அத்தியாயம்: 34
நிழல் கூட உடன் இருந்தாலும் எப்போதும் ஒன்று போல் இருப்பது இல்ல. அதே போல் தான் மனிதனின் மனநிலையும், சந்தர்ப்பம் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொண்டே செல்லும். மடோனாவும் அப்படித்தான்.
தன் தம்பியின் உயிரைக் காக்க வேண்டும் என்று நினைத்தாளே தவிர வேறு எதையும் கவனிக்கவில்லை. பல கோடிகளைத் தாரை வார்த்துள்ளாள், தன் தம்பிக்காக. அவனை மீண்டும் பழைய படி பார்க்க வேண்டும். அது போதும் அவளுக்கு.
"மிஸ் மடோனா. நீங்க ரெடியா?. "
" எஸ் மிஸ்டர் ரோகித். ஐ ஆம் ரெடி. நிக். " என இழுக்க.
" நாங்க பாத்துக்கிறோம். " என்றவன் இரண்டு பேரை அழைக்க. நிக் ஸ்டெக்ஸருக்கு மாற்றப்பட்டு கொண்டு செல்லப் பட்டான் காப்பகத்திற்கு.
பெரிய இரும்பு கதவுகள் இரண்டும் அந்த வெள்ளை நிற ஆம்புலன்ஸ்காகத் திறக்கப்பட்டன. உள்ளே இருந்த காப்பகத்தின் மருத்துவமனை வாசலிலேயே தன்செயன் காத்திருந்தார் மடோனாவின் வருகைக்காக.
ஆப்ரேஷன் நடக்கவிருப்பதால் சில பல ஸ்கேன்களும் டெஸ்டுகளும் எடுக்க என நிக்கை இரண்டாம் தளத்திற்கு அழைத்துச் சென்றனர். தனித்து விடப்பட்ட மடோனாவிடம் பேசி 'இந்த ஆப்ரேஷன் முற்றிலும் தன்னிச்சையாகச் சுய விருப்பத்தின் பேரில் நடப்பதாகவும். ஏதேனும் விபரீதம் நேர்ந்தால் அதற்குச் சந்திரபோஸ்ஸும் தன்செயனும் பொறுப்பல்ல. ' என எழுதி வாங்கப்பட்டது. தம்பியின் உடல்நிலையை கண்டு கவலையில் இருந்தவள் தன்செயன் நீட்டி காகிதத்தைப் படித்து கூடப் பார்க்கவில்லை. கையெழுத்திட்டு நீட்டினாள்.
அதை வாங்கிக் கொண்டவரின் முகத்தில் பளிச்செனச் சந்தோஷம் மின்னியது. மாட்டிக்கொள்ள கூடாது அல்லவா. அதான் முன்னெச்சரிக்கை முத்தமாவாகச் செயல்படுகின்றார். ஏனெனில் அவளின் தந்தை அப்படி. அவரிடம் மாட்டினால் தலைமுடி கூடத் தப்பிக்காது என்று தன்செயன் அறிவார். இப்போது அவரின் மகள் கையெழுத்திட்ட காகிதம் உள்ளது. அது பாதுக்காக்கும் என்ற சந்தோஷம் தான் அது.
மடோனாவை ஆப்ரேஷன் தியேட்டர் அருகில் உள்ள அறையில் அமரவைத்து விட்டு, ரோகித் கீழே சென்றான்... சென்றான்… சென்றான்... சென்று கொண்டே இருந்தான்.
'அந்தப் பிள்டிங்கே ரெண்டு மாடி தா. நீ என்னடான்னு கீழே சென்றான். சென்றான்னு சொல்லுற.' எனக் கேட்டாலும் அது தான் உண்மை அவன் கீழே தான் சென்று கொண்டு இருந்தான். அன்டர் க்ரவுண்டில் இருக்கும் அறைகளுக்கு. தரையை சுரண்டி சுரங்கம் அமைத்து அதில் ரூம் கட்டி போட்டு வைத்திருப்பர்கள் போலும்.
வேக நடையுடன் வந்த ரோகித்திற்கு ஜான் ஒரு கருப்பு நிற கவசம் போன்ற ஆடையைக் கொடுக்க, ரோகித் அணிந்து கொண்டு தயாராக இருந்தான். அவன் மட்டுமல்ல மேலும் இருவர் இருப்பர். ரோகித் தலையசைக்க அறையின் கதவைத் திறந்தான் ஜான்.
உள்ளே யாருமற்ற அறையில் கை கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நிற்கக் கூட உடலில் தெம்பு இல்லாமல் சுருண்டு போய்ப் படுத்திருந்தது ஒரு ஜீவன்.
இவர்களின் வருகையை உணர்ந்ததும், உயிர் பயத்தில் எழுந்து ஓட முயற்சித்து, மூவரின் பிடியில் தானாகவே சிக்கிக் கொண்டது. இம்முறை மட்டுமல்ல, இவர்களின் கையில் சிக்கிய நாளில் இருந்தே இது தொடர்கதையாகிப் போனது. சாப்பாடு கொடுக்க, இவளைப் பார்க்க என எப்போது கதவுகள் திறந்தாலும் ஓடிவிட முயற்சி செய்து மாட்டிக் கொள்வது.
" அண்ணா என்ன விட்டுடுங்கண்ணா. நா போறேன். என்ன விட்டுடுங்கண்ணா. ண்ணா... ண்ணா... " எனக் காலில் விழுந்து கேட்க, ரோகித் கண்ணசைத்தான். ஒருவன் பெரிய இரும்பு ராடை மற்ற இருவருக்கும் சப்ளை செய்தான்.
காலில் விழுந்து கிடந்த ஜீவனின் தலையில் ஓங்கி அடித்தான் ரோகித். சரியாகத் தலையும் முதுகும் இணையும் பின் கழுத்தில் அடிக்க, அதைப் பார்த்து மற்றவன் வேகமாகக் கரம் ஓங்கினான். அடிக்கத்தான், ஆனால் அவனைத் தடுத்தான் ரோகித்.
"முட்டாள். நாம இவள கொல்ல கூடாது. புரியுதா. தலைய இவ்வளே ஃபோர்ஸ்ஸா அடிச்சேன்னா பத்தே நிமிசத்துல இவா செத்துடுவா. பட்டுன்னு அடிச்சி பொட்டன்னு போறதுக்கா இவளுக்குச் சோறு போட்டு இத்தன நாளாக வளத்தோம். இவா செத்தா நமக்குத் தா நட்டம். இவா உயிரோட தா இருக்கணும். கொஞ்சம் மெதுவா அடி. ரத்தம் வெளியேறாம. " என உறுமியவன் அங்கிருந்த மேஜையில் ஏறி அமர்ந்து கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்தான்.
" ம்... அப்படி தா. மெதுவா அடிக்கணும். ஏன்னா இவளோட உடம்புல இருக்குற ஒவ்வொரு துளி ரத்தமும் நமக்குத் தங்கம் மாறிக் காச வாரி இறைக்கப்போது. அத வேஸ்ட் பண்ண கூடாது. நா அப்ப அடிச்ச அடிலயே தலைல ரத்தம் உறைஞ்சி போக ஆரம்பிச்சிடுச்சி. இன்னும் கொஞ்ச நேரம் தா. அப்றம் மூளைக்கி ப்ளட் சப்ளை இருக்காது. அது டெத் ஆகிடும். மூளைச் சாவு. கேள்வி பட்டிருக்கியா. " என்க.
" இல்ல ஸார். நீங்க என்ன பேசுறிங்கன்னே எனக்குப் புரியல. " என்றான் மற்றவன்.
"புரியாததுனால தா நீ இன்னும் உயிரோட இருக்க. எங்களுக்கு வெர்க்கரா. ம். சரியா இருபது நிமிசம் கழிச்சி இத ஸ்டெக்ஸர்ல தூக்கி போட்டு மேல கொண்டு வாங்க. டாடி வெய்ட் பண்ணிட்டு இருப்பாரு." என்றபடி சென்றான் ரோகித். ஈவு இரக்கமின்றி ஒரு உயிரை அரை உயிராக்கிச் சென்றுள்ளான்.
கை கால்கள் கட்டப்பட்டு இருக்க, தன் உடலில் பல ஊசிகளை எடுத்துக் குத்துவதை உணர்ந்த அந்த ஜீவனுக்கு ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறோம் என்று வேதனையாக இருந்தது. வலி... அந்த வலியை அனுபவிப்பதை விட இறப்பதே மேல். ஆனால் அதை அவர்கள் உடனடியாகத் தர போவதில்லையே. மருந்தின் வீரியம் உள்ளே செல்லச் செல்ல கை விரல்களைக் கூட அசைக்க முடியாமல் கண்கள் இருண்டு தன் சாவை நோக்கிப் படுத்துக் கொண்டே தவம் செய்ய ஆரம்பித்தாள் சுருதி.
நீங்கச் சரியா கணித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். உயிருடன் இருக்கும் சுருதியின் இதயத்தைத் தான் நிக்கி பெர்னாண்டஸ் க்கு பொருத்த உள்ளனர்.
இவ்வுலகம் பல மதங்களாகவும் இனங்களாகவும் பிரிந்திருப்பதாக நீங்க நினைத்தால் அது தவறு. பணம் இருப்பவனாகவும் இல்லாதவனாகவும் தான் பிரிந்து உள்ளது. பண வசதி கொண்ட வலியவன் அது இல்லாத எளியவனை எளிதாக முழுங்கி விடுகிறான். இந்தப் பணத்திற்கு மட்டும் எந்தப் பாகுபாடும் கிடையாது. அது தான் இங்கும் நடைபெறப்போகிறது.
____________________
"இருக்காது. அப்படில்லாம் எதுவும் இருக்காது. நீங்கத் தப்பா புரிஞ்சிக்கிறீங்க. சுருதி இறந்து இருபது நாளுக்கு மேல ஆகப்போது. பேஸ்ட்மாட்டம் ரிப்போர்ட் இருக்கு. டெத் சர்டிபிகேட்டும் இருக்கு. சுருதி உயிரோட இருக்க வாய்ப்பே இல்ல. " பவதா. பாவம் அவளால் ஒருவரின் உயிரைக் கொன்று மற்றொரு உயிரைக் காப்பாற்றுவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
" பவதா சொல்றதும் சரிதா ஹரிணி. சுருதியா இருக்க வாய்ப்பில்ல. வேற யாராதா கூட இருக்கலாம். உண்மையாவே ஒரு மூளைச் சாவு வந்த யார்கிட்டையாது வாங்கிருக்கலாம். யாருக்கு தெரியும். " ஜீவா.
"ஹாங். பார்பி டாலுக்கு ரொம்ப மென்மையான மனசு. அதுனால ஒரு உயிரோட இருக்குற ஒருத்திக்கிட்ட இருந்து இதயத்த எடுக்கச் சம்மதிக்க மாட்டா. " மனோ. மடோனாவுக்கு ஆதரவாகப் பேச,
"சுருதி தா. நிச்சயம் சுருதி உயிரோட தா இருக்கணும். அவா கிட்ட இருந்து தா ஹார்ட்ட எடுக்கப் போறானுங்க. இது மடோனாக்கு கூடத் தெரியாம இருக்கலாம். நாம இன்னைக்கி நைட் மடோனாவ கண்காணிக்கணும். " ஹரிணி.
" இத கவனிச்சியா ஹரிணி. இந்தக் குழந்தைங்க எல்லாருமே ரொம்ப அரிதா கிடைக்கிற ப்ளட் க்ரூப்ப சேந்தவங்க. " விக்னேஷ். காப்பகத்தில் உள்ள குழந்தைகளின் ரத்த வகைகளைப் பார்த்து சொல்ல.
" எஸ்… ஐஞ்சி வர்ஷத்துல வந்து சேந்த எல்லாருமே அப்படித்தா இருக்காங்க. எப்படி. " ஹரிணி.
" கௌதம் உங்க சிஸ்டர் என்ன ப்ளட் க்ரூப். "
" A+. அது ஒன்னும் ரேர் ப்ளட் க்ரூப் கிடையாதே. ஏ கேக்குற விக்னேஷ். "
" எதுக்குன்னா ICDS laboratory Ltd. கீழ இருக்குற எல்லா சென்டரும். குழந்தை இல்லன்னு வந்து ட்ரீட்மெண்ட் பாக்குற எல்லார் கிட்டயும் ப்ராடு வேல பாக்குறங்காளா. இல்ல சில ஆட்கள மட்டும் குறிவச்சி இந்த மாறிப் பண்றாங்களான்னு தெரிஞ்சிக்க தா கேட்டேன். " என்க.
" இல்ல பவிக்கு ரேர் ப்ளட் க்ரூப் இல்ல. "
" ஆனா அண்ணாக்கு இருக்கு. ராகவ் அண்ணா AB-. " என்க. தன் தங்கையின் குழந்தையும் இன்னேரம் அவர்களின் பிடியில் சிக்கி இருக்கும். நல்ல வேளை என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை கௌதமால். எல்லாம் அருவமாய் இருக்கும் பார்கவியின் செயல் என்று நம்பினான். விழி மூடித் தன் அன்பு தங்கையின் முகத்தைக் கண்டு நன்றி கூறினான்.
"அப்படின்னா இவனுங்க நடத்துறது காப்பகம் இல்ல. இது... இது. " ஹரிணி திணற.
" Human farm. " சத்தம் வாசலிலிருந்து கேட்க, அனைவரின் தலையில் வாசலை நோக்கித் திரும்பியது.
" கோழி பண்ண, மாட்டு பண்ண மாறி மனித பண்ணை வச்சி நடத்துறானுங்க. " என்றபடி அவர்களின் முன் வந்து அமர்ந்தான் ரிஷி தரன்.
" வாழ்த்துக்கள் கிட். கண்டு பிடிச்சிட்ட போல. எனக்குத் தெரியும் நீ அடிவர அலசி ஆராஞ்சி எல்லாத்தையும் தெரிஞ்சிப்பன்னு. உனக்கு சீபீஐ ஆகுற எல்லா திறமையும் இருக்கு. "
"ரிஷி அங்க என்ன நடக்குது. காப்பகம்கிற பேர்ல அவனுங்க என்ன தா செஞ்சிட்டு இருக்கானுங்க. " கௌதம்.
சந்திரபோஸ் செய்து கொண்டிருக்கும் சமூக விரேத செயல்களை விளக்கத் தொடங்கினான்.
" ஒரு மனித உடம்போட மதிப்பு என்னன்னு தெரியுமா ஹரி உனக்கு. ஒருத்தெங்கைல பத்து பைசா இல்லன்னாலும். நல்ல ஆரோக்கியமான உடம்பு அவெங்கிட்ட இருந்தா. அவனோட மதிப்பு பல கோடிய தாண்டும்.
சரியா சொல்லனும்னா. ஒரு நுரையீரலோட வில ஒரு கோடியே 85 லட்ச ரூபா. கல்லீரல் 94 லட்சம். கிட்னி 93 லட்சம். ஒரு ஜோடி கண்ணு 14 லட்சம். எலும்புக் கூடு 5 லட்ச ரூபா. ரத்தம் ஒரு லிட்டர் 43 ஆயிரம் ரூபா. தோல் ஒரு சதுர செ.மீட்டர் 85 ரூபா. இதயம். அதோட வில மட்டும் 15 கோடி. இதெல்லாம் மார்கெட் ரேட். சர்வதேச சந்தைல உடல் உறுப்ப வாங்கணும்னா இவ்வளவு ரூபா செலவச்சிச்சாகணும். ஆனா பசிக்கும் பஞ்சத்துக்கும் கிட்னிய விக்க வர்ற எவனுக்கும் மார்கெட் ரேட் கிடைக்கிறது இல்ல. பத்தாயிரம் பதினஞ்சாயிரம்னு மெடிக்கல் மாஃபியா கும்பல் ஏமாத்திட்டு போய்க்கிட்டே இருக்கும். அந்தக் காசு முழுசும் மாஃபியா கும்பலுக்குத் தா போகும். விக்கிறவனுக்கு இல்ல.
சீனா, ஆப்ரிக்கா, இந்தியா. அப்றம் நம்ம பக்கத்து நாடான பாக்கிஸ்தான். பங்களாதேஷ். இந்த மாறி வறுமையும் மக்கள் தொகையும் அதிகமா இருக்குற நாடுகள எல்லாம் கசாப்பு கடயா தா இந்த உலகம் நினைக்கிது. அதுக்கு தகுந்த மாறி நாமலும் மனுசங்கள வளத்துட்டு இருக்கோம். ஆடு மாடுன்னு எல்லாத்துக்கும் நல்லா சாப்பாடு தீனின்னு போட்டுக் கொலுகொலுன்னு கூண்டுல அடச்சி வச்சி வளக்குற மாறி, மனுசன வளத்து அறுத்துட்டு இருக்கானுங்க, பல வெளி நாட்டு முதலைங்களுக்காக.
இது கோடி கணக்குல பணம் புழங்குற சந்த. அதுல ஒருத்தெந்தா சந்திரபோஸ்.
இந்தியாவ பொறுத்த வர, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைங்கிறது 'தானம்' அப்படிங்கிற அடிப்படைல தா நடக்குது. ஒருத்தெ தன்னோட சொந்தக்கானுக்கோ, இல்ல வெளியாளுக்கோ தன்னோட உடம்புல இருந்து தானமா உறுப்ப குடுக்கலாம். ஆனா தானமா தர்றதுக்கு பணம் குடுக்குறதும் வாங்குறதும் நம்ம நாட்டப் பொறுத்தவரை குற்றம் தா. யாரையும் கட்டாயப்படுத்தாம அவங்களோட சுய விருப்பத்தோட தா தானம் குடுக்கணும்.
சந்திரபோஸ்… தானமா குடுக்குற மாறி ஒரு மாயத் தோற்றத்த உண்டாக்கி எல்லா தப்பையும் செஞ்சிட்டு இருக்கான். இப்ப வரைக்கும். " என்றான் ரிஷி.
அது உண்மை தான்.
சந்திரபோஸ் வேலை பார்க்கும் ராயல் ஹாஸ்பிடலுக்கு வர்ற பேஷன்ட்ல ஆர்கான் தேவயா இருக்குற வசதியான ஆட்களுக்குக் காப்பகத்துல இருக்குற சில அநாதைங்களையும் சுத்தி இருக்குற மக்களையும் காட்டி வல விரித்துப் பிடித்தான். கேம்ப் என்ற பெயரில் பாமர மக்களின் உடலை பரிசோதித்துக் கிட்னி, ரத்தம்னு திருட ஆரம்பித்தவன் இப்போது வரைக்கும் திருடிக் கொண்டு தான் இருக்கிறான்.
ஒரு கட்டத்தில் பணத்தின் மீது பேராசை எழ. கிடைக்கும் பணம் போதவில்லை. அப்பொழுது தான் கோடிக்கணக்கில் காசைக் கையில் வைத்துக் கொண்டு ரேர் ப்ளட் க்ரூப் ஆர்கான்காக க்யூ வில் நிற்கும் சில பெரிய மனிதர்களைப் பத்தி தெரிய வந்தது. கள்ளச் சந்தையில் ஆர்கானை விற்க என இருக்கும் கும்பலுடைய உதவியை நாடினார் சந்திரபோஸ். அவர்களுடன் பழகியதில் அரிய வகை ரத்தம் பிரிவு கொண்ட உடல் உள்ளுறுப்புகளின் தேவையை அறிந்து கொண்டார். அதனால் நெகட்டிவ் ப்ளட் க்ரூப் கொண்ட எதிர்த்துக் கேள்வி கேட்காத ஆட்களைத் தேடி தேடி காப்பகத்தில் சேர்ந்தான்.
அந்தத் தேடலுக்கு அவனுக்கு உதவியா இருந்தது அந்தக் கருத்தரிப்பு மையங்கள். சந்திரபோஸ்ஸின் மிகப் பெரிய மூலதனம் அது தான். அந்த க்ளினிக்குக்கு வரும் ஜோடிகள் தான் அவனோட குறி. கல்யாணம் ஆகி பல வருடமா குழந்த இல்லை என்று கவலப்படுற வயதான தம்பதியினர், நாங்க தா ஸ்டேட்டஸ்ல பெரிய ஆளுங்கன்னு காட்டிக்க குழந்தைய கூட அவங்க பெத்துக்காம வாடக தாய் மூலமா பெத்துக்க நினைக்கிற வீஐபீங்க. எப்படியாச்சும் எனக்கு ஒரு குழந்தை வேணும். அது தா என்ன அம்மா அப்பான்னு இந்த உலகத்துக்கு அடையாளப்படுத்தும் என குழந்தையைக் கௌரவமாக நினைக்கும் சில இளம் ஜோடிகள். அவர்கள் தான் இந்த Human farm உருவாக ஒரு காரணம்.
நயந்து பேசி அவர்களின் பின்புலம் பற்றி நன்கு அறிந்து கொள்வர். பின்னாட்களில் பிரச்சனை வந்து விடக் கூடாது அல்லவா. அதில் கவனமாக இருப்பர். யாரேனும் பிரச்சினை செய்தால் சிகிச்சையைத் தொடர மாட்டார்கள். கௌதம் சண்டையிட்டதால் பவித்ரா துரத்தப்பட்டது போல் துரத்தி விட்டு விடுவர்.
இயற்கை முறையில் சில வழிகள் இருந்தாலும் செயற்கை முறையில் மட்டும் தான் கருவை உருவாக்குவர். தம்பதியினருக்கு ஹார்மோன் இன்ஜெக்ஷன் செலுத்தி அவர்களின் பாலுணர்வை துண்டும் முறையைத் தான் பெரும்பாலும் இந்த மையங்கள் கையாலும். அந்த ஹார்மோன் இன்ஜெக்ஷன் பயங்கர பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பக்கவிளைவுகள் அதிகமான பதிப்பை ஏற்படுத்தும். அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அதன் கஷ்டம்.
ஆணின் விந்து ஊசிமூலம் பெண்ணின் கரு முட்டைக்குள் செலுத்தப்படும். முன்னெச்சரிக்கை காரணமாக இரண்டு முதல் மூன்று கருவைகூட அவர்கள் உருவாக்குவர். இரு முட்டையைத் தாயின் வயிற்றில் செலுத்தி விட்டு. ஆரோக்கியமாக இருக்கும் கருவை இன்க்குபேட்டரில் வைத்து வளப்பர். அரிய வகை ரத்தம் என உறுதி செய்யப் பின் தான் அதை இந்தப் பூமியில் பிறக்க அனுமதிப்பர். இல்லையேல் கலைத்துவிட்டு மீண்டும் கருமுட்டையை உருவாக்குவர்.
தாயின் வயிற்றில் இருக்கும் இரண்டு குழந்தைகளின் ஆரோக்கியம் பேணி காக்கப்பட்டும். ஏனென்னில் தாயின் கருப்பப்பையை விடச் சிறந்த இடம் ஏதும் இல்லை. அங்குத் தான் குழந்தைக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும். எட்டு மாதங்கள்வரை எதுவும் சொல்லமாட்டார்கள். நன்றாக உள்ளது. ஆரோக்கியமான உள்ளது என நம்பிக்கை வார்த்தைகளை மட்டுமே உபயோகிப்பர்.
டெலிவரி நாட்கள் நெருங்கும் வேளையில் தான் ஆரம்பிப்பர் தங்களின் சித்து வேலைகளை. " கொஞ்சம் ஊட்டச் சத்துக் குறைபாடு காரணமாக உள்ள இருக்குற ரெண்டு பேபில ஒரு பேபிக்கு மட்டும் கொஞ்சம் மூள வளர்ச்சி சரி இல்லை. ஒரு பேபி நல்லா இருக்கு. ஆரோக்கியமா எல்லா உறுப்பும் நல்லபடிய வளந்து இருக்கு. ரெண்டாவது குழந்த தா. ஹிம்... இந்தப் போட்டி நிறைஞ்ச உலகத்துல எப்படி வளப்போதுன்னு தெரியல. இந்த மாறிக் குழந்தைங்கள வளக்குறது ரொம்பவே கஷ்டம் தா. " என வருந்திப் பேசி நம்மை மூளைச்சலவை செய்வர்.
இந்தக் குழந்தைக்கு உலகில் வாழத் தகுதி இல்லை. திறமை இல்லை. இது உங்களுக்கு நல்ல பெயரை வாங்கி தாரது என்பது போல் பேசி. இந்தக் காப்பகத்தைப் பற்றி கூறி அன்னை காப்பகத்தில் கொண்டு வந்து சேர்க்கும்படி பார்த்துக் கொள்வர். பலர் இங்கு வந்து சேர்த்து விட்டு. தங்கள் குழந்தை என்ற நினைப்பில் நன்கொடை கொடுத்து உதவுவர். சிலர் ’சனியன் விட்டது’ன்னு திருப்பிப் பார்க்காம சென்று விடுவர்.
குழந்தை இல்லை என்ற கவலை ஒரு பக்கம். குத்திக்காட்டும் சில மாக்கள் ஒரு பக்கம். ஒவ்வொரு கோயிலுக்கும் மருந்துவமனையிலும் குழந்தைக்காக யாசகம் வேண்டி அழையும் அலைச்சல் ஒரு பக்கம். எண்ணிலடங்கா மாத்திரைகள். ஊசிகள் என உடலை வருத்தி குழந்தையைப் பெற்றெடுத்தால் அது குறைபாட்டுடன் பிறக்கும்போது வரும் வலி கவலையென எல்லாமல் சேர்ந்து சிலரை காப்பகத்தின் பக்கம் செல்ல வைக்கிறது.
”அழுது அடம்பிடிச்சி ஒரு பொம்ம வேணும்னு கேக்குற குழந்தைய. ஒரு பொம்ம கடைக்கி கூட்டீட்டு போய் ரெண்டு பொம்மையும் உனக்குத்தானு ஒரு அழகான பொம்மைய குடுத்துட்டு. இன்னொரு அழுக்கான பொம்மைய குடுத்தா. அது அழகானத மட்டும் எடுத்துட்டுக்கும். மத்தத தூக்கி போட்டுட்டு போய்டும்.
அதே காண்ஸ்செப்டத்தா இவனுங்களும் ஃபாலோ பண்றானுங்க. நல்லா இல்லன்னாலும் அந்தப் பொம்மைக்கி விலன்னு ஒன்னு உண்டு. அந்த மாறியான குழந்தையத்தா வளத்துட்டு வர்றானுங்க. விக்கிறதுக்கு.”
ரிஷி கூறிய அனைத்தையும் கேட்டவர்களின் ஒவ்வொருவரின் முகத்திலும் ஒவ்வொரு மாறியான உணர்வு. குழந்தை, அதை வைத்து இந்தச் சமூகம் ஒரு தம்பதியினர் எப்படி எல்லாம் வாட்டி வதைக்கிறது. குழந்தை இல்லை என்றாலும் பிரச்சினை. இருந்தும் ஆரோக்கியமாக இல்லை என்றாலும் பிரச்சினை என்ற நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறோம்.
பிறரை குத்திக் காட்டாத. ஏளனம் செய்தா மனித நேயம் தான் சிறந்த எதிர்காலத்தையும். நல்ல சமூகத்தையும் உருவாக்கும்.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..