நின்னை 24
கசக்கிய பார்சலை குப்பை தொட்டியில் போட்டு சிங்கில் கை கழுவிய சாத்வி குளிர் நீர் கொட்டிய குழாயை மூடிவிட்டு ஈரக் கையை துப்பட்டாவில் துடைத்து உடலின் மொத்த உற்சாகமும் வடிந்தது போல சமையல் மேடையில் சாய்ந்து நின்று விட்டாள்.
என்ன செய்தாள் இப்போது??
பழி வாங்கினாளா வாமனை?
'ஹாசினி ப்ரவுன் (prawn) செய்யலயா?' நேற்று சமைத்து வைத்த அத்தனை டிஷ்களையும் திறந்து பார்த்து விட்டு வாமன் கேட்டது இறாலை மட்டும் தான்.
'இல்ல.. அது க்ளீன் பண்ண டைம் காணாது.. சிக்கன் மட்டன் நண்டு க்ளீன் பண்ணவே நேரம் எடுத்துட்டு..'
'ஓ! உங்களுக்கு சப்போர்ட் இல்ல என? அங்க சி.எம் ஹெல்ப் பண்ணுவாங்க. எனக்கும் இதெல்லாம் செய்ய வராது. இல்லாட்டி ஹெல்ப் பண்ணி இருப்பன். அப்பா தான் அம்மாக்கும் க்ளீன் பண்ணி குடுப்பார். அப்பாவ இந்த பக்கம் வர வேணாம் எண்டு சொல்லிட்டிங்களாம். நந்தினி அக்கா நிவே நினச்சாலும் செய்ய ஏலாது. அவங்க இதுகள பச்சையா தொட்டு பார்த்ததே இல்ல ' எனச் சிரித்தவன்,
'ஓகே, ப்ரவுன நைட் பார்த்துக் கொள்ளுவம்..' என்றான் புன்னகையுடன்.
அவனுக்கு இறால் எந்த அளவுக்கு பிடிக்கும் என்று தெரிந்தது அதில்.
பகல் சமைத்தவை மீதம் இருந்ததால், 'பகல் தனிய அடுப்படில நிண்டு அவளவும் செய்த பிள்ள நீங்க. இரவுக்கும் செய்ய வேணாம். நான் குக்கரில ரைஸ் போட்டுட்டன் இருக்கிற கறிய சூடாக்கி எடுங்க சாப்பிடுவம்' என்று விட்டார் ஜெயந்தி இரவு.
இவள் மறுத்து பேசவில்லை. அவனுக்கு பிடித்த றாலை மாத்திரம் சுத்தம் செய்து வைத்து படுத்தாள்.
காலையில் அவனுக்காகவே றால் போட்டு பிட்டுக் கொத்து செய்தாள்.
இப்படி அவனை பார்க்க வைத்து தின்று தீர்த்து விட்டாளே..
மீதியையும் அவன் கண் முன் குப்பையில் வேறு போட்டாகி விட்டது..
அப்டி என்ன கோபம் சாத்வி?
கோபம் தான்!!
காலையில் அவள் சமைத்து வந்ததை அவன் நம்பவில்லை - அது முதலாவது.
சாப்பாடு தருகிறார்கள் என பல்லை இழித்துக் கொண்டு அந்தப் பெண்களிடம் கேரியரை வாங்கியது இரண்டாவது.
வாங்கியவர் சாப்பிடட்டுமே.. அவர் எண்ணத்தில் அவள் தான் சமைத்து வரவில்லையே...
சாத்வி ஹாலை எட்டிப் பார்த்தாள். வாமன் சோற்றை அளைந்து கொண்டிருப்பது தெரிந்தது.
மட்டக்களப்பு அரிசிக்கும் மலையக மக்கள் உண்ணும் அரிசிக்கும் வித்தியாசம் உண்டு. வாமனுக்கு இந்த குண்டு குண்டு அரிசி சோறு தொண்டையில் சிக்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை. கடைகளும் மூடி இருக்கும். பட்டினி தான் போல என நினைத்தவனுக்கு சாத்வியின் கோபம் ஏன் என்பது பாதி புரிந்தது!!
அவ எப்ப பொய் சொல்லி விளையாடி இருக்கா? ப்ரெக்ஃபஸ்ட் லஞ்ச் செய்து வந்திருக்கன் என்றால் நம்பி விட்டு போவது தானே..
அதுக்காக பார்க்க வைத்து சாப்பிடுவது எல்லாம் டூ டூ மச்!!
தட்டை வைத்து விட்டு எழுந்து சமையல் அறைக்கு வந்தவன் சமையல் கட்டில் கையை குறுக்கே கட்டி நின்றவளை பார்த்தான்.
"என்ன ஹாசினி?" அவள் நின்ற தோற்றம் நெருடியதால் கேட்டான்.
"ஒண்டும் இல்ல"
ம்ம் இந்த ஒண்டும் இல்லய முதல்ல அகராதில இருந்து அழிக்கணும் என நினைத்தவன் ஷெல்பில் எதையோ தேடினான்.
"பிக்கிள் இருந்ததே.." என மேலே இருந்த எலுமிச்சை ஊறுகாய் போத்தலை எடுத்துப் போனான்.
உண்ட உணவு வயிற்றில் எரிந்து போனது சாத்விக்கு.
ஊறுகாய் தொட்டு சாப்பிடுவது என்றால்.. அந்த லட்சணத்தில் இருக்கிறது போல இவருடைய அன்பு அக்கறை கலந்த உணவு.
அந்த சமையல் கட்டை அவசரமாக ஆராய்ந்தாள் சாத்வி. தேடிப் பிடிக்க அங்கே எதுவும் இல்லை. எப்போதாவது ஆசைக்கு ஏதாவது செய்து கொள்வான் போல. அதற்கு ஏற்ப, கேஸ் ஸ்டவ். டீ போடக் கூடிய ஏற்பாடுகளுடன் சில பாத்திரங்களே இருந்தன.
செய்து கொடுக்க எதுவுமில்லையே என சோர்ந்த சாத்வி கண்ணில் பட்டது மண் சட்டியில் மூடி இருந்த கோழி முட்டை.
வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸூக்கு யாராவது ஊறுகாய் தொட்டுக் கொள்வார்களா?
வாமனின் நேரம், தொட்டுக் கொண்டவன், ஃபோன் பார்த்துக் கொண்டே ஊறுகாயுடன் ரைஸ் சாப்பிட்ட, அவன் நாசி துளைத்தது முட்டை பொரிக்கும் வாசம்.
எங்க இருந்துடா வருது என வாசனையை இழுத்து நுகர்ந்தான்.
சமையல் கட்டில் இருந்து கரண்டியுடன் வெளிப்பட்ட சாத்வி அவன் தட்டில் வைத்தாள் ஆம்லட்டை.
அவளையும் தட்டையும் பார்த்தவன், சற்று முன்பு அவனுக்கு தராமல் இறால் பிட்டு சாப்பிட்டவளா இவள் என அதிசயித்துப் போனான்.
வைத்த வேகத்தில் அவள் போக,
"ஹாசினி.. ஏது இது?"
"நான் இப்ப போட்டன்.."
இதழ்கள் பிரியாமல் புன்னகைத்தவன், "நீங்க போட்டிங்க எண்டு தெரியுது.. ஆனா ஏன்.. என்னோட கோபிச்சுட்டு இருந்திங்களே.. எனக்கு தராம என்ன விட்டுட்டு சாப்பிட்டிங்களே.."
சாத்வி கரண்டியால் தட்டைக் காட்டி, "இது ஒண்டு போதுமா.. இன்னும் ஒண்டு போடவா?" எனக் கேட்டாள்.
அவனுடைய நெருடல் எல்லாம் காணாமல் போக, இதழ் பிரிய விழிகள் பளபளக்க முறுவலித்தவன், "உங்கட ப்ரிஃபெரன்ஸ் தான்.. எத்தின போட்டு தர ஏலுமோ போடுங்க" என்றான்.
"இல்ல.. ரெண்டு முட்ட தான் இருந்தது.. இன்னும் ஒரு ஓம்லட் போடலாம்"
சிரித்து "ம்ம் ஓகே" என்றவனை உற்சாகம் தொற்றிக் கொண்டது. இரும்பு குண்டாக கனத்த தட்டில் ருசி இல்லாத உணவு அவள் போட்டு வந்த ஓம்லெட்டுடன் சுவைத்தது.
அவன் சாப்பிட, சாத்வி படுக்கை அறை வந்து அதை நிதானமாக அவதானித்தாள்.
கட்டில் பீரோவை தவிர்த்தால் அதை படுக்கை அறை என சொல்ல முடியாது. விசாலமான ஒரே ஒரு அறை என்பதனால் பல தேவைக்கும் அதையே பயன்படுத்தி இருந்தான் வாமன்.
படிக்கும் அறையாக, நூலகமாக, அலுவலக அறையாக, ஜிம்மாக என பலதுக்கும் அதுவே என்பதால், கம்பியூட்டர் டேபிள், புக் ஷெல்ப், லாப்டாப் என இடத்தை பிடித்திருந்தன.
பேச்சுலர் அறை என்ன கோலத்தில் இருக்கும், பெடியன்கள் எப்படி தாறுமாறாக போட்டு வைப்பார்கள் என்பதெல்லாம் சாத்விக்கு பார்த்து பழக்கம் இல்லை.
அங்கே ஊரில் அவன் அறையை தம்பி பெண் அழைத்து வருகின்றான் என்பதால் சுத்தப்படுத்தி தயார் செய்து இருந்தாள் நந்தினி.
இங்கே போட்டதை போட்ட படி விட்டு ஊருக்கு கிளம்பி இருந்தான், கல்யாணத்துக்காக.
சாத்வி முதல் வேலையாக அந்த அறையை சரி செய்தாள்.
தட்டித் துடைத்து பெருக்கி அடுக்கியவள் கட்டில் கவர், பெட்ஷீட் தலையணை உறை, போர்வை எல்லாம் கழற்றி பாத்ரூம் வாளியில் போட்டு சலவை பவுடரை கொட்டி ஊற வைத்தாள்.
பீரோ திறந்து பார்த்தவள், "என்ன செய்ய போறிங்க.." எனக் கேட்டாள் சாப்பிட்டு எழுந்த வாமனை.
"இப்பவா.. நாளைக்கு லெக்சர்ஸ் டைம் டேபிள் பார்த்து நோட்ஸ் கொஞ்சம் ப்ரிபேர் பண்ணணும்.. ஏன்.."
சந்தைக்கு போய் தேவையானதுகளை வாங்கி வர சொல்லலாம் என நினைத்துக் கேட்ட சாத்வி, "ம்ம்.. இல்ல ஒண்டும் இல்ல.." என்று விட்டாள்.
"கமான் ஹாசினி.. என்ன எண்டு சொல்லுங்க, என்னவோ கேக்க வந்திங்க" என்றவன் தனது அறையில் நிகழ்ந்து இருக்கும் மாற்றங்களை கவனித்தான்.
"இப்ப தானே வந்திங்க.. ரெஸ்ட் எடுத்துட்டு ஆறுதலா இதெல்லாம் செய்யலாமே.. ஏன் வந்த உடனே இழுத்து போடணும்.."
அவளுடைய அறையை எப்படி வைத்து இரு ப்பாள் என்று தெரிந்தவனுக்கு குப்பையாக கிடந்த இந்த அறை வசதிப்படாது தான் என்றும் தோன்றியது.
ஊரில் அவன் ரூமை கூட இருந்ததை விட இன்னும் சீராக்கி விட்டதும் ஞாபகம் வந்தது.
"டெல் மீ ஹாசினி, என்ன கேக்க வந்திங்க.." என்றவன் கட்டிலை கவனித்து, "என்னது இது பெட்ட நிர்வாணம் ஆக்கி வச்சிருக்கிங்க" என சிரித்தான்.
உடனே சிரிப்பை விழுங்கி, "நிர்வாணம் மீன்ஸ்.. கவர்.. கவர் எல்லாம் எங்க?"
"அது.. கழட்டி கழுவப் போட்டுட்டன்.."
"பெட் ஷீட்டயுமா!!??"
"ம்ம்"
"எல்லாத்தையுமா..." எனத் தலையில் கை வைத்தான்.
"உங்க சுத்த பத்தத்துக்கு ஒரு அளவு இல்லயா ஹாசினி? போட முதல் ஒரு வார்த்த கேக்க மாட்டிங்களா? இருந்தது ஒரே ஒரு செட். இண்டைக்கு சண்டே.. ஷொப் எல்லாம் க்ளோஸ்ட். வாங்குற எண்டாலும் இனி நாளைக்கு தான் வாங்கலாம். என்ன ஹாசினி இந்த குளிர்ல பெட் ஷீட் இல்லாம எப்டி?"
சாத்விக்கு ரோஷம் வந்தது. "அது ஊத்தயா இருந்தது.."
"அதுக்கு அந்த கனமான பெட் ஷீட்ட துவைக்க போட்டிங்களா.. அது காயவே ஒரு மாதம் எடுக்கும்"
"பரவால்ல.. புதுசா ரெண்டு மூண்டு வாங்குங்க.. இனி தேவப்படும்"
"வாங்குறது இல்ல இப்ப பிரச்சின. நைட்டுக்கு என்ன செய்ற??" என்றவன், "பிரியா வீட்ட தான் புதுசு இருக்கா எண்டு கேட்டு பாக்கணும்.." என முடிக்கவில்லை,
"வேணாம்" என்றாள் சாத்வி வெடுக்கென.
"அந்த கேர்ள்ஸுட்ட ஒண்டும் வாங்க கூடாது நீங்க. இண்டைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணுவம்.." என்றவள் ஊறப் போட்டதை கழுவ பாத்ரூம் புகுந்து விட்டாள்.
"அந்த கேர்ள்ஸா.. அவங்க ரெண்டு பேரையும் நான் இன்ரடியூஸ் பண்ணவே இல்ல.. இவக்கு எப்டி தெரியும்?" என யோசித்தவன் அவர்கள் வந்து போனதை சாத்வி கண்டு இருக்கிறாள் என்று புரிந்து கொண்டான்.
அதை தொடர்ந்து மேலும் சிலதும் தெளிவாக,
பொசசிவ்னஸ்ஸா இது!? ஆனா, அதுக்கும் சந்தேகத்துக்கும் நூலளவு தானே வித்தியாசம்!
"வாமா.. பி கெயர் ஃபுல்" என தன்னைத் தானே எச்சரித்துக் கொண்டான்.
பாத்ரூம் நுழைந்த சாத்விக்கு, என்ன இவர் இப்படி இருக்கிறார்.. என்ன எல்லாம் இரவல் வாங்குவது என்று விவஸ்தை இல்லையா?? என கோபம் தான் வந்தது.
கல்யாணம் செய்து பொஞ்சாதிய முதல் முதலா கூட்டி வந்து இருக்கிறார். பக்கத்து வீட்டில் போய் பெட் ஷீட் கடன் கேப்பாராம்.. கொஞ்சமும் கூச்சம் இல்லாமல்!
இவன் கேட்பது போலவும், பிரியா மோகனா குழைந்து கொண்டே அவனுக்கு போர்வை கொடுப்பது போலவும் கற்பனை வேறு விரிந்தது அவள் மனதில்.
வாமனாக நினைத்து அவன் பெட்ஷீட்டை தேய்த்து தோய்த்த சாத்வி நினைக்கவில்லை, இரவு நிகழப் போகும் அக்கப் போருக்கு பேசாமல் அவனை போர்வையை கடனாக பெற விட்டு இருக்கலாம் என்று.
இரவு அடுத்த நாளுக்கான விரிவுரை குறிப்புகளை வாமன் எடுத்துக் கொண்டிருக்க, சாத்வி கிச்சனில் இரவு உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தாள்.
'இதெல்லாம் வாங்கணும்' என்று சாயங்காலம் போல அனுமார் வாலாக நீண்ட பட்டியல் ஒன்றை கொடுக்க, 'இந்த லிஸ்ட்ல இருக்கத வாங்க சூப்பர் மார்க்கெட் தான் போகணும் ஹாசினி. இப்போதைக்கு பக்கதுல இருக்குற சில்லற கடையில கிடைக்கிறத வாங்கி வாரன்' என இரவு உணவு செய்ய மாத்திரம் மேகி பக்கெட், காய்கறி, முட்டை, பழங்கள், பாண் பக்கெட் என வாங்கி வந்திருந்தான்.
புத்தம் புதிதாக பிடுங்கிய காரட் பீன்ஸ் முட்டைக்கோஸை சுத்தம் செய்து அரிந்து, காய்களை வேக வைத்து தாளித்து முட்டை ஊற்றிக் கிளறி, வேக வைத்து வடித்த நூடில்ஸை போட்டு கிண்டினாள்.
அவள் அலைபேசி அடித்துக் கேட்டது அறையில்.
உடனே ரிங் டோன் நின்று போக, "சித்தி மிஸ் கோல் அடிக்கிறாவா? ஃபோன்ல பேலன்ஸ் இல்லயோ" என இவள் நினைக்கும் போதே, "அவ கிச்சன்ல பிசியா நிக்கிறா சி.எம்" என வாமன் பதில் அளிப்பது கேட்டது.
எனக்கு வரும் தனிப்பட்ட அழைப்பை நீங்க ஆன்சர் பண்ணலாம் ஹாசினி என்றாரே.. அது போல அவளுக்கு வருவதை அவர் ஏற்கிறார்.
அக்ஷி நம்சியோடு அவன் பேசுவதும், அப்படியா ஏஞ்சல்ஸ் இப்படியா ஏஞ்சல்ஸ் என சிரிப்பும் கதையுமாக இருந்தது.
சற்று முன்பு வரை பேராசிரியராக பேரமைதியுடன் வேலையில் ஈடுபட்டிருந்தவன் தான் இப்போது டீன் ஏஜ் ஸ்டுடன்ட் மாதிரி கதச்சி சிரிக்கிறன்.
அடுப்பை அணைத்து சட்டியை மூடி விட்டு தட்டுகளை எடுத்து வைத்த சாத்வி குடிப்பதற்கு சுடு நீர் ஊற்றினாள்.
ரூமுக்குப் போனவள், "தாங்க" என அலைபேசிக்காக கையை நீட்ட, "ம்ம் வெயிட் மா.. அக்கா கதைக்கணுமாம்" எனத் தந்தான்.
"நம்சி... இல்ல இல்ல அம்மாட்ட குடுக்க வேணாம். இங்க சரியான குளிரா இருக்கு. சூடா சமைக்கிறது ஆறிப் போகும். அத்தான் சாப்பிடணும். நான் லேட்டா எடுக்கிறனாம் எண்டு அம்மாட்ட சொல்லு" என வைத்தவள், "வாங்க சாப்பிடுவம்" என அழைத்தாள்.
அவள் வேகமாக வந்து இடை புகுந்ததும், கைய அதிகமாரமாக நீட்டியதும், ஃபோன் பேசிய தோரணையும், அவனை சாப்பிட அழைத்த விதமும்.. உரிமை கடமை அழுத்தம் அக்கறை என சகலதுமாக வேறு மாதிரி முன்னேற்றமாக தெரிந்தது வாமனுக்கு!
அவளையே தான் பார்த்தான் ரசனையுடன்.
அவள் வீட்டில் எதற்கும் புனிதாவை முன் நிறுத்தி ஒதுங்கிய ஹாசினி.. அவன் வீட்டில் ஒதுங்காது எல்லாம் எடுத்து போட்டு செய்தாலும் ஒரு வார்த்தை வாயில் இருந்து உதிர்க்காது சின்ன முக மாற்றம் கூட பதிலுக்கு காட்டாது கர்மமே காரியம் போல நடந்து கொண்ட ஹாசினி.. இங்கு வந்த கணத்தில் இருந்து வேறு ஒரு பரிணாமத்தில் தெரிகிறாளே...
ம்ம் இதற்குத் தான் கல்யாணம் ஆன புது ஜோடியை தனியாக விட வேண்டும் என்று சொல்லுவார்களோ!!
நைஸ் வாமா.. இப்டியே போனா குயிக்கா பிக் அப் செய்யலாம் போல என மனதுக்குள் விசில் அணிந்துக் கொண்டவனுக்கு, அதற்கான யோகமும் சற்று நேரத்தில் அடித்தது!!
வளரும்..
-ஆதுரியாழ் ❤️

yogam ah 🤣🤣
பதிலளிநீக்கு🥰🥰🥰🥰🥰🥰🥰
நீக்கு