நின்னையல்லால் - 06
தாலி கட்டி முடிந்ததும் ஏனைய சடங்குகளும் வரிசையாக நடந்தேறின. பெரியவர்களிடம் மணமக்கள் ஆசீர்வாதம் வாங்கினர். செல்லம்மா கண்களில் கண்ணீர் வழிந்தது. இருவரையும் ஆசீர்வதித்து பேத்தியை அணைத்து உச்சி மோர்ந்தார்.
"பிள்ளட முகத்தில சிரிப்பில்லயே..."
"பிள்ளைக்கு அப்பா அம்மா இல்லையாம். அம்மம்மா தான் வளர்த்ததாம்.."
"சித்தி சித்தப்பா தான் ஆதரவாம்"
"இருந்தாலும் கொஞ்சம் சிரிக்கலாம்.."
"பாவம் அதுட மனசுல என்ன வருத்தமோ.."
"அதுக்கு முகத்தை இப்டியா வச்சிருக்கிற.. பெடியன்ர முகம் செஞ்செழிப்பா இருக்கு.."
"அது தான். முதல் மாதிரியா இப்ப? சுத்தி போட்டோ வீடியோ ஓடுது.. நாளைக்கு அதுகள பாக்குற நேரம் நம்மட முகம் இப்டி இருக்கே எண்டு பொண் தான் கவல படுவா.."
சனம் பேசிக் கொண்டதை கேட்டு புனிதா வந்து சாத்வியை அணைத்து, "சிரிச்ச மாதிரி இரு சாத்வி" என காதைக் கடித்தாள்.
சாத்விக்கு பொய்யாக சிரிக்க வரவில்லை. வாமனின் அருகாமை, விரல் கோர்த்து அக்கினி வலம் வந்து, கால் விரலில் மெட்டி அணிந்து, மஞ்சள் தண்ணீரில் மோதிரம் தேடி விரலின் அணிந்து என அவனை ஸ்பரிசித்ததும், ஒவ்வொரு அசைவுக்கும் அவனுடன் இசைய வேண்டி குவித்த கவனமும் அவளை இயல்பாக இருக்க விடவில்லை.
சாத்வி பொதுவாகவே சிரிக்க மாட்டாள். எப்போதும் ஒரு தீவிரம் தெரியும் வதனத்தில். இந்த சூழலில் அவளுக்கு கிச்சு கிச்சு மூட்டினாலும் சிரிப்பு வருவது சிரமமே. பதிலுக்கு பளார் என கன்னத்தில் ஒன்று தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சடங்குகள் முடிந்ததும் கோயிலில் இருந்து வரவேற்பிற்காக மண்டபத்திற்கு அழைத்து சென்றனர் மணமக்களை. காரில் வரும் போது வாமனுக்கு அலைபேசி அழைப்புகள் அடுத்தடுத்து வந்தன. யார் யாரோ வாழ்த்து தெரிவித்தனர். அனைவருக்கும் பதில் அளித்தான். தமிழ், ஆங்கிலம், சிங்களம் என சரளமாக பேசினான்.
ஹால் சென்றதும் சாத்விக்கு புடவை மாற்றி விட்டனர். எளிமையாக திருமணத்தை முடிப்போம் என்றது கோயில் வரை மட்டும் தானோ என்பது போல வரவேற்பு வெகு சிறப்பாக நடந்தது.
இரண்டு பக்கங்களிலும் பத்திரிகை வைத்து அழைத்த விருந்தினர் குறைவு என்பதால் இரண்டு மணிக்கு எல்லாம் விருந்தினர் ஓய்ந்தனர்.
சாப்பிட சொல்லி இருவருக்கும் பிரியாணி தட்டும் கொக்ககோலாவும் கொடுக்க, சாத்விக்கு அதுவரை தெரியவில்லை. பிரியாணி வாசம் அவள் பசியை உணர வைத்தது.
தட்டை முடித்து அவள் நிமிர வாமன் அவன் அக்காவுடன் பேசிக் கொண்டிருந்தான். தட்டில் அவன் இன்னும் கை வைக்கவே இல்லை.
ஏதோ பெரிய விவாதம் போனது. "அப்பாவோட நான் கதைக்கிறன் கூப்பிடுங்க" என எழுந்து சென்றான்.
தள்ளி நின்றிருந்த புனிதா அருகில் வந்து, "என்ன சாத்வி, ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு வாய் தீத்திக் கொள்ளாட்டியும் பரவாயில்ல. அவரையும் பாத்து சாப்பிட்டு இருக்கலாம்.. அவர் இன்னும் சாப்பிட இல்ல"
"எனக்கு பசி சித்தி.." என்றவள் கொக்ககோலாவை உறுஞ்ச,
திரும்பி வந்தவன் "சாப்பிட்டிங்களா? சொரி! ஒரு சின்ன கன்ஃபியூஷன்" என அமர்ந்தான்.
'என்ன குழப்பம்?' என கேட்க தோன்றியது. அதற்குள் அவருடன் அவ்வளவு நெருக்கம் ஆகி விட்டாயா? என அவள் மனமே கேள்வி கேட்க பேசாமல் டிஷ்ஷூவால் இதழை ஒற்றினாள்.
அது என்ன குழப்பம் என்றால், திருமணம் நடத்துவது பெண் வீட்டு பொறுப்பு. அநேகமாக அவர்கள் ஊரில் அவர்கள் வீட்டிலேயே நடக்கும். இங்கே செல்லம்மா ஆச்சிக்கு உதவி இல்லை என்ற காரணத்தை முன்வைத்து, மாப்பிள்ளை ஊருக்கும் பெண் ஊருக்கும் பொதுவில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலிலில் திருமணத்தை முடித்து அந்த நகரிலேயே மண்டபத்தையும் புக் செய்வோம் என தீர்மானித்து இருந்தார் மாப்பிள்ளையின் தகப்பன் நடராசா.
வரவேற்பு முடிந்ததும் பெண் மாப்பிள்ளை எங்கே செல்வது என்ற கேள்வியே இப்போது எழுகிறது.
பெண் வீட்டுக்கு வருவது தானே முறை என்பதால் செல்லம்மா ஆச்சி அதை தனியாக கேட்டு பேசிக் கொள்ளவில்லை. இப்போது என்னடா என்றால், வாமனின் தகப்பனார் மகனையும் மருமகளையும் தங்கள் வீட்டுக்கு கூட்டி போவதாக கேட்டதும் ஆச்சிக்கு குழம்பம்.
அவர் "புள்ள விளக்கு ஏத்தினதும் அனுப்பி வைக்கணும் தம்பி! பொண் மாப்பிள்ள அங்க வாறது தானே முற. நாலாம் நாள் கால் மாறி வரட்டுமே மாப்பிள்ள வீட்ட" என்றதற்கு நடராசா மனமாக ஒப்பவில்லை.
இறுதியில் வாமனே தலையிட்டு சாத்விஹாசினி வீட்டிற்கே செல்கிறோம் என்றதும் குழப்பம் நீங்கியது.
மண்டபத்திலேயே சட்டபூர்வமான திருமணப் பதிவையும் முடித்துக் கொண்டு வாமன் வீட்டிற்கு புறப்பட்டனர். சாத்வியை பூஜை அறையில் விளக்கு ஏற்ற வைத்து மாலை தேநீர் உபசரணையுடன் மகனை மருமகள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்கள் ஊர் வந்து சேரவே இருட்டி விட்டது. வேனில் இருந்து இறங்கிய சாத்வி, தனது அறைக்கு வந்து புடவையை தளர்த்தி பாத்ரூம் சென்ற பிறகே சுகமாக சுவாசித்தாள்.
நகைகளை துறந்து, தலை அலங்காரத்தை கலைத்து சட்டையை அணிய கதவு தட்டும் சத்தம் கேட்டது.
"என்ன சித்தி?"
"என்ன சாத்வி இது!! அவர் வெளியில இருக்கார் நீ பாட்டுக்கு உள்ளுக்கு வந்து கதவ அடிச்சிட்டு இருக்க??"
"சித்தி... உடுப்பு மாத்தினன்.."
"சரி! அவர கூப்பிடு.. என்ன வேணும் எண்டு கேளு.. அவருக்கும் உடம்பு அலுப்பு இருக்கும் தானே!"
"ம்ம்"
புதியவனை தன் வீட்டில் ஒரு அங்கத்தவனாகவே இன்னும் ஏற்கவில்லை மனம். அதற்குள் அவனை தனது அறைக்குள் அனுமதிக்க வேண்டுமா!!
சாத்வி மூச்சை இழுத்து விட்டாள். நெஞ்சில் உருத்தும் புத்தம் புது தாலிக் கொடி அவனை உள்ளே எடுக்கத் தான் வேண்டும் என்றது.
யார் அவர்? காலையில் இதை கழுத்தில் பூட்டினால் உடனே மனசு முழுக்கவும் உடம்பில் பாதியுமாக ஏற்க வேண்டுமோ அவரை??!!!
"சாத்வீவீ!!" புனிதா மீண்டும் கதவை தட்ட வெளியே வந்த சாத்வி வாமனை தேடிச் சென்றாள்.
வெளியே விறாந்தையில் அமர்ந்து ஃபோன் பேசிக் கொண்டிருந்தான். சாத்வியை கண்டு விட்டு 'என்ன?' என இயல்பாக புருவம் உயர்த்தினான்.
அந்த பாவனை இவளுள் ஏதோ செய்ய,
என்னமோ ஆண்டாண்டு காலமாக ஒட்டி உறவாடியது போல பார்வையாலயே விசாரிக்கிறார்!!? என்று எரிச்சலை கூட்டி அந்த உணர்வை புறம் தள்ளியவள், 'ஒன்றும் இல்லை' என தலையை ஆட்ட கதிரையில் இருந்து எழுந்தான்.
வரவேற்புக்கு அணிந்திருந்த கோட் சூட்டில், கோட்டை அவன் வீட்டில் வைத்தே கழட்டி விட்டான். இப்போது கழுத்து பட்டியை தளர்த்தி சட்டையின் முதல் இரண்டு பட்டன்களையும் திறந்து விடடிருந்தான்.
புழுக்கம் போல.. வந்த உடனே ஆடை மாற்றிய பிறகு தானே உனக்கு மூச்சே வந்தது. அது போல தான் எல்லாருக்கும் இருக்கும்....
அவன் அமர்ந்திருந்த இரட்டைக் கதிரையில் வைத்திருந்த சிறிய அளவிலான லக்கேஜை அவள் எடுக்கப் போக, "வெயிட்!" என அவளை தடுத்தவன் அவனே அதை தூக்கிக் கொண்டான்.
கூப்பிட தான் வந்திருக்கிறாள் என்று புரிந்து விட்டது போல..
காதில் வைத்த கைபேசியுடன் சாத்வி பின்னால் தொடர்ந்தான்.
கதவை திறந்து அவனை உள்ளே விட்டவள், "இது பாத்ரூம்" என அறையுடனே இணைந்திருந்த குளியலறையை காட்டினாள்.
"இதுல வையுங்க" என லக்கேஜை வைக்க தனது லாப்டாப் மேசையை ஒதுக்கிக் கொடுத்தாள்.
ஃபோன் பேசிக் கொண்டே தனது பெட்டியை திறந்தவன் எதையோ தேடினான். இனி தனக்கு இங்கே வேலை இல்லை என்பது போல சாத்வி வெளியே செல்ல எடுக்க, "ஹாசினி!!" என அழைத்தான்.
நின்ற சாத்வி அவனை திரும்பி பார்க்க, "என்ர மொபைல் சார்ஜர அக்கா வைக்கல்ல போல.. இங்க சார்ஜர் எடுக்கலாமா..?" எனக் கேட்டான்.
அவனுடையது ஐ ஃபோன் போல் தெரிந்தது. அவளுடையது சம்சங் கலெக்ஸி. இங்கே எங்கே போய் அவள் ஐபோன் சார்ஜர் தேட??
ஆனால், அதை விடவும் அவன் அவளை ஹாசினி என கூப்பிட்டது தான் மூளையை உறுத்த, சாத்வி பதில் சொல்லாம் நின்றாள்.
"என்ன, கேக்க கூடாத எதையாவது கேட்டுட்டனா?" வாமன் பல் வரிசை தெரியாமல் சிரித்தான்.
மீசை உரசிய மேல் உதடும், அதன் கீழ் உதடும் பிரியாது பற்கள் தெரியாது விரியும் வசீகரமான புன்னகை அது. முதல் முதலில் கோயிலில் பார்க்கும் போதும் இப்படித் தான் புன்னகைத்தான்.
எப்படி இப்படி நன்கு பழகிய பந்தம் போல நடக்க முடிகிறது!!
சாத்விக்கு அவனுடைய ஒவ்வொரு அசைவுமே அதிசயமாய் இருந்தது.
அவளைப் போல அவன் அவளை முன் பின் தெரியாத ஒருத்தியாக பார்க்கவில்லையா? இயல்பாக சிரிக்கிறான் இயல்பாக கதைக்கிறான்.. எப்படி இதூ சாத்தியம்?
பிரஷாந்தியுடனான காதல் முறிவையும் இப்படி தான் 'ஜஸ்ட் லைக் தட்' என கடந்திருப்பானோ..??
"ஹாசினி!"
"அது ஐ ஃபோன் தானே?"
"யாஹ்!!"
"எங்கிட வீட்ட இல்ல.. நான் சித்திட்ட சொல்லி வேற யாருட்டயும் கேக்க சொல்றன்"
"ப்ளீஸ்!!" அழகாக கெஞ்சினான். புன்னகையுடனே பையில் இருந்து டவல் எடுத்து தோளில் போட்டுக் கொண்டான்.
சாத்வி வெளியே வந்தாள்.
செல்லம்மா வீட்டுக்கு வந்த சொந்த காரர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அக்ஷசி நம்சி அவர்கள் வயதுப் பிள்ளைகளுடன் வேர்க்க விறுவிறுக்க விளையாடிக் கொண்டிருந்தனர்.
இரவு சாப்பாட்டிற்காக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த புனிதாவிடம் போய் ஆப்பிள் ஃபோன் சார்ஜர் கேட்டாள் சாத்வி.
"இங்கால ஆருட்ட சாத்வி ஐஃபோன் இருக்கும்?"
"இருக்கும் சித்தி. இப்பெல்லாம் அதுவும் மலிஞ்சி போயிருக்கு. பக்கத்தில எங்கையும் கேட்டுப் பாருங்களன்.."
"சரி! இந்த கறிய பாரு வாறன் நான்" என சென்றவள் தேடிப் பிடித்து யாரிடமோ வாங்கிக் கொண்டு தான் திரும்பி வந்தாள்.
சாத்வி சார்ஜருடன் சென்று கதவை தட்ட, "யெஸ், கம்" என குரல் தந்தான் வாமன். குளித்து உடை மாற்றி தலை துவட்டிக் கொண்டிருந்தான்.
உள் நுழைந்தவள் நாசியை பழக்கம் இல்லாத புது வித வாசனை தீண்டியது.
சோப் மணமா? பர்ஃபுயுமா?
"சார்ஜர் கிடைச்சிதா ஹாசினி??"
என்ன இது!! எங்க இருந்து இந்த ஹாசினியை பிடித்தார்??
"ம்ம்.." என கையில் இருந்த வெள்ளை வயர் சுற்றை மேசையில் வைத்தவள் வைத்த வேகத்தில் வெளியே வந்தாள்.
"சாத்வி! அவருக்கு குடிக்க என்னவும் வேணுமா எண்டு கேளு"
"சாப்பிடுற நேரத்தில என்ன குடிக்கிற?"
"தண்ணியாவது வேணுமா எண்டு கேளன"
"இப்ப தண்ணி குடிச்சா சரியா சாப்பிட ஏலாம இருக்கும்.."
தன்னுடன் வந்து நிற்பவளை வாமனிடம் அனுப்ப சாடை மாடையாக புனிதா செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. அக்கா மகள் குணம் தெரிந்தவள், எப்படியும் இரவில் இருவரும் ஒரு அறையில் பூட்டிக் கொண்டு இருந்தாக வேண்டும் தானே என விட்டு வேலையை பார்த்தாள்.
வந்தவர்களை கவனித்து சமையலை முடிக்க இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது.
"இப்பவாவது அவர போய் கூட்டி வா"
மறுபடியும் கதவை தட்டிவிட்டு சென்றவள் சாப்பிட கூப்பிட்டாள். வந்தவனை உட்கார வைத்து பரிமாற வெளிக்கிட, "நீங்களும் இருங்க" என அவளையும், அக்ஷசி நம்சியையும் அமர வைத்தான்.
சாத்விக்கு பகலை போல இரவு உணவு இறங்கவில்லை. ஏதோ தொண்டையில் அடைத்தது போல கடினப் பட்டே விழுங்கினாள்.
வாமன் திருப்தியாகவே சாப்பிட்டான்.
"நல்லா இருக்கா தம்பி?" என அவனுக்கு சுவை பிடித்திருக்கிறதோ இல்லையோ என தயக்கத்துடன் பரிமாறிய புனிதாவை, "நல்லாருக்கு.. இந்த சிக்கன் க்ரேவி ஹோட்டல் டேஸ்ல ஸ்பெஷல்ல இருக்கு.. நீங்களா குக்" என புகழ்ந்து மகிழ வைத்தான்.
கை கழுவியதும் அவன் விறாந்தையில் சென்று காற்றாட அமர, அக்ஷசி நம்சியும் அவனுடனே உட்கார்ந்து வாயடித்தனர். அவனுடன் ஒட்டிக் கொண்டனர்.
சாத்வி அறைக்கு வந்து முகம் கழுவி உடல் சுத்தம் செய்து படுக்கையில் அமர்ந்தாள். அறை முழுவதும் ஆண் வாசம் வீசியது. திறந்து கிடந்த வாமனுடைய லக்கேஜ், அதில் கழட்டி போட்ட அவனுடைய ஆடைகள், விரித்திருந்த ஈர டவல், ஏதோ இந்த அறையே அவனுடையது தான் என்பது போல தோற்றம் காட்டியது.
நேற்றைய இரவுக்கும் இன்றைக்கும் எவ்வளவு தூரம்???!!!
மணிக் கூடு பத்து மணியை தொடும் போது வாமனின் அலைபேசி சிணுங்கியது. இதை எடுத்துச் சென்று கொடுக்க வேண்டுமா? என சாத்வி யோசிக்கையில், "ஓகே!! குட் நைட் ஏஞ்சல்ஸ்!!" என வெளியே சொல்வது கேட்டது.
"குட் நைட் அத்தான்!"
"குட் நைட் அத்தான்!"
சின்னக் குரல்களும் பதிலுக்கு கூவின.
அக்ஷசி நம்சியை வசியம் செய்து விட்டான். ஒரே ஒரு அக்காவை அவர்கள் இத்துணை கொண்டாடியதில்லை!!
சாத்வி வித்தியாசமான உணர்வலைகளில் அலைப்புற்றிருக்க, அறையில் நுழைந்த வாமன் அவளை பார்த்துக் கொண்டே தனது அலைபேசியை எடுத்தான்.
எதிர் முனையில் அவன் பிறந்த வீடு போல. சில நிமிடங்கள் பேசி விட்டு வைத்தவன், "ஹாசினி! டோர் லொக் பண்ணுவமா?" என கேட்க அவனை பார்த்தாள்.
அவள் அவனை முறைப்பது பச்சையாக தெரிந்தது!!
வளரும்...
-ஆதுரியாழ் ❤️

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..