நின்னையல்லால் - 08
காதல்!!
இந்த உணர்வு பற்றிய உங்கள் கருத்தென்ன?
அது அழகானது.. பரிசுத்தமானது.. உண்மையானது.. காதல் என்றால் தெய்வீகம்.. பாசம்.. அன்பு.. அக்கறை.. இப்படி பலவிதமாக சொல்லலாம்...
ஏன், காமம் கலந்ததே காதல் என்றும் ஆய்ந்து கருத்து பேசலாம்..
ஆனால் சாத்விஹாசினியின் ஏட்டில் காதல் என்பது உடலில் உண்டாகும் ஹோர்மோன் கோளாறு...
மனிதவுடல் இனப்பெருக்கம் செய்யக் கூடிய வளர்ச்சி கட்டத்தை அடைந்ததும், தனக்கு ஒரு இணையை தேடுவதும், மனம் அதன் பின்னால் அத்து விட்ட நாய் குட்டி போல அலைவதுமே காதல் என்பாள்.
கல்யாணத்துக்கு முன் கட்டுப்பாடுகள் இன்றி ஆண் பெண் காதல் எனும் பெயரில் பழகுவதை அவள் அசிங்கமாக பார்க்கிறாள்.
ஏன்? எப்படி அப்படி சொல்லலாம் என்று கேட்டால் அதற்கு பதில் அவளிடம் தான் உண்டு.
"லவ் பண்ணி இருக்கிங்களா?" என வாமன் கேட்டதும் அவள் வெடுக்கென திரும்பியதில் லெக்சர் லேசாக பயந்து போனார்.
அவ்வளவு மோசமான கேள்வியா கேட்டோம் எனும்படி இருட்டில் தெரிந்த அவள் விழிகளையே அவன் பார்க்க,
திரும்பிய வேகத்தில் அவனை உரசும் நெருக்கத்தில் வந்து விட்ட சாத்வி, எழுந்து அமர்ந்தாள் சுவரை ஒட்டி.
வாமனுக்கு மெய்யாகவே பயம் வந்தது, அவளை சந்தேக படுவதாக எடுத்து விட்டாளோ என்று.
"என்ன கேட்ட நீங்க.. லவ் பண்ணி இருக்கனா எண்டா??"
"லவ் எண்டா என்ன? கேர்ள்ஸூம் போயிஸும் கல்யாணத்துக்கு முதல் பாக்குறது கதைக்கிறது பழகுறது. இதுகள தானே நீங்க லவ் என்றிங்க.. அந்த அசிங்கங்கள நான் செய்ததில்ல.. என்ர டிக்ஷனரில அதுக்கு பேர் லஸ்ட்..!!" என்றாள்.
ஓஹோ என்பது போல வாமன் அமைதியாக இருக்க,
"வேறேதாவது கேக்கணுமா??" என்றாள்.
"நோ! நத்திங்.."
எட்டி மேசையில் இருந்த செம்பெடுத்து நீர் பருகியவள் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள்.
தலையணையில் தலை வைத்த வாமனுக்கு ட்ரான்ஸ்போமரை தொட்டு விட்ட அதிர்ச்சி!!
இளம் சிவப்பு பட்டுச் சுடிதாரில், கண் அங்கே இங்கே அலையாமல் குனிந்த தலையாக மண்ணுக்கு வலிக்காமல் பாதம் வைத்து கோயில் வலம் வந்த சாத்விகமான பெண் அவன் கண்ணில் வந்து போனது.
'ஷீ ஷுட் நொட் பி எ டிஃபிகல்ட் வைஃப்' என மனதில் சொல்லிக் கொண்டான்.
காலையில் சாத்வி கண் விழிக்கும் போது நேரம் ஏழு இருக்கும்!!
இரவு உறக்கம் தாமதமானதால் விடிந்த பிறகே தூங்கி இருந்தவளுக்கு விழிப்பு தாமதமாகிவிட்டது.
சாதாரணமாக ஆறு மணிக்கு மேல் அவள் எழவில்லை என்றால் செல்லம்மா கதவை தட்டி எழுப்பி விடுவார்.
இன்று என்ன ஆனது அம்மம்மாவுக்கு என்ற யோசனையுடனே எழுந்தவள் காலை கடன் முடித்து குளித்து வெளியே வந்தாள்.
வீடு அமைதியாக இருக்க, வாசல் எல்லாம் கூட்டிப் பெருக்கி சுத்தமாய் இருந்தது.
பொதுவாக வீட்டில் சகல வேலைகளும் சாத்விதான் செய்வாள். செல்லம்மாக்கு ஒரு சின்ன வேலை வைக்க மாட்டாள். வெளியே கடைக்கு சந்திக்கு சென்று வருவது மாத்திரமே அவர் பொறுப்பு.
இவள் புதுப் பெண் என்பதால் சித்தியே இரண்டு வீட்டுக்கும் சேர்த்து வேலை பார்த்து விட்டதோ என நினைத்தவளுக்கு அவள் புதுப் பெண் என்றால் அவளை கட்டி ஒருவன் புது மாப்பிள்ளையாக வந்தானே.. அவன் எங்கே?? என்ற கேள்வி வந்தது.
அது தானே.. வாமன் எங்கே?
எட்டி மேசையை பார்த்தாள். லக்கேஜ் இருந்தது. இரவு போலவே அது திறந்து கிடக்க, ஆடைகளும் கலைந்து கிடந்தன.
எல்லாம் கலச்சி போட்டுட்டு எங்க பொயிட்டார் இவர்??
சார்ஜர் தேடி போயிருப்பாரோ??
சாத்விக்கு தேநீர் தாகம் எடுத்தது. சமையல் கட்டுக்கு வந்து அடுப்பில் தண்ணி போட எடுக்க ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தேநீர் சூடு அடங்கி ஜக்கில் மூடி இருந்தது.
தண்ணியை இறக்கி விட்டு அதை சூடாக்கினாள். இருவருக்கு அளவான தேநீரை தனது கோப்பையிலும் மிகுதியை இன்னும் ஒரு கோப்பையிலும் ஊற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.
எட்டு மணி வெயில் சுள்ளென அடிக்க,
"ஹே.. ஹே.. ஜாலி ஜாலி..."
"அத்தா! எனக்கு போடுங்க.. எனக்கு போடுங்க"
"இல்லத்தா எனக்கு எனக்கு"
"ஏஞ்சல்ஸ் சண்ட பிடிக்க கூடாது.. போல் (ball) ரொட்டேஷன்ல வரும்"
அக்ஷி நம்சி கூச்சலும் வாமனின் குரலும் கேட்டது.
என்ன நடக்கிறது?
தேநீர் கோப்பைகளுடன் புனிதா வீட்டிற்கு சாத்வி செல்ல, அங்கே வராண்டாவில் சில நெருங்கிய சொந்தங்களுடன் கதைத்துக் கொண்டிருந்தார் செல்லம்மா.
அவர்கள் கண்ணில் பட்டு வாயில் விழ விரும்பாது பக்க கதவால் இவள் ஹால் நுழைந்தாள். புனிதா கல்யாணத்துக்கு உடுத்தி அவிழ்த்த புடவையை மடித்துக் கொண்டிருந்தாள்.
"சித்தி, அக்ஷசி நம்சி எங்க?"
"வா சாத்வி.. இப்ப தான் விடிஞ்சிதா?" புனிதா கிண்டலாக கேட்க, சாத்விக்கு சங்கடம்.
"எழுப்பி இருக்கலாம் தானே!"
"நான் என்ன செய்ய, உங்கட அவர் தான் ஹாசினி தூங்குறா எழுப்ப வேணாம் எண்டார். இல்லாட்டி அம்மா உன்ன எழுப்பாம இருக்குறதா இவ்ளோ நேரத்துக்கு??"
அதுவும் சரிதான்.. இவர் ஏன் அப்படி சொன்னார்!!
"அத்தா, இன்னம் தண்ணி ஊத்துவம்.. குறையுது பாருங்க.." நம்சியின் ஸ்பீக்கர் குரல் கேட்டது!!
சாத்வி சமையலறை வெளிக்கதவால் எட்டிப் பார்த்தாள். கிணற்றடியில் கேட்டது அவர்கள் சத்தம்!! ஓலைக் கிடுகு வேலி மறைத்தது அவர்களை.
"கிண்ணத்தடில என்ன செய்றாங்க சித்தி?"
"நீயே போய் பாரன், ரெண்டு பொட்டயளும் அத்தான் காரரோட சேர்ந்து போடுற ஆட்டத்த.."
சாத்வி கையில் இருந்த கோப்பைகளை சமையல் கட்டில் வைத்து விட்டு கிணற்றடிக்கு இறங்கினாள்.
புனிதா வீட்டு கிணற்றடியை மறைத்து கட்டிய வேலிக்கு அந்த பக்கம் பெரிய பரப்பில் இடம் உண்டு. அந்தக் காலத்தில் செல்லம்மாவின் வாழ்வாதாரமாக வீட்டுத் தோட்ட பயிர் செய்கை இருந்தது. அதற்காக போட்ட கிணறும் அகலத் தொட்டியுமே அங்கே உண்டு. பிற்காலத்தில் பயிர் செய்கையை கை விட்டாலும் கிணறு பாவனையில் உள்ளது. அதை ஒட்டிய தொட்டிக்குத்தான் வேலை அற்றுப் போனது.
இப்போது அந்த தொட்டியில் நீர் நிறைந்து தழும்ப, அவளை கட்டி அந்த வீட்டுக்கு நேற்று மாலை வந்திறங்கிய வாமதேவன், அவளுடைய அக்கா மக்களுடன் பந்து எறிந்து விளையாடுகிறான் அதில்.
அக்க்ஷிதாக்கு நெஞ்சளவிலும் நம்சிக்கு தோள் அளவிலும் நீர் மட்டம் இருக்க, வாமனுக்கு மார்பளவில் நின்றது.
உள்ளே உட்கார்ந்தா இருக்கிறார் இவர்?!!!
கிணற்றை சுற்றிய இதரை வாழை மரங்களோடு சாத்வி நின்றிருக்க, அவளை கண்டு விட்ட சின்ன வாண்டு நம்சி, "ஐஐ!! அக்காவும் வந்துட்டா.." என கூவினாள்.
அவள் கூச்சலில் வாமன் திரும்பி பார்த்தான்.
"அக்கா! வாங்க வக்குல குளிப்பம்! குளிச்சிட்டே விளையாடலாம் வாங்க!! அத்தா, அக்காவையும் விளையாட்டுல சேப்பம்" பரிந்துரைத்தது பெரிய வாண்டு அக்ஷி.
தனது கைக்கு வந்திருந்த பந்தை மாற்றி விடாமல் அவளைப் பார்த்தவன்,
"வாறிங்களா ஹாசினி??" எனக் கேட்க, அவன் முகத்தில் அடித்தது போல அத்துணை தடிப்பாக இரவு பேசியது தான் நினைவு வந்தது சாத்விக்கு.
"வாங்க அக்கா.."
"வாங்க அக்கா.."
இரண்டும் சேர்ந்து அவளையும் அந்த தொட்டிக்குள் இறக்கும் தீவிரத்தில் கூச்சல் போட,
"ஏஞ்சல்ஸ்! உங்கட அக்கா வர மாட்டா.. அவைக்கு என்ன போல தண்ணிக்குள்ள நீல் டவுண் பண்ணி இருக்கிறது கஸ்டம். நாங்க ஃப்யூச்சர்ல இத விட பெரிய தொட்டி கட்டுவம். அதுல அக்கா வருவா"
"ஸிவிமிங் பூல் கட்டுவம் அத்தா"
"ஓம் டார்லிங்.. கட்டுவம்..."
"ஹே... ஜாலி ஜாலி.. நம்சி, நீ நீச்சல் குளம் பாத்திருக்கியா டிவில.. பெருசா இருக்கும். அத தான் சொல்றார் அத்தான்"
"அப்ப அதுல அக்கா அம்மா அப்பா அம்மம்மா எல்லாரும் விளையாடலாம் என அத்தான்"
"ஓம் டா.. குடும்பமா குளிக்கலாம்.. இப்போதைக்கு நாங்க மட்டும் என்ஜோய் பண்ணுவம்"
பந்தை தூக்கி போட்டான். அதை அக்ஷி பிடித்து நம்சிக்கு மாற்ற அவள் அவர்களின் அத்தானுக்கு எறிந்தாள்.
அவ்வளவு தான் அவர்கள் இவளை மறந்து போயினர்.
இதிலேயே நின்று அவன் வெற்றுத் தோளையும் சிரிப்பையும் பார்க்க முடியாது உள்ளே வந்தாள் சாத்வி.
"அந்த வக்கு ( தொட்டி) எவ்வளவு காலம் பாவிச்சது. ஊத்தயா (அழுக்கு) கிடந்தது. இப்டி அதுல தண்ணிய நிரப்பி குளிக்கிறாங்க.."
"அதெல்லாம் கழுவிக் கிழுவி க்ளீன் பண்ணிட்டாங்க சாத்வி"
"யாரு க்ளீன் பண்ணின சித்தி?"
"வேற யாரு, அவங்க மூண்டு பேரும் தான். அத ஏன் கேக்குறாய் சாத்வி, உன்ர அவர் நாலு மணிக்கு எல்லாம் எழும்பிட்டார்.." என காலைக் கதையை சொன்னாள் புனிதா.
விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து விட்டான் வாமன். வாசல் பெருக்கிக் கொண்டிருந்த புனிதாவிடம், 'கொஞ்ச தூரம் நடந்துட்டு வாரன்' என காதில் ஹெட் செட் அடித்துக் கொண்டு கேட்டை திறந்து கிளம்ப எடுக்க,
புதிய ஊர்.. தெரியாத வீதி.. தெரு நாய்கள் வேறு.. என தயங்கிய புனிதா,
'இருங்க தம்பி, ஆறு மணியாவது ஆகட்டும்.. வெளிச்சம் வரட்டும்' என அவனை இருக்க வைத்து, தேநீர் கொடுத்தாள்.
சிரித்தவன், 'ஒரு நட நடந்துட்டு வந்து குடிப்பம் எண்டு பாத்தன்.. பரவால்ல' என அந்த இரண்டு வீட்டையும் சுற்றி வந்து பருகினான்.
ஹாலில் படுத்திருந்த இரண்டு பிள்ளைகளும் அவன் சத்தத்தில் எழுந்து விட, அவனுடன் சேர்ந்து அவர்களும் நடக்க கிளம்பினர்.
வியர்த்து வீடு திரும்பியவர்கள், தெரு முனை வரை வாக்கிங் சென்றதை புனிதாவிடம் பீத்திக் கொண்டனர்.
எல்லா வேலைகளையும் முடித்த புனிதா சாத்வியை எழுப்ப போக,
'ஹாசினி தூங்குறா.. நைட் படுக்க லேட்டாகிட்டுது.. எழும்புற நேரம் எழும்பட்டும் விடுங்க' என்று விட்டான்.
புனிதா சிரித்துக் கொண்டே சரி என்று விட, செல்லம்மாக்கும் அதில் ஆட்சேபனை இருக்கவில்லை.
வராண்டாவில் உட்கார்ந்து கதை பேசியவர்களை, 'குளிச்சிட்டு வாங்க மகள்' என புனிதா விரட்டினாள்.
'எங்களுக்கு கிணத்துல குளிக்க ஏலாது' என முரண்டியது சின்ன இரண்டும்.
'ஏன் ஏஞ்சல்ஸ்?'
'தம்பி! அவளுகளுக்கு குளிக்க கள்ளம். விடுங்க நான் குளிக்க வாத்து கூட்டி வாரன்' புனிதா கூப்பிட,
'ஏன்? என்ன பிரச்சினை ஏஞ்சல்ஸ் குளிக்கிறதுல.. ஏர்லி மோர்னிங் எழும்பின உடனே ப்ரஷ் பண்ணிட்டு குளிக்கணும். அதுக்கு பிறகு தான் அடுத்த வேலை. அது தான் நல்ல பழக்கம்'
'எங்களுக்கு கிண்ணத்தில குளிக்க அலுப்பு அத்தான்'
'ஆ.. அப்ப மஹா ராணிகளுக்கு எங்க குளிக்கணுமாம்?' தாய் இடக்காக கேட்க,
சிரித்த வாமன், 'குளிக்கிற இடத்தில சேஞ்ச் கேக்குறாங்க.. பாத்ரூம்ல குளிக்கட்டுமே..'
'அது எங்கிட வீட்ட இன்னம் கட்டல்ல அத்தான்..'
'சரி இங்க உங்க அக்காட ரூம்ல இருக்கே??'
'இல்ல தம்பி.. பிறகு பழகிருவாங்க.. ஒவ்வொரு நாளும் கேப்பாங்க'
'அதுக்கு என்ன, இங்கயே குளிக்கட்டும்..'
அவன் இத்துணை தூரம் தங்களுக்காக சலுகை தர, தங்களை இளவரசிகளாகவே உணர்ந்த அக்ஷி நம்சி,
'அத்தான் அத்தான்.. பாத்ரூம் எல்லாம் வேணாம்.. வக்கு இருக்கு எங்கட வீட்ட. அதுல குளிச்சா சூப்பரா இருக்கும்..' என குதித்தனர் தங்கள் நெடுநாள் கனவை அவனை வைத்து நிறைவேற்றும் பொருட்டு.
'யா.. நைஸ் ஐடியா!! எங்க இருக்கு அது.. காட்டுங்க'
"அவங்க மூண்டு பேரும் தான் வக்க துப்பரவாக்கி கழுவி தண்ணி ஏத்தி.. எல்லாம் செய்த.. ஆறு மணிக்கு தொடங்கின ஆட்டம் இன்னும் முடியல.."
சாத்வி அவர்கள் கூச்சலை கேட்டுக் கொண்டே டீ பருகினாள். சற்று நேரத்திலேயே பிள்ளைகள் கெஞ்சலும் வாமன் மறுப்பும் ஒலித்தது.
"போதும் ஏஞ்சல்ஸ்! டைம் அப். இன்னொரு நாள் பாப்பம்" நீண்ட நேரம் ஊறினால் சின்னவர்கள் உடலுக்கு இயலாமல் போகலாம் என இருவரையும் தூக்கி கீழே விட்டிருந்தான்.
எப்போது வெளியேறுவார்கள் என காத்திருந்த புனிதா, சாத்வியையும் அழைத்து சென்று ஆளுக்கு ஒருவரை பிடித்து துவட்டினர்.
தண்ணீரை திறந்து விட்ட வாமனும் தொட்டியை விட்டு இறங்க, சாத்வி அவன் புறம் தவறியும் திரும்பவில்லை.
"ஹாசினி! என்ர டவல் வேணுமே" வாமன் சலுகையாக கேட்க,
"தம்பிக்கு டவல் கொண்டு வந்து குடு சாத்வி" என்ற புனிதா மக்களை மேய்த்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
அவன் புறம் திரும்பிய சாத்வி, "இவ்வளோ ஏற்பாடு செய்தவர் டவலையும் எடுத்து வார தானே.." என, வெடுக்கெனக் கேட்டாள்.
வளரும்...
-ஆதுரியாழ் ❤️

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..