அத்தியாயம்: 3
'ஓம்… சாந்தி…
ஓம்… சாந்தி…
உங்க வாழ்க்கைல எந்தப் பிரச்சன வந்தாலும், எத்தன கஷ்டம் வந்தாலும், சரி பண்ணவே முடியாதுங்கிற கவலைய விட்டுட்டு வெளில வரனுமா? அந்தப் பிரச்சனைகள்ல இருந்து உங்க உடம்பையும் மனசுயும் பாதுக்காப்பா வச்சிக்கனுமா? நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வேணும்னா? நீங்கக் கண்டிப்பா மெடிட்டேஷன் அதாவது தியானம் பண்ணனும்.
மனசு படபடன்னு அடிச்சிக்கும் எந்த ஒரு பதட்டமான சூழ்நிலைய பாத்து பயப்படாம உடனே தியானம் பண்ணுங்க. எந்த இடம்னு பாக்குக்காம, சுத்தி யாரு இருக்காங்கன்னு பாக்காம, உங்ககிட்ட பாய் இருந்தா அதுல, இல்லன்னா தரையில கூட உக்காந்து, பத்மாசனம் போட்டு உக்காந்துக்கங்க. பத்மாசனம் வராதவங்க சம்மணமிட்டு கூட உக்காந்துக்கலாம்.
உங்க இடது உள்ளங்கைய தூக்கி வலது உள்ளங்கைல வைங்க. இப்ப ரெண்டையும் சேந்தாப்ல உங்க மடில வச்சிக்கங்க. மெதுவா… ரொம்ப மெதுவா…
உங்க மூச்ச உள்ள இழுங்க. ஸ்…ஸ்…ஸ்…ஸ்…
ஒரு ரெண்டு செக்கேன்ட் உங்க மூச்ச பத்திரமா உள்ளையே வச்சிட்டு மெதுவா ஸ்ஸுலோவா வெளில விடுங்க.
புஸ்…புஸ்…புஸ்…
இப்ப இழுங்க ஸ்…ஸ்…
இப்ப விடுங்க புஸ்…புஸ்…புஸ்…
இழுங்க ஸ்…
விடுங்க புஸ்… '
அதைப் படிக்கிற உங்களுக்கு டென்ஷன் ஏறியதோ இல்லையோ, அதை முயற்சி செய்த ஒருத்திக்கு அதிகமாகவே ஏறியது. வேறு யாரும் அல்ல அது. இந்தக் கதையில் நாயகி ஹரிணி, வயது இருபத்தி ஐந்து.
" ஒரு ரிலாக்ஷேஷனுக்க டீவி போட்டா, இவா மெடிட்டேஷன்ங்கிற பேர்ல, பேசிப் பேசியே எங்கழுத்த அறுக்குறா. இவ்வளவு ஸ்லோவா செஞ்சா என்னோட பீபீ கண்டிப்பா ஏறிடும். ச்ச… காலைப் பொழுது இப்படி கலவரப்பொழுதா மாத்திடாய்ங்க. " எனப் புலம்பிபடியே வீட்டைப் பார்க்க அது குப்பை மேட்டுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றிருந்தது.
நடுக்கூடம், தினசரி நாளிதழ்கள் உட்பட கண்ணில் கண்ட அத்தனை காகிதமும் ராக்கெட் செய்கிறேன் என்று பெயரில் கசக்கி தூக்கி வீசப்பட்டிருந்தன.
படுக்கை அறை, போர்வை தலையணை மட்டுமல்லாது அலமாரியில் உள்ள அத்தனை துணிகளும் வாரி இறைக்கப்பட்டிருந்தன.
பால்கனி, செடி வளர்ப்பது நல்ல விசயம் தான். ஆனால் அதை மண் தொட்டியில் வளர்க்க வேண்டும். இங்கே டெயில்ஸ் கல்லில் மண் பரப்பப்பட்டு நீர் ஊற்றிப் பிசையப்பட்டிருந்தது, செடி மட்டும் நடவில்லை.
சமையலறை, அதை இன்னும் அவள் எட்டிப்பார்க்க வில்லை. சத்தம் மட்டும் கேட்கிறது.
இதோ! அது எந்தக் கோலத்தில் உள்ளது என மெல்ல எட்டிப்பார்க்கிறாள் ஹரிணி.
"அகில்!!!!.. என்ன பண்ணீட்டு இருக்க?.. " எனக் கத்த, அவளின் சத்தத்தில் கையில் வைத்திருந்த டப்பாவை கீழே போட்ட்ன் அவன்.
மூடி இல்லாமல் தரையில் விழுந்த அது, உள்ளிருந்த மாவை வாரி அவனை அபிஷேகம் செய்தது.
அவனின் தலையில் வெள்ளை வெளேர் என மாவு கொட்டிக் கிடக்க, கண்கள், மூக்கு, வாய் மட்டும் சிவப்பாய் தெரிந்தன.
" ம்மா… " எனப் புன்னகையுடன் அழைத்தான் அவளின் இரண்டு வயது மகன் அகிலன்.
"இதெல்லாம் உயரமா தான இருந்துச்சி. எப்பிடி எடுத்த நீ.?" என்ற அவளின் கேள்விக்கு அருகில் கிடந்த சிறுவர்களுக்கான நாற்காலி பதில் சொல்லியது.
" இது நீ ஹால்ல உக்காருறதுக்குகாக வாங்கி குடுத்தது. கிச்சனுக்குள்ள யூஸ் பண்ண கூடாது. " என அதட்ட,
'இப்படியும் கிச்சனுக்கு தூக்கிட்டு வந்து யூஸ் பண்ணலாம் ம்மா… ' என்பது போல் சிரித்தான் மகன்.
" ரொம்ப சேட்ட பண்ற அகில் நீ. யாருதா உனக்கு இத சொல்லித் தர்றாங்கன்னு தெரியல்ல… ச்ச… " எனத் திட்டிக் கொண்டே அவனின் தலையில் இருந்த மாவை தட்டிவிட்டாள் ஹரிணி.
" ஹச்… இதெல்லாம் என்ன மாவுன்னே தெரியலையே. மைதாவா!.. கோதுமையா!.. வெள்ளையா இருக்கு அரிசி மாவாத்தா இருக்கும். ஹச்… சும்மா இருக்குற நேரமாவது வந்து இந்தச் சமக்கட்ட சுத்தி பாத்திருக்கனும்.தப்பு பண்ணிட்டேன். உனக்காது இது என்ன மாவுன்னு தெரியுமா. ஹச்… " என மகனிடம் கேட்டாள்.
தும்மல் வந்தாலும் பரவாயில்லை என்று மகனின் தலையைச் சுத்தம் செய்து கொண்டே மீதி மாவை எடுத்து டப்பாவில் போட்டாள்.
" இந்தப் பாவாக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல. மாவு டப்பா மூடில என்ன மாவு இதுன்னு பேர் எழுதியே வைக்காம இருக்கான். இப்ப கஷ்டப்படுறது யாரு?.. நாந்தான!.. இத எந்த டப்பாள போட?.. மஞ்ச கலர் டப்பாவா! இல்ல ப்ளூ கலரா!.. " என யோசித்தாள் அவள். மகன் தலையில் சிந்தியது போக, மேடையில் சிதறிக்கிடந்த மாவை அள்ளி, தனக்கு பிடித்த நீல நிற டப்பாவில் போட்டு வைத்தாள்.
" எல்லா மாவும் ஒன்னு தா. பாவா வந்து பிரிச்சுப்பான். தரைல கிடக்குறத வேக்கம் க்ளீனரால சுத்தம் பண்ணா போதும். " எனத் திருப்ப, அங்கு அவளின் நண்பனின் மகள் ஆதிரை செய்து வைத்திருந்த வேலையால். " ஆ…தீ..." என அலறினாள்.
'முதலில் மாவை மழை போல் குமித்து வைத்து. அதில் வட்ட வடிவில் குழி தோண்ட வேண்டும். பின் அதில் ஒரு முட்டைய ஓடு இல்லாமல் உடைத்து ஊற்றி வேண்டும். பின் நன்கு பிசைய வேண்டும். ' இது யூடியூப்பில் வரும் சமயல் செய்முறை விளக்கம் இல்லை. கௌதமின் மகள் ஆதிரை செய்த செயலுக்கான விளக்கம்.
ஆம். முட்டையை உடைத்து, கீழே சிந்திய மாவில் போட்டு நன்கு பிசைந்துகொண்டிருந்தாள் ஆதிரை. அகில் அதற்கு நீர் எடுத்து வந்து குடுத்தான்.
" ஸ்டாப் பிட் திஸ். அகி… ஆதி… உடனே பாத்ரூம் குள்ள போறிங்க. இல்லன்னா… உங்க ரெண்டு பேரையும் நா என்ன பண்றேன்னு பாருங்க. " எனக் கோபமாகக் கத்தத, அவர்கள் சிரித்துக் கொண்டே ஓடினார். இருவரையும் துரத்திப் பிடித்துக் குளியலறைக்குள் இழுத்து சென்றாள்.
இருவரையும் குளிக்க வைத்து வெளியே அனுப்பும்போது தான் பார்த்தாள், அந்த வாளியை. நீர் நிரப்பப்பட்டு சலவைப் பொடி போட்டு நுரை பொங்க இருந்த அதில் எதுவோ ஒன்று ஊறிப்போய் கிடந்தது.
" நா எதையும் வாஷ்பண்ண போடலையே. என்னாதிது… " என நுரை பொங்கிக் கிடந்த அந்த வாளியில் கைவிட்டவள் தான், ஆ… என அலறினாள். இதைத்தான் கௌதம் கேட்டுவிட்டு பாய்ந்து உள்ளே ஓடி வந்தான்.
இந்த அப்பார்ட்மெண்ட் வீட்டை இருவரும் சேர்ந்தே வாங்கினர். எதற்கும் இருக்கட்டும் என ஒருவர் வீட்டு சாவி மற்றவரின் கையில் எப்பொழுதுமே இருக்கும். அவசர தேவைக்கு. எனவே தன்னிடம் உள்ள சாவியை கொண்டு உள்ள வந்து பார்த்தவன், விழுந்து விழுந்து சிரிக்கலானான்.
சற்று சோர்ந்த முகத்துடன், உதடுகளைப் பிதுக்கி நின்றவளின் கையில் நீர் சொட்ட சொட்ட இருந்தது அவளின் ஆப்பிள் ஐ போன்.
" ஹாஹ்ஹா… ஃபோன் அழுக்காகிடுச்சின்னா, அத கடைல குடுத்து சுத்தம் பண்ண சொல்லனும் டார்லிங். காசு செலவாகிடும்னு நீயே கஞ்சி போட்டு, காய வைக்க நினைச்சா இப்படி தா ஆகும். என்ன டார்லிங் இது. ஒன்றரை லட்ச ரூபா. ஸ்வாஹா… " எனக் கேலி செய்து வெறுப்பேற்றினான் அவன்.
பதிலுக்கு அவள் வருந்தவில்லை. மாறாக விழுந்து விழுந்து சிரித்தாள்.
" டார்லிங்… எனக்குப் புரியுது. ஒன்னர லட்சங்கிறது சாதாரன விசயம் இல்ல தா. ஆனா சம்பாதிச்சிடலாம். இதையே ரிப்பேருக்கு குடுத்து சரி பண்ணிடலாம். ஆனா உன்னோட மனசு உடைஞ்சி போச்சுன்னா சரி பண்ணி முடியாது டார்லிங்.கீழ்ப்பாக்கத்துல கூட்டம் ஜாஸ்த்தியா இருக்காம். வேற இடம் தேடனும் உனக்கு வைத்தியம் பாக்க. டார்லிங் சிரிக்காத… அட எதுக்கு சிரிக்கிறன்னு சொல்லிட்டாது சிரியேன். " விடாமல் சிரித்த தன் தோழியைப் பார்த்துக் கேட்க,
" அத நீயே வாளிக்குள்ள கைய விட்டுப் பாத்து தெரிஞ்சுக்க. " என்றாள்.
" பாம்பு எதுவும் உள்ள இருக்கோ… அப்படி அது இருந்தா இவா ஏ இப்படி சிரிக்க போற.பயந்து ஓடிருக்க மாட்டா. " என யோசித்தபடியே நீரில் கைவிட எதோ ஒன்று மாட்டியது.
" டார்லிங். வீட்டுல பழய பொருள் இருந்தா, எல்லாத்தையும் எடுத்துக் காய்லாங்கடைல போட்டுப் பேர்ச்சம்பழம் வாங்கி திங்கிற பழக்கமே இல்லையா உனக்கு. பாரு இங்க கூட ஒன்னு இருக்கு. கொஞ்சம் நீளமான டப்பா போல. " என உள்ளே இருந்ததை எடுத்துப் பார்க்க. அவனும் அலறினான்.
அது அவனின் லேப்டாப் இப்போது முன்னால் லேப்டாப்பாக மாறி இருந்தது. கூடவே அவனின் பார்ஸ், சில கிரெடிட் கார்டுகளும் ஊற வைக்கப்பட்டிருந்தது. கோபம் வர, கௌதம் ஹரிணியை திட்ட ஆரம்பித்தான்.
"என்னதிது ஹரிணி? பிள்ளைங்க என்ன பண்ணுதுன்னு பாக்க மாட்டியா? என்னோடது எப்படி உங்கிட்ட வந்தது."
" நேத்து, ஹோட்டல்ல பார்ட்டி நடக்கப்போது, எனக்கு இன்விடேஷன் வந்திருக்கு, யாரையோ பாக்க போறேன்னு சொல்லி உன்னோட திங்க்ஸ் எல்லாத்தையும் எங்கிட்ட குடுத்துவிட்டியே. மறந்துட்டியா. "
" குடுத்து விட்டா பத்திரமா பாத்துக்க தெரியாதா?.. இதெல்லாம் எடுத்து விளையாடுற வரைக்கும் நீ என்ன பண்ணிட்டு இருந்த. "
" தூங்கிட்டு இருந்தேன். " என்றவளை முறைத்தான் அவன்.
" உண்ம தா கௌதம். தூங்கிட்டு தா இருந்தேன். ரெண்டு பேரையும் நைட் தூங்க வைக்க ரொம்ப நேரம் ஆச்சு. அகிலுக்கு அனிமல் கத வேணுமாம். ஆதிக்கு சின்டர்லா கத வேணுமாம். ரெண்டு பேருக்கும் பிடிச்ச மாறி ஒரு கதைய தேடி கண்டு பிடிச்சி, சொல்லித் தூங்க வைக்கிறதுக்கு மணி ரெண்டாச்சு. அதா விடியக்காலைல என்னால எந்திரிக்க முடியல. ஆனா அதுக ரெண்டும் எழுந்து வீட்ட உருட்ட ஆரம்பிச்சிடாணுங்க. " என விளக்கம் கொடுக்க.
" கத விடாத ஹரிணி. இன்னைக்கி நா இதுல இருக்குற ப்ரோகிராம என்னோட கஸ்டமர்க்கு ரன் பண்ணி காட்டனும். ச்ச. "
" நீ தா ஆஃபீஸ் சிஸ்டத்துல ஒரு பேக் அப் எடுத்து வச்சிருப்போல்ல. அப்பறம் எதுக்கு டென்ஷன் ஆகுற. " கூலாக எதுவும் நடக்காதது போல் சொல்ல, கௌதம் காண்டானான்.
'ஏம்மா மூணு லட்சத்த எடுத்துத் தண்ணில முக்கிருந்தா கூட, காய வச்சி யூஸ் பண்ணிக்கலாம். இப்படி பொருளா போட்டு வேஸ்ட் பண்ணுடுச்சுகளேன்னு ஒருத்தெ கத்திட்டு இருக்கேன். இவா என்னடான்னா அங்கையும் இங்கையும் பாத்துட்டு இருக்கா.' என மைண்ட் வாய்ஸ்ஸால் ஹரிணியை திட்டிக்கொண்டு இருந்தவனிடம்.
" கௌதம், பிள்ளைங்க எங்கன்னு பாத்த. காணும் ரெண்டு பேரையும். டோர லாக் பண்ணிட்டு தான வந்த. இல்லன்னா வெளில போய்டும். " என அங்கும் இங்கும் தேடிய படி கேட்க, கௌதம் தலையில் அடித்துக் கொண்டான்.
அவன் தலையில் தான்.
" அகில்… ஆதி… எங்கருக்கிங்க. " எனக் கத்த,
" கண்டுபிடிங்க." என அகிலனின் குரல் வந்தது படுக்கை அறையிலிருந்து.
இருவரும் உள்ளே சென்று பார்க்க அங்கு அகில் இல்லை. எங்கே இருக்கிறான் என்று கௌதம் கண்டு பிடித்து விட்டான். கட்டில் இருந்த துணி குவியலுக்கு இடையே மறைந்து இருந்தவனை கௌதம் பிடிக்க,
" ஹஇ த்தா… " என அவனை வாரியணைத்து முத்தம் தந்தான் அகிலன். இருவரும் கட்டிப்பிடித்து கொஞ்சிக் கொண்டு இருக்க, ஆதிரையை இன்னும் காணவில்லை.
ஹரிணி கண்டுவிட்டாள். " ஆதி நீயா வந்திடு. நா உன்ன பாத்துட்டேன். " என்க, ஆதி வெளியே தலை காட்டினாள். அவள் ஒளிந்திருந்த இடம் கண்டு கௌதமிற்கு கோபம் வந்தது.
வேகமாக அவளைத் தூக்கி உளுக்கி. " இந்த மாறி இடத்துலலாம் ஒளிய கூடாது. உனக்கு நா சொல்லிருக்கேனா இல்லையா. ம். " எனக் கத்த குழந்தையின் முகம் சுருங்கிப் போனது.
" இது மாறி. இருட்டான. இண்டு இடுக்குள ஒளிஞ்சி விளையாடாறத பாத்தேன். இனி அப்பாட்ட அடி தா வாங்குவ. " எனக் கோபமாகக் கத்தியவனை பார்த்து ஆதிரை அழத் தொடங்கினாள். அவளைப் பார்த்து அகிலனும் அழ.
" விடு கௌதம். நம்ம வீட்டுக்குள்ள தான. பாத்துக்கலாம். " எனச் சமாதானம் செய்யும் பொருட்டு கூறினாளே தவிர ஆதி ஒளிந்திருந்த இடம் அவளுக்குத் திருப்திகரமானதாக இல்லை.
" நீ பாத்த லட்சணத்த தா நா பார்த்தேனே. " என எரிந்து விழுந்தான் அவன்.
" சரி… இனி கவனமா பாத்துக்கிறேன். " என்று கூறி ஆதியை தூக்கி வைத்துச் சமாதானம் செய்தாள்.
" இந்த மாறி இடத்துல்லாம் ஒளியக் கூடாது செல்லம். மூடுற மாறி, கரெண்ட் வயர் இருக்குற இடம், உயரமான இடம் இதெல்லாம் ஆபத்து டா… ம்… இனி செய்யாத அத. " என அமைதியாகப் பேசியவளை பார்த்துக் கடுப்பு தான் வந்தது கௌதமிற்கு.
ஏனெனில் வாசிங் மிஷினின் டிரம்முக்குள் ஒழிந்தது தவறல்ல வா. அதட்டி கூறாமல் இவள் கொஞ்சி பேசியது பிடிக்கவில்லை அவனுக்கு.
" நீ இப்படியே செல்லம் குடுத்து குடுத்து அவள கெடுத்துட்டு இருக்க. கொஞ்சமாது அதட்டி பேசு அவகிட்ட. அப்பதா பயப்படுவா. "
" பிள்ளைங்களுக்கு பெத்தவங்க மேல பயம் வரக் கூடாது கௌதம். மரியாத தா வரனும். மிரட்டுனா எப்படி வரும் சொல்லு. கோபமா பேசுனா பயந்து போய் நம்ம பேச்சையே காதுல வாங்காதுங்க. அதுமட்டுமில்லாம திட்டுறாங்கன்னு நம்ம மேலேயே கோபம் வரும் அதுகளுக்கு. சோ எடுத்துச் சொல்லிப் புரிய வச்சா எங்க ஆதி செல்லம் கேட்டுக்கும். ம்… ஒகே… வா… " என ஆதியின் குண்டு கன்னத்தில் முத்தமிட்டு கேட்க.
" ம்… கேப்பேன். " என்பது போல் தலையசைத்தாள் சின்ன வாண்டு.
" என்னமும் போங்க. உங்களால எனக்கு டயம் தா வேஸ்ட்… " எனப் புலம்பியபடியே வெளியே செல்லப்பார்க்க. அவனின் சட்டை காலரை பிடித்து இழுத்து நிறுத்தினாள் ஹரிணி.
" நா இப்படியே கோபமாவே போய்டுறேனே… "
" கூடாது… " என்றாள் கோபமாக.
" லேட்டாச்சு… "
" நீ போய்ட்டா வீட்ட யாரு ஒதுக்கி வப்பா. அகில் உ சித்தப்பாக்கு இன்ஸ்ட்டுமெண்ட்ட எடுத்துக் குடு. " என்க, அன்னை சொன்னதை செய்தான் மகன். அதாங்க விளக்கமாறை கொண்டு வந்து தன் சித்தப்பாவின் கையில் கொடுத்தான்.
" எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கனும். கோபப்படக்கூடாதுன்னு க்ளாஸ் எடுத்த, அதெல்லாம் சின்னப் பிள்ளைங்களுக்கு மட்டும் தான. " எனப் பரிதாபமாகக் கேட்டான்.
" நா கோபமே படலையே. ஈ… வாங்க ஸார் வந்து வீட்ட கூட்டுங்க ஸார். " என அன்போடு பேசி அனைத்து வேலையையும் வாங்கி விட்டுத் தான் விட்டாள்.
"பிள்ளைய கூப்பிட வந்தது குத்தமா போச்சு." என்று புலம்பிய படியே வேலை செய்தான்.
ச்ச… பாவம்ல.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..