அத்தியாயம்: 20
வண்ண வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் தோட்டம் அது.
இந்துவின் பூந்தோட்டம்.
சம்பத், "இன்னுமா இத ஃப்ளாட் போட்டு விக்காம வச்சிருக்கிங்க. ஒரு வேள ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் கிடைக்கலையா!. நா வேண்னா நல்ல பார்ட்டிய கூட்டீட்டு வரவா?."
"உன்னோட இந்த வாய்க்குத் தாய்யா எந்தங்கச்சி வாயிலேயே வதக் வதக்குன்னு குத்துறா. பாத்து வச்சிக்க கடைசி வரைக்கும் சாப்பிட முடியலேன்னா உயிர் வாழ முடியாது. அதுனால வாய் பத்திரம் மச்சான்."
"அதுவும் சரித்தா. ஆமா! உங்கப்பாக்கும் உந்தங்கச்சிக்கும் என்னதாய்யா பிரச்சன. அடுப்புல இருந்து எடுத்து வச்ச கடாய் மாறிச் சூடாவே திரியுறாய்ங்க. பக்கத்துலேயே போக முடியல. அனல் காத்த கண்ணுலையே வச்சிட்டு பார்வையாலே வீசுறானுங்க. ஏ ? நீ கொஞ்சம் தண்ணீ ஊத்தி கூல் பண்ண கூடாதா!."
"தண்ணி ஊத்தலாம் மச்சான். ஆனா அவிங்க ரெண்டு பேரும் விசித்திரமானவிங்க. தண்ணிய பாத்ததும் ஆசிட்டுன்னு சொல்லிச் சூடா கத்துவானுங்க. எதுக்கு அதெல்லாம். பவியே மனசு மாறி இறங்கி வரட்டும், அதுக்கப்பறம் பாத்துக்கலாம். என்ன மனசு மாறுறதுக்கு ஒரு மாசமோ, இல்ல ஒரு வர்ஷமோ, ஏ மாறமலேயே போகலாம்."
"அப்ப என்னோட நிலம!."
"கொஞ்சம் இல்ல ரொம்பவே கஷ்டம் தா. இதெல்லாத்தையும் நீ பவி கழுத்துல தாலி கட்டும்போது யோசிச்சிருக்கனும். எங்க ராணிம்மா சொல்லிட்டாங்க 'ஓகே.'ன்னு கண்ண மூடீட்டு கதவிடுக்குல கைய விடக் கூடாது மச்சான். நாந்தா, 'தம்பி போய்...டு'ங்கிற மாறிச் சைக குடுத்தேன்ல."
"நா அத கவனிக்கலையே."
"வாட் டு டூ... இனி ஒன்னுமே பண்ண முடியாது. முசோலினிய கட்டிக்கிட்டா! ஹிட்லர் ஃப்ரீ. அட ஓசி தா மச்சான்... சிரி." என்ற கௌதமை அடிக்கப் பாய்ந்த சம்பத்தின் பார்வை தன் மனைவியை நோக்கியது. அவளின் முகம் ஏதோ சிந்தனையில் இருப்பது போல் இருந்தது. வேறென்ன சம்பத்தை எப்படி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என்பது தான். பக்கத்தில் கலியபெருமாள் வேறு இருந்தார்.
பெரியவர்கள் சிறுவர்கள் என அனைவரும் விளையாடுவதும் வேடிக்கை பார்ப்பதுமாகச் சந்தோஷமாக இருக்க, கலியபெருமாளும் பவித்ராவும் மட்டும் தனியாக ஓரிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டே இருந்தனர். பேசுவதில் பிரச்சனை இல்லை, ஆனால் மற்றவர்களை அவ்வப்போது கோபமாக முறைத்துக் கொண்டு இருப்பது தான் பிரச்சினை.
"ஒருக்கையாது எந்தங்கச்சி பேச்ச கேட்டு டாக்டர போய்த்தா பாறேன். உடனே கோபம் தனிஞ்சிடும்."
"எல்லாத்தையும் பாத்தாச்சு பாத்தாச்சு. டாக்டரே, இவளுக்கு ட்ரீட்மெண்ட் பாக்க முடியாத அளவுக்கு வினோத வியாதி இருக்குன்னு சொல்டாரு. முதல்ல வியாதி என்னனு கண்டு பிடிக்கனுமாம். அதுக்கப்பறம் தா மருந்து கண்டு பிடிக்கப் போறாங்களாம். கண்டு பிடிச்சா சாகுறதுக்குள்ள தகவல் வந்து தந்திடுறோம்னு சொல்லி மெயில் அனுப்பிருக்காரு."
"ஐய்யையோ!. வியாதியா! இத இப்படியே போய் ஹிட்லர் கிட்ட சொல்லிடாதண்ணே. உடனே பஞ்சாயத்த கூட்டப்போறாரு. மனுஷெ கொஞ்ச நாளா ஆளே வித்தியாசமா இருக்காரு. ஏன்னு தாத்தெரியல." ஹிரிணி, கையில் இருந்த பலூன்களை முடிச்சிட்ட படி அமர்ந்திருந்தாள்.
"ஆமா மச்சான். மகளுக்கு ஒன்னுன்னா ஹிட்லர் பேச்சுவார்த்தல்லாம் நடத்த மாட்டாரு. ஸ்டெய்ட்டா குண்டு வீச்சு தா. அதுவும் சாதா குண்டு இல்ல. அணுக் குண்டு." கௌதம் சொல்ல இருவரும் சிரித்தனர்.
கொஞ்சம் சத்தமாகச் சிரித்துவிட்டனர் போலும், அது தூரத்தில் இருந்த பவித்ராவுக்கும் கலியபெருமாளுக்கும் கேட்க, இருவரும் ஒரு சேர கௌதமை முறைத்தனர். அப்படி பாசமாய் பார்ப்பதற்கு கலியபெருமாளுக்கும் காரணம் இருந்தது. பவித்ராவிற்கும் இருந்தது.
என்ன தான் மகன் தனியாகக் கம்பெனி ஆரம்பித்து, ஊருக்குள் பெரியாளாக வளர்ந்து நின்றாலும், அவருக்குக் கௌதம் எப்போதுமே ராசி இல்லாதவன் தான். தன் மகள் இறக்க காரணமான கொலைகாரன் தான். பொம்பளப் பொறுக்கி தான். எனவே அவர் பேசவே மாட்டார். மட்டம் தட்டக்கூட லாயக்கு இல்லாதவன் என்ற நினைப்பு அவருக்கு.
கலியபெருமாளுக்கு தன் மனைவி ஜோதியுடன் கௌதம் பேசுவது பிடிக்கவில்லை. மற்றவர்கள் எப்படி போனால் என்ன, தன் மனைவியாது தன் பேச்சைக் கேட்டு, கௌதமிடமிருந்து விலகி இருப்பாள் என்று நினைத்தவருக்கு பெரிய அடி குடுத்தார் போல் இரு ஆண்டுகளாக மகன் மகன் என உருகுவது அறவே பிடிக்கவில்லை அவருக்கு. எனவே முழுதாக மகளுடன் ஒன்றிக் கொண்டார் அவர். மகளிடம் சாதா சர்வமும் கௌதமை குறை பாடுவதும் வசைபாடுவதும் தான் அவரின் வேலை. மகனைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாத தந்தை.
இந்துவின் வளைகாப்பு அன்று மாசமாகாத பெண்ணின் கையில், நிறை மாத கர்ப்பிணி வளையல் அணிவித்து விட்டால் உடனே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என அங்கிருந்த மூத்த தலைமுறை பெண்கள் சொல்லி இந்துவைப் பவித்ராவின் கையில் வளையல் போடச் சொன்னார்கள். அனைவர் முன்னிலையிலும் அது பவித்ராவிற்கு பெரும் அவமானம் ஆகிவிட்டது.
இந்து அணிவிக்க வந்து வளையலைத் தூக்கி எரிந்தவள் அனைவர் முன்னிலையிலும் கோபமாக இந்துவைக் கத்த, கௌதமும் ஜோதியும் கண்டித்தனர். இந்துவைத் திட்டியதற்கு மட்டும் தான் கௌதம் பவியை திட்டினான்.
அவள் இந்துவிடம் காட்டாது குழந்தை இல்லையெனப் பேசிய பெண்களிடம் கோபத்தை காட்டியிருந்தால் கண்டிப்பாகத் தங்கைக்கு அருகில் நின்றிருப்பான். அதை அவள் புரிந்து கொள்ளவில்லை.
தாயும் தமயனும் தனக்கு ஆதரவாக வராமல் இருந்தது பவித்ராவை பாதித்தது. அதுவரை குழந்தைக்காக எதிர்பார்ப்பும் ஏக்கமும் மட்டுமே இருந்த நிலையில், இப்போது குழந்தையைத் தன் கௌரவமாக நினைத்து, உடனே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சண்டை போடுகிறாள்.
"நாலு பேர் நம்மல மதிச்சி நடக்கனும்னா குழந்த ரொம்ப முக்கியம் பவிம்மா. உன்ன ஏளனமா பேசுன அத்தன பேருக்கும் முன்னாடி, நீ தலை நிமிந்து நிக்கனும்னா குழந்த கண்டிப்பா வேணும். டெஸ்ட்டியூப் பேபியா இருந்தா கூடப் பரவாயில்லை பவி. லட்சக்கணக்குல காசு தந்து அப்பா உனக்கு உதவி செய்றேன். ஆனா அந்தத் தறுதல பேச்ச மட்டும் கேட்டுடாதம்மா. அவெ பேச்ச கேட்டுட்டு தா மாப்பிள்ளையும் ட்ரீட்மெண்ட்க்கு சம்மதிக்க மாட்டேங்கிறாரு. இந்த ****பயெ தான் பேசிப் பேசி மாப்பிள்ளை மனச கெடுத்து வச்சிருக்கான். எனக்கு இருக்குற ஒரே பிள்ள நீ மட்டும் தாம்மா. அப்பா இருக்கேன் டா உனக்கு." என எந்த வழியிலாவது பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கலியபெருமாளும் அவளின் பிடிவாதத்திற்கு துபாம் போடுகிறார்.
"ஐய்யையோ முசோலினி நம்மள முறைக்குறா!. நா இல்லப்பா!."என ஹரிணி திரும்பிக் கொள்ள,
"மச்சான் அவகிட்ட போய், நாலு நாள் நாலு பேர் கூட அன்பா பேசினா உடனே நினச்சதெல்லாம் நடக்கும்னு சொல்லுங்க. அந்த நாலு பேர்ல என்ன மூனாவதாவும். உங்கள நாலாவதாவும் சேத்துக்க சொல்லுங்களேன். " எனக் கௌதம் கேலி செய்ய,
"எக்ஸ்க்யூஸ் மீ. நீங்க நடத்தீட்டு இருக்குற இந்த மீட்டிங் எந்தக் கட்சியோடது. அதோட பேரு என்னனு நா தெரிஞ்சுக்கலாமா." பேசிக் கொண்டிருந்த மூவரின் அருகில் வந்து கேட்டான் நந்து.
"கட்சியா!. மூணு பேர் சேந்தாலே கட்சி தொடங்கிடலாமா என்ன!. அப்படி ஸ்டார்ட் பண்ணா நா பொது செயலாளர். ஹரிணி நீ கொள்கைய பரப்பு. இதோ இவரு தா அதுக்கு தலைவரு. தலைவா சில்வண்டு கேள்வி கேக்குது. பதில் சொல்லுங்க." கௌதம் சம்பத்தை கோர்த்துவிட,
"ஓ... நீங்க தா தலைவரா. பேரே இல்லாத உங்க கட்சிக்கு நிதி எப்படி வருது. யாராவது குடுக்குறாங்களா?. இல்ல நீங்களே முகமூடி போட்டுக்கிட்டு கொல்ல அடிச்சிட்டு வாரிங்களா." என்ற நந்துவின் தலையில் தட்டினாள் ஹரிணி.
"ஏண்டா காலங்காத்தால வந்து சம்மந்தமே இல்லாம ப்ளேடு போடுற.”
"நானா!!. இருக்கட்டும் போட்டுட்டு போறேன். உங்களுக்கு என்ன வேல குடுத்தேன் நா. ம்... அத பண்ணாம இந்த வெட்டிப் பசங்க கூட நின்னு வெட்டியா பேசீட்டு, என்ன வெட்டி ஆஃபீஸர்ன்னு சொல்றிங்களே நியாயமா இது." ரோசமாக,
சம்பத், "டேய் அர டிக்கெட்டு. நீ குடுத்த நாலு பாக்கெட் பலூன்லையும் தண்ணிய ஃபில் பண்ணியாச்சுல. இன்னும் என்னடா பண்ணனும் உனக்கு.?"
"Paternal Uncle. நாலு பாக்கெட்டுக்கே இந்த டயர்டு ஆணிங்கன்னா!. நா வச்சிருக்குற நாப்பது பாக்கெட்ட யார வச்சி ஊதுறது?. சொல்லுங்க?."
"எது நாப்பதா!!." மூவரும் ஒரு சேர கேட்க, சிரித்தான் நந்து.
வருண், "சித்தா நீயும் வா. லதா அத்த என்னோட வாட்டர் பலூன திருடுறாங்க. என்னனு கேளுங்க. வந்து மிரட்டுங்க அத்தைய."
கௌதமுடன் பேசிக் கொண்டிருந்தவனின் தலையில் வாட்டர் பலூனைத் தூக்கி போட்டு, அவனை ஈரமாக்கினான் நந்து.
"வருண் அவுட்." என நந்து கத்த,
"டேய்!. உன்ன விடமாட்டேன் டா." எனக் கத்திக் கொண்டே வருண் துரத்தினான்.
விளையாட்டு என்றேனே அது என்னவென்று தெரியுமா உங்களுக்கு.? தோட்டத்தில் வடக்கு தெற்கு என இரு எதிர் எதிர் இடங்களில் இரு board வைக்கப்பட்டிருக்கும். அதில் சிறுவர்கள் முதலில் வண்ணக் கலவைகளைக் கொண்டு படம் வரைந்திருப்பர்.
இரு அணி. இரு board. ஒவ்வொரு அணியும் தங்கள் board-டை பாதுகாத்துக் கொண்டே, எதிர் அணியின் உள்ள போர்டின் வரைபடத்தை அழிக்க வேண்டும். அதுவும் நீர் நிரப்பப்பட்ட துப்பாக்கி மற்றும் பலூன்களின் உதவியோடு.
கையில் வாட்டர் கன், குப்பைத் தொட்டியைக் கயிறு கொண்டு இணைத்து முதுகில் தொங்க விட்டுள்ளனர். தலையில் ஒரு தொப்பி. அதில் வட்ட வடிவமான வளையத்தை வைத்து அதில் டிஸ்யூ பேப்பர் கொண்டு மூடியிருந்தனர். ஒரு அணியின் நபர் மற்றொரு அணியின் நபரின் வளையத்தில் உள்ள பேப்பரை நீர் ஊற்றிக் கிழித்தால் அந்த நபர் அவுட். வெளிய தள்ளப்படுவார்.
போட்டியாளர்கள் மட்டுமே செடிகளுக்குள் சென்று மறைந்து நின்று தாக்குவர். பெரியவர்கள் வேலை பலூனை நீரால் நிரப்பித் தருவது.
நந்து, "இது தா விளையாட்டு. இந்த நந்து கண்டு பிடிச்ச விளையாட்டு. ஹாஹாஹா... உங்களாலா முடிஞ்சா நீங்களும் ட்ரைய் பண்ணுங்க. செம்ம ஜாலியா இருக்கு. அடுத்தவெ மூஞ்சில பலூனா தூக்கிப் போட்டு உடைக்கிறது நல்லா தாய்யா இருக்கு."
பிரகாஷ், சுதா, வருண், வைசு ஒரு டீம். அசோக், லதா, நந்து, அப்றம் வேற யாரு நம் ஜெனி தா.
"ஜெனி அக்கா இது நாம திட்டம் போட்டுச் செயல்பட வேண்டிய நேரம்."
"கரெக்ட்டு. திட்டம் போடனும். நீ போட்டு வச்சிருக்கியா என்ன?."
"ஒரு சின்னப் பையங்கிட்ட போய்ப் பெரிய வேலைய குடுக்குறிங்களே, தப்பில்லையா இது. கொஞ்சம் வளந்த பெரிய ஆளா நீங்களே திட்டத்த போட்டு என்ன செய்யனுமோ சொல்லுங்க. அத மட்டும் தா நா செய்வேன்." நந்து சொல்ல ஜெனி முறைத்தாள் அவனை.
"நந்து அங்க பாரு உங்கம்மா தனியா போறாங்க."
"வாங்க வழி மறிச்சு தண்ணி தெளிச்சு விடுவோம்." என வைசுவை தாக்க அவளின் அருகில் சென்றனர். சரியாகத் தண்ணீர் அடிக்கப் போகும் சமயம் பிரகாஷ் வந்து நந்துவின் வளையத்தில் ஓட்டை போட்டு அவுட்டாக்க, நந்து ஒத்துக் கொள்ளாமல் கோபமாய் பிரகாஷின் மீது ஏறி அமர்ந்து கொண்டான்.
"டேய் இறங்கு டா கீழ. பஸ்ஸுல ஏறிச் சீட்ல உக்காருறவெ மாறி எங்கழுத்துல ஏன்டா உக்காந்திருக்க. இறங்குடா."எனக் கத்திக் கொண்டே தலையைச் சிலுப்ப,
"என்ன அவுட் ஆக்கிட்டிங்கள்ள. உங்களையும் அவுட்டாக்காம விடமாட்டேன்." எனத் தலை முடியைப் பிடித்து உலுக்க, ஜெனி அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி பிரகாஷை அவுட் ஆக்கினாள்.
வைசு, "இது போங்கு. இதெல்லாம் ஏத்துக்க முடியாது. நந்து நீ பண்ணது சீட்டிங். இறங்கு கீழ."
"நா இறங்குறேன். மாமாவ அவுட்டுன்னு ஒத்துக்க சொல்லுங்க."
"முடியாது. நீ இறங்கு முதல்ல." வைசு கத்த, அங்கு மினி கலவரமே நடந்தது. அதைப் பயன்படுத்தி வைசுவை அவுட்டாக்கினான் அசோக்.
"அசோ...க்... யூ டூ சீட்டர்."
"நீ அப்றமா சண்ட போட்டுக்க. இப்ப நாங்க வின் பண்ணிட்டோம். ஹே." எனச் சுதாவையும் வருணையும் காட்ட. அவர்களை அவுட்டாக்கி இருந்தான் அசோக்.
"ஹேய். நாங்க வீன் பண்ணீட்டோம். வீ வேர் ராக்ஸ். கலக்கிட்டிங்க பாதர் அப்பா. ஹே." எனப் பிரகாஷின் கழுத்தை விட்டு இறங்காமலேயே குதிக்க,
"தயவு செய்து கீழ இறங்கி போய்க் கொண்டாடுங்கடா. ஏற்கனவே கல்ல தூக்கி கழுத்துல வச்ச மாறி இருக்கு. இதுல நீ குதிச்சா தாங்காதுடா."என்றான் வலியுடன்.
"அப்ப நாங்க வீன்னர்ங்கிறத ஒத்துக்குறீங்களா."
"ஒத்துக்கிறேன் டா. இறங்கு டா." என இறக்கி விட,
"குட் பாய். அடுத்த மொறயாது சின்னப் பசங்கள ஏமாத்தாம நியாயமா விளையாண்டு என்ன மாறி ஜெயிங்க. அது தா நாட்டுக்கு நல்லது. என்ன அப்பா பாதர் நாஞ்சொன்னது சரி தான. " எனத் தந்தையிடம் கருத்து கேட்க.
"மை சன் சொன்னா. எல்லாமே சரியாதா இருக்கும்."என அவனைத் தூக்கி சுத்தினான் அசோக்.
"ஏமாத்தி வின் பண்ணீட்டு எங்களையே கேலி பண்றிங்களா. இருங்க உங்கள." என வைசு அவர்கள் அடிக்க வர,
"அப்பா அம்மா கட்டையோட வர்றாங்க. நாம சட்டையோட தப்பிக்கனும்னா ஓடுங்க." என ஓடத் துரத்தினாள் இருவரையும். அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு இருந்த ஜெனியை ஏற இறங்க பார்த்தான் பிரகாஷ்.
"ஏ அப்படி பாக்குறீங்க." அவனின் பார்வை ஒருவித அசௌகர்யத்தை உண்டாக்கியது அவளுக்கு.
"இல்ல எங்க எல்லார் மேலையும் ஒரு பலூனாச்சும் பட்டு மூஞ்சி புல்லா கழுவிடுச்சு. ஆனா உனக்கு மட்டும் காலைல போட்ட பேக் அப் கூடக் கலையலயே. அதா பாத்தேன்."
"ஏன்னா யாருமே எம்மேல பலூன எரியல....ஆ...." எனச் சொல்லி முடிக்கும் முன் பிரகாஷ் அவளின் மேக்கப்பில் நீர் ஊற்றினான் பலூன் கொண்டு. அவனின் மீது தூக்கிப் போடுவதற்கு எதுவும் இல்லாததால் அவள் ஓட இவன் துரத்தினான்.
இதைத் தூரத்திலிருந்து பார்த்த ஹரிணிக்கு எதுவோ நெருடியது.
"கௌதம் எங்கண்ணுக்கு பிரகாஷ் ஜெனிய கரெக்ட் பண்ண ரூட் விடுற மாறித் தெரியுது. உனக்கும் அப்படித்தா தெரியுதா. "
"வாய்ல போடு. ரூட்டு கீட்டுன்னு தப்பு தப்பாலாம் பேசக் கூடாது. எந்தம்பிய பத்தி என்ன நினைச்ச. அவெ சொக்கதங்கம். அவனப்போய். ச்ச... அவெ கரெக்ட் பண்ண ரூட் விடல கல்யாணம் பண்ண ரூட் விடுறான்."என விளையாட்டாகச் சொல்ல. ஹரிணி தீவிரமாகக் கௌதமை முறைத்தாள்.
"ஏ இந்தப் பாசப் பார்வை."
"உனக்கு ஜெனியப்பத்தி எல்லாம் தெரியும்ல. அப்றம் ஏ பிரகாஷ் மனசுல ஆசைய வளக்க விடுற. காதல் அது இதுன்னு கோட்ட கட்டி அது இடிஞ்சு போச்சுன்ன அவனால தாங்கிக்க முடியாது. முதல்ல ஜெனிய பத்தின உண்மைய பிரகாஷ்ட்ட சொல்லு. அவனே புரிஞ்சிட்டு விலகிப்பான்." எனச் சீரியஸ்ஸாக சொல்ல. கௌதம் யோசிக்கலானான்.
பிரகாஷ் தன் நெஞ்சில் கோட்டை எல்லாம் கட்டவில்லை. கோயிலே கட்டி அதுல ஜெனியை வைத்திருக்கிறான் என்று கௌதமிற்கு தெரியும். அதனால் கௌதம் அவனிடம் எப்படி சொல்லிப் புரிய வைப்பது என்று தெரியாமல் முழித்தான்
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..