அத்தியாயம்: 44
மண்ணில் புதைக்கப்பட்ட…
மர்மங்கள் மண்ணை…
தோண்டும்போது...
கிடைத்து விடும்...
ஆனால்...
மனிதனின் மனதில்...
புதைக்கப்பட்ட மர்மங்கள்...
எப்பொழுது தோண்டினாலும்...
எளிதில் கிடைக்காது...
"ஹரி அண்ணா! ஹரி அண்ணா! இங்க வா." எனக் கத்தினாள் பார்கவி. நான்கு வயது சிறுமி. குண்டுக் குண்டு எனக் கன்னங்கள் உப்பி இருக்கும் அவளைப் பார்ப்பவர்கள் யாவரும் அவளின் கன்னம் கிள்ளாமல் சென்றதே இல்லை.
கௌதம் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மும்மரமாகப் பந்தை உதைத்து ஃபுட் பால் என்ற பெயரில் எதையோ விளையாண்டு கொண்டிருந்தான்.
"ஹரிண்ணா! ஹரியண்ணா! ச்ச... " எனச் சோர்வுடன் திரும்பிச் செல்ல முயன்றாள். அவன் தான் கண்டு கொள்ளவில்லையே வேறு என்ன செய்வது. யூகேஜி படிக்கும் அவளுக்குப் பந்து நம் மீது பட்டு விடுமோ என்ற பயம். அதான் திரும்பிச் செல்லப் பார்த்தாள்.
"எதுக்கு பாப்பு உங்கண்ணன கூப்பிடுற?. உனக்கு என்ன வேணும்னு சொல்லு நா செய்றேன்?." ரிஷி அவளிடம் கேட்க, அவள் அவனை முறைத்து விட்டு விலகிச் செல்லப் பார்த்தாள். ரிஷி அவளின் முன் நின்று காரணம் கேட்க,
"நா உம் மேல கோபமா இருக்கேன்."
"ஏ பாப்பு?."
"நேத்து நீ தான எங்கப்பாட்ட ஹரி அண்ணவா போட்டுக் குடுத்து அடி வாங்க வச்ச. அதுனால உங்கூட நா டூ." என இருவிரல் சுண்டி காட்டி மழலை மொழி பொழிய.
"ஓ!. அப்படியா?. அதுக்குன்னா ஓகே தா. கோயிச்சுக்க. இப்ப எதுக்கு அவன கூப்பிடுற?."
"அது... அது... இந்தப் பிஸ்கட் பாக்கெட்ட பிரிச்சி குடுக்கனும். க்ரீம் பிஸ்கெட்." என்றாள் அதை உண்ணும் ஆசையுடன்.
பாக்கெட்டை கையில் வாங்கியவன், "நா பிரிச்சி தாரேன். ஆனா எனக்கு நாலு பிக்கெட் வேணும். எடுத்துட்டு தா தருவேன். ஓகே வா?." எனக் கேட்க, வேகவேகமாக இடம் வலமாகத் தலையசைத்தாள் பார்கவி.
"இல்ல... இல்ல... நா குடுக்க மாட்டேன். அதுல மொத்தமே ஆறு தா இருக்கும். நால உங்ககிட்ட குடுத்துட்டா மீதி... மீதி..." என விரல் நீட்டிக் கூட்டல் கழித்தல் கணக்கு போட்டுச் சொல்ல, தரன் வீம்பாய் எடுக்கப் போவதாக அவளிடம் விளையாடினான். அவள் சிணுங்க, இவன் பாக்கெட்டை பிரிக்க, கௌதம் வந்து பிடிங்கிக் கொண்டான் பிஸ்கட் பாக்கெட்டை.
"உனக்கு எந்தங்கச்சி கிட்ட என்னடா பேச்சி. போ டா. உனக்குன்னு ஒரு பாப்பா வீட்டுல இருக்குள்ள. அது கூடப் போய் விளையாடு. இது ஏம் பாப்புடு. பாப்புடு, அண்ணே வருவேன்ட்டா. நீ எதுக்கு இவெங்கூட பேசுற." எனத் தோளில் கைப்போட்டுத் தன் தங்கையை அழைத்துச் சென்றான் கௌதம். பார்கவி திரும்பி ரிஷியைப் பார்த்து விட்டுச் சென்றாள். ஒரு வேளை மன்னிப்பு கேட்கிறாளோ?.
'ஏ பாப்புடுவாம்ல!. இருடி உன்ன.' என்றெண்ணிய ரிஷி தன் வேலையைக் காட்டினான்.
பள்ளியிலிருந்து வீட்டிற்கு தார் சாலையில் சென்றால் சுற்று, எனவே அருகில் உள்ள டீ எஸ்டேட்டின் மலை பாதையில் செல்வர் அனைவரும் சேர்ந்து. பார்கவியை முதுகில் சுமந்து கொண்டு மலை ஏறினான் கௌதம். அவர்களுடன் வராமல் வேகவேகமாக ரிஷி வீட்டிற்கு ஓடிச் சென்று சைக்கிளை எடுத்து வந்தான்.
ரிஷி அவனின் முன் வளைந்து வளைந்து ஓட்டியதை பார்த்த கௌதமிற்கு ஆசையாக இருந்தது. இருவருக்கும் தனி தனியாகச் சைக்கிள் உண்டு. ஆனால் ரிஷியுடையதை ஓட்டிப் பார்க்க ஆசை. இதுவரை கொடுக்காதவன், திடீரென, "வேணும்னா வீடுவரைக்கும் நீயே ஓட்டிட்டு வா." எனப் பெருந்தன்மையாகத் தர, கௌதம் மயங்கிவிட்டான். சைக்கிளை வாங்கி தெருக்களில் நிதானமாக ஓட்டி வீட்டிற்கு வந்தபின் தான் தெரிந்தது அங்கு ஹிட்லர் நிற்பது. சும்மா இல்லை பிரம்புடன். ஏனென்று அவனுக்குத் தெரியவில்லை. பின்னாலேயே ரிஷி ஓடி வந்தான், உடன் பார்கவியையும் தூக்கி கொண்டு.
"ஹரி!. ஏ?, ஹரி பாப்புவ விட்டுடுட்டு வந்த. அவா அழுகுறா உன்ன காணும்னு சொல்லி… அவளையும் சைக்கிள்ள உக்கார வச்சிருக்கலாம்ல. அவளால நடக்க முடியலையாம். பாவம்." என மூச்சிரைக்க பேச, இங்குக் கலியபெருமாள் மூச்சு வாங்க, அடிக்கத் தயாரானார்.
"ஏன்டா?. சின்னப் பிள்ளைய பத்திரமா கொண்டு வந்தது விடாம, ஊர் சுத்த போய்டியா!. போவியா?. போவியா?." என அடிக்க, கனகவள்ளியின் தயவால் பலத்த அடி விழாமல் தப்பினான். ரிஷியின் நக்கல் கலந்த சிரிப்பில் தெரிந்தது அவன் வேண்டுமென்றே செய்கிறான் என்று.
வனத்துறை பாதுகாப்பு அதிகாரியான மூர்த்திக்கு அரசே குடியிருக்க இடம் ஒதுக்கி இருந்தது. அங்கு அவர்கள் மட்டுமல்லாது மேலும் பலர் இருந்த போதும், குழந்தைகள் என்று அதிகமான சிறுவர்கள் கிடையாது. ஒன்றிரண்டு பேர்தான் இருப்பர். எனவே வெளியே சென்று சிறுவர்களுடன் விளையாட இயலாது. அதனால் மூர்த்தி இருவரையும் விரைவிலேயே மழலையர் பள்ளியில் சேர்ந்து விட்டார். சற்று தொலைவு தான். முதல் சில நாட்கள் மட்டுமே அவர் கொண்டு போய் விட்டுக் கூட்டி வந்தார். பின் வழியை மட்டும் காட்டி விட்டு, அதே பள்ளியில் படிக்கும் கோர்ட்டரஸ் சிறுவர்களுடன் வந்து விடும்படி சொல்லி விட்டார்.
கௌதம் எதை எடுத்தாலும் 'இது என்னோட அப்பா வாங்கி தந்தது. உனக்குக் கிடையாது.' என ரிஷி வந்து நிற்பான். அவன் ஒவ்வொரு முறை என்னோட அப்பா, என்னோட அப்பா என்று சொல்லும்போது சிறுவனான கௌதமிற்கு தன் தந்தை தனக்கு எதுவும் செய்வதில்லையே என்ற ஏக்கமும் ஏமாற்றமும் மலைபோல் உயர்ந்து நிற்கும்.
"இதுக்கு பேரு கொடுமையா கௌதம்!. ச்ச! இது தெரியாம எங்கூட பிறந்த அண்ணன நா பழி வாங்காம விட்டுட்டேனே. எவ்ளோ பெரிய அப்ராணி நா." என ஹரிணி வருத்தப்பட, அவளை முறைத்தான் கௌதம்.
"உனக்கு விளையாட்டா இருக்கா?. நா சொல்றது. ம்."
"இல்ல கௌதம், நா விளையாடல. எல்லா அண்ணனுங்களும் இப்படி தா போல. எங்கண்ணனும் இப்படி தா பண்ணுவான். அரவிந்த் தெரியும்ல. எனக்கு முன்னாடி எங்கம்மாக்கு மகனா பிறந்தவெ. அவனும் இப்படி தா பண்ணுவான். 'எங்கம்மா தா இது. உனக்கு இல்ல. உன்ன நாங்க ஆவக்கா ஊறூகாய் ஒரு பாட்டில் குடுத்து வாங்கிட்டு வந்தோம். உனக்கு அப்பாம்மா வேற' ன்னு சொல்லிச் சொல்லி அழ வப்பான் தெரியுமா!. இதே மாறித்தா என்ன வீட்டுல போட்டுக் குடுப்பான். நானும் எப்ப பாத்தாலும் அழுத்துட்டே இருப்பேன்."என்றாள் அவள்.
ஒரு தாய் வயிற்றில் பிறந்த, உடன் பிறப்புகளே விவரம் தெரியாத வயதில் தங்கள் பெற்றவர்கள்மீது உரிமையுணர்வுடனும், உடன் பிறந்தவர்கள்மீது காழ்ப்புணர்வுடனும் நடந்து கொள்ளும்போது. இரு வேறு தாய் தந்தைகளை கொண்டவர்கள் எப்படி ஒற்றுமையாக இருக்க இயலும்?. அதுவும் விவரம் தெரியாத சிறு குழந்தைகளாக இருக்கும்போது என்பது அவளின் எண்ணம். வளரும் போதும், வளர்ந்த பிறகும் அது சரியாகி போய்விடும் என்றாள் அவள்.
"ஒருக்க புளியங்கா சாப்பிடுறேன்னு சொல்லி அதோட கொட்டைய முழுக்கிட்டேன். அதுக்கு அரவிந்த் என்னோட வயித்துல புளிய மரம் மொளைக்கப் போதுன்னு சொல்லிப் பல நாள் அழ வச்சிருக்கான். அப்றம் ஸ்கூல் விட்டு நானும் அவனும் ஒன்னாத்தா வருவோம். அப்பப் பாதி வழியிலேயே என்ன ரோட்டுல விட்டுட்டு பயளுக கூட விளையாடப் போய்டுவான். நா அழுதுகிட்டே வீட்டுக்கு வருவேன்.
ஒரு நாள் நா அவங்கிட்ட சொல்லிக்காமலேயே வீட்டுக்குத் தனியா நடந்து வந்துட்டேன். வந்து அம்மாட்ட அரவிந்த் தா என்ன தனியா போச்சொன்னான்னு சொன்னேன். பாவம் அவெ என்ன காணும்னு தேடிருப்பான் போலப் பயந்து போய் வீடுக்கு வந்தான். எங்கூட சண்டை எல்லாம் போட்டு அடிச்சான். தாத்தாவும் அம்மாவும் தா அவன இழுத்துட்டு போனாங்க." என்றாள் ஹரிணி
உடன் பிறந்தவர்கள் சண்டை போடுவது சகஜம். ஹரிணியின் அம்மா வசுந்தரா பொறுமையாக எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பார் இருவருக்கும். ஆனால் இங்குக் கலியபெருமாளுக்கு பொறுமையும் இல்லை, கௌதமுடன் நின்று பேசவும் பிடிக்கவும் இல்லை. என்ன செய்ய?
'இதெல்லாம் ஒன்னுமே கிடையாது.' என்பது போல் ஹரிணி பார்க்கக் கௌதமிற்கு கடுப்பானது.
"உனக்குப் புரியலன்னு நினைக்கிறேன். எப்பையாது கேலி பேசி அழ வைக்கிறது வேற. எப்பையுமே அதாவது தினமும் காலைல தூங்கி எழுந்ததுல இருந்து ராத்திரி கண்ண மூடித் தூங்குற வர அவெ பண்ணுற எல்லாமே எனக்குக் கொடும தா. தினமும் என்னோட மூஞ்சில தண்ணி ஊத்தி தா எழுப்புவான். எங்க வீட்டுல ரெண்டு பாத்ரூம் தா. அதுல ஒன்னு பெரியவங்களுக்கு. இன்னொன்னு எங்களுக்கு. என்ன எழுப்பி விட்டுட்டு அவெ போய்ப் பாத்ரூம் ல உக்காந்துப்பான். ஒரு மணி நேரம் கழிச்சி தா வெளிய வருவான்.
சரி சமாளிப்போம்னு நினைச்சி பாத்ரூம் குள்ள போனா! சூடு தண்ணி மொத்தத்தையும் உறிஞ்சிட்டு. ஐஸ் வாட்டர்ல என்ன குளிக்க விட்டுடுவான். அதுவும் ஊட்டில சில்லுன்னு இருக்குற தண்ணில குளிக்கிறது எப்படி இருக்கும் சொல்லு.
சரின்னு பச்ச தண்ணீல குளிச்சி கிளம்புனா! என்னோட ஸ்கூல் பேக் எப்பையுமே காணப்போய்டும். உள்ளருக்குற நோட்டு, பேனா, பென்சில்னு எல்லாத்தையும் எடுத்துத் தூக்கி வீசிருப்பான். அத்தனையையும் கண்டு பிடிச்சி எடுத்துட்டு ஸ்கூலுக்கு போனா லேட்டுன்னு சொல்லி வாசல்லையே கொஞ்ச நிக்க வச்சிடுவாங்க. எல்லாரும் பாத்து சிரிப்பாங்க.
அதையும் மீறி உள்ள போனா என்னோட ஹோம் ஒர்க் நோட் மட்டும் இருக்கவே இருக்காது. அத ஸ்கூலுக்கு வந்ததும் எடுத்து ஆட்டைய போட்டு வச்சிருப்பான். மிஸ்கிட்ட திட்டு, ஹிட்லர் கிட்ட திட்டுன்னு டெய்லியும் திட்டு வாங்க விடுவான். வீட்டுல ஹிட்லர் இம்சன்னா ஸ்கூல்ல இவெ. விக்ரமாதித்தன் கதைல வர்ற வேதாளம் மாறி என்னோட தோள்லயே உக்காந்துட்டு என்ன கண்ட்ரோல் பண்ண நினைக்கிற வேதாளம் அவெ. நைட் நிம்மதியா தூங்க கூட விடாதா கோட்டான். எனக்கு வந்த வைரஸ் கிருமி அவெ. " எனச் சரமாரியாகத் திட்ட, உடன் ஹரிணியும் சேர்ந்து கொண்டாள்.
முதலில் கௌதம் கூறியதை விளையாட்டாக எடுத்துக் கொண்டு கேலி செய்தவள் பின் அந்த வயதில் கௌதமின் மனநிலையை எண்ணி வேதனை கொண்டாள். நிராகரிப்பு, ஏமாற்றம், ஏளனம், அவமானம் போன்ற சூழ்நிலைக்கு மத்தியில் வளர்வது கடினம் என்று தோன்றியது ஹரிணிக்கு. ஏதோ ஒரு வகையில் தன் கணவனும் அதற்குக் காரணம் என்பதே கோபம் கோபமாக வந்தது. இப்போது ரிஷி மட்டும் ஹரிணியின் கையில் கிடைத்தால் அவனின் மற்றொரு கன்னத்திலும் கோடு போட்டு விட்டிருப்பாள். அத்தனை கோபம் வந்தது அவளுக்கு.
ஹரிணி திட்டத் தொடங்கியதும் கௌதம் வாயை மூடிக்கொண்டான். ' ஒருத்தர்ட்ட திட்டு வாங்குனா போதும். ஊரெல்லாம் சேந்து திட்டக் கூடாது. ' என்ற உயர்ந்த எண்ணத்தால் ஹரிணியே திட்டட்டும் என விட்டுக் கொடுத்து விட்டான். ஒரு கட்டத்தில் ஹரிணியின் கோபம் அதிகமாகி வார்த்தைகள் எல்லை மீறத் தொடங்கும்போது.
"ஹேய்... ஹேய்... போதும் ம்மா. அவெ என்ன வெளியாளா!. கண்டபடி திட்டுற. உன்னோட புருஷெம்மா. பாத்து திட்டு." என்றான் சிரியஸ்ஸாக. அவனுக்கு ஹரிணி தரனை திட்டினால் பிடிக்கும் தான். ஆனால் உண்மை கோபமாகத் திட்டக் கூடாது. போலி கோபத்தில் திட்டினால் ரசிப்பான். உடன் சேர்ந்தும் கொள்வான்.
"சும்மா இரு நீ. அவனுக்குத் தான் தாங்கிற நினப்பு ஜாஸ்தி. திமிரு. ஆணவம் எல்லாமே அதிகமா இருக்கும். எதோ, பாஸ் மாறி நம்மல கமெண்ட் பண்ணிக்கிட்டே இருப்பான். ஆனா, யாரோட கமெண்டையும் அவெ கேக்க மாட்டான். இடியட், ஐ ஆம் ஷோ ஸாரி கௌதம். அவனுக்காக நா உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். இதே மாறித் தான் பார்கவி விசயத்துலையும் உன்ன போட்டுக் குடுத்திருப்பான். அதா அங்கிள் உன்ன கொலகாரன்னு முடிவு பண்ணிட்டாரு. செய்றத எல்லாம் செஞ்சிட்டு இப்ப நல்லவெ மாறி நடிக்ககிறான். heartless man." எனத் திட்ட, கௌதம் மௌனமாய் இருந்தான். பின்.
"ஏங்கௌதம், பார்கவி எப்படி இறந்தாங்க?. ஐ மீன் எல்லாரும் வேற வேற மாறிச் சொல்றாங்க. எது உண்ம." எனப் பார்கவியின் மரணம்பற்றி ஹரிணி கேட்க, கௌதம் காரை ஓரமாக நிறுத்தி அவளை ஆழமாகப் பார்த்தான். பின் சோர்வாய், சீட்டில் தலை சாய்த்தான். வேதனை அவனை இப்போதும் வந்து ஒட்டிக்கொண்டது.
"கௌதம்... கௌதம்." என அழைத்தாள். அவன் அசையாது போகவும் அவனின் தலையை இதமாய் வருடி,
"உனக்குக் கஷ்டமா இருக்குன்னு எனக்குத் தெரியும் கௌதம். பட் அத நீ ஷேர் பண்ணிக்கிட்டா பெட்டரா ஃபில் பண்ணுவ. இதுவரைக்கும் நா உங்கிட்ட இத பத்தி கேட்டதில்ல. ஆனா, ரிஷி அன்னைக்கி பேசுனத பிரகாஷ் சொன்னான். அதா கேக்குறேன். பார்கவி எப்படி இறந்தாங்க?. நிஜமாவே அது யாருன்னு கண்டு பிடிக்க முடியலையா?." அவன் மனம் காயப்படாத படி கவனமாகக் கேட்டாள். தனிந்த குரலில்.
"இல்ல... இல்ல... கண்டு பிடிச்சோம். ஆனா உம்புருஷெ தப்பிக்க விட்டுட்டுடான். ப்ளடி ***" என ஆக்ரோஷமாகக் கத்தினான். பின்,
"எனக்கு இப்பையும் பாப்புடுவோட முகம் கண்ணுக்குள்ளையே இருக்கு ஹரிணி. இந்த ரெண்டு கையாலையும், பாப்புடுவோட கன்னத்த தாங்குனா அவளோட முகம் என்னோட கைக்குள்ள அடங்காது. நல்லா உருண்டையான அவளோட முகத்த பாக்க பாக்க ஆசையா இருக்கும். ஹரிண்ணா ஹரிண்ணான்னு அவா கூப்பிடுற குரல் என்னோட காதுல கேட்டுக்கிட்டே இருக்கு. என்ன விட்டுடேல்ல?. மறந்துட்டேலன்னு சொல்லி அழற அவளோட குரல், என்ன தொரத்தி கிட்டே இருக்கு.
அந்தக் குரலுக்குப் பயந்து நா ஓடிக்கிட்டே தா இருக்கேன். என்னால நார்மல சில நேரம் இருக்க முடியுறது இல்ல. பாப்புடு இந்த உலகத்துல இல்லங்கிறதையே நம்புறதுக்கே எனக்குப் பல நாள் ஆச்சி. அதுக்கு காரணமனவங்கள எங்கையால கொல்ல முடியலயேங்கிற ஆத்திரம் எனக்குள்ள எரிஞ்சிக்கிட்டே இருக்கு. நானும் என்னோட பாப்புடுவோட மரணத்துக்குக் காரணமுன்னே நினைக்கும்போது." என ஆவேசமாக ஸ்டேரிங்கில் குத்த, அது அவனுக்கு வலி தரவில்லை.
"கௌதம், ப்ளிஸ் காம் டவுன். கௌதம். " என ஹரிணி கத்தியும் பலனில்லை.
இருபது வருடங்களுக்கு மேல் யாரிடமும் பகிராமல் வைத்திருந்த கௌதமின் ரணம் மெல்ல மெல்ல வெளி வர, ஹரிணி அதைத் தடுக்காமல் கேட்டாள். சில நிமிடங்கள் நீடித்த அவனின் புலம்பல் அடங்கியதும் ஹரிணி அதே கேள்வியை மீண்டும் கேட்டாள். பார்கவி இறந்தது எப்படி?.
"அவங்க இறந்ததக்கு காரணம் வன்கொடுமையா.?" என்க, அவன் திரும்பி ஒரு பார்வை பார்த்தான். அது பயங்கொள்ளச் செய்யும் அளவுக்கு இருந்தது.
"இல்ல. அது child abuse இல்ல." எனச் சொன்னவனின் வார்த்தைக்கான பொருள் புரியாமல் முழித்தாள் ஹரிணி.
ஒருபக்கம் ஐந்து வயது குழந்தையின் திடீர் மரணம். மறுபக்கம் அந்தக் குழந்தையின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியாத குழப்பம். இதற்கிடையே வேதனையில் ததும்பும் கௌதம். தன் நண்பனின் துயர் துடைப்பது அவசியமாகப் பட்டது ஹரிணிக்கு.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..