டியது. சாத்விக்கு கஷ்டம் கொடுக்காமல் பல மியூசுவல் நண்பர்களோடு முகப்பு படத்தில் அவளே தரிசனம் தரும் ஐடி கண்ணில் பட்டது.
அந்த பக்கத்தினுள் நுழைந்து ஒவ்வொரு பதிவுகளாக பார்வையிட்ட சாத்விக்கு, அவள் சற்றும் எதிர்பாராத அதிர்ச்சியே கிடைத்தது.
வாமதேவனுடன் கதைக்காமலே, அவன் காதல் வாழ்க்கை பற்றிக் கேள்வி எழுப்பாமலேயே அவன் குறித்தான தனது முடிவுக்கு வந்தாள் சாத்விஹாசினி.
வளரும்..
-ஆதுரியாழ் ❤️

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..