அத்தியாயம்: 49
எல்லை இல்லா வானம். அதைத் தாண்டிச் செல்லக் கூட இப்போது மனிதனால் முடிகிறது. ஆனால் அவன் வாழ்வில் நிகழ்ந்த துயரச் சம்பவங்களைக் கடந்து செல்வது எளிதாக இருப்பதில்லை.
மனம் முழுக்க வேதனையில் ததும்ப, கௌதம் விழிகளில் நீருடன் நின்றான்.
"கௌதம், ஆர் யூ ஓகே?." என ஹரிணி அவனின் தோளைத் தொட,
"இல்ல ஹரிணி. ஐ ஆம் நாட் ஓகே. என்ன ஏமாத்திட்டான். நம்ப வச்சி ஏமாத்திட்டான். அவனுக்காக நா எத்தன நாள் காத்திருந்தேன்னு தெரியுமா?. ம்ச்... அவனுக்கு நா சந்தோஷமா இருந்தாலே பொறுக்காது. எதாவது பண்ணி என்ன அழ விட்டுக்கிட்டே இருப்பான். எனக்குன்னு இருக்குறத பிடுக்கிக்கிறதே அவனுக்கு வேலயா போச்சி. எங்கூட இருந்தப்ப அவெ மாறிட்டான்னு நினைச்சேன். இல்ல.
ஆறு வர்ஷம் ஹப்பியா இருந்தேன். ரொம்ப சந்தோஷமா. அது பொறுக்கல அவனுக்கு. போய்டான். எல்லாத்தையும் எடுத்துட்டு என்ன இருட்டுல விட்டுட்டு போய்ட்டான்." என்றவன் திரும்பி,
"நம்மோட ஒவ்வொரு செயலும் நம்ம மேல ஒரு மதிப்ப ஏற்படுத்தும் ஹரிணி. இந்த ஜவுளிக்கடைல ஒவ்வொரு துணிக்கும் மேல ஸ்டிக்கர் ஒட்டி, ப்ரைஸ் எழுதுற மாறி. எவ்ளோ காஸ்லியா இருந்தாலும் சின்னதா ஒரு டேமேஜ் ஆனா, டேமேஜோட அளவ பொருத்து அந்தத் துணியோட வில கொறஞ்சிக்கிட்டே போகும். அந்த மாறித்தா என்னோட மதிப்ப இழந்துட்டே போனேன். அதாவது ரிஷி கூட இருந்த வரைக்கும் நல்லவனா தெரிஞ்ச நா. அவெ இல்லாதப்ப வேற மாறித் தெரிஞ்சேனாம்.
அதுவும் அந்தாள ஃபாலோ பண்ணி தப்பான இடத்துக்குப் போய்ப் போலிஸ்ல ஸ்டேஷன்ல இருந்துட்டு வந்தேன்னு. ஒவ்வொருத்தரும் பண்ண கேலி இருக்கே, அப்பல்லாம் நா ரிஷி ரொம்ப வெறுத்தேன். அவனால தா இதெல்லாம் நடந்தது. பொம்பள பொறுக்கி, விமன் ஐஸர் ன்னு நிறைய பேர் வச்சானுங்க. எங்க ஸ்கூல் பொண்ணுங்க, ஏ எங்கிளாஸ் பொண்ணுங்க கூட என்ன கேவலமா தா பாத்தாங்க. பவிய கூட இதுனால தா எங்கூட தனியா பேசவோ தனியா வெளில போகவோ விடமாட்டாரு. என்னால அத ஏத்துக்க முடியல. அத மறக்க எனக்கு வேற ஒன்னோட உதவி தேவ. அதுதா போதை.
தப்புன்னு தெரிஞ்சி தா நா டிரக்ஸ் எடுத்துக் கிட்டேன். அவன பழிவாங்கவா இல்ல அவனப் பத்தி தெரிஞ்சும் அவன நம்புன எனக்குத் தண்டனையா, இல்ல கிடச்சவன் தலை மேல எல்லா பழியையும் தூக்கிப் போட்டுட்டு நாம மட்டும் தா நல்லவன்னு சொல்ற யாரையும் பாக்காத ஒரு மாயாஜால உலகத்துக்குப் போகவா, எதுக்குன்னு தெரியாமலேயே நா அத எடுத்துக்கிட்டேன்.
போதைதா என்னோட உலகம்னு காத்துல பறந்துக்கிட்டு இருந்த என்ன, இழுத்துத்துட்டு வந்து பூமில விட்டது நீ. என்ன மனுஷனா மாத்தி இப்ப இந்த உலகத்துக்கு ஒன் ஆஃப் தா பிஸ்னஸ் மேன்னா எனக்கு ஒரு அடையாளம் குடுத்தது நீ தா ஹரிணி. என்னோட உலகம். மை வேல்டு. அதுல நீயும் மதியும் தா எனக்கு முக்கியம். மத்தவங்க எல்லாரும் அடுத்து தா. யூ ஆர் மை டார்லிங். என்னோட இன்னொரு பாப்புடு." என்றவனை சென்று அணைத்துக் கொண்டாள் ஹரிணி.
"நானும் உன்னோடு பாப்புடு தான்டா. எனக்கும் நீ தான்டா ஃபஸ்ட்டு. யூ ஆர் மை ஃப்ரண்டு. பெஸ்ட் எவர் ஃப்ரண்டு. என்ன ஆனாலும் உன்ன யார்கிட்டையும் விட்டுக் குடுக்க மாட்டேன்." எனச் சொல்லி முதுகை இதமாய் வருட, கௌதமிற்கு ரிஷி ஹரிணியை திருமணம் செய்து கொண்டபோது, ஹரிணியையும் தன்னை விட்டுப் பிரித்துச் சென்று விடுவானே என்றிருந்த பய உணர்வானது இப்போது இல்லாமல் போனது.
ஹரிணிக்கு எத்தனை முயன்றும் ரிஷியின் மேல் தவறு உள்ளது என்பதை ஏற்கொள்ள முடியவில்லை. அவளுக்கும் கௌதம் கூறியதை கேட்டபின் பார்கவியின் மரணம் மர்மமாகவே தெரிந்தது. பலாத்கார முயற்சியால் இறப்பு என்ற போர்வை போர்த்தப்பட்டு யாருக்கும் தெரியாமல் ஒரு பெரிய குற்றம் நடந்து கொண்டிருக்கிறது. கடைசியாக ரிஷி சொன்ன இது உண்மையாக இருக்கலாம் என்றும் தோன்றியது. ஆனால் அதைக் கௌதமிற்கு புரிய வைப்பதில் தான் தவறு நேர்ந்துள்ளது என்று நினைத்தாள்.
ரிஷி பிடிவாதக்காரன். அவனுக்குக் கர்வமும் ஆணவமும் உண்டு. அது அவனின் குணம். அதே நேரம் கௌதமின் சட்டென உணர்ச்சிவசப்படும் குணமும் தெரியும். ஆதலால் இருவரில் யாரின் மீது தவறு உள்ளது என்று ஆராய விரும்பவில்லை அவள். ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலையில் எதைச் சொன்னாலும் தவறாகத் தான் தெரியும். அது இயற்கை.
அதுதான் இருவரின் மோதலுக்கும் காரணம் என்று பட்டது ஹரிணிக்கு. அதனால் தான் இருவர் மீதும் கோபமும் வருத்தமும் இரண்டறக் கலந்து வந்தது.
அதே நேரம் ரிஷி தன்னை நம்பியவர்களுக்கு இதுவரை ஏமாற்றம் தந்தது இல்லை. இனியும் தரமாட்டான் என்று உறுதியாக நம்பினாள். ஒன்றை செய்ய நினைத்தால் அதை முழுதாகச் செய்து முடிக்கும் வரை முயற்சிகளைவிட மாட்டான். சுருங்க சொல்ல வேண்டும் என்றால் தோல்விகளைச் சந்திக்க விரும்பாதவன். தன் இலக்கை அடைவதற்கான பாதையை நிதானமாகத் தேர்ந்தெடுத்து வெற்றியைத் தாமதமாகக் கூட ருசிப்பவன்.
கௌதம் சில வார்த்தைகளை உபயோகிக்காமல் இருந்தால் இன்னேரம் பார்கவியின் மரணம் யாரால் நிகழ்ந்தது என்று கண்டறியப்பட்டிருக்கும். நீ பேசியது தவறு என்று இப்போது கௌதமிடம் சொன்னாலும் அவன் கேட்கமாட்டான் என்பதை அறிந்த ஹரிணி. அவனின் தவறை சுட்டிக்காட்ட சரியான சமயம்வரை அமைதியாக இருக்க முடிவு செய்தாள்.
"இந்தச் சண்டைக்கி அப்றம் நீ ரிஷிய பாக்கவே இல்லையா." எனத் தயங்கிக் கேட்க, அவளின் முகம் பார்த்தவனுக்கு புன்னகை வந்ததும்.
"ம். பாத்தேன்." என்ற வார்த்தை ஹரிணிக்கு ஆச்சர்யத்தை தந்தது. ஏனெனில் தன் நிலையிலிருந்து ரிஷி இறங்கி வரமாட்டான். தன் மீது தவறு இருந்தால் மட்டுமே மற்றவர்களிடம் இறங்கி பேசுவான். கௌதமை ஊட்டியில் சென்று பார்த்த மாதிரி,
"எப்ப?. ஊட்டிலயா!. அவனா வந்து உன்ன பாத்தானா?. இல்ல தற்செயலா எங்கையாது பாத்தியா.?" எனக் கேள்விகளை அடுக்க,
"மும்பைல. கொஞ்ச வர்ஷம் கழிச்சி. தற்செயல்லாம் இல்ல. என்ன பாக்கத்தா வந்தான். அப்ப நாம பழகிக்கல. மே பீ காலேஜ் ஃபஸ்ட் இயர் இருக்கும். காலேஜ் எதுக்க இருக்குற ப்ளே கிரவுண்டுல. எனக்காகக் காத்திட்டு இருந்தான். ஆள் பாக்க ஸ்மார்ட்டா. வித்தியாசம. நல்லா தா இருந்தான். இருபத்தொரு வயசுக்கு மேல ஆச்சில்ல. காலேஜ் முடிச்சிருப்பான்னு நினைக்கிறேன். ஆனா இத்தன நாள் கண்டுக்காம இருந்துட்டு இப்ப என்னைய பாத்த குற்ற உணர்ச்சில அவெ முகமே சரி இல்ல.
எங்கிட்ட எதோ பேச வந்தான். அவெ பேச்ச நா ஏ கேக்கனும்?. எனக்குத் தேவையானப்ப அவெ கூட இல்லல்ல. அப்றம் இப்ப எதுக்கு பேசனும். அதுனால நல்லா திட்டி விட்டுட்டேன். இடம் பொருள் பாக்காம. எதுவுமே பேசாம திரும்பிப் போய்ட்டான். பயந்துடான் போல." என்று பெருமையாகச் சொன்ன கௌதமிடம் காரின் சாவியை தந்து ஓட்டச் சொன்னாள் ஹரிணி.
கௌதம் சொன்ன அந்த வருடம் தான் மூர்த்திக்கு விபத்தும் வைசு காணமல் போனதும். அதை ஹரிணி அறிவாள்.
தாய் அவனிடம் பேசமாட்டாள். தந்தை படுக்கையில். தங்கை உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்று தெரியாத சூழ்நிலையில், உறவுகள் என்று யாரும் பக்கத்தில் இல்லாமல் ரிஷி கௌதமை பார்க்க வந்தான் என்றால் அவன் கௌதமிடம் ஆறுதல் வேண்டி வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது ஹரிணிக்கு.
அதே நேரம் கௌதம் ரிஷியை அவமானப்படுத்தி திட்டி அனுப்பியதும் சரியாகப் பட்டது. கௌதமை போதை பழக்கத்திற்கு ஆளாக விட்டது ரிஷியின் தவறு என்று தோன்றியது.
'ஐய்யோ!. ரெண்டு பேர் பண்ணதும் நியாயம்னுனே தோனுதே. ரெண்டு பேர் பக்கமும் தப்பில்லன்னே தோனுதே. அப்ப யார் மேல தாய்யா தப்பு. மண்ட முடிய பிச்சி எரியனும்னு போல இருக்கு. ச்ச.' என நினைத்தாள்.
கௌதமின் கையில் கார் மித வேகத்தில் செல்ல, முகத்தில் பட்ட குளிர்ந்த காற்று அவனின் மனக்காயத்தில் இதமாய் வருடி மருந்திடுவது போல் இருந்தது. சில நிமிடங்கள் மௌனமாய் இருந்த ஹரிணி பின் பேசத் தொடங்கினாள்.
"அப்பத் தான நீ அவன கடைசியா பாத்திருப்ப. அப்பறம் இந்த ஊர்ல வச்சி பாத்திருப்ப சரியா." எனக் கேட்க,
காரை ஓட்டியவன் சிறு புன்னகையுடன் தலையை இடம் வலமாக அசைத்தான்.
"நீ அசிங்கபடுத்துனதுக்கு அப்றமும் உன்ன பாக்க வந்தானாக்கும். உன்ட்ட பேச ட்ரை பண்ணானாக்கும்." என நம்ப முடியாமல் கேட்டாள்.
"ம்... அன்னைக்கி திட்டுனதுக்கு அப்றம் ரெண்டு வர்ஷம் அவெ எங்கண்ணுல மாட்டல. என்னோட கெஸ் சரின்னா. அவெ உனக்காக வந்திருப்பான்."
"ஹாங்!. எனக்காகவா?."எனக் கேட்ட அவளின் முகத்தில் இத்தனை நேரம் இருந்த அத்தனை உணர்வும் மறைந்து ஒரு வித குஷி வந்து நின்றது. ஏனெனில் பெண்களின் பின்னால் ஃபாலோ செய்து எனக்குப் பழக்கம் இல்லை என்ற தன் கணவன். தன் பின்னால் வந்திருக்கிறான். அதுவும் அவளுக்காக. அதான் சந்தோஷம்.
"ம்... உனக்காகத் தா."
"மும்பைக்கா?."
"ஹா... அங்கையும் தா. ஆனா அங்க மட்டும் இல்ல."
"என்னடா சொல்ற?."
"பெங்களூர்க்கு நாம ஒருக்க போனோமே உனக்கு நியாயம் இருக்கா." என்றவன் முகத்தில் சின்ன சிரிப்பும் வந்தது.
"ம்... அத எப்பிடி மறக்க முடியும். அங்க தா ஸார் அவரோட வைஃப் பாத்திங்க." எனக் கண் சிமிட்டி கேட்க, கௌதம் முகத்தில் வெட்கம் கூட வந்தது. ஏனெனில் அங்குத் தா இந்துவை அவன் முதல் முதலில் சந்தித்தது. பாத்ததும் காதல் இல்லை என்றாலும் அவளின் முகம் அவன் மனதில் ஆழமாகப் பதிந்ததிருத்தது. அந்தப் பெங்களூர் தான் இந்து கௌதமை மணந்து கொள்ள காரணமே.
"அப்ப மதி ஒன்னும் தனியால்லாம் வரல. அவளோட பொத்தானும் கூட வந்திருக்கான். மதி கிளம்பும்போது தான் பாத்தேன். ஆனா மதி என்னோட அத்த மகன்னு நினைக்கவே இல்ல."
"தெரிஞ்சிருந்தா அப்பவே கூட்டீட்டு வந்து கல்யாணம் பண்ணிருப்ப. ச்ச… சில வர்ஷத்த வேஸ்ட் பண்ணிட்டியே ப்பா நீ. விவரம் இல்லாத ஆளு." என அவனின் கேசம் கலைத்து விட்டுச் சிரிக்க,
"உம்புருஷெ அளவுக்கு விவரம் கிடையாது தா. ஏன்னா உன்ன பக்காவா ப்ளான் போட்டுக் கல்யாணம் பண்ணிருக்கான். அந்தத் திறம வேற யாருக்கும் வராது."
"சரி சரி. கத கண்டியூனிட்டி இல்லாமபோது. மும்பைல எத்தன தடவ பாத்திருப்ப."
"அது கணக்கில்ல. அப்பப்ப மும்பைலயும் பாத்திருக்கேன். உன்ன அவெ பாத்த பார்வையே சரியில்ல டார்லிங். அதுனால தா உன்ன அவெங்கிட்ட இருந்து தூரமா வச்சிருக்க ட்ரைய் பண்ணேன். பட்... நீ அவனுக்குப் பொண்டாட்டியா மாறி, அந்தச் சுயநலவாதிய காதலிப்பன்னு கொஞ்சங்க கூட எதிர்பாக்கல. ம்ஹிம் என்ன பண்ண?. ஆன்டி ஹீரோவ தா தேடி தேடி லவ் பண்ணுறாங்க இந்தக் காலத்து பொண்ணுங்க. எல்லாம் தலையெழுத்து." என்ற கௌதமின் மீது சிறிய பில்லோவை தூக்கி எரிய, கௌதம் சிரித்தான், இத்தனை நேரம் இருந்த மனநிலை மாறி.
கௌதம் ரிஷியைக் கேலி செய்ய, 'என் பாவா அப்படி அல்ல.' என இவளும் வக்காலத்து வாங்க, அவர்களின் கார் அவர்களின் வீட்டை நோக்கிச் சென்றது.
இறங்கு நேரம் ஹரிணி கௌதமிடம், "எனக்கு இது சொல்லக் கஷ்டமா இருக்கு கௌதம். ஆனாலும் நீ உங்க ரெண்டு பேத்துக்குள்ள நடந்த வாக்குவாதத்துல வைசுவ தேவையில்லாம இழுத்துருக்க கூடாது. எப்படி அவெ உன்ன விட்டுடுட்டு போனது தப்போ அதே மாறி நீ பேசுனதும் தப்பு. இத நா அவனுக்குச் சப்போட் பண்றதுக்கா பேசல. வைசுக்காகச் சொல்றேன். என்னோட ஃப்ரண்டு அவா. எத்தன ஆப்ரேஷன் பண்ணி அவள காப்பாத்துனோம்னு உனக்குத் தெரியுமா?. ஹாஸ்பிடல்ல சேத்த நாலு நாள் கண்ண திறக்கவே இல்ல. அப்பையும் சரி இப்பையும் சரி அவளோட உடம்பு அவளுக்கு ஒத்துழச்சதே இல்ல.
நம்ம வாயில இருந்து வர்ற வார்த்த அத்தனையும் நிஜமா நடக்கப் போறது கிடையாது தா. ஆனா அப்படி நடந்தா அந்த வார்த்த சாபமா மாறிடும். மாறிருக்கும்.
அத உங்கிட்ட சொல்லிட்டு போக வந்திருப்பான். பாவா எங்கிட்ட எப்பையும் செல்லுவான். நீ ஒருத்தர நம்புனா முழுசா நம்பனும். சந்தேகப்படக் கூடாது. உன்ன அவெ நம்புனதுனால தான் பார்கவி மரணத்த கொலைங்கிற கோணத்துல பாக்க ஆரம்பிச்சான். ஆனா நீ அவன நம்பல. அதா போய்ட்டான்.
உனக்குத் தேவையானப்ப அவெ உங்கூட இல்லன்னு சொன்னேல. அவனுக்குத் தேவை பட்டப்ப நீயும் அவெங்கூட இல்ல. உனக்கு அவெ தந்த வலிய நீ திருப்பிக் குடுத்திட்ட. என்ன அவெ வலிச்ச மாறிக் காட்டிக்கல. அவ்ளோ தா.
இத தப்புன்னு சொல்லமாட்டேன். ஆனா நீ பண்ணது சரியும் கிடையாது. நீ இறந்து போன பார்கவி கூட உயிரோட இருக்குற வைசுவ கம்பேர் பண்ணி பேசிருக்க கூடாது. அவளும் உன்னோட தங்கச்சி தாங்கிறத மறந்துட்ட போல." எனக் கூறி செல்ல, கௌதமின் மனம் சிந்தனைவயப்பட்டது.
ஹரிணிக்கு ரிஷி தனக்காகத் தான் மும்பை வந்தான் என்பதை நம்ப தான் முடிவில்லை. பெங்களூரில் பாத்திருக்கலாம். ஆனால் அதற்காக வெல்லலாம் அவனின் வேலையை விட்டு விட்டு நேரம் ஒதுக்கித் தன்னை காண வந்திருக்க மாட்டான் என்று நம்பினாள். கௌதமின் மீது ரிஷிக்குக் கோபம் இருந்த போதும் தனித்து விட்டிருக்க மாட்டான் என்றும் நம்பினாள்.
உண்மையும் அது தான். சண்டை போட்டு ஊட்டியிலிருந்து சென்றபின் வேண்டுமானால் கோபத்தையும் தன் ஈகோவையும் விட்டுக் குடுக்க மனம் இல்லாமல் கௌதமை வந்து பார்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால் மூர்த்தியின் விபத்திற்கு பின் கௌதமை அவன் தனித்து விடவில்லை. தூர நின்று கௌதமின் ஒவ்வொரு அசைவையும் செயலையும் எவ்வித குறுக்கீடுமின்றி கண்காணித்து கொண்டு தான் இருக்கிறான்.
கௌதமின் குரு சூரியநாராயணன். அவர் தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு ஜாம்பவான். தனித்து நின்று அந்தத் துறையில் சாதித்து காட்டிய இளம் வயது இளைஞர். அவரை ரோல் மாடலாகக் கொண்டு தான் கௌதமின் அந்தத் துறையையே தேர்ந்தெடுத்தான். அவரை நேரில் காண்பது என்பது மிகவும் கடினம். செட்யூல் போட்டு வேலை செய்யும் அவரைக் கௌதம் மிகவும் எளிதாக அணுகி அவரிடம் சில காலம் பயிற்சி எடுத்தது ஆச்சர்யம் தான். அது ரிஷி தரனால் சாத்தியமானது என்று ஒரு நாள் தெரிந்தது ஹரிணிக்கு.
சூர்யா நாரயணனின் தம்பிம் ரிஷியும் நண்பர்கள். ரிஷிமீது அவருக்கு இருந்த நன்மதிப்போ கௌதமை அவரின் சிஷ்யனாக என்றதற்கு காரணம். இதைக் கௌதம் அறிய மாட்டான். ஏன் இன்று வரை கௌமிற்கு வரும் சில பிரச்சனைகள் அவனைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்வதும் ரிஷிதான்.
கௌதமிற்கு மட்டும் அல்ல. பிரகாஷ், இந்து, லதா, சுதா, வேல்ராஜ், எனத் தன் சித்தப்பா பெரியப்பா மக்களையும் அவன் கண்காணித்து கொண்டு தான் இருக்கிறான். எதற்காகவும் தன் தம்பி தங்கைகளை யாருக்கும் விட்டுக் குடுக்க விருப்ப மாட்டான்.
காரணம், மூர்த்தி.
சிறு வயதில் கௌதமை அழ வைக்கும் ரிஷியை அவர் கண்டித்தது இல்லை தான். மாறா வேறு ஒன்றை செய்தார்.
அவருக்கு அவரின் குடும்பத்தை மிகவும் பிடிக்கும். ஆனால் அவர்களுடன் சேர்ந்து வாழ முடியாத அவரின் சூழ்நிலையால் அவர்களைப் பற்றித் தன் மகனிடம் அடிக்கடி பேசுவார்.
தாய் நாச்சியம்மாள், தந்தை தண்டபாணி, அண்ணன் சிவநாதன் என அனைவரைப் பற்றியும் ரிஷியிடம் பேசுவார். இருவர் மட்டும் இருக்கும் ஒரு குடும்பத்திற்குள்ளேயே ஒரு நாளில் ஓராயிரம் பிரச்சனைகள் எழும்போது. பல குடும்பங்கள் சேர்ந்து வாழும் கூட்டுக் குடும்பத்தில் எத்தன பிரச்சனைகள் வரும். சண்டை அது நாளும் நடக்கும். ஆனால் யாரையும் யாரும் விட்டுக் குடுத்தது இல்லை என்பார் மூர்த்தி. விலகி நின்றாலும் அவர்கள் என் சொந்தம் என்றாவது ஒரு நாள் அது என்னைத் தான் வந்து சேரும் என்று நம்பினார்.
அதனால் அவர் ரிஷியின் மனதில் ஒன்றை மட்டும் ஆழமாக விதைத்தார். அது கௌதம் உன் சகோதரன். நம் குடும்பத்தில் ஓர் அங்கம். நீ ஈகோ பார்த்துக் கௌரவம் பார்த்துப் பேசாமல் விட்டுச் சென்று விடக் கூடாது. அவனுக்கு நீ அண்ணன். பொறுப்பாய் நடந்து கொள் என்பதை தான் விதைத்தார். சில நேரம் ரிஷியின் குணம் தலை தூங்கி கௌதமை கலியபெருமாளிடம் போட்டுக் கொடுத்த போதும், வெளி ஆட்கள் யாரிடமும் கௌதமை விட்டுக் கொடுத்தது இல்லை.
சிறுவயதில் இருந்தே ஒட்டி உறவாட விருப்பமில்லை என்றாலும், கௌதமை ஒரேயடியாய் விட்டுக் கொடுத்ததும் இல்லை. இருவரின் உறவும் விரலில் ஒட்டிய பசை மேல் ஆனாது. ஒரு விரலில் எடுத்தால் மறு விரலில் வந்து ஒட்டிக் கொள்ளும். கைக்கழுவும் வரை போகாது. அப்படி கழுவ ரிஷி விடமாட்டான்.
ஏனெனில் அவனுக்கு அவனின் குடும்பம் முக்கியம்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..