அத்தியாயம்: 26
"பிரகாஷ்... பிரகாஷ்... நில்லுங்க." என அவனின் கரம் பற்ற, அதை உதறியவன் கோபமாகத் திரும்பினான்.
"உனக்கு என்ன பாத்தா எப்படி டி தெரியுது?. கேணையேன் மாறியா.! நாந்தா உன்ன அவாய்ட் பண்ணேனே. தெரிஞ்சும் தெரியாத மாறி நடிச்சிட்டு ஏண்டி பக்கத்துல வர்ற. உன்ன மனசார விரும்புனேன் டி. உன்ன பாத்த நாள்ல இருந்து நீ தா என்னோட பொண்டாட்டின்னு என்னோட மனசுல ஆசைய வளத்து வச்சிருந்தேன்.
ம்ச்... அந்த விசயத்துல உன்ன தப்பு சொல்ல முடியாது. நாந்தா முட்டாள் மாறி நடந்துக்கிட்டேன். ஆனா இன்னொருத்தனுக்கு நிச்சயம் பொண்ணு தான நீ. வந்து கைய பிடிச்சிக்கிட்டு எதோ பல நாள் பழகுனவே மாறி உரிமையோட பேசுற. இப்ப கூட எங்கூட... ஐய்யோ...
நீ எனக்குக் கிடைக்கலன்னாலும் நா விரும்புற பொண்ணு நீ. இப்பன்னு மட்டுமில்ல எப்பையுமே என்னோட காதலி நீ தா. உன்ன லவ் பண்ணிக்கிட்டேத்தா இருப்பேன். ஆனா காதலிக்கிறேங்கிற ஒரே காரணத்துக்காக என்ன நா காயப்படுத்திக்க விரும்பல. அதே மாறி உன்ன பாக்கவும் பழகவும் எனக்கு விருப்பமில்ல. குட் பை." எனச் சொல்லிச் சென்றவனின் மனது சற்று லேசாக இருந்தது. தன் காதலை அவளிடம் சொல்லியதால்.
அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட ஜெனிக்கு உலகம் மறைந்து போனது. விண்வெளியில் பறப்பது போன்று மனமானது சிறகின்றி மிதக்கத் தொடங்கியது. அவள் பதிலுக்குத் தன் காதலை சொல்லும் முன் அவன் திரும்பியும் பார்க்காது நடந்து கொண்டே இருந்தான்.
"பிரகாஷ்... பிரகாஷ்... நில்லுங்க." எனக் கத்திக் கொண்டே பின்னாலேயே சென்றாள்.
"ப்ளிஸ்... என்னோட ஃபீலிங்ஸ்ஸோட விளையாடாதிங்க. என்னால தாங்கிக்க முடியாது." என்றான் திரும்பாமலேயே,
"நானும் உங்கள லவ் பண்றேன் பிரகாஷ். ஐ லவ் யூ." என்றவனை திரும்பிப் பார்த்து முறைத்தான் அவன்.
"உண்மையாதா சொல்றேன். நானும் உங்கள காதலிக்கிறேன்." என்றவளின் குரல் உடைந்திருந்தது.
"லவ்... நிஜம்மா லவ் பண்றன்னா உன்னால நடக்கப்போற கல்யாணத்த நிறுத்த முடியுமா." எனக் கேட்க, அவள் முடியாது என்று தலையசைத்தாள்.
"அவ்ளே தா... இந்த எடத்துலையே எல்லாத்தையும் விட்டுட்டு போய்டலாம். என்ன மறந்துட்டு உன்னோட புது வாழ்க்கைலயாது சந்தோஷமா வாழு." எனச் சொல்லி நடக்க,
"பிரகாஷ், நா சொல்றத கொஞ்சம் கேளுங்க. என்னோட நிலமைய நா சொல்றேன். கேட்டதுக்கு அப்றம் முடிவு பண்ணுங்க. ப்ளிஸ் பிரகாஷ்." எனக் கெஞ்சிக் கொண்டே வர, அவன் நிற்கவே இல்லை.
"ஒரு பத்து நிமிஷம் டயம் தாங்க. நா சொல்றத கேட்டுட்டு என்ன புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க. ப்ளீஸ் பிரகாஷ்." எனக் கத்திக் கொண்டே பின்னால் ஓடினாள் ஜெனிபர்.
"அப்படி என்னத்த சொல்லிட போற. வீட்டுல இருக்குறவங்க சொன்னாங்க. எனக்கு விருப்பம் இல்லன்னாலும் என்னால அவங்கள மீறி ஒன்னும் பண்ண முடியாது. அதத்தான சொல்லப்போற." பிரகாஷ் கோபமாக,
"இல்ல, என்னோட முழு சம்மதத்தோட தா யஷ்வந்த்த கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னேன்."
"நல்லது. அப்பப் போய் அவன் கட்டிக்கிட்டு சந்தோஷமா வாழு. என்ன விட்டுடு. இனி எந்த ஒரு சூழ்நிலையிலும் உன்ன நா பாக்கவே விரும்பல." எனக் கைக்கூப்பியவன் மீண்டும் நடக்கத் தொடங்கினான்.
தன் நிலையை எப்படி சொல்லிப் புரிய வைப்பது என்று தெரியாமலும், அவனிடம் தனக்காகத் தன் சுயமரியாதையை விட்டுக் கீழிறங்கி கெஞ்ச மனமில்லாமலும் அங்கேயே மண்டியிட்டு அழுதாள் ஜெனிபர்.
அவளின் அழுகுரலை கடந்து செல்ல மனம் இல்லாமல் அவளின் அருகில் வந்தமர்ந்தான் பிரகாஷ். சொல் கேட்கிறேன் என்பது போல். அவனை நிமிர்ந்தும் பாராது தன் திருமணம் நடக்க போகும் சூழ்நிலையைப் பற்றிக் கூறினாள் ஜெனிபர்.
"எங்க ஊரு கேரளால திர்சூர் பக்கம். அங்க நா அப்பா அம்மா அக்கான்னு நாலு பேரும் சந்தேஷமாத்தா இருந்தோம், எங்க அக்கா காதல்ன்னு சொல்லி ஒருத்தர கூட்டீட்டு வர்ர வரைக்கும். அப்பா அக்காவோட காதலுக்கு சம்மதிக்கல. அவளும் அவனத்தா கல்யாணம் பண்ணிப்பேன்னு அடம்பிடிக்கல. அதுனால வேற ஒருத்தரோட கல்யாண ஏற்பாடு பண்ணாரு. முதல்ல சரின்னு சொன்ன அக்கா. கல்யாணத்துக்கு முதல் நாள் ஊர விட்டு ஓடிப் போய்ட்டா. அதுவும் வீட்டுல இருந்த நகை மொத்தத்தையும் தூக்கிட்டு ராத்திரியோட ராத்திரியா ஓடிட்டா. அந்த அவமானத்துல அப்பா இறந்து போய்ட்டாரு.
அப்பா இறக்கும்போது நா பத்தாவது படிச்சிட்டு இருந்தேன். எங்களுக்குன்னு இருக்குற சொந்த வீட்டுல அம்மாவும் நானும் அப்பாவ நினைச்சிக்கிட்டே நிம்மதியா தா இருந்தோம். கொஞ்சம் நாள்ல அம்மாக்கும் உடம்பு சரியில்லாம போச்சு. ரத்த ரத்தமா வாந்தி எடுத்தாங்க. ஹாஸ்பிடல்ல காட்டுனப்போ கேன்சர்னு சொன்னாங்க. ட்ரீட்மெண்ட் பண்ண பல லட்சம் வேணும்.
அதுனால வீட்ட விக்கிறதுக்கு முடிவு பண்னோம். வீடுல அக்காக்கும் பங்கிருக்குறதுனால அவள பாக்க மும்பை போனேன். அக்காவும் அவளோட ஹஸ்பென்டும் உதவி பண்றதா சொன்னாங்க. மும்பைல நல்ல ஹால்பிட்டல்ல ட்ரீட்மெண்ட் பாக்க வச்சாங்க. அப்பார்ட்மெண்ட்ல அவங்க கூடவே வச்சி பாத்துக்கிட்டாங்க. வீட்ட வித்தாச்சு. ஆனா ட்ரீட்மெண்ட்டுக்கு காசு பத்தல. அம்மா 'ஹாஸ்பிட்டலுக்கு போக வேண்டாம், என்னைக்கா இருந்தாலும் சாகத்தான போறேன், கடன் வாங்கி மருந்து மாத்திரன்னு அழையாத'ன்னு சொன்னாங்க. அதுக்காகச் சும்மா விட்டுட முடியாதே.
படிச்சிக்கிட்டே பார்ட் டையம்மா வேல தேடுனேன். அக்கா ஹஸ்பென்ட் ஒரு ஃபோட்டோ கிராபர். மாடலிங்க சம்மந்தமான ஒரு ஏஜென்ஸில மாடல்ஸ்ஸா ஃபோட்டோ எடுப்பாரு. நா நல்ல வரையுறத பாத்த அவரு ஒரு டிசைனர் கிட்ட சேத்து விட்டாரு. ஹரிணி தா அது. எனக்குக் கிடைச்ச பெஸ்ட் ஃபிரெண்ட் அவா.
எல்லாம் நல்லாதா போய்க்கிட்டு இருந்தது, அம்மா நிலம மோசமாகுற வரைக்கும். கடைசி கட்டம் ஒன்னு ரெண்டு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் குடுத்தா கொஞ்ச நாள் உயிரோட இருப்பாங்கன்னு சொன்னாங்க. மாமா வேல பாத்த ஏஜென்ஸ்ஸியோட முதலாளி பணம் தந்தாரு. கேக்குறதுக்கு முன்னாடியே அள்ளி அள்ளித் தந்ததாரு.
இந்த உலகத்துல எதுவுமே இலவசமா கிடைக்காதுங்கிறது அப்பதா எனக்குத் தெரிய வந்தது. எல்லா பொருளுக்கும் வில இருக்கு. அது மாறித்தா எங்கள பார்த்துக்கிட்டதுக்கு என்னோட அக்கா ஹஸ்பென்ட் என்னையே விலையா அந்த முதலாளிக்கு வித்திருக்காருன்னு தெரியவந்தது.
அம்மா இறந்துட்டாங்க. சம்பாதிச்சு கடன அடைச்சிடலாம்னு நினைச்சப்ப கடன் லட்ச லட்சமா இருக்குன்னு சொன்னான். என்ன ப்ளாக் மெல் பண்ண ஆரம்பிச்சான் யஷ்வந்த்.
எனக்கு ரெண்டு ஆப்ஷன் தான் கொடுத்தான். ஒன்னு அவங்கூட இல்லீகலா வாழுறது. இல்லன்னா அவெங் சொல்ற கம்பெனிக்கி மாடலிங் பண்ணி அவெங்கிட்ட வாங்குன காசு திருப்பித் தரனும்.
மாடலிங் ஒன்னும் சாதாரண வேல கிடையாது. ஃபேஷன் ஃபீல்டில மனுசங்களோட உருவத்துக்கு டிரெஸ் தயாரிக்குறது இல்லை. டிரெஸ்ஸுக்கு ஏற்ற மனுசங்களத் தான் மாடல்களாகக் காட்டுவாங்க. அந்த மாடல்ஸ் தன்னோட உடம்ப ஜீரோ சைஸ்லையே வைச்சிருக்கனும். இல்லன்னா அந்த இடத்திலிருந்து அவங்கள வெளில துரத்தி விட்டுட்டு வேற ஒருத்தர கூப்பிடுவாங்க. பொண்ணுக்கு மட்டுமல்ல ஆம்பளைங்களுக்கும் பாதுக்காப்புங்கிறது அங்க கேள்விக் குறிதான்.
மாடல்ஸ் ஆகனுங்கிற கனவோட வர்ற பல இளைஞர்களுக்குச் சரியான வருமானம் கிடையாது. சாப்பாடு, தங்குற இடம், ஏ மனுசங்கிற மரியாத கூடக் கிடைக்கிறது இல்ல. எல்லாத்தையும் சகிச்சிக்கனும். வயசு வித்தியாசம் பாக்காம எல்லாரையும் அட்ஜஸ்ட் பண்ணனும். மது போதன்னு எல்லா பழக்கமும் வந்து ஒட்டிக்கும். ஓப்பன்னா சொல்லனும்னா அது ப்ராஸ்ட்டியூட் மாறித்தா மாடல்ஸ்கிற பேர்ல நடத்திட்டு இருக்காங்க.
இப்படி ஊரறி வேசியா இருக்குறத விட அவெங்கூட வாழலாம்னு முடிவு பண்ணி என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாத்தா அவெங்கூட இருப்பேன்னு சொன்னேன். ஹரிணிக்கி இது பிடிக்கல. என்ன திட்டுனா. யஷ்வந்த்கிட்ட போய்ப் பேசுனா. ஆனா அவெ ஒத்துக்கல. கடைசில ஹரிணிட்ட நா வேல பாக்குறதுக்காகப் போட்ட காண்ட்ராக்ட்ட காரணம் காட்டி கல்யாணத்த நிறுத்தி வச்சா.
இன்னைக்கி அது முடியப் போது. கல்யாணமும் நடக்கப் போது." எனத் தன்னிலை விளக்கத்தை மிக நீளமாகச் சொல்ல. பிரகாஷிற்கு என்ன சொல்வது என்றே தெரியாது இருந்தான்.
"கண்ண மூடிட்டு அவன கல்யாணம் பண்ணிக்கலாம். கஷ்டப்பட்டாலும் பரவாயில்லன்னு நினைச்சு தா கல்யாணம் பண்ணிக்க சொல்லிக் கேட்டேன், உங்கள பாக்குறதுக்கு முன்னாடி. உங்கள லவ் பண்ணுவேன்னு நினைக்கவே இல்ல." எனச் சொல்லியவள் தன் பையில் இருந்த கல்யாணம் பத்திரிக்கையை எடுத்து அவன் முன் நீட்டினாள்.
"என்னோட கல்யாணப் பத்திரிக்கை. நீங்கக் கண்டிப்பா வரனும். கல்யாணத்த பாக்குறதுக்கு இல்ல என்னோட இறுதி சடங்குக்கு. என்னால அவனுக்கு மனைவியா இருக்க முடியாது. உங்களோட காதலியாவே இருக்க விரும்புறேன். தேங்க்ஸ். இந்த நாள மறக்க முடியாத நாளா மாத்துனதுக்கு. இது போதும் எனக்கு, சந்தோஷமாக இருக்க. சாவி. ஸ்கூட்டி ஹரிணியோடது. நா. போறேன்." பத்திரிகையையும் சாவியையும் மணலில் வைத்தவள் எழுந்து சென்று விட்டாள்.
அவளை அழைப்பதா! இல்ல பாத்திரிக்கையை எடுப்பதா. என்ன செய்வது என்று புரியாமல் இருந்தான் பிரகாஷ். இதுநாள் வரை வேலைக்குச் செல்ல வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்தது இல்லை. இப்போது தோன்றியது. அவளுக்காகச் சம்பாதிக்க வேண்டும் என்று.
"பிரகாஷ்ஷு அந்தப் பொண்ணு அழுதுட்டே போதுடா. என்னடா பண்ண." என விஜய் கேட்கப் பதில் சொல்ல வில்லை அவன். கீழே கிடந்த பத்திரிக்கையை எடுத்துப் பார்த்தவன்.
"என்ன ஆளுயா நீ?. அந்தப் பொண்ணு காதலிக்கிறேன்னு சொன்னதுமே. என்ன வந்தாலும் பாத்துக்கலாம்னு நீ நம்ம ஊருக்கு வான்னு இழுத்துட்டு போறத விட்டுட்டு. உக்காந்து கண்ண கசக்கிக்கிட்டே அவா கிட்ட கத கேட்டுட்டு இருக்க."
"என்ன பண்ண சொல்ற?. அவா கல்யாணத்த நிப்பாட்டாச் சொல்றியா.?"
"போய் நிப்பாட்டு. நீயும் அந்தப் பிள்ளைய விரும்புற தான?."
"ஆமா. ஆனா கல்யாணத்த எப்படி நிப்பாட்டுறது.? அதுமட்டுமல்லாம வீட்டுல என்ன சொல்றது.?" உறுதி செய்யப்பட்ட திருமணத்தைத் திருத்துவது தவறாகப் பட்டது அவனுக்கு.
"உங்கண்ணே ஹரிணிய கல்யாணம் பண்ணிக்க என்னென்ன பண்ணானு உனக்குத் தெரியுமா?. ஊருக்குள்ள அவளோட ஃபோட்டோவ காட்டி அவா தாத்தா தா நம்ம கஷ்டத்துக்குக் காரணம்னு எல்லாத்தையும் ஏத்திவிட்டான். சரி அவனுக்கு ஊர் மேல அம்புட்டு பாசம்னு நினைச்சா, கடைசில பிள்ளைய கிள்ளி விட்டு ஆட்டி விட்டாக்கூட பரவாயில்ல, தொட்டுலோட தூக்கிட்டுல்ல போய்ட்டான்."
"என்ன சொல்ற.?"
"அதாது எங்க ஊரு பெருசுகல உசுப்பிவிட்டு திருவிழால பிரச்சன பண்ண வச்சது அவெந்தான். எங்கூரு ஆளுக அத்தன பேரும் சுத்தி நின்னு ஹரிணிய திட்டுவாய்ங்களாம். இவரு ஹீரோ கணக்கா காப்பாத்தி கல்யாணம் பண்ணிக்கிவாறாம். எப்பா என்ன ப்ளானு!. என்ன ப்ளானு!. இத்தனைக்கும் ஹரிணி உங்கண்ண பாத்து பழகிக் காதலிக்க கூடச் செய்யல. ஆனாலும் திட்டம் போட்டுக் கல்யாணம் பண்ணிக்கிடான். எதுக்கு? தா விரும்புன பொண்ண யாருக்கும் விட்டுக்குடுத்திடக் கூடாதுங்கிறதுக்கு. அவனுக்குத் தம்பி நீ, ஏந்தா இப்படி இருக்கியோ. உனக்கு ஒரு ப்ளான் போட்டுக் கல்யாணம் பண்ணி வைக்கத் தெரியாதா அவனுக்கு."
"நீ யாருக்காக வந்தேன்னு சொன்ன.?" பிரகாஷ் சந்தேகமாகக் கேட்டான். தரனுக்கும் விஜய்க்கும் என்றுமே செட்டானது இல்லை. திடீரெனத் தரனை புகழ்ந்து பேசியதால் சந்தேகம் வந்தது பிரகாஷிற்கு.
"கௌதமுக்காகத் தா. ஆனா கௌதம் சொல்லி வரல. தரன் தா உங்கூட போகச் சொன்னான். முதல்ல ஒரு டயலாக் சொன்னேல்ல, வலி. பொதுவான வலி. அத சொல்லித்தா உங்கூட இருக்கச் சொல்லி அனுப்பி வச்சான்." என்றவன் பிரகாஷின் அருகில் வந்து,
"வாய்ப்பு எல்லா நேரமும் கிடைக்காது பிரகாஷ். உன்ன விரும்புறேன்னு சொன்ன பிள்ளைய கை விட்டுடாத. உங்கண்ணனுக்கு வாய்ப்பு உருவாக்கிக்க தெரியும். அந்தப் பிள்ளைய பத்திரமா விடுதில விட்டுட்டு அவன போய்ப் பாரு. இவனுங்கள நா ஊருக்குக் கூட்டீட்டு போறேன்." எனச் சொல்லியவனை வேகவேகமாக எழுந்து அணைத்தான் பிரகாஷ். நன்றி என்று கூறி புன்னகையுடன் விடை பெற்றான்.
இந்துவின் மனம் அறிந்து திருமணம் செய்து வைத்தவன். நிச்சயம் தனக்கும் துணையாக இருப்பான் என்று எண்ணம் வந்து உற்சாகத்தை தந்தது. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்தது கொள்ள வில்லை அவன். இன்றைய நிகழ்விற்கு ஹரிணியும் கௌதமும் ஒருவகையில் காரணம் என்று.
பஸ் ஸ்டாப்பின் இருக்கையில் அமர்ந்திருந்தாள் ஜெனிபர். இருட்டி விட்டதால் ஆட்களின் நடமாட்டம் குறைந்து போனது. ஆட்டோவில் செல்ல மனம் இல்லாமல் பேருந்திற்காகக் கவலையுடன் காத்திருந்தாள் அவள்.
ஆட்டோவில் சென்றால் சீக்கிரம் விடுதி வந்துவிடும். அங்கு அவளுக்காக அவளின் அக்காவின் கணவர் காத்துக் கொண்டு இருப்பார்.
கண்களில் காட்சிகளை மறைக்கும் வகையில் கண்ணீரானது தேங்கி நிற்க, அவளின் முன் ஸ்கூட்டியை நிறுத்தினான் பிரகாஷ்.
"உன்ன தனியா பஸ்ல போக விட்டேன்னு தெரிஞ்சா ஹரிணி திட்டுவா. வந்து உக்காரு. உன்ன ஹாஸ்டல்ல விட்டுடுறேன்." என வீராப்பாய் பேசினான். எந்த வித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாது இருந்தான் அவன்.
இன்னும் சில மணி நேரங்கள் அவனுடன் இருக்க வாய்ப்பு கிடைக்கும்போது மறுப்பாளா அவள். உடனே ஏறிக்கொண்டாள்.
சிறு புன்னகையுடன் தன் தோளில் அவள் போட்டிருந்த கையை எடுத்துத் தன் வாயிற்றோடு வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டான் பிரகாஷ். நீ என்றும் என் காதலியேயென வார்த்தைகளால் சொல்லாது செயலால் உணர்த்தினான் பிரகாஷ்.
கண்ணீல் நீர் வர அவனின் முதுகில் சாய்ந்து கொண்டே அவனை இறுக அணைத்துக் கொண்டாள் ஜெனிபர்.
முடிவில்லா பயணமாய் அது தொடர விரும்பினர் இருவருமே.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..