நின்னையல்லால் - 12
"என்ன அவொய்ட் பண்றிங்களா ஹாசினி" என வாமன் கேட்டதும், உள்ளே திக் என்றாலும் முகத்தில் எதையும் வெளிப்படுத்தாத சாத்வி, "அப்டி இல்லயே.." என்றாள்.
புருவம் தூக்கி லேசாக தலை சாய்த்து புன்னகையுடன் அவளை நோக்கியவன்,
"பொய் சொல்லாதிங்க ஹாசினி.. அவொய்ட் பற்றிங்க தானே??!"
ஓம் என உண்மையை ஒத்துக் கொள்ளேன் என செல்லமாக கெஞ்சுவது போல இருந்தது அவன் முகபாவனை.
அதில் மயங்கி ஒத்துக் கொள்ளாமல் போனால் தான் ஆச்சரியம்.
ஆனால் எதிரில் நிற்கும்சாத்வி, "நான் ஏன் அப்டி செய்யணும்?" என வெடுக்கெனக் கேட்டாள்.
"மோர்னிங் நீங்க ட்ரெஸ் சேஞ்ச் பண்ணகுள்ள நான் தெரியாம உள்ளுக்கு வந்துட்டன். அதுக்கு சொரி கேட்டன் தானே? ஆனா நீங்க அத சொரி பண்ணல.. என்ன அவாய்ட் பண்றிங்க.. மோர்னிங்ல இருந்து உங்கள நான் காணவே இல்ல.."
சாத்வி நெருப்பு பட்ட விரல்கள் வலிக்க நெரிந்து "நீங்க ஊஞ்சில் போட்டு விளையாடினிங்களே வெளியில. நான் உள் வேல பாத்துட்டு இருந்தன்.."
"அப்டி என்றிங்களா? அப்ப நீங்க என்ன அவொய்ட் பண்ணல்ல.."
"இல்ல" உறுதியாக சொன்னாள்.
"தட்ஸ் ஓகே!! நான் தான் பிழையா நினச்சுட்டன். ரைட், நீங்க என்ன அவொய்ட் பண்ணல.." என்றவன் தனது அலைபேசி எடுத்து நேரம் பார்த்து, "இப்ப டைம் ரெண்டு மணி ஹாசினி.." என்றான்.
ஓம்! அதுக்கு என்ன?
"லஞ்ச் எடுத்துட்டு ஒரு மூண்டு மணி போல ரெடி ஆகுங்க. நாங்க வெளில பொயிட்டு வருவம்.."
"வெளிலயா..."
"ஓம்!! சும்மா ஒரு ரைட் போவம். நீங்க என்ன அவொய்ட் பண்ணல்ல தானே.. சேர்ந்து ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வருவம்.."
"இந்த வெயில்ல வெளில போவாங்களா யாரும்?"
"வெயில் தான் பிரச்சின.. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போறதுல இஷு இல்ல. அப்டி தானே.."
சாத்வி பேசாமல் இருக்க,
"ஓகே, வெயில் கொஞ்சம் அடங்கினதும் நாலு மணி போல போவம்! டண்!!" என இரண்டு பெரு விரல்களையும் தூக்கி புன்னகைத்தான்.
உங்கள நான் அவொய்ட் பண்ணினன் தான்... இனியும் பண்ணுவன். வெளில எல்லாம் வர ஏலாது!! என்பதையும் வெடுக்கென சொல்லி விடலாமா?
"ஹாசினி!"
"சரி! போவம்!"
சம்மதித்து விட்டு சாப்பிட வந்தவளுக்கு தட்டில் உணவை போட்டதும் ஒரே யோசனை.
சேர்ந்து எங்கையும் போறதுல என்ன பிரச்சின சாத்வி உனக்கு?
காலம் முழுக்க இணைந்து நடக்க தயார் என்று தானே கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாய் நீ?
அது உடனே எப்படி? ஒரு வருசத்துக்கு முன் வரை இன்னொருத்தி கை பிடித்து லவ்வர் போயாக திரிந்தவர் எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் என்னுடன் சுற்ற தயாராகிறார்!
அவர் வேற என்ன செய்யணும் எண்டு எதிர்பார்க்கிறாய் நீ?
அது....
சரி!! அதீத சிந்தனை வேண்டாம். பின்னேரம் எப்டியும் வீட்டுக்கு விருந்தினர் வரலாம். நீ வெளியில் செல்வது சரிவராது சாத்வி என சித்தியே தடுத்து விடலாம்.
அப்படியும் இல்லையா, அக்ஷி நம்சி வால் போல வாமனுடன் தொற்றிக் கொள்வர். வண்டியில் இடம் போதாது என நீ கழன்று கொள்ளலாம்..
மனம் சமாதானம் ஆகியதும் சாத்வி தனது சமையலை ரசித்து திருப்தியாகவே சாப்பிட்டாள்.
ஆனால் அவள் எதிர்பார்த்த இரண்டுமே நான்கு மணிக்கு நடக்கவில்லை!
"ஹாசினி நான் ரெடி" என ஜம்மென நீல டெனிம் ஜீன், வெள்ளை டீ ஷர்டில் பளிச் என வெளிக்கிட்டு பைக் சாவியை விரலில் மாட்டி சுழற்றிக் கொண்டு வராண்டாவில் வாமன் காத்துநின்றான்.
"என்ன சாத்வி பின் குத்தலயா?" என அவளுடைய சுடிதார் துப்பட்டாவுக்கு குத்தி விட்ட புனிதா, "வகுட்டுல குங்குமம் வைக்கல்லயா? நெத்தியில வைக்கிற பொட்ட விட வகுட்டுல வைக்கிற குங்குமம் தனி வடிவு (அழகு)" என குங்கும சிமிழை எடுத்து அவள் நெற்றி வகுட்டிலும் வைத்து விட்டாள்.
"சித்தி நான் பொயிட்டு வரவா?"
"நல்ல கேள்வி.. வெளிக்கிட்ட பிறகு கேக்குறாய்.. போய் வந்ததும் கேட்டிருக்கலாமே.." புனிதா அவள் வினாவின் அர்த்தம் புரியாமல் பகிடி பண்ண,
"அக்ஷியும் நம்சியும் எங்க?"
"க்ளாஸுக்கு அனுப்பிட்டன்.."
சாத்வி இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை!!
"நாலு நாளா ஸ்கூலும் இல்ல வகுப்பும் இல்ல. ஆட்டம் போடுறாளுகள் ரெண்டு பேரும். இண்டைக்கு க்ளாஸ் போய் வந்தா தான் நாளைக்கு அத்தான்ர வீட்ட கூட்டி போவன் எண்டன். வெளிக்கிட்டாளுகள்.."
"நாளைக்கா சித்தி அங்க போற??"
"ஓம் சாத்வி.. நாலாம் நாள் தானே கால் மாறி போற.. அதுக்குரிய வேலைகள் பாக்கணும்.. நேரம் இல்ல எனக்கு. நீ வெளிக்கிடு தம்பி பாத்துட்டு நிக்கிறார்"
"ம்ம்"
நாளைக்கு மாப்பிள்ளை வீட்டிற்கு பெண்ணை அழைத்து செல்லும் சடங்குகளுக்கு பலகாரங்கள் செய்வதில் அக்கம் பக்கத்தினருடன் முனைந்திருந்த செல்லம்மாவிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.
"சரியா ஹாசினி?" என கேட்டு விட்டு பைக்கை முறுக்கினான் வாமன்.
சாத்வியின் ஊர் கிழக்கிலங்கையில் அமைந்த ஒரு ஆற்றோர கிராமம். மாரி கால நீரோட்டம் நிறைந்ததும் இந்தப் பக்கத்து ஆறுகள் கலக்கும் இந்து சமுத்திர கரை அந்தப் பக்கமாக உள்ளது.
வளர்ந்து வரும் அந்த கிராமத்தின் இரண்டு ஊர்களை ஊடறுத்து ஓடும் பிரதான சாலையில் ஏறியதும் கடற் காற்று முடி கலைக்க மிதமான வேகத்தில் சென்றான் வாமன்.
சாத்விக்கு வியப்பாக இருந்தது அவன் வீட்டில் இருந்து அவன் வழி கேளாமலே வண்டி ஓட்டிய லாவகம் பார்த்து.
திருப்பங்களும் வளைவுகளும் அவனுக்கு புதிது இல்லை என தோன்ற, நேற்று மச்சாள்களை ஏற்றிக் கொண்டு நன்றாக ஊர் சுற்றி இருக்கிறான் என்று விளங்கியது.
பாதை நீண்டு கொண்டே செல்ல, எங்க தான் போறார்? என சாத்வி யோசிக்கும் போது வீதியோர கிழங்கு கடையில் வண்டியை நிறுத்தினான்.
சாத்விக்கு வெளிக் கடைகளில் தெருவில் சாப்பிட்டு பழக்கம் இல்லை. வீடு, ஹொஸ்டல் தவிர்த்து வேறு எங்கும் அவள் கை நனைத்ததும் இல்லை.
பனையோலை வேய்ந்த குடிலும், அமர்ந்து உண்ண வாங்கும் அமைத்து, விறகடுப்பில் வடை, கிழங்கு பொரித்து இறக்கிக் கொண்டிருந்தார் வயதான மனிசி ஒருவர்.
கைலி பனியனில் வயதான அவர் மனிசியின் கணவர் போல. வாடிக்கையாளர்களை கவனித்துக் கொண்டிருந்தார்.
சுகாதார பரிசோதகர் போல் சாத்வி கடையையும், அடுப்படியையும் அதில் கொதிக்கும் சட்டி, கிளறும் அகப்பை, பொரித்தது இறக்கும் மனிசி, அவர் கணவர் என கண்களாலேயே சுத்த பத்தம் பார்த்து கூறு போட,
"வாங்க ஹாசினி.." என வழக்கமான வாடிக்கையாளன் போல் அவளை உள்ளே அழைத்து சென்றான் வாமன்.
"வாங்க தம்பி!!" உற்சாக வரவேற்பு அவனுக்கு கிடைத்தது கிழவரிடம்.
"எப்டி ஐயா, வியாபாரம் இண்டைக்கு?"
"வளம போல தான் தம்பி. இருங்க. வாங்க அம்மா, இருங்க" சாத்வியை உபசரித்தவர்கள், "என்ன தம்பி அந்த சேட்ட காரிகள காண இல்ல.." எனக் கேட்டனர்.
சிரித்தவன், "அவங்க இண்டைக்கு க்ளாஸ் பொயிட்டாங்க.."
"ஓ சரி! சரி! வந்திருந்தா இண்டைக்கு என்ன உடையிறதோ!!"
இவங்களை உங்களுக்கு முதலே தெரியுமா என கேட்க தோன்றியது சாத்விக்கு. அப்படி இருந்தது அவர்கள் கவனிப்பும் இவன் கதையும்.
"புதுசு வாங்க வச்சிட்டிங்க என?" தண்ணீர் பருக வைத்திருந்த பெரிய மண் பானையை பார்த்து கேட்க,
"ஓம் தம்பி!" என்றவர் "நேற்று வந்த சின்னவங்க விளையாட்டுல தட்டி விட்டுட்டாங்க பானைய.." என்றார் சாத்வியிடம்.
"யாரு!" சாத்வி வாமனை பார்க்க,
"அக்ஷி"
"உடைய இல்லையா?"
"உடஞ்சிது அம்மா.. தம்பி காசு தந்து வாங்கின புதுசு தான் இது"
சொல்லவே இல்லை என்பது போல பார்த்தாள் வாமனை. தெரிந்திருந்தால் புனிதா ஒரு அடியாவது நிச்சயம் அக்ஷி முதுகில் வைத்திருப்பாள்.
இளையவளை விட மூத்தவள் துடிப்பு அதிகம். புனிதாவும் பிள்ளைகளிடம் கண்டிப்பு.
"வடயா தம்பி சாப்பிடுறிங்க?"
"மஞ்ஞோகா சாப்பிடுவிங்களா ஹாசினி?"
"என்ன?"
"சொரி சிங்களத்துல சொல்லி பழகிட்டு. மரவள்ளிக் கிழங்கு சாப்பிடுவிங்க தானே"
"நீங்க சாப்பிடுவிங்க எண்டா வேண்டுங்க.."
"நான் எப்டி தனிய சாப்பிடுற.. ஏஞ்சல்ஸ் எனக்கு டஃப் கொம்படிஷன் தந்தாங்க நேற்று.. இண்டைக்கு நீங்க தரணும்.."
சுட சுட வடையும் அவித்த பூ போன்ற மரவள்ளி கிழங்கும் தட்டில் வைத்தார் கிழவர்.
சாத்வி கிழங்கை நுனி விரலால் பிட்டு எடுக்க, வாமன் பெரிய துண்டுகளாக தொண்டையில் இறக்கினான்.
எண்ணையில பொரிச்ச ஐட்டங்கள டெய்லி இப்டி சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகுற?? என்ற சிந்தனையை தவிர்க்க முடியவில்லை சாத்வியால்.
"இதுக்கு முதல் இங்க வந்திருக்கிங்களா ஹாசினி?"
இல்லை என தலை ஆட்டினாள்.
"ஃபர்ஸ்ட் டைமா? இத நாங்க வீட்ல செய்து சாப்பிட்டாலும் ரோட்டு கட டேஸ்ட் வராது. இங்க தனி தான்"
"இந்த புளித் தண்ணி கட்டர் தூள் ரெண்டும் சேர்ந்து கிழங்கோட ஊற வச்சி தூக்கி வாயில போட்டா, டேஸ்ட் வேற லெவல்.."
அவள் மௌனத்துக்கும் சேர்த்து அளவளாவியவன் கிழங்கை அனுபவித்து ருசித்து "அய்யா இன்னொரு ப்ளேட் கிழங்கு" என அடுத்த ஓடர் கொடுத்தான்.
"எனக்கு வேணாம்" சாத்வி அவசரமாக சொல்ல,
"இது மட்டும் நீங்களா சாப்பிட்டிங்க? தனிய கதைக்கிற மாதிரி தனிய தானே சாப்பிடுறன். நீங்க எனக்கு காவல் மட்டும் காக்குறிங்க!!" என்று அலுப்பதை கூட அழகாக செய்தான்.
சாப்பிட்டு முடித்ததும் "பீச் போவமா??"
அவள் சம்மதம் பெற்று கடைக்கு பின்னால் விரிந்து கிடந்த கடற்கரைக்கு நடந்தான்.
ஒரு கையில் ஹெல்மெட் இருக்க மறு கையால் காற்று கலைக்கும் தலைமுடியை கோதியபடி வாமன் நடக்க, சாத்வி மணலில் புதையும் கால் செருப்பை பார்த்து வைத்து தொடர்ந்தாள்.
அப்போது அது நடந்தது.
எங்கிருந்தோ வந்து சாத்வியின் கையை பிடித்து தன் புறம் திருப்பி, "உன்ன தாண்டி தேடிட்டு இருந்தன். அடக் கோழி மாதிரி வீட்டுக்குள்ள படுத்து கிடப்பாய். இப்ப கல்யாணம் கட்டினதும் புது புருசனோட வெளில வந்தியோ? என்னிட்ட இல்லாத என்னடி அவனுட்ட கிடக்கு?? உன்********"
அகராதியில் இடம்பெறாத பிறழ்வு வார்த்தைகளை அவன் உதிர்த்த நொடி, உதடு வெடித்து நாடி உடைந்து இரத்தம் கொட்ட வாய் பொத்தி தாய் மொழி மறந்து நின்றான்.
அவன் தான் சொர்ணத்தின் மகன், சாத்விஹாசினியின் மச்சான், 'சியான்' என்கிற சியாமளன்.
சில வினாடிகளுள் நடந்து முடிந்து விட்ட இந்த சம்பவத்தில், அவன் வாயை உடைத்த கையை உதறி வலியை சகித்தவளை ஸ்தம்பித்து பார்த்து நின்றான் வாமன்.
வளரும்...
-ஆதுரியாழ் ❤️

wow what a shot 😍😍
பதிலளிநீக்கு🙏🥰🥰🥰🥰🥰
நீக்கு