அத்தியாயம்: 5
பனித் துளிகள்...
இரவு முழுவதும்...
மலரெனும் மஞ்சத்தில்...
தவழ்ந்து விளையாடி...
பகலில் மறைந்து...
கொள்ளும் ஏமாற்றுக்காரி...
புல்மீது அமர்ந்திருக்கும்...
கரையும் வைரம் அது...
சூரியன் கண்களுக்குத் தெரிந்தாலும், அதன் கதிர் வீச்சு அந்த நிலத்தைச் சென்றடையவில்லை. காலை ஒன்பது மணிபோல் இருக்கும், வெயில் ஏறாதா அந்தக் காலை வேளையில் பவதா அங்கிருந்த சிறிய தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள்.
இங்கு வந்து சில நாட்கள் ஆன போதும் பவதா அந்த வீட்டைச் சுற்றி பார்க்க விரும்பியதில்லை. அவள் இருக்கும் அறை மற்றும் சமயலறை. அதைத் தவிர்த்து எங்கும் சென்றதில்லை. முதல் முறை வந்து பார்க்கிறாள், அந்தத் தோட்டத்தை.
க்ரோட்டெண்ஸ் என்று சொல்லப்படும் அழகுச் செடிகள் பல இருந்தாலும், அங்காங்க சில இடைவெளி விட்டுப் பல நிறங்களில் பூக்கும் ரோஜா செடிகளையும் நட்டு வைத்துள்ளனர். மஞ்சள், இளம் சிவப்பு, சிவப்பு என மலர்கள் அனைத்தும் பூத்து அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருந்தன.
தன் மொபைலை எடுத்து அதன் அழகை படம் பிடித்துக்கொண்டிருந்தாள் பவதா.
விக்னேஷின் நண்பன் ஒருவனின் வீடு அது. அவன் இப்போது அங்கு இல்லை. வெளி ஊரில் இருக்கிறான். சில மாதங்கள் பூட்டப்பட்டு இருந்த அந்த வீட்டை, விக்னேஷிற்காகத் தங்க அனுமதி தந்துள்ளான்.
ஒரே தளம் தான். மொட்டை மாடி எல்லாம் கிடையாது. ஓட்டு வீடுபோல் தோற்றம் கொண்டாலும் உள்ளே அத்தனை வசதிகளும் உண்டு. இரு படுக்கை அறைகள், விசாலமான ஹால், சிறிய சமையல் அறையென அங்காங்கே இருக்கும் ஜன்னல்களில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு ஊட்டியின் குளிர் தாக்காமல் கதகதப்பாய் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த வீடு. சுற்றி மரக் கட்டைகளால் வேலி போட்டு அதில் சில கொடிகளைப் படரவிட்டு, வீட்டின் முன் பூக்களையும், பின் பக்கம் மரங்களையும் வளர்ந்திருந்தனர்.
இவை அனைத்தையும் இப்போது தான் கவனிக்கிறாள் பவதா. செடிகள் அனைத்தும் பசுமையாய் இருக்க, அதற்கு நீர் விட்டுக் கொண்டு இருந்தார் ஒரு வயோதிகர். அவர் காலையில் வந்து தோட்டத்தைச் சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றிச் சென்று விடுவார். சமையல் அது பவதாவின் வேலை.
மரத்தின் அமர்ந்திருந்து சில குரங்குகள் கிளைவிட்டு கிளை தாவிக் குதிக்க, அதைப் பார்த்தவளுக்கு நேற்று ஹரிணி வாணரம் என்று கூறியது நினைவு வந்தது.
" திமிரு பிடிச்சவ. என்ன பாத்து கொரங்குன்னு சொல்லிட்டா. ச்ச... எம்புருஷென் எவ்ளோ பெரிய ஆளு. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். ஒரு போலிஸ் ஆஃபிஸர விரல் சுண்டி சொடக்குப் போட்டுக் கூப்பிடுறா. நா மட்டும் அவள மறுபடியும் பாத்தேன். அவளோட சொடக்கு போட்ட விரல உடச்சி., காது ரெண்டுலையும் ஓட்டப் போட்டுச் சீலிங் ஃபேன்ல தொங்க விட்டுச் சுத்த விட்டு அடிப்பேன். பொண்ணா அது. பஜாரி." எனத் திட்டிக் கொண்டே போக, நேரம் போனது தெரியவில்லை அவளுக்கு.
தன் கையில் இருந்த ஃபோனில் மணி பார்க்க அது பத்தாகச் சில நிமிடங்கள் இருப்பதை சொல்லியது. வேகவேகமாகச் சமயற்கூடம் செல்ல, அங்கு விக்னேஷ் எதையோ கொறித்துக் கொண்டு இருந்தான்.
"ஸாரி, நீ இன்னும் தூங்குறன்னு நினைச்சு சும்மா இருந்துட்டேன். ஒரு நிமிஷம்." என உள்ளே செல்லப் பார்க்க, அவளைத் தடுத்தான் விக்னேஷ்.
" வேண்டாம் பாப்பா. நா எனக்குத் தெரிஞ்ச மாறிச் சமச்சிக்கிட்டேன். இதோ பாரு ப்ரெட்டு. அத வறுத்துத் திங்கலாம்னு நினைச்சி தா எடுத்தேன். பட்." விக்னேஷ்
" கருகிடுச்சா." என முதலில் சாதாரணமாகத் தான் கேட்டாள் பின் சமையலறையை எட்டிப் பார்த்தவள்.
"உன்னைய யாரு அதெல்லாம் செய்யச் சொன்னா!. நாந்தா இருக்கேன்ல கூப்பிட வேண்டியது தான. பாரு ரெண்டு ரொட்டிய வறுக்க நாலு அடுப்பையும் பத்த வச்சிருக்க. இத சுத்தம் பண்ணனும். உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல. பாக்குறது தா போலிஸ் வேல. ஆனா ஒழுங்கா ஒரு ரொட்டி கூடச் சுடத் தெரியல." எனத் திட்டிக் கொண்டே சுத்தம் செய்ய, விக்னேஷ் புன்னகையுடன் அதைக் கேட்டான்
" ரொம்ப நாள் ஆச்சி பாப்பா."
" எதுக்கு கருகுன ரொட்டி சாப்டா. உனக்குத் துப்பாக்கியாது ஒழுங்கா சுடத்தெரியுமா இல்ல சும்மா குடுத்தாங்களேன்னு வச்சிருக்கியா."
" இல்ல, என்னோட பவதா என்ன பேசவிடாம திருப்பிப் பேசி." என்க அவள் மௌனமாய் இருந்தாள்.
" எனக்கு இது தா பிடிச்சிருக்கு பாப்பா. நீ நீயா இருக்குறது. இதுதா உண்மையான பவதா. அது தா எனக்கு வேணும். ஐ லவ் யூ பாப்பா." என நெற்றியில் முத்தமிட்டவனுக்கு பதிலாய் சிறு வெட்கப் புன்னகை சிந்தினாள் அவனின் மனையாள். அவன் கைகளில் இருந்த கூலிங் க்ளாஸை பார்த்தவள் வேகமாகத் தலை தூக்கி அவனைப் பார்த்தாள்.
" வெளில போறோமா. நா எங்கையும் வரலையே ப்ளீஸ்." என்றாள் கலக்கமாக. சிறிய ரோடு இரு பக்கமும் சரிவாக இருக்கும். இல்லையேல் மரங்களாக இருக்கும். அதன் நடுவே பயணம் செய்வதா என்றிருந்தது அவளுக்கு. எதிரில் எதேனும் கார் வந்தால் வழி விட அது சாலையின் நுனிக்கி செல்லும். அது அவளுக்குப் பயம். அதனால் வேண்டாம் என்றாள்.
" ம்... வெளில தா. ஆனா நா மட்டும் தா போறேன். நீ இல்ல. மனோ ஒரு கேஸ் பத்தி சொன்னான். அத விசாரிக்க நா இங்கருக்குற போலிஸ் ஸ்டேஷன்கு போப்போறேன். மே பீ ஒரு நாலு நாள் வேல இருக்கலாம்."
" நிஜமாவா. நாலு நாளா." எனக் கண்கள் விரிய கேட்டதோடு. கன்னக்குழி விழச் சிரிக்கவும் செய்தாள்.
" ஏய், என்னடி புருஷெ உன்ன விட்டுடு போறேன்னு சொல்றேன். நீ என்னடான்னா சண்ட போடாம சந்தோஷப்படுற. ஏன்டா ஹனி மூனுன்னு கூட்டீட்டு வந்துட்டு உன்னோட போலிஸ் வேலைய பாக்கிறியே ன்னு இன்னேரம் நீ சண்டைக்கி வந்திருக்கனும். "
" ச்சச்ச... வேலைக்கு என்ன! சும்மா நீ ஊர் சுத்த போனாலும் நா அத பத்தி கவலப் படமாடேன். ஏன்னா நீ தா எனக்குப் பெரிய இம்ச. எப்ப பாத்தாலும் நீ ஓகேவா பாப்பா! வசதியா இருக்கா!. என்ன வேணும்னு என்ன தொல்ல படுத்திட்டே இருக்குற. வீட்டுல இருந்தாலவுது அத்த மாமா மீனுன்னு சுத்தி ஆள் இருப்பாங்க. கொஞ்ச நேரம் நா நிம்மதியா இருந்தேன். ஆனா இங்க கூடவே இருந்து உயிர எடுக்குற. முதல்ல நீ கிளம்பு. நீ இல்லாம நாலு நாள் நா நிம்மதியா இருக்க போறேன்." எனச் சந்தோஷமாகச் சொல்லியவள். பின்
" ஆனா நா தனியா இருக்கனுமே. என்ன கொண்டு போய்ச் சென்னைல விட்டுட்டு நீ திரும்ப வந்து உன்னோட கேஸ்ஸ விசாரி. ம். சரியா. ப்ளீஸ் பஸ்ல மட்டும் வேண்டாம். ட்ரெயின்ல போலாம்." என்க.
" நீ கை நீட்டுனதும் நிப்பாட்டி உன்ன ஏத்துறதுக்கு அது என்ன ரயில்வே ஸ்டேஷனா இல்ல பஸ் ஸ்டாண்டா! காச வாங்கிட்டு டிக்கெட் குடுக்க. டிரெயின்ல போனும்னா ரிசர்வ் பண்ணி போனாத்தா வசதியா இருக்கும். பேசாட்டிக்கி பஸ்ல போ. ஸ்லீப்பர் பஸ்."
" நோ... நெவர்... முடியாது. நா பஸ்லலாம் ஏறமாட்டேன்."
" அப்ப ஒரு வாரம் வீட்டுலையே இரு. வாடி வெளில போலாம்னு ஆசையா கூப்பிட்டப்ப பிகு பண்ணனேல. அதுக்கு தண்டன. வீட்டுலையே இரு. நீ மட்டும்."
" தனியாவா!. பயமா இருக்குமே. நீ ஏ இவ்ளோ பெரிய வீட்டுக்குக் கூட்டீட்டு வந்த. அக்கம் பக்கத்துல கூட ஆள் இல்ல. இந்த அத்துவான காட்டுக்குள்ள தனியா எப்படி இருக்குறது?."
" அப்ப எங்கூட வா. நாம ரெண்டு பேரும் சேந்து விசாரணைக்குப் போலிஸ் ஸ்டேஷன் போவோம்."
"அந்த இடத்துக்கு வர்றதுக்கு நா வீட்டுலையே இருந்துப்பேன். தோட்டக்கார தாத்தா பொண்ணு கோதை அக்காவா கூட வச்சிக்கிறேன். நீ முதல் வேலையா எனக்கு டிரெயின்ல டிக்கெட் போடு. அடுத்து உன்னோட வேலைய பாரு." என்க, அவளைப் புன்னகையுடன் அணைத்தவன். பத்திரமாக இருக்கச் சொல்லி விட்டுச் சென்றான்.
சுருதி தற்கொலை வழக்கு பதிவான அந்தச் சிறிய போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்றான், ஒரு பைக்கை வாடகைக்கி எடுத்துக் கொண்டு. பல இடங்களுக்குச் சென்று விசாரிக்கப் பைக் தான் வசதியாக இருக்கும்.
"குட் மார்னிங் சார்." எனச் சல்யூட் அடித்து வரவேற்றார் வெங்கட்ராமன். அந்த ஸ்டேஷனின் SI. வயது நாப்பதை தாண்டி விட்டது அவருக்கு.
" குட்மார்னிங் மிஸ்டர் வெங்கட்ராமன்." எனத் தலையசைத்தவனை உள்ளே அழைத்துச் சென்றார் அவர்.
" சார், இன்னைக்கி நீங்க வருவிங்கன்னு நேத்தே தகவல் வந்தது சார். அதா முன்னேற்பாட அந்தப் பொண்ணு தற்கொல பண்ண கேஸ்ல எல்லா டீடெயில்ஸ்ஸையும் எடுத்து வச்சிருக்கேன்." என வெங்கட் ஒரு ஃபைலை எடுத்துக் காட்ட, விக்னேஷ் அதை வாசிக்கலான்.
பெயர், ஊர், எப்படி மரணம் நிகழ்ந்தது, எப்பொழுது உயிர் பிரிந்தது என்பன போன்ற சாதாரண விசாரணை கேள்விகளைக் கேட்டபின், விக்னேஷ் அந்தப் பெண் உடல் கிடைத்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்றான்.
" சார், எதுக்கு சார் இந்த வேண்டாத வேல. அந்தப் பொண்ண யாரும் கொல பண்ணிருக்கு வாய்ப்பில்லை. ஏன்னா இந்த ஏரியா ரொம்ப சேஃப்டியானது சார். நிறைய இடத்துல சீசிடீவி இருக்கு. பஸ்ல இருந்து இறங்கி யாரோட வற்புறுத்தலும் இல்லாம தனியா தா சார் நடந்து போயிருக்கு. அது அந்த ஏரிக்கி கொஞ்ச தூரத்துக்கு முன்னாடி இருக்குற ஒரு கடையோட கேமரால பதிவாகிருக்கு. யாரும் அந்தப் பொண்ண ஃபாலோ பண்ண மாறி இல்ல சார்." என இதுவரை விசாரித்த அனைத்தையும் ஒப்பித்தார் வெங்கட்ராமன்.
"எந்தக் காரணமும் இல்லாம யாரும் தன்னோட உயிர தானே போக்கிக்கனும்னு நினைக்கமாட்டாங்க மிஸ்டர் வெங்கட்ராமன். எதாவது ஒரு காரணம் இருக்கும். தற்கொல பண்ணிக்க நிறைய தைரியம் வேணும். அப்படி இல்லன்னா வாழ்க்கையே வேணான்னு விரக்தில இருக்கனும். ஆனா அந்தப் பொண்ணுக்கு அது ரெண்டுமே கிடையாது. அப்ப வேற எதாவது காரணம் இருக்கும். வாங்க நாம போய் அந்த ஏரிய பாப்போம். அதுக்கு முன்னாடி டெட் பாடி கிடைச்ச இடத்துல இருந்து எடுத்த திங்ஸ் எங்க?. அப்றம் ஃபோட்டோஸ் எடுத்திருப்பிங்களே. அது எல்லாத்தையும் நா பாக்கனும்." எனக் கேட்க SI ஒரு ஃப்ளாஷ்டிக் கவரை கொண்டு வந்து கொடுத்தார்.
அதில் ஒரு ஹன்பேக் மட்டுமே இருந்தது. அதில் நிறைய மிட்டாய்கள். அவள் வேலை செய்யும் கடையின் முகவரி அட்டை, தன் அடையாள அட்டை, பின் ஒரு சிறிய டைரி. அதில் அவளின் காதலனை பற்றி எழுதி இருந்தாள். அவனுடன் சேந்து வாழும் தங்கள் திருமணக்கனவுகளை பற்றியும், எதிர்கால திட்டம் பற்றியும் எழுதி இருந்தாள். வாழ ஆசைப் பட்ட பெண் எதற்குத் தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, விக்னேஷ் வேறு எதுவும் கிடைக்கிறதா என்று தேடினான்.
பேக்கின் உள் பக்கம் இருந்த ஜிப்பில் ஒரு காகிதம் மடித்து வைக்கப்பட்டிருந்தது. அதைப் பிரித்தவன் அதில் ஒரு பேருந்து நிறுத்தத்தின் பெயர் எழுதி இருப்பதை கண்டான். அதுவும் தெளிவு இல்லாமல் இருந்தது. அந்த நிறுத்தத்தில் தான் சுருதி இறங்கி சென்றுள்ளாள். யார் தந்தது இது என யோசித்தவன், அதைத் தன் மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொண்டான். பின் அந்த ஏரியைப் பார்க்கச் சென்றான்.
மக்கள் நடமாட்டத்தை தாண்டி அரை கிலோ மீட்டராவது மரங்கள் அடர்ந்த அந்தக் காட்டிற்குள் சென்றால் தான் அந்த ஏரி வரும். அந்த ஏரியில் தான் சிலர் துணிகளைத் துவைப்பர் என்பதால் ஒற்றை அடி பாதை ஒன்று இருந்தது. காலையில் மட்டுமே அவர்களும் வருவர். மற்ற நேரம் அது பயமுறுத்தக்கூடிய இடமாகத்தான் இருந்தது.
அனைத்தையும் பார்வையிட்டவன். "அந்த ஆஸ்ரமம் இங்கருந்து எவ்ளோ தூரம."
" ஸார்." என்க.
"அந்தப் பொண்ணு வளந்த ஆஸ்ரமம் இங்கருந்து எவ்ளோ தூரம் இருக்கும்னு கேட்டேன்." என அழுத்தமாகக் கேட்டான்.
" ரொம்ப தூரம் இருக்கும் ஸார். நடந்து போக முடியாது."
"அந்தப் பேக்க எங்கருந்து எடுத்திங்க."
" தண்ணீல இருந்து ஸார்."
" எப்படி தற்கொலை பண்ணிக்க நினைக்கிற பொண்ணு பேக்கோட குதிச்சிட்டாளா என்ன. இல்ல. யாராது தள்ளி விட்டாங்களா."
" வாய்பில்ல ஸார். கேமரால அந்தப் பொண்ணு க்ராஸ் ஆகிப்போன நேரத்த வச்சி பாத்தா எட்டு மணிக்கி மேல இருக்கும் ஸார். இந்தப் பகுதில காட்டெரும நடமாட்டம் இருக்கு ஸார். சில நேரம் யானை கூட வரலாம். அதுனால ராத்திரி நேரம் இந்தப் பக்கம் ஜனங்க வரமாட்டாங்க. அதுனால தள்ளிவிட வாய்ப்பில்லை. அதுவாத்தா விழுந்திருக்கனும்."
" எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பாத்த மாறியே சொல்லுறிங்களே ஸார். எப்படி?."
" ஸார் இன்ஸ்பெக்டர் நல்லகண்ணு இந்தக் கேஸ்ஸ ஸ்பெஷல்லா விசாரிச்சாரு ஸார். அதா ஸார்."
"ஏ! இத மட்டும் ஸ்பெஷல்லா விசாரிக்கனும்."
" ஸார், அந்தக் காப்பகத்து தயா ஐயா நேர்ல வந்து கேட்டாரு ஸார். எங்க பொண்ணு எப்படி இறந்ததுன்னு தெரியனும்னும். யாராது இதுக்கு பின்னாடி இருக்காங்களான்னும் நல்லா விசாரிக்கச் சொல்லி ப்ரஷர் குடுத்தாரு ஸார். அதா ஸார் முடிஞ்ச அளவுக்குத் தீவிரமா விசாரிச்சோம். இது தற்கொலை தா ஸார்."
" ஓகே ஸார். ஆனா ஏ பண்ணிக்கனும்?."
" காதல் விவகாரமா இருக்கலாம் ஸார்."
" அந்தப் பொண்ணு எழுந்து வந்து சொல்லமாட்டாங்கிற தைரியத்துல சொல்றீங்களோ வெங்கட்ராமன்."
" ஸார்."
" பின் இருக்கலாம்னு சந்தேகமா சொல்றீங்க. காரணம் இது தான்னு உறுதியா சொல்லனும் ஸார். உங்களுக்குத் தோனுன காரணத்த சொல்லக் கூடாது. உண்மையான காரணத்த தேடி கண்டு பிடிக்கத்தா நமக்குச் சம்பளம் தர்றாங்க. அது தா நம்மோட வேலை. இருக்கலாம்... இருக்கலாம்னு சொல்றதுக்கு இல்ல." என்றவனுக்கு சிறு கோபம் வந்தது.
காலையிலிருந்து விக்னேஷின் மூளையில் இது தற்கொலை தான் கொலை இல்லை என்று பதியும்படி வெங்கட்ராமன் சலவை செய்து கொண்டிருப்பது போல் விக்னேஷின் மனதில் பட்டது. அதான் கோபமாகப் பேசினான்.
"அந்தக் காப்பகம் பேரு என்ன?."
" அன்னை இல்லம் ஸார்."
" அதோட Founder யாரு. "
"ஸார், அவரு பேரு தயானந்தம். வயசு ஆறுபதுக்கு மேல இருக்கும். அவரோட அப்பா காலத்துல இருந்து இந்த இடத்துல காப்பகம் நடத்திட்டு இருக்காரு ஸார்."
" அவர் மட்டும் தனியாவ நடத்துறாரு.?"
" இல்ல ஸார். அவரோ பையன் சந்திரபோஸ். லண்டன்ல டாக்டரா இருக்காரு ஸார். அப்பப்ப வந்து பாத்துட்டு போவாரு ஸார். அந்தக் காப்பகத்து குழந்தைகளுக்கு வெளி நாட்டுல இருந்து சில நல்ல மனசுக்காரங்க Fund தர்றாங்க ஸார்."
" ஆள் எப்படி, அப்பாவும் பையனும். "
"தங்கமான மனசு ஸார் அவங்களுக்கு. அப்பா ஊட்டில பெறந்து வளந்தவரு ஸார். அவரோட பையன யாரும் அதிகமா பாத்தது இல்ல ஸார். ஆனா வருவாருன்னு அங்க இருக்குறவங்க சொல்வாங்க. வேற எதுவும் எனக்குத் தெரியாது ஸார்." என விக்னேஷ் கேள்வி கேட்கும் முன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அவர்.
சற்று நேரம் அந்த ஏரியை உற்றுப்பார்த்வன் தன் கூலிங் கிளாஸ்ஸை போட்டுக் கொண்டு முன்னே நடக்க, அவன் பின்னால் SI ஓடி வர வேண்டியதாயிற்று.
" மிஸ்டர் வெங்கட்ராமன். இந்த ஃபைல நா எடுத்துட்டு போறேன். நாளைக்கி நாம அந்தக் காப்பகத்துக்கு விசாரனைக்கி போலாம்." எனச் சொல்லிப் பைக்கில் ஏறினான்.
" ஸார் காப்பகத்துக்குள்ள போலிஸ் நுழையப் பார்மிஷன் கிடையாது ஸார்... ஸார்." என்ற அவரின் பேச்சு விக்னேஷ் செவிகளை எட்டவே இல்லை. தூர சென்று விட்டான்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..