அத்தியாயம்: 11
திருமண நாள்…
சிலருக்கு எப்படியோ, பலருக்கு அது சுகம் தரும் நாள் தான். ஒன்றாய் இருவரும் புது வாழ்க்கையை நம்பிக்கையுடன் தொடங்கிய அந்த நாளை விமர்சையாகக் கொண்டாடா விட்டாலும், வீட்டில் நிச்சயம் மனைவியின் கை மணத்தில் விருந்து தயாராக இருக்கும். இனிப்பு வகையில் ஒன்று, கணவனுக்குப் பிடிக்கும் என அசைவ வகைகள் பல, சைவ வகைகள் சில எனப் பார்த்துப் பார்த்துச் சமைத்து வைத்துத் தன் கணவனின் வருகைக்காகக் காத்திருப்பாள்.
அவன் வாங்கி வரும் விலையுயர்ந்த பொருட்களைவிட, ஆசையுடன் வாங்கி வரும் பூவைத் தலையில் சூடிக் கொண்டு, அகன்ற அவன் மார்பில் தலை சாய்ந்து, தங்களின் திருமண நாளில் நடந்தேறிய நிகழ்வுகளைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருப்பதை தான் மணமானது விரும்பும். இது ஒரு பெண்ணின் குறைந்த பட்ச ஆசை.
இது போன்றதொரு ஆசையில் தான் கோயில் குளத்தில் அமர்ந்து தன் கணவனுக்காகக் காத்திருக்கிறாள் ஹரிணி.
இது அவர்களின் இரண்டாவது திருமணநாள். காதல் கொண்ட பின் வரும் முதல் திருமண நாள் என்று கூடச் சொல்லலாம். மிகுந்த ஆவல் இருந்தது ஹரிணிக்கு. அவன் என்ன மாறியான சர்ப்ரைஸ் தந்து, என்ன கிஃப்ட் குடுப்பான் என்ற எதிர்பார்ப்பைவிட அவனுடன் சேர்ந்து தனக்கு மிகவும் பிடித்த சிவன் கோயிலைச் சுற்றி வர வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகமாக இருந்தது. அதுதான் அவளின் ஆசை. கணவன் வருவான் என்ற நம்பிக்கையில் காத்திருங்கிறாள்.
சூரியன் உதித்து சில நாழிகைகள் தான் இருக்கும். ஹரிணியின் முகத்தில் வந்து விழுந்த ஒளி அதிகமாக இல்லை என்றாலும் கண்ணைக் கூசும் அளவுக்கு இருந்தது.
இன்றைய நாள் என்னவென்று நினைவுக்கு வந்தவுடன், ஆசையா தன் அருகில் துயில் கொண்டிருக்கும் கணவனை அவளின் கரங்கள் தேட, கிடைத்தது தலையணை மட்டுமே. அகிலன் சில நேரம் ஹரிணியுடனும் சில நேரம் இந்துவுடனும் தூங்குவான். இன்று அகில் இல்லை.
வேகமாக எழுந்தவள் தரன் எங்கேயெனத் தேட, குளியலறையிலிருந்து வந்த சத்தம் சொல்லியது அவனின் இருப்பை. மீண்டும் படுக்கையில் சாய்ந்தவள் விழி முடி தூக்கத்தை தொடர முகத்தில் குளிர்ந்த நீர் பட்டது.
"கிட்… மணி சிக்ஸ் ஃபார்டி." என மெல்ல அவளின் அருகில் சென்று தன் சிகையில் வடிந்து கொண்டிருந்த நீரை அவளின் கன்னத்தில் படும்படி நெருங்கிச் சென்று ரகசியமாகச் சொன்னான் தரன்.
"ம்ச்… அதுக்கு நா என்ன பண்ணணும் பாவா." எனத் திரும்பிப் படுக்க,
"நீ எதுவும் பண்ண வேண்டாம். நா பாத்துக்கிறேன்." என அவளின் கன்னம் நெற்றியென வரிசையாக முத்தமிட்ட அவனைத் தள்ளி விட்டு வேகவேகமாக எழுந்து அமர்ந்தாள்.
"பாவா… குளிச்சிட்டியா…"
"ம்…"எனக் கூறி தலை துவட்டியவன் சட்டையை எடுத்துப் போட,
"எங்கிட்ட கேக்காம ஏ குளிச்ச பாவா நீ."
"எதுக்கு ரெண்டு பேரும் சேந்து குளிக்கலாம்னு நினச்சியா என்ன."எனக் கண் சிமிட்டியவன்."இப்ப முடியாது கிட். எனக்கு இப்ப வேல இருக்கு. நைட் வர லேட் ஆகலாம். ப்ரேக் பாஸ்ட்டுக்கு எல்லாம் ரெடி. நைட் பாக்கலாம். சீக்கிரம் வர ட்ரெய் பண்றேன்." எனப் பட்டனை மாட்டுக் கொண்டு கண்ணாடி முன் நிற்க,
"ராகவ் அண்ணா பாத்துக்க மாட்டாங்களா பாவா. இன்னைக்கி நா உங்கூட ஸ்பென்ட் பண்ணனும்னு நினைச்சேன்." என்றாள் சிறு வெட்கத்துடன்.
"நாள் முழுக்க எங்கூட ஸ்பென்ட் பண்ற அளவுக்கு அப்படி என்ன விசேஷம் வந்துடுச்சி." என நக்கலாகக் கேட்டவனை முறைத்தாள் அவள்.
"உனக்குத் தெரியாது."கோபமாகச் சொல்ல, அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் அருகில் இருந்த அலங்கார மேஜையிலிருந்து ஒரு கவரை எடுத்தான்.
அதில் பிரபல நகைக் கடையின் பெயர் இருந்தது. சற்று பெரிதாகச் செவ்வக வடிவில் தங்க நிறத்தில் இருந்த பெட்டியை ஓப்பன் செய்து அவளின் முன் காட்ட, அதில் இருந்த நெக்லஸின் பளபளப்பு சொல்லியது, வைரம் என்று.
அதன் அழகில் பிரமித்து இருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டு."நம்மோட ரெண்டாவது வர்ஷ கல்யாண நாள். அத மறப்பேனா என்ன. Happy lovable wedding anniversary my dear kid." என்றவனை காதலுடன் பாத்தாள் அவனின் மனையாள்.
அவளின் பார்வை மோகத்தை தூண்ட, நெக்லஸ்ஸை எடுத்து மனைவியின் கழுத்தில் அணிவித்து வென் கழுத்தில் முத்தமிட்டவனுக்கு, அவளை விட்டுச் செல்ல மனம் என்பதே இல்லை. ஆனால் சென்று தான் ஆக வேண்டும் என்பது போல் அவனின் அலை பேசி அழைக்கத் தொடங்கி விட்டது.
"Just a fifteen minutes. I will be there."என ஃபோனில் பேசிக் கொண்டே ஹாலுக்கு வர, ஹரிணியும் எழுந்து அவன் பின்னே சென்றாள்.
"பாவா அப்ப ஈவினிங் நா சொல்ற கோயிலுக்கு வந்துடேன். நா உனக்காகக் காத்துட்டு இருப்பேன்." என்றவளை முறைத்தான் அவன்.
"இன்னைக்கி நம்ம கல்யாண நாள் பாவா. எனக்காகக் கோயிலுக்கு வரலாம்ல." என்றாள் எதிர்பார்ப்புடன்.
"முடியாது. நீ மட்டும் பத்திரமா போய்ட்டு வா. வந்ததும் கால் பண்ணு." என்று
'நீ எங்க வேண்ணாலும் போ. எனக்கென்ன. ' என்பது போல் அலட்சியமாகப் பேச,
"பத்திரமா போக எனக்குத் தெரியும் பாவா. நா என்ன உன்ன எங்கூட சேந்து சாமி கும்பிடுன்னா சொன்னே. கூட வந்தா போதும்னு தான சொல்றேன் பாவா. பத்தே நிமிசம் தா. ப்ளீஸ்… நீ குளக்கரைல உக்காந்துக்க பாவா. நா மட்டும் போய் உனக்கு எனக்கு அகிலன் ஆதின்னு எல்லார் பேர்லையும் அட்சதை பண்ணிட்டு வந்திடுவேன். அப்றம் ரெண்டு பேரும் மீனுக்குப் பொரி போட்டுட்டு. அது சாப்பிடுறத கொஞ்ச நேரம் பாத்துட்டு. இன்னைக்கி பௌர்ணமி. அதுனால பீச்சுல கொஞ்ச தூரம் கைய பிடிச்சிட்டு. கடல்ல கால நனைச்சிட்டு. வீட்டுக்கு வருவோம்." என அவளின் ஆசைகளை அடுக்க.
"கிட்… சண்டே வெளில போலாம். இன்னைக்கி முடியாது."
"அட்லீஸ்ட் கோயிலுக்காது வா பாவா."
"எனக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் ஏ கிட் என்ன கம்பல் பண்ற. நோ மீன்ஸ் நோ தா. வேணும்னா கௌதமையும் இந்துவையும் கூட்டீட்டு போ. அப்றம் இன்னொரு மொற கோயிலுக்கு வான்னு கூப்பிடாத. இதுவே கடைசியாக இருக்கட்டும்."என மிரட்டுவது போல் திமிறாய் பேசிச் செல்ல, ஹரிணிக்கு கோபம் வந்தது.
அவனின் ஆணவம் கலந்த அலட்சியமான பேச்சு. 'நீ வந்து தா ஆகனும். உன்ன வார வைக்கிறேன் பார்.' என்ற பிடிவாதத்தை உண்டாக்கியது.
அதனால் தான் குளக்கரையில் காத்திருக்கிறாள். ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் அல்ல முழுதாக ஐந்து மணி நேரம். மாலை ஐந்தரை மணிக்கே வந்துவிட்டாள். எங்கு வந்தால் அவளைக் காணலாம் என்ற குறுஞ்செய்தியை அவனுக்கு அனுப்பி விட்டு ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு அமர்ந்திருக்கிறாள்.
"இன்னாமா நீ…மா நேரமா உக்காந்துக்கிற… கோயில் பூட்ட வேணாமா." என அங்கிருந்த பூக்கார பெண் ஒருவர் அவளிடம் கேட்கப் பதில் சொல்லவில்லை அவள்.
இன்னும் பத்து நிமிடம் தான் பிறகு நடை சாத்தப்படும் எனச் சொல்லிச் செல்ல, சரியெனத் தலையசைத்தாளே தவிர எழவில்லை. கடைசி நொடிவரை அவனுக்காகக் காத்திருக்க முடிவு செய்து பிடிவாதமாக அமர்ந்திருக்கிறாள் ஹரிணி.
மணி பத்தை தாண்டிவிட்டது என வேகவேகமாக வீட்டிற்கு வந்த ரிஷியை மூடிய கதவுகள் வரவேற்றது. அவளின் செல்லிற்கு முயற்சி செய்ய, அது அணைத்து வைக்கப்பட்டதால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. கௌதமிடம் சென்று கேட்க அவனின் ஈகோ இடம் தர வில்லை. மாலையில் வந்த குறுஞ்செய்தி நினைவு வர, அவசர அவசரமாகத் தன் பைக்கை எடுத்துக் கொண்டு தன் மனைவியைக் காண சென்றான், கோயிலுக்கு.
படிக்கரையில் அமர்ந்தவளின் உள்ளுணர்வு சொல்லியது ரிஷியின் வருகையை. அசையாது அமர்ந்திருந்தவளின் அருகில் இரண்டடி இடைவெளி விட்டு அமர்ந்தான். பேசவே இல்லை. ஸாரி என்றொரு வார்த்தையாவது சொல்லி இருக்கலாம். அவனின் அகராதியில் அப்படியொரு வார்த்தையே கிடையாதே. பின் ஒன்றுமே சொல்லாது கையில் இருந்த பொரியை நீரில் வீசி அவளின் கவனத்தை கவர முயன்றான்.
சில நொடிகள் கடந்திருக்கும். ஹரிணி தன் பையில் இருந்த ஒரு மோதிரப் பெட்டியை அவனின் அருகில் நகர்த்தி விட்டு,"Have a Terrible wedding anniversary for you…" எனச் சொல்லி எழுந்து சென்றாள்.
அடப்பாவி எப்படி ஆரம்பிச்ச நாள எப்படி முடிச்சி வச்சிருக்க பாரு என்றிருந்தது அவளின் செயல்.
அதைக் கையில் எடுத்தவன் அவளின் பின்னாலேயே சென்றான். அவள் கோயில் மூலவர் சன்னிதி செல்லவும் தயங்கி நின்றவன். பின் அவள் பார்த்த பார்வையில் எதுவும் பேசாது அவளுடன் ஒட்டிக் கொண்டான்.
இறைவழிபாடு முடிந்து அவள் ஆட்டோவில் ஏற முயல, தடுத்தான் தரன். அப்போதும் எதுவும் பேசவில்லை அவள். வீடு, அது தான் அவர்களின் போர்க்களம் என்றானது.
"கிட்… நா உங்கிட்ட காலைலேயே சொன்னேன், வர முடியாதுன்னு. ஏ வீணா பிடிவாதம் பிடிச்சு உடம்ப கெடுத்துக்கிற." எனப் பசியுடன் இருக்கும் மனைவிக்கு இரவு உணவு எடுத்து வந்து கொடுக்க, ம்ஹிம்… அவள் வாயைத் திறக்கவே மாட்டேன் என்றாள்.
"கிட்… கிட்…"
"நானும் உங்கிட்ட வான்னு காலையிலேயே சொன்னேன்னே. ஏ வரல? ராகவ் அண்ணே மீட்டின் ஆறு மணிக்கி முடிஞ்சிடும்னு சொன்னாங்களே."
"அது."
"உனக்குக் கோயிலுக்கு வரப்பிடிக்கல. அதுனால தா வரல. அப்படி தான." எனக் கோபமாகப் பேச, ரிஷி அமைதியானான்.
ஏனெனில் தம்பதியர்களில் ஒருவர் கோபமாக இருந்தால், மற்றவர் அமைதி காத்தாலே போதும் சண்டை காணாமல் போய்விடும். அளவான வார்த்தைகளால் தன் கோபத்தை வெளியேறினால் அது சற்று மட்டுப்படும். எதிர்த்து வாதம் செய்தால் அது வளர்ந்து கொண்டே தான் போகும். அதான் அமைதியாகி விட்டான்.
"உனக்குப் பிடிக்கிதோ இல்லையோ, உன்னோட வைஃப் நா. எனக்காக நீ சில விசயங்கள சகிச்சிக்கிட்டு ஏத்துக்கிட்டு தா ஆகனும். அது தா உன்னோட மனைவிக்கு நீ குடுக்குற மரியாத. நாம சேந்து வாழனும்னா உனக்காக நானும் எனக்காக நீயும் சிலத விட்டுக் குடுத்து தா ஆகனும். எல்லா நேரமும் போனா போகுதுன்னு உனக்கு மட்டுமே என்னால விட்டுக் குடுத்துட்டே இருக்க முடியாது. இதுவே கடைசியா இருக்கட்டும்." என்று காலையில் அவன் கூறிய வார்த்தைகளை அவனுக்கே திருப்பிக் குடுத்து விட்டுக் கோபமாகச் சென்றவளை சமாதானம் செய்யவே அவனுக்குச் சில தினங்கள் தேவைப்பட்டது.
ஆனால் அவளை Convince செய்து விட்டான். எப்படி என்றால்… அடுத்த திருமண நாளுக்கு உனக்குப் பிடித்தை கேள், கண்டிப்பாக நினைவேற்றுவேன் என்று தான். அவளும் கேட்டாள்.
"எஎனக்குப் பப்பீஸ்னாரொம்ப பிடிக்கும் பாவா. ஒருக்க எங்க தாத்தா வீட்டுல நாய் ஒன்னு குட்டி போட்டுச்சி. அந்தக் குட்டிய தூக்க எனக்கு ஆசையா இருந்தது. ஆனா அதோட அம்மா டாக், என்ன பக்கத்துலையே விடல." ஹரிணி கூற,
"அது உன்ன கடிச்சி வச்சிடுச்சி. அதுலருந்து உனக்குப் பெரிய சைஸ்ல இருக்குற நாய பிடிக்காது. சரியா." ரிஷி.
"ஹாங். உனக்கு எப்படி தெரியும் பாவா." என்றாள் விழி விரிய ஆச்சரியமாக.
"உன்னோட பத்து வயசு வரைக்கும் என்னென்ன நடந்ததுன்னு எனக்கு மனப்பாடமா தெரியும் கிட். உங்கண்ணே எங்க ராணிம்மா இப்படி, ராணிம்மான்னு அப்படின்னு கத நிறையவே சொல்லிருக்கான். காது வலிக்கிற அளவுக்கு." ரிஷி கேலியாகச் சிரித்தபடி கூறினான்.
"ஊசிலாம் போட்டாங்க தெரியுமா பாவா. ரொம்ப வலிச்சது. அத விட அரவிந்த் என்ன பாத்து, 'நீயும் நாயாவே மாறிடுவ. பௌவ்… பௌவ்…’ன்னு, சொல்லிப் பயமுறுத்துவான். நா அழுவேன். அதுனால எனக்கு ஒரு நாய்க்குட்டி வேணும். அதுவும் பிறந்து கண்ண கூடத் திறக்காத, நாய்க்குட்டிய தூக்கி கொஞ்சனும்னு ஆச. New born நாய்குட்டி கிடைக்குமா." என அவன் நிறைவேற்றமாட்டானென நம்பிக்கையில் தான் கேட்டாள்.
ஏனெனில் அவனுக்கு நன்கு வளர்ந்த தன் முன்னே தனியாய் செல்லும் நாய்களைத் தான் பிடிக்கும். குட்டியாய் நடக்கையில் காலுக்குள்ளேயே வந்து முகத்தை நாவால் ஈரம் செய்யும் குட்டிகளைப் பிடிக்கவே பிடிக்காது.
"நம்ம அப்பார்ட்மெண்ட்ல நாய்க்குட்டில்லாம் வளக்குறது செட்டாகாது கிட். அதுமட்டுமில்லாம நமக்குக் குழந்தைங்க இருக்கு. சின்னப் பிள்ளைங்களுக்கு பப்பீஸ்ஸால இன்ஸ்பெக்ஷன் எதுவும் வந்தா. பாவம்ல. வேற எதாவது கேளேன்." என ஹரிணியை கொஞ்ச கெஞ்சி கேட்க,
"எனக்கு நாய்க்குட்டி தா வேணும். வேற எதுவும் வேணாம்." எனக் கறாராகச் சொல்லிச் சென்றாள்.
'மகனே எனக்காக நீ என்ன பண்றன்னு நா பாக்கனும் டா. நா கேட்டு நீ செய்யாம இருந்துடுவியா என்ன. ' என வேண்டும் என்றே அவனுக்குப் பிடிக்காதது கேட்க, அவனும் வாங்கி வந்து தந்தான் நாய் குட்டியை அல்ல நாயை. அதுவும் நன்கு வளர்ந்த ராஜபாளையத்து வேட்டை நாயை.
"ஹாஹ்ஹா... எப்படி புருஷனுக்கு நாய்க்குட்டி பிடிக்காதாம், நாய் தா பிடிக்குமாம். ஆனா பொண்டாட்டிக்கி, நாய்க்குட்டி தா பிடிக்குமாம். எப்படி ஹரிணி, நீ ஒன்னு கேட்டா உன்ன அசர வக்கிற மாறி அவெ வேற லெவல்ல ஒன்ன பண்றான்."கௌதம் சொல்லிச் சிரிக்க, உடன் பிரகாஷும் சேர்ந்து கொண்டான். இருவரையும் முறைத்தாள் ஹரிணி.
"வாய மூடுங்க. நானே அவெ மேல கடுப்புல இருக்கேன். ஏண்டா இத வாங்கிட்டு வந்தன்னு கேட்டா, இந்த நாயும் குட்டி போடும்னு சொல்றான். என்னோட நிலமைய பாரேன்." எனப் புலம்பினாள் அவள்.
கௌதம்,"இந்த நிலமல இருந்து உனக்கு நா விடுதல வாங்கித்தாறேன். சென்னைல எனக்குத் தெரிஞ்சு மாதவன்னு ஒருத்தர் இருக்காரு."
"யாருண்ணே அவரு. நம்ம பிரச்சனைய எல்லாம் அவர்ட்ட சொன்னா உடனே தீத்து வச்சிடுவாறா என்ன."
"கிட்டத்தட்ட அப்படி தா. அவரு ஒரு நல்ல வக்கீலு."
"என்ன விடவா…"
"கோர்ட் வாசப்படியையே மிதிக்காத நீ வக்கீலா. வாய மூடு டா. நாம அவர்ட்ட பேசுறோம். உனக்கும் உம்புருஷனுக்கும் டைலர்ஸ் வாங்குறோம்."
"கௌதம்…"என ஹரிணி அலற,
"அத வாங்குனதுக்கு பின்னாடி என்ன பண்ணப்போறோம்." பிரகாஷ் சந்தேகமாக,
"அப்படி கேளு. அ… ஆ… இ…ஈ ன்னு உயிர் எழுத்து பன்னெண்டுலையும், க்… ங்… ச் ன்னு மெய் எழுத்து பதினேழுலயும் தொடங்குற மாறி உனக்கு நா நல்ல பையனா பாக்குறேன்."
"அண்ணே மெய் எழுத்து பதினெட்டுன்னு எங்க டீச்சர் சொல்லி நா கேள்வி பட்டிருக்கேன். நீங்கத் தப்பு தப்பா சொல்றீங்க. உங்க தமிழம்மா சரி இல்ல போல."
"எல்லாம் சரியாத்தா இருக்கு. நா 'ர்' வரிசைய மெய் எழுத்துல இருந்து தூக்கிட்டேன். ஆர் ல ஸ்டார்ட் ஆகுற மாறி எந்த ஆம்பளையும் என்னோட டார்லிங் கிட்டையே வரக் கூடாது. regardless arrogant."எனத் தரனை வசைபாட,
"போதும்… என்னோட பாவாவ இதுக்கு மேல எதாவது சொன்ன, பாத்துக்க, உன்னோட வழக்கில்லாத வக்கீலு, காலில்லாத ஆசாமி ஆகிடுவான்."எனத் தலையணையை எடுத்துக் கொண்டு பிரகாஷின் காலில் அடிக்க வர,
கையில் இருந்த தலையணையை பிடுங்கி விட்டு, "இதுலலாம் அடிச்சா வலிக்காது. நா போய் உருட்டு கட்டைய எடுத்துட்டு வர்றேன்." என்று கௌதம் வெளியே செல்ல,
"ண்ணே..." என அலறினான் பிரகாஷ்.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..