அத்தியாயம்: 48
மாலை வேளை.
உண்ட உணவு செரிக்க பெண்கள் வாசலில் விளையாண்டு கொண்டிருந்தனர். நொண்டி விளையாட்டு. பெரிதும் சிறிதுமாய் சில கட்டங்களைப் போட்டு, ஒரு கல்லை எடுத்து அந்தக் கட்டத்தில் வீசி, நொண்டி அடித்தபடியே அந்தக் கல்லை எடுத்து வர வேண்டும்.
"இந்தக் கேம்க்கு வேற ரூல்ஸ் எதுவும் இருக்கா. " நந்து.
" அப்படில்லாம் எதுவும் யாரும் எழுதி வைக்கல. நம்மலா வச்சிக்கிவோம். " எனக் கலத்தில் இறங்கச் சொன்னாள் இந்து.
அவளுடன் பவதா, பவி, லதா என நான்கு பெண்களுக்கு மத்தியில் ஒற்றை சிங்கமாய் நந்து நின்று விளையாடிக்கொண்டிருந்தான். இல்லை நொண்டி அடிக்க முயன்றுகொண்டிருந்தான். முடியவில்லை.
" ரூல்ஸ் இல்லாத கேம்ம எப்படி விளையாடுறது. தெளிவா சொல்லுங்க. கால தூக்கிட்டு தா நொண்டி அடிக்கனுமா. " நந்து.
" டேய் கால தூக்குனாத்தா அது நொண்டி. வாய் அதிகமா பேசாம கல்ல தூக்கி போட்டுட்டு நொண்டி அடிடா. " பவி.
" ஆமா, சீக்கிரம் விளையாடு இன்னும் கொஞ்ச நேரத்துல நா கிளம்பிடுவேன். அதுக்குள்ள ஒரு ஆட்டம் ஆடிட்டு போலாம்னு பாத்தா, கண்டதையும் பேசி டயம் வேஸ்ட் பண்ற. விளையாடு." பவதா.
இரவு பேருந்தில் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
" சித்தி நீங்கச் சொல்ற மாறில்லாம் என்னால விளையாட முடியாது. எனக்கு எப்படி தோனுதோ அப்படி தா நா விளையாடுவேன். " என்க.
" அப்ப நீ தனியா விளையாண்டுக்க. ப்போ. " என லதா துரத்தி விட, கோபமாக கல்லைத் தூக்கி போட்டு விட்டு ஜெனிபரின் அருகில் சென்று அமர்ந்தான் நந்து.
" இவங்க எல்லாரும் நல்லா விளையாடத் தெரிஞ்சவங்க அதுனால டக்கு டக்குன்னு விளையாடுறாங்க. நா புதுசு. மெதுவா தா விளையாடுவே. அத தப்புன்னு சொல்லிக் கத்துறாங்க அக்கா. " என ஜெனியிடம் முறையிட அவள் சிரித்தாள்.
ஜெனிபரையும் விளையாட அழைத்தனர் தான். ஆனால் அவர்களுடன் விளையாடுவதை விட அமைதியாக அமர்ந்து அவர்களின் விளையாட்டை ஓவியமாய் தீட்டுவது பிடித்திருந்தது. வரைந்து கொண்டு இருக்கிறாள் ஜெனி.
"சுத்தம். நமக்குச் சப்போர்ட் பண்ணி சண்டைக்கி போவாங்கன்னு பாத்தா. பஞ்சரான லாரியாட்டம் ஒரே இடத்துல இருக்காங்க. எங்க போலிஸ் ஐய்யா. இதோ இருக்காரு. ஸார் நீங்க போய்ச் சவுண்டு விட்டு எனக்குத் தகுந்த மாறி ஆட்டத்த ஆடச் சொல்றீங்களா. " என விக்னேஷை கேட்க, அவனும் அமைதியாக விளையாடும் தன் மனைவியின் முகத்தை விழிகளில் நிறைத்துக் கொண்டிருந்தான்.
" என்ன இவரு மெரினா பீச்ல இருக்குற சில மாறி உக்காந்திருக்காரு. ஒரு வேள கண்ண திறந்துட்டே தூங்குறாரோ. போலிஸ்ஸு. ஐய்யா போலிஸ்ஸைய்யா. " எனத் தட்ட அசையவில்லையே அவன்.
" அப்ப நமக்குன்னு விளையாட யாருமே இல்லையா. சரி. நமக்கு நாமேன்னு ஒரு திட்டம் போட்டு அத ஃபாலோ பண்ணுவோம். " எனச் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீதி உலா புறப்பட்டான். உலா முடிந்து வரும்போது ஹரிணியும் அந்தப் பெண்கள் கூட்டத்தை விட்டு ஜெனியின் அருகில் அமர்ந்து அவள் வரைந்த படத்தைப் பாராட்டிக் கொண்டு இருக்க,
"என்னா பம்கின்னு. உன்னையும் இந்த அழுகுனி ஆட்டத்துல சேத்துக்க மாட்டேன்னு சொல்லிடாங்களா. கவலப்படாத. எங்கூட வா. சைக்கிள் ஓட்டக் கத்து தாரேன். " என அழைக்க,
" டேய் யாரு அழுகுனி ஆட்டம் ஆடுறது. " என அவனுக்குப் பின்னால் இருந்து சத்தம் கேட்க, நந்து போலிஸ்ஸிடம் பாதுகாப்பு வேண்டிச் சரணடைந்தான்.
" சொல்லுடா. நீ தான கல்ல தூக்கிப் போட்டுட்டு போன. இப்ப நாங்க உன்ன சேக்கலான்னு சொல்ற. ம். " எனச் சுதாவும் பவியும், சண்டைக்கி வர, ஹரிணி நந்துவிற்கு ஆதரவாகப் பேசி அவனைக் காப்பாற்றி விட்டாள்.
" ரொம்ப நன்றி பம்கின். நீ மட்டும் இல்லனா. அந்த நாலு பேர் வாயிலையும் நூடுல்ஸ்ஸா மாறிருப்பேன். நன்றி. " என்றவனின் முகம் உயர்த்தி,
"நிஜம்மா நீ தா பேசுறீயா. இல்ல யாராது ரெக்கார்ட் பண்ணி வச்சத ஓட்டி விடுறியா. ஏன்னா உன்னோட வாய்ல இருந்து நன்றில்லாம் வருது. ம்... அந்த வார்த்த வராதே. கீழே விழுந்ததுட்டியா. அடி பட்டிருக்கா. அதுவும் தலைல. " என அவனை ஆராய்ந்து பார்க்க, நந்து முறைத்தான்.
" நன்றி. அந்த வார்த்தைய நீங்கத் தா எனக்குச் சொல்லணும். உங்களுக்குச் சைக்கிள் ஓட்டச் சொல்லித்தாரேன்னு சொன்ன ஒரு வார்த்தைக்காகத் தான எனக் காப்பாத்துனிங்க. இப்ப முடிவு பண்ணிட்டேன் நீங்கக் கடைசி வரைக்கும் சைக்கிள் ஓட்டத் தெரியாத தத்தியாவே இருங்க. " எனக் கோபமாக முகம் திருப்ப, ஹரிணி முழித்தபடி நின்றாள். 'என்ன வார்த்தை சொல்லிட்டான் இந்த வாண்டு.' என.
" அவெ சொன்னது நிஜம்மா. உனக்குச் சைக்கிள் ஓட்டத் தெரியாதா. " என்ற குரல் வந்தது அவளின் பின்னால் இருந்து. அது பவதா உடையது. இங்கு வந்ததிலிருந்து எப்போதெல்லாம் ஹரிணியின் இமேஜ் டேமேஜ் ஆகிறதோ அப்போதெல்லாம் அவளைக் கேலி செய்யச் சம்மன் இல்லாமல் ஆஜராகி விடுவாள் பவதா. அது தான் அவளின் பொழுதுப் போக்கு.
" ம்... ஆமாம்மா. இவளுக்குச் சைக்கிள் ஓட்டத் தெரியாது தா. இவா சைக்கிள்ள ஏறுனா இவா ஒரு பக்கம் கிடப்பா. சைக்கிள் ஒரு பக்கம் கிடக்கும். கூடவே முகம் தெரியாத இன்னொரு ஆளும் உயிர கைல பிடிச்சிட்டு கீழ விழுந்து கிடப்பான். நந்து சொன்ன மாறி இவா. " பவி
" சைக்கிள் ஓட்டத் தெரியாத தத்தி. " எனக் கோரஸ்ஸாக பாட, ஹரிணி மேல் மூச்சும் கீழ் மூச்சுமாக நந்துவை பார்த்தாள்.
" இந்த டயலாக்குக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல. என்ன ஏ சாந்த பார்வ பாக்கிறீங்க அத்த. " என்றவனின் தலையில் கொட்ட,
"விட்டுட்டு பம்கின். உன்னோட வருங்கால மருமகெ பாவம். " எனக் கத்திக் கொண்டே ஓடியவனை துரத்தினாள் அவள்.
"டேய் வித்தவுட்டு, ஓடுறியா நீ. இதோ வர்றேன்டா. " எனக் கத்திக் கொண்டே செல்ல, அவன் ஓடிப் போய் தன் மாமானின் கழுத்தை கட்டிக் கொண்டான்.
"மாமா, உங்க வைஃப் என்ன அடிக்க வர்றாங்க. " என்றபடி.
" பாவா அவன கீழ இறக்கி விடு. இல்ல இல்ல. அவன எங்கைல குடு. அதிகமா பேசுற அந்த வாய கல்லுல வச்சி மீன உரசுற மாறி உரசி எடுத்துடுறேன். "
"அதுக்கு முதல்ல மீன உரச தெரியணும். உங்களுக்குத் தா சமக்கட்டே எங்க இருக்குன்னு தெரியாதே. சமக்க, சைக்கிள் ஓட்ட மட்டும் இல்ல. எதுக்குமே நீங்க லாயக்கு இல்ல. " என மாமன் இருக்கும் தைரியத்தில் வாயாட, ரிஷி அவனை ஹரிணியின் பிடியில் சிக்காமல் சிரித்துக்கொண்டே நகர்ந்தான்.
"உங்கெண்ணனும் ஹரிணியும் போடுற சண்ட மாறிச் சுவாரசியமா இல்லன்னாலும். இதுவும் நல்லாத்தா இருக்கு. நமக்கு டயம் பாஸ் ஆகுது. " கௌதம்.
" ஆமாண்ணே அதுவும் சரிதா. வாண்ணே நாம போய் நம்மால முடிஞ்சத பண்ணி விடுவோம். " பிரகாஷ்.
"சரி விடு ஹரிணி அறியா பிள்ள தெரிஞ்சு உண்மைய அத்தன பேர் முன்னாடியும் சொல்லிடுச்சி. என்ன பண்ண. விட்டுடு. " கௌதம் சொல்ல ரிஷி சத்தமாகச் சிரித்தான். அது அவளைக் கோபமேற்ற,
" இது எல்லாம் காரணம் நீ குடுக்குற இடம். செல்லங்குடுத்து உந்தங்கச்சி மகன பேச விட்டு ரசிச்சிட்டு இருக்கல்ல. இங்க குடு அவன. குடு ரிஷி. " எனக் கத்த, நந்து கரம் நீட்டி ஸ்டாப் என்றான்.
"ஏன்டா டிராஃபிக் காஸ்டபுல் மாறி நடுவீட்டுக்குள்ள நின்னு கைய காட்டுற. " பிரகாஷ்.
"ஒன். டூ. " என எண்ண.
" எதற்கு நம்பர்ஸ் கவுண்ட் பண்ற. " கௌதம்.
" த்ரீ. " என்க.
" ஓ நோ. " என்றபடி ஹரிணி மாடிபடிக்கட்டில் கால் வைக்கவும், உள்ளிருந்து மலர் கரண்டியுடன் வரவும் சரியாக இருந்தது.
"இந்தாடி வாக்கப்பட்டு வந்த மருமகளே. இது தா நீ வீட்டுக்கு வர்ற நேரமா. உன்ன மாறிப் பொறுப்பான ஆளுட்ட பொறுப்ப குடுத்தா வெளங்குறன மாறி நா வீடு. இதுல தூணிக்கட தொறங்கப்போறாளாம். துணிக்கட. எங்க வீட்டுல இருந்தா வேல பாக்கணும்னு பயந்துட்டு காலங்காத்தாலயே புருஷெ பின்னாடி ஒட்டிக்கிட்டு ஊர் சுத்த போயாச்சி. ஆட்டிக்கிட்டு வார எல்லாம் முடிஞ்சதுக்கு அப்றம்.
அதென்னடி கட்டுன புருஷன பேர் சொல்லிக் கூப்பிடுற. நீ தா பேரு வச்சவ கணக்கா. எம்புள்ள யாரு. ஊருக்குள்ள அவனுக்கு என்ன மாறியான பேருன்னு தெரியாம. பேரு சொல்லிக் கூப்பிடுற. இன்னொரு மொற பேரு சொல்லி மரியாத இல்லாம கூப்பிட்ட கெண்டா காலு ரெண்டையும் ஒடச்சி எரிஞ்சிடுவேன் பாத்துக்க. " எனப் பொரிய.
"பூவத்த கூப்பிடுறதுக்கு தான பேரு. " என்றாள் சின்னக் குரலில்.
" அந்தப் பட்டணத்து பழக்கத்த எல்லாம் உங்க வீட்டுல வச்சிக்க. இல்லன்னா உங்க ரூம்குள்ள நாலு சுவத்துக்குள்ள வச்சிக்கணும். அது தாண்டி எம்புள்ளைய பேர் சொல்லி கூப்பிட்ட, கொன்னு புடுவேன் பாத்துக்க. என்ன டி பண்ண இவ்வளோ நேரமா. " என காதை திருகிக் கேட்க,
" உங்க புள்ள கூடத் தா இருந்தேன் பூவத்த. அவரு வேல பாக்குறப்ப அவருக்கு உதவியா இருந்தே அத்த. " என்றவளை நம்பாது பார்க்க,
" ப்ராமிஸ் பூவத்த. அவெங்க... ச்சீ. அவருருரு. கூடத்தா இருந்தேன். சொல்லுங்க பாவா. " என ரிஷியின் தோளை தட்ட, அவன் அசையவில்லை.
" ஏன் பாவா மானத்த வாங்குற ஏதாச்சும் சொல்லேன். எங்கூட தா கலத்துல வேல பாத்துட்டு இருந்தான்னு. சொல்லு. " என்க.
" சொல்லனும்னா என்ன சொல்ல. ம். ஒரு முத்தம் கேட்டு எம்பின்னாடியே எம்பொண்டாட்டி வந்தான்னா. இல்ல ஒரு தூக்கு சோத்தையும் ஒத்தையா முழுங்குனான்னா. " என்றவனை முறைக்க, மலரின் சத்தம் கேட்டது. உடனே கையில் சிறு காகிதத்தில் இருந்த பிரசாதத்தை எடுத்து மலரின் முன் நீட்டி.
" என்னடி இது. " என்றார் காட்டமான குரலில்.
" திருநீறு பூவத்த. "
" எனக்குக் கண்ணு தெரியாதுன்னு முடிவு பண்ணிட்டயாடி. " என்க. முதலில் ஆமாம் என்றவள் பின் இல்லை எனத் தலையசைத்து. 'உங்களுக்குத் தா பூவத்த கொண்டு வந்தே' எனச் சொல்லி ஐஸ் குடோனை அவரின் தலையில் வைக்க, அவர் உறைந்து விட்டார்.
' இவெ ஹெல்ப் பண்ணலன்னா என்ன. என்னோட பூவத்தய சமாளிக்க எனக்குத் தெரியாதாக்கும். ' என்பது போல் ரிஷிக்கு ஒரு பார்வையை கொடுத்துவிட்டு நிற்க, மலர் அவளைச் சமயலறைக்கு அழைத்துச் சென்றார் உணவுண்ண.
" பிள்ளத்தாச்சி பொண்ணு கண்ட இடத்துக்கும் அலையாம. நல்லத சாப்பிடணும்ல. " எனத் திட்டியபடியே தட்டில் உணவைப் போட்டு அவளுக்கு ஊட்டி விட்டார். மற்ற அத்தைமார் ஹரிணி மருமகளாகப் பார்த்தார்கள் என்றாள் மலர் மட்டும் அவளைத் தன் மகள்போல் தான் பார்த்தார். அன்னையிடம் போடாத சண்டையையா மாமியாரிடம் போட்டுவிடப் போகிறோம். அன்னை என்றால் அடுத்த நொடியே பேசிச் சமாதானம் செய்து விடலாம். மாமியாரிடம் அது முடியாது. மலர் அவளின் அன்னை. அவளைத் திட்டும் உரிமை கொண்டவர்.
மொட்டை மாடி.
நிலவு முழுதாக இல்லை என்றாலும் தன் பாதி உருவத்திலேயே என்னால் உங்களுக்கு ஒளி கொடுக்க முடியும், என்பது போல் நிலவெளிச்சம் மாடி முழுவதும் படர்ந்திருக்க, ரிஷி தரன் ஒரு தம்மை எடுத்துப் பற்ற வைத்தான்.
நன்கு ஆழ இழுத்து அதைவிட, நீண்ட புகையுடன் அது தூர சென்று மறைந்தது.
இப்போது தான் விக்னேஷையும் பவதாவையும் பஸ் ஏற்றி விட்டு வந்தான். அவன் மட்டுமல்ல குடும்பமே போய்ச் சாலை மறியல் செய்து பஸ்ஸில் ஏற்றி விட்டதோடு, பவதாவிற்கு அதிகம் தூக்கிப் போடாத ஜன்னால் சீட்டாய் பார்த்து இடம் பிடித்துத் தந்தனர். ஏற்கனவே உட்காந்திருந்தவரை அடித்துத் துரத்தி விட்டு அவளை அமரச் செய்தது நம் கலியபெருமாள் தான்.
அவருக்குத் தான் பவதா பார்கவியாகத் தெரிகிறாளே. அதான் தாய் வீட்டிற்கு வந்த பெண் கணவன் வீட்டிற்கு திரும்பும்போது புது புடவை, நகை, பழம் எனச் சீர் செய்து அனுப்பி வைத்தார்.
கையில் இரண்டு பெட்டிகளுடன் புறப்படுவதாக வீட்டாரிடம் சொல்லி ஆசி பெற, கலியபெருமாள் பவதாவின் கையில் பெரிய தாம்புலத்தட்டை நீட்டினார். விக்னேஷ் முழித்தான். அவர் காட்டும் இந்த அதீத அன்பு அவனுக்குச் சிறு கவலையைத் தந்தது. அவரின் மகளாகத் தன் மனைவியை நினைத்து இதைச் செய்கிறார் எனும்போது இதே ஏற்று கொள்ள நினைத்துப் பவதாவின் முகம் பார்க்க, அவளுக்கு எந்த ஃபீலிங்ஸும் இல்லாமல் தட்டை வாங்கிக் கொண்டாள்.
இந்தக் கூட்டு குடும்பத்தில் ஒருத்தியாய் ஏற்று அவர்கள் காட்டும் இந்த வெளந்தியான அன்பை பெற தான் கொடுத்து வைத்திருப்பதாக நினைத்தான் பவதா. அம்மா, அக்கா எனச் சிறிய குடும்பத்தில் வளர்ந்த அவளுக்கு இந்தப் பெரிய குடும்ப பிடித்திருந்தது. விட்டுச் செல்ல மனம் இல்லை தான். இன்னும் சில நாட்கள் இங்கு இருக்கலாம் தான். ஆனாலும் தன் இடம் விக்னேஷ் இல்லம் அல்லவா. அதான் விக்னேஷை வற்புறுத்தாது சிரித்த முகத்துடன் கிளம்பி விட்டாள்.
கலியபெருமாள் ஒரு பட்டுப் புடவையையும் பட்டு வேட்டி சட்டையையும் கௌதமிடம் கையில் கொடுத்து அண்ணனாகப் பவதாவின் கையில் தருமாறு கூற, அதை வாங்கிய கௌதம் ரிஷியின் கரத்தில் அதைக் கொடுத்தான்.
" நீயே உந்தங்கச்சிக்கி செய். " என்று, ரிஷி மறுக்கவில்லை. புன்னகையுடன் அதை வாங்கி பவதாவின் கரத்தில் தந்தவன் அவளின் தலை கை வைத்துத் தடவ, அது பவதாவிற்கு கண்ணீர் வரச் செய்தது. பத்து நாட்கள் கூட முடிந்திருக்காது. ரிஷியை நேரில் பார்த்துப் பழகி, ஆனாலும் அவளுள் அண்ணனாக நிலைத்து நின்று விட்டான்.
"அடிக்கடி வந்து கரைய
மோதும் அலைய போல ஆன
உன்ன நானும் பிரியும் போதும்
வத்தி தானே போவ
விழியோரம் உருளுது நீரு
இது அன்பால் வளர்ந்த காடு
இது எல்லாம் வெலகுற நேரம்
நீ ஒருத்தன் மட்டும் போதும். "
ஹரிணி பவதாவிற்காகச் சுட்சுவேஷன் ஷாங் பாட,
"எல்லாத்துக்கும் ஒத்த தாயி
தந்தான் சாமி
சாவும் மட்டும் நீதான் எனக்கு
ரெண்டாம் தாயி. ப்தர் எசப்பாட்டு பாடுறது. அப்பதா எங்க வீட்டு பிள்ளை ஃபில்ம் வரும். " எனக் கௌதம் கேலி செய்ய, இத பாத்துட்டு பிரகாஷ் சும்மா இப்பானா. அவனும் சேர்ந்து கொள்ள எனப் பவதாவை புன்னகையுடனும் ஆரவாரத்துடனும் வழியனுப்பி வைத்தனர். பஸ் எறியமர்ந்தவள்,
" போய்ட்டு வர்றேண்ணா. " எனக் கண்ணீருடன் சொல்ல,
" அடுத்த முற எங்க பவதாவ வக்கீலா இந்த வீட்டுக்கு வரவேற்போம். தைரியமா நீ நின்று வாதாடுறத கோர்டுக்கு வந்து பாக்க ஆசப் படுறோம். " என்ற ரிஷியின் பேச்சு பவதாவிற்கு சிறந்த வக்கீலாக மாறும் தன்னம்பிக்கையை தந்தது.
ஒரு வழியாக இருவரையும் வழி அனுப்பி விட்டு வந்தவனுக்கு சிறு ஏக்கம். இன்னேரம் பார்கவி உயிருடன் இருந்திருந்தால் என்ற நினைப்பு வந்து ஏக்கத்தைத் தந்தது. அதான் புகைக்க ஆரம்பித்து விட்டான், மொட்டை மாடியில்.
" புகைபிடிப்பது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு. புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடான செயல். புற்று நோய் ஆஸ்துமா போன்ற பயங்கர நோயைப் பரிசாய் தரும். " என்றபடி வந்து அவனின் அருகில் நின்று கொண்டான் கௌதம்.
இந்த ஏழு நாட்கள் அவர்களுக்குள்ளும் இருந்த விரிசல் சிமெண்ட் கொண்டு பூசப்பட்டு மீண்டும் விரிசல் இப்போதைக்கு விழுந்திடாதபடி பாதுக்காப்பாய் மாறி உள்ளது. நட்பாய், சகோதரத்துவத்துடன் பேசத் தொடங்கி இருந்தனர். இருவருமே தங்களின் பதின்ம வயது நட்பைத் தொடரத்தானே விரும்பினர்.
" ம்ச்... வேற டயலாக் இருந்தா சொல்லு. இது தியேட்டர்ல படம் போடுறதுக்கு முன்னாடி ஸ்கிரீன் வரும். " ரிஷி.
" ம்... அதுவும் சரிதா. கதையையே எண்டு கார்டு போட்டு முடிக்கிற நேரத்துல ஓப்பனிங் சீன்ல வர்றத சொல்லக் கூடாது. ஆனாலும் புகை நமக்குப் பகை ப்ரதர். " எனச் சொல்லி அவன் கையில் இருந்ததை பிடுங்கி எறித்தான் கௌதம். அவனை ரிஷி முறைக்க..
" புகைத்து வாழ்வது உடலுக்குக் கேடு. பகைத்து வாழ்வது உறவுக்குக் கேடு. இதெப்படி. ம்… உனக்காகவே யோசிச்சிருக்கேன். " என்க, ரிஷி தன் பாக்கெட்டில் இருந்த மற்றொன்றை எடுத்துப் பற்ற வைத்தான். அதையும் பிடிக்கி எறித்தான் கௌதம்.
" ம்ச்... "
" நா தம்மடிக்க ஆரம்பிக்கும்போது இப்படி தா பண்ணுவா உன்னோட கிட். பிடுங்கி பிடுங்கி கீழ போடுவா. இல்லன்னா பத்த வச்சி அவ வாயில ஊத ஆரம்பிச்சுடுவா. அவளாலேயே நா எல்லாத்தையும் விட்டுட்டேன். மை ஏஞ்சல். வரம் குடுக்குற ஏஞ்சல். " என்க, ரிஷி அடுத்ததை பற்ற வைக்க.
" உனக்கெல்லாம் வாய்ல சொன்னா பத்தாது. குடுடா அத. " என பறிக்கப் போக,
" இது என்னோட லாஸ்ட் தம். அமைதியா இருந்தா ஒன்னோட முடிச்சிக்குவேன். இல்லன்னா இது முழுசையும் நீ பிடுங்கி எறிய வேண்டி வரும். " என இரு பாக்கெட்டுகளை காட்ட, கௌதம் அமைதியாக நின்றான்.
' அதா தொற சொல்ட்டாருல்ல. ஒன்னு தான்னு. நானும் பாக்குறேன். ' எனச் சுவற்றில் சாய்ந்து நிற்க, ரிஷி நிதானமாக அந்த ஒன்றை அடித்து முடித்தவன், அனைத்து பாக்கெட்டையும் அங்கிருந்த தொட்டிச் செடியில் போட்டுப் புதைத்தான்.
" விவசாயி புகையில செடி வளக்குறாருய்யா. ஆமா நீ எப்ப இருந்து இந்தக் கருமத்த அடிக்க ஆரம்பிச்ச?. " .
" நீ எப்ப கஞ்சா அடிக்க ஆரம்பிச்சியோ அப்ப. " என நக்கலாகப் பதில் கூறினான்.
"அதெல்லாத்தையும் விட்டுடோம்ல. இப்ப எதுக்கு கண்டதையும் கிளருற."
"நாங்களும் விட்டுட்டோம்ல. " என அவனைப் போலவே பேச, கௌதமிற்கு சிரிப்பு வந்தது. ரிஷியும் சேர்ந்து கொள்ள,
'என்ன இவனுங்க ரெண்டு பேரும் ராசி ஆகிட்டானுங்களான்னு உங்களுக்குச் சந்தேகம் வரும். அந்தச் சந்தேகத்தோட தா சுத்திட்டு இருக்கா ஹரிணி. மூணு கொல பண்ணவும் கோந்து போட்ட மாறி ஒட்டிக்கிறானுங்களே எப்படி. '
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..