முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 25

அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை.  'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார்.  அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...

பனி 24


 

அத்தியாயம்: 24


"அடியே தாமர... தாமர... எந்திரிடி. மணி எத்தனன்னு பாத்தியா. ரா முழுக்க அந்த ஃபோனு கழுதைய தூக்கமில்லாம நோண்ட வேண்டியது. பகல்ல எந்திரிக்க என்னைக் கத்த வைக்கிறது. என்ன பிள்ளையோ நீ. காலேஜ்க்கு நேரமாச்சின்னு கத்துவல்ல அப்ப பாத்துக்கிறேன்." என முதல் சில வார்த்தைகளை மட்டும் சத்தமாக பேசியவர், பின் வந்ததைச் சடைப்பாக முணுமுணுத்தார் தமிழரசி. சுருக்கமாக அரசி.


ஊர் மதுரை என்பதாலோ என்னமோ அந்த வீட்டின் மீனாட்சியான அரசியின் ஆட்சி தான் நடைபெறுகிறது. காலையிலேயே வயலுக்குச் சென்று கீரை பறித்து எடுத்து வந்தவர். இன்னும் எழாமல் உறங்கும் மகளை கண்டு கத்திய படியே சமையலறைக்குள் சென்றார்‌. 


"எம்மோய் பசிக்கிது. என்ன வச்சிருக்க? " என்றபடி சட்டியில் இருந்த கஞ்சியை எடுத்தான் பாண்டி. அவனின் கையைத் தட்டி விட்டார்.


"ம்மா…" என அலற,


"காலங்காத்தால பல்லக் கூட வெளக்காம, சொத்து சட்டிய தூக்குற. கூறு கெட்ட கழுத. போய் வெளக்கிட்டு வா. " என்ற தாயைக் கண்டு கொள்ளாது வாயை மட்டும் கொப்பளித்து விட்டு தட்டை எடுத்துக் கொண்டு சோத்து பானையுடன் தரையில் அமர்ந்தான். 


"இருடா. நீச்சத்தண்ணிய எடுத்துக்கிறேன். அந்த மனுஷெ அதத்தான் வந்ததும் கேப்பாரு." எனச் சொல்லி ஒரு தூக்காளியில் பழைய சோற்றின் நீரை ஊற்றி வைத்தவர், சோற்றை மட்டும் மகனுக்குப் பரிமாறி, முன் தினம் வைத்த மீன் குழம்பைப் பக்கத்தில் வைத்தார். அதை வேகமாக கபளீகரம் செய்தவன்,


"எங்கம்மா செல்விய? க்ளாஸ்க்கு போய்ட்டுளா? " என்க, 


"இன்னும் எந்திரிக்கவே இல்ல. எப்பயும் நான் காட்டுல இருந்து வர்றதுக்குள்ள வகுப்புக்குத் தயாராகி நிப்பா. என்னன்னு தெரியல பட்டணத்துக்குப் போய்ட்டு வந்ததுல இருந்து கழுத கோச்சிங் க்ளாஸ் பக்கமே போகல." என்றவருக்குப் பட்டாம் பூச்சியாய்ச் சுற்றி வரும் மகள், சில தினங்களாக அறைக்குள் அடைந்து கிடப்பது கவலையாக இருந்தது.


"ஒரு வேளை பரிச்சச் சரியா எழுதாம விட்டுட்டாளோ! நீ கவர்மென்ட் உத்தியோகம் கவர்மென்ட் உத்தியோகம்ன்னு அவள டார்ச்சர் பண்ணாமத்தா இரேன். கவர்மென்ட் வேலை குடுக்கலன்னா வேற வேலையே கிடைக்காதா." 


"கிடைக்கும் டா கிடைக்கும். ஆனா அது சர்காரு குடுக்குற காசா இருக்காது. நம்ம சிந்தாமணி மகெ கவர்மென்ட் உத்தியோகந்தே. அந்த உத்தியோகத்துனால தான் நல்ல பெரிய இடமா பாத்து மகனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சி, பங்களா வீடு காருன்னு குழந்தை குட்டியோட வாழ்றான்.‌ இப்ப அவெ மகெ அந்த ரெண்டு கால் கழுதையும் நுனி நாக்குல இங்கிலீஸ்ஸ பேசிட்டு தஷ்ஷூ புஸ்ஸூன்னு என்னைய கத்துது. 


அந்த மாதிரி எம்மகனும் கவர்மென்ட் வேலை பாப்பான். வீடு, வாச கட்டுவான்னு கனாக் கண்டுட்டு இருந்தேன். எங்க! எம்மகெந்தா படிப்பே ஏறாத சுட்டமண்ணா கிடக்கான். ஆம்பள பையன் உன்னையாது கிடைக்கிற வேலய பாத்திட்டு கொடன்னு விட்டிடலாம். பொட்டப் பிள்ளைய விட முடியுமா.


உங்கப்பெ இருக்குற இருப்புக்கு, செல்விய கட்டிக்க யாரு வருவா. சொல்லு. ஊரு முழுக்க அத்தன வம்பு. பொண்ணு கேட்டு வந்தா தட்டி விடுறதுக்குன்னே ஒரு கூட்டம் கங்கணம் கட்டீட்டு தீரியுறானுங்க. எப்ப நம்ம வீட்டு மானம் சந்தி சிரிக்கும்னு, ஆவால கிடக்குறானுங்க. முன்னாடி எம்பொண்ணு கௌரவமா வாழணும். அதுக்கு நல்ல பையனா கிடைக்கணும்‌‌.


அள்ளித்தட்டி நகையும் பணமுமா கொண்டாந்து குவிக்க நம்மக்கிட்ட என்ன கெடக்கு? அதான் படிப்பையாச்சும் படிக்க வைச்சேன்." 


"வச்சது சரித்தான். ஏன் கவர்மென்ட் வேலைக்கி போகச் சொல்லி உயிர வாங்குற. எந்த இடத்துல வேல பாத்தாலும் காசும் வரும் கௌரவமும் வரும்." 


" வரத்தான் செய்யும். ஆனா சர்காரு தர்ற வசதிய தனியார் காரனுங்க தர மாட்டானுங்க. கவர்மென்ட் வேலங்கிறது யானைக்கி சமம். இருந்தாலும் ஆயிரம் பொன்னு இறந்தாலும் ஆயிரம் பொன்னு. " 


"அதுக்கு உம்மக பாஸ் ஆகணும்ல. பாஸ்  ஆனாலும் லட்ச கணக்குல கேப்பான். என்ன பண்ணுவ? உன் சுருக்கு பைல முடிச்சி வச்சிருக்கியா? " என அன்னையில் இடையில் தொங்கிய சுருக்குப் பையை எடுக்க போக, அவனின் கரத்தைத் தட்டி விட்டவர், அவனின் முதுகில் நாலு போடு போட்டார்.


"எடுபட்ட பைய… காச மூக்காலயே மோந்து பாத்து கண்டு பிடிச்சிடுவியான். " எனப் பணத்தை எடுத்து ஒழித்து வைத்தார்.


"அங்கன வச்சா மட்டும் நாங்க எடுக்க மாட்டோமா!" எனப் பாண்டி புன்னைக்க, அரசி முறைத்தாள். தாயின் கோபத்தைக் கண்டு குசியானான் அவன்.


"எம்மக‌ தங்கம் டா. அதுக்கு வராத படிப்பா! பாஸ் மட்டும் ஆகட்டும். லஞ்சமே குடுக்காம எவெ எவென பாக்கணுமோ! அவெ அவன பாத்து எங்கெங்க எழுதி போடணுமோ! பெட்டிஷன் எழுதி போட்டு உங்கப்பாரு சேத்து விட்டிட மாட்டாரு." என்றபடி தன் வேலையைக் கவனிக்க சென்றார்.


"சேப்பாரு சேப்பாரு… ஊருக்கே செய்யும் போது தான் பெத்த மகளுக்குச் செய்ய மாட்டாரா! ம்மோய் அப்பாரு எங்க‌?" எனக் குரல் கொடுக்க,


"காலங்காத்தலயே எங்கயோ போயிருக்காரு. எங்கன்னு சொல்லல. என்ன மாதிரியான மனுஷனோ.‌ இந்தாள எந்தலைல கட்டி வச்சிட்டு அந்தாளு ஆத்தா நிம்மதியா கண்ண மூடிட்டா. நாந்தா கெடந்து தவிக்கிறேன். போய் அ தங்கச்சிய எழுப்பி விட்டுடுட்டு, உங்கப்பா எங்கன்னு பாத்து கூட்டியா. எவங்கூடையாது மல்லுக்கு நின்னுட்டு கொடக்கப் போறாரு. " அரசி. 


"எங்கன்னு போய் தேட? " 


"இங்கதான் அந்தக் காலி நிலத்துக்கு முன்னாடி கிடப்பாரு போடா." என விரட்டினார் அரசி.


அன்னையிடம் சரி என்றவன் தங்கையைக் காண அவளின் அறைக்குள் சென்றான். ஓட்டு வீடு தான். பெரிய அறையில் சமையலுக்கு ஒரு தடுப்பைப் போட்டு மறைத்து இருந்தனர். இரு அறை சிறிய முற்றம். கொல்லைப் புறம் எனத் திண்ணை வைத்த பழைய வீடு அது. 


"ஏ புள்ள செல்வி!  செல்வி... என்ன செல்வி... இன்னைக்கும் க்ளாஸ்க்கு மட்டமா? எத்தன நாளைக்கி கட்டில்லயே படுத்திட்டு காலத்த ஓட்டப் போற?" என்றபடி அறைக்குள் வர, தாமரை போர்வையை விலக்கி பார்த்துவிட்டு மீண்டும் மூடிக் கொண்டாள். 


"அண்ணெங்காரெ கூப்பிடுறான்னு ஒரு மட்டு மரியாத இருக்கா பாரேன்‌. " என்றவன் தங்கையின் அருகில் சென்று போர்வையை விலக்கி,


"எப்ப மெயில் பண்றேன்னு சொன்னானுங்க." என ரகசியமாக கேட்டான். ஏனெனில் அவளைச் சென்னை ஏற்றி விட்டதே அவன் தான். தங்கையின் விருப்பம் தெரியும் என்பதால். 


" ஒரு வாரம்னு சொன்னாவ. நாளைக்கி வந்திடும். எனக்குப் பயமா இருக்கு." 


"எதுக்குப் பயம்? செலக்ட் ஆவோமா மாட்டேன்னா. இவனுங்களா விட்டா வேற எவனும் நமக்கு வேல தரமாட்டானுங்களா என்ன?" என்க, தாமரை யோசனையிலேயே இருந்தாள். 


"என்னடாம்மா?" என வாஞ்சையுடன் தலை கோத,


"வேலை கண்டிப்பா கிடைக்கும்னா. ஏன்னா சாரதாம்மால்ல ரெக்கமெண்ட் பண்ணிருக்காங்க. எனக்கு அந்தப் பயம் இல்ல. அம்ம என்ன சொல்லும்ன்னு தான் பயமா இருக்கு." 


"அத நான் பாத்திக்கிறேன். நீ எதுக்குப் பயப்படுற. உனக்கு அங்க தங்க  ஹோம்லயே இடம் தர்றதா சொல்லிருக்காங்க. உனக்கு வேலை தர்ற ஸ்கூல பத்தி விசாரிச்சிருக்கேன். எந்த பஸ்ல எப்படி ஏறி போறதுன்னு கூட ரூட் பாத்து வச்சிட்டேன். சென்னைல கோட்சிங் எடுத்துக்கிட்டா சீக்கிரம் கவர்மென்ட் வேல கிடைக்கும்னு ஆத்தாட்டா சொல்லி வைக்கிறேன்.  நீ ரெடியா இரு. திங்கக் கிழமை நாம சென்னைக்கி போகலாம்." என்க, தாமரை புன்னகைத்தாள்.


சாரதா ஹோம்மின் உரியமையாளர் சாரதா மூலம் தான் ஒரு தனியார் மழலையர் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர உள்ளாள்.


தாமரை பாண்டியிடம் சென்னையில் நடந்ததைச் சொல்லவில்லை. சொன்னால் சென்னைக்கு அனுப்ப மாட்டான். அவளே சாராதாவிடம் கெஞ்சி கேட்டு ஆறு மாதங்கள் மட்டும் வேலை செய்ய எதாவது ஒரு நல்ல பள்ளியை வேண்ட, அவர் ஓரிடத்தைக் கைக் காட்டினார். கண்துடைப்புக்காக அல்லாது அவளைத் தேர்காணல் செய்து அவளுக்குத் தகுந்த வேலை தருவதாக உறுதி அளித்திருந்தார் சாராதா. வேலை நிச்சயம் உண்டு. என்ன வேலை என்பதை தேர்வு செய்யவே இன்டர்வியூ.


அண்ணனாகத் தங்கைக்கு சில பல அறிவுரைகளைச் சொல்லிக் கொண்டு இருக்க, வெளியே சத்தம் கேட்டது. இருவரும் புருவம் சுருக்கிய படி எட்டிப்பார்த்தால், கூட்டமாக வெள்ளை வேட்டு அணிந்து ஊரின் பெரிய மனிதர்கள் பலரையும் அழைத்து வந்திருந்தார் பாண்டியின் பெரியப்பா வேலாயுதம்.


"என்ன நினைச்சிட்டு இருக்கான் உம் புருஷெ! ம்... தானும் வாழாம அடுத்தவனையும் வாழ விடாமா பைத்தியக்காரனாட்டம் ஊருக்குள்ள போஸ்டர் ஒட்டிட்டு சுத்திட்டு கடக்கான். என்னைக்காச்சும் ஒரு நாள் எங்க கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கப் போறான். சொல்லி வை.. " என வேலாயுதம் குரல் கொடுத்தார். 


"என்னங்கண்ணே பிரச்சன? என்ன பண்ணிட்டாரு அவரு?" எனத் தன் மச்சினனிடம் கேட்காது மற்றவரிடம் அரசி கேட்க,


"அவனுங்க கிட்ட என்ன பேச்சி.. உதவின்னு வந்து நின்னப்ப உனக்குப் பணம் குடுத்து உதவுனது யாரு? நானு... உம் புருஷெ உசுரோட இருக்கான்னா அதுக்கு காரணமும் நாந்தா. அதுக்குப் பிரதி பலனா என்ன கேட்டுட்டேன். ஒரு கையெழுத்து தான. உம் புருஷன வந்து கையெழுத்து போட சொல்லு." அதிகாரமாக சத்தமிட்டார்.


"அண்ணெ… கைமாற எதிர் பாக்காம பண்றதுதா உதவி‌. அதுவும் சொந்த தம்பிக்குப் பண்ண உதவிய சொல்லிக்காட்டி குடுத்த பணத்துக்கு ஈடா அவுக கேக்குறது ரொம்ப அதிகம்.


அது பூர்வீக நிலம். ஏன் வீட்டுக்காரர் கையெழுத்து இல்லாம அந்த நிலத்த லீஸுக்கு வேற விட்டு வருமானம் பாத்திருக்காப்ல. இப்ப பங்கு எதுவும் தராம விக்க போறேன் வந்து கையெழுத்து போடுன்னு சொன்னா… போட்டுட்டு சும்மா நிக்க சொல்றீங்களா. எங்களுக்கும் பிள்ள குட்டிங்க இருக்கு. " என்றார் அரசி காட்டமாக.


"அதெல்லாம் வாஸ்தவம் தாம்மா. ஆனா அந்த இடத்த லீஸ்க்கு குடுத்தவெங்கிட்ட விக்கிறதுனால நம்ம ஊருக்கு நல்லது நடக்குமேயாத்தா. நம்ம இளவட்ட பசங்களுக்கு ஒரு வேளை கஞ்சிக்காச்சும் வழி கிடைக்கும்." என்றார் அந்த பெரிய மனிதன். 


" நிலத்த குத்தக காரனுக்கு விக்கிறதுல எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா அந்த நிலத்துல அவெ கட்டிருக்குறது  தான் பிரச்சனையே. இப்பல்லாம் எல்லார் வீட்டுலயும் பிள்ளைங்கள ஸ்கூலுக்கு அனுப்பி படிக்கத்தான வைக்கிறீங்க. போய் அதுகட்ட கேளுங்க. அந்த இடத்துல அது இருந்தா என்னென்ன பாதிப்பு வருதுன்னு, அதுக சொன்னாத் தான் புத்தில உரைக்கும் சிலருக்கு. ஆனா என்ன சொன்னாலும் சிலருக்கு எரும மாடு மாதிரி சொரனையே வர்றது கிடையாது. அடுத்தவெ ரத்தத்த உறிஞ்சி வாழுற அட்டை." என வேலாயிதத்தைப் பார்த்த படி சொன்னான் பாண்டி. 


"ஏலேய் யாரப்பாத்து என்ன வார்த்த சொன்ன!" என அவர் சீர, பாண்டியும் மல்லுக்கு நின்றான். 


கண்ணாயிரம், வேலாயுதம் இருவர் மட்டுமல்ல கனகவேல் என்ற மூன்று பேரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள். ஆனால் குணம் வேறு வேறாகி போனது.


மூத்தவரான வேலாயுதத்திற்கு பணத்தின் மீது அதீத மோகம். குறுக்கு வழியில் கிடைத்தாலும் பணம் பணம் தான். அதன் மதிப்பு எப்பொழுதும் குறையாது  என்பவர். 


அடுத்து கனகு. மனைவி பொற்கொடி. கணவன் மனைவி என இருவரும் திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே இறந்த விட்டனர். குழந்தை குட்டி என யாரும் இல்லாததால் சொத்தில் பங்கு அண்ணன் தம்பிக்கு என இருவருக்கு மட்டும் தான்.  


கண்ணாயிரம். அவரை பெட்டிஷன் கண்ணாயிரம் என்று சொன்னால் சரியாக இருக்கும். ஊரில் சாலை பழுதாகி உள்ளது, பேருந்து நேரத்திற்கு வரவில்லை என எந்த ஒரு பிரச்சனை என்றாலும் கலெக்டரிம் கால் ஓயாது சென்று மனு குடுப்பார். அவரின் தொல்லை தாங்காது அந்த ஊருக்கு நடு இரவிலும் பேருந்து வசதி உண்டு என்றால் பாருங்களே.


தண்ணீர் தொட்டி அமைத்து ஊருக்கு குடிநீர் தடையில்லாமல் கிடைக்க போராடுவது முதல் வீடுகளில் கழிப்பறை கட்ட அரசு தரும் மானியத்தை வாங்க வழிகாட்டுவது வரை அந்த ஊரின் நன்மைக்கான பல செய்துள்ளார்..


ஊருக்கு நல்லது செய்தாலே அவன் ஏமாளியும் கோமாளியும் தானே. அது போல் தான் கண்ணாயிரமும் கேலி செய்ய பட்டார். ஆனால் யாரையும் கண்டு கொள்ள மாட்டார். அவர் அவரின் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டே தான் இருக்கிறார். 


அது அவருக்கு நிம்மதியை தரலாம், அவரின் குடும்பத்திற்கு தரவில்லை. தன் கணவனை அவரின் முகத்திற்கு முன் புகழ்ந்து காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் ஊர் ஜனம், அவரின் முதுகிற்குப் பின்னால் ஏசுவதை அரசியால் தாங்க முடியவில்லை. 


"எவெ வந்து உனக்குக் கஞ்சி ஊத்த போறான். வேலை வெட்டிக்கி போகாம இந்த ஊர ஜனமே கதின்னு எல்லாருக்கும் நல்லது செஞ்சா உன்னைக் காமராஜர்ன்னு சொல்லி சிலை வப்பாங்களாக்கும்.


உனக்கு ஒரு கஷ்டம்னு வந்தப்ப நீ உதவி பண்ண எந்த ஜனமும் உன்னைக் கண்டுக்கலைல. அப்றம் எதுக்குய்யா கலெக்டர் ஆஃபிஸ்க்கு முட்டி தேய நடக்குற." எனச் சத்தம் போடுவார் அரசி.


"அரசி, மக்களுக்கு விவரம் புரியிறது இல்ல. சர்கார் போடுற திட்டம் எல்லாம் மக்களுக்குப் போய்ச் சேரத்தான். அது வந்து சேராதப்ப நாம கேள்வி கேக்கணும். அப்பத்தா அதிகாரிங்க அவங்க வேலையச் சரியா பாப்பாங்க. அதிகாரிங்க கரெட்டா நடந்துக்கிட்டாலே மக்களுக்கு எல்லாம் கிடைக்கும். அது நல்லது தான."


"நீங்க நல்லது நினைச்சி தான் பண்றீங்க‌. ஆனா அத இந்த ஜனம் புரிஞ்சிக்காம எதோ நீங்க எல்லாரும் பாராட்டனுங்கிற அர்ப்ப சந்தோஷத்துக்காகப் பண்றதாவும், கமிஷன் அடிக்கிறதாவும் பேசுறானுங்க. இதத் தேவையா." என என்ன சொன்னாலும் தன்னை மாற்றிக் கொள்ள மாட்டார்.


அவரின் உறுதி தான் அவரின் மிகப் பெரிய சக்தி. அந்தச் சக்தி‌ தான் ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டி வைத்து நான் தான்‌ ராஜா என உறுமிக் கொண்டிருக்கும் சிராஜ்ஜின் உயிரை குடிக்கும் ஆயுதமாக மாறப் போகிறது.


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


பனி 23

கருத்துகள்

கருத்துரையிடுக

pls share you review..

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...