நின்னை - 25
மூவர் அமரக் கூடிய சிறிய வட்ட மேசை ஒன்று கிச்சனுக்கு செல்லும் வழியில் சுவரை ஒட்டிப் போட்டுக் கிடக்கிறது.
அதில் உணவை எடுத்து வைத்த சாத்வி, அறைக்குள் கிடந்த இரண்டு கதிரைகளில் ஒன்றை எடுத்து வந்து அதனுடன் இணைத்தாள்.
எடுத்த விரிவுரைக் குறிப்புகளை மூடி வைத்து விட்டு வந்த வாமன்,
"ஓ! இத டைனிங் டேபிளா மாத்திட்டிங்களா?" என அமர்ந்தான்.
"ஏன், இது டைனிங் டேபிள் தானே.."
"மைட் பி, நான் தான் பெட்லயே சாப்பிட்...." என்றவன் அவள் கண்கள் இடுங்குவதை பார்த்து,
"இல்ல ஹாசினி, நான் ஃபுட் வெளில தானே வாங்குவன். சோ.. அத வேல பாத்துட்டே பெட் ரூம்லயே.." என சிரித்தான்.
இந்த ஒரு வார அவதானிப்பில், "நீ சரியான குப்பை டா.. அவ ஓவர் சுத்தம் பாக்குறா.. முகம் சுளிக்கிற மாதிரி எதுவும் செய்யாத.. பிறகு பிக்கப் ஆக காலம் போகும்" என தனக்கு தானே அறிவுறுத்திக் கொண்டிருப்பதால் சமாளித்து விட்டான்.
"எப்பவும் கடை தானா.. சமைக்கிற இல்லயா.." அவனுக்கு தட்டில் நூடுல்ஸ் பரிமாறிக் கொண்டு கேட்டாள் சாத்வி.
"சமையலா.. நான் தான் சொன்னனே ஹாசினி, அதுக்கும் எனக்கும் தூரம். என்ர லெவல் ஒஃப் குக்கிங் மெகி தான்.. அதே நல்லா வராது.. தண்ணி கூடி கொள கொள எண்டு ஆகும்.."
"கிச்சன்ல இருந்த முட்ட, ஊறுகாய் எல்லாம்.."
"அது.. இடையில சும்மா அப்டியே... எப்பயாவது..."
"எப்பயாவது??"
வாமன் சிரிக்க,
என்ன சிரிப்பு? பதில் சொல்லுங்க எனபது போல அவனையே பார்த்தாள்.
பெட் ரூம் கிச்சன் எல்லாம் கிளீன் பண்ணும் போது பியர் போத்தல் கீத்தல் எதையும் கண்டு இருப்பாளோ, மாட்டினாயா வாமா என அவன் யோசிக்க,
அவனை காப்பது போலவே அறையில் அவன் அலைபேசி ஒலித்தது.
"இருங்க வாரன்" என அவன் எழ,
"இருங்க.. நீங்க சாப்பிடுங்க.." என சாத்வியே சென்றாள்.
ம்ம் குட்!! என மனசுக்குள் மெச்சியவன் தன் முன் இருக்கும் தட்டைப் பார்த்தான்.
விளம்பர படங்களில் காண்பது போலவே களர்புல்லாக வாசம் பரப்பியது நூடுல்ஸ்.
அறைக்கு வந்து ஃபோன் எடுத்த சாத்வி அப்பா என்ற நம்பர் பார்த்து தயங்கி ஏற்க, "ஹெலோ! என்ன தம்பி நடக்குது?" எனக் கேட்டார் நடராசா.
"அவர் சாப்பிடுறார்.."
"மருமகளா.. சரிம்மா.. நீ சாப்பிட்டியா?"
"இல்ல இனி தான்.."
"சரி சரி நீயும் போய் சாப்பிடு. நான் சும்மா தான் எடுத்தன்" என வைத்தார் நடராசா.
ஊரில் இருக்கும் போதும் மூன்று வேளைக்கும் தவறாமல் அழைப்பு வரும் அவனுக்கு வீட்டில் இருந்து. மணித்தியால கணக்கில் பேசுவான். நந்தினி நிவேயுடன் பேசும் போது ஒரே சிரிப்பலையாக இருக்கும்.
தொலைவில் இருந்தாலும் அவசியம் என்றால் மட்டுமே புனிதாக்கு எடுத்துப் பேசும் சாத்விக்கு இதெல்லாம் புதிது தான்.
வைத்து விட்டு வந்தவள் இன்னும் தட்டில் கை வைக்காதவனை, "சாப்பிடல்லயா??" எனக் கேட்டாள்.
"நீங்களும் வாங்க.. வெயிட்டிங் ஃபோர் யூ" என எதிரில் உள்ள கதிரையை காட்டினான்.
அவள் ஃபோன் பேசும் போது இன்னும் ஒரு நாற்காலியை இழுத்து அவளுக்காக போட்டு இருந்தான்.
"இது ஏது?"
"வெளில கிடந்தது.. எடுத்து வச்சிட்டன்.."
"ம்ம்" என உட்கார்ந்து தனக்கும் போட்டுக் கொண்ட சாத்வி வாமன் முகத்தை கவனித்தாள்.
"ஜஸ்ட் நூடுல்ஸ்.. அதையும் டேஸ்டா கிண்டி இருக்கிங்க..யம்மி" என்றான்.
றால் பிட்டை அவனுக்கு கொடுக்காமல் சாப்பிட்டதை இன்னும் ஆற்ற முடியவில்லை. நூடுல்ஸை அவன் ரசித்து உண்பது ஓரளவுக்கு திருப்தி தந்தது.
"எப்புடி ஹாசினி இப்டி சமைக்கிறிங்க!! கிச்சன்ல பெருசா சாமான் இல்ல.. வாங்கி வந்தத வச்சே இவ்வளவு நல்லா செய்து இருக்கிங்க.." என்று இன்னும் எடுத்துப் போட்டுக் கொண்டான்.
சாத்விக்கு சமையல் கை வந்த கலை. செல்லம்மா நன்றாக சமைப்பார். அயலில் ஏதும் விசேஷம் என்றால் பெரும் சமையலுக்கு அவரை தான் அழைப்பர்.
கோயில் அன்ன தான நிகழ்வுகளுக்கு அவர் தான் தலைமை செஃப். அவரை அடுத்து புனிதாக்கும் நளபாகம் இயல்பாக வந்தது.
இப்படி செய்.. அப்படி போடு.. இதன் அளவு இது.. என எதையும் சாத்விக்கு அவர்கள் பழக்கவில்லை.
சின்ன வயதில் அம்மம்மா சமைப்பதை பார்த்து, புனிதா செய்வதை கவனித்து கற்றது தான் இது.
சொல்லப் போனால், யூடியூப் பார்த்து ரெசிபி முயன்று அம்மம்மா, சித்தியை விட ஒரு படி மேலாக இவள் செய்வாள்.
என்ன, அவள் வீட்டில் அவர்களுக்குள் அதைப் பாராட்டி கொள்ள மாட்டார்கள். சமைப்பதும் சாப்பிடுவதும் சாதாரணமாக கடந்து போகும்.
வாமன் வந்த பிறகு தான் வாய்க்கு வாய் பாராட்டுகிறான், அவளின் இந்த கலையை ரசிக்கிறான். அது சாத்விக்குள் ஒரு இதமான உணர்வை பரப்புவதும் உண்மையே!
"நாளைக்கு என்ன டைம் ரெடி ஆகணும்.."
"நான் யுனி போற டைம கேக்குறிங்களா? செவன் தேர்ட்டிக்கு போகணும். லஞ்சுக்கு வந்திருவன். ஈவ்னிங் ரெண்டு பேரும் கடைக்கு பொயிட்டு வருவம். அந்த லிஸ்ட்ல வேற என்னவும் சேக்கணும் எண்டாலும் எழுதி வையுங்க.."
பேசிக் கொண்டே அவன் தட்டு காலி ஆனதும், "வைக்கவா?" என கரண்டி எடுத்தாள்.
"போதும்.. நான் உங்களுக்கு கம்பனி தரணும் எண்டு இருக்கன்.. நீங்க சாப்பிடுங்க.." என மிதமான சூட்டு நீர் எடுத்து பருகினான்.
அவளை விட அவன் சற்று வேகம் உண்பதில். தட்டு காலி ஆனாலும் உட்கார்ந்து இருந்தவன் இனி கவனித்து அவள் வேகத்திற்கு ஈடாக இறங்க வேண்டும் என குறித்துக் கொள்ள,
"பக்கத்துல கடை இருக்கு தானே.."
"ம்ம்! ஒரு கட பக்கம் தான்.. ஏன் அரஜன்டா ஏதாவது வாங்கணுமா.."
"ம்ஹும்.. நாளைக்கு சமைக்க ஒண்டும் இல்ல.."
"நோ ப்ரொப்ளம்.. நாங்க லஞ்சுக்கு வெளில போவம்.."
"இல்ல வேணாம்"
"ஏன்?"
"கடையில சாப்பிடணும் எண்டா என்ன ஏன் இங்க கூட்டி வந்திங்க.."
சிரித்தவன் "நான் உங்கள குக்கா கூட்டி வர இல்ல ஹாசினி.. எனக்கு சமைச்சு தர ஒருத்தி வேணும் எண்டே உங்கள கல்யாணம் கட்டின மாதிரி இருக்கு உங்கட டாக்!!"
சாத்விக்கு வெளியில் சாப்பிடுவதில் விருப்பம் இல்லை. வேணாம்.. அது உடம்புக்கும் நல்லம் இல்லை.. பர்சுக்கும் நல்லது இல்லை என்பதை சொல்ல தெரியாமல் தான் இப்படி பேசி விட்டாள்.
அது அவனை தவறாக நினைப்பதாக போய் விட்டது.
நூடுல்ஸ் இழைகளை கரண்டியில் சுற்றியவள், "பிறகு.. கல்யாணம் ஏன் செய்ற??" எனக் கேட்டாள்.
இந்தக் கேள்வி அவளுமே கேட்க நினைக்காதது.
கல்யாணம் எதற்கு என்பது சாத்விக்கு மிகப்பெரிய வினா தான். இரண்டு பேர் காலம் முழுக்க சேர்ந்து ஒருவரை ஒருவர் துன்பம் செய்யாது மனம் நோகச் செய்யாது ஈருடல் ஓருயிராக வாழ்வது முடியுமா??
முடியவே முடியாது!!
பிறகு எதற்கு அது??
காலம் பூராகவும் செல்லம்மா புனிதாக்கு பாரமாக இருக்க முடியாமல், யாரோ ஒருவனை கரம் பிடித்தே ஆக வேண்டும் எனும் நிலையில் கல்யாணத்துக்கு ஓம் சொன்னாள்.
கை பிடித்தவன் இந்த வாமனாகப் போய் விட்டான். அவ்வளவே!!
அவள் அடி மனதில் கிடந்த வினா சந்தர்ப்பம் பார்த்து தனது விரிவுரையாளர் புருஷனிடம் பாய்ந்து விட, அவள் விழிகள் அவனைத் துளைக்க,
அவள் குணத்தை ஓரளவுக்கு புரிந்து இருந்த வாமன் லேசாக சிரித்து,
"லாஸ்ட் வீக் நான் இங்க இதே குவார்ட்ஸ்ல தான் இருந்தன். என்ன கேக்க பார்க்க ஆள் இல்ல. தனிய சாப்பிட்டு தனிய தூங்கி தனிய எழும்பி என்ர வேலைய பாத்தன்.."
"நமக்கு கல்யாணம் நடக்க இல்ல எண்டு வையுங்களன், நான் இதே மாதிரி இதே குவார்ட்ஸ்ல இந்த நேரத்தில இருந்து தான் இருப்பன். இந்த நூடில்ஸூக்கு பதிலா வேற ஏதோ ஒரு ஃபுட் எனக்கு கிடைச்சி தான் இருக்கும்"
"ஆனா இந்த டேஸ்டான நூடுல்ஸோட இத அக்கறையா குக் பண்ணித் தந்த நீங்க எனக்கு முன்னுக்கு இருந்து இருக்க மாட்டிங்க. நீங்க இப்ப என்னோட இருக்கிங்க எண்டா.. தட்ஸ் பிகோஸ் ஒஃப் கல்யாணம்!!"
"திரும்பவும் சாப்பாட்ட பத்தி கதைக்கிறன் போல.. பட் இது அத பத்தி மட்டும் இல்ல ஹாசினி.. சேர்ந்து இருந்து சேவ் பண்ர ஆளப் பத்தினதும்.."
"எனக்கு தனிமை பிடிக்காது ஹாசினி. என்ன தேட அம்மாவும் அப்பாவும் இருக்காங்க. ஆனா அவங்க ஊருல இருக்காங்க. ஒரு வயசு வரைக்கும் தானே அவங்களால என்னோட இழுபடவும் ஏலும்"
"அவங்களுக்கும் வயசு ஆகுது.. அவங்கள நான் பார்த்துக் கொள்ற காலம் இது. இந்த குளிர்ல நான் போற இடம் எல்லாம் அவங்கள கூட்டிட்டு வர ஏலுமா?"
"நான் நினைக்கிறத ஷெயா பண்ண, ஒரு சக்சஸ் வந்தா சொல்லி சந்தோஷ பட, ஒரு மாதிரி ஃபெடபா ஃபீல் பண்ணினா ஏன் உன்ர முகம் இப்டி இருக்கு என்ன பிரச்சினை உனக்கு எண்டு கேக்க எனக்கு ஆள் வேணும்"
"ஒரு ஹெடேக் வந்தா கூட பனடோல் தரவா எண்டு யாரும் கேட்டு அவங்களா தராட்டி நான் போட மாட்டன்.. தட்ஸ் மை நேச்சர்.."
"என்னக் கேள்வி கேக்க.. நான் பதில் குடுக்க.. ஒரு ஜோக் சொன்னா சேர்ந்து சிரிக்க.. இப்டி எனக்கு பக்கத்துல யாராவது வேணும்"
"அக்காவும் தங்கச்சும் எப்பயும் கூட வருவாங்களா.. ஃப்ரெண்ட்ஸ் கடைசி வரைக்கும் இருப்பாங்களா.. இல்லயே!!"
"இது.. இது மாதிரி இன்னும் நிறைய இருக்கு ஹாசினி. இத விடயும் ஒரு மனிசனுக்கு அவன்ர உணர்ச்சிகள.." என இழுத்தவன்,
"அது.. அத இந்த இடத்தில நான் சொன்னா நீங்க அடிக்க வந்தாலும் வருவிங்க.. அக்குவாட்டா இருக்கலாம்.. சோ.." என குரல் இறக்கி கீழ் கண்ணால் அவளை பார்த்தான்.
அந்த திருட்டு முழிக்கு என்ன அர்த்தம் என புரியவில்லை சாத்விக்கு, முன்னைய அவன் வார்த்தைகளில் அவள் ஆழ்ந்து போனதால்.
"கல்யாணம் எண்ட கான்செப்ட பத்தி இதே மாதிரி மைன்ட் செட் இதே மாதிரி உணர்வு உங்களுக்கும் இருக்கலாம். வித்தியாசமாவும் தோணலாம்..."
"ஒரே வரில சொல்லவா நான்? எனக்கு தனிய இருக்க ஏலாது... ஐ ஜஸ்ட் நீட் எ பார்ட்னர்! லைஃப் லோங் என்னோட வார ஒரு அன்பான அக்கறையான பாட்னர்.. அதுக்கு தான் கல்யாணம்..."
"நீங்க என்னக் கேட்ட இதே கேள்விய உங்கள பாத்து நான் கேட்டா ஆன்சர் மாறும்.. மாறும் தானே? கேள்வி ஒண்டு தான்.. ஆனா பதில் சொல்றவங்கள பொறுத்து வேரி ஆகும்.."
நல்ல வேளைக்கு அந்தக் கேள்வியை அவளை நோக்கி கேட்கவில்லை அவன்.
எதற்கு கல்யாணம் செய்தான் என அவன் இட்ட பட்டியலில் உள்ளவை சாத்விக்கு தேவைப்பட்டதில்லையே!!
ஆக, கல்யாணமும் அவளுக்கு தேவை இல்லாத ஒன்று தானோ??
உண்டு எழுந்ததும் பாத்திரங்களை கழுவி, சமையல மேடையை சுத்தம் செய்தாள் சாத்வி!
எனக்கு பார்ட்னர் வேணும். நினைக்கிறத ஷெயார் பண்ண ஒரு சக்சஸ் வந்தா சொல்லி சந்தோஷ பட.. ஹெடேக் வந்தா கூட பனடோல் தரவா எண்டு கேட்க... என்னக் கேள்வி கேக்க.. நான் பதில் குடுக்க.. ஒரு ஜோக் சொன்னா சேர்ந்து சிரிக்க.. இப்டி எனக்கு பக்கத்துல யாராவது வேணும்..
வாமன் சொன்னது தான் அவள் மூளையில் ஓடிக் கொண்டிருந்தது.
வேலை முடித்து விளக்கை அணைத்தவளுக்கு சடுதியாக குளிர் அதிகமாவது போல ஒரு உணர்வு.
சற்று நேரத்தில் எல்லாம் வெளியே மழை தூற ஆரம்பித்தது.
தண்ணீர் போத்தலுடன் ரூமுக்கு வந்தவள், தனது லக்கேஜ் திறந்து இரண்டு புடவைகளை எடுத்து, ஒன்றை இரண்டாக மடித்து மெத்தையில் விரித்து, மற்றையதை தலையணை மேல் போட்டு விட்டு பாத்ரூம் சென்றாள்.
தனது வேலையை முடித்து எழுந்த வாமன், கட்டிலை பார்த்ததும் புரிந்தது 'பெட்ஷீட் என்னிட்ட இருக்கு' என்று சாத்வி சொன்னதன் அர்த்தம்.
பச்சையும் இளம் சிவப்புமாக விரிந்து கிடந்த நூல் பட்டு இரண்டிலும் பரிதாபம் பிறந்தது அவனுக்கு.
கசங்கி சின்னாபின்னமாகி போக போகிறதே!!
அவன் போல எந்தக் கவலையும் இன்றி பாத்ரூம் இருந்து வந்தவள், முகம் துடைத்து கட்டிலில் அமர்ந்து சுவர் பக்கமாக நகர்ந்து, "வேல முடிஞ்சுதா?" எனக் கேட்டாள்.
"ம்ம்.." என்றவன், "இந்த சாரி தான் நமக்கு பெட் ஷீட்டா?" என இதழ் பிரிக்காமல் சிரிக்க,
"நாளைக்கு பெட்ஷீட் வாங்கிருவிங்க தானே.." என எதிர் கேள்வி கேட்டாள்.
அது சரி!! ஒரே ஒரு மெத்தை கவர், போர்வை, தலையணை உறை வைத்து இருந்தது உன் தவறு தான் என தன்னில் பிழையை போட்டுக் கொண்டவன், "ம்ம் ம்ம்" என தலை ஆட்டி விட்டு பாத்ரூம் செல்ல, ஜில் என விழுந்த தண்ணீரில் கை கால் விறைத்தது.
இந்த குளிருக்கு என்ர கம்பளி பெட்ஷீட்ட போர்த்தி படுத்தா எவ்ளோ சுகமா இருக்கும்.. என்று தோன்ற,
"அதுதான் இப்ப இல்லையே.. வேணும் எண்டா, அத அசால்ட்டா தூக்கி போட்டு துவச்சவள் இருக்காள்.. அவளத் தூக்கிப் போட்டு.."
திடுக்கிட்டான் வாமன்!!
"இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா கதச்சி பேசி சுமுகமாக ஒரு உறவு வளர்த்துட்டு வருது.."
"இன்னும் அவ சரியா முகம் பார்த்து சிரிக்க இல்ல! இப்ப தான் தயங்காக கண்ணப் பார்க்கிறா.. இதுல தூக்கிப் போட்டா??"
உன் எண்ணமும் சிந்தனையும்!!
மனசாட்சியை தூரம் தள்ளி வெளியே வந்து விளக்கை அணைத்து படுத்து விட்டான்.
சாத்வி சுவர் பக்கம் கிடந்ததால் இவன் இந்தப் பக்கம் படுத்து காலை நீட்டி ஒன்றின் மேல் ஒன்றாக போட்டு கையை மார்பில் கட்டி கூரையை பார்க்க,
"பிலோ தேவை இல்லயா?" என்றாள்.
இருந்தது ஒரே ஒரு தலையணை. அதை எப்படி பங்கு போடுவது?
"பரவாயில்ல.. நீங்க படுங்க"
"இல்ல எனக்கு வேணாம் நீங்க வையுங்க.."
பஸ்ஸில் உணர்ந்த அவளுடைய வாசனை மீண்டும் அருகில் வீச, பதிலுக்கு பதில் பேசாமல் அவனே தலையணையை வைத்துக் கொண்டான்.
'ஹொட்டா இருக்கு ஹாசினி.. நான் கீழ படுக்கிறன்' என நேற்றும் தூரத்தை பேணிக் கொண்டவனுக்கு பதுளையில் அது சரிப்பட்டு வராது என்று தெரிய, இந்த இரவை கடத்தினால் கெட்டிக் காரன் தான்டா வாமா நீ!! என நினைத்துக் கொண்டான்.
எப்போதும் உறங்க முன் 'குட் நைட் ஹாசினி' என்பவன் இன்று அமைதியாகி போனதும் சுவர் பார்த்து படுத்திருந்த சாத்வி மெல்ல அவன் புறம் திரும்பினாள்.
இருள் பழகிப் போன கண்களுக்கு அவன் போர்த்தாமல் கிடப்பது தெரிந்தது.
"நீங்க மூட இல்லயா??" எனக் கேட்டவள் பாதி புடவையை அவனுக்கு கொடுக்க, "இல்ல பரவால்ல" என அசைந்தான் சங்கடமாக.
"குளிருதே.."
"இந்தக் குளிருக்கு இது ஒரு அரணா??" எனச் சிரிக்க,
"அப்ப விடுங்க" என அவளே போர்திக் கொண்டாள்.
அடிக்கும் மழைக்கு குளிர் கிடுக்கிப்பிடிக்க, கம்பளிப் போர்வை இன்றி உறங்குவது சாத்தியமே இல்லை என்று விளங்கியது.
கேக்காமல் பார்க்காமல் எடுத்து போட்டு துவைத்தது எவ்வளவு பெரிய மடத்தனம் என சாத்விக்கும் புரிந்தது.
இனி எதையும் கேளாமல் செய்ய கூடாது எனக் குறித்துக் கொண்டவள் குறுகிப் படுத்துக் கொண்டே, புடவையை மறுத்து கட்டிலில் பாதியை நிறைத்துக் கிடப்பவனை பார்த்தாள்.
நேராக படுத்து கையை மார்பில் கட்டி கண் மூடிக் கிடந்த வாமன், அவனுடைய கம்பளியை தான் மிஸ் செய்தான்.
இருவருக்குமே உறக்கம் வரவில்லை அதீத குளிரால்.
நேரம் செல்லச் செல்ல, அறை வெப்பம் குறைய, தனது இடப் புறமாக உணர்ந்த கதகதப்பில் அந்தப் பக்கம் புரண்டு ஒருக்களித்தான் வாமன்.
அவன் ஒருகளிக்க காரணமானவளின் உடல் உஷ்ணம் இதம் அளிக்க, மேலும் அவளுக்கு நெருக்கமாகினான்.
அசையாமல் விலகாமல் புரளாமல் சாத்வி மூச்சுப் பிடித்துக் கிடக்க, நெருங்கியவன் இயல்பாக அவளுடன் ஒன்றினான்.
அவள் மூச்சுக் காற்று அவன் மார்பை சூடேற்றும் அருகாமையில் இருவரும்!!
மார்கழி மாதத்தில்
குளிர் அடித்தால்....
கம்பளி போர்வையில் எது பிடிக்கும்?
மார்புக்குள் நீ
என்னை மூடிக்கொண்டால்....
பக்கத்தில் பாய்கின்ற
வெப்பம் பிடிக்கும்!!
வளரும்...
-ஆதுரியாழ் ❤️

so sweet vaathi 🥰🥰
பதிலளிநீக்கு🥰🥰🥰🥰🥰🥰🥰
நீக்கு