அத்தியாயம்: 47
பப்பாளிப்பழம். அதை நாம் எப்படி சாப்பிடுவோம். பீலர் என்று சொல்லப்படும் தோல் நீக்கும் கருவி கொண்டோ அல்லது கத்தி கொண்டோ அதன் தோலை நீக்கி விட்டு. பழத்தைச் சிறு சிறு துண்டுகளாக அறுத்து உள்ளிருக்கும் விதையை நீக்கி உண்ணுவோம். ஆனால் இதற்கு நவீன டெக்னாலஜி எதுவும் தேவையில்லை. தன் இரு பற்கள் மட்டுமே போதும். நாங்கள் பழத்தை மரத்திலிருந்து கூடப் பறித்து எடுக்கமாட்டோம். அப்படியே தான் உண்ணுவோம் என்பது போல் மரத்தில் இருந்த பழத்தில் ஓட்டை போட்டுத் தலையை உள்ளே செலுத்தி மொத்த பழத்தையும் உண்டு முடிந்தது அந்த அணில்.
"பாவா இங்க பாரேன். அந்த அணிலுக்கு இருக்குற புத்திசாலித்தனத்த. அழகா தலை மட்டும் போற அளவுக்கு ஓட்டப் போட்டு முழு பழத்தையும் சாப்பிட்டுட்டு தோல மட்டும் தொங்க விட்டிருக்கு. சூப்பர்ல. " எனத் தூரத்தில் தெரிந்த பப்பாளி மரத்தில் இருந்த அணிலை சிறிய பைனாக்குலர் வழியாக ஆவலாக ரசித்துப் பார்த்தவளின் ரசனை அவளின் பேச்சைக் காதில் வாங்கியவனுக்கு இல்லை போலும். கண்டு கொள்ளாமல் அங்கிருந்த தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்தான் ரிஷி தரன்.
தன் பேச்சைக் காதில் வாங்காதவனை திரும்பிப் பார்த்தவள் பைனாக்குலரை தன் பையில் போட்டு விட்டு, அவனின் முன் சென்று தேங்கி இருந்த நீரில் குத்தித்தாள் அவன் மனைவி. அது அவனின் வெள்ளை வேட்டியில் சேற்றை வாரி இறைத்தது. " என்ன பாவா பண்ற?. உனக்கு நா பேசுறது காதுல கேக்கலையா?. " எனக் குதித்த படி கேட்க,
அவளை சேற்றிலிருந்து விலக்கி ஒரு மரத்தின் அடியில் நிறுத்தி வைத்தவன், " இங்கயே நின்னு குதி. சேத்துல குதிச்சா வழுக்கிக் கீழ விழுந்துடுவ. ஒழுங்க பாத்து நட. " என எச்சரித்து விட்டு மண்வெட்டியை கையில் எடுத்தான். அங்கிருக்கும் பாத்திகளை சரி செய்ய மண்ணை வெட்டியவனிடம்,
" எனக்கு தா பாத்து நடக்க தெரியலன்னு தெரியுதுல்ல. தூக்கிட்டு போயேன் பாவா." என்க, திரும்பி அவளை முறைத்துவிட்டு தன் வேலையைப் பார்த்தான்.
"பாவா... பாவா... அங்க பாரேன். " எனப் பைப்பில் நீர் கொட்டிக் கொண்டிருந்த பம்பு செட்டை காட்ட, அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை.
"உன்னோட வேட்டி தா அழுக்காகிடுச்சில்ல. கழட்டி தா. நா போய் க்ளின் பண்ணிட்டு வர்றேன். " எனக் கேட்டதோடு மட்டுமல்லாமல் வேட்டியில் வீம்பாய் கை வைக்க.,
" ஏய்... " எனக் கத்திக் கொண்டே அவளிடமிருந்து விலகி நின்றான்.
" வா பம்பு செட்டுக்கு போலாம்னு கூப்பிட்டிட்டா நீ வரமாட்ட. திட்டுவ. அதா வேட்டிய மட்டும் கலட்டி தான்னு கேட்டேன். தப்பா. " எனப் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க.
"ம்ச்... என்னடி வேணும் உனக்கு. ம்… என்னடி ஆச்சி. காலைல எந்திரிச்சதுல இருந்து பின்னாடியே வந்து ஏன் டி உயிர வாங்கிட்டு இருக்க. " எனக் கடிய, அவனின் டி என்ற அழைப்பு கிட் என்ற அழைப்பை விடக் கிறங்கடிக்கச் செய்வதாக இருந்தது அவளுக்கு.
" என்ன வேணும்னு சொன்னா, உடனே கிடைக்குமா பாவா. ம்... " எனக் கண்சிமிட்டி கேட்டாள்.
" நீ ஒரு மார்க்கமாத்தான் டி திரியுற. ஆனா உங்கூட சேர்ந்து கொஞ்சி குழாவ எனக்குத் தா நேரம் இல்ல. " எனச் சொல்லி நடந்து செல்ல,
"கொஞ்சிகிறதுக்குன்னு தனி நேரம் எல்லாம் கிடையாது பாவா. கிடைக்கிற எல்லா நேரத்துலையும் கொஞ்சிக்கலாம்." என அவனின் முதுகில் உப்பு மூட்டை ஏறினாள் அவள்.
" ஏய்... இறங்கு டி கீழ. ஆளுக நடமாடுற இடத்துல என்ன வேல செஞ்சிட்டு இருக்க. " எனத் திட்டிக் கொண்டேனாலும் நடந்தான், அவளை இறக்கிவிடாமல்.
"யாரு வந்தா என்ன பாவா. பொண்டாட்டிய உப்பு மூட்ட தூக்குறேன்னு சொல்லு. அதுலையும் மாசமா இருக்குற பிள்ளத்தாச்சி பொண்டாட்டி ஆசப்பட்டதெல்லாம் செஞ்சேன்னு வை. பிறக்குற உம்பிள்ள புத்திசாலியா பிறக்குமா. ஊரயே வில பேசி உம்பொண்ணு விக்கப் போறா பாரு. " என்க,
" இந்த உண்ம கதய யாரு உனக்குச் சொன்னா. "
" யாரும் சொல்லல பாவா. நானே உருவாக்குனேன். என்னோட மூளைய கசக்கி பிழிஞ்சி இத கண்டுபிடிச்சேன் பாவா. " எனத் தன் கன்னத்தால் அவனின் கன்னம் உரச. 'போதும். இதுக்கு போலப் போனா தாங்காது.' என நினைத்தவன் கீழ இறக்கி விட்டான்.
‘அவளைப் போகச் சொன்னா அவா போக மாட்டா. அதுனால நாமலே போய்டுவோம்’ என அறுப்பு வேலை நடக்கும் வயக்காட்டுக்கு நடந்து சென்றான்.
சோளத்தட்டை அறுவடை செய்யும் களம் அது. பச்சை நிறத்தில் இரண்டு ஆள் உயரத்திற்கு இருந்தது அந்த இயந்திரம். முன் பக்கம் சில கூர்மையான பற்களால் சோளச் செடிகளை அறுக்கும் அது. முளைத்திருக்கும் சோளக் தட்டைகளை தனியாகவும், வெட்டிய மீதி செடிகளைத் தனியாகவும் பிரித்து விடும்.
செடிகளைக் கத்தையாக கட்டி ஆடு மாடுகளுக்குத் தீவனமாக உபயோகிப்பர். இயந்திரத்தின் உள்ளே செல்லும் சோளத்தட்டை நம் கைக்குச் சோளமாக மட்டுமே கிடைக்கும். அதை மூட்டைகளில் கட்டி குடோனுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
"இந்தா தம்பி வந்துடுச்சில்ல. " என ரிஷி வரவைக் கண்டு அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து அவனின் அருகில் வந்து நின்றனர்.
"என்னாச்சி அண்ணே. ஏ சித்தப்பா வேல நடக்கல. " எனச் சும்மா நின்று கொண்டிருந்த வேலையாட்களையும் டீ க்ளாஸ்ஸுடன் நிற்கும் ட்ராக்டரின் ஓட்டுனரிடம் பேசிக் கொண்டு இருந்த கவியரசனை பார்த்துக் கேட்டான்.
" கொண்டு வந்த ட்ராக்டர் ரிப்பேராம் ப்பா. அதா வேல நின்னுடுச்சி. நாளைக்கி பாத்துக்கலாம்னு சொன்னா இந்தச் சாமிக்கண்ணு கேக்க மாட்டேங்கிறான். கையால அருவாளோட அறுத்திடலாம்னு சொல்றான். இப்ப ஆரம்பிச்சாத்தா ரவைக்குள்ள முடிக்க முடியுங்கிறான். என்ன பண்ண. " என ரிஷியிடம் கேட்க,
" தம்பி நாளைக்கி நாளைக்கின்னு தள்ளிட்டே இருந்த அதோட தரம் குறைஞ்டும். ஏற்கனவே நீங்க ஊர்ல இல்லன்னு சொல்லி நாலு நாள் தாமதமாத்தா அறுக்கவே போறோம். இதுக்கு அப்புறம் கூடாது தம்பி. ஏய் பூவத்தா, மாடா… என்ன வேடிக்க. இறங்குங்கடா. இத்தன நாள் கஷ்டப்பட்டு வளத்தது வீணாகிடும். ம். " என வயலில் இறங்க.
அவர்களைத் தடுத்தவன். இயந்திரத்தை ரிப்பேர் பார்த்துத் தானே ஓட்டி அறுவடை செய்ய, பெண்கள் அனைவரும் கலைப்பு தெரியாமல் இருக்க பாட்டு பாடிக் கொண்டே கத்தைகளை கட்டவும், ஆண்கள் சோளத்தை மூட்டையில் கட்டவும் ஆரம்பித்தனர்.
மடோனோவுடன் பிஸ்னஸ் பேசுகிறேன் என்று கோர்ட்டும் சூட்டுமாக வந்து நின்றவன் தான் இப்போது அணிந்திருந்த சட்டையைக் கலட்டி மரத்தில் போட்டு விட்டுப் பனியனும் வேட்டியுமாக வயலில் இறங்கி இருக்கிறான். அவனின் இந்த இரு பரிமாற்றமும் பெண்ணவளை கவர்ந்திருந்தது.
" நீ ஆல் இன் அழகு ராஜா மாறி எல்லா வேலையும் பாக்குற பாவா. ஐ லைக் இட். என்ன தா இருந்தாலும் நீ வேட்டி சட்டைல மட்டும் தனி அழகா தெரியுற பாவா. ஐ லவ் யூ. " என அவன் பார்க்கு நேரம் பார்த்துப் பறக்கும் முத்தத்தைப் பறக்க விட, அவன் முறைத்தபடியை முகம் திரும்பிக் கொண்டு புன்னகைத்தான். அதுவும் அவளுக்கு அழகாகத் தெரிய, அவனைச் சைட்டடித்தபடி நின்றாள் ஹரிணி.
" என்னம்மா வீட்டுக்குப் போகாம இங்க என்ன பண்ணீட்டு இருக்க. மதினி உன்ன காணும்னு கேட்டாங்க. இரு நீ தரன் கூடத் தா இருக்கன்னு மதினிக்கி ஃபோன்ல சொல்றேன். " கவியரசன் ஃபோனை எடுக்க,
" ஐய்யையோ... மாமா. அவங்க கிட்ட மட்டும் நா உங்க கண்ணுல பட்டேன்னு சொல்லிடாதிங்க. அப்றம் நா சுப்ரபாதம் தா கேக்க வேண்டி வரும். நா இங்க ஒரு ஓரமா இருந்துக்கிறேன். நீங்க என்ன பாக்கவே இல்ல. சரியா. அந்த ஃபோன சட்ட பாக்கெட் குள்ள வைங்க. " எனக் கையில் இருந்ததை பிடுங்கி சட்டை பையில் வைக்க, அவர் சிரித்தார்.
" ஹாஹ்ஹா. ஏ சொல்லக் கூடாது. "
" ஒரு கிலோ ரெண்டு கிலோன்னா கூடப் பரவாயில்லை. ஒரு மூட்ட நிறைய வெங்காயத்த எடுத்திட்டு வந்து எங்கிட்ட குடுத்து வெட்டச் சொல்றாங்க. சரினு அமைதியா வெட்டுனா நா ஒரு வேலையும் செய்யாம உக்காந்திருக்கேன்னு திட்ட ஆரம்பிச்சிடுறாங்க. அதா அவங்களுக்கு டென்ஷன் குடுக்க வேண்டாம்னு கிளம்பி வந்துட்டேன். " எனச் சிரித்தாள்.
"ஹாஹ்ஹா. சரிம்மா வெயில் ஏறி வர்ற நேரம். அந்த வேப்பமரத்துக்கு அடில உக்காந்துக்க. மத்திய சாப்பாடுக்கு உம்புருஷெங் கூடச் சரியான நேரத்துக்கு வந்திடு. " எனக் கவியரசன் புறப்பட்டுச் சென்றார். அவர் காட்டிய இடத்தில் ஊஞ்சல் கட்டி சில குழந்தைகள் விளையாட, தானும் அவர்களுடன் ஐக்கியமாக்கிக் கொண்டாள்.
மழலையர் சிரிப்பில் தன் மனைவியைக் கண்ட ரிஷிக்கி நேற்றிலிருந்து தன் பின்னே வரும் மனைவியை நினைத்து மட்டற்ற மகிழ்ச்சி.
‘பின்ன போட்ட திட்டப்படி எல்லாம் கரெக்ட்டா நடந்தா மகிழ்ச்சி வரத்தான செய்யும். யாரு போட்ட கணக்கு சரியா இருக்கோ இல்லையோ. இவெ போடுற கணக்கு எல்லாம் ரொம்ப சரியாத்தா இருக்கு. எந்தக் கணக்கு வாத்தியார்ட்ட ப்பா நீ கணக்கு கத்துக்கிட்ட. அவர கண்ணுல கொஞ்சம் காட்டுனா மத்தவங்களுக்கு யூஸ்புஃல்லா இருக்கும்ல. '
"அதெப்படி முத்தம் குடுக்கணும்னு தான கிட்டக்க வந்த. அப்றம் தள்ளிப் போனா என்ன அர்த்தம். ம்… மரியாதையா எனக்குச் சேர வேண்டிய முத்தத்த வட்டியோட ரெண்டா குடுத்துட்டு வேற வேலைய பாரு. இல்லன்னா நீ குடுக்குற வர உம்பின்னாடியேத்தா வருவேன். " என அவளுக்கானதை வேண்டி அவனை நிழல்போல் தொடருகிறாள் ஹரிணி நேற்றிலிருந்து.
எப்படியும் இரவில் கட்டிலில் அவனைக் கவுத்திவிடலாம் என்று நினைத்து அறையில் அவனின் வருகைக்காகக் காத்திருக்க, அவன் அகிலனையும் ஆதியையும் கூட்டி வந்து நடுவில் கிடத்தி மதில் சுவர் எழுப்பிப் பாதுக்காப்பாய் படுத்துக் கொண்டான்.
‘பின்ன இப்ப இருக்குற சூழ்நிலைல அவள நம்பி பக்கத்துல தனியா இருக்க முடியாதுல்ல. கோட்டிக்காரி எதாச்சும் கோக்குமாக்கு பண்ணி அவெ கோபமா இல்லன்னு கண்டு பிடிச்சிட்டானா. அதா பிள்ளைங்கள கவசம் மாறி யூஸ் பண்ணிக்கிட்டான்.’
" இது எந்த விதத்துலங்க நியாயம் நீயே சொல்லு. பெத்த பிள்ளைக்கி முத்தம் குடுப்பானாம். இன்னும் முகங்கூட உருவாகாத பிள்ளைக்கி என்னோட ஸ்ட்ரெஸ்ஸ விலக்கிட்டு வயித்துல முத்தம் குடுப்பானாம். ஆனா அதுகள பத்து மாசம் சுமந்து பெத்த… பெத்துக்கப் போற அம்மா. தாய்… நா… ஆனா எனக்கு எதுவும் குடுக்க மாட்டானாம். என்ன பாவா இதெல்லாம். " என விடிந்தும் விடியாத அந்த முன்காலை வேளையில் எழுந்து குளித்து அவனுக்குப் பிடித்த சேவையைக் கட்டிக் கொண்டு அவன் முன் வந்து கேட்டாள்.
அன்றில் பூத்த மலர்போல் பூத்திருக்கும் மனைவியின் அழகு. அவனை அவள் புறம் இழுத்தது. அது அவனின் திட்டத்தில் சிறு ஓட்டை போடும் அளவுக்குப் பலமான தாகவே இருந்தது.
இருந்தும் சமாளித்து பைக்கை எடுக்க, பின்னாலேயே வந்து ஏறிக் கொண்டாள் அவனின் மனைவி.
"நீ எங்க ஹரிணி வர்ற. "
"நீ எங்க போறியோ. அங்க தா பாவா. கூடவே வருவேன். லேட்டாச்சி. உனக்குப் பைக் ஓட்ட முடியலன்னா குடு. நா ஓட்டீட்டு வர்றேன். நீ பின்னாடி உக்காந்துக்கோ. ம்… ஆனா ஒரு கண்டிஷன். என்னோட இடுப்ப மட்டும் டச் பண்ணாம வரணும். ஓகே வா. பிடிச்சேன்னு வை. எனக்கு இப்ப புது போலிஸ் ஃப்ரண்டெல்லாம் கிடைச்சிருக்கு. அப்றம் லத்தி சார்ஜ் தா பாத்துக்க. " என மிரட்டியவளை பின்னால் அமரவைத்து கொண்டு வந்தான் தரன்.
" ஆமா பாவா இப்ப நாம எங்க போறோம். "
"எங்கிட்ட கேக்காம தான எம்பின்னாடி ஏறி உக்காந்த. அப்ப நா எங்க போனாலும் எதுவும் பேசம கூட வரணும். இல்லன்னா இறக்கி விட்டுடு போய்ட்டு இருப்பேன். எப்படி வசதி. " என மிரட்ட,
"நல்ல வசதியாத்தா பாவா இருக்கு. நீ எங்கே போனாலும் நா உன்ன ஃபாலோ பண்ணலாம்னு முடிவு பண்ணதுக்கு அப்பறம் எல்லாமே வசதி தா. " என்றவளின் கரம் அவனின் தோளிலிருந்து இறங்கி இடையை சுற்றி அணைத்துக் கொண்டது.
"ஏய் எடு டி கை. வண்டி ஓட்டுறது தெரியல. நடு ரோட்டுல ஊருக்கு நடுவுல போய்க்கிட்டு இருக்கோம். ஒழுங்கா உக்காரு. " என்றவன் கரத்தையும் விலக்கிவிட்டான்.
"பாவா… யாரும் பாத்தா என்ன பாவா. நீ தா பெரியாளாச்சே. உன்னைய யாரு என்னனு கேக்கபாறா. ம்… " என்றவள் அவனை அணைத்துக் கொண்டு முதுகில் சாய்ந்தோடு மட்டுமல்லாது, அவனின் சிகையை கலைத்து, கன்னம் காது கழுத்து எனத் தன் ஒற்றை விரலால் தீண்டி அவனை வம்பிழுத்தபடியே அவனின் பின்னால் அமர்ந்து வந்தாள்.
மாலை வேளை வரை எங்கும் செல்லாது அவனுடனேயே இருந்து, "பாவா இது என்ன?. பாவா அது என்ன?. இந்த வயல்ல என்ன போட்டு வளக்குறிங்க?. எப்ப என்னென்ன பண்ணுவீங்க?. சொல்லு பாவா." என கேள்விமேல் கேள்வி கேட்டு உயிரை வாங்குகிறாள்.
அனைத்து சோளத்தையும் மூடையில் கட்டி அதை ட்ராக்டரில் ஏற்றியவன், வேலையாட்களுக்குக் கூலியை கொடுத்து விட்டுக் கை கால் கழுவ செல்ல, அங்கு ஹரிணி சிறு ஆட்டுக்குட்டியுடன் விளையாண்டு கொண்டிருந்தாள். அவளை வீட்டிற்கு வா என அழைக்க,
" தம்பி மத்திய நேரம், கொஞ்சோண்டு சாப்பிடுறது. " எனக் கூலியாட்கள் கையால் தூக்குடன் நிழலில் அமர, தரன் வேண்டாம் என வாயெடுக்கும் முன்,
" ம்… சாப்பிட்டுடுவோம். என்ன ஸ்பெஷல்லா என்ன கொண்டு வந்திருக்கிங்க. " என்றபடி அவர்களின் அருகில் சம்மணமிட்டு அமர்ந்தாள் ஹரிணி.
அவளிடம் தரனுக்கு பிடித்த குணம் என்றால் அது இது தான். எவ்வித பாகுபாடும், ஏற்றதாழ்வுமின்றி பந்தா காட்டாது பழகும் அந்தக் குணம். எப்போதுமே அது அவனைக் கவரும் காந்தம் தான்.
"இந்தாத்தா பழைய சோறு தா. கத்தரிக்க கொழம்பு. " என ஒரு பெண் நீரை பிழிந்து சோற்றை உருண்டை பிடித்து நடுவில் குழம்பை குழி தோண்டி புதைத்து அவளின் கையால் தர, ‘ம்…’ என்ற சத்தத்துடன் ரசித்து உண்டவள்,
" இதோட டேஸ்டு வித்தியாசமா இருக்கே. ஏ?. இதுல என்னென்ன போட்டிங்க. " எனச் சமையல் கலை நிபுணர்போல் கேள்வி கேட்க,
" இத்துணுண்டு கருவாடு போட்டேந்ததா. நல்லா இருக்கா. " என அதன் செய்முறை விளக்கத்தைத் தர, ஹரிணி ரசித்து உண்டாள்.
"இந்தா பாவா நீயும் சாப்பிடு. அட வெக்கப்படாத. " என அனைவர் முன்னும் ஊட்டி விட, பெண்கள் இவர்களைச் சாடை பேசிக் கேலி செய்தனர்.
" போதும் வா டி. " எனப் பைக்கில் அழைத்துச் சென்றான்.
" இப்ப நாம எங்க போறோம். "
" பைக்ல விண்வெளிக்கெல்லாம் போக முடியாது. வீட்டுக்குத் தா போ முடியும். மலரம்மா ரெண்டு மொற கால் பண்ணிட்டாங்க. "
" பாவா ஒரு நிமிசம் பைக்க நிப்பாட்டேன்."
" ஏ?. "
" ஐய்யோ நிப்பாட்டு பாவா. " என்றவளை கத்தவிடாது பைக்கை ஓரமாக நிறுத்த, அவள் கீழே இறங்கி கொண்டாள்.
" நீ போ பாவா. நா பொடி நடையா நடந்து வர்றேன்." என்க, அவன் முறைத்தான்.
" இல்ல பாவா. நா இன்னைல இருந்து காந்தி கொள்கைய பின் பற்றலாம்னு இருக்கேன். அதுனால கைல கத்தி எடுக்கமாட்டேன். வீட்டுக்குப் போனா பூவத்த அத தா எடுக்கச் சொல்லுவாங்க. அதா. " எனக் காந்தியவாதி போல் பேச,
" கொல பண்றதுக்கு கத்தி எடுக்குறதுக்கும், வெங்காயம் வெட்டுறதுக்கு கத்தி எடுக்குறக்கும் வித்தியாசம் இருக்கு. ஏறு வண்டில டி. " என மிரட்ட, அவள் மாட்டேன் எனத் தலை அசைத்தாள். அவன் மலருக்கு ஃபோன் செய்ய போவதாகச் சொல்ல, வேகமாக வந்து ஏறிக் கொண்டாள்.
இதழ்கள் முணுமுணுத்துக் கொண்டே இருக்க, அதைச் சைடு மிரர் வழியே பார்த்து ரசித்துக் கொண்டு வந்தான் ரிஷி.
சில நிமிடங்களில் பைக் நின்று விட்டது. " போச்சி இன்னைக்கி வேல பாக்காம டிமிக்கி குடுத்ததுக்கு நாலு அத்தமார்களும் சுத்தி நின்னு என்ன கட்டம் கட்டி கேரம் போர்ட்டு காயின் மாறிச் சுத்தி சுத்தி அடிக்கப் போறாங்க. நம்ம ஹேன்ட் பேக்ல பஞ்சி இருந்தா காதுல வச்சிக்கலாம். " என இறங்காமலேயே தேட,
" ஹரிணி இறங்கு."
" பொறு பாவா. "
" ஹரிணி. "
"ஐய்யையோ. உன்னோட பெரிய ரோதனையா போச்சி. பொறுன்னு சொல்றே. " என்றபடி நிமிர்ந்தவள் தரனின் முகம் பார்க்க, அவன் இறங்கு என்பது போல் கண் சாடை செய்தான்.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் இவர்களுக்குத் திருமணம் முடிந்து. ஆனால் ஒரு நாள் கூட அவளை அவன் கோயிலுக்கு அழைத்துச் சென்றது இல்லை. முதல் முறை அழைத்து வந்திருக்கிறான். அதுவும் அவளின் பிரிய சிவன் கோயிலுக்கு.
" கோயிலுக்கா வந்திருக்கோம். சிவ சிவா. " எனக் கன்னம் தட்டியவளை பார்த்துக் கொண்டே தன் பைக்கை நிறுத்த, எங்கே தன்னை மட்டும் போ என்று விடுவானோ எனப் பயந்து,
" நீயும் எங்கூட சாமி கும்பிட வருவியா பாவா. " என ஏக்கமாக வந்தது குரல். புன்னகையுடன் அவளின் கரம்பற்றி அழைத்து வந்தவன், கோயிலில் முன் இருந்த பூக்கடையில் பூஜை சாமான்களுடன் சேர்த்து அவளுக்குத் தலையில் சூட்டிக் கொள்ள மூன்று முலம் மல்லிகையை வாங்க, அதை அவனே அவளின் தலையில் சூட்டியும் விட்டான்.
தன் கணவனின் கரம் கோர்த்து சன்னிதியில் கால் எடுத்து வைக்கும்போது அவளின் மனம் அனந்த தாண்டவம் ஆடியது. ஏனெனில் இறைவன் மீது நம்பிக்கை என்பது ரிஷிக்குக் கிடையாது என்று நன்கு தெரியும். விரும்பி அழைத்தால் கூட வேலையைக் காரணம் காட்டி வரமாட்டான். இல்லையேல் வேண்டா வெறுப்பாக வந்து நிற்பான்.
இன்று அவனே அழைத்து வந்ததோடு மட்டுமல்லாது உடன் வந்து கண் மூடிச் சாமி கும்பிட்டதோடு மட்டுமல்ல, மனைவியின் கரம் பற்றிக் கொண்டு பிரகாரத்தை சுற்றி வந்தவன், கோயில் குளத்தில் அமர்ந்து என அவளால் நம்ம முடியாத அனைத்தையும் செய்தான்.
" ஷ்... ஆ…. ஏன்டி கிள்ன. "
" நீ உண்மையா இல்ல காட்சி பிழையால வர்ற கற்பனை தோற்றமான்னு பாத்தேன் பாவா. " எனச் சிரிக்க, அவனும் அவளைக் கிள்ளி 'உண்மதான்' என்று கூறினான்.
"போலாம். " என்றவனிடம்
" கோயிலுக்குக் கூட்டீட்டு வந்தேங்கிறதுங்கால்லாம் நீ தர வேண்டிய முத்தத்த நா மறந்திடுவேன்னு தப்பு கணக்கு போடாத. எனக்கு வேண்டியது கிடைக்கிற வர நா விடமாட்டேன். பிடிவாதக்காரி நா. " என்க, அவனும் நக்கலாக ஒரு சிரிப்பைத் தந்து தங்களுக்கெனத் தனி உலகில் மிதந்தவர்களை இழுத்து வந்தது மலரின் தொ(ல்)லை பேசி அழைப்பு.
வரமாட்டேன் என்றவளை கெஞ்சி கொஞ்சி அவள் கேட்ட முத்தத்தைத் தந்தே வீட்டிற்கு அழைத்து வந்தான்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..