அத்தியாயம்: 17
அரிசி ஆலை...
கையில் டிம்முக்கும் டெய்ஸிக்கும் உணவு எடுத்து வந்தவள், அவர்களுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு அதைத் தட்டில் வைத்தாள். உண்ணும் அவைகளை பார்க்கையில் கொஞ்சிட ஆசையாக இருந்தது ஹரிணிக்கு.
காலையில் வந்தவள் மாலையாகியும் அவைகளை விட்டுச் செல்ல மனமின்றி அவைகளின் விளையாட்டை வேடிக்கை பார்க்க, பிரகாஷ் ஹரிணியை கிளம்பிச் சொன்னான். அவனை முறைத்துக் கொண்டு புறப்பட்டவள், வீடு தான் போய்ச் சேர வில்லை. அங்கிருந்த களத்து மேட்டில் அமர்ந்து கொண்டாள்.
மனமானது இந்த அண்ணன் தம்பி இருவருக்கும் இடையில் கிடந்து தக்காளியாய் நசுங்கி போனது.
"இவனுங்க ரெண்டு பேரும் சேந்து என்ன பைத்தியகாரி ஆக்கப் போறானுங்க. இவனுங்களுக்கு இடைல என்னதா பிரச்சனைனு இப்ப வரைக்கும் சொல்லவே மாட்டேங்கிறாய்ங்க. ச்ச…" வாய் விட்டுப் புலம்பியவளுக்கு நேற்றைய நினைவு வந்தது.
மூர்த்தி களத்தில் இறங்கி விட்டார். அதான் சமையலறையில் தன் மனைவிக்கும் மருமகளுக்கும் பிடித்த உணவைச் சமைக்கிறேன் என்று. அவருக்கு உதவியாக மற்ற ஆண்களும் களத்தில் குதிக்க, சமையலறை யானை புகுந்த வெண்கலக் கடைபோல் ஆனது.
"எந்த வீட்டுலையும் நடக்காது கூத்தால இருக்கு இது. பொம்பளைங்க நாங்க உக்காந்திருக்கனுமாம். ஆம்பளைங்க சமச்சி குடுப்பாங்களாம். ஏத்த இதெல்லாம் என்னனு நீங்கக் கேக்க மாட்டிங்களா!." மலர் நாச்சியம்மாளிடம் முறையிட,
"எவடி இவ!. புரியாத பொம்பளையா இருக்கா.! அரைக்காச ஆயிரம் பொன்னாக்குகிறவளும் பெண்சாதி. ஆயிரம் பொன்னை அரைக்காசா ஆக்குகிறவளும் பெண்சாதி. ஒரு வீட்டுல ஆம்பளைங்க எப்படி இருக்கனும் இருக்ககூடாதுன்னு முடிவு பண்றவளும் பெண்சாதி தே. அவள்களுக்கு கை மாறா ஒரு விருந்து தரத்தா, நா பெத்ததுகளும், அதுக பெத்த பிள்ள குட்டிகளும் சமைக்கிறேன்ங்கிது, அத போய் வேண்டாங்கிறா!. பெத்தவளுக்கும், பொண்டாட்டிக்கும், மகளுக்கும் ஆம்பளைங்க கட்டாயம் செய்யனும் டி."
பிரகாஷ், "அப்படி சொல்லு அப்பத்தா. தாத்தா சோறு பொங்கிப் போட்டுத்தா அப்பத்தாக்கு வாய் நீண்டு கெடக்கு. ஆமா அப்பத்தா தாத்தா உனக்கு எத்தன மொற சமச்சி தந்திருப்பாரு."
"அத என்டா கேக்குற கோணப்பயலே!."என்றாலும் பாட்டியின் முகத்திலும் வெட்கம் வந்தது.
அசோக், "சும்மா புது பொண்ணாட்டம் வெக்கப்படாம சொல்லு ஆச்சி. வச்சிருப்பியே எக்கச்சக்கமான கத. அதுல ஒன்ன அவுத்து விடு."
"ஹி...ம்... அப்பல்லாம் மாசத்துல ஒருக்க என்ன களத்து மேட்டுக்கு அந்தப் பக்கம் இருக்க தோப்பு வீட்டுக்குக் கூட்டீட்டு போய்டுவாரு உங்க தாத்தா. அங்கருக்குற கிணத்துல தூண்டில் போட்டும், வல விரிச்சும் ரெண்டு பேரும் சேந்து மீனப் பிடிப்போம். பிடிச்ச மீன உடனே நெருப்பு மூட்டி, தீல சுட்டு குடுப்பாரு. அங்கங்க முளச்சி இருக்குற கீர, காயி, பயறுன்னு எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து அவருக்குத் தெரிஞ்ச மாறி என்னத்தையாது செஞ்சி பரிமாறுவாரு. அதுல நா ருசியையே பாத்து இல்லை. அவரு எம்மேல வச்சிருந்த பாசத்த தா பாத்தேன். " என இறந்து போன அவரின் கணவரை நினைத்துக் கண்ணீர் சிந்த,
பிரகாஷ், "இந்தா கிழவி, பைசா பெறாத உன்னோட ப்ளாஸ் பேக்க நாங்க கேக்குறதே கஷ்டம், இதுல கண்ணீரு சிந்துனா எப்படி?. பாக்குற எங்களுக்குப் பகீர்னு ஆகுதுல்ல. போனவர நினைக்காம இருக்குற எங்கள கவனி அப்பத்தோய்."
"அதுவும் சரித்தா. டேய் அசோக்கு ரசத்துக்கு புளிய கொறச்சி ஊறப்போடு. தக்காளி கூடப் போட்டாத்தா ருசி இருக்கும். புத்தி கொட்டு போனவந்தா புளிய திம்பான்." வீட்டின் மூத்தவராய் உத்தரவு போட,
"ஆமா!, அப்பத்தா வாயில புளி இறங்காது. புல்டெவ்சர் தா போகும். ஐய்யோ இந்த நேரம் பாத்து என்னோட பாசமுள்ள சூரியன காணும். இப்பன்னு பாத்தா ஊருக்குப் போகனும்." எனப் பிரகாஷ் புலம்ப.,
"எனக்கு இது பிடிக்கல. ஆளாளாக்கு ஒன்ன சொல்லிட்டு என்னோட அடுப்படிய நாறடிக்கிறது. இப்பவே எல்லாரும் என்னோட அடுப்படிய விட்டு வெளில போங்க." என மலர் கத்த,
மூர்த்தி, "எல்லா நாளும் நீங்கத் தான மதினி சமக்கிறீங்க. இன்னைக்கி ஒரு நாள் நாங்க பாத்துக்கிறோமே."
"முதல்ல உன்னைய தா சொல்லனும். இந்த வீட்டுல இருக்கிறவங்களுக்கு சொல்றத கேக்காம எகுத்து பேசிப் பழக்கம் வந்ததே உன்னால தா. எனக்கெல்லாம் தெரியாது, என்னோட அடுப்படி நாங்குடுக்கும்போது எப்படி இருந்துச்சோ, அதே மாறி எனக்குத் திருப்பி வேணும். டேய் கவியரசா, அது உன்னோட பொறுப்பு." மலர் கோபமாகக் கூறி சென்று விட்டார்.
கவியரசன், "மதினியோட கோபம் கொறயனும்னா சமையல் நல்லா இருக்கனும்ண்ணே. அப்பதா நமக்கு நல்லது. இம்புட்டு வாய் பேசுனதுக்கு சமயல சொதப்பி வச்சோம்னு வைங்கண்ணே. நமக்குக் கஞ்சி கூடக் கிடைக்காது பாத்துக்குங்க."
மூர்த்தி, "அதெல்லாத்தையும் எம்மகெ பாத்துப்பான். பெருமாள காலைல இருந்தே பாக்கல. எங்க அவெ?."
"ஸ்கூல்ல ஒரு விழாவாம். அதுக்கு அக்கா கூப்டாங்கன்னு போயிருக்கு." என அவர்களுக்குள் பேச, அந்த இடத்தில் கௌதம் மிஸ்ஸிங்க. அவன் மட்டுமல்ல, ஹரிணியும் ஜெனியும் தான். சென்னைக்கு சென்றுள்ளனர்.
"நீங்க எதுக்கு மச்சான் ஸார் இந்த வேலயெல்லாம் பாக்குறிங்க. குடுங்க." எனக் கண்ணில் நீர் வடிய வெங்காயம் உறித்துக் கொண்டிருந்த சம்பத்திடமிருந்து கத்தியைப் பிரகாஷ் வாங்க, சம்பத் ரிஷியைக் காண அடுப்படிக்குள் சென்றான்.
அங்குச் சிறு வியர்வை பூக்க, அதைத் தன் சட்டையில் துடைத்தபடி அடுப்பில் எதையோ கிண்டிக் கொண்டு இருந்தான் ரிஷி. அவன் முகத்தை வைத்து அவன் சந்தோஷமாகச் சமைக்கிறானா, இல்லை 'சொல்டாங்களேங்கிறதுக்கா பண்றானா' எதுவும் சரியா தெரியவில்லை. அவ்வபோது புன்னகை வந்து, சில நேரம் அது வேதனையாகவும் மாறியது. சில நேரம் கோபமாகவும் மாறியது. இவன் என்ன மூடில் இருக்கிறான் என்று சரியாகச் சொல்ல முடியவில்லை.
"எங்க ராணிம்மா குடுத்து வச்சவங்க. வேலா வேலைக்கி பொங்கிப் போடுற குக்கர் மாறி ஒரு ஹஸ்பென்ட கிடைக்க.
மாப்ள எனக்கு ஒரே டவுட்டு. நீ ஐஞ்சு லிட்டர் குக்கரா இல்லை பத்து லிட்டரா?." எனச் சந்தேகமாகக் கேட்டனை ரிஷி முறைக்க, சிரித்துக் கொண்டே அங்கிருந்த சமயல் மேடையில் அமர்ந்தான் சம்பத்.
"அத உ ராணிம்மாட்டையே கேட்டுக்க. எந்தங்கச்சி குடுத்து வச்சவன்னு சொல்ல எனக்கும் ஆச தா. ஆனா நீ தா சொல்லிக்கிற மாறி எதுவுமே பண்ணலையே. இனியாவது பண்ணுற ஐடியா இருக்கா. "
"நீ என்ன குடுத்து வச்சவன்னு சொல்லவே வேண்டாம் பா. நா செய்யுற மாறி எதையுமே உந்தங்கச்சி கேக்கமாட்டா. கேட்டாலும் நா செய்யமாட்டேன். எதுக்கு?." என்றவனின் முகத்தில் சிறு சலிப்பு,
"எல்லாம் ஒரு நாள் சரியாகிடும் மச்சி. நம்பு." என்றான் ரிஷி அவனின் தோளில் கை வைத்தபடி,
"ம்... நம்புறேன். ஆனா சரியாகுறதுக்கான சிம்டம்ஸஸே தெரியலையே மாப்ள." என்றவனின் முகத்தில் கவலை இருந்தது. ஏனெனில் முன்பு நந்துவை மட்டுமே பொறாமையோடு பார்த்த பவி இப்போது வைசுவையும் அந்த லிஸ்டில் சேர்த்துக் கொண்டாள். கௌதம் ஹரிணியென அந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போனது தான் சம்பத்தின் கவலை.
அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டுத் தன் வேலையை மும்மரமாகச் செய்தான் தரன். எல்லாம் முடிந்து விட்டது.
மேஜையில் அனைத்தும் ரெடி. தலைவாழை இலை போட்டு இனிப்பிலிருந்து ஆரம்பித்து, வறுவல், பொரியல் எனச் சைவமும் அசைவமும் போட்டி போட்டுக்கொண்டு இலையை நிரப்பியது. அனைவரும் வயிறார உண்ண, கௌதம் இரவு தான் வந்தான். ஹரிணியுடனும் ஜெனியுடனும் சேர்ந்து.
உணவுண்ண அமர்ந்ததுமே அவனுக்குத் தெரிந்து விட்டது, அதைச் சமைத்தது யார் என்று. எனவே பேருக்கு எதையோ கொறித்து விட்டுக் கால் வயிற்றுடன் எழுந்து விட்டான். மற்றவர் கவனத்தை கவரக் கூடாது என்று தான் அந்தக் கால் வயிற்றையும் உண்டான். இல்லையேல் அதுவும் மாட்டான்.
சோர்ந்த நடையுடன் செல்லும் தன் நண்பனைப் பார்த்தவள். சிறிது நேரம் சென்றதும் தட்டில் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு, "டிரைவ் பண்ணதுனால டயர்டா இருக்கும். குளிச்சிட்டு வந்தா பசிக்கும். சோ, இப்ப நா போய் அவனுக்கு இத குடுத்தா சாப்பிடுவான்." எனச் சொல்லி நண்பனைக் காண அறைக்குச் சென்றால் அவன் இல்லை.
மாடியில் பிறையாய் தெரிந்த நிலவை வெறித்துப் பார்த்தபடி நின்றிருக்க, அவனின் தோள் தட்டிவிட்டு அருகில் அமர்ந்து கொண்டாள் ஹரிணி.
"ஏன்டா சரியா சாப்பிடல.?"
"நா நல்லா தா சாப்பிட்டேன். உனக்குத் தா வரவர கண்ணு தெரியமாட்டேங்கிதுன்னு நினைக்கிறேன். நல்ல டாக்டரா பாரு டார்லிங்."
"பொய் சொல்றல்ல நீ. அதுவும் எங்கிட்டையே." என்றாள் குறும்புடன் கண்சிமிட்டபடி. இவன் சிரித்தானே தவிர எதுவும் சொல்லவில்லை. அவன் முன் தட்டை நீட்டி உண்ணச் சொன்னாள் அவள். அதை வாங்கி கையில் வைத்துக் கொண்டவனுடன் பேசத் தொடங்கினாள்.
"கௌதம் எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா.?"
"என்ன டார்லிங் பண்ணனும்?."
"இன்னும் ஆறு நாள்ல ஷோ இருக்கு."
"அதத்தா ரெண்டு மாசமா சொல்லிட்டு திரியுரியே. என்ன அதுக்கு. படம் வரஞ்சி தரனுமா. இல்ல டிரெஸ் தச்சி தரனுமா." என அவளை அறியாமல் அவளுக்குத் தட்டில் இருந்த உணவை ஊட்ட,
"அது எல்லாத்தையும் நாங்களே பாத்துக்கிட்டோம். நாங்க நடத்துறத ஃபேஷன் ஷோ மனுசங்களுக்கு ஏலியன்ஸ்க்கு இல்ல. அப்படி ஏலியன்ஸ்க்கு டிரெஸ் டிசைன் பண்ணும்போது கூப்பிடுறேன். நீ வரஞ்சும் தச்சும் தா." என்றாள் அவன் தந்த உணவு உண்டபடி, தானும் அவனுக்கு ஊட்ட அவன் வாங்க மறுத்து விட்டான். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவள்.
"அப்ப என்ன உதவி செய்யனும் டார்லிங்?."
"உன்னோட கம்பேனில இருந்து என்னோட வேலைக்கி ஆள் தேவ. நா சொல்லுற பாய்ஸ் எல்லாத்தையும் கோவாக்கு கூட்டீட்டு வரனும். அப்றம் நீயே அவங்களுக்கு தலைவனா இருந்து ரேம்ப்ல வாக் பண்ணனும்."
"வாட்! ரேம்ப் வாக்கா... அதெல்லாம் முடியாது. முதல்ல சொன்னியே, அது கூட ஓகே. எத்தன பேரனாலும் எடுத்துக்க. ஓசில கோவா கூட்டீட்டு போறோம்னு சொன்னா போதும், பயலுக குஷி ஆகிடுவானுங்க. ஆனா ரெண்டாவதா சொன்னியே அது முடியாது மா. முடியாது." என்றான் கராராக.
"என்னோட உயிர் நண்பன் இல்லையா நீ?."
"இல்ல."
"சரி... நா உன்னோட உயிர் நம்பி தான. நண்பிக்காகச் செய்ய மாட்டியா?." எனக் கெஞ்ச,
"என்னோட உயிர் நண்பி இல்லம்மா, உயிர எடுக்குற நண்பி நீ." என்றவுடன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.
" ஏய்.! இந்தப் பால் குடிக்கிற பாப்பா மாறி மூஞ்சிய வச்ச பாத்துக்க. அடி வாங்குவ." எனத் தலையில் தட்ட,
"இது என்னோட ட்ரீம் கௌதம். உனக்கே தெரியும்ல. என்னோட ஃபேஷன் ஹவுஸ்க்கு மூடு விழா நடத்த பல பேர் ரிப்பனோட க்யூல காத்துட்டு இருக்காங்க. அதுனால..."
"ரிப்பன வெட்டுற கத்தறிக்கோல நா திருடனுமா என்ன?."
"இதுக்கு பேரு ஜோக்கா!. நல்லா இருந்துச்சு. நா நாளைக்கி இல்ல நாளப்பின்னா சிரிக்கிறேன்."
"என்ன இன்சல்ட் பண்ணிட்ட அதுனால உனக்கு ஹெல்ப்பு கேன்சல். ஆமா! இதுக்குத் தா நீ லஞ்சாம சாப்பாடு எடுத்துட்டு வந்தியா!. நாங்கூட பாசமா வந்தன்னு நினைச்சேன்." என உணவு முழுவதையும் அவளுக்கு ஊட்டியவன் காலி தட்டை அருகில் வைத்தான்.
"ஏ இதுக்கு முன்னாடி நா உனக்குச் சாப்பாடு ஊட்டி விட்டதே இல்லையா?. என்ன போய்ச் சீப்பா நினைச்சுட்டேல்ல. ச்ச." எனக் கோபமாய் திரும்ப,
"சரி சரி... சண்ட போடாத டார்லிங். இந்தக் காசி அல்வாவ உள்ள விட்டு உன்னோட கோபத்த கொறச்சிக்க. இந்தா ஆ..." என ஊட்ட, அவள் வாங்கவில்லை.
"இவ்வளோ நேரம் சாப்பிட்டது நாந்தா. சோ, இத இப்ப சாப்பிடப்போறது நீ." என ஊட்ட வர அவன் வேண்டாம் என்றான்.
"உனக்குத் தா அல்வான்னா பிடிக்குமே. இது சூப்பரா இருக்கும். ரிஷி அவெங்கையாளயே செஞ்சான். ம்... இந்தா..." என வாயின் அருகே கொண்டு செல்ல, அவன் வேண்டாம் என்றான் அழுத்தமாக. இருந்தும் ஹரிணி விடாது வற்புறுத்த, அந்தக் கின்னம் காற்றில் பறந்தது அவனின் கோபத்தால்.
"ஒருக்க சொன்னா புரியாதா உனக்கு. நான் தா வேண்டாம்னு சொல்றேன்ல. சொன்னா கேக்க மாட்டியா. உம்புருஷன் செஞ்சான்னா நீ சாப்பிடு. ஏன்டி கொண்டுவந்து ஏ உயிர எடுக்குற. நாந்தா அவனையே பிடிக்கலன்னு சொல்றேன்ல. இதுல அவெ பண்ணான்னு சொல்லி. ச்ச... இனி அவெ பேர சொல்லிட்டு எங்கிட்ட வராத." என விரல் நீட்டி எச்சரிக்கை செய்ய, ஹரிணி அசையாது அதிர்ந்து போய் நின்றாள்.
கௌதம் ஹரிணியை டி போட்டுப் பேசுவது அபூர்வத்திலும், அபூர்வம். அதுவே அவனின் கோபத்தின் அளவை சொல்லியது. ஆனால் ஏன் இந்தக் கோபம் என்று தான் புரியாமல் குழம்பிப் போனாள்.
கௌதமிற்கு ரிஷியைக் கண்டால் ஆகாது தான். அதனால் அவன் பொருட்களைத் தொடமாட்டேன். அவன் இருக்கும் இடத்தில் இருக்கமாட்டேன் என்றெல்லாம் சொல்லியதில்லை. இது புதிதாக இருந்தது. அவன் ஹரிணியிடம் காட்டிய முகமும் புதிதாக இருந்தது.
"ஏ இப்படி விநோதமா நடந்துக்கிற கௌதம். உனக்கு ஸ்வீட் பிடிக்கும் தான." என்றாள் சிறிய குரலில்.
வெடுக்கென அவள் புறம் திரும்பியவன், "ம் பிடிக்கும் தா. ஆனா அவெ பண்ணத எதுக்கு நா சாப்பிடனும்?." என்றவனின்
கண்கள் கோபத்தை மட்டுமல்ல சொல்ல முடியாத துயரம், பெருங்கவலை, நிராசையெனக் கலவையான உணர்வுகளைக் காட்டியது.
இவற்றைக் கண்டவள் ஏன் என்று புரியாது முழிக்க, அவளின் தோளில் கைப்போட்டு ரிஷியின் அறைக்கு இழுத்து சென்றான்.
"நா சில பேர்ட்ட இருந்து விலகி நிக்கனும் ஆசப் படுறேன் ஹரிணி. முழுசா மறக்கனும். நினைக்கவே கூடாதுன்னும் சில விசயங்கள் எனக்குள்ள இருக்கு. ப்ளிஸ்… நீ எதன்னு கேட்டா, என்னால உங்கிட்ட பொய் சொல்ல முடியாது. அதுனால எங்கிட்ட எதையும் கேக்காத. எங்கிட்ட இருந்து கொஞ்சம் விலகியே இரு. அதுவும் உன்னோட புருஷன் சம்மந்தப்பட்ட விசயமா இருந்தா, எங்கிட்ட வரவே வராதா. இல்லன்னா உன்ன நா காயப்படுத்திடுவேன்." என்று சிறுபிள்ளையை சமாதனம் செய்வது போல் சொல்லி சென்று விட்டான்.
அவனின் திடீர் கோபத்திற்கு காரணம் ரிஷி என்பதை அறிந்தவளுக்கு கோபத்திற்கான காரணம் புரியவில்லை. என்ன நடந்தது அவர்களுக்குள் என்பதும் தெரியவில்லை. நடந்ததை பற்றித் தெரிந்து கொள்ள கௌதமின் வாயைத் திறக்க வைப்பது கடினம் என்பது புரிந்தது.
ஹரிணிக்கு யாரையும் கட்டாயப்படுத்துவது பிடிக்காது. அனுசரித்து நடந்து கொள்ளும் குணம் அவளுடையது.
ஒருவரின் உறவோ இல்லை நட்போ, அது நிலைக்க வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் உங்களிடமிருந்து மறைக்க நினைக்கும் விசயத்தைச் சொல்லச் சொல்லக் கட்டாயப்படுத்த கூடாது. அவர்களே சொல்லும் வரை பொறுமை காக்க வேண்டும்.
ஹரிணிக்கு பொறுமை இருக்குமா என்ன!.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..