அத்தியாயம்: 42
"டேய் அந்தச் சாமந்தி பூவ வாசலுக்கு மேல கட்டி தொங்க விடு."
"மாமர இலய எடுத்துட்டு வந்தியா இல்லையா?."
"இப்ப பலூன்கள ஊதுறதுக்குன்னே ஒரு மிஷின் வந்திருக்காமே!. அது மூர்த்தி ரூம்ல இருக்கும் எடுத்து வந்து சீக்கிரம் ஊதி வை."
"பூக்காரனுக்கு சொல்லியாச்சா இல்லையா?. நாளைக்கி காலைல மரத் தொட்டில் முழுசா பூவால நிறைஞ்சிருக்கனும். சூப்பரா டெக்கரேட் பண்ணிருக்கனும்."
"காலைல சாப்பாட்டுக்கு ஆள் சொல்லியாச்சா?. எம்மகனுக்கு இனிப்புல அல்வான்னா ரொம்ப பிடிக்கும். அத பண்ணச் சொல்லு. நல்ல தரமான திருநெல்வேலி கோதும அல்வா மாறி இருக்கனும். அப்பத் தா நா பேசுன பணத்துக்கு மேல தருவேன். இல்லனா பாதி பணம் தா. முதல்லயே சொல்லிடு. அப்றம் பிரச்ச பண்ணக் கூடாது. "
இவை அனைத்தும் கலியபெருமாள் மற்றவர்களுக்குப் போடும் உத்தரவுகள். முக்கியமாகப் பிரகாஷை அவர் உட்காரக் கூட விடுவதில்லை.
"டேய்!. இத செஞ்சிட்டியா?. அத வாங்கிட்டியா?. போய் எடுத்துட்டு வாடா!."என விரட்டிக் கொண்டே இருக்க அவனுக்குக் காண்டானது. இருந்தும் அதைக் காட்டாமல் செய்கிறான். ஏனெனில் கௌதமின் மகனுக்கு நாளைக் காலைப் பெயர் சூட்டு விழா. அதற்குத் தான் தடபுடலாக ஏற்பாடு நடைபெறுகிறது.
"சிம்பிளா காதுல பேரச் சொன்னோம்மா!. கறிக் குழம்புல கைய விட்டோம்மான்னு இருக்குறத விட்டுட்டு. கொண்டாடுறேன்ங்கிற பேர்ல ஏ இந்த வெட்டி அலப்பற?. ச்ச... எந்தெந்த விழாவத்தா கொண்டாடுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போயிடுச்சி. இந்த வீட்டு மாப்பிள்ளையா இத நீங்கக் கேக்க மாட்டிங்களா மச்சான் ஸார்?." பிரகாஷ்.
"நானும் சொல்லிட்டேன்டா. ஆனா, ஹிட்லர் கேக்கல. எனக்கு என்னமோ அந்த ஆஸ்பத்திரில ஆள் மாறாட்டம் நடந்திருக்குமோன்னு சந்தேகமா இருக்கு."
"அவரு என்ன இப்பத்தா பிறந்த பச்சைப் பிள்ளையா!. யாருக்கும் தெரியாம ஒன்ன தூக்கிட்டு போய் வேற தொட்டில்ல போட்டுட்டு, இன்னொன்ன கட்டப்பைல எடுத்து வச்சி கொண்டாரதுக்கு."
"அப்பறம் எப்படி மனுஷென் சட்டுன்னு டீவில சேனல் மாறுற மாறி மாறிட்டாப்பல?." எனச் சம்பத் யோசிக்க,
"எனக்கு என்னமோ நம்மூருக்குள்ள போதி மரம் இருக்குமோன்னு சந்தேகமாக இருக்கு. ஏன்னா யார் யாருக்கோ திடீர் ஞானம் வந்து நல்லவரா மாறிடுறாங்க. எப்ப எப்படி மாறுறாங்கன்னு தா தெரியவே மட்டேங்கிது. கண்டுபிடிச்சி அந்த மரத்த மொதல்ல வெட்டித் தள்ளனும்." எனப் பிரகாஷ் முறைத்துக் கொண்டே சொன்னான்.
இதுவரை ஹிட்லர் எனக் கேலி செய்த தந்தையை அப்பா, நைனா தகப்பா, பிதாஜீன்னு ஓடி ஓடிச் செல்லும் கௌதமை தான் முறைத்துக் கொண்டு பிரகாஷ் இருக்கிறான்.
"என்னடா பார்வ பலம்மா இருக்கு. உன்னோட ஆளு இந்தப் பக்கம் இல்லையே. அப்பறம் ஏ லுக்க இங்கிட்டு விடுற. போய்ப் புதுமாப்பிள்ளையா என்ஜாய் பண்ண வேண்டியது தான." என்றபடி கௌதம் வர,
"எங்கண்ணே என்ஜாய் பண்ண விட்டிங்க. ஃபோன் மேல ஃபோன போட்டு, நீ வந்தாத்தா சித்தப்பாக்கு ஊசி போட முடியும், டிரிப்ஸ் ஏத்த முடியும், ஏ! சோறே உம்முகத்த பாத்தாத்தா தொண்டைக்குள்ளையே இறங்கும்னு சொல்லி வர வச்சிங்க. வந்து பாத்தா அவரு யாருடா நீ-ங்கிற மாறி லுக்கு விடாறாரு. அத கூடப் பொறுத்துக்கலாம். ஆனா, விடிஞ்சதுல இருந்து ஒரு வாய் தண்ணி கூடக் குடிக்க விடாம உங்கப்பா படுத்துற பாடு இருக்கே."
"So sad." என இருவரும் கோரஸ்ஸாக சொல்லி ஹைஃபை கொடுத்துக் கொள்ள,
"விளையாட்டு. ம்... என்ன பாத்தா விளையாட்டா தெரியுது!. என்ன இன்னும் காமெடியன் கேரேக்டர்லையே வச்சிருக்கிங்க. இப்ப நா குடும்பஸ்தன். என்னோட ஃபிலிங் உங்க யாருக்காவது புரியுதா இல்லையா." என்றான் அவன்.
ஏனெனில் ஜெனியுடன் இன்னும் சில நாட்கள் ஹனிமூன் கொண்டாடி வரத் திட்டமிட்டவனை. பாதியிலேயே 'நீ வந்தாத்தா உங்க சித்தப்பாவ காப்பாத்த முடியும். 'ங்கிற ரேஜ்ஜிக்கி அவசர அவசரமாக அழைத்ததோடு மட்டும் மல்லாமல், அதைச் செய் இதைச் செய் என வேலை மட்டுமே வாங்குகிறார்கள். கட்டுன பொண்டாட்டிய கண்ணுல பாக்காம காலைல இருந்து வேல பாக்கிறேன் என்பது தான் அவனின் ஃபீலிங்.
பாவம் ல...
"ஏங்க, இதுலருந்து ஒன்னு எடுங்க." எனச் சிறிய கண்ணாடி குடுவையில் சில காகித சுருள்களைப் போட்டு அதில் ஒன்றை எடுக்கச் சொன்னாள் இந்து. உடன் ஜெனியும் வர, சூரியனை கண்ட நிலவானது எப்படி பிரகாசிக்கிமோ! அப்படி பிரகாசமானது பிரகாஷின் முகம்.
கணவனைக் கண்டதும் சிறு வெட்கம் பூத்த நின்றவளின் கோலம் பிரகாஷ் ஈர்க்க, காந்தமென அவளுடன் ஒட்டிக் கொள்ள நினைத்தான். திடீரென அந்த ஈர்ப்பு விசை காணமல் போனது. ஹிட்லரின் வருகையால்.
"என்னாதும்மா இது?." கௌதம் பேசும் முன் கலியபெருமாள் கேட்டார்.
"இதுல எனக்குப் பிடிச்ச ஆம்பள பசங்க பேரு இருக்கு மாமா. அதுல ஒன்ன அவரு எடுத்தார்ன்னா அதே பேர தம்பிக்கி வச்சிடலாம். என்னங்க சரியா?." என ஆர்வமாகக் கேட்க, கௌதம் திருதிருவென முழித்தான்.
"கௌதம் அத்தான். அதுல எனக்குப் பிடிச்ச ரெண்டு பேர எழுதிப் போட்டிருக்கேன். என்னோடத எடுங்க அத்தான்." ஜெனி.
'அடப்பாவிகளா!. பையனுக்குப் பேர் வைக்கச் சொன்னா கூழ் ஊத்துறோம் சாமியோவ்ங்கிற மாறிக் குடுவையா தூக்கிட்டு சுத்துறானுங்க.' என்ற சம்பத்தின் மைண்ட் வாய்ஸ் கேட்டதாலேயோ என்னவோ!
"யார தலைவரா தேர்தெடுக்குறதுன்னு ராஜா காலத்துல குடவோலை முறைல குடத்துக்குள்ள பேரப் போட்டு ஒரு சின்னப் பிள்ளைய எடுக்கச் சொல்வாங்களாம். இங்க ஒரு சின்னப் பையனுக்குப் பேர் வைக்கக் குடத்த தூக்கிட்டு வந்திரிக்கியே இந்து." எனப் பிரகாஷ் கேலி செய்ய,
"ஷூ!. அமைதியா இரு. என்னித எடுங்கங்க." இந்து கௌதமின் முகம் பார்த்தாள் ஆவலுடன்.
"அத்தான் நா choose பண்ண பேரு அத்தான். ப்ளீஸ்." என ஜெனி ஆசையாகக் கேட்க,
"பேர தா நா அப்பவே முடிவு பண்ணிட்டேனே. அப்றம் எதுக்கு இந்த விளையாட்டு. போங்க. போய் வேற வேலையிருந்தா பாருங்க." என இருவர் எண்ணத்திலும் Big size ல ஒரு கல்ல தூக்கி போட்டுட்டாரு கலியபெருமாள்.
இந்து 'அப்படியா.' என்பது போல் கோபமாகக் கௌதமை பார்த்தாள். கௌதம் சமாளிக்க முயற்சிக்கும் முன் இந்து தன் வேக நடையுடன் அறைக்குச் சென்று கதவை மூடிக் கொண்டாள்.
"அண்ணே.! நாளைக்கி உம்மகெ பெயர் சூட்டு விழாவுக்கு ஆகுற மொத்த செலவையும் நானே ஏத்துக்கிறேண்ணே." பிரகாஷ் சம்மந்தம் இல்லாமல்.
"எதுக்குடா நீ தரனும்?." கௌதம்.
"தம்பி சம்பாதிக்கிறேன்ல. இப்ப கூட எம்பேர சொன்னா பஜார்ல லட்சக் கணக்குள காசும், ஒத்த ரூபா கூடக் குடுக்காம லாரி நிறைய நெல்லும் மில்லுக்கு வந்து சேரும். தெரியுமா. ரைஸ் மில் ஓனர்னா அப்படித்தா." என்றவனை முறைத்துக் கொண்டே தன் மனைவியைக் காண சென்றான்.
"கால் ஆட்டிட்டு கல்லா முன்னாடி உக்காந்திருக்கிறவே பேரு ஓனரு!." சம்பத்.
"எஸ்... எஸ்... அதுல என்ன சந்தேகம்.?"
"ஓ!. ஆமா ஓனரய்யா, நீங்க ஏ இதோட மொத்த செலவையும் ஏத்துக்கிறிங்கன்னு நாங்க தெரிஞ்சிக்கலாமா?. ஏன்னா! இவ்ளோ நேரமா இந்த ஃபங்ஷனே தேவையாங்கிற ரேஜ்ஜிக்கி பேசுன ஒருத்தேன், திடீர்னு தடபுடலா பண்றேன்னு சொல்லும்போது, ஊருக்குள்ள இருக்குற போதி மரம் நம்ம வீட்டுலையும் முழச்சிடுச்சோன்னு சந்தேகம் வருது?."
"அது ஒன்னுமில்ல மச்சான் ஸார். நா பாத்த வரைக்கும் இந்தக் கௌதம் அண்ணே மட்டும் தான் பொண்டாட்டி கூடச் சண்டயே போடாத ஆளு. இப்ப வந்துடுச்சில்ல சண்ட. அதுவும் மொத சண்ட. இத கொண்டாடத்தா நாளைக்கி கறி விருந்து. மறந்துடாம பவியையும் பந்தில உக்கார வச்சிடுங்க." என்றவனின் தலையில் ஓங்கி கொட்டினான் கௌதம். உடன் சம்பத்தும் சேர்ந்து கொள்ள, ஜெனி சிரித்துக் கொண்டு இருந்தாள். இவர்களின் கூத்தைப் பார்த்து.
"புருஷெ அடி வாங்கிறான். பாத்துட்டு நிக்கிறியே."
"சரி. நான் பாக்காம அங்கிட்டு போறேன்." என நடந்து சென்று விட்டாள் அவனின் மனைவி.
யாரும் அறியாமல் கதவைத் தட்டி தட்டியே ஓய்ந்து போனான் கௌதம். நிஜமாகவே இந்து கோபமாக உள்ளாள் போலும். அவர்களின் முதல் குழந்தைக்குப் பெயர் வைத்தது ஹரிணி. என்று அவள் மணிமேகலை என்னும் காப்பியத்தின் கதையைக் கேட்டாளோ அன்றிலிருந்து அவளுக்கு ஆதிரை என்ற பெயரின் மீது மோகம் வந்தது. எனவே அதைக் கௌதமிற்கு பிறந்த மகளுக்கு வைக்கலாம் என்று சொல்ல,
அவனும் தன்னுடைய தோழியின் விருப்பத்தை ஏற்று அதையே தன் மகளுக்கு வைத்து விட்டான். சரி அடுத்த பிள்ளைக்கி பாத்துக்கலாமென இந்து நினைக்க, கலியபெருமாள் 'வந்து நாந்தா முடிவு பண்ணிட்டேன்'னு சொல்லவும், கௌதம் அதற்கு ஒன்றும் சொல்லாமல் இருந்ததும் ஏமாற்றம் தர, அது கோபமாக மாறியது.
'என்னோட பையனுக்கு நா பேர் தேர்தெடுக்க கூடாதா!.' என்ற நிராசையும் சேர்ந்து கொண்டது.
ச்ச... சண்டையே போடாத இதுகளே இப்படி இருக்குன்னா. சண்டையையே சட்ட மாறிப் போட்டுட்டு சுத்துற அந்த டாம் அண்டு ஜெர்ரி கப்பிள் என்ன பண்ணுதுன்னு பாக்கலாம்.
இளம் காற்று வீச, அதை ரசித்தபடி ஊஞ்சலில் அமர்ந்து தன் கையில் உள்ள ஒரு புக்கில் கணக்கு வழக்குகள் சரியாக உள்ளதா எனப் பார்த்துக் கொண்டு இருந்தான் ரிஷி தரன். அவனின் எதிரில் கிடந்த ஒற்றை மூங்கில் சேரிலில் அமர்ந்து கொண்டு தீவிரமாக எதையோ எழுதி அதைச் சிறு சிறு துண்டுகளாகக் கிழித்து சுருட்டிக் கொண்டு இருந்தாள் ஹரிணி. பார்க்க அது இந்து ஒரு குடுவையில் வைத்திருந்த பேப்பர் போலவே இருந்தது.
ஆனால் அவள் குடுவையில் வச்சிருந்தாள், இவள் கையில் வச்சிருந்தாள். அவ்வளவு தா வித்தியாசம். மீண்டும் எதையோ எழுத வேண்டும் எனத் தரனின் கையில் உள்ள பேனாவை பிடுங்க, தரன் நிமிர்ந்து முறைத்தான்.
"கிட்... உள்ள நிறைய பேனா இருக்கு. போய் எடுத்துக்க. என்னோடத பிடுங்காத. குடு." எனக் கேட்க,
"பாவா... அதே டயலாக்க நா உனக்குச் சொல்றேன். நீயே போய் எடுத்துக்க பாவா. இத குடுக்க முடியாது."
"கிட், நா முக்கியமான வேல பாத்துட்டு இருக்கேன். குடு." என மீண்டும் கேட்டான்.
"நானும் முக்கியமானதுல முக்கியமானத எழுத வேண்டி இருக்கு. நீ எந்திரிச்சி போ பாவா." என வீம்பு பேச,
"அப்படி என்ன எழுதிட்டு இருக்க." என அந்தச் சுருள்களைப் பிரித்துப் படிக்க, அவனுக்குச் சிரிப்பு வந்தது.
"கிட், என்னாதிது." எனப் புன்னகையுடன் கேட்டான். அவனை உரசியபடி ஊஞ்சலில் வந்தமர்ந்தாள் ஹரிணி.
"பாவா எனக்கு நிதிலா, மகிழினி இந்த ரெண்டு பேரும் பிடிச்சிருக்கு. உனக்கு எது பிடிச்சிருக்கு?." எனக் கேட்டாள்.
"ஏய், இந்துவுக்கு ஆம்பளப் பையன் பிறந்திருக்கான். அவனுக்குப் போய் நிதி. கிதின்னுட்டு. வேற எதாவது யோசி."
"ம்ச்... அவளோட பேபிக்கி அவா பேரு வச்சிப்பா. இது நம்ம பேபிக்கு. Girl பேபிக்கு." என்றவுடன் ஒரு நொடி மகிழ்ந்து போனான் தரன். ஹரிணி மீண்டும் கருவுற்றுள்ளாள் என்று.
"Congrats kid and Thanks also. என்ன அப்பான்னு கூப்பிட இன்னொரு குட்டிய தரப்போறதுக்கு." வேகமாக அவளை இறுக்க அணைத்து முத்தமிட,
"எனக்கு உன்னோட Congrats தேவை இல்ல பாவா. Thanksசும் தா. ஏன்னா நா ப்ரெக்ணென்ட்டா இல்லையே." என்க, அவளைத் தன் உடல் விட்டுப் பிரித்தவன்.
"அப்பறம் எதுக்கு டி பேரு செலக்ட் பண்ண சொன்ன." என்றவன் முகத்தில் சிறு ஏமாற்றம்.
"அது வந்து பாவா... நாளைக்கே நமக்கு ஒரு பொண்ணு பிறக்கலாம்ல. அதுக்கு பேர் வைக்கும்போது நமக்குள்ள தகராறு வரக் கூடாதுல்ல. அதுக்கு தா இப்பவே முன்கூட்டியே செலக்ட் பண்ணி வைக்கிறேன். எப்படி?." என அவனின் தோளில் சாய்ந்து விழி உயர்த்தி கேட்க, அவனின் சாம்பல் நிற விழிகள் அவளைப் போலிக் கோபத்துடன் பார்த்தன.
"கேக்காத காதுக்குக் கெட் செட்டாம். போகத ஊருக்குப் புல்லெட் டிரெய்ன்னாம். இன்னும் பிள்ளையே பிறக்கல அதுக்குள்ள பேரு வைக்கிறாங்களாம். இது உங்களுக்கு ஓவரா தெரியல. ஆனாலும் பிறக்காத பிள்ளைய பத்தி யோசிச்சி செய்ற உங்க மைண்ட் செட்ட நா வியந்து பாராட்டுறேன். அடுத்த வாரம் எங்க ஸ்கூல்ல கேண்டின்னுக்கு பர்ஸ்ஸோட வந்திடுங்க பாராட்டு மழைல நனையனும்னா." என ஹரிணியை கேலி செய்த படி வந்தான் நந்து.
"உங்கிட்ட ஒன்னும் நா கேக்கல. பாவா இதுல ஒன்னு சொல்லு." என நான்கு சீட்டுகளில் இரண்டில் ஒரு பேரையும் இரண்டில் மற்றொரு பேரையும் எழுதி வைத்திருந்ததை நீட்ட, நந்து மொத்தமாக அள்ளிக் கொண்டு தன் மாமனின் மடியில் அமர்ந்து கொண்டான்.
"டேய்.! சில் வண்டு, அங்கிட்டு போய் உக்காருடா. இடஞ்சலா இருக்கு." என ஹரிணி சிணுங்கினாள்.
"தெரியுதுல இடம் பத்தாதுன்னு அப்ப அங்கிட்டு போய் உக்கார வேண்டியது தான." என நந்து ஹரிணியை போகச் சொல்ல, தரன் மெல்லிய புன்னகையுடன் அவனைத் தன்னோட அணைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அதைக் கண்டவள் சிறு முறைப்புடன் எழுந்து சேரில் அமர்ந்தாள்.
இரு சீட்டையும் பிரித்துப் படித்தவன். கேலி செய்யத் தொடங்கி விட்டான். "இன்னா பேரு இது?. நிதிலா!. மிதிலான்னு ட்டு. ச்ச... நேத்து நைட் பாகுபலி படம் பாத்துட்டு பேர் வைக்க முடிவு பண்ண நீங்க, மகிழ்மதிய மகிழினின்னு மாத்தி எழுதி வச்சிருக்கிங்க. ஸ்பெல்லிங்க மிஸ்டேக். ச்ச... இதுல எதுவும் நல்லா இல்ல. எல்லாமே உங்கள மாறியே பழசா இருக்கே ஏ?." என்க.
"உனக்குப் பிடிக்கலைன்னா எனக்கென்ன. என்னோட பொண்ணுக்கு எனக்குப் பிடிச்ச மாறித் தா நா பேரு வப்பேன்."
"வச்சிக்கங்க. பட் என்னோட வைஃப் பேர நா செலக்ட் பண்ணாத்தான நல்லா இருக்கும். இங்க பாருங்க இதுல நா நாலு பேரு எழுதி வச்சிருக்கேன். இதுலருந்து தா என்னோட பொண்டாட்டிக்கு நீங்கப் பேரு வைக்கனும்." என்றவனின் தலையில் வலிக்காது ஹரிணி குட்ட, அவன் வலித்தது போல் நன்கு நடித்தான்.
சரி என்ன தான் இந்த வாண்டு எழுதிருக்கானெனப் படிச்சவளுக்கு நன்கு வலிக்கும் படியே அடித்தினுக்கலாமெனத் தோன்ற ஆரம்பித்தது. ஏன்னா! அவன் எழுதுன பேரு அப்படிங்க.
"என்னடா பேரு இது?. குண்டலகேசி, அங்கயற்கண்ணி, அமுதாம்பிகை, கோகிலவாணி. எங்கருந்து டா பிடிச்ச இத?. ரொம்ப பழசா இருக்கு."
"நோ... நோ... இது தா வருங்காலத்துல டிரெண்டிங்க மாறப் போற பேரு. என்னோட மாமியார் தா அவுட் ஆஃப் ஃபேஷன். அட்லீஸ்ட் பொண்டாட்டியாது கொஞ்சம் இந்தக் காலத்துக்கு ஏத்த மாறி இருக்கனும்ல." என்றவனை ஹரிணி அடிக்கப் பாய, அவனைத் தூக்கி கொண்டு ரிஷி ஓடியே விட்டான்.
விடுவேனா நான், என்பது போல் ஹரிணியும் துரத்த, கௌதம் மீது மோதிக் கீழே விழுந்தாள்.
"எரும எரும... வர்றேன்னு தெரியுதுல்ல வழி விட்டு நிக்க மாட்ட."
"டார்லிங்! எனக்கு ஒரு அவசர உதவி தேவப்படுது. வா எங்கூட." எனக் கரம் இழுத்தான்.
"இன்னைக்கி நா அந்தச் சில்லு வண்ண சில்லு சில்லா உடைக்கனும். விடு கௌதம்." எனக் கத்த.
"அது இந்த வீட்டுலையே ஊறிப்போன கிணத்து தவள. அத எப்பனாலும் பிடிச்சி சூப்பு வச்சி குடிக்கலாம். இப்ப வா. என்னோட மதிய சமாதானம் பண்ண." என இழுத்துச் சென்றான் அவளை. பின்னே எவ்ளோ நேரம் தான் கதவ தட்டுவான். அதான் தட்டுவதற்கு வேற ஒரு கைய கையோட கூட்டீட்டு போறான்.
சியாம் ஆகாஷ்.
முன் பாதியை தந்தைக்கு பிடித்த கிருஷ்ணனின் பெயரையும். பின் பாதியை மனைவியின் விருப்பத்திற்கும் என இட ஒதுக்கீடு செய்து இருவரின் விருப்பத்தையும் நிறைவேற்றி, மகனின் பெயர் சூட்டு விழாவை மகிழ்வுடன் நடத்தி முடித்தும் விட்டான், மகிழ்வுடனும், நிறைவுடனும்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..