அத்தியாயம்: 50
"அடடடடா!!. ஃபோன எடுத்தாலே நச்சு நச்சுங்கிறாங்க. போன வாரந்தா ஆசிரமத்துக்கு குழந்தைங்களுக்கு அன்னதானம்னு சொல்லி நூறு மூட அரிசிய இலவசமா ஏத்தி விட்டேன். அது சோஷியல் சர்விஸ். குழந்தைங்களுக்கு செய்றது கடவுளுக்குச் செய்றதுக்கு சமம். இப்ப! ஒரு அரசியல்வாதி பொது கூட்டம் நடத்த போறாராம். அதுக்கு பத்தாயிரம் பேருக்குப் பிரியாணி பார்சல் குடுக்க என்னோட மில்லு அரிசிய ஓசிக்கி கேட்டா!. குடுத்துட முடியுமா?.
ஹிம்!! வளந்து வர்ற என்ன மாறியான இளம் தொழிலதிபர்கள் சந்திக்கிற பிரிச்சனைகள் அதிகமா இருக்கு. அதெல்லாம் உங்களுக்குச் சொன்னா புரியாது. ச்ச." என்றான் பிரகாஷ். ரைஸ் மில் ஓனராம். அதனால் யாரிடம் பேசுவது என்று தெரியாமல் பேசிக் கொண்டு இருந்தான் பிரகாஷ்.
"யார்ட்டா மகனே பேசுற?." கவியரசன். கையில் பேப்பருடன் அமர்ந்திருந்தார் அந்தக் காலை வேளையில்.
"நீங்களா.! உங்களுக்குச் சொன்னா புரியாது சித்தப்பா. இதெல்லாம் பிஸ்னஸ் மேன்ஸ்ஸுக்கு இருக்குற ப்ராப்ளம். உங்கள மாறி வெட்டியா வயல்ல விளையாடுறவங்களுக்கு எப்படி தெரியும்?. உங்கட்ட பேசல நா."
"அப்ப நீ யார்ட்ட பொலம்பிட்டு இருந்த?." சம்பத் தன் மாமனாருக்காகப் பேச,
"சுவத்துக்கிட்ட மச்சான் ஸார். எம்பிரச்சனைய தீக்குற அளவுக்கு இங்க யாருக்கும் திறம இல்லல்ல. அதா சுவத்துக்கிட்ட சொல்றேன். ஏன்னா?."
"ஏன்னா! அது தா நீ பேசுறத கேட்டு உம்மூஞ்சில காரித்துப்பாதுங்கிற தைரியம்." சம்பத்
"என்ன மாமனாருக்கு சப்போட்டா!. நீங்களும் அவரோட ரிட்டயர்டு சங்கத்துல உறுப்பினரா சேந்துட்டிங்களா மச்சான் ஸார்."
"டேய், யாருடா ரிட்டயர்டு ஆளு. நீ மில்ல பொறுப்பெடுத்து ரெண்டு மாசம் தா ஆகுது. அதுவரைக்கும் நாந்தா தா பாத்துக்கிட்டு இருந்தேன். மறந்துடாத." கவியரசன்.
"க்கும். மறந்துட்டாலும்." எனக் கேலி செய்ய, கிருபாவதி ஒரு டம்ளரில் மோரை கொண்டு வந்து கவியரசனின் முன் வைத்து விட்டுச் சென்றார் கோபமாக.
அவர்களின் மூத்த மகள் சுதாவிற்கு வரன் வந்துள்ளது. கவியரசனுக்கு திருமணத்தை முடித்து விட வேண்டும் என்ற எண்ணம். அவரின் மனைவிக்கோ படிப்பு முடியட்டும் என்ற எண்ணம். அது தான் இவர்களின் சண்டைக்கி காரணம்.
"என்ன சித்தப்பா. சித்தி உனக்கு எட்ட நின்னு மாட்டுக்குத் தண்ணி காட்டுற மாறிக் காட்டிட்டு போறாங்க. என்ன பஞ்சாயத்து. எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு சித்தப்பா. இப்ப நானும் குடும்பஸ்தன் தா." என்றவனின் தலையில் சம்பத் தட்ட,
"இருங்க மச்சான் ஸார். இவரோட பிரச்சனைக்கி தீர்ப்பு சொல்லிட்டு உங்க பிரச்சனைக்கி வார்றேன். கவலையே படாதிங்க. பவியையும் உங்களையும் சேத்து வக்க வேண்டியது எம்பொறுப்பு. ஏன்னா நானும் இப்ப குடும்பஸ்தன். உங்கள மாறிக் காச் மூச்சின்னு சண்ட போட்டுக்காத க்யூட் கப்பில்ஸ் நாங்க." என்றவனிடம்.
"யாரு நீயும் ஜெனியும்!."சம்பத்
"ஓ!. எஸ்."
"ஆமா, நீ வந்து இவ்வளோ நேரமாச்சி. உம்பொண்டாட்டி உன்ன வந்து பாக்கவே இல்லயே. ஏ?. ஒரு வாய் காபி கூடக் குடுக்கல. இப்படித்தா இருப்பாங்களா க்யூட் கப்மில்ஸ்லாம்." என நக்கலாகக் கேட்க,
"நா குரல் குடுத்தா குடுகுடுன்னு ஒடியாருவா மை ஜெனி. இப்ப பாருங்க. ஜெனிம்மா. ஜெனி." எனச் சமையலறையை பாத்து கத்த, எந்தச் சத்தமும் இல்லை. மீண்டும் அழைக்க,
"ஏன்டா காலங்காத்தலையே எரும மாடு மாறிக் கத்துற. உம்பொண்டாட்டி கொள்ளப்பொறத்துல இருக்கா. போ... போய்ப் பாரு. உன்னையும் எதாது கம்பத்துல கட்டி வச்சி வைக்கப்போர வயில குடுப்பா, வாங்கி தின்னுக்க." என மலர் சொல்ல, மற்ற இருவரும் சிரித்தனர்.
ரோசம் வந்த பிரகாஷ் எழுந்து தன் மனைவியைக் காணச் செல்ல, அங்கு
லதா, சுதா, ஜெனியென மூவரும் கையில் நோட்டும் போனாவுமாக அமர்ந்திருந்தனர்.
"ஏய்.! எவ்ளோ நேரமா உன்ன கூப்பிடுறேன். காது கேக்லையா?. ஜெனி. ஜெனிபர்." என அழைக்க,
"ஹல்லோ!. என்னோட மாணாக்கர்கள் கிட்ட பேசனும்னா முதல்ல எங்கிட்ட பர்மிஷன் வாங்கனும். அதுக்கறம் நானா பாத்து உங்களுக்கு டயம் குடுப்பேன். அப்பத் தா வந்து பேசனும். அது என்ன ஏய் ஓய்னு எங்கக்காவ கூப்பிடுறீங்க. மரியாதையா கூப்பிட்டா அக்கா உங்களுக்கு. இல்ல அக்கா எனக்கு. கூட்டீட்டு போய்டுவேன் எங்கூடையே. ஜாக்கிரதை. இப்ப கிளம்புனீங்கன்னா காத்து வரும். போங்க." என்றான் நந்து. மூவருக்கும் மத்தியில் அமர்ந்திருந்தவன் கையில் சிறு குச்சி வேறு.
"மச்சான் ஸார். இந்த வாண்டு எப்ப வந்துச்சி. ஏ வந்துச்சி."
"அவெங் ஸ்கூல்ல எதோ பிரச்சினையாம். நாலு நாள் லீவ் விட்டுருக்காங்கன்னு இங்க வந்துட்டான். வந்து ஒரு மணி நேரம் கூட ஆகல."
"ஆனா, அதுக்குள்ள மூணு பேர கரெக்ட் பண்ணி உக்கார வச்சிட்டானே. இவெ வந்திருக்கான்னு தெரிஞ்சா நா ஜெனியா கூட்டீட்டு எங்கிட்டாது போயிருப்பேன்."
"இப்பையும் ஒன்னுமில்ல. கூட்டீடு போ."
"அப்படிங்கிறீங்க." என்றவன் தன் மனைவியை அழைக்க, அவள் இவனைப் பாவமாகப் பார்த்து விட்டு, நந்துவைக் கண் காட்டினாள்.
"என்ன வேணும் மாமா உங்களுக்கு?. நாங்க முக்கியமான வேல செஞ்சிட்டு இருக்கோம்ல. ஏ நடுவுல வந்து டிஸ்டர்ப் பண்றீங்க?." நந்து.
"ஸாரி டா. நாங்க போறோம். ஆமா அந்த முக்கியமான வேல என்னன்னு எங்களுக்குச் சொல்லலாம்ல." சம்பத்
"அதுவா!. நம்பிக்கை ஊட்டும் நந்துவின் ஜோக்ஸ், அப்படின்னு ஒரு புக் எழுதலாம்னு முடிவு பண்ணிருக்கேன். ஆனா பாருங்க எனக்குப் பேசத் தெரிஞ்ச அளவுக்குத் தமிழ் எழுத வரல. அதுனால மூணு அசிஸ்டன்ட்ட உதவிக்கி வச்சிட்டேன். நா சொல்லச் சொல்ல அவங்க எழுதுவாங்க." என்க, ஜெனி திருதிருவென முழித்தாள். அவளுக்குத் தான் தமிழ் என்று கூட எழுத வராதே. அவளை ஏன் கூட்டத்தில் சேர்த்தானெனப் பிரகாஷ் நந்துவை முறைத்தான்.
"எங்க காமி. நீ இதுவரைக்கும் என்ன ஜோக்ஸ் எழுதியிருக்கன்னு பாக்குறேன்." சம்பத் கேட்க,
"நீங்க வேற மச்சான் ஸார் அவனே அறுவ. இதுல அவெ ஜோக் அதவிட பழைய அறுவ. ஜெனி வா." என மனைவியை அழைக்க, அவள் வேகவேகமாக எழுந்து கணவனின் கரத்தைப் பற்றினாள்.
"என்னோட ஒரு கேள்விக்குக் கரெக்ட்டா பதில் சொல்லுங்க. உங்க வைஃப்ப விட்டுடுறேன். இல்லன்னா கடைசி வரைக்கும் நீங்க வாழா வெட்டன் தா." எனத் தீவிரவாதிபோல் மிரட்டி ஜெனியை தன் பக்கம் இழுக்க, சரி என்றான் பிரகாஷ்.
"தண்ணியே இல்லாத கடல் எங்க இருக்குன்னு. தெரியுமா?." நந்து.
"தண்ணி இல்லன்னா அது கடல் கிடையாது டா பாலைவனம்." பிரகாஷ்.
"ம்ச்... மாமா பதில் கேட்டேன். இது சரியான பதில் இல்ல. சித்தா உங்களுக்குத் தெரியுமா." எனச் சம்பத்தை பார்த்துக் கேட்க, அவன் தலையசைத்தான், தெரியாது என்று.
"Map ல தா இருக்கும். வேறேங்க." என்றவனை இருவரும் முறைத்தனர்.
"சரி சரி... அடுத்து ஒன்னு கேக்குறேன். அதுக்காது சரியா பதில் சொல்லுங்க. Boys எல்லாம் right handலையும் Girls எல்லாம் left handலையும் வாட்ச் கட்டுறாங்களே ஏ."
"ஏ." கோரஸ்ஸாக.
"டயம் பாக்கத்தா... ஹாஹ்ஹா."
"அடிங்க… எங்கக்கா மகென்னு கூடப் பாக்க மாட்டேன். இன்னைக்கி உ வாய உடைக்கல. எம்பேரு பிரகாஷ் இல்லடா. காலங்காத்தையே மொட்ட பிளேடால ஜோக்குங்கிற பேர்ல அறுக்குறிற. இதுல அக்கா எனக்காம். டேய். நில்லுடா." எனக் கத்திக் கொண்டே துரத்தினான்.
"மாமா டென்ஷன் ஆகாதிங்க. நா இன்னொரு கேள்வி கேக்குறேன். அதுக்கு நீங்கச் சரியா பதில் சொல்லிடுவிங்க. தமிழ் புத்தாண்டுக்கும், ஆங்கில புத்தாண்டுக்கும் என்ன வித்தியாசம்." எனக் கேட்டுக் கொண்டே பிரகாஷின் கையில் சிக்காமல் ஓட,
"ஜனவரில இருந்து ஏப்ரல் வர. அப்ப நாலு மாசம் வித்தியாசம்." என நின்று நிதானமாக யோசித்து பதில் சொல்ல,
"தப்பு. ஜெனி அக்கா. என்னோட பெஸ்டு ஸ்டுடெண்டா நீங்க இதுக்கு ஆன்ஸ்வர் சொல்லுங்க. நா எஸ்கேப்." என ஓடியே விட்டான்.
"தப்பா ஜெனி. நல்லா யோசிச்சு தான சொன்னேன். ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல். நாலு தான." எனச் சந்தேகமாக அவனின் மனைவியைக் கேட்க,
"அண்ணா நீ அவெ கேட்ட கேள்விய ஒழுங்கா கவனிச்சியா." சுதா.
"இங்கிலீஷ் டூ தமிழ் கேக்கல. தமிழ் டூ இங்கிலீஷ் ன்னு கேட்டான்." லதா.
"அப்ப எத்தன மாசம் வித்தியாசம்." ஜெனி கேட்க, பிரகாஷ் முழித்தான்.
"ரைஸ் மில் ஓனருக்கு இது கூடத் தெரியல. ஹிம். ஏப்ரல் டூ ஜனவரி. எட்டு மாசம்ண்ணா." எனச் சொல்லிச் சிரிக்கும் தங்கைகளை முறைத்தபடி நந்துவைத் தேடிச் சென்றான்.
'நீ தேடி பிடிக்கிற வர அவெ என்ன அங்கேயே வா நிக்கப் போறான், ஓடிட்டான்.'
"இதோ பாரு வைசு. உம்மகெங்கிட்ட சொல்லி வை. எப்ப பாத்தாலும் எங்கிட்டையே வம்பு பண்ணிட்டு இருக்கான். அப்றம் கைக்கால் உடஞ்சி ரத்தம் வந்தா அதுக்கு நா பொறுப்பில்ல." எனச் சமையல் அறையில் இருந்த வைசுவிடம் சொல்ல,
"யாருக்கு ரத்தம் வருது. உனக்கா பிரகாஷு. இப்பவே பாதி உடம்பு தா இருக்கு. அதுல ரத்தமும் இல்லன்னா. நீ சீக்கிரம் டேத் பாடி தா. அதுனால நா தர்ற இத சாப்பிடு தெம்பா இரு. " பவி. எதையோ பிரகாஷின் வாயில் திணிக்க,
அப்ப நா மட்டும் என்ன சும்மா இருக்கவா என வைசுவும் ஒன்றை திணித்தாள். வைசுவும் பவியும் சேர்ந்து, இல்லை இல்லை போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றனர். யார் நன்கு சமைத்திருக்கிறார்கள் என்ற போட்டி தான் அது.
அணுக் குண்டு சைஸில் நான்கு உருண்டைகளைத் தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு, யாரின் வாயில் போட்டால் நன்றாக இருக்கும் என்று ஆள் தேடிக் கொண்டு இருந்தவர்களின் முன், சோதனை கூடத்து எலியாய் வந்து சிக்கினான் பிரகாஷ்.
"என்னாதிது. ஐய்யோ மெல்லவும் முடியல முழுங்கவும் முடியலையே. ஆ." என்றவனை வாந்தி எடுக்க விடாமல் வாயைப் பொத்தி முழுதாக முழுங்கச் சொல்லி மிரட்டினர் இருவரும்.
"காப்பாத்துங்க.! காப்பாத்துங்க!. ஜெனி... உம்புருஷன கொடும படுத்துறாங்க. வந்து என்னானு கேளு." என்றவனின் குரலில் தெளிவில்லை.
'வாய்க்குள்ள உருண்டைய வச்சிட்டு எப்படி பேசுறது.'
அவன் பின்னாலேயே வந்த ஜெனிபரும் சம்பத்தும், தட்டுடன் இருவரையும் பார்த்துப் போதே தலை தெறிக்க ஓடி விட்டனர். அது தெரியாமல் இப்போது அவன் யாரை அழைக்கிறான்.
வாசலில் சத்தம் கேட்டு இருவரும் தலை தூக்கி பார்க்க, அங்கு மேலும் இரண்டு எலிகள் வந்து கொண்டிருந்தன. கௌதம் மற்றும் ஹரிணி.
"அண்ணே!." இருவரும் கோரஸ்ஸாக அழைத்தபடி அருகில் செல்ல,
"ஏய்!. என்னாதிது. கருப்பா.?" என ஹரிணி அஷ்டகோணத்தில் முகம் சுளித்தாள்.
"அதுக்கு பேரு மட்டன் கோல உருண்டை." வைசு.
"யூட்டியூப் பாத்து சமச்சிருக்கோம்." பவி.
"யாரிது நல்லா இருக்குன்னு சாப்பிட்டு சொல்லு." என இருவரும் தட்டை நீட்ட, ஹரிணி இரண்டிலும் ஒன்றை எடுத்தாள்.
"ம்… பரவாயில்ல. என்னோட சமயல் அளவுக்கு இல்லன்னாலும் வாயில வக்கிற அளவுக்கு இருக்கு." ஹரிணி.
' உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா!. ' இது பிரகாஷின் மைண்ட் வாய்ஸ்.
"உன் அளவுக்கி இல்லன்னாலே இது நல்லா இருக்குன்னு அர்த்தம். அண்ணா நீ எடுத்துச் சாப்பிட்டு சொல்லுண்ணா." என வைசு கௌதம் முன் நீட்ட, கௌதம் எதுவும் பேசாது வைசுவையே பார்த்த படி நின்றான்.
"ஹேய். கௌதம் என்னோட சொந்த அண்ணே. அவெ பக்கதுல வராத. என்னிதத்தா சாப்பிடுவான். நல்லா இருக்குன்னும் சொல்லுவான். உன்னோடத வேற யார்கிட்டையாது குடு. இந்தாண்ணா." பவி வைசுவை இடிக்க,
"ஓ!. உங்கண்ணனாக்கும். அப்ப ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு வாடகைக்கி எடுத்துக்கிறேன். என்னோடத சாப்பிட்டு பத்ததுக்கு அப்றம் வேணும்னா உன்னோட தட்டுப் பக்கம் வருவாரு." என வைசுவும் சும்மா விடாமல் வாயாட, கௌதம் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.
குற்ற உணர்ச்சி...
வைசுவை அன்று பேசியதற்காக இன்று அவனுக்குள் வந்தது. இந்த இரண்டு நாட்களாகவே அவன் வைசுவை பற்றியே சிந்தித்துக் கொண்டுதான் இருக்கிறான்.
"அண்ணா. என்னிது. என்னிது." என இருவரும் சண்டை போட எதையும் கண்டு கொள்ளாது கௌதம் விலகிச் சென்றான். இருவரும் புரியாது பார்க்க,
"நீங்க இத பேங்க்ல போட்டுப் பத்திரமா வச்சிருங்க. எனக்குப் பின்னாடி வர்ற என்னோட பாவா வந்து சாப்பிட்டு ஜர்ஜ்மெண்ட் சொல்லுவான். பாவம் கௌதம்க்கு நாக்குல புண்ணு. அதுனால விட்டுங்க. ஏய் அங்க பாரு. பிரகாஷ் முழுங்கிட்டான். உருண்டய எடுத்து அமுக்குங்க வாய்ல." எனப் பிரகாஷை கோர்த்து விட்டு விட்டுச் சென்றாள்.
"இன்னைக்கி நா யாரு முகத்துல முழிச்சோனோ!. தெரியலையே!. ஏய் அப்பத்தா!. விடச் சொல்லு உம்பேத். ம்.ம்." எனப் பேச விடாது வாயில் திணித்து விட்டனர். இதைப் பார்த்த கவியரசனுக்கு மகிழ்ச்சி. 'என்னயா கேலி பண்ண. இப்ப நல்லா அனுபவி. ' அவரின் மைண்ட் வாய்ஸ்.
"டேய்!. உனக்கு என்னடா ஆச்சி?. மூஞ்சிய சோகமா வச்சிட்டு தனியா தனியா வந்து உக்காந்துட்டு ஃபில் பண்ணிட்டு இருக்க. எந்தக் கப்பல் முழ்கிப் போச்சு. சொல்லு தேடி கண்டு பிடிப்போம்." எனக் கௌதமின் முன் வந்து கேலியாகக் கேட்டாள் ஹரிணி.
"ம்ச்..."
"அட என்னடா." எனத் தன்மையாகப் பேச,
"நீ செல்ற வரைக்கும் எனக்கு நா பேசுனது தப்புன்னே தோனல ஹரிணி. இப்ப... ச்ச... எங்கூட அப்பப்ப ஃபோன்ல பேசுவா வைசு. மூர்த்தி பெரிப்பா என்ன பாக்க வரும்போது சில நேரம் அவளையும் கூட்டீட்டு வருவாரு. அவள தோள்ல தூக்கிட்டு ஹாஸ்டல் லாபில விளையாடுவேன். அவளும் என்னோட சிஸ்டர் தான. அவளப் போய்... ஐய்யோ!. வைசுவோட முகத்த பாக்கவே கஷ்டமா இருக்கு. ஸாரி கேட்டாலும் மனசு ஆறுமான்னு தெரியல. ஆனாலும் மன்னிப்பு கேக்கனும்."
"ஸாரி கேக்கப் போறியா!. யார்ட்ட?. வைசுட்டியா!. இப்படி ஒன்னு நடந்ததே அவளுக்குத் தெரியாது. அவா கிட்ட போய்த் தேவையில்லாதத பேசித் தலை வலி வர வச்சிடாத. எல்லாம் முடிஞ்சி போச்சி. திரும்பத் திரும்ப அத நினைக்காம ரிலாக்ஸாக எப்பையும் போல இரு. அது தா உனக்கு நல்லா இருக்கும்."
"நா நேத்து ரிஷிட்ட இதுக்காக மன்னிப்பு கேட்டேன்." என்றபோது ஹரிணிக்கு கோபம் வந்தது.
"அவெங்கிட்ட எதுக்கு நீ ஸாரி கேட்ட." ஹரிணி காட்டமாக.
"தப்பு தான ஹரிணி நா பேசுனது."
"அதுக்காக அவெங்கிட்ட எதுக்கு கேக்குற. கோபத்துல உன்னையும் அறியாம வந்தது அது. அத புரிஞ்சிக்காம போன அவெங்கிட்ட எதுக்கு நீ மன்னிப்பு கேக்கனும்?. என்னோட ஃப்ரண்டு எந்தத் தப்பும் பண்ணல. இனி நீ யார் முன்னாடியும் குற்ற உணர்ச்சியோட நிக்கனும்னு அவசியமில்ல." என்றவள்.
"அவெ பதிலுக்கு உன்ட்ட என்ன சொன்னான்." என்றாள் மென்குரலில் ஹரிணி. எங்கே இருவருக்கும் இடையே புதிதாக வேறொரு பூதம் கிளம்பி உள்ளதோ என்ற பயத்தில் கேட்க.
"எதுவும் சொல்லல. என்ன மேலயும் கீழயுமா பாத்தான். அப்றம் போய்ட்டுவா. அப்படின்னு அனுப்பிச்சிட்டான். நா எதோ பாத்ரூம் போனும்னு மிஸ்கிட்ட பர்மிஷன் கேட்டா மாறியும், சரின்னு மிஸ் மண்டைய ஆட்டுன மாறியும் இருந்தது அந்தச் சீனு." கௌதம் சொல்ல, ஹரிணி புன்னகைத்தாள்.
"சரி விடு. அவெங்கிட்டலாம் எதுக்கு தேவையில்லாம பேச்சு வாங்கிட்டு. வா உன்னோட ஆசை தங்கைங்க வெய்ட்டிங்." என அழைக்க, கௌதம் அப்போதும் வர மறுத்தான்.
"உன்னோட இந்தக் குற்ற உணர்ச்சி போகனும்னா எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. அது இது தா." என நான்கு டிக்கெட்டுகளை அவன் முன் நீட்டினாள்.
சென்னை டூ கோவை. விமான டிக்கெட்டுகள் இரண்டு.
கோவை டூ ஊட்டி. ரயில் டிக்கெட்கள் இரண்டு.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..