அத்தியாயம்: 15
இறை வழிபாடு என்பது நம்பிக்கையைச் சார்ந்தது. அனைவரிடத்திலும் உண்டு. அந்த நம்பிக்கை என்னிடம் தான் அதிகம் உள்ளது, என்று விளம்பர படுத்தாது, உன்னிடம் குறைவாக உள்ளது என்று விமர்சனம் செய்யாது, உன்னிடம் இல்லை என்று ஒப்பிட்டுப் பார்க்காது இருக்க வேண்டும். உயிர்களை உயிர்களாய் மதித்து நடத்துவதே உண்மையான இறை வழிபாடாகும்.
திருவிழா, பண்டிகை என்பது ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்றுகூடிக் கொண்டாடுவது. தூர இருக்கும் சொந்தங்களை அது ஒன்று சேர்க்கும். ஜாதி, மதம், இனமென எதையும் பாராது சந்தோஷம் ஒன்றை மட்டுமே குறியாய் கொண்டிருப்பதே திருவிழாவின் நோக்கம்.
அதுபோல் தான் இங்கும் நடந்து கொண்டிருக்கிறது. ஏழு கிராமத்து மக்கள். எந்த ஒரு விழா பண்டிகை என்றாலும் ஒற்றுமையாக, வேறுபாடு பார்க்காது கொண்டாடுவது வழக்கம். அந்தந்த ஊர் தலைவர்கள் எப்பொழுதுமே சிறிய விழாக்களைக் கூடத் திருவிழாபோல் சிறப்பாக ஏற்று நடத்துவர்.
இந்த விநாயகர் கோயில் கும்பாபிஷேகமும் அப்படித்தான். கோயில் சிறியதாக இருந்தாலும் அதற்கு வந்து செல்லும் மக்களின் அளவு எண்ணிட முடியாததாக இருந்தது. ரங்குராட்டினம், பலூன் கடைகள், பஞ்சு மிட்டாய் கடைகள், அன்னதானம் எனச் சிறப்பாய் ஏற்பாடு செய்திருந்தனர்.
"அப்பத்தாவும் பெரிமாவும் கோயில்ல இருக்காங்க. போய்ப் பாரு. நா பெரிப்பா கூட இருக்கேன்." என்று சொல்லிப் பைக்கிலிருந்து இறக்கி விட்ட அந்த நொடியே கழற்றி விட்டுவிட்டு சென்று விட்டான் ரிஷி தரன்.
"நா பேசாம அவங்க கூடவே வந்திருக்கலாம். புருஷனா இருந்துட்டு வாசல்லையே கலட்டி விட்டுட்டு போய்டான் பாரேன். ச்ச. மோசமான ஆளு பாவா நீ. " எனப் புலம்பபடி, அந்த மக்கள் வெள்ளத்தில் நந்துவின் கரம் பிடித்துக் கொண்டு ஹரிணி நடக்க,
"பம்கின், நா உனக்குச் சரியான பேர தா வச்சிருக்கேன்." என்றவனை என்ன என்பது போல் பார்க்க,
"பின்ன உங்கூட பைக்ல வரனும்னு ஆசப்பட்டு, எங்க மாமா உன்ன மட்டும் தனியா கூட்டீட்டு வந்தா!. எங்க மாமாவ குறை சொல்லித் திட்டீட்டே வர்ற. உனக்கு ரொமன்ஸ்னா என்னனே தெரியல. அதுக்கு தா உன்ன பம்கின்னு சொல்றேன். எந்த ஃப்லிங்ஷும் இல்லாத ஞானப்பழம் நீ." என்றவனின் தலையில் தட்டி,
"விஷம்... விஷம்... உடம்பு முழுக்க விஷம். யாருடா உனக்கு இப்படில்லாம் பேசச் சொல்லித் தர்றா?."
"நமக்குக் கண்ணுன்னு ரெண்டு இருக்கு. காதுன்னு ரெண்டு இருக்கு. எப்பையும் அத திறந்து வச்சிக்கிட்டே தா இருக்கனும். எல்லாத்தையும் ரோபோ படத்துல வர்ற சிட்டி மாறி ஸ்கேன் பண்ணி ரெக்கார்ட் செஞ்சிக்கனும். கூமூட்ட மாறி இருக்க கூடாது பம்கின்." எனப் பேசியவனின் பேச்சு ஹரிணியை கவர்ந்தது. அவனின் கன்னத்தில் முத்தமிட்டு,
"நீ என்ன சொன்னாலும், இந்த வயசுல உன்னோட பேச்சு அதிகம் தா." எனச் சொல்லி மீண்டும் முத்தமிட, அருகில் நின்ற ஜெனிபர் சிரித்தாள். ரிஷி செல்லும்போது பிரகாஷையும் சேர்த்தே இழுத்துச் சென்று விட்டான். இல்லை என்றால் ஜெனியை விட்டு நகர்ந்திருக்க மாட்டான் அவன்.
"ஜெனி அக்கா. இது தா உங்களுக்கு முதல் திருவிழாவா." எனக் கேட்க, அவள் ஆம் என்றதும்,
"இந்த ஊர்ல மாசத்துக்கு ஒன்னு வரும். சூப்பரா இருக்கும். வாங்க நா உங்களுக்குத் திருவிழாவோட ரூல்ஸ் அண்டு ரெகுலேஷன சொல்லித்தாறேன். முதல்ல எல்லா இடத்தையும் சுத்தி பாக்கனும். நிறைய வெளாட்டு சாமா வாங்கனும். அப்றமா வேணுமம்னா போய்ச் சாமிய பாக்கலாம். இல்லாட்டி வாங்குன சாமாசட்டிகள வீட்டுல வச்சிட்டு, யாருமே இல்லாதப்ப கூட வந்து சாமிய பாக்கலாம். எல்லாம் நம்ம இஷ்டம் தா. சாமி ஒன்னும் சொல்லாது." என இருவரின் கரம்பற்றி நடுவில் வந்தான். ஆண் என்று பொறுப்பாய் இரு பெண்களையும் பாதுகாப்பாய் அழைத்துச் செல்கிறானாம் நந்து.
திருவிழா நேரத்தில் வாங்கும் கலர் கலர் கண்ணாடி மிகவும் ஸ்பெஷல். அந்தக் கடைக்காரரிடம் அடித்துப் பிடித்துக் குறைந்த விலையில் அந்தக் கடையையே வாங்குவதாய் நினைத்து மூன்று கண்ணாடியை வாங்கிக் கொண்டு, வாயில் கிரெப் ஐஸ்ஸை உறுஞ்சியபடி வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்து வந்தனர் மூவரும்.
"ஐய்யோ பூச்சாண்டி." கௌதம் இவர்களைப் பார்த்துக் கேலியாக அலறினான்.
"அவ்வளவு மோசமாவா இருக்கு." எனத் தன் கைப்பையில் உள்ள கண்ணாடியில் முகம் பார்த்தாள் ஹரிணி.
"அங்க பாரேன். அங்க பத்ரகாளி வேசம் போட்டிருக்குற அக்காக்கும் உனக்கு ஒரே ஒரு வித்தியாசம் தா." என்றான் கௌதம்.
நந்து, "அந்த ஒரு வித்தியாசம் என்னனு நா தெரிஞ்சிக்கலாமா?."
"அந்தக்கா கருப்பு கலர் டிரெஸ் போட்டிருக்கு. உங்கத்த வேற கலர்ல டிரெஸ் போட்டிருக்கா. மத்தபடி பேக்கப் பக்காவா பொருந்தி இருக்கு." எனக் கேலி செய்ய, ஜெனி வாய்விட்டுச் சிரித்து விட்டாள்.
"நா உனக்குச் சம்பளம் குடுக்குற முதலாளி. நியாபகம் இருக்கட்டும். அவனுங்க கேலி பண்ணா நீ சிரிப்பியா." என்றாள் மிரட்டலாக, உடனே சிரிப்பை நிறுத்திவிட்டாள் ஜெனி.
"ச்ச... ஜெனி அக்கா, பம்கின் வேல தரலன்னா என்ன. எங்கப்பா தருவாங்க. நீ என்னோட மாமா வச்சிருக்குற கம்பெனில கூட வேலை பாக்கலாம். எதுக்கு இந்த ரெண்டு கொழந்த பெத்த ஆன்டிக்கிட்டலாம் வேலை பாத்துட்டு. நல்ல சம்பளத்துக்கு நா கேரண்டி தர்றேன். என்ன மாமா சொல்றிங்க."
"கண்டிப்பா." என்றான் சிறிய குரலில், சத்தமாகச் சொன்னால் ஹரிணியிடம் வாங்கிக்கட்டிக்க வேண்டுமே.
நந்து இது வேண்டும் அது வேண்டும் எனக் கேட்டுக் கொண்டே வர, கௌதம் எல்லாவற்றையும் வாங்கி தந்தான்.
"என்னண்ணே சூப்பர் மார்கெட்ல டிராலி தள்ளிட்டு வர்ற அளவுக்கு ஜாமா வாங்கிருக்க." எனக் கேள்வியைக் கௌதமிடம் கேட்டாலும் கண் என்னவே ஜெனியை தான் பார்த்தது. உதடு அவள் போட்டிருந்த சாயத்தை மீறிச் சிவந்திருந்தது, கிரேப் ஐஸ்ஸால்.
வேகவேகமாக அதைத் தன் தாவணி முந்தியில் துடைத்தவள் வேறு புறம் திரும்பிக் கொண்டாள், அவனுக்கு முகம் காட்டாது. அதை அறிந்தவனின் உதடுகளில் சிறு புன்னகை உண்டானது.
"ஜாமானெல்லாம் தூக்குறதுக்கு தான்டா உங்கண்ணிய ஒரே மணி நேரத்துக்கு மட்டும் வேலைக்கி எடுத்துருக்கேன்." எனச் சொல்லி ஹரிணியை பார்க்க,
அவள் இடையில் பெரிய டிரக் வடிவ பொம்மையையும் கையில் ஒரு விரலில் சின்ன சின்ன விளையாட்டுப் பொருட்கள், வளையல், பொட்டு எனப் போட்டு அடைத்திருந்த நெகிழிப் பையில் தொங்க விட்டு, மற்றொரு கரத்தில் பபில்ஸ் ஊதிக் கொண்டு இருந்தாள். அதுவும் யாருக்கு அதிகமாகப் பபில்ஸ் வருகிறது என நந்துவுடன் போட்டி போட்டுக்கொண்டு.
இதுகள திருத்த முடியாது, என இந்தப் பக்கம் திரும்பினால் பொது இடம் என்று கூடப் பாராது தன் மனம் கவர்ந்தவளை ரசித்துக் கொண்டு அசையாது சிலைபோல் நிற்கும் பிரகாஷ்.
"முடியலாடா... முடியல... அண்ணே ஐஸ் வண்டிக்காரென்ணே. இந்தப் பக்கமா வாங்க. குடும்பமே உங்களுக்காகக் காத்துட்டு இருக்க. இந்த 90's kid லவ் பண்றேங்கிற பேர்ல பழைய படத்த ஓட்டீட்டு இருக்குங்க. அந்த ப்ளாக் அண்ட் வெய்ட் படத்த பாக்குறத விட முக்கியமான வேல இருக்கு எனக்கு." எனத் தங்கைகள் இருந்த இடத்திற்கு ஐஸ் வண்டியை அழைத்துச் சென்றான்.
"அண்ணே அண்ணே." செல்லும் அவனைத் தடுத்தான் பிரகாஷ்.
"என்னடா."
"அண்ணே ஐஸ்க்கு நாக்காசு குடுக்கனும்ணே."
"குடு. யாரு வேண்டாம்னா."
"உனக்குப் புரியலண்ணே. காசு நா குடுக்குற மாறி இருக்கனும். ஆனா அது எங்காசா இருக்கக் கூடாது ண்ணே." என்றான் பிரகாஷ்.
"புரிஞ்சிடுச்சி. ஆனா இப்ப வாங்குற கடன எப்ப திருப்பித் தருவ. அத சொல்லிட்டு காச வாங்கிக்க."
"அண்ணே தம்பிக்கி செய்யறதுக்கு கணக்கு பாக்க கூடாதுண்ணே. அது தப்புண்ணே."
"தப்பாருந்தாலும் பரவாயில்ல. எப்ப திருப்பித் தருவ."
"தம்பி பேருல ஆதார் கார்டு இல்லாம உம்மனசுக்குள்ள ஒரு அக்கெண்ட் ஓப்பன் பண்ணிக்கண்ணே. தம்பி சம்பாதிச்சு தருவேன்." பிரகாஷ்
"எப்ப சம்பாதிப்ப."
"வேலைக்கி போனா சம்பாதிப்பேன்."
"எப்ப வேலைக்கி போவ."
"அது சொல்றதுக்கு இல்ல. நீ என்னண்ணே காசு குடுக்குறதுக்கு கேள்வி மேல கேள்வியா கேட்டுக் கொல்லுற. நா தரன் அண்ணே கிட்டையே வாங்கிக்கிறேன். அவரு என்னனு கூடக் கேக்காம உடனே குடுத்துவாரு. தெரியுமா."
"அப்ப அவன்டையே வாங்கிக்க." கௌதம் ரோசமாகத் திரும்ப,
"இந்தக் கூட்டத்துல அண்ணே எங்க இருக்குன்னு தேடி, கண்டு பிடிக்கிறதுக்குள்ள ஐஸ் உருகிடும்ணே. தம்பி தருவேண்ணே. நம்பு. என்னோட பாசமுள்ள சூரியன் நீ. கோய்ச்சிக்கலாமா." எனக் கௌதமின் சட்டை பையில் கையை விட்டுப் பர்ஸை எடுத்துக் கொண்டான்.
"இன்னும் என்னடா வேணும்." எனச் செல்லாமல் நின்ற அவனைக் கண்டு கௌதம் கேட்க,
"அண்ணே, தம்பிக்கி இலவசமா காசு குடுத்து உதவுன மாறி. கைத்தட்டி விசில் அடிச்சி உதவனும். அதுக்கு தா நிக்கிறேன்.”
"கைத்தட்டனுமா!. அது ஓகே. ஆனா எனக்கு விசில் அடிக்க வராதேடா. சரி நந்து கைல ஒன்னு இருந்தது. அத புடிங்கிக்கலாம். ஆமா எதுக்கு தட்டனும்.?"
"தம்பி களத்துல இறங்கி சிலம்பம் சுத்தும்போது சுத்தி இருக்குற தூசி துரும்மெல்லாம் பறக்கும். கூடவே விசில் பறக்கனும்ணே. விசில் பறக்கனும்." சீரியஸ்ஸாக,
"நா விசில தூக்கிப் போட்டா, நந்து சண்டைக்கி வருவானே டா." என்றவனை காண்டுடன் முறைத்தான் பிரகாஷ்.
"சரி விடு. ஏதோ போட்டின்னியே அது எங்க நடக்கப்போது?."
"பத்தரை மணிக்கி மினிஸ்டர் வராரு. டேம திறந்து வச்சதுக்கு அப்பறம் போட்டி நடக்கப் போது. அதுல தம்பி நா ஜெயிக்கனும். கடவுள வேண்டிக்கண்ணே."
"போட்டி ஓகே. ஆனா நீ சொன்ன மாறிச் சிலம்ப போட்டி கிடையாது. கபடி போட்டில்ல நடக்கப்போது. நம்மூர் சார்பா விளையாட நேத்தே உங்கண்ணே உம்பேர குடுத்துட்டான். மத்த ஆளுகளும் ரெடி. உனக்குத் தெரியாதா?."
"எது கபடியா.! அப்பச் சிலம்பம்?." அதிர்ச்சியாக,
"டேய் இவ்ளோ நேரம் நா சொன்னது காது கேக்கலையா. மினிஸ்டருக்கு சிலம்பம் சுத்த வராதாம். அதுனால கபடி போட்டி வச்சா, அவரும் களத்துல இறங்கி கபடிகபடின்னு சொல்லிக்கிட்டே, முன்னாடியும் பின்னாடியும் நாலு ஸ்டெப் நடந்துட்டு, போய்ச் சேர்ல உக்காந்துக்குவாராம். அதா கபடியே வக்கச் சொல்லிட்டாரு. உங்கண்ணே தா எல்லா ஏற்பாடும் செஞ்சு, வெங்கல கோப்ப கூட வாங்கி வச்சிட்டான். உங்கிட்ட சொல்லலயா?."
"இல்லண்ணே... இல்ல... போட்டி மாறுன விசயத்த சொல்லவே இல்லண்ணே."
"சொன்னாலும் உனக்குக் கேட்டிருக்காது. நீ தா ஜெனி மயக்கத்துல ஜன்னி வந்தவெ மாறில்ல ஊருக்குள்ள திரியுற. போய் ரெடியாகு. களத்துல பாக்கலாம்." கௌதம் சொல்லிச் சென்றான்.
மந்திரி தலைமையில் டேம் இனிதே திறக்கப்பட்டது. அவரின் பெருமை, அவரின் கட்சியின் பெருமை, அவர்களின் ஆட்சியின் பெருமை, இந்த ஊரின் பெருமையென மிகப்பெரிய சொற்பொழிவும் ஆற்றப்பட்டது.
டவுசர் சட்டையுடன் விஜயபாண்டி, பிரகாஷ் என அவனைப் போல் இளைஞர்களும் தயாராகி விளையாட்டு நடைபெறும் இடத்திற்கு வந்தனர். ஏழு ஊர் இளைஞர்களும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு களத்தில் நேருக்கு நேராகச் சந்திக்க உள்ளனர். ஊருக்குள் சண்டை வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. அதில் விஜய் ஒரு அணியிலும் பிரகாஷ் எதிர் அணியிலும் இருந்தனர்.
சுற்றி ஊர் மக்கள் கைதட்டி ஆரவாரம் எழுப்ப ஆடுகளத்தில் இறங்கினர் இளைஞர்கள். இந்த ஆடுகளத்தை, ஒரு நடுக்கோடு இரண்டாகப் பிரித்திருக்கும். ஒரு அணியிலிருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு நடுக்கோட்டைத் தொட்டுவிட்டு ஒரே மூச்சில் "கபடிக் கபடி"(அல்லது"சடுகுடு") என்று விடாமல் கூறிக் கொண்டே எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று எதிர் அணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டுவிட்டு, எதிர் அணியினரிடம் பிடிபடாமல் நடுக்கோட்டைத் தாண்டி, தம் அணியிடம் திரும்ப வேண்டும். அப்படி வந்து விட்டால் அவரால் தொடப்பட்டவர் ஆட்டம் இழப்பார்.
மூச்சு விடாமல் 'கபடிக் கபடிக்' என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பி வர முடியாமல், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். இது விதி முறை.
முதலில் களம் இறங்கியது விஜய். அவனின் இலக்கு பிரகாஷ் தான். சிறப்பாக ஆடி இருவரை வெளியே அனுப்பிய போதும் பிரகாஷை ஆட்டம் இழக்கச் செய்ய அவனால் முடியவில்லை. அடுத்து பிரகாஷ். அவனும் சாதுர்யமாக விளையாடித் தன் அணிக்குப் புள்ளிகளைச் சேர்த்தான்.
அடுத்தடுத்து என வரிசையாக இளைஞர்கள் களம் இறங்க, ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. ஆரம்பம் முதலே இரு அணியும் விறுவிறுப்பாக ஆட, வெற்றி தோல்வி யாருக்கு என முடிவு செய்ய முடியாத படி இருந்தது அவர்களின் ஆட்டம். புள்ளிப் பட்டியலைப் பொருத்தவரை இருவருமே ஒரே மதிப்பெண் தான். இறுதியாக இறங்கும் நபரால் தான் யாருக்கு வெற்றி என்பதை உறுதி செய்ய முடியும். இது பிரகாஷ் அணியின் முறை.
"மச்சான். மூணு பேர் தா இருக்கானுங்க."
"ரெண்டு நிமிசம் தா டயம் இருக்கு.".
"இருக்குற நேரத்துல ஒருத்தன தொட்டுட்டு இந்தப் பக்கம் பத்திரமா வந்துட்டா போதும். நமக்குத் தா வெற்றி." பிரகாஷ்
"யாரா இறக்கலாம்?."
"நீயே போ மாப்ள. அவனுங்க உன்னைய தொட்டுடாம பாத்துக்க. அதே நேரம் ஒருத்தன மட்டும் டார்கெட் பண்ணி இறங்குனா, இன்னைக்கி நமக்குத் தா கப்பு." எனப் பிரகாஷை இறங்க சொல்ல, இவன் நடுக்கோட்டை தொட்டு சலாம் அடித்தபடி உள்ளே இறங்கினான். உதடுகள் சடுகுடு சடுகுடு என விடாது சொல்ல, வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் எதிர் அணியினரின் களத்திற்குள் நுழைந்தான்.
இருவரை தொட்டுவிட்டான். ஆனால் அவர்களின் பக்கத்தை விட்டு வருவதற்குள் மூவரும் சேர்ந்து அவனைப் பிடித்து அமுக்க ஆரம்பித்து விட்டனர். அவர்களிடமிருந்து விடுபடப் பிரகாஷ் போராடிக்கொண்டு இருந்தான்.
சுற்றி இருந்தவர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் "Come on பிரகாஷ். உங்களால முடியும். You can Do it. You can Do it." முணுமுணுத்த படியே இருந்தவள் ஜெனி.
வெகுநாட்களுக்குப் பின் அவளின் ஊரில் நடக்கும் விழாபோல் ஒன்றை நேரில் காண்கிறாள். விளையாட்டு மும்மரமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தால் யாருக்குத் தான பிடிக்காது. அவளுக்குப் பிடித்திருந்தது. பிரகாஷை மூவரும் வளைத்துப் பிடித்தபோது, அவனை உற்சாகப்படுத்த எதாவது செய்ய வேண்டும் என நினைத்தாள்.
சுற்றி முற்றி பார்த்தவள், நந்து கையில் வைத்திருந்த விசிலை ஊத, அதே நேரம் பார்த்து நந்துவும். "உன்னால முடியும் மாமா. கமான். கப்பு நமக்குத் தா மாமா." எனக் கத்தவும், வேகம் வந்தது அவனுள். நேரம் முடிய ஒரு சில நொடிகள் இருக்கும்போது. நடுக்கோட்டை தொட்டு தன் அணிக்கு மூன்று புள்ளிகள் பெற்று தர, அவர்களின் அணி வெற்றி பெற்றது.
மினிஸ்டர் கையால் கோப்பையும் கிடைத்தது.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..