நின்னையல்லால் - 14
வேகமாக வந்து கேட் திறந்த வாமன் ஏன் திறந்தோம் என வருந்தினான்.
குப்பென அவன் முகத்தில் வந்து அடித்தது சாராய வாடை.
ஐந்தே முக்கால் அடி உயரத்தில் அழுக்கு சோட்டியும் சிக்குக் கொண்டையுமாக சிலுப்பிக் கொண்டு நின்றாள் சொர்ணம்.
"ஒத்துக் கொள்ளறன்டா ஒத்துக் கொள்ளரன்.. நீ ஆம்பிள தான் எண்டு இப்ப ஒத்துக் கொள்றன்.. ஆனா வீணா போன இந்த தருத்திரம் புடிச்ச குடும்பத்துல வந்து பொண் எடுத்து இருக்கியே.. ஊர் உலகத்தில வேற பொம்புள கிடைக்கல்லயா உனக்கு??"
மூக்கில் கை வைத்து நெற்றி சுருக்கி இரண்டு அடி பின் வாங்கிய வாமன் திரும்பி சாத்வியை பார்த்தான்.
ஆண் என்றால் ஒண்டிக்கி ஒண்டி மோதலாம். கழுத்தை பிடித்து தள்ளலாம். நிதானத்தில் இருக்கும் பெண்ணிடம் கூட என்ன ஏது என பேச்சு வார்த்தை நடத்தலாம்.
இவளை எங்ஙனம் கையாள்வதென தெரியவில்லை பட்டதாரி உதவி விரிவுரையாளருக்கு.
அவன் பின்வாங்கியதும், "அம்மம்மா இதுலயே நில்லுங்க. சித்தி நீங்களும் வர வேணாம். பிள்ளைகள் பயந்திருவாங்க. அவங்களோட இருங்க" என்ற சாத்வி படி இறங்கி வந்தாள்.
"வெளில போ நீ.." கை நீட்டி வீதியை காட்டினாள் சொர்ணத்துக்கு.
"தே! ஆருக்கு கை நீட்டி கதைக்கிறாய்.. கைய முறிச்சி அடுப்புல வைப்பன். உனக்கு எம்பட்டு ******* இருந்தா என்ர மகன்ல கை வச்சிருப்பாய்.. உன்ன *****"
நான் சியானுக்கு தாய் என்பதை பச்சையாக காட்டினாள் சொர்ணம்.
வீட்டு முற்றத்தில் நட்டிருந்த ரோஜா செடிக்கு வேலியாக போட்டிருந்த கட்டையை பிடுங்கி கையில் எடுத்த சாத்வி,
"இப்ப நீ போகல.. உன்ர மண்டைய அடிச்சி கிழிப்பன்" சரியாக சொர்ணத்தின் நடு மண்டைக்கு ஓங்கினாள்.
"ஹாசினி" என எட்டி அவள் கை இரண்டையும் பிடித்த வாமன், "ஹாசினி!! வட்ஸ் ரோங் வித் யூ? பொலிஸ் ஸ்டேஷன் ஹொஸ்பிடல் எண்டு அலைய ஏலாது நமக்கு. நாளைக்கு வீட்ட போகணும். முக்கியமான பங்க்ஷன் இருக்கு.." என அவளை தடுத்துப் பிடித்தான்.
"யேய்.. ஆரு ஆருட மண்டய உடைக்கிற பாப்பமாடி.." சொர்ணமோ சோட்டியை வரிந்து கட்டி மறு தாக்குதலுக்கு ஆயுதம் தேடினாள்.
"இந்த லேடி மோசமான பொம்பிளயா இருக்கும் போல.." என்றவன் சாத்வியை கை பிடியில் வைத்து, "சி.எம் என்ர ஃபோன் எடுத்து வாங்க" என புனிதாவை ஏவினான்.
புனிதா ஓடிப் போய் அவன் அலைபேசியை எடுத்து வந்து தர, அதை அவன் பெற்றுக் கொண்ட இடைவெளியில்,
"போ நீ வெளில.. " என, அசிங்கத்தை அள்ளி வீதியில் வீசுவது போல கட்டையாலேயே சொர்ணத்தை தள்ளிச் சென்று வீதியில் இறக்கினாள் சாத்வி.
போதையில் தடுமாறி வீதியில் விழுந்தாள் சொர்ணம்.
"அடியே ********!! என்னயே அடிச்சுட்டியாடி.." அடிக்காமலே அடித்ததாக கொக்கரித்தவள் வசை பேசினாள்.
அவள் அடாவடியில் அக்கம் பக்க கதவு ஜன்னல்கள் திறக்க, சிலர் கேட்டை திறந்து வைத்து வேடிக்கை பார்த்தனர்.
அதே சமயம் சொர்ணத்தை தேடி வந்த அவளுடைய புருஷன், "என்னடி ரோட்ல கிடந்து ஒப்பாரி வைக்கா..??" எனச் சீறினான்.
"இஞ்சாரு, உன்ர பொடியன கைய முறிச்சுப் போட்டாள் இந்த மூ***** என்னயும் கட்டயால அடிச்சிட்டாள்.. இதெல்லாம் பாத்துட்டு இருக்கியே நீ.." சொர்ணம் கணவனை ஏத்தி விட்டாள்
பொன்னம்பலம் போல அவளுக்கு பொருத்தமான ஒரு உருவத்தில் சியானுடைய அப்பன், கையில் கட்டையோடு நின்ற பொடிசு சாத்வியை தான் பார்த்தான்.
சாத்வி கண்கள் தன்னிச்சையாக வாமனை தேட, காதில் வைத்த அலைபேசியுடன் வந்தவன் சாத்வியை மறைத்து வந்து நின்றான்.
"நீங்க யாரு.. இந்த லேடி யாரு? நீங்க ஹஸ்பன்டா..? பிழை உங்கட பக்கம். இந்த நேரத்தில இன்னொருத்தர் கேட் தட்டி பிரச்சினை செய்றது லா அன்ட் ஓடர் படி என்ன குற்றம் தெரியுமா?"
"யேய், என்ன அவன்ர வாய பாத்துட்டு நிக்கா.. அடியன் அவள.." சொர்ணம் தட்டுத் தடுமாறி எழுந்து கணவனை தூண்டி விட,
சாத்வியை உள்ளே அனுப்பி கேட்டை சாத்திய வாமன், 119 க்கு அழைத்தான்.
சொர்ணத்தின் கணவன் என்ன வகை என கணிக்க முடியவில்லை. முறைக்கிறானா பயந்து நிற்கிறானா.. இல்லை இவனும் பண்பாடு இல்லாத தற்குறியா எதுவும் விளங்கவில்லை.
தொடர்பில் இணைந்த அழைப்பில், "ஹெலோ நான்.. " என பெயர் இடம் சொல்ல, எங்கே எடுத்து இருக்கிறான் என புரிந்தது வந்தவனுக்கு.
"நில்லு! பொலிஸூக்கா எடுக்கிறாய்? வேணாம் கட் பண்ணு கட் பண்ணு. இத இப்டியே விடு.. பொடியன்ர கைய முறிச்ச கோபத்துல வந்துட்டாள்.. பிரச்சினய ஆரம்பிச்சது நீங்க.." என சமரசம் செய்ய வந்தான்.
அவன் பதறியதும் அழைப்பை துண்டித்த வாமன், "ஓ! அந்த ராஸ்கல்ட ஃபெமிலியா? பின்னேரம் அவன மிதிச்சி இருப்பன். என்ர வைஃப் தான் தடுத்துட்டா. பொலிஸ்ல போட வேண்டிய கேஸ் அவன். லேடீஸ்ல கை வச்சா என்ன தண்டன தெரியுமா??"
சியானின் குற்றம் என்ன வகை.. எந்த எந்த கேஸ்களில் அவனை தூக்கி போட்டு வதைக்க முடியும் என வாமன் சட்டத்தரணி போல பேச, அவன் தோற்றம் நடு நடுவே வந்து விழுந்த ஆங்கிலம் சியானின் பெற்றவனை பயமுறுத்தியது.
முன்னமே ஆயிரம் புகார் மகன் பேரில் உண்டு.. அது குடும்பத்தின் பெயரிலும் பாய வேண்டுமா என யோசித்தவன்,
"சரி விடு! இதோட விடு.. பிரச்சினய வளர்க்காத... யேய்! எழும்புடி.." என மனைவியை கத்தினான்.
அவள் இவன் பம்மியதை கண்டு பதிலுக்கு கத்தினாள். காதை பொத்தி ஒன்று வைத்தான் சொர்ணத்திற்கு.
"ஆஆஆ.. அய்யோ என்ன அடிச்சு கொல்றானே.. *******""
சொர்ணம் கணவனையும் பச்சை பச்சையாக திட்டினாள்.
காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல இருந்தது வாமனுக்கு.
"ரெண்டு நிமிஷத்துல இந்த இடத்த விட்டு போகாட்டி பொலிஸ கூப்பிடுவன்.." அவன் எச்சரிக்க,
"வாய மூடிட்டு வாடி நாயே" என சொர்ணம் வயிற்றிலேயே மிதித்தான் சியானின் அப்பன்.
"அய்யோ அம்மா" என அலறியவளை,
"நடடி ஊட்ட.." என பிடரியில் பிடித்து தள்ளிக் கொண்டு சென்றான்.
ஷப்பா!! என்ன மாதிரியான சனங்கள் இது!!
நெற்றி சுருங்க நின்ற வாமன் உள்ளே சென்று கேட்டை அடைத்தான்.
சாத்வி இன்னும் கையில் கட்டையுடனே நிற்க, "ஷீல்டா இது? கைலயே வச்சிருக்கிங்க!" என அதை பிடுங்கி வீசியவன், ஒடுங்கி நின்ற செல்லம்மா புனிதாவை ஏறிட்டான்.
"அது.. அது சாத்விட தகப்பன்ர..." புனிதா சொல்ல வந்ததை முடிக்கவில்லை, அந்த இடத்தை விட்டு வெடுக்கென அகன்று விட்டாள் சாத்வி.
காற்று போல தன்னை கடந்து போனவளை பார்த்தவனுக்கு காரணம் ஓரளவுக்கு புரிந்தது.
"நேரம் பன்ரெண்டாகுது சி.எம்.. போய் படுங்க.."
எதுவும் இப்போது பேச வேண்டாம் என அவர்களை உறங்க செல்லி விட்டு அறைக்கு வந்தான்.
குளியலறையில் சத்தம் வந்தது. மேசையில் சாய்ந்து கையை குறுக்கே கட்டி பாத்ரூம் கதவையே அவன் பார்த்து நிற்க, சில நிமிடங்களில் வெளியே வந்தவள் முகம் துடைத்து மேசையில் இருந்த தண்ணீர் எடுத்து பருகி கட்டிலில் ஏறி படுத்து விட்டாள்.
உதடு குவித்து மூச்சை வெளியேற்றிய வாமன், விளக்கை அணைத்து வந்து படுக்கையில் விழுந்தான்.
"நீ நினைக்கிற மாதிரி இல்ல வாமா.. கொஞ்ச டஃப் தான்..." முணுமுணுத்தான்.
நெற்றியில் கை வைத்து உறக்கம் தேடினான்.
மறு நாள் காலையில் வாமன் விழிக்கும் போது வீடே சத்தமாக இருந்தது.
ஊருக்கு, அவன் வீட்டுக்கு போகும் நாள் இன்று. குளித்து வெளிக்கிட்டு தயாராகினான்.
"தம்பி, டீ தரவா இல்லாட்டி சாப்பிடுறிங்களா?" புனிதா கேட்டாள்.
சாத்வியை தேடியவன், "என்ன டைம் வெளிக்கிடுறம்..?"
"ஒன்பது மணிக்கு வேன் வரும்"
கடிகாரம் பார்த்து விட்டு, "டீ மட்டும் போதும்" என்றான்.
கை விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையில் மிக நெருங்கிய உறவில் சிலருக்கு மாத்திரம் சொல்லி இருந்தாள் புனிதா.
ஒரே மாதிரி வண்ண சட்டைகளில் பூ சூடி, உதட்டில் கன்னத்தில் வண்ணம் பூசி உற்சாகமாக ரெடி ஆகி ஓடித் திரிந்தனர் அக்ஷி நம்சி.
புடவைகளில் குறுக்கறுத்த பெண்களில் வாமன் சாத்வியை தேடினான்.
இவன் உறங்கிக் கொண்டிருந்ததால், தயாராவதற்காக புனிதா வீட்டிற்கு அவள் சென்றது இவனுக்கு தெரியாது.
வாமனின் அப்பா அழைத்தார். எந்த இடத்தால் வருகிறீர்கள் என கேட்டவருக்கு விபரம் சொன்னான்.
வாடகைக்கு அமர்த்திய வேன் வந்ததும், அனைவரும் அதில் ஏறும் போது தான் சாத்வியை கண்டான்.
இரவு எடுத்து வைத்தாளே, அந்த நாவல் நிற சேலையை உடுத்தி இருந்தாள். குட்டை முடியை விரித்து விட்டு மல்லிகை சரம் சூடி இருந்தாள்.
எல்லாரும் அமர்ந்ததும் முன் இருக்கையில் அவள் அருகில் அவனுக்கு இடம் இருந்தது.
முன்னால் சாரதி அருகில் அமர நினைத்தவன், அந்த எண்ணத்தை மாற்றி அவள் பக்கத்தில் உட்கார்ந்தான் வழக்கமான புன்னகையுடன்.
"குட் மோர்னிங்" சொல்ல,
பதில் குட் மோர்னிங் வரவில்லை.
அவள் மனதில் என்ன ஓடுகிறது என்பதை மிகச் சரியாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு கணிக்க முடிந்தது.
தனது குடும்பம் பற்றி என்ன நினைத்து இருப்பான் தரக் குறைவான எண்ணமிட்டிருக்க மாட்டானா என்பதே சாத்வியை குறுக வைக்கிறது.
அவன் முகத்தில் இழைந்திருக்கும் புன்னகை ஓரப் பார்வையில் தென்படும் போதெல்லாம், அதில் ஒன்ற முடியாமல், அவன் என்ன நினைக்கிறான் என்பதை உணரவும் முடியாமல் வேன் வேகத்துடன் சேர்ந்து ஓடும் காட்சிகளை ஜன்னல் வழி பார்த்து வந்தாள்.
நண்பகல் பனிரெண்டு தொடும் போது வாமன் வீட்டை அடைந்தனர்.
வாசலில் பெண் மாப்பிள்ளைக்கு ஆலம் சுற்றி வரவேற்றார்கள் வாமனின் அக்கா தங்கை சகோதரிகள்.
உறவினர் நேராக மதிய விருந்தில் கை வைக்க, ஹாலில் குஷனில் அமர வைத்து வளைத்து வளைத்து ஸ்டில் எடுத்தனர் வாமன் சாத்வியை.
"நீங்களும் சாப்பிடுங்க தேவா.." என நந்தினி வந்தாள், வாமனின் அக்கா.
யார் அது தேவா? என்ற பார்வையை சாத்வி அவன் புறம் வீச, "சிரிச்ச மாதிரி இருக்கலாமே கொஞ்சம்" என அவள் கழுத்தில் வளம் மாறிக் கிடந்த தாலிக் கொடியை சரி செய்து விட்டாள் நந்தினி.
"இதுல இருந்து சாப்பிட ஏலாது அக்கா. நீங்க ரூமுக்கு கொண்டு வாங்களன்.." என்றவன் எழுந்தான்.
ஏதோ அவன் மட்டும் போவான்.. அவளுக்கும் அவனுக்கும் எந்த சம்மந்தம் இல்லை என்பது மாதிரி சாத்வி அமர்ந்திருக்க, "ஹாசினி, கம்!!" என அழைத்தான்.
சில வினாடிகள் எதிர்வினை ஆற்ற தயங்கிய சாத்வி, எழுந்து சென்றாள் அவனுடன்.
வாமதேவனின் அறை மாடியில் இருந்தது. கதவைத் திறந்து விட்டவன் புன்னகையுடன் அவளை வரவேற்றான்.
உள்ளே நுழைந்தவளிடம் "ஷோ மீ யோர் ஹான்ட்"
"ஆ??"
"உங்கட கைய காட்டுங்க.."
"ஏன்??"
"காட்டுங்க சொல்றன்.."
திருமணத்தில் போட்ட மருதாணி கோலம் மங்கி விட்ட தனது இடது கையை அவன் முன் நீட்ட, அதை பற்றியவன் அவளை தன்னை நோக்கி இழுத்தான்.
மோதுவது போல வந்தவளை இடையோடு அணைத்து, "நான் நினச்சது சரி தான் ஹாசினி" என்று உதடுகள் அவள் காது மடலில் உரசச் சொன்னான்.
வளரும்...
-ஆதுரியாழ் ❤️

adei 😅😅
பதிலளிநீக்கு😄😄😄🥰🥰
நீக்கு