அத்தியாயம்: 23
திருமணம் சொர்க்கத்தில்…
நிச்சயிக்க படலாம்…
நடப்பது பூமியில் அல்லவா...
பஞ்ச பூதங்கள் சாட்சியாய்...
நான்கு வேதங்கள் ஓத...
மூன்று முடிச்சிட்டு...
இரு மனங்கள் இணைந்தே...
ஒருயிராய்த் திருமணம்…
அதுபோன்ற ஒரு திருமணம் தான் நடக்க உள்ளது.
பைரவியால் நம்ப முடியவில்லை, இத்தனை விரைவாக திருமணம் நடக்க உள்ளதை. ஒரு வாரம்… ஏழு நாட்கள்… 168 மணி நேரத்தில் அத்தனையையும் சிறப்பாக ஏற்பாடு செய்ய முடியுமா என்றால், முடியும் என நிறுப்பித்திருந்தான் அவனின் மணாளன்.
மதுசூதனன் திருமணத்திற்குப் பெண் என்று முதலில் நேரில் பார்த்தது பைரவியைத்தான். மற்றவர்களைப் புகைபடத்தில் பார்த்தே வேண்டாம் எனத் தட்டி விட்டு விடுவான். ஆனால் பைரவியைப் புகைபடத்தில் கூடப் பார்க்காது நேரில் சந்தித்தான். அந்த ரெஸ்டாரன்ட்டில் அவசர அவசரமாக நுழைந்து, விழிகளைச் சுழல விட்டவளின் முகம் இப்போதும் நினைவில் இருக்கிறது. அது அடி மனதில் பூப் பூத்தது போன்றொரு உணர்வைத் தந்தது நிஜம்.
இரண்டாம் முறை பார்த்த போதும் அப்படித்தான். கைப் பிடியைப் பிடித்து கொண்டு தன்னை எட்டி பார்த்த மங்கையின் முகத்தில் தோன்றிய ஒளி தனக்கானது என்பது அவனுள் சிறு கர்வத்தைத் தந்தது. நெருங்கி செல்கையில் படபடத்த இமையும், அதைக் கட்டுப்படுத்த பற்களால் கீழ் உதட்டைக் கடித்தவளின் சிறிய அதரங்களின் சிவப்பும் போதை கொள்ள செய்தது.
அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல் அவளின் பஞ்சு பொதி போன்ற இடையை, அணைத்து பிடிக்கையில் பித்தம் தலைக்கு ஏறி நின்றதை அவன் மட்டுமே அறிவான்.
என்ன உரிமை இருக்குறது? என்ற அவளின் கேள்விக்கு உரிமையை உண்டாக்க எண்ணி சிதம்பரத்திடம் பேசினான்.
"அந்தப் பொண்ணா! வசதில கம்மியாச்சே! வேற நல்ல இடம் பாப்போம். பாக்கவும் லட்சணமா இல்ல. குண்டா, சோடா புட்டி போட்டுட்டு இருக்கு. கண்ணுக்குக் குளிர்ச்சியா, நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி ஒருத்தியா பாப்போம்ங்க." என்ற ஜெயாவின் பேச்சைச் சிதம்பரம் கேட்க வில்லை. மது ஒரு முடிவு எடுத்து விட்டால் அது சரியாக இருக்கும் என்றவர் உடனே பைரவியின் வீட்டிற்கு செல்ல ஏற்பாடு செய்தார்.
பைரவியைப் பெண்ணாகப் பார்த்த
போது தன் அண்ணன் மகனின் முகத்தில் பார்த்த சந்தோஷத்தில் அவருக்கு முழு திருப்தி. தாயையும் தந்தையையும் இழந்து உள்ளுக்குள் இறுகிப் போய்க் கிடந்த மதுவிற்கு வருபவள் எல்லாமாக இருக்க வேண்டும். இனியாவது அவன் குடும்பம், குழந்தை என வாழ்ந்தால், சந்தோஷம் எனத் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி விட்டார்.
பிரம்மாண்டமானத் திருமண மண்டபம். கனவிலும் அவள் எதிர்பார்க்கவில்லை, அவளின் திருமணம் இத்தனை பெரிய இடத்தில் நடக்கும் என்று. ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் கொண்ட அந்த மண்டபத்தைக் காலையில் திருமணம், மாலையில் ரிஷப்ஷன் என ஒரு நாள் முழுவதும் புக் செய்திருந்தனர்.
வரவேற்பு பலமாக இருந்தது. சொந்தங்கள் அனைவரும் பொறாமை படும் அளவுக்கு நடந்தேறியது திருமணம். வந்திருக்கும் விருந்தாளிகள் எல்லாம் பெரிய பெரிய வீஐபிகள் ஆதலால் காண்போரைப் பிரம்மிக்க வைக்கும் அளவுக்கு நடைபெற்றது மதுசூதனன் - பைரவி திருமணம்.
மனம் நிறைந்த காதலன் மணாளனாகக் கிடைக்கும் போது அதன் பூரிப்பே தனி. அன்றைய நாள் முழுவதும் பைரவி இந்த பூ உலகில் இல்லை. அவனின் கணவன் சொர்க்கத்தைத் தரையில் கொண்டு வந்து நிறுத்தி, அவளின் சங்கு கழுத்தில் மங்கள நாண் பூட்டினான்.
‘இனி எனக்கு எல்லாமும் நீ… உனக்கு எல்லாமும் நான்.’ என அவளின் காதில் ஒளித்த கணவனின் குரலில் கண்ணீர் ததும்பி நின்றது மங்கைக்கு.
ஆணாதிக்கம் கொண்ட ஆடவனாய் உருவகப்படுத்தி இருந்த அவளின் மனம் எப்படி எளிதாக மாறியது. மாற்றப்பட்டிருந்தது சாந்தியால். பெண் பார்த்து சென்ற பின்னும், திருமணம் நிச்சயித்த பின்னும் பைரவிக்குள் பல குழப்பங்கள். ஒரு வாரம் சென்றிருக்கும்.
மதுசூதனனைப் பற்றிக் கடுகளவு கூட தெரியாது அவளுக்கு. ஃபோனில் பேசியது இல்லை. விருப்பு வெறுப்புகளைப் பகிர்ந்தது இல்லை. கரம் கோர்த்து காதலை அவனிடத்தே உணர்வதற்குள் திருமணமா என அவளுக்குள் பல வித சிந்தனைகள். பயங்கள் படபடப்புக்கள் எனத் திருமணத்திற்கு முன் பெண்களுக்கு வரும் திருமண காய்ச்சல் அவளையும் தொற்றிக் கொள்ள, மருந்து தான் கிடைக்கவில்லை.
இந்த நேரம் பார்த்து அவளின் ஆருயிர் தோழிகள் யாரும் பக்கத்தில் இல்லை. சாருவிற்கு அடுத்த மாதம் திருமணம். விஜி எங்கே அண்ணியின் தம்பி செந்திலுக்குத் தன்னை கட்டி வைத்து விடுவார்களோ என்ற பயத்தில், வெளியூருக்கு மாற்றல் வாங்கி கொண்டு இரு தினங்களுக்கு முன் தான் சென்றாள்.
நிவி... கேட்கவே வேண்டாம்.. 'இப்படித்தான் எங்க அக்கா ஃப்ரெண்டுக்கு மிலிட்டரி ஆள பாத்துக் கட்டி வச்சாங்க. அந்தாளு பாக்க அழக தான் இருந்தான். நம்ம வாரணம் ஆயிரம் சூரியா மாதிரி. ஆனா கல்யாணத்துக்கு அப்றம் தான் தெரிஞ்சது அவெ எஸ் ஜே சூரியான்னு. எதுக்கெடுத்தாலும் சந்தேகம். சண்ட. அடி. கடைசில அவங்க செத்தே போய்டாங்க. அந்த மிலிட்டரி ஆள் கூட வாழ முடியாதுன்னு தூக்குல தொங்கிட்டாங்க.
யாருக்கிட்டயும் பேசாம உம்முன்னு இருக்குற ஆம்பளைங்க ரொம்ப பயங்கறமானவங்க. எந்த நேரத்துல எது பண்ணுவாங்கன்னே தெரியாத சைக்கோ. நீ அவனக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னோட வாழ்க்கை கிரேட் இன்டியன் கிச்சன் மாதிரி மாறிடும்." என ஆறுதல் கூறுகிறேன் என்று பெயரில், ஆள் ஆரவாரம் இல்லாத பாலைவனத்தில் நம்மைக் கொண்டு வந்து விட்டு விடுவாள். அவளிடம் போய்…. வேண்டாம் என விட்டு விட்டாள்.
ஒரு வழியாக மனத்தைச் சமாதானம் செய்து மதுவுடன் நடக்கப் போகும் கல்யாணத்தைப் பற்றிக் கனவுகள் காணத் தொடங்கினாள் அவள். அவளுக்குத் தான் அதிகமாக சிந்திப்பது பிடிக்கதே. அதான்...
இதோ விடிந்தால் திருமணம்.
காலையில் தான் ஜெயாவும் சைந்தவியும் வந்து அவளின் பட்டு சேலை ஜாக்கெட்டை வாங்கி சென்றனர். அப்போது இருவரும் பேசிய பேச்சிருக்கே. அப்பப்பா….
மாட மாளிகையில் இருக்கும் அவர் வீட்டு பையன் குடிசையில் இருக்கும் பைரவிக்கு வாழ்க்கை பிச்சை போடுவது போல் பேசிச் சென்றனர்.
இந்தக் கல்யாணம் தேவை தானா! என மீண்டும் ஆரம்பித்த புள்ளிக்கே வந்து நின்றாள் பைரவி. இந்தக் கல்யாணம் தேவை தானா? எங்கையாது எகிறி குதித்து ஓடி விடலாமா என்று தோன்றியது. அப்போது சாந்தி வந்தார், மகளின் மோனநிலையைக் கலைத்து என்ன என்றபடி.
இப்போதே ஸ்டேட்டஸ் வித்தியாசம் பார்க்கும் இவரை எப்படி மாமியாராக ஏற்பது? ஒரு வீட்டில் இதன் தேள் கொடுக்கு விஷத்துடன் நிம்மதியாக எப்படி இருப்பது? என அன்னையிடம் வினவ,
"உன்ன யாரு அந்தப் பொம்பளக் கூடவே இருக்க சொன்னா? நீ கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த போறது மது தம்பி கூட. எதுக்கு மத்தவங்கள பாக்குற?"
"அந்த மது தம்பி ஒன்னும் வானத்துல இருந்து குதிக்கல. அந்தக் குடும்பம் தான் அவனுக்கு இருக்குற ஒரே சொந்தம். என்னைக்கா இருந்தாலும் எங்காதுல அதிகமாப் பேசுற அந்தம்மாவோட பேச்சி விழத்தான் செய்யும். அந்தம்மாக்கும் எனக்கும் குழாயடி சண்ட வரத்தான் போது. அதை அவன் வேடிக்க பாக்கத்தா போறான்." என்றாள் பின்னாளில் நடக்கவிருப்பதை முன் கூட்டியே கணித்து.
"அதெல்லாம் வாராது. கல்யாணம் ஆனதுக்கு அப்றம் நீயும் அந்தத் தம்பியும் தனி குடித்தனம் தான் போகப் போறீங்க!"
"உங்களுக்கு எப்படித் தெரியும்! தனியாத்தா குடித்தனம் பண்ணப் போறோம்னு." பைரவி.
"அந்தத் தம்பிகிட்ட எல்லாத்தையும் நான் பேசிட்டேன்."
'எது பேசீட்டிங்களா? அந்தப் பாவி எங்கிட்ட வாய் வார்த்தையா பேசாம உங்ககிட்ட மட்டும் பேசிருக்கான்.' என மனதிற்குள் கருவியவளுக்குத் தெரியாது சாந்தி மதுவிடம் மகளைப் பற்றி கூறியது.
"என்னத்த சொன்னான் அவென். " என்றாள் பைரவி.
" அவரு போட்ட கன்டிஷன சொன்னாரு. எனக்கு எல்லாம் ஓகேன்னு சொல்லிட்டேன். "
"இங்க அவனக் கல்யாணம் பண்ணிக்க போறது யாராம்? "
"நீ தான்டி. இதுல என்ன சந்தேகம்? "
"அப்ப நாந்தான ஓகே சொல்லணும்."
"அதான் ஃபோட்டோல பாத்து பிடிச்சிருக்குன்னு சொன்னியே. "
"ம்மா… திரும்ப திரும்ப அதையே சொல்லாதிங்க. பாக்க அழகா இருக்கான். சொல்ல போனா அவனோட கம்பீரத்த, மேனரிசத்தப் பாத்து, நான் அவன லவ் கூட பண்றேன்."
"அப்பறம் என்ன? கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான. "
" ஆனா பேச்சு சரியில்ல. எனக்கு அவனோட எல்லா செயலும் திமிராவே தெரியுது. ஒரு அதிகார தோரணைல தான் எப்பயுமே நடந்துக்கிறான். என்னோட விருப்பம் அதுக்கு முக்கியத்துவமே இல்ல அவன்ட்ட." எனக் கொதித்தாள் பைரவி.
"இதெல்லாம் ஒரு விசயமா. " என்றார் சாந்தி..
"அப்றம் வேற எத விசயம்னு சொல்லுவிங்க.. ம்... என்னோட உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்காதவெ எப்படி என்னை நல்ல பாத்துப்பான்.
உங்களுக்கு நான் வேலைக்கு போகக் கூடாதுன்னு அவெ கன்டிஷனா சொன்னதும் ஓகே சொல்லிட்டிங்க. சரியா... எனக்குத் தான் பயம்மா இருக்கு. எந்த நேரத்துல அவெ என்ன செய்வான்னு. என்னோட வாழ்க்கை எப்படி இருக்கும்னு. ரொம்ப பயமா இருக்கு.
பொண்ணு தான பாக்க வந்தான். அப்ப என்னோட ரூம்ல இருந்து கிளம்பும் போது, 'இனி ரூம இப்படி வச்சிக்காத. எனக்கு நீட்டா இருந்தாத்தான் பிடிக்கும்.' னு ஆர்டர் போட்டுட்டு போறான்." என்ற மகளின் அருகில் சென்றவர்.
"பைரவி எல்லாருக்கும் நினைச்ச மாதிரி வாழ்க்கை அமையாது. நினைச்ச வாழ்க்க தான் வேணும்னு அடம்பிடிச்சா கல்யாணம் முதிர்கன்னியா ஆனாலும் நடக்காது. அதுனால நமக்குப் பிடிச்ச வாழ்க்கைய நாம தான் உருவாக்கணும்.
நிறைய ஆம்பளைங்க வயசுல அப்படித் தான். நாந்தா கெத்து, மத்த எல்லாரும் வெத்துன்னு திரியுவாங்க. முரட்டு தனமா நடந்துப்பாங்க. ஆனா பழகிப்பாரு. அவனுங்க பச்ச குழந்த மாதிரி. ஒரு குழந்தைய ஏமாத்தி சமாளிக்க தெரியாதா என்ன?" என்ற சாந்தியின் சில வரிகள் அவளுக்குப் பிடித்திருந்தது.
'நம்மோட வாழ்க்கைய நாம தான் நமக்குப் பிடிச்ச மாதிரி அமைச்சிக்கணும். அதுவா அமையாது.' என்று கூறியதை பைரவி கொள்கையாக மாற்றிக் கொண்டாள்.
"இப்படி ஏமாத்தி தான் எங்கப்பாவ செல்லாகாசாக்கி வச்சிருக்கிங்களா! என்ன? " எனக் குறும்புடன் கேட்டவளின் காதைத் திருகி,
" உங்கப்பா செல்லா காசா.. ம்... கல்யாணம் முடிஞ்சி வந்தப்ப நானும் சண்டியருதான்னு மீசைய முறுக்கிட்டே திரியுவாரு. அடி, உத, மிதின்னு எல்லாத்தையும் வாங்குனவத தான் நானும். அப்றம் அவரே அடக்கிட்டாரு. எம்மேல நம்பிக்கை வச்சி இப்ப முழு பொறுப்பையும் எங்கிட்ட குடுத்திட்டு ஜாலியா இருக்காரு.
முப்பது வயசு வரைக்கும் ஒரு ஆணுக்கு பெண்ணோட உடம்பு மட்டுமே போதுமானதா தெரியும். நாப்பதுல அனுசரிச்சி இறங்கி மனசார வாழ்வான். அம்பதுல பொண்டாட்டி தான் எல்லாம். அறுபதுக்கு மேல அவன் குழந்த. அவ தான் அம்மா. அதுக்கு மேல கூட பொண்டாட்டி இருந்தா அவ தான் தெய்வமா தெரிவா.
சில ஆம்பளைங்களோட பிகேவ்யர் நாம ஸ்கூல் படிக்கிறப்ப வரையிற க்ராஃப் ஷீட் மாதிரி மேல இருந்து கீழ இறக்கும். சிலர் இறங்கினாலும், இறங்காத மாதிரி சீன் போடுவாங்க. சிலர் திருந்தாத ஜென்மம். என்ன பண்ணாலும் பொண்டாட்டிய ஒரு பொண்ணா இல்ல, மனுஷியா கூட மதிக்காதவிங்க. இப்படி எல்லா குணத்துலயும் ஆம்பளைங்க இருக்கத்தா செய்றானுங்க.
மது தம்பி நீ நினைக்கிற மாறி வில்லன் கிடையாது. பலா பழம் மாதிரி. வெளில முள்ளா குத்தினாலும். உள்ளளுக்குள்ள இனிப்பா இருப்பாங்க. நான் அவருக்கிட்ட பேசுனப்ப அவருக்கு அவரோட மனைவி தான் எல்லாமா இருக்கனுங்கிற ஆச இருந்தது. அந்த எதிர்பார்ப்பில தான் கன்டிஷன சொன்னாரு. எனக்கு அது பிடிச்சிருந்தது.
சில ஆம்பளைங்க இருக்காங்க வீட்டுல படுத்து படுத்து தின்னுட்டு. கிடைக்கிற காச எல்லாம் சாராயக்கடைல விட்டுட்டு. குடும்ப பொறுப்பு பொம்பளைங்க தலைல தள்ளிட்டு எனக்கென்னன்னு இருந்திடுறாங்க. அந்த மாதிரி ஆம்மபளைங்களுக்கு பொண்ணுங்க பணம் குடுக்கிற ஏடிஎம் மிஷன். பணம் தரலன்னா உடைச்சி எறிஞ்சிடுவானுங்க.
'உங்கப் பொண்ண நல்ல பாத்துப்பே அத்தை. அவளுக்கு வேலைக்கி போய் சம்பாதிக்கு வேண்டி அவசியம் இருக்காது.' ன்னு அந்தத் தம்பி சொன்னப்ப, என்னால மறுக்க முடியல. எனக்கு உன்னோட குணமும் தெரியும். கண்டிப்பா ரெண்டு பேத்துக்குள்ள செட் ஆகுறத கஷ்டம் தான். ஆனா, ஒரு ஆறு வர்ஷத்த மிஸஸ் மதுசூதனனா இருந்து தாக்குப் பிடிச்சிட்டன்னா. அடுத்து அந்தத் தம்பி உன்னோட கைக்குள்ள."
"முடியாது…"
"ஹாங்…"
"மனசாட்சி இல்லையாம்மா உங்களுக்கு. அவன் ஆல்மொஸ்ட் ஆறடிக்கு மேல இருப்பான். அவன எப்படிக் கைக் குள்ள? முடியாது… முடியாது..."
"முடியலன்னா முடியுறதுக்கான வழிய யோசி. புருஷெ சப்போட்டு கிடைச்சா அது பழனி மலைய ரோப்கார்ல ஏறுற மாதிரி சீரான வேகத்துல போகும். அது கிடைக்கலன்னா படிக்கட்டுலயாச்சும் ஏறி போய்டணும். என்னால கஷ்டப்பட முடியாதுன்னு தரைல உக்காந்திட கூடாது. அவெ சப்போட் கிடைக்க என்னாலும் பண்ணலாம். ஆம்பளலயோட பெரிய வீக்னஸ் பொம்பள. பொம்பளைக்கும் ஆம்பள தானே வீக்னஸ்." என்றார் அவர்.
பைரவிக்கு அப்போது தான் ஒன்று உரைத்தது. ஜெயா தன் வீட்டு மருமகள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் போது கோபம் வந்தது. அவரின் குரலில் வெறுப்பு, வன்மம், ஏளனம், எகத்தாளம் எனப் பிறரை மதிக்காத ஓர் அலட்சியம் தெரிந்தது.
ஆனால், மதுவின் குரலில் தன் மனைவிக்கான ஏக்கமும், ஆசையும் இருந்தது. அது போதும். அந்த ஆசையை வைத்து அவனின் நிபந்தனைகளை ஒன்றுமில்லாமல் செய்து விட முடியும் என்று முழு மனதுடன் அந்தத் திருமணத்தை எதிர் கொண்டாள். திருமணமும் இனிதே நிறைவேறியது.
'ச்ச… இவ்ளோ பெரிய அப்பாட்டக்காரா அந்த மதுசூதனன்! எனக்குத் தெரியாம போயிடுச்சி. ஆமா… அப்படி அமைதியா கெத்தா இருந்த அவன் எப்படி கோர்ட்டு வாசல்ல குதிச்சி ஆட்டம் போட்டான். ம்…
பைரவியோட வேலையாத்தான் இருக்கும். பையன போட்டு வதக்கி எடுத்திருக்கா. ஆனா எப்படி? அத ஒரு பத்து எபிசோடுக்கு அப்றம் பாக்கலாம்.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

waiting for baiyu's action, 🤣🤣
பதிலளிநீக்கு☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
நீக்கு