அத்தியாயம்: 36
வெகுநேரம் அம்மையப்பன் படத்திற்கு முன் அமர்ந்திருந்த இருவரின் தியானத்தை கலைத்தார் தன்செயன்.
" ஐய்யா. நேரம் ஆது. நீங்க வந்து தொட்டு எடுத்துக் குடுத்தா நல்லா இருக்கும். " என்றார் அவர்.
‘அது ஒன்னுமில்லங்க. எப்பப்பல்லாம் ஆப்ரேஷன் பண்ணப்போறாங்களோ அப்பப்பல்லாம் அந்தக் கத்திய பயபக்தியோட தொட்டு கும்பிட்டுட்டு. இந்தா டா மகனே போ. போய்க் கொள்ளப்புறத்துல இருக்கில்ல நம்ம தோட்டம். அங்க கத்திரிக்கா காச்சி கெடக்கு. அதுல ஒன்ன பறிச்சிட்டு வா…கிற மாறிக் கத்திய எடுத்துக் கொடுப்பார். மகனும் வாங்கிக் கொண்டு செல்வார்.
பாக்க இந்தியன் தாத்தா மாறி வெள்ளையா முடி வச்சிட்டு நல்லவெ மாறி இருந்தாலும். மூள முதல்வன் படத்துல வர்ற முதலமைச்சர் மாறில்ல யோசிக்கிது. கிழவன் உருவத்துல ஒரு கிரிமினல்லா. ' என நினைக்கத் தோன்றுகிறது.
ஒருவழியாகத் தியானத்தை முடித்து விட்டு அப்பாவும் மகனுமாய் வெளியே வந்தனர். தந்தையின் ஆசி பெற்ற கத்தியே வாங்கிக் கொண்ட போஸ் தன்செயனுடன் தன் அறைக்குச் சென்றார். தயானந்தன் அங்கு நின்று கொண்டிருந்த அவரின் அடியாட்களைப் பார்த்து,
" கதிரேசன் என்ன ஆனான். கதைய முடிச்சிட்டீங்களா இல்லையா. " என்றார் கோபமாக.
" ஐயா அது… அவன ஹாஸ்பிடல்ல இருந்து தூங்கிட்டு வந்து நம்ம எஸ்டேட்ல அடிச்சி போட்டு அடச்சி வச்சிருந்தோம். ஆனா எப்படியோ தப்பிச்சிட்டான். எங்கனு தா தெரியல ய்யா. தேடீட்டு இருக்கோம். " என்றவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் தயானந்தன்.
'மனுஷெ இந்த வயசுலையும் கைய கர்லா கட்ட மாறி ஸ்டாங்கா வச்சிருக்காரு போல. அடி வாங்குனவே கன்னம் பன்னு மாறி உடனே வீங்கிடுச்சி. '
"எப்படி தப்பிப்பான். ம்... பாத்த உடனேயே கொல்லச் சொன்னா… அடச்சி வக்கிறானுங்களாம். நல்ல நேரம் பாத்து தா கழுத்தருப்பியோ. எங்க அந்த உமாபதி. அவென்ட்ட சொல்லித் தேடச் சொல்லு. "
" அவரு காட்டுல தேடீட்டு தா இருக்காரு ஐயா. ஆனா... " என இழுக்க,
"காரணம் தேவையில்ல. அவன முதல்ல கொண்டுவந்து எங்காலடில போடுங்க. அவனால தா நா மாட்டிக்க இருந்தேன். ஒரு நிமிசம் எங்க என்ன காட்டி குடுத்துடுவானோன்னு மனசு பக்குன்னு ஆகிடுச்சி. இனி அவெ பேசவே கூடாது. பேசுறதுக்கு அவெ உயிர் உடம்புல இருக்க கூடாது. போங்க. போய் எல்லா இடத்துலையும் தேடுங்க. " என விரட்டி விட்டவர்.
பின்...
" முதல்ல அந்த மெட்ராஸ் காரனுங்க வீட்டுல போய்த் தேடுங்க. எனக்கு அவனுங்க மேல தா சந்தேகமாக இருக்கு. விடியும்போது அவனோட பிணத்த நா பாத்தே ஆகணும். ம்... " எனத் துரத்தி விட்டவர் சுருதி இருக்கும் அறைக்குச் சென்றார்.
போலிஸ்ஸிடம் கதிரேசன் மாட்டிக் கொண்டான் என்ற செய்து அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. சுருதியை கடத்திச் சென்று ஆள்மாறாட்டம் செய்ததை பார்த்த ஆரோக்கியராஜ்ஜை கொலை செய்தது போல் கதிரேசனையும் கொல்ல தான் அவர் நினைத்தார். ஆனால் நடக்கவில்லை. போலிஸ்ஸிடம் வாய்த்திறக்காமல் இருக்க முதல் ஆளாகக் கதிரேசனை பார்த்துக் குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி கேட்டவர் கதிரேசனின் மகனைக் காட்டி மிரட்டி வந்தார். அதனால் தான் எத்தனை கேட்டும் கதிரேசன் தான் செய்ததாகவே சொல்லிச் சரணடைந்தார். இருந்தாலும் அவன் உயிருடன் இருப்பது தவறாகப் பட்டது. அதனால் தான் தீர்த்துக்கட்ட சொல்கிறார்.
ஸ்டெக்சரில் அரை மயக்கத்தில் இருக்கும் சுருதியின் அருகில் சென்று, " பாப்பா… இன்னும் கொஞ்ச நேரம் தாம்மா. அப்றம் எல்லா வலியும் ஒரேடியா போய்டும். ம்… சரியா. நீ செய்யப் போற இந்த உதவியால நம்ம காப்பகத்துல இருக்குற எத்தன பேருக்கு நல்லது நடக்கும்னு தெரியுமா. உன்ன மாறி நல்ல மனசு இருக்குற ஆளுங்க தா எங்களுக்குத் தேவ. " என்றவர் அவள் கையில் கிடந்த ப்ளாஸ்டிக் வளையலை எடுத்துக் கொண்டு, அவளின் தலைகோதி விட்டுப் போஸ்ஸின் அறைக்குச் சென்றார் அந்தப் பெரிய மனிதன்.
இத்தனை நாளாகத் தந்தையின் ஸ்தானத்தில் இருந்த அவரின் செயலைச் சகிக்க முடியாது கண்ணீர் வடித்தாள் பெண்.
" சந்திரா... இது நம்மோட மணிவிழா ஆப்ரேஷன் இல்லையா. இத பத்திரமா வை." எனச் சுருதியின் வளையலைக் கொடுத்தார்..
"எங்க நீங்க அவள செண்டிமெண்ட் பாத்து விட்டுடுவிங்களோன்னு பயந்துட்டேன். பரவாயில்ல நீங்க அப்படி பண்ணல. ஆப்ரேஷன் செய்யறதுக்கு நல்ல கண்டிஷன்ல தா வச்சிருக்கிங்க. " எனச் சொல்லிய போஸ், வளையலை ஒரு கபோர்டில் வைத்தார். அங்கு அதுபோல் பல பொருட்கள் இருந்தன. அதிலிருந்து ஒன்றை எடுத்துவிட்டு கதவை மூடினார் போஸ்.
" கசாப்பு கடக்காரன் வளக்குற ஆடு மேல பாசம் வச்சா அவெ வீட்டு அடுப்புல உழ கொதிக்காது. இத உனக்குச் சொல்லித்தந்ததே நாந்தா. மறந்துட்டியா. " என சொல்லிச் சிரிக்க, அந்தச் சிரிப்பு நாராசமாய் இருந்தது.
" சீக்கிரம் வா. அந்த வெள்ளக்கார பொண்ணு காத்துட்டு இருப்பா. நா போய் நீ வர்ற வர அது கிட்ட பேசிட்டு இருக்கேன்." என நடந்து செல்ல. சந்திரபோஸ்ஸின் கவனம் அவரின் மேல் இல்லை. கையில் இருந்த பொருளின் மேல் இருந்தது.
அது ஒரு ஐடி கார்டு.
பார்கவியுடையது.
அதுவரை ஒரு உயிரை அவர் கொன்றது இல்லை. கிட்னியை மட்டுமே திருடிக்கொண்டு இருந்தவரின் முதல் கொலை பார்கவி தான். அவர் கையால் இறக்கும் முதல் ஆள் அவள்.
தன் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சையின் நினைவு வந்தது அவருக்கு. சந்திரபோஸ்ஸை பேராசைக்காரனாகவும் கொலைகாரனாகவும் மாற்றியது பார்கவியின் இதயம் தான். அந்த முதல் வாய்ப்பு அவனின் சித்தப்பாவும் குறிஞ்சி மலர் நாளிதழின் ஓனருமான தமிழ்வாணனால் கிடைத்தது.
" சந்திரா, ஒரு நல்ல வாய்ப்பு ஒன்னு நமக்கு வந்திருக்கு. நம்ம பக்கத்து டீ எஸ்டேட் ஓனர் இருக்காருல. அவரோட தங்கச்சி மகனுக்கு ஹார்ட்டுல ஏதோ பிரச்சனையாம். " தமிழ்வாணன்.
"ம்… நல்ல டாக்டரா பாக்க வேண்டியது தான. "
" நல்ல டாக்டர் கிடைக்கிறதுல பிரச்சனை இல்ல. "
"அப்ப எதுல பிரச்சன. "
"அதா சென்னேனே பா. ஹார்டுலன்னு. " என்க போஸ் முழித்தார்.
" சின்னப் பையன் அவெ. அவனுக்கு ஏத்த மாறி ஒரு ஹார்ட்ட ஏற்பாடு பண்ணி மாத்தி விட்டுட்டன்னு வை. நமக்குப் பல லட்சம் கிடைக்கும் டா. " என்றார் கண்களில் பேராசையுடன்.
" சித்தப்பா நா பண்ணிட்டு இருக்குறது கிட்னி மாறிச் சின்ன சைஸ் திருட்டு. நீங்க என்னடான்னா பெரிய சைஸ்ல எதுவோ சொல்றிங்க. ஹார்ட் ட்ராஸ்ப்ளான்ட் ஆப்ரேஷன்லாம் நல்லா படிச்ச டாக்டர்ஸ்கே சவாலான விசயம். எனக்கு எப்டி. "
"டேய், வந்த மகாலட்சுமிய ஏன்டா வேணாம்னு சொல்ற. நீ கார்டியாலஜிஸ்ட்டா வரணும்னா இந்த மாறி ஆப்ரேஷன் பண்ணித்தான் தீரணும். குண்டு சட்டில குதிர ஓட்டுனா பட்டணம் போய்ச் சேர முடியாது. நீ இந்த ஊட்டில இருக்குற வர வெறும் டாக்டர் மட்டும் தா. நீ இத சரியா செஞ்சி குடுத்தன்னா. உனக்கு லண்டல மேக்கொண்டு படிக்க ஏற்பாடு பண்ணி தர்ற தா அந்த எஸ்டேட் முதலாளி சொன்னான். நானும் சரின்னு சொல்லிட்டேன். போய்ச் செய்யி. " என மகனை உற்சாகப்படுத்தி தூண்டி விட்டார்.
"ம்ச்... கண்டிப்பா செஞ்சி தா ஆகணுமா. " என்றார் யோசனையுடன்.
" ம்… செஞ்சா பணத்துக்கு பணமும் கிடைக்கும். உனக்குப் படிப்பும் இலவசமா கிடைக்கும். ஏ யோசிக்கிற. உனக்கு ஆப்ரேஷன் பண்ண பயமா இருக்கா. " தமிழ்வாணன்.
" பயம்லா இல்ல. நா எது செஞ்சாலும் அத தைரியமா நின்னு செஞ்சி தா பழக்கம். ஆனா ஹார்ட்ட தானமா குடுக்க யாரு முன் வருவா. "
"உசுரோட இருக்குற எவனும் குடுக்க மாட்டான் தா. அதுனால ஒருத்தன பிடிச்சி அறுத்து எடுத்துக்க வேண்டியது தா. நாட்டுல ஜனத்துக்க பஞ்சம். " தயானந்தன்.
"மாட்டுனோம்னா பேரு மட்டுமில்ல. நாமலும் இல்லாம போய்டுவோம். " எனத் தயங்கினான் சந்திரபோஸ். முதல் முறை அல்லவா அதா பயம் இருந்தது போலும்.
" எப்படி மாட்டுவ. யாரோட இதயம் வேணும்னு சொல்றியோ. அவன கடத்திட்டு வர நம்ம கிட்ட தா பயளுக இருக்கானுங்க. கொன்னு பாடிய தூக்கி போட்டா. போஸ்ட்மார்ட்டம் பண்ணி உண்மைய மறைக்க நீ இருக்க. அவெ எப்படி செத்தான்னு மக்கள நம்ப வைக்க நானும் என்னோட பத்திரிக்கையும் இருக்கு. போலிஸ் கேஸ்ஸாகாம பாத்துக்க நம்ம கிட்ட ஆளும் இருக்கு. உமாபதி இருக்கான். வேறேன்ன வேணும். " தமிழ்வாணன்.
"ம்ச்… எல்லாரோட இதயமும் எல்லாருக்கும் செட் ஆகாது சித்தப்பா. அதுக்கு சில நடைமுறை இருக்கு. ப்ராப்பரா செக்கப் பண்ணணும். அப்பதா யாரோடது நமக்குத் தேவப்படுதுன்னு கண்டு பிடிக்க முடியும். " என்க.
"டேய் நாம தா கேம்ப்புங்கிற பேர்ல ஒன்ன வர்ஷத்துக்கு ஒருக்க நடத்துறோமோ. அத மாசத்துக்கு ஒருக்க வச்சி அம்புட்டு பேரையும் செக் பண்ணுவோம். அதுல யாரு சரின்னு உனக்குத் தோனுதோ கைய காட்டு. என்ன தமிழா சரிதான. " தயானந்தன்.
"ம்… கரெக்ட்டு மச்சான். முதல்ல நம்ம ஏரியா பக்கத்துல ஆரம்பி. கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணிக்கலாம். " என மூவரும் திட்டமிட்டு தான் முதலில் தொடங்கினர்.
முதலில் அவர்கள் தேர்ந்தெடுத்த ஆள் அவர்களின் காப்பகத்திலிருந்து ஒரு இளம் வயது ஆண். ஒரு அறையில் அடைத்து வைத்து நாள் குறிக்கப்பட்டது எஸ்டேட் ஓனரிடம் சொல்லியென அனைத்து ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது.
ஆனால் அந்த இளைஞன் தன் மரணம் இவர்கள் கையால் நிகழக் கூடாது எனத் தற்கொலை செய்து கொண்டான். இப்போது வேறு ஆள் தேவைப்பட்டது. நாளை மறுநாள் இதயம் தேவை என்ற நிலையில் மீண்டும் தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது தான் பார்கவி சந்திரபோஸின் கண்ணில் சிக்கினாள்.
யார் எவர் என்றெல்லாம் போஸ்ஸுகு தெரியாது. காட்டில் தொலைந்து விட்ட அந்தச் சிறுமி. தன் அண்ணன் திரும்பி வருவானென வெகுதூரம் காட்டிற்குள் செல்லாமல், பயந்து போய் ஒரு மரத்தடியில் படுத்திருக்க, அவளை எழுப்பிக் கேள்வி கேட்டார் சந்திரபோஸ்.
"யாரு பாப்பா நீ. இங்க எப்படி வந்த. இது யான புலின்னு பயங்கர மிருகம் இருக்குற இடம். யார் கூடம்மா வந்த. " என நயந்து பேசிச் சாப்பிட பழங்கள் கொடுக்க, சிறுமி தன் மருண்ட விழிகளால் அவனை நோக்கினாள். பின் தன்னை பற்றித் தயங்கி தயங்கி கூறினாள்.
"ஹரி அண்ணா. இந்தப் பக்கம் தா போனாங்க. காணும். காணும். " என விரல் கௌதம் சென்ற பாதையைச் சுட்டிக் காட்டி பயந்து அழ,
" நா கண்டுபிடிச்சி தாரேன் பாப்பா. எங்கூட வர்றியா. ம். " என அழைத்துச் சென்றார். முதலில் தயங்கினாலும் பாசாங்கு வார்த்தைகள் பல பேசி அழைத்துச் சென்றார். அவர்களின் காப்பகத்திற்கு. தனக்கு தேவையானது அவளிடம் நல்ல கண்டிஷனில் உள்ளதா எனச் சோதனை செய்து பார்த்தார்.
பெரிய பெரிய மிஷின்களை பார்த்த சிறுமி தன்னை எதுவோ செய்யப் போகிறார்கள் என்பதை உணர்ந்து அங்கிருந்து அவர்கள் அசந்த நேரம் பார்த்துத் தப்பி காட்டிற்குள் ஓடினாள். மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் முன் ஓட, கீழே விழ நேர்ந்தது. கை கால்கள் சிராய்த்து ரத்தம் வந்த போதும் அவர்களின் பிடியில் மாட்டிக் கொள்ள கூடாது என்று காட்டிற்குள் ஓடினாள் சிறுமி.
"டேய். அந்தக் குட்டி பிசாச பிடிச்சிட்டு வாங்கடா. " எனத் தன் அடியாட்களுக்கு உத்தரவு இட்டவன், அவர்களுடன் சேர்ந்து சிறுமியைத் தேடினான். ஏனெனில் சிறுமியைக் காணமல் தேடும் அவளின் குடும்பத்தினரின் கைகளுக்குக் கிடைக்கும் முன் பிடித்து அவளின் இதயத்தை எடுத்து விட வேண்டும் அல்லவா அதான்.
அவளின் நேரம் அவளைத் தேடிவரும் வீட்டாரிடம் கிடைக்காமல் போஸ்ஸின் கண்களில் மீண்டும் சிக்கினாள். நள்ளிரவு நேரம் அந்தக் கயவர்களின் கையில் சிக்க கூடாது என ஒரு புதரில் மறைந்து கண்மூடி உறங்கிக் கொண்டிருந்த சிறுமியை ஓங்கி தலையில் மரக்கட்டையால் போஸ் அடிக்க, சிறுமி ரத்த வெள்ளத்தில் மயங்கிப் போனாள்.
உயிரைக் காக்க வேண்டிய மருத்துவனின் மூளையோ வேகமாக ஒரு திட்டத்தைத் தீட்டியது.
" டேய் இந்தப் பொண்ண தூக்கிட்டு போய் ஆள் நடமாட்டம் இருக்குற இடத்துல போடு. அப்பதா விடியையும் ஆஸ்பத்திக்கி கூட்டீட்டு வருவாங்க. அங்க வச்சி தா உயிர் போகணும். அதுக்கு முன்னாடி போய்டக் கூடாது. புரியுதா. " என அவள் படிக்கும் பள்ளியின் பின் புறம் வீசி எறியச் சொன்னார்.
பின் போஸ் அவளின் உடல் நிலையும் நாடித் துடிப்பையும் பரிசோதித்து விட்டு. தமிழ்வாணனுக்கு ஃபோன் செய்தான்.
" என்ன சந்திரா. ஆள் கிடைச்சத. எப்ப கடத்தணும். "
"கடத்தல்லாம் தேவ யில்ல சித்தப்பா. நீங்க அந்த எஸ்டேட் ஓனர் கிட்ட நா சொல்றமாறி சொல்லிக் காலை இந்த அட்ரஸுக்கு வரச் சொல்லுங்க. "
"எதுக்குடா. "
"அவங்க வீட்டு பையனுக்கு ஹார்ட் கிடைக்கப் போது. அப்றம் நாளைக்கி காலைல நா அனுப்புற ஃபோட்டோவோட. சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். ங்கிற செய்தி கொட்ட எழுத்துல, தெளிவா டீட்டெய்ல்லா வரணும். "
"என்ன டா சொல்ற. யாரு அது. "
" அந்த எஸ்டேட்ல வேல பாக்குற கலியபெருமாளோட பொண்ணோட இதயத்ததா எடுக்கப் போறோம். தலைல அடிப்பட்டதால இரத்தம் உறைஞ்சி கட்டியா மாறிடும். மூளைக்கி போற ரத்தத்தோட பாதைய அது அடச்சிக்கும். இரத்த கிடைக்காததுனா இன்னும் சில மணி நேரத்ததுல ப்ரைன் டெத் ஆகிடும்.
இந்தச் சந்திப்பத்த யுஸ் பண்ணி அந்தப் பொண்ணோட இதயத்த தானமா கேட்டு வாங்க வேண்டிய பொறுப்பு அந்த எஸ்டேட் காரனோடது. " என்க.
"தானமா தரச் சம்மதிக்கலான்னா என்ன பண்ண. " தமிழ்வாணன்.
" சம்மதமில்லாம கூட எடுக்கலாம். அது ஒன்னும் பிரச்சினை இல்ல. ஆனா பின்னாடி பிரச்சன வந்திடக் கூடாதுன்னு தா சொல்றேன். எல்லாம் சட்டம் படி நடக்குற மாறி இருக்கணும். அப்பத்தா அவெ கேஸ் அது இதுன்னு போடமாட்டான். நமக்கும் எந்தத் தொந்தரவும் இருக்காது.
இப்ப உங்களுக்கு நா ஃபோன் பண்ண என்ன காரணம்னா, ஒரு வதந்திய பரப்பணும். நாளைக்கி காலைல நீங்கப் பரப்ப போற நியூஸ் எப்படி இருக்கணும்னா. அந்தக் கலியபெருமாள் இந்த ஊரவிட்டே ஓடிடுற மாறி இருக்கணும். புரியாதா. "
" நல்லாவே." எனத் தமிழ்வாணன் சிறுமியின் மரணத்தை மிகவும் வக்கிரமாகப் பரப்பினார்.
சரியாக அதிகாலை வேளையில் உயிருடன் கௌதமின் கண்ணில் சிக்கினாள் பார்கவி. விரைந்து மருத்துவமனை கொண்டு சென்ற பார்கவி சந்திரபோஸ்ஸிடம் ஒப்படைக்கபட்டாள். அவளை அழைத்து வரும் போதே அவளின் மூளை தன் செயலை இழந்திருந்தது. பாசாங்கிற்கு சிகிச்சை அளிப்பது போல் நாடகம் செய்து, சில மணி நேரத்திற்கு பின் கலியபெருமாளை அழைத்துச் சிறுமி மூளைச்சாவு அடைந்ததாகக் கூறினார் சந்திரபோஸ்.
உயிருடன் தான் இருக்கிறாள். ஆனால் உடலை இயக்கும் இயக்கச் சக்தியான மூளை அதன் செயலைச் செய்ய முடியாமல் மடிந்து விட்டது என்றார் மருத்துவர்கள். இதயம் துடிக்கும், ரத்தம் எல்லா உறுப்புக்கும் செல்லும். ஆனால்… ஆனால்... எவ்வித உடல் அசைவும் இருக்காது. எழுந்து நடக்காது. கரம் அசையாது. விழி பார்க்காது. மொத்தத்தில் இறந்தது போல் தான்.
கோமா நிலைக்கும் மூளை சாவிற்கும் வித்தியாசம் உண்டு. கோமாவில் மூளை செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கும். உணர்வும் உணர்ச்சிகளும் இருக்காது. ஆனால் மூளைச் சாவு அப்படி அல்ல.
நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் என்ன செய்ய வேண்டும். எப்பொழுது செய்ய வேண்டும். எப்படி செய்ய வேண்டும், என்பது போன்ற கட்டளைகளை இடுவது மூளையே. அது இல்லை எனில் மனிதன் ஒரு உயிரற்ற மாமிச மலை தான்.
சிறுமியின் உடல் கலியபெருமாளின் கைக்கு கிடைத்ததிலிருந்து அந்த எஸ்டேட் முதலாளியும் அவரின் ஆட்களும் பழத்தின் மேல் ஈ மெய்ப்பதை போல் மொய்க்கத் தொடங்கினர்.
' உன்னோட பொண்ண தா காப்பாத்த முடியல. ஆனா நீ பண்ணப் போற இந்தத் தானத்தால என்னோட பையன் ரூபத்துல உன்னோட பொண்ணு வாழ்ந்துட்டு இருப்பா. ' என பேசிப் பேசி மூளைச்சலவை செய்தனர்.
கலியபெருமாளுக்கு சிந்திக்க கூட நேரம் தராமல் சுற்றி சுற்றி வந்தனர். துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டவில்லை. அவ்வளவு தான் பாக்கி.
உள்ளே மகள் உயிருடன் தான் படுத்திருக்கிறாள். ஆனால் அந்த உயிர் எப்போழுது வேண்டுமானாலும் உடலை விட்டுச் சென்று விடும் என்கின்றனர் டாக்டர்கள். மகளின் உடலைக் கூறு போட்டுப் பங்கு கேட்கும் ஒரு கூட்டம். ஊனையும் உயிரையும் தந்து பெற்றெடுத்து தன் மனைவியின் இடிந்த நிலை. சிறுமி என்றும் பாராது வக்கிரமாகப் பேசும் சில ஈனப்பிறவிகள் என எல்லாம் சேர்ந்து அவரைச் சுழலில் மாட்டி விட்டது. சத்தியமூர்த்தி இருந்தாலாவது அவருக்கு ஒரு பலம் கிடைத்திருக்கும். ஆனால் இல்லையே.
தன் மகளின் உறுப்புகளைத் தானம் செய்வதின் மூலம் தன் மகள் உயிரோடு இருப்பாள் என்று தோன்றியது. மனமே இல்லை என்றாலும் சம்மதம் சொன்னார் கலியபெருமாள், உடல் உறுப்பு தானத்திற்கு. இதை அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஏன் தன் மனைவிக்கி கூட, மகளைக் கூறு போட்டுக் கொடுத்து விட்டதை சொன்னால் அவர் தாங்கமாட்டார் என்பதால் சொல்லவில்லை. மகளை நினைவு படுத்தும் அனைத்தையும் விட்டு விலகித் தூரம் செல்ல நினைத்தார். சென்று விட்டார்.
சந்திரபோஸ்ஸின் திட்டம் சரியாய் வேலை செய்தது பார்கவி விசயத்தில். அவளைப் பிள்ளையார் சுழியாக மாற்றி இன்று வரை கொலைகளைத் தொடந்து செய்து கொண்டே இருக்கிறார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..