அத்தியாயம்: 46
"எங்க போறோம்.?" கௌதம்.
"..."
"உன்னத்தா! எங்க தான்டா போறோம்?." சலிப்பாக வந்தது குரல்.
"..."
இதே கேள்வியைப் பல முறை கேட்டு விட்டான் கௌதம். ரிஷி பதில் தான் சொல்லவில்லை.
"டேய்!. உனக்குக் காது கேக்கலையா டா!. எங்க கூட்டீட்டு போற.?" கிட்டத்தட்ட அவன் கத்திய கத்தல் மலையில் முகடுகளில் பட்டு எதிரொலித்தது.
"ம்ச்... நீ எத்தன மொற கேட்டாலும் பதில் சொல்ல முடியாது. எதுக்கு வீணா கத்தி கத்தி உன்னோட எனர்ஜிய வேஸ்ட் பண்ற. வந்து பாத்து தெரிஞ்சிக்க." என அலட்சியமாகக் கூறி முன்னே நடந்தான் ரிஷி.
அவனை இதழ் திறக்காது திட்டிக் கொண்டே கௌதம் நடக்க, பதினைந்து நிமிட வேக நடைக்கு பின் ஒரு வீடு கண்ணிற்கு தெரிந்தது. சூரிய ஒளியை நிலத்தில் அனுமதிக்காத காவலர்களாய் ஓங்கி உயர்ந்த மரங்கள். முடிந்தால் என்னைத் தாண்டிச் செல் என்பது போல் வரிசையாக வந்த மேடுகள். கொல்லனின் உதவியின்றி கூர் திட்டப் பட்ட கத்தி போன்று கூர்மையான சில பாறைகள் என ரிஷி அழைத்துச் சென்ற பாதை சற்று கடுமையாகவே இருந்தது.
ஒரு சிறிய மேட்டில் உள்ள மண் படிக்கட்டில் ஏறினால் சிறிய கட்டிடம் தெரியும். அதுதான் வீடு. அதில் நம்மை வரவேற்க, புல்லைப் பாய் போல் விரித்து வைத்திருந்தனர். சுற்றி யாரும் அற்ற தனிமையில் இருக்கும் அந்த மரங்கள் சூழ்ந்த வீடு பயங்கரமாய் காட்சியளித்தது.
இவர்கள் இருவரின் ஆரவாரம் கேட்டு வெளியே வந்தார் முப்பத்தி ஐந்து வயது மதிக்கத் தக்க ஒரு ஆடவர். ஆறடிக்கும் மேல் இருக்கும் அவரின் உயரம். உடல் அது தசைகளால் செய்யப்பட்டது போல் இல்லாமல் கல்லை அடுக்கி வைத்தது போல் கட்சிதமாக இருந்தது. பார்வை நம்மை லேசராய் துளைத்து ஊடுறுவி செல்லும் அந்த அளவுக்குக் கூர்மையாய் இருந்தது. அவர் தான்.
யுகேந்தர் சிங்.
எக்ஸ் மிலிட்டரி மேன். அவருடைய வீடு தான் இது. இருபது ஆண்டுகளுக்கும் மேல் இந்திய சிப்பாயாகப் பணி புரிந்தவர் அவர். சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஆர்மியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவருக்குத் திருமணம் என்ற ஒன்று இன்னும் ஆகவில்ல. உடன் பிறந்த தம்பியின் குடும்பம் ஊட்டியில் உள்ளதால் இங்கு இருக்கிறார். அவரின் சகோதரனும் சத்தியமூர்த்தியும் சக ஊழியர்கள். அதனால் தான் ரிஷிக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டது.
முடியாது என்றவரிடம் கெஞ்சி பேசிச் சம்மதம் வாங்கி உள்ளான் ரிஷி. எதற்கு என்றால் Martial arts. அதாவது ரிஷிக்கும் கௌதமிற்கும் தற்காப்பு கலைக்கான பயிற்சி கொடுக்க அவரிடம் வேண்டினர். வார இறுதி நாட்களில் மட்டுமே என்ற நிபந்தனையுடன் சம்மதித்தார் அவர். இருவரும் ஒன்றாகத் தற்காப்பு கலையைக் கற்றுக் கொள்ள ஆயத்தமாயினர்.
"மறுநாள் லீவ் முடிஞ்சிடுச்சி. ரிஷி ஊருக்குப் போய்ட்டான். ஹிம்... போகும்போது 'தனியா சுவர் ஏறிக் குதிக்கிறேன்னு காட்டு விலங்கு எது கைலையும் மாட்டிக்காத. அப்பறம் வாளில தா உன்ன வழிச்சி எடுத்துட்டு போக வேண்டி வரும். தனியா போய்டாத.'னு பயமுறுத்திட்டு வேற போனான். எப்பையுமே அவெ பக்கத்துல இருந்தான்னா எரிச்சலா இருக்கும். எப்படா போவான்னு நினைப்பேன். ஆனா, அப்ப ஏ போனானு இருந்துச்சி. திரும்பி எப்ப வருவான்னு எதிர்பார்க்க கூட ஆரம்பிச்சிட்டேன்.
அந்தப் பசங்க எங்கிட்ட அடுத்து வம்பு பண்ணவே இல்ல. ஏங்கூட தங்கிருக்குற ரூம் மெட்ஸ் கூட எங்கிட்ட நல்லவிதமா பேச ஆரம்பிச்சானுங்க. அவந்தா காரணம். எல்லார் கூடயும் பேசிப் பழகி என்னையும் பழக வச்சான். எனக்குப் புதுசா இருந்தது. அடுத்த வாரமும் வந்தான் சரியா சனிக்கிழமை விடிகாலைல என்ன காட்டுக்குள்ள கூட்டீட்டு போனான். மிலிட்டரி வீட்டுல தற்காப்பு கலைய கத்துக்க எங்க ஸ்கூல் பிரின்ஸ் பால்ட்டா ஸ்பெஷல்லா பர்மிஷன் வாங்கிருக்கான். அவரோட சம்மதத்தோட தா எங்க ஹாஸ்டல்ல வாரக் கடைசில தங்கிருக்கான்.
மூணு மணி நேரந்தான் அந்த மிலிட்டரி வீட்டுல இருப்போம். கராத்தே, சிலம்பம், ஜீடோ இன்னும் நிறைய சொல்லித் தந்தாரு. அதுமுடியையும் நாங்க ஹாஸ்டலுக்கு போகமாட்டோம்.
ஊட்டிய சுத்தி பாப்போம். நிறையா பூச்சி, அனிமல், செடின்னு மினி டிஸ்கோவரி சேனலையே லைவ்வா காட்டுனான். மல ஏறுறது, கேம்ப்ன்னு ராத்திரி தூங்காம கூட நல்லா சுத்துவோம். யாரு கிட்டையும் மாட்டாம, வேற வேற பாதைல, வேற வேற நேரத்துல போவோம். அப்படியே மாட்டுனாலும் மூர்த்தி பெரிப்பா பேரச் சொல்லித் தப்பிக்கிவோம். ஏன்னா அவருக்கு அந்த ஊர்ல அத்தன செல்வாக்கு. ஃபாரஸ்ட் ஆஃபிஸர் இல்லையா!. அதுனால அங்கிருக்குற சில மலைவாழ் மக்கள் கூடப் பழக வாய்ப்பு கிடைச்சது.
மிலிட்டரி வீட்டுல ஐஞ்சி வர்ஷம் டிரைனிங் எடுத்தோம். அப்பையும் அவெ என்ன மிலிட்டரிட்ட போட்டுக் குடுத்துட்டே தா இருப்பான். நா சரியாவே செஞ்சாலும் தப்புன்னு சொல்ல, அந்தாளும் பனிஷ்மெண்ட் தர்றேங்கிற பேர்ல வீட்டையே வாத்து மாறி நடந்து சுத்தி வரச் சொல்லுவாரு. என்ன வெறுப்பேத்துற மாறிப் பேசிக்கிட்டு எங்கூடவே வருவான்.
அவெ மாறவே இல்லை ஹரிணி. அப்பையும் சரி, இப்பையும் சரி. ஒரே மாறித்தா இருக்கான். அதுனால நா மாறிக் கிட்டேன். அவெ என்ன கீழ தள்ளுற ஒவ்வொரு முறையும் நா வேகமா எழக் கத்துக்கிட்டேன். எங்க ரெண்டு பேரையும் ஒருத்தருக்கொருத்தர் சண்ட போட்டுப் பயிற்சி எடுக்கச் சொல்லும்போது அவெ என்ன பாவம் பாக்காம அடிப்பான். 'இதுக்கு தா வெள்ளையா இருக்க கூடாங்கிறது. பாரு அங்கங்க கறுத்து போய், அசிங்கமா தெரிஞ்சி நீ எங்கிட்ட அடிவாங்கறங்கிறத காட்டிக் குடுக்குது.'ன்னு சொல்லிச் சிரிப்பான்.
எனக்கு அப்பெல்லாம் கோபம் வரல. மாறா அவன திருப்பி அடிக்க, அவனுக்கு இணையா நிக்கனுங்கிற உத்வேகம் வந்தது. சொல்லப் போனா என்னோட திறமைய மெருகேத்த வச்சான். நாங்க செய்யாதது எதுவுமே இல்லங்கிற அளவுக்கு ஊர் சுத்திருக்கோம்." என்றவனின் முகத்தில் இருவரின் விடலைப் பருவ நினைவுகள் வந்து மோதியது.
அரும்பு மீசை முளைக்கும் பதின்ம வயதிற்கு உண்டான குறும்பையும் சேட்டையையும் இருவரும் சேர்ந்தே செய்தனர். மற்றவர்களை வம்பிலுத்து வீண் சண்டை செய்வது முதல் வார்டனை இவர்களின் பின்னால் சுற்ற வைப்பது. ஏன் ஆணாய் மாறத் துடிக்கும் அந்தப் பருவற்கே உரித்தான அத்தனையையும் செய்தனர்.
"வந்து போறதுக்கு செலவு ஆகுமே என்ன பண்றான்னு பெரிப்பா கிட்ட கேட்டபோது தான் தெரிஞ்சது, அவெ என்ன பாக்க வர்றேங்கிறத அவர் கிட்ட சொல்லன்னு. வார நாள்ல பார்ட் டயமா வேல பாத்து அந்தக் காச எடுத்து வந்து வாரக் கடைசில எங்கூட சேந்து செலவு செஞ்சிருக்கான். பணம் வேணும்னு அவன் மூர்த்தி பெரிப்பாட்ட கேட்டதே இல்ல. அந்த வயசுலையே அவனுக்கு யார் கிட்டையும் எனக்கு இது வேணும்னு கேட்டுப் பழக்கம் இல்ல. எந்த வழியிலயாது தா நினச்சத செஞ்சே தீருவான்.
எங்க ரெண்டு பேர் பிறந்த நாளும் ஒன்னு தா. பதினச்சு நிமிஷம் தா கேப். ஒன்னா தா இதுவரைக்கும் கொண்டாடிருக்கோம். எல்லாத்தையும் ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கனும். அது சின்ன வயசுல எனக்குப் பிடிக்காது. ஆனா ஒரே மாறி டிரெஸ் எடுத்துட்டு வந்து கேக் வெட்டி, அதுவும் நடு ராத்திர ஹாஸ்டல்ல யாருக்கு தெரியாம என்ன காட்டுக்குள்ள கூட்டீட்டு போய் வெட்டி த்ரிலிங்கா கொண்டாடுறது சூப்பரா இருக்கும். எங்களோட பதினஞ்சாது பிறந்த நாள். அது தா நாங்க சேந்து கொண்டாடுன ஒன்னு. அதுக்கறம் அப்படியொரு நாள் இருக்குறதையே நா மறந்துட்டேன்." என்றவன் முகத்தில் கசந்த புன்னகை.
"அவனுக்கு ம்யூசிக் னா ரொம்ப பிடிக்கும். புல்லாங்குழல், அத சூப்பரா வாசிப்பான். நல்லா பாடவும் செய்வான். அது மலைல பட்டு எக்கோ அடிக்கும்போது கேட்க நல்லா இருக்கும்." என்றவனுக்கு இருவரும் ஆடிப் பாடி சுற்றித் திரிந்தது சிறு வலியுடன் நினைவிற்கு வந்தது. பின் ஹரிணியை நோக்கி.
"உன்னோட புருஷென் எதுக்கு சமக்க கத்துக்கிட்டான்னு உனக்குத் தெரியுமா?. எனக்காக. எங்க ஹாஸ்டல்ல சாப்பாடு சாப்பிட்டு எனக்குச் சிவியர் ஸ்டொமக் பெயின், வாந்தி. அப்ப எங்கூடவே இருந்து அங்க இருக்குற வாட்ச்மேன் குடில்ல எதையாது செஞ்சி எடுத்துட்டு வருவான். ஊர்ல இருந்து வரும்போது சமச்சி எடுத்து வருவான். காட்டுல தீ மூட்டின்னு எனக்குப் பிடிச்சத செஞ்சி தருவான். எனக்குக் கனகா பெரிம்மாக்கு அப்றம் ஊட்டி விட்டது அவெந்தா. அவெ வாய்ல இருந்து வர்ற வார்த்த வேணும்னா நக்கலா இருக்கலாம். ஆனா அவெ எனக்காக எதுனாலும் இறங்கி செஞ்சான்.
ஒரு ஃப்ரெண்டா எனக்குத் துணையா நின்றான். சில நேரம் ப்ரதர்ரா சின்ன சின்ன விசயங்களுக்குச் சண்ட போடுவான். சில நேரம் எதிரியா மாறி வலிக்கிற மாறி ரத்த வர்ர அளவுக்கு அடிப்பான். ஆனா எனக்கு நம்பிக்கை துரோகியா இருப்பான்னு நா நினைக்கவே இல்ல. என்ன நம்ப வச்சி ஏமாத்துற ஏமாத்துக்காரனா இருந்து என்னோட நிலமைய ரொம்ப மோசமா அதளபாதாளத்துல தள்ளி விடுவான்னு நா எதிர்பாக்கல." என்றவனின் முகத்தில் வேதனை வந்தது.
ஹரிணி, கௌதம் இதுவரை கூறியதை கேட்டு எதுவும் பேசவில்லை. ரிஷியின் குணம் தெரியும். ஆதலால் இதற்கு மேல் அவன் சொல்லவிருக்கும் இவர்களின் பிரிவிற்கான காரணத்தை அறியும் பொருட்டு மௌனமாய் நின்றாள்.
ரிஷிக்குச் சும்மா இருந்து பழக்கம் இல்லை. எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். தன்னிடம் உள்ள எதையும் இழக்க அவன் விருப்ப மாட்டான். அப்படி இழக்க நேர்ந்தால் காரணமானவர்களை எளிதில் விட்டு விடமாட்டான். அப்படித்தான் பார்கவியின் மரணத்தை அவனால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்குக் காரணமானவர்களைக் கண்டு பிடிக்க வேண்டும் என்றான் அவன். அதைக் கௌதம் மனதில் ஆழமாகப் பதியவும் வைத்தான்.
"நம்மால முடியுமா?. யாருன்னு கண்டு பிடிச்சி அந்த *** பயளுகல எங்கையாலையே கொல்லனும். முடியுமா?." கௌதம் ஆர்வமாகக் கேட்டான்.
பார்கவி இறந்து ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகப் போகிறது. அதன் பின் எப்படி கண்டுபிடிப்பது என்ற சந்தேகம் வேறு வந்தது.
"கண்டிப்பா முடியும்." என உறுதியுடன் சொன்னான் ரிஷி.
"எப்படி?."
"அதுக்கு நாம முதல்ல போலிஸ் ஸ்டேஷன் போய் அந்த இன்ஸ்பெக்டர பாக்கனும்."
"ஆனா இந்தக் கேஸ விசாரிச்ச இன்ஸ்பெக்டர தான் பொள்ளாச்சிக்கு மாத்திடானுங்களே. மறுபடியும் அவர்கிட்ட போய்க் கம்ப்ளைண்ட் பண்ணப் போறாமா என்ன?."
"கம்பளைண்ட் பண்ணி... ம்... பண்ணி. அவனுங்க எத்தன வர்ஷம் கழிச்சி குற்றவாளிய கண்டு பிடிப்பானுங்கன்னு டயம் லிமிட் இருக்கா என்ன?. இந்தியால ஒரு நிமிஷத்துக்கு எத்தன கம்ப்ளைண்ட் பதிவாகுதுன்னு தெரியுமா?. அத்தனையையும் சரியா விசாரிச்சி, யார் குற்றவாளின்னு போலிஸ் கண்டு பிடிக்கிறதுக்குள்ள... ஹிம்... ஜென்ம ஜென்மமா ஆகலாம். அதுவர யாரு உயிரோட இருக்க போறா?.
எனக்கு நம்பிக்க இல்ல. போலிஸ்க்கு தெரியாம எந்தக் குற்றமும் நடக்காது. ஒன்னு தப்பு பண்றவனுங்களுக்கு பண பலம் எதாவது இருக்கனும். அப்படி இல்லான்னா தப்பு பண்றவனுங்க போலிஸ் காரனுக்கு தெரிஞ்சவனா இருக்கனும். அதா மந்தமா வேல பாத்து காலத்த ஓட்டுறானுங்க. அதுனால நம்மால முடிஞ்சதா நாம தா செஞ்சாகனும். நம்ம கண்ணு முன்னாடியே, நம்ம பாப்பு இறந்திருக்கா. காரணத்த கண்டிப்பா தெரியஞ்சிக்கனும்." என்றான் உணர்ச்சிவசமாக.
"இல்ல பாப்புடு இறந்ததுக்கு கேஸ் இல்லன்னு மூர்த்தி பெரிப்பா சொன்னாறே. அப்றம் எப்பிடி நமக்குப் போலிஸ் நமக்கு உதவி பண்ணும். நாம போய் முதல்ல கேஸ் குடுப்போமே."
"ம்... குடுப்போம். நாம வளந்ததுக்கு அப்றம். அதுவர நம்மால ஆன சின்ன சின்ன வேலைகள செஞ்சிக்கிட்டேத்தா இருக்கனும். நம்ம வீட்டுல ஒரு பொண்ணு இறந்திருக்கா, அது ஏன்னு தெரிஞ்சிக்காம விடுறது நாம பண்ற பெரிய தப்பு. கண்டு பிடிப்போம்." என்றவனின் முகத்திலும் கோபம் கனலாய் முன்னியது.
இருவரும் பாலகர்கள் அல்லவே. பள்ளியில் நடத்தும் பாடங்கள் புரியவே பார்கவியின் இறப்பு, இருவருக்கும் வெறியை தந்தது, தங்கையின் மரணத்தால். பலாத்காரம் செய்து கொல்லப் பட்ட சிறுமி. அப்படி தான் ஊரில் உள்ளோர் பேசிக் கொண்டனர். அதனால் தான் ரிஷிக்கு அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அப்படி மட்டும் நிகழ்ந்திருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தனர் இருவரும்.
ஒன்றை மட்டுமே ரிஷி உறுதியாக நம்பினார். அது தன் தங்கை உடல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டு தான் இறந்தாள் என்பதை. எனவே, கௌதமின் மனதில் பழி வாங்கும் எண்ணத்தை விதைத்தான்.
அதுவரை கௌதமிற்கு பார்கவியின் மரணத்திற்கு பழி வாங்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. வருத்தம் மட்டுமே இருந்தது. இறந்து விட்டாள். புதைந்து போன ஒன்றை மீண்டும் தோண்டுவானேன் என்று நினைத்தான். ஆனால் ரிஷியின் சில பேச்சு அவனைத் தூண்டியது. அதுவும் தன் கையால் அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற அளவுக்கு.
ஆனால் நினைத்த எதுவும் உடனுக்குடனேயே நடந்து விடாது. ஒரு விதையை மண்ணில் ஊன்றினால், அது மரமாய் மாறிப் பின் பூத்து காய்த்து பின் தான் கனி கிடைக்கும். காலமும் நேரமும் கூடி வர வேண்டும். அதுவரை பொறுமை முக்கியம். கௌதமிற்கு அது கிடையவே கிடையாது. அதுவும் பார்கவியின் விசயத்தில் சுத்தமாக இல்லை. இன்றே அவர்களைக் கண்டு பிடித்து நாளையே தண்டித்து விடலாம் என்று மனக் கோட்டை கட்டினான். பாவம் மனக் கோட்டைக்கி அஸ்திவாரம் போட்டவனே அதை இடிக்கச் சொன்னால் என்ன செய்வான் அவன்.
இளைஞர்களாக மாறாத விடலை பருவத்தில் உள்ள இருவருக்கும் யாரும் சரியான தகவல்களைத் தர முன்வரவில்லை.
முதலில் அந்தப் போலிஸ் இன்ஸ்பெக்டர்.
எத்தனை கெஞ்சியும் கலியபெருமாள் அன்று கேஸ்ஸை வாப்பஸ் வாங்கியது அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே காலதாமதமாய் வந்து பேசும் இருவரையும் துரத்தி விட்டார்.
ஆனால், இருவரின் பிடிவாதம் காரணமாகச் சற்று இறங்கி வந்து பேசினார்.
"இங்க பாருங்க பசங்களா. இத்தன வர்ஷம் ஒன்னுமே பண்ணாம இப்ப நீங்க வந்து கேக்குறது டூ லேட். ஆனாலும், எனக்குத் தெரிஞ்சத உங்க கிட்ட சொல்றேன். உங்க தங்கச்சி டெத்ல எங்களுக்கு ரெண்டு பேர் மேல சந்தேகம். ஜஸ்ட் சந்தேகம் மட்டும் தா. அதுல ஒருத்தேன் இப்ப உயிரோட இல்ல. ஒரு ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டான். இன்னொருத்தேன் உயிரோட தா இருக்கான். ஆனா எங்க இருக்கான்னு தெரியாது.
ரெண்டு பேருமே திருடனுங்க. அவ்வளவு தா. இதுக்கு மேல எதுவும் விசாரிக்கல நாங்க. தப்பு பண்ணவனுங்கள எங்களால கண்டு பிடிக்க மட்டும் தா முடியும். தண்டனலாம் கோர்ட் தா குடுக்கும். ஆனா, உங்க அப்பா யாரு குற்றவாளின்னு கண்டு பிடிக்கக் கூட விடல.
இப்பையும் சொல்றேன். அவனுங்க ரெண்டு பேர் மேலையும் சந்தேகம் தா. உறுதியா அவனுங்க தான் கொன்னானுங்கன்னு சொல்ல முடியாது. நீங்க வளர வேண்டிய பசங்க. போய் நல்லா படிங்க. உங்கள மாறி உத்வேகமான இளைஞர்கள் தா நம்ம நாட்டுக்குத் தேவ. எதுக்கு தேவையில்லாதத கிளறி, உங்க லைஃப்ப ஃபாயில் ஆக்கிக்க பாக்குறீங்க." எனப் பார்கவியின் மரணத்தை மறந்து அவர்களின் வேலையைப் பார்க்கச் சொன்னார் இன்ஸ்பெக்டர்.
இருவரின் வயது அப்படி. ஏதோ ஒரு வேகத்தில் யாரையாவது கொலை செய்து விட்டு அவர்களின் எதிர்காலத்தைக் கெடுத்துக் கொள்வார்களோ என்ற அச்சத்தில் அட்வைஸ் செய்து அனுப்பி வைக்க முயன்றார்.
"எது தேவையில்லாதது?. செத்தது என்னோட தங்கச்சி. மை சிஸ்டர். ஒரு போலிஸ் ஆஃபிஸரா இருந்துட்டு தப்பு பண்ணவனுங்கள காப்பாத்த பாக்குறியே உனக்கெதுக்குடா இந்த வேல." எனக் கௌதம் அந்த இன்ஸ்பெக்டரின் சட்டையை உளுக்கிக் கேட்க, மற்ற காவலர்கள் வந்து அவனை இழுத்து ஸ்டேஷனுக்கு வெளியே தூக்கிப் போட்டனர்.
"இவனோட இந்த ஆவேசம் உண்மைய கண்டுபிடிக்க உதவாது. உணர்ச்சிவசப் படாம இருந்தாத்தா நடந்த உண்மை ஏத்துக்க முடியும். என்னால எதுவும் பண்ண முடியாது. போங்க, எது நடக்கனுமோ அது நடந்தே தீரும். உங்க தலையெழுத்து. நீயா போறியா!. இல்ல உந்தம்பிய தூக்கி போட்ட மாறி உன்னையும்." தூக்கி போடனுமா எனக் கதவை நோக்கிக் கைக்காட்டிய இன்ஸ்பெக்டரை கூர்மையாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் ரிஷி.
இவனுக்குச் சில கேள்விகள் கேட்கப்பட வேண்டியுள்ளது. ரிஷி எப்பவும் தன் எதிரில் இருப்பவர்களையே முதலில் பேச விடுவான். அவர்களின் பேச்சை முழுதாக உள்வாங்கிய பின்னரே தன் வாய் திறந்து பேசத் தொடங்குவான்.
இப்போதும் அப்படி தான். இன்ஸ்பெக்டருக்கு பார்கவி கேஸ்ஸை எடுத்து நடத்த முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளதை உணர்ந்தவன். அவரால் மட்டுமே தங்களுக்கு உதவ முடியும் என்பதால் நிதானமாக அவரிடம் பேசத் தொடங்கினார். தனது சந்தேகங்களைக் கேள்விகளால் அடுக்க, அவரிடம் இருந்தது கிடைத்த சில பதில்களிலிருந்து அடுத்த அடி எடுத்து வைத்தான். ஆன போதும் கிடைத்தது தெளிவில்லாத பதில்கள். இன்ஸ்பெக்டர்க்குமே பல கேள்விகளுக்கு விடை தெரியாதபோது எங்கிருந்து இவர்களுக்கு உதவுவார்.
அன்று கலியபெருமாளால் போலிஸ், அவரின் மகளின் மரணத்திற்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்காது விட்டு விட்டது. பிடித்திருந்ததால் ரிஷி கூறியது போல் பல உயிர்கள் தங்களை உடலை விட்டுப் பிரிந்திருக்காது. வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டும் இருக்காது.
விதி வலியது இல்லையா!
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..