அத்தியாயம்: 25
அன்பில் அவன் சேர்த்த இதை
மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என நினைத்த இதை
வீணாக மிதிக்காதீர்கள்
உயிரே
உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல்
புயல் வெயில் மழை
மாலை சோலை இவை
ஒன்றாகக் கடப்போமே
ஸ்பீக்கர் பாக்ஸில் ஏ ஆர் ரஹ்மானின் இசை ஒலிக்க, அந்தப் பாடலுக்கு ஏற்றவாறு மேடையில் நடமாடிக் கொண்டிருந்தனர் மணமக்கள் இருவரும். அவர்களை வளைத்து வளைத்து ஃபோட்டோகிராப்பர்ஸ் மட்டுமல்லாது மற்ற உறவினர்களும் கூச்சலிட்டுக் கொண்டே தங்கள் மொபைலில் படம் பிடித்துக் கொண்டு இருந்தனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அந்தத் திருமண வீடே குதுகளித்தது.
"இந்த மாறித்தா மச்சான் கல்யாணம் பண்ணனும். பொண்ணும் பையனும் என்னாம்மா ஆடுதுக!. நம்ம ஊர்லலாம் பொண்ணு பக்கத்துல போனாலே கொல குத்தம் பண்ண மாறிச் சொந்தக்காரனுங்க கதறுறானுங்க. பேசாட்டிக்கி இந்தக் கல்யாணம் மண்டபத்துலையே ஒரு ஆளப் பாத்து தாலி கட்டீட்ட வேண்டியது தா. நீ என்னடா சொல்ற." சரவணன். பிரகாஷின் நண்பன்.
"ஓ!. பண்ணிடலாமே!. ஆனா உங்கல்யாணத்துல நீயும் பொண்ணும் டான்ஸ் ஆடுறதுக்கு பதிலா, உங்கப்பத்தாவும் அப்பாவும் கைல வெளக்கமாத்த எடுத்துட்டு ஆடுவாங்க. பரவாயில்லையா." விஜய். கௌதம் கூறியதால் பிரகாஷுடன் வந்திருந்தான்.
"ஐய்யோ!. கற்பன பண்ணி பாக்கவே முடியல. ஏ மாப்ள நீ வந்து எங்க வீட்டுல பேசிப்பாக்குறியா. உம் பேச்சுக்கு மரியாத இருக்கும்டா எங்க வீட்டுல." என அவர்களின் உரையாடலில் பிரகாஷையும் இழுக்க, அவன் எதையும் கண்டு கொள்ளாது அமைதியாக அமர்ந்திருந்தான். மற்றவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, ‘என்ன செய்யலாம்’ எனச் சைகை செய்ய,
"போலாம்." என எழுந்தான் பிரகாஷ்.
"என்னப்பா நீ கல்யாணத்துக்கு வந்துட்டு கிஃப்ட்ட குடுத்துட்டு சாப்டாம போகச் சொல்ற. வா பந்திக்கி போய்ட்டு ரூம்க்கு போவோம்." என உணவுன்ன அழைத்ததோடு மட்டுமல்லாது பிரகாஷையும் சாப்பிட வைத்து அறைக்கு அழைத்துச் சென்றனர் அவனின் மூன்று நண்பர்களும் விஜயும்.
மாலைப் பொழுதில் வரவேற்பு. பின் இரவு ஒரு விடுதியில் தூக்கம். காலையில் விஜிபி போகலாமெனத் திட்டமிட்டு வந்துள்ளனர்.
" டேய் பிரகாஷு. என்னால உன்னோட ஃபீலிங்க புரிஞ்சுக்க முடியுதுய்யா. நானும் உன்ன மாறித்தா இந்துவ உயிருக்கு உயிரா விரும்புனேன். ஆனா அவா நிமிந்து கூடப் பாக்க மாட்டேன்னுடா. இப்ப..." என்றவனை பேச விடாது பிரகாஷ் சட்டையைப் பற்றினான் கோபமாக,
"நீ பண்ணது ஒன் ஸ்சைடா லவ்வு டா. அத்தோட இந்து கிட்ட நீ நடந்துகிட்டதுக்கு பேரு பொறுக்கி தனம். உன்ன அப்பவே கைய கால உடச்சி போலிஸ்ட்ட பிடிச்சி குடுத்திருக்கனும். இல்லன்னா கொன்னிருக்கனும். ச்சி... உன்னோட போய் என்ன கம்பேர் பண்ணி பேசுற பாரு. கௌதம அண்ணே சொன்னாருங்கிறதுக்காகத் தா உன்னைய சேத்துக்கிட்டேன். இல்லன்னா."
"அதே கௌதம் சொன்னாருங்கிறதுக்காகத் தா நானும் உங்கூட இருக்கேன். பொறுக்கி தனம் பண்ணோம்மாப்பல பொறுக்கி தனம். அதெல்லாம் அப்ப. இப்ப மாறிட்டோம்ய்யா. அது தெரியாம பேசுற. ஒரு பக்கமோ ரெண்டு பக்கமோ. நமக்குப் பிடிச்ச பொண்ணு அடுத்தவன கட்டிக்கும்போது நமக்குக் கிடைக்கிற வலி பொதுவானது தா. அதத்தா சொன்னேன். மத்தபடி சில்வண்டு கூடல்லாம் சிறுத்தைய கம்பேர் பண்ணி பேச முடியுமா."
"இதுல சிறுத்த யாருன்னு நீ சொல்லவே இல்ல மச்சான்." சரவணன் கேலியாக,
"அடிங்க." என விஜய் பாய, இருவரும் ஒற்றை அறைக்குள் விளையாடினர். பிரகாஷ் வேகமாகத் தன் பையை எடுத்துக்கொண்டு எழுந்தான்.
"எங்க போற இந்த நேரத்துல. இது பேய் ஜோடி போட்டுட்டு ரொமான்ஸ் பண்ற நேரம்ய்யா. அதுகலாது சந்தோஷமா இருக்க விடு." விஜய். அவனைப் போகவிடாது பையைப் பிடித்துக் கொண்டான்.
"நீங்க நாலு பேரும் இருந்து பாத்துட்டு வாங்க. நா போறேன்." என டிக்கெட்களை கட்டிலில் வீசி எரிய, விஜய் அவனைப் போகவிடாது இருக்க செய்தான் கௌதமை காரணம் காட்டி.
அமைதியாகப் படுத்துக் கொண்ட பிரகாஷை பார்த்து, "நா விஜிபில மெரைன் கிங்டம்னு புதுசா ஒரு மீன் கண்காட்சி வச்சிருக்குறதா கேள்வி பட்டேன். கண்ணாடி கொகைக்குள்ள நாம நடக்குறது நம்ம தலைக்கு மேல சுறா மீன் நீந்திப் போறதுன்னு எல்லாத்தையும் பாத்துடலாம்னு நினைச்சேன். எங்க நீ கோய்ச்சிட்டு போய்ட்டா அத பாக்க முடியாதுன்னு ஒரே நிமிஷம் பயந்துட்டேன். நல்ல வேல பண்ண மச்சான்." என விஜயை பாராட்ட, அவன் சரவணனை கேலி செய்ய என இரவு முடிந்து பகல் வந்தது.
பிரகாஷிற்கு விருப்பமே இல்லை. ஆனாலும் தன்னை உற்சாகப்படுத்துகிறேன் என்ற பெயரில் தன் நண்பர்கள் படும் கஷ்டத்திற்காக உடன் வந்தான். சந்தோஷமாக இருக்க முயற்சியும் செய்தான்.
"மச்சான் இது வாரநாள். 11 மணிக்குத் தா அத தொறப்பாங்க. அதுனால காலைல சாப்பாட்ட முடிச்சிட்டு போலாம்." எனச் சரவணன் சொல்ல ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.
சாப்பாட்டை ஆர்டர் குடுத்து விட்டு அமரப் பிரகாஷை நோக்கிக் கைக்காட்டினாள் ஒரு பெண்.
"பிரகாஷ்... ஜெனி." என விஜய் சொல்ல வேகவேகமாகத் திரும்பிப் பார்த்தான் பிரகாஷ்.
நீல நிற சுடிதாரில் இவர்களை நோக்கி ஓடி வந்தாள் ஜெனிபர். வெகுநேரம் இவர்களை ஃபாலோ செய்திருப்பாள் போலும். வந்து நின்றவளுக்கு மூச்சு வாங்கியது.
"நடந்து போனா பின்னாடி யாராது வர்ராங்களா ன்னு திரும்பிலாம் பாக்க மாட்டிங்களா!. ரொம்ப நேரமா கத்திட்டு வர்றேன் தெரியுமா?." எனப் பிரகாஷின் அருகில் அமர்ந்து கொண்டாள் ஜெனிபர்.
"ஹாய் பிரகாஷ். நீங்க எப்ப வந்திங்க சென்னைக்கி. உங்கள நா இங்க எதிர்பாக்கல. நீங்க ஹோட்டல் இருந்து வெளில வந்தப்பவே பாத்துட்டேன். நா கூப்டது உங்களுக்குக் கேக்கல போல." எனப் பொதுவாகச் சொல்லிச் சிரித்தாள் அவள்.
பிரகாஷிற்கு கேட்கத்தான் செய்யது. ஆனால் அதைப் பிரம்மை என்று ஒதுக்கி வைத்துவிட்டான். இப்போது கூடத் தன் அருகில் இருப்பது அவள் தானா என்ற சந்தேகம் வந்தது அவனுக்கு. மனமானது அவளை ரசிக்கச் சொல்ல மூளை அவளை விரட்டி விடு என்றது.
ஜெனி இன்னும் சில நாட்களில் அடுத்தவன் மனைவி என்ற எண்ணமே இல்லாமல் மற்றவர்களுடன் பேசச் சிரிக்க, பிரகாஷிற்கு கடுப்பாக இருந்தது. உணவு வர அவளும் அவர்களுடன் சேர்ந்து உண்டாள். பில் கூட அவளே கொடுத்தாள். வேண்டாமெனத் தடுக்க போன பிரகாஷை, "யோவ் பொண்ணுங்க எப்பவாது தாய்யா பர்ஸையே ஓப்பன் பண்ணவாங்க. அதையும் வேண்டாம்னு தடுத்தா தப்புய்யா அது." எனச் சரவணன் தடுக்க, அவனை முறைத்தான் பிரகாஷ்.
"எதுக்குய்யா மொறைக்கிற. நமக்குக் காசு மிச்சம். கைச்செலவுக்கு ஆச்சின்னு சந்தோஷப்படுவியா அத விட்டுட்டு... சாப்பாட்டுக்கு காச குடுத்து அந்தப் பிள்ளைய அசிங்கப்படுத்தாய்யா. அது நமக்குன்னு ஆசையா செய்து." என விஜய் சொல்ல, அதற்கும் முறைத்தான் பிரகாஷ்.
அப்பாடா சாப்டாச்சு. அடுத்து என்ன இவள வழியனுப்பிட்டு. நாம வீட்டு பக்கம் போக வேண்டியது தா என அவளுக்கு டாட்டா காட்ட தயாராகினான் பிரகாஷ். ஆனால் அவளோ!.
"அப்றம் எங்கையாது போய்ச் சுத்திப்பாக்க ப்ளான் வச்சிருப்பிங்களே. நானும் உங்க கூட வரட்டா. எனக்கும் சென்னைல ஊர் சுத்த நிறைய இடம் இருக்கு. லிஸ்ட் போட்டு வச்சிருக்கேன்." என அவர்களுடன் வெளியே செல்ல ரெடியாக இருந்தாள் ஜெனிபர்.
"இல்லங்க ஆறு பசங்களுக்கு நடுவுல ஒரு பொண்ணு இருந்தா நல்லா இருக்காது. நீங்கப் போங்க. நாங்க சுதந்திரமா சரக்கடிச்சிட்டே." எனப் பிரகாஷின் நண்பன் பேச,
"எது சரக்கா?. நீங்கக் குடிப்பிங்களா பிரகாஷ்.? வேண்டாமே அந்தப் பழக்கம்." ஜெனி உரிமையா பேச,
"ச்சச்ச... மச்சானுக்கு அந்தப் பழக்கம் கிடையாது. நாங்க தா, அதுவும் அளவோடதா. வெளி ஊரு இல்லையா. அப்றம் போலிஸ் ஸ்டேஷன்ல தா தூங்க வேண்டி இருக்கும்." என சொல்லிச் சிரித்தான் சரவணன்.
" இப்ப எங்க போப்போறிங்க?."
"நாங்க எல்லாரும் விஜிபி மெரைன் கிங்டம் போறோம். நீங்களும் வந்தா நல்லா இருக்கும். இந்தாங்க டிக்கெட்." என விஜய் முந்திக்கொண்டு பேச,
"சூப்பர் ப்ளான். நா இப்பவே ஆன்லைன்ல ஸ்னோ கிங்டம்க்கும் டிக்கெட் எடுக்குறேன். அதுவும் நல்லா இருக்கும்." என ஜெனி சொல்ல, ஒரே நேரத்தில் ரெண்டு வாய்ப்பா என நண்பர்கள் குதுகலித்தனர்.
"இல்ல ஜெனிபர். சரிப்படாது. நாங்க மட்டும் போய்க்கிறோம்." என அவளை வரவேண்டாமென நேரடியாகக் கூறினான் பிரகாஷ்.
"நானும் வர்றேனே. நா உங்கள பாக்கலன்னா கூட ஒன்னும் தெரியாது. பாத்துட்டேன்ல. உங்ககூட இன்னைக்கி டயம் ஸ்பென்ட் பண்ணனும்னு ஆசப் படுறேன். ப்ளீஸ்..." உடன் வருவேன் என வெளிப்படையாகக் கேட்டாள்.
"அதனால ஒன்னுமில்ல. வாங்க. நா டாக்ஸி புக் பண்றேன்." விஜய்.
"நா ஸ்கூட்டீல வந்தேனே. அத என்ன பண்ண?."
"ஓ!. அப்ப நாங்க ஆட்டோல வர்றோம். டேய் பிரகாஷு நீ அவங்க கூட வண்டில வா." விஜய் நேக்காக இருவரையும் ஒன்று சேர்க்க, மறுப்பு சொல்லாது அவளை ஸ்கூட்டியில் ஏறிக்கொண்டு வந்தான்.
தன் தோளில் கரம் வைத்துப் பின்னால் அவள் அமரும்போது அவனின் தேகம் சிலிர்ப்பதை உணர்ந்தான். ஆனால் அவளோ இதை அறியாது வழி நெடுகிலும் பேச்சை நிறுத்தவே இல்லை. தன் பள்ளிப்பருவத்தை பற்றியும் கேரளாவில் தன் தந்தையுடன் இது போன்ற ஒரு தீம் பார்க் சென்ற கதையையும் பேசிக் கொண்டே வர. பிரகாஷின் மனம் அதை மெல்லிய சிரிப்புடன் ரசித்தது. எப்பொழுதும் அவன் பேசிக் கொண்டே இருப்பான். ஜெனி சிரிப்புடன் கேட்பாள். ஆனால் இன்று நிலையைத் தலைகீழாக மாறி இருந்தது.
ஒரு மணி நேரம் பனியில் விளையாட அனுமதி சீட்டைக் காட்டி உள்ளே செல்ல, ஜெனி பிரகாஷின் கையை இறுக்க பிடித்துக் கொண்டாள்,
"இன்னைக்கி தா நா ஸ்னோவ பாக்குறேன். சில்லுன்னு இருக்கு." எனக் கூறிக்கொண்டே.
சிறிய கிறிஸ்துமஸ் வீடு, பென்குவின் சிலைகள் எல்லாம் செல்ஃபி எடுக்க வைக்கப்பட்டிருந்தது. சிறுவர்கள், பெரியவர்கள் விளையாடச் சறுக்கல்கள் இருந்தது. மலை ஏறுவதற்கு தோதாகக் கயறு, வண்ண வண்ண விளக்குகளை எறியவிட்டு நடனம் செய்ய ஏதுவாகப் பாடல் வேறு ஒலிக்கப்பட்டது. பனியில் தூண்கள், இக்ளோ எனச் சொல்லப்படும் பனி வீடு எனப் பார்க்க அனுபவிக்க நிறைய இருந்தன.
"பிரகாஷ் இது உங்களுக்கு. வாங்க மேல போலாம்." எனப் பெரிய ரப்பர் டியூப்பை அவனின் கையில் கொடுத்துத் தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு படி ஏறிக் கீழே சறுக்கி வந்தனர்.
"பிரகாஷ் இங்க ஒரு செல்ஃபி. பிரகாஷ் அங்க போலாம் வாங்க." எனச் சிறு குழந்தைபோல் குதுகலித்தவளை தனியே விடாது அவளுடன் சேர்ந்து சென்றான்.
அதை முடித்து விட்டு மெரைன் கிங்டமிற்கு செல்ல, அங்கு வண்ணவண்ண மீன்கள் வகை வகையாகக் கண்ணாடி தொட்டியில் வைக்கப்பட்டிருந்தன. முதலில் நன்னீர் மீன்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக மேங்ரோ எனச் சொல்லப்படும் ஆறும் கடலும் சங்கமிங்கும் இடத்தில் மரங்களுக்கு நடுவே வாழும் சில வகை மீன்கள் இருந்தன.
"இதுக்கு பேர் என்னனு தெரியுமா பிரகாஷ். வாவ்... இங்க இங்க வாங்க." என எங்குச் சென்றாலும் பிடித்திருந்த அவனின் கரத்தை மட்டும் விடாது இழுத்து கொண்டே சென்றாள்.
கடைசியாக அவர்கள் சென்ற இடம் Under water tunnel.
கடல் வாழ் உயிரினங்களை நீரில் வளர்த்து, அந்த மீன்கள் நீரில் நீந்துவதும் அழகையும், வாழும் அழகையும் நீருக்கு அடியில் கண்ணாடி குகை மூலமாக நாம் கண்டு மகிழ்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு இடம் தான் Under water tunnel.
நீல நிறம். சுற்றி நீர். அதில் சில சுறா மீன்கள், ஸ்டிங்ரே மீன்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்கள் இருந்தன. தன் தலைக்கு மேல் மீன்கள் நீந்திச் செல்லும்போது அத்தனை அழகாய் இருந்தது. எதைப் பார்க்க எதைவிட எனக் குழப்பம் அடைய வைக்கும் வகையில் இருந்தது அந்த இடம். கடலில் இருக்கும் பவளப் பாறைகளைப் போலவே செயற்கையாக அமைத்து அதில் மீன்கள் வளர்க்கப்படுகின்றனர்.
அவர்கள் சென்ற நேரம் இசுகூபா டைவ்விங் என்று சொல்லப்படும் நீருக்குள் மூழ்கிக் கடலின் ஆழத்திற்கு செல்லும் நீச்சல் வீரர்கள் மீன்களுக்கு உணவு கொடுக்க என நீரில் இறங்க, அவர்களுடன் சேர்ந்து சிலர், கடல் கன்னி போல் உடையணிந்து நீரில் விளையாடிச் சாகசங்கள் நிகழ்த்தினர்.
பிரகாஷ் அவளுடன் இருக்கும் அந்த நொடிகளை அனுபவிக்க நினைத்து ஜெனியின் பிடியை விலக்கவில்லை. இருவரும் தங்கள் உலகில் காதலாய் கரம் கோர்த்து கொண்டனர். எண்ணிலடங்கா மகிழ்ச்சியில் திளைத்த, இருவரையும் தொந்தரவு செய்ய விடாமல் பிரகாஷின் நண்பர்களை விஜய் பிடித்து வைத்துக் கொண்டான்.
"இது அநியாயம் நாங்களும் பிரகாஷ் கூடவே தா இருப்போம்." என அடம்பிடித்தவர்களை பிரகாஷின் பக்கமே செல்ல விடாமல் பார்த்துக் கொள்ளவதற்குத்தான் கௌதம் விஜயை அனுப்பி வைத்திருக்கிறான் போலும்.
அங்கு அருகிலேயே ஒரு உணவகத்தில் உணவுண்டு முடித்தவர்கள். இறுதியாகப் பீச்சிற்கு சென்றனர்.
கடலலையில் கால் நனைத்து நீரை ஒருவர் மேல் ஒருவர் வாரி இறைத்து பிரகாஷின் நண்பர்கள் விளையாடினர்.
"பிரகாஷ் நாம ஏ ஒரு வாக் போகக் கூடாது. நம்ம ரெண்டு பேர் மட்டும்." என்க, அவன் யோசித்தான் போகலாமா. வேண்டாமா என.
"அந்தப் படகுவரைக்கும் தா. போய்ட்டு அப்படியே திரும்பி வந்திடுவோம். அலைல கால் நனச்சி நடந்துக்கிட்டே போலாமே ப்ளீஸ்." எனக் கேட்க, அவளுடன் சென்றான் பிரகாஷ்.
பிரகாஷ், நன்கு கவனித்திருந்தால் நடப்பது எல்லாம் தற்செயல் அல்ல. யாரோ போட்டுத்தந்த திட்டம் என்று புரிந்திருக்கும். அவன் தான் மயக்கத்தில் இருக்கிறானே. ஜெனி மயக்கம்.
இருவருமே எதுவும் பேசவில்லை. தன் அருகில் இருப்பவள் தன் காதலி. தன் மனம் கவர்ந்தவள் என்ற நினைவு மட்டுமே இருந்தது பிரகாஷிற்கு. அவளுடன் இருக்கும் இந்தக் கணத்தை அனுபவிக்க எண்ணியவனின் கரம் தானாக அவளின் கரத்தைச் சிறை செய்து கொண்டது. அலையின் வேகத்தில் தடுமாறியவள் விழாமல் இருக்க அவளின் தோளை அணைத்துக் கொண்டு நடந்தான் பிரகாஷ். நிமிர்ந்து அவன் முகம் பாத்து புன்னகை பூத்தவளை யாருக்கும் விட்டுத்தர கூடாது என்ற எண்ணம் உண்டானது அவன் மனதில். அந்த எண்ணம் அவளின் கன்னம் ஏந்த செய்தது.
ஜெனி அவனின் தீண்டலுக்கு மறுப்பேதும் சொல்லவில்லை. அதைச் சம்மதமாக எடுத்துக் கொண்டவன் அவளின் முகம் நோக்கிக் குனிய, சட்டென ஹரிணி சொன்னது நினைவு வந்தது.
இன்னும் சில தினங்களில் அடுத்தவனின் மனைவி அவள். அவளைப் போய் என நினைத்தவன் ஜெனியின் மீதிருந்த கரத்தைச் சட்டென விலக்க அவள் கீழே விழுந்தாள்.
எத்தனை முறைத்தான் அவளிடம் ஏமாந்து போவது எனத் தன் மேலே ஒரு வெறுப்பு வர, வேகவேகமாக நடந்து சென்றான் பிரகாஷ்.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..