அத்தியாயம்: 2
இருளும் அல்லாது, பகலும் அல்லாது, காலை வேளை, இல்லை அந்தி சாயும் நேரமா? சரியாக வரையறை செய்ய இயலாதபொழுது அது. கிழிந்த ஆடையுடன், ஒற்றையாய் யாரின் துணையுமின்றி, எங்கிருக்கிறோம் எங்குச் சொல்கிறோம் என்று தெரியாமல் மனதில் கலக்கத்துடன் நடந்து கொண்டிருந்தான் ஒரு இளைஞன்…
பயம் இல்லை தான். அதே நேரம் தைரியமும் இல்லை அவனிடம். எந்த இடம் இது? ஏன் இங்கு இருக்கிறோம்? யார் செய்த வேலை இது? என்ற கேள்விகள் தன் அவனைச் சூழ்ந்து கொண்டன. எங்கும் குழப்பம் மட்டுமே இருக்க, திடீரென மின்னல் ஒன்று வெட்டி, இருக்கும் இடத்தை வெளிச்சமிட்டு காட்டியது. சுற்றி மரம் இல்லை, செடி இல்லை ஏன் உயிரினங்கள் வாழ்வதற்கு உண்டான எந்த ஒரு சீதோஷ சூழ்நிலையும் அங்கு இல்லை. பாலைவன மணலில் நடந்து கொண்டிருக்கிறான் அவன்.
நா தண்ணீருக்காக வேண்டித் தவமிருக்க, உடல் ஓய்வு குடு என்று தொந்தரவு செய்ய ஆரம்பித்தது. கண்களில் பார்வை மங்கிப் போக, கால்கள் எட்டு வைக்க மறுத்தன. ஆனாலும் நடந்து கொண்டிருந்தான் அவன், கால்களில் செருப்பின்றி.
செல்லும் பாதை தெளிவாகத் தெரியாததால் இடறி கீழே விழ, தாங்கிப் பிடிக்கத்தான் ஆள் இல்லையே. உடலெல்லாம் மண்ணாக, மணலில் உருண்டு பிரண்டு எழுந்து நின்றான் அவன். விடாது அடுத்தடுத்து வானத்தைக் கீறிக் கொண்டு வந்த மின்னல்கள் சட்டென நின்று போயின.
இருள்!!.. எங்கும் இருள்!!!.. இரு கைகளையும் கட்டிக் கொண்டு சுற்றி சுற்றிப் பார்த்தபடி நடந்து வந்த அவனின் முகத்தில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. காதுகள் சில ஒலியை உள் வாங்கின. அது மரங்களின் கிளைகள் உரசும் ஓசை. கால்கள் மணலை உணராது கற்களை உணரத் தொடங்கின. இடையிடையே மரத்தின் வேர்களும் தட்டுப்பட்டதால், ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும் முன் ஒரு நிமிடம் யோசித்து எடுத்து வைத்தான்.
தூரத்தே சிறு வெளிச்சம். அது தீயின் ஒளி. வேகவேகமாக மனம் சென்று பார் என்று சொன்னாலும், உடல் ஒத்துழைக்கவில்லை. சில இடங்களில் கீழே விழுந்ததால், எழுந்து நடக்கக்கூட முடியாமல் தவண்டு கொண்டே செல்லும் நிலை. ஆனாலும் நடக்க முயன்றான். நெருங்கிச் செல்லும் போதே, யாரின் அழுகுரலோ அவனின் காதுகளில் கேட்டது. தீயை நெருங்க நெருங்க அழுகுரலில் சத்தம் அதிகமாகக் கேட்டது.
" யா..ரு.. யாரது?????.. " எனச் சத்தமாகக் கேட்க முயன்றான்.
பதில் வரவில்லை. ஆனால் பெருங்குரலில் அழும் சத்தம் கேட்டது. எரிந்து கொண்டிருந்த சுள்ளிகளை சுற்றி சென்று பார்த்தான். இருளில் தன் முட்டியை மடக்கி, அதில் தன் முகத்தைப் புதைத்து அழுது கொண்டிருந்தது அந்த உருவம்.
அருகில் சென்று தொட தயங்கியவன் சற்று பலமான குரலில், "யாரு நீ?.. எதுக்கு இங்க உக்காந்து அழுத்துட்டு இருக்க?.. " எனக் கேட்டான்.
அந்த உருவம் மெல்ல தலை தூக்கி பார்த்தது. அவன் அந்த உருவத்தின் முதுகின் பக்கம் நின்றதால் யார் என்று தெளிவாகத் தெரியவில்லை. எனவே எரிந்து கொண்டிருந்த சுள்ளியை எடுத்து, அதன் ஒளியில் யாரெனப் பார்க்க நினைத்து எடுத்து வந்தான்.
" நா.. யாருன்னு உனக்குத் தெரியலையா.. " எனக் குரல் கேட்டது..
முகம் காண நினைத்தவன் அப்படியே நின்று விட்டான், அதிர்ச்சியில். ஏனெனில் உருவம் ஆணைப் போல் இருந்தது. குரல் பெண்ணுடையது. திரும்பிச் சென்று விடலாம் என்று நினைக்க, அதற்குள் அது அவனின் புறம் திரும்பி விட்டது.
ஆச்சரியம்!, அதிர்ச்சி!, பயம்!, கவலை, மகிழ்ச்சியென எல்லா வகை உணர்வுகளும் அவனை வந்து ஒரே நேரத்தில் தாக்கியது. காரணம் திரும்பிய உருவத்தின் முகம்.
அது பார்கவியுடையது.
முகம் மட்டுமே பார்கவியுடையது. உருவம் அவளுடையது இல்லை.
"ஹரியண்ணா. என்ன தேடி வந்துட்டியா. வாண்ணா. " எனக் கரம் நீட்ட, கௌதம் கீழே விழுந்து விட்டான். பேச்சு வரவில்லை.
"நா உனக்காக எத்தன வர்ஷம் காத்துட்டு இருக்கேன். உனக்கு என்னோட நியாபகமே இல்லையா.? ஹரியண்ணா."எனப் பேசிக் கொண்டே அவனின் அருகில் வந்தது அந்த உருவம்.
"நீ என்ன மறந்துட்டு சந்தோஷமா இருக்க போல. ஆனா நா சந்தோஷமா இல்ல. என்ன தனியா விட்டுடேல்ல. நா இருக்குறதையே மறந்துட்டேல்ல. " எனக் குற்றம் சுமத்த, கௌதம் எழுந்து ஓடத் தொடங்கினான்.
பேசிக் கொண்டே அதுவும் அவனின் பின்னால் வந்தது. சட்டென நின்று அந்த உருவத்தைக் கவனிக்க ஆரம்பித்தான் அவன்.
"நா உன்ன தேடுனேன் ண்ணா. ஆனா நீ கிடைக்கவே இல்லை. ஹரிண்ணா, ரிஷிண்ணான்னு கத்துனேன். யாருக்குமே கேக்கல. இப்பவாது என்ன தேடி நீ வந்தியே. என்னப் பாக்க வரனும்னு உனக்கு இப்பத்தா தேனுச்சா. நீ இல்லாம நா எப்படி ஆகிட்டேன்னு பாத்தியா. " எனப் பேசிக்கொண்டே இருந்த உருவத்தின் முகத்தில் கண், வாய், மூக்கு என அனைத்து துவாரங்களில் இருந்தும் குருதி பெருக்கெடுத்து வடிந்தது.
ஆறென ஓடிய குருதியை பார்த்தவனின் கண்களுக்கு மற்றொன்றும் தெரிந்தது. அது அந்த உருவத்தின் மார்பு இரண்டாகப் பிளந்து கொண்டு, உள்ளே இருக்கும் இதயம் தனியாக, அவனை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.
" ஹரிண்ணா.. " என்று அழைத்தபடி வந்த உருவம் அவனை நெருங்க, இதயம் படபடக்க, உடல் வேர்வையில் குளிக்க, வேகமாக எழுந்து அமர்ந்தான் கௌதம், கனவிலிருந்து விடுபட்ட படி.
கனவு.
எப்போதாவது வரும் கனவு. ஆதிரையின் பிறப்பிற்கு பின் அடிக்கடி வரத் தொடங்கி விட்டது.
கட்டிலில் இருந்தவனுக்கு மூச்சு முட்டியது. எழுந்து ஜன்னல் கதவைத் திறந்தான். முகத்தில் குளிர்ந்த காற்று பட்டவுடன், இதமாக இருப்பதை போல் உணர்ந்தான். கண்களை மூடி அதை அனுபவிக்க நினைக்க, மூடிய விழிகளுக்குள் மீண்டும் அவ்வுருவம் வந்து அழைத்தது.
வேகவேகமாகக் குளியலறையை நோக்கிச் சென்றவன், தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, அறையை விட்டு வெளியேறினான், தனிமை எனும் அரக்கனிடமிருந்து தப்பிப்பதற்காக.
அது அடுக்குமாடி குடியிருப்பு வளாகம். ஒற்றை படுக்கை வசதி கொண்ட, ஒரு வீட்டை வாங்கி அதில் குடியிருக்கிறான் அவன், தன் அலுவலகத்திற்கு பக்கத்திலேயே. ஒரு ஹால் ஒரு கிச்சன் இரண்டு பாத்ரூம், ஒரு படுக்கை அறை, சிறிய பால்கனி. இது தான் அவன் இருக்கும் வீடு.
அறையை விட்டு வெளியே வந்தவன், சிறிது நேரம் பால்கனியில் நின்றான். ஐந்தாவது மாடியிலிருந்து கீழே பார்க்கையில் அனைத்தும், சிறிய அளவில் பொம்மைகள்போல் தெரிந்தது. குழாயில் தண்ணீரை பிடித்து அங்கிருந்து சில மலர் செடிகளுக்கு ஊற்றியவன், அதன் வாசம் நுகர்ந்தான். புத்துணர்வு பெறுவது போல் இருந்தது. தன் மகள் வளர்க்கும் காட்டு ரோஜாவிற்கும் நீர் ஊற்றி விட்டு, சமையலறை சென்றான், தன் மனைவியைக் காண.
புடவையை இழுத்து இடுப்பில் சொருகி, அவசர அவசரமாகச் சமைத்துக் கொண்டிருந்தாள் இந்துமதி. ஹரிஹர கௌதமின் காதல் மனைவி. கதவில் சாய்ந்து அதை ரசித்தவன், வேலை செய்யும் அவளைத் தொந்தரவு செய்யும் பொருட்டு பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான்.
"குட்.. மார்னிங்.. மதி.. " எனச் சொல்லிக் கழுத்தில் முத்தமிட, இந்து தோளைக் குளுக்கி அவனை விலக்கி நிறுத்தினாள்.
"காஃபி வேணும் மதி.. தல வலிக்கிது.." என அவளை அணைக்க, அவள் காஃபியை கையில் குடுத்து வெளியே போ என்று கைக்காட்டினாள்.
"ஏ நா வெளில போனும்?. நா இங்க நின்னு தா குடிப்பேன். இல்லாட்டி இப்படி உக்காந்து கூடக் குடிப்பேன். " எனச் சமயல்கட்டில் ஏறி அமர்ந்து கொள்ள, அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள்.
"மதிம்மா.. மௌன விரதமா.. ச்ச.. நா நல்லா இருக்கனும்னு எங்கூடவே பேசாம இருக்குறதுக்கு பேரு தா விரதமா?.. ம்.. நல்ல விரதம்.. எப்ப முடியும் இது.. " கேலியாகக் கேட்டான். ஏனெனில் அவனின் காலைப் பொழுது அவளின் குரல் கேட்டுத் தான் விடியும். இன்று பேசவில்லை. அதான் கேட்கிறான். பதில் இல்லை அவளிடத்தே.
அவளைப் பார்வையால் பருகியவாறே காஃபியை தொண்டைக்குள் சரிக்க, அவனைக் கடைகண்களால் முறைத்துபடி இருந்தாள் அவனின் மனைவி. தன் விரல்களால் நீரை எடுத்து அவளின் முகத்தில் சுண்ட, அவளின் கோப விழிகளைக் காண நேர்ந்தது.
"நீ ரொம்ப கோபமா இருக்க போல.. நா அப்றமா வாறேன்.. " எனப் புலம்பிபடி அவளின் முகம் பார்க்க, எந்த ரியாக்ஷனையும் காணும்.
'இந்த மாறி இவா கூடப் பிரச்சன வந்தா சமாதானம் செய்றதுக்காவே ஒரு ஜீவன நா பெத்து வச்சேனே. எங்க அத. ' எனத் தன் மகளை, எழுந்து வெகுநேரம் கழித்து தேடினான்.
கணவன் மனைவிக்கு இடையே வரும் சின்ன சின்ன உரசல்களுக்கு அணிலாய் இருந்து தூது செல்வது பிள்ளைகள் தானே.
" ஆதிகுட்டி… ஆதி செல்லம்… " எனக் கத்திக்கொண்டே வெளியே வந்தவன், வீட்டின் அனைத்து இடத்திலும் தேடிவிட்டான். ஏன் கட்டிலுக்கு அடியில், ஃபிரிட்ஜி இடுக்கில், ஃபிரிட்ஜின் உள்ளே கூடத் தேடி விட்டான். பாவம் அவனின் மகளைத்தான் காணவில்லை. காலையில் வந்த கனவு வேறு, வந்து வந்து செல்ல இந்துவைச் சத்தமாக அழைத்தான்.
அவனின் குரல் இருந்த கவலையை உணர்ந்த இந்துவோ, மெதுவாக வந்து நின்றாள், என்ன என்பது போல்.
"மதி… ஆதிய காணும். " எனப் படபடத்த கணவனை அமைதியாகப் பார்த்தாள் அவள்.
" ஏன்டி… பெத்த பிள்ளைய காணும்னு சொல்றேன். மல மாறி நிக்கிற. ஆதி எங்க. " சற்று கோபமாகிப் போனான்.
"எங்க இருக்கனுமோ, அங்க இருக்கா. பத்திரமாத்தா இருக்கா. பயப்படாதிங்க. " எனச் சொல்லி உள்ளே செல்லப் பார்க்க, அதற்குள் வந்து அவளை அலேக்காகத் தூக்கினான்.
"விடுங்க… நா உங்க மேல கோபமா இருக்கேன். " எனச் சிணுங்க.
"ஏன்னு சொன்னா விட்டுடுறேன். " என்றவனின் முகம் பார்த்தவள்,
"நேத்து ராத்திரி எப்ப வந்திங்க. எப்படி வந்திங்கன்னு. நியாபகம் இருக்கா உங்களுக்கு… "
" நேத்து பார்ட்டி நடந்தது. முடியவும் கார்ல வீட்டுக்கு வந்தேன். அவ்ளோ தா செல்லம். " எனக் கௌதம் பெண்ணவளின் வாசம் நுகர.
" ஹாங். அவ்ளோ தானா… குடிச்சிட்டு தள்ளிடிட்டு வந்திங்க. அதுமட்டுமில்லாம டிரிங் பண்ணீட்டு டிரைவ் பண்ணிருக்கிங்க. உங்களுக்கு எங்க மேல அக்கறையே இல்ல. அதான் இப்படில்லாம் பண்றிங்க. " எனக் கண்கலங்க, அவளைத் தரையில் இறக்கியவன், சோஃபாவில் அமர வைத்தான்.
மண்டியிட்டு அவள் முன் அமர்ந்தவன், "ஸாரி. நா ஆல்ரெடி உங்கிட்ட பார்ட்டி இருக்குன்னு சொன்னேன்ல. அதுல கொஞ்சம். " இழுக்க…
"என்ன காரணம் சொன்னாலும் தன்ன மறக்குற அளவுக்குக் குடிக்கிறது தப்பு தா. " என்றாள் வெடுக்கென.
" ஓகே… இனி அப்படி நடக்காது. காலைல நீ குடுத்தியே காஃபி. இனி அந்த அளவுக்கு மட்டும் குடிச்சிக்கிறேன். ஓகேவா??.. " எனக் கேட்க அவனை அடித்தாள் மனைவி.
" ஆதி வீட்டுல இல்லங்கிறத முதல்லயே சொல்லாம. ஏ டயம் வேஸ்ட் பண்ணா. ம் … " தன் சில்மிஷங்களை தொடங்க.
" விட்டுங்க. போய் ஆதியையும் அகிலையும் கூட்டீட்டு வாங்க. பாவம் ஹரிணி. எப்படி சமாளிக்கிறாளோ. ".
" அதுக்கு தா உன்னோட பொத்தான் இருக்கான்ல. "
" அத்தான் ஊர்ல இல்ல. ரெண்டு நாளைக்கி முன்னாடியே எங்கையோ கிளம்பி போய்ட்டாங்க. "
" எங்க போனான்?... "
" எனக்குத் தெரியாது. எனக்குக் காசு வேணும். நாங்க இன்னைக்கி பக்கத்துல இருக்குற கிட்ஸ் ஜோன்னுக்கு போகப்போறோம். நிறைய விளையாட்டுற திங்கஸ் எல்லாம் இருக்குனு ஜெனி சொன்னா. அதா வேலை எல்லாத்தையும் முடிச்சிட்டேன். " உற்சாகமாக வந்தது குரல்.
" நீ மட்டும் எப்படி இந்த ரெண்டு வாண்ட சமாளிப்ப. நா கூட இருக்கவா… " அக்கறையுடன் வந்தது அவனின் குரல்.
" வேண்டாம்பா. நானே சமாளிச்சுப்பேன். " என்றவளை அசையாது பார்த்தான், இதற்கு முன் என்றால் சேட்டை செய்யும் இருவரையும், ஒரே ஆளாய் இந்து பார்த்துக் கொள்வாள். ஆனால் இப்போது அவள் இரு உயிர். அதான் தனியே விடத் தயங்குகிறான்.
இது இந்துவிற்கு எட்டாவது மாதம். வளைகாப்பு எல்லாம் முடிந்து விட்டது. நாளை ஊருக்குச் சென்றால், குழந்தை பிறந்தபின் தான் மீண்டும் சென்னை வருவாள்.
" நா மட்டுமில்ல ஹரிணி ஆஃபீஸ் ல இருந்து ஜெனியும், பக்கத்து வீட்டு ஐஸ்வர்யாயும் கூட வர்றதா சொன்னாங்க. போதுமா… போய் ஆபீஸ்க்கு கிளம்புங்க." என்றாள், அவனின் கவலைக்கு முற்றுப்புள்ளியாக.
அவளின் நெற்றியில் முத்தமிட்டு எழுந்தவன் குளியல் அறைக்குச் சென்றான்.
க்ரோ கலர் ஃபார்மல் பேண்ட் சர்ட். அதற்கு மேல் ப்ளூ கலர் கோர்ட்டை எடுத்துப் போட்டுப் பத்தே நிமிடத்தில் தயாராகி விட்டான். ஆனால் அறையை விட்டு மட்டும் வெளி வரவில்லை.
இந்துவும் வெகுநேரமாக அவனைக் காணாது அறைக்கு வர, அறையைத் தலைகீழாக மாற்றி வைத்திருந்தான் கௌதம்.
" ஐய்யையோ… என்னங்க இது. இப்படி கலச்சி போட்டு வச்சிருக்கிங்க. எத காணும். என்ன தேடுறீங்க. " எனத் தன் கணவனுக்குத் துணையாக எதைத் தேடுகிறோம் என்பது கூடத் தெரியாது அவளும் தேட.
" வழி விடு மதி. என்னோட லேப்டாப்ப பாத்தியா. அதுல முக்கியமான ஒரு ப்ரஷென்டேஷன் இருக்கு. ஐ நீடு இட்… " என மீண்டும் தேட.
" லேப்டாப். எந்தக் கலர் லேப்டாப்… "
" என்னோட சில்வர் கலர் லேப்டாப். எங்கையாது பாத்தியா. "
" அது டீவிக்கி கீழ இருக்குற செல்ஃப்ல... " அவள் முடிக்கும் முன்னரே அங்கிருந்த தினசரி நாளிதழ்கள் எல்லாம் இறைந்து கிடந்தன.
" இங்க இல்லையே. வேற எங்க பாத்த. "
" எனக்குத் தெரியாது. நேத்து நீங்க வீட்டுக்கு வரும்போது அது உங்க கைல இல்ல. அவ்ளோ தா."
" அப்ப எங்க. "
"போய் உங்க கேபின்ல பாருங்க. எங்கையாது எதையாது வச்சிட்டு எங்கிட்ட வந்து கேக்க வேண்டியது. ச்ச… போய் ஹரிணியையும் பிள்ளைங்களையும் கூட்டீட்டு வாங்க. நேரமாது. " என அவனைக் கழுத்துப் பிடித்துத் தள்ளாத குறையாக வெளியேற்றினாள் இந்து.
அவனின் வீட்டில் இருந்த நான்கு வீடு தள்ளித் தான் ஹரிணி வீடு. லேப்டாப்பை பற்றி யோசனையுடன் வந்தவன் ஹரிணியின் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தும் முன்னரே, உள்ளிருந்து ஹரிணியின் அலறல் சத்தம் கேட்டது.
என்னவென்று உள்ளே போய்ப் பார்த்தவனும் அதிர்ந்து போனான்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..