நின்னை - 27
பல்கலைக்கழக பேராசிரியர், விரிவுரையாளர்களுக்கான குடியிருப்புகளுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான நடந்து செல்லும் தூரம் தான்.
வாமன் இங்கு இணைந்த முதல் ஒரு மாதமும் நடந்தே செல்வான்.
இளங் காலை குளுமையில் பச்சை வனப்பை கடந்து வளைந்து செல்லும் ஏற்ற இறக்க பாதையில் நடப்பது பிடித்தும் இருந்தது அவனுக்கு.
எனினும் ஒரு காரின் அவசியம் சில நாளில் விளங்கியது. அவனை தவிர அனைவரும் ஆளுக்கு ஒரு கார் வைத்திருக்கும் போது மரியாதை சமமான மரியாதை வேண்டியும், நினைத்த நேரத்தில் டவுனுக்கு கடைக்கு சந்திக்கு செல்லவும் நாலு சக்கர வாகனம் அவசியப்பட்டது.
'கார் வாங்கு தம்பி!' என தனது பென்ஷன் புரவிஷன் பணத்தை முன் பணமாக நடராச கொடுக்க,
'அங்க மலையும் மடுவும் தம்பி.. ஓடுறது பயம்.. வேணாம்' என்று விட்டார் ஜெயந்தி.
'இல்லம்மா, ஒரு நூறு இரு நூறு மீட்டர் உள்ள தான் வரும் தூரம்.. நான் சேஃபா இருப்பன்' என வாக்கு கொடுத்து அடுத்த மாதமே வீசிங்கில் கார் எடுத்து விட்டான்.
குறுந்தூரம் ஓட்டவே வீட்டில் அனுமதி என்பதால் தான் ஊருக்கு பஸ்ஸில் வந்து போவது.
இன்று அவன் யூனிவர்சிட்டி வந்து இறங்கியதும் வாமனை அறிந்த தெரிந்த பலர் வந்து கை குலுக்கி வரவேற்றனர்.
திருமணத்திற்கு நேரில் வர முடியாத டிபார்ட்மெண்ட் ஸ்டாப் வாழ்த்து தெரிவித்தனர்.
நன்றி தெரிவித்து வரவுப் பதிவேட்டில் கை ஒப்பம் வைக்கும் போதே, சாத்வியிடம் இருந்து அழைப்பு வந்தது அவனுக்கு.
முதல் முறையாக கோயிலில் சந்தித்து விட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தானே, அப்போது அவனுக்கு அவள் எடுத்ததற்கு பிறகு இப்போது வருகிறது அழைப்பு.
'Hasini' என இலக்கம் கண்டதும், முகம் பாராமல் தவிர்த்தவள், குவார்டஸில் இல்லாத சாமிக்கு பூ பறிக்க போனவள் ஏன் எடுக்கிறாள்?! என்று யோசிக்க, தனியே இருப்பவள் ஏதும் அவசரத்துக்கு தானே கூப்பிடுவாள்.
அவன் உடனே ஏற்க, ஹெலோ கூட சொல்லாமல், "ஏன் சாப்பிடாம போறிங்க?" என்ற காரமான கேள்வி தான் வந்தது அவளிடமே இருந்து.
ஒப்பம் இட்ட வரவுப் பதிவேடை மூடி டைம் பார்த்தவன், அது 7.45 காட்டியதும் 8.00 மணிக்கு முதல் விரிவுரை ஹாலில் இருந்தாக வேண்டும் என நடந்தபடி, "என்ன சாப்பாடு?" எனக் கேட்டான்.
"டேபிள்ள ப்ரெட் வச்சிருந்தன்.."
"ஓ!! தெரியாதே எனக்கு.. நீங்க சொல்லல்லயே.."
சில வினாடிகள் அமைதி நிலவியது அவள் பக்கம்!
"ஹெலோ!"
"ம்ம்! டீ எடுத்து குடிச்சி இருக்கிங்க.. அயர்ன் பண்ணி வச்ச ட்ரெஸ் எடுத்து போட்டு இருக்கிங்க.."
அதை எல்லாம் நான் சொல்லியா செய்திங்க என்று கேட்கிறாள்!!
இரவு கட்டிலில் இருந்து தன்னைத் தள்ளி விட்டதை மறந்து ரோஷம் கெட்ட சிரிப்பு ஒன்று விரிந்தது வாமன் இதழில்.
பேண்ட் பாக்கெட்டில் கை நுழைத்து சத்தம் வராமல் சிரித்தவன், "ம்ம்.. நீங்க செய்து வச்ச ப்ரெக்ஃபாஸ்ட்ட மட்டும் இக்நோர் பண்ணிட்டு வந்தனா??"
மீண்டும் அமைதி நிலவ, அவளுக்கு புரியவில்லை என விளங்கியது.
"எத்தின பீஸ் சான்விச் வச்சிருந்திங்க?"
"அது...."
அவள் பாண் துண்டுகளை கணக்கு பார்த்து செய்யவில்லை. இரவு நூடில்சுக்கு போக எஞ்சிய முட்டையை வைத்து முடித்தாள். அது அவனுக்கு மாத்திரம் பத்தும் என்று தெரிந்து.
"நீங்க வச்சதுல ஒரு பீஸ் குறையும் பாருங்க. எனக்கு இங்க கென்டீன்ல சாப்பிட ஏலும். நைன் டூ டென் ஃப்ரீ தான் நான். நீங்க சான்விச்ச சாப்பிடுங்க ஹாசினி. ரைட், எனக்கு இப்ப லெக்சர்ஸ்கு டைம் ஆகுது.. வைக்கிறன்.." என வைத்தவன், லெக்சர் ஹாலுக்குள் நுழைந்தான்.
'நீங்க சான்விச்ச சாப்பிடுங்க ஹாசினி' என அவன் சொன்னதும் இறுக்கம் இளகி இதம் பரவியது சாத்வி மனதில்.
ஹாசினி என பெயர் கூறி விட்டானே..
வெளியில் அவனால் உணவு தேடிக் கொள்ள முடியும். வீட்டில் அவளுக்கு வேண்டும் என்று தான் வைத்து விட்டு போயிருக்கிறான்..
ஃபோனை வைத்து விட்டு டீ போட்டு வந்து அமர்ந்தவள் சான்விச் சாப்பிட்டு முடிக்கும் போது யாரோ பெண் குரல் "தம்பி" என அழைத்துக் கேட்டது வெளியே.
வந்திருந்தது செங்கமலம். பிரியா மோகனாவின் தாயார். வாமன் சொல்லி விட்டு போன பச்சை பெயிண்ட் வீட்டம்மா.
பல காலம் பழகியவர் போல சாத்வியை பார்த்து பற்கள் தெரிய புன்னகைத்தவர், "நான் தாம்மா கமலம்.. அதோ தெரியுது பச்ச வீடு.. அது தா எங்களோடது. தம்பி சொன்னிச்சி.. பொஞ்சாதி தனிய இருக்கா எட்டிப் பாத்துக்கோங்கமானு.. பிள்ளைங்க இப்ப தா பள்ளிக் கூடம் போச்சுங்க.. சரின்னு உங்கள பாத்துட்டு போலாம்னு வந்தே.." என்றார் நீளமாக.
அவரில், அவர் உடையில் ஏழ்மை என்பதை விட வசதி குறைவு தெரிந்தது.
உங்களுக்கு உதவி வேணும் எண்டால் கேளுங்க என்றது போல அவர்களிடமும் சொல்லி விட்டு தான் போயிருக்கிறார் என நினைத்தவள்,
"உள்ளுக்கு வாங்க" எனக் கூப்பிட்டாள்.
வாமன் இருக்கும் போது உள்ளே அவனும் கூப்பிட மாட்டான் அது போல அவரும் வருவதில்லை.
அந்த வழக்கத்தில் அவர் தயங்க, "வாங்க.." என கூப்பிட்டு உட்கார வைத்த சாத்வி கிச்சன் சென்று, நேற்று அவர் மகள்கள் தந்து போன கேரியரில் வாமன் வாங்கி வந்த பழங்களில் கொள்ளக் கூடிய அளவு அடைத்து எடுத்து வந்தாள்.
அவளை கண்டதும் அவர் எழ, "இருங்க.. ஏன் எழும்புறிங்க?" என கேரியலை கொடுத்தாள்.
வாங்கியவர், "என்னம்மா பாரமா இருக்கு?" என திறந்து பார்த்தார்.
இது தான் வீட்டில் ஒரு மனைவி இருப்பதற்கும் பெச்சுலர் பெடியன் மாத்திரம் இருப்பதற்கும் வித்தியாசம் என புரிந்து புன்னகைத்தவர், உட்கார்ந்தார்.
அவளும் அமர்ந்து, "சின்னப் பிள்ளைகளும் இருக்காங்களா உங்களுக்கு.." எனக் கேட்டாள்.
கமலத்துடன் இயல்பாக பேச வந்தது சாத்விக்கு. அவர் வெள்ளந்திதனம் காரணமாக இருக்கலாம்.
"எனக்கு ரெண்டு பசங்க தாம்மா.. ரெட்ட பொண்ணுங்க.."
"பிரியா மோகனா ரெண்டு பேரும் டுவின்ஸா.."
"ஆமாங்கம்மா.."
"பள்ளிக் கூடம் போன எண்டது?"
"அவங்க தா.. A/Level படிக்கிறாங்க.."
"ஓ.. அப்ப அவங்க யூனிவர்சிட்டி போக இல்லயா.."
"இல்லம்மா.. இப்ப தா ஸ்கூல் போறாங்க.." என்றவவர், "தம்பி புண்ணியத்துல சீக்கிரமே யூனிவர்சிட்டுக்கு போகணு" என்றார்.
சாத்விக்கு புரியவில்லை.
"இவருக்கு ஸ்டூடன்ட் எண்டு சொன்னார்... நான் யூனிவரசிட்டில படிக்கிறாங்க எண்டு நினச்சன்.."
"அதும்மா.. பசங்க நல்லா படிக்கிற பசங்க.. எங்களுக்கு வசதி பத்தாது.. வீட்டு காரர் தோட்டத்தில வேல பாக்குறாரு.. இவங்க மேத்ஸ் படிக்கிறாங்க.. நான் ஸ்பெசல் க்ளாஸ் அனுப்பி படிச்சி குடுக்க முடியாதுல்ல.. தம்பி ஃப்ரியா இங்கனயே பாடம் படிப்பிச்சி குடுக்குது.." என்றவர் இது எப்படி ஆரம்பித்தது என்பதையும் சொன்னார்.
வாமன் இங்கே வந்த புதிதில் நடராசாவும் ஜெயந்தியும் ஒருநாள் வந்திருந்தனர் மகனுக்கு இடம் வசதிபடுகிறதா எப்படி இருக்கிறான் என பார்க்க.
அவர்கள் வந்த நேரம், அடுத்த நாளே கடை அடைப்பும் பணிப் பகிஷ்கரிப்பும் நடந்தது பதுளையில். யாரோ முக்கிய அரசியல்வாதியின் இறப்புக்கு அஞ்சலியாம் என வாகன ஓட்டமும் தடைப் பட்டது.
பக்கத்தில் எல்லாரும் அறியாத சிங்களவர்கள். அவன் மட்டும் என்றால் கூட பரவாயில்லை. சமாளிக்கலாம். வயதான அப்பா அம்மாக்கு நேரத்திற்கு உண்ண கொடுத்து கவனிக்க வேண்டும்.
அருகில் இருந்த மலையக தமிழ் குடும்பத்திடம் இறங்கி போய் தயங்காமல் உதவி கேட்டான் வாமன்.
அரிசி காய்கறி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் குக்கர் என அவர்களும் கொடுத்து உதவினர்.
தக்க தருணத்தில் கிடைக்குய் உதவி ஞாலத்திலும் பெரிதே. அதற்குரிய பணத்தை இரண்டு மடங்காக கொடுத்து விட்டான் தான். இருப்பினும் அந்த வீட்டின் ஏழ்மை, கெட்டித்தனமாக படிக்கும் இரண்டு பெண்கள், கட்டணம் செலுத்தி க்ளாஸூக்கு போகாமல் பள்ளிக்கூட பாடங்களை மாத்திரம் கற்று பரீட்சை மதிப்பெண் ஐம்பது அறுபது என எடுப்பதை விசாரித்து அறிந்ததும் அவனே வகுப்பு எடுப்பதற்கு முன் வந்தான்.
இப்போது அவர்கள் இருவரும் தான் வகுப்பில் முதல் ஐந்துக்குள் வருகின்றனர். அந்த நன்றியும் அன்பும் நிறைந்திருந்தது வாமன் மேல் செங்கமலம் குடும்பத்திற்கு.
சனி ஞாயிறு தவிர்த்து கிழமை நாள்களில் மாலை ஆறு இருந்து எட்டு வரை நடக்கும் வகுப்பினால் தான் பிரியா மோகனா வாமனுக்கு ஸ்டூடன்ட்ஸ்.
ஒரு பல்கலைக்கழக லெக்சரர் மிக சாதாரணமாக தனது வீட்டிலேயே உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு கணிதம், பொதிகவியல் இரசாயனவியல் என மூன்று பாடங்களுக்கும் வகுப்பு எடுப்பானா??
தனது நேரம் ஒதுக்கி எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் செய்ய முடியுமா அதை??
வாமதேவன் செய்கிறானாமே!!
"என்னவும்னா தயங்காம கூப்பிடுங்கம்மா.. தம்பிக்காக மட்டும் இல்ல.. இப்ப உங்களுக்காகவு செய்யணும்னே தோணுது" என்றார் கமலம்.
அவரும் பார்க்கிறார் இத்தனை வருடங்களாக. லெக்சரர்மார் காட்டும் மிடுக்கையும் அவர்கள் வாழ்க்கை துணைவிகளின் பந்தாவையும். இயல்பாக இருக்கும் சாத்வியை உள்ளே அழைத்து உட்கார வைத்து பேசும் சாத்வியை அவருக்கு பிடித்துப் போனது.
தம்பி மனசுக்கு ஏத்த மாதிரியே எளிமையான பொண்ணு தான் என அவர் மனதார நினைத்தது அவர் முகத்திலும் பிரதிபலிக்க,
பதிலுக்கு அரிதிலும் அரிதான மிக மெல்லிய புன்னகை சிந்திய சாத்வி, "இருங்க வாரன்.." என ஒரு சில பொருட்களை எழுதி அதற்குரிய பணமும் கொடுத்து, "இத மட்டும் வாங்கி வந்து தாறிங்களா?" எனக் கேட்டாள்.
"சரிம்மா" என எழுந்தார் கமலம்!!
சொன்னது போல மதியம் சாப்பிட வரவில்லை வாமன். கமலத்தை அனுப்பி வாங்கிய பொருட்களை வைத்து சமைத்ததை அவள் மட்டும் சாப்பிட்டு விட்டு ஃபோனுடன் உட்கார்ந்தாள்.
எவ்வளவு நேரம் தான் அதையும் நோண்டுவது? ரூமுக்கு வந்து வாமன் கம்பியூட்டர் சிஸ்டத்தை ஒன் செய்தாள்.
நல்ல காலத்திற்கு பாஸ்வேர்ட் போட்டு இல்லை. உள்ளே நுழைந்து பிக்சர்ஸ் பார்க்க எடுத்தவளுக்கு ஏனோ அவனை கேளாமல் அதை எல்லாம் நோண்டுவதில் தயங்கம் பிறந்தது.
ஏதாவது படம் இருந்தால் பார்க்கலாம் என தேடினாள்.
அதற்கெனவே சில GB இல் தனி ஃபோல்டர் வைத்து இருந்தான். அதை திறந்தால் எல்லாம் காதல் காவியங்கள்.
மொனராகம் முதல் அலைபாயுதே, ஓகே கண்மணி வரை மணிரத்னம் படங்களுக்கே தனி ஃபோல்டர்.
பெரிய காதல் மன்னன் தான்!! என நினைத்தவள் பைலை க்ளோஸ் பண்ணி மெசினை ஷட் டவுன் செய்தாள்.
சாத்விக்கு இந்த காதல் ட்ராமாக்களோடு ஒட்டாது. மர்மம் திகில் அமானுஷ்ய படங்களை ஆர்வமாக பார்ப்பாள். கடைசியாக அவள் ரசித்தது சைக்கோ த்ரில்லர் ராட்சசன் படத்தை தான்.
நான்கு மணி இருக்கும். காலிங் பெல் அடித்தது.
கதவைத் திறக்க வாமனுடன் பிரியா மோகனாவும் கையில் சுமைகளுடன் நின்றனர். இவங்கள எங்க இருந்து கூட்டி வாரார்? என அவள் கதவில் நிற்க,
"சைட் ப்ளீஸ்" என்றதும் விலகி வழி விட்டாள்.
அவர்கள் கையில் இருந்த அத்தனையும் ஹாலில் குடி ஏறின.
சாத்வி நேற்று போட்டுக் கொடுத்தாளே லிஸ்ட், அதை தான் வாங்கி வந்திருக்கிறான்.
வைத்த வேகத்தில் அவர்கள் இறங்க, எங்க போறாங்க எனப் பார்த்தாள். கீழே பாரக்கிங்கில் விட்ட காரில் இருந்து தான் பொருட்களை இறக்கி எடுத்து வருகின்றனர்.
"அதெப்படி கேர்ள்ஸ், ஹெல்ப் வேணும் எண்டு நினச்ச நேரம் வந்து நிக்கிறிங்க.."
"நாங்க கடைக்கு போய்க்கிட்டு இருந்தோ சார்.. அம்மா சாமான் வாங்கி வர சொன்னிச்சு. அப்ப தா நீங்க வாறிங்க.."
பிரியா மோகனா இங்கு இருந்து தான் உதவிக்கு வந்திருக்கிறார்கள் என தெரிந்ததும் ஒரு அப்பாடா உணர்வு அவளை அறியாமலே பிறக்க,
இன்னும் இரண்டு ரவுண்டு பொருட்களுக்காக ஏறி இறங்கி சிறிய மொத்த ஹாலையும் நிறைத்தனர்.
"தாங்க்ஸ் கேர்ள்ஸ்!!"
"என்ன சார் தாங்க்ஸ் எல்லா சொல்லிக்கிட்டு" அவனை அன்பாக ஆட்சேபித்த இரண்டு பேரும் சாத்வியை பார்த்து புன்னகைக்க, அப்போது தான் இவள் ஒருத்தி அங்கே இருப்பது போல அவள் புறம் திரும்பி, "இவங்க தான் நான் சொன்ன..." எனும் போதே,
"ம்ம்.. தெரியும்!! அவங்கட அம்மா வந்து போனவங்க.." என்றாள்.
"ஓ!" என்றவன் அவர்களிடம் "இது.." என்பதற்குள், "தெரியு சார் அம்மா சொன்னிச்சி.." என்றனர் ஹோரசாக.
"ஓகே.. எனக்கு வேல மிச்சம்.." என ரூமுக்கு போக பிரியா மோகனா சாத்வியிடம் விடை பெற்றனர்.
மதியத்துக்கு பிறகு செய்ய எதுவும் இல்லாமல் அலுப்பு பட்ட சாத்விக்கு சாயங்காலம் வேலை அதிகம் இருந்தது.
மார்கெட்டில் இருந்து வந்த பைகளை பிரித்து பொருட்களை தரம் பிரித்து வேறாக்கவே மணி ஆறாகி விட்டது.
"ஹால் கொஞ்சம் ஃப்ரீ ஆகட்டும். நீங்க ஏழு மணிக்கு வாங்க" என அனுப்பி இருந்தான் வாமன் இரட்டையர்களை.
அவன் ரூமில் ஏதோ வேலையாக இருக்க, போட்டதை போட்ட மாதிரி விட்டு இரவு உணவு தயாரிப்பில் இறங்கி விட்டாள் சாத்வி.
பகலும் அவன் சாப்பிடவில்லை. அதனால் ஏதாவது ஸ்பெஷலாக செய்வோம் என யோசித்தவள் ஒரு தடவை, 'கருவாட்டு குழம்பு வச்சி குடுத்தா, தேவன் கண்ண மூடிட்டு சொத்து பேப்பர்லயும் சைன் வைப்பான். அவ்வளவு விருப்பம். அப்பா மாதிரி அவனுக்கு அந்த பழைய விஷயங்கள் புடிப்பு கூட' என்று நந்தினி சொன்னது ஞாபகம் வர அதையே செய்ய நினைத்தாள்.
நெத்திலி கருவாடு சுத்தம் செய்யும் போது காலிங் பெல் அடித்துக் கேட்டது. இவள் போக முன்பே வாமன் கதவு திறந்திருந்தான். பிரியா மோகனா தான் படிக்க வந்திருந்தனர்.
ஹாலில் சாமான் நிறைந்து கிடக்க, "என்ன செய்யலாம்.." என யோசித்தவன், "ஓகே! ஒரு நாள் தானே.. ரூம்லயே இருப்பம்" என அவர்களை அறைக்கு அழைத்துப் போக, விருட் என அவர்களை கடந்து உள்ளே நுழைந்தவள், "கொஞ்சம் வாங்க" என குரல் கொடுத்தாள்.
"என்னையா??!!" என முதல் முதலாக அவள் அழைத்த அதிசயத்தில் அவன் செல்ல,
"இது பெட் ரூம்.. நம்மட பெட் ரூம். இதுக்குள்ள அவங்கள கூப்பிடுவிங்களா??" எனக் காரமாக கேட்டாள்.
புருவங்கள் மேலேற அவளையே பார்த்தவன், "இது பெட் ரூம் தான். ஆனா நம்மட பெட் ரூம் இல்ல. என்ன தான் நேற்று தள்ளி விட்டிங்களே.." சந்தர்ப்பம் பார்த்து நறுக்கென் அவனும் கேட்டு விட்டான்.
முகம் சுருங்கியது சாத்விக்கு.
அடுத்த நொடியே, "அது நேத்து. இண்டைக்கு இது நம்மட பெட் ரூம் தான். இதுக்குள்ள வேற ஆக்கள எடுக்க கூடாது நீங்க.." என்றாள் உத்தரவாக.
வளரும்...
-ஆதுரியாழ் ❤️

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..