நின்னையல்லால் - 13
ஐந்தே கால் அடி உயரம், மெலிவான தேகம், பின் கழுத்துக்கு சற்றே கீழ் தட்டும் குட்டை முடி, கூர்மையான விழிகள், அதே கூர்மையுடன் குவிந்த குட்டி நாசி. இலங்கை தமிழருக்குரிய பொதுவான மா நிறத்திற்கு சற்று கூடிய நிறம். வதனத்தில் எப்போதும் இழையோடும் நிதானம். இத்தனை அம்சங்கள் நிறைந்த சாந்தமான பெண் தான் சாத்விஹாசினி!!
அவள் புகைப்படம் பார்த்த நொடி வாமதேவனுக்கும் தோன்றியது இது தான், மென்மையான ஆர்பாட்டம் இல்லாத ஒரு பெண் என்று.
கோயிலில் அவளை பெண் பார்க்க வரும் போது எவ்வித எதிர்ப்பார்ப்பும் இன்றியே வந்திருந்தான்.
சாத்வி மனதில் எத்துணை பதட்டம் இருந்தது என்பது அவனுக்கு தெரியாது..
விழி அலைப்புறுதல் இன்றி, நிதானமாக அடி வைத்து அவள் கோயில் வலம் வரும் போது, முதல் பார்வையிலேயே அவள் மீது பிடித்தம் உருவாகி இருந்தது அவனுக்கு.
சில நிமிடங்கள் அவளுடன் பேசிப் பார்த்ததில் அமைதியான அழுத்தக் காரியாக கூட தோன்றினாள்.
திருமணமான இந்த மூன்று நாட்களில் நறுக் நறுக்கென அவன் கண் பார்த்து அவள் பேசுவதும், கடைப்பிடிக்கும் ஒதுக்கமும் ஒரு வித சுவாரஸ்யத்துடனே அவளை கவனிக்க வைத்தது அவனை.
கண்டதும் ஒட்டிக் கொள்ளும் பெண்களை விட ஒதுங்கிப் போய், முடிந்தால் என்னை கவர்ந்து பார் என சவால் விடும் பொறுப்பான மங்கை காந்தம் போன்றவள்.
அந்த ஈர்ப்பு வாமனுக்கு சாத்வி மீது வந்து பல மணி நேரங்கள் கடந்து விட்டது.
ஆனால், சாத்விஹாசினியில் இப்படி ஒரு பரிமாணத்தை வாமதேவன் கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை.
தனக்கு தொந்தரவு விளைவித்தவனை எவரையும் எதிர்பார்க்காமல் அவளே எதிர்கொண்ட துணிச்சல் அவனை மலைக்க வைத்தது.
அடி வாங்கிய துரையை அவன் பார்க்கவே இல்லை. சாத்வியில் பதித்த விழியை அவன் அகற்றவே இல்லை.
திடும் திடும் என நான்கு தடி மாடுகள் கடற்கரை சவுக்கு பற்றைக்குள் இருந்து ஓடி வந்தனர்.
சகாவிற்கு நேர்ந்துவிட்ட துன்பத்தை கண்டு கோபம் உற்றனர்.
"என்னடா மச்சான்???"
"டேய்! இரத்தம் ஊத்துதுடா.."
"அடிச்சிட்டாளாடா?"
"இவளா அடிச்ச..."
சியானின் நண்பர்கள் சாத்வியில் பாய்ந்தனர். பாய்ந்த வேகத்தில் சிதறி விழுந்தனர்.
அவளுக்கு எதிரில் வந்து நின்றிருந்த வாமன், கையில் இருந்த ஹெல்மெட்டால் அவர்கள் மூஞ்சி முகரைகளை பெயர்த்து இருந்தான்.
விழுந்தவர்கள் ஆளுக்கு ஒரு அபஸ்வரத்தில் சத்தம் எழுப்ப, நன்றாக சிக்கிவிட்டோம் என உணர்ந்த சியான் பின் வாங்கினான், தன்னை நோக்கி எட்டு வைத்த சாத்வியின் புருஷனை கண்டு.
அதற்குள் இங்கே நடந்த கலவரம் சாயங்கால கடற்கரை காற்று வாங்க வந்த சனங்களை ஒன்று கூட்டிவிட்டது அங்கே.
"என்ன பிரச்சன தம்பி?" என்று வாமனை விசாரித்தனர்.
சியாமளனை பிடித்து கையை வளைத்து பின்னால் மடக்கி ஒரு திருப்பு திருப்பினான்.
"ஆஆஆஆஆஆஆஆஆஆஆ......" அலறினான் சொர்ணத்தின் புத்திரன்.
"இவனுகளுக்கு இதே வேலையா பொயிட்டு.. பின்னேரம் ஆனா, அந்த சவுக்கு பத்தல சாராயம் குடிக்கிற.. ஒரு பொம்புளப்புள்ள இந்த பக்கம் வர வழி இல்ல" அவர்களாக முடிவெடுத்து சியான் கூட்டாளிகளை வைதனர்.
"அப்புடித் தான் கால கைய உடையுங்க தம்பி" என்று வாமனுக்கு ஆதரவு தந்து உசுப்பினர்.
இந்த காவாலிகளை தட்டிப் போட ஒரு தைரியகாரன் வந்துவிட்டான் என்ற துணிச்சலில் கீழே கிடந்தவன்களையும் ஆளுக்கு ரெண்டு சாத்து சாத்தினர்.
வாமன் குறி சியானாக மட்டுமே இருக்க, "இந்தக் கை இனி ஒருத்திய தொட யோசிக்கணும்" என்றவன் கிளச் மாற்றுவது போல சொர்ணத்தின் மகன் கையை திருப்பி மடக்கி விரித்தான்.
அடி வயிற்றில் இருந்து சியான் அலறியது அந்த கடற்கரையே அதிர வைத்தது.
ஓரமாக ஒதுங்கி இருந்த சாத்விக்கு இந்த கூட்டமும் அடாவடித்தனமும் பிடிக்கவில்லை. இதுவே அவள் தனியாக வந்து மாட்டி இருந்தால் இப்படி தான் திரண்டு வந்து உதவிக் கரம் நீட்டுமா இந்தக் கூட்டம்??
ஈவிரக்கமில்லாமல் சியானை துன்புறுத்தி கொண்டிருந்த வாமனை நெருங்கியவள் அவன் தோளைத் தொட்டாள்.
எவன் அவன் என திரும்பியவனை, "விடுங்க அவன" என உத்தரவிட்டாள்.
"அப்டி எல்லாம் விட ஏலாது.. பொலிஸ்கு கோல் அடிங்க.. இவன ஹேன்ட் ஓவர் பண்ணணும்.."
"அதெல்லாம் வேணாம்" அவன் கையை பிரித்து, மாட்டி இருந்தவனை விடுவித்த சாத்வி, வாமனை கிட்டத் தட்ட இழுத்துக் கொண்டு நடந்தாள் கூட்டத்தை விலக்கி.
கட்டுப்பட்டவன் போல அவளுடன் வந்தவன், கண் விட்டு மறையும் மட்டும் முறைக்கத் தவறவில்லை சியானை.
வீடு வந்து சேரும் வரை ஒரு பேச்சு வார்த்தை இல்லை இருவருக்கும் இடையே.
வாமன் வண்டியை நிறுத்தியதும் இறங்கிய சாத்வி உள்ளே செல்ல, பைக்கை அதற்குரிய இடத்தில் நிறுத்தி சாவியுடன் அவன் வரும் போது அக்ஷி நம்சி கூச்சல் போட்டுக் கொண்டு ஓடி வந்தனர்.
"எங்கத்தா போன நீங்க?"
"நாங்க க்ளாஸ் விட்டு வந்து எவ்ளோ நேரம் தெரியுமா? உங்கள காணவே இல்ல.."
"நாங்க என்ன வேண்டி வந்திருக்கம் பாருங்க உங்களுக்கு??"
வழியில் வாங்கி வந்த நாவற் பழத்தை அவனுக்கு ஆசையாக காட்டினர்.
"ஏஞ்சல்ஸ்!! நான் வெளியில சுத்திட்டு வந்திருக்கன்.. இருங்க வாறன்.. வொஷ் எடுத்துட்டு வாறன்.." என்றவன் தன்னை நிறுத்தி வைத்திருக்கும் பிள்ளைகளிடம் நயமாக பேசி கழன்று வரும் போது, சாத்வி ஆடை மாற்றி புனிதாவுடன் பேசிக் கொண்டிருந்தாள் ஹாலில்.
வீடெல்லாம் ஆட்களாக இருந்தது. நாளை அவன் ஊருக்கு பெண் அழைத்து செல்லும் சடங்குக்கு தயாராகின்றனர் என புரிந்தது.
ரூம் வந்தவன் குளியலறை பயன்படுத்தி வரும் போது மேசையில் தேநீர் கோப்பை வைத்து மூடி இருந்தது.
அதை வைத்து விட்டு போனவளை பிடித்து தனிமையில் பேச நினைத்தும் இரவு வரை சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
அவளிடம் கதைக்காமல் நடந்ததைப் பற்றி சி.எம் இடம் சொல்வது சரியாக வராது என்று காத்திருந்தான்.
இரவு உணவு முடித்ததும், "அத்தா, படம் பாப்பமா?" என லாப்டாபில் பேய் படம் ஓட வைக்க வளைந்த பிள்ளைகள் செல்லத்துக்கு இடம் கொடாமல், "ரெண்டு நாள் விளையாடினது போதும் ஏஞ்சல்ஸ்!! ஒழுங்கா படிக்கணும். நாளைக்கும் ஸ்கூல் போக மாட்டிங்க. குட் கேர்ள்ஸ் மாதிரி இப்ப இருந்து படியுங்க. நம்சி சத்தம் போட்டு வாசிக்கிறது ரூமுக்குள்ள இருக்கிற எனக்கு கேக்கணும்.." என்று கறாராக சொல்லிட்டு வந்தான்.
இதென்னடா இந்த அத்தான் இப்டி திடீர் வில்லனா மாறிட்டார் என்ற பாவனை தான் பிள்ளைகளிடம்.
ரூமுக்கு வந்தவன் சாத்விக்காக காத்திருக்க, சமையல் அறை வேலை முடித்து புனிதாவிடம் நாளைக்கு என்ன நேரம் தயாராக வேண்டும் என்பதை எல்லாம் கேட்டு ஆறுதலாக வந்தாள்.
வாமன் கட்டிலை பார்க்க நாற்காலியைப் போட்டு உட்கார்ந்திருந்தான் முதல் நாள் அவளுடன் பேசும் போது அமர்ந்ததை போல.
அவன் ஒருவன் அங்கே இல்லை என்பது போல அலுமாரி திறந்து நாவல் நிறத்தில் ஜரிகை வைத்த பட்டுப் புடவையை வெளியே எடுத்தவள் கட்டிலில் போட்டு முந்தானையில் பிளிட்ஸ் பிடிக்க ஆரம்பித்தாள்.
அந்தப் பெரிய சம்பவம் நடந்திருக்கிறது கடற்கரையில். ஒருவன் இவள் கையை பிடித்து இழுத்து அசிங்கமாக வார்த்தை பிரயோகம் செய்து இருக்கிறான். அவனை இவள் அசால்ட்டாக தாக்கி இருக்கிறாள்.
அதன் பாதிப்பு துளியும் இல்லை. அவள் பாட்டுக்கு நேற்று போல, அதற்கு முந்தைய தினம் போல, இயல்பாக இருக்கிறாள்.
அவள் அருகில் அவன் அமரும் போதெல்லாம் ஒரு பார்வை பார்ப்பாள்..
அந்த விழியில் கூர்ந்து கவனித்தால் தெரியும் சில மில்லி அளவு தடுமாற்றம்.
சாயங்காலம் சம்பவம் நடந்த போது அந்த மாதிரி சிறு துளி அச்சம் கூட அவளிடம் காணவில்லை.
யோசித்த வாமனுக்கு, அந்த வகையில் தனது அருகாமையாவது அவளை சின்னதாக அசைக்கிறதே என்பதில் மகிழ்ச்சியே!!
இப்போதும் அவன் தன்னையே பார்க்கிறான் என்பதும் தெரியும் அவளுக்கு.
சாயங்காலம் நடந்தது பற்றி பேசக் காத்திருக்கிறான் என்றும் புரியாமல் இல்லை.
வேண்டும் என்றே கண்டு கொள்ளாமல் தவிர்ப்பவள் அவனிடம் சட்டென விரிந்த புன்னகையில் குழம்பினாள்.
தன்னில், தனது உடையில் ஏதாவது கோளாறா என பார்த்தவள், "என்ன சிரிக்கிறிங்க?!!" என,
"ஒண்டு சொன்னா கோபிக்க மாட்டிங்களே.."
க்ளீன் சேவ் செய்த தாடையில் ஊன்றிய அவனது சிவந்த கரம், புன்னகையில் வளைந்த உதடுகள் வசீகரித்தன.
புடவை தலைப்பில் அதுவரை எடுத்த அடுக்குகள் குலைய, "என்ன?" என்றாள்.
"ஐ... ஐ திங்... ஐ அட்மயர் யூ"
சாத்தி வயிற்றில் என்னென்னவோ படபடத்தது. அவன் கண்களை சந்திக்க முடியவில்லை. விரல்கள் பிளிட்ஸ் பிடிக்க முயன்று தோற்றன.
புடவையை மடித்து ஓரம் வைத்தவள் கட்டிலில் அமர்ந்தாள்.
"இப்ப என்ன உங்களுக்கு தெரிஞ்சி கொள்ளணும்?"
அவளுக்கு அவன் பார்வையை, குரலில் வந்திருக்கும் குழைவை உடனடியாக திசை மாற்றிவிட வேண்டும். இந்த சிரித்து மயக்கும் வாத்தி மூச்சு முட்டச் செய்கிறான்.
"கூல் ஹாசினி! ஏன் இப்ப நர்வஸ் ஆகுறிங்க.."
"என்னவோ கதைக்க வந்திங்க தானே.. அத பத்தி மட்டும் கேளுங்க"
"ம்ம்! ஓகே! யார் அவன்?"
"அவன் ஒரு பொம்புளப் பொறுக்கி. குடி காரன். கழிசற. அவன்ர அம்மா என்ர அம்மாட புருஷனுக்கு அக்கா முறை. அந்த உறவ வச்சி என்னக் காண்ற இடம் எல்லாம் தனக (வம்பு செய்ய) வருவான். இண்டைக்கும் வந்தான். அவ்வளவு தான். வேற அவன பத்தி சொல்ல ஒண்டும் இல்ல"
அவள் விளக்கம் கொடுத்து விட, வாமன் புருவம் சுருக்கினான்.
அவன் பிறந்து, வளர்ந்த கலாச்சாரத்திற்கு சற்றும் ஒவ்வாத வசன முறை சாத்வி வாயில் இருந்து வந்தது முரணாக பட்டது.
அம்மாட புருசனுக்கு அக்கா முறையா?
நேற்றும் இப்படித் தான் 'அம்மம்மாட சொந்தகாரர் வந்திருக்கிறாங்க' என்றாள்.
அது கூட பரவாயில்லை.. பிடித்தம் வராத உறவுளை ஒதுக்கி பேசுவது போல் அர்த்தம் கொள்ள முடியும்.
அம்மாட புருஷன்!!!
இதை எந்த விதத்தில் சேர்ப்பது?
இன்று நேற்று விளைந்த கோபத்தின் வெளிப்பாடு அல்ல இது. அப்பா என்ற உறவை இப்படி சொல்லியே இவளுக்கு பழகி இருக்க வேண்டும்!
வாமன் சுருக்கிய புருவம் நேராக முன்பே, பட பட படவென கேட் தட்டும் சத்தம் ரூம் வரை கேட்டது.
"வாங்கடி வெளில!!" என்ற கனமான பெண் குரலும் கேட்டது.
"யாரோ கேட் தட்டுறாங்க ஹாசினி" என்ற வாமன் எழுந்து கதவை திறக்க போக,
"எங்க போறிங்க.. நீங்க போக வேணாம்.. இது நான் எதிர்பார்த்தது தான்" என சாத்வி அவனைத் தடுத்தாள்.
அதற்குள் கேட்டை உடைப்பது போல சத்தம் அதிர்ந்தது.
"என்ன ஹாசினி.. எனக்கு விளங்கல்ல.. வெளில கேட்ட உடைக்குறாங்க.. நீங்க போக வேணாம் என்றிங்க.."
வாமன் கதவைத் திறந்து வெளியே வந்தான்.
இருட்டில் புனிதாவும் செல்லம்மாவும் கை பிசைந்து நிற்க, இவனை கண்டதும் வெட்கி சங்கடத்தில் விழித்தனர்.
"யார் சி.எம் அது? இந்த நேரத்தில கொஞ்சமும் டீசன்சி இல்லாம" என வாமன் படி இறங்கினான்.
"தம்பி!! போக வேணாம் தம்பி. அவள் இப்டி தான்.. மோசமானவள். சண்ட தேவ பட்டு வந்திருக்காள். "
"அவள் குடி காறி தம்பி.. அவளுக்கு காது குடுத்தா நமக்கு தான் மரியாத இல்ல"
அவர்கள் அவனைத் தடுக்க, சொர்ணம் கேட்டை அடிக்க, நடப்பது என்னவென்று விளங்கவில்லை வாமனுக்கு.
கேட் கம்பி இடைவெளி ஊடாக வராண்டாவில் நிற்பவர்களை கண்டு விட்ட சொர்ணம்,
"டேய்! இழிச்ச வாய் மாப்பிள, பொம்பிளயடோ பொம்பிளயா நிக்கிறியேடா.. நீ சரியான ஆம்பிளயா இருந்தா வந்து கேட்ட திறடா பாப்பம்"
"விடுங்க.."
படி இறங்கி கேட் திறந்த வாமனை இந்த முறை இழுத்து பிடித்து நிறுத்த முடியவில்லை சாத்வியால்.
வளரும்...
-ஆதுரியாழ் ❤️

sathvi you admires me too ❣️
பதிலளிநீக்கு❣️❣️🥰🥰🥰🥰🥰🥰❣️❣️🥰 thank you
நீக்கு