அத்தியாயம்: 50
நள்ளிரவு நேரம். மணி பன்னிரெண்டை கடந்து சென்று விட்டது. ஊரே நிசப்தமாக இருந்தது. ஆவிகள் உலாவும் நேரம் அல்லவா. அதான் யாரும் வெளியே வரவில்லை. அதுமட்டுமல்ல இப்போது நாம் இருப்பது விக்ரம் ஊரில் இருக்கும் டேம்மின் அடிவாரம். பல சச்சரவுகளைத் தாண்டி ஒரு சில வருடங்களாகத் தண்ணீர் முறையாகச் சேர்த்து வைக்கப்பட்டு பாசனத்திற்கு உதவியாக இருக்கிறது.
அங்கே ஆவிகளை விட பாவிகளாகத் திரியும் மூன்று உருவம் கண்ணில் பட்டது, முகமூடி கொள்ளையர்களைப் போல் முகத்தில் கவசம், கையில் சில பல நெகிழிப் பைகள், கயிறுக் கத்திகள் சகிதமாக அந்த உருவம் குத்த வைத்து என்னமோ செய்து கொண்டிருந்தது. யாருக்கும் தன் முகத்தைக் காட்டி விடக் கூடாது என்பதற்காக முகமூடி அணியவில்லை. குளிர் அதான் மங்கி குள்ளா போட்டிருக்கின்றனர். மூவரும் அந்த டேமில் என்ன செய்கிறார்கள்.
'ஏப்பா திருடவா வந்திருக்கிங்க. திருடுறது தா திருடுறிங்க. ஒரு பேங்க். ஒரு கோயிலு. ஒரு பங்களா வீடுன்னு உள்ள புகுந்து ஆட்டைய போடாம. டேம் பக்கத்துல உக்காந்து என்னத்த செஞ்சிட்டு இருக்கிங்க. அதுவும் குத்த வச்சிட்டு. டேய் இடத்த அசிங்கப்படுத்த வந்திருக்கிங்களா. இல்ல… பேரிச்சம்பழம் வாங்கித் திங்க பழைய இரும்பு கம்பி கிடைக்கிதான்னு பாக்க வந்திருப்பாங்களா. அங்க எதுவும் இருக்காதே. எல்லாத்தையும் அப்பவே விஜய பாண்டிங்கிற ஒருத்தேன் எடுத்துட்டு போய்க் காய்லாங்க கடைல போட்டுடான். உங்களுக்கு ஒன்னும் கிடைக்காது… என்று சொன்னாலும் அவர்கள் செல்வதாக இல்லை. சரி. அப்படி என்ன தா பண்ணிட்டு இருக்கானுங்கன்னு பக்கத்துல போய்ப் பாத்தா. பாம் மு..’
" அட பாம்லா இல்லைங்க. நூல் சுத்துன அணுகுண்டு. லெட்சுமி வெடி. இது குருவி வெடி. எல்லாம் பட்டாசு ங்க. " விக்ரம்.
" ஏன்டா அத்தன வர்ஷம் போராடி கஷ்டப்பட்டு இந்த டேமுக்கு தண்ணிய கொண்டு வந்து ஊத்துனா. அசால்ட்டா வெடிகுண்டு போட்டு உடைக்க பாக்குற. இத்தன குண்ட இது மேல வச்சி வெடிச்சா ஓட்ட விழுந்துடாது. " விஜய்.
" அந்தச் சந்தேகம் எனக்கும் இருக்கு. ஆனா நம்ம கூடவே ஒரு இன்ஜினியர வச்சிருகோம்ல. அவரு பாத்துப்பாரு. என்ன மச்சான் சரியா. " என மூன்றாம் ஆளைக் கேட்க, அவன் தன் குல்லாவை கலட்டி பதில் சொன்னான்.
" ஏன்டா லூசு மாறிப் பேசி உயிர வாங்குறிங்க. அதுவும் இந்த அர்த்த ராத்திரில. இது வெறும் பட்டாசு தான்டா. ராக்கெட்ட மட்டும் தா டேம் பக்கத்துல வச்சி வெடிக்க போறோம். அதுவும் பத்த வச்சா மேல போய்த்தா வெடிக்கும். மத்த எல்லாம் ரோட்டுல தா டேம விட்டுத் தூரமா போய்த்தா வெடிக்க போறோம். கண்டதையும் பேசமா வேலய பாருங்டா. " என நொந்து போன குரலில் சம்பத் பேச, மற்ற இருவரும். 'யாரு பெத்த புள்ளையோ. வாக்கப்பட்டு வந்த வீட்டுல இப்படி கஷ்டப்படுது.' என்பது போல் பார்த்தனர்.
' என்னப்பா சம்பத்து. நீ எதுக்கு இவனுக்களோட கூட்டாளியா மாறுன. எப்ப நடந்தது கூட்டணி. '
" ஒரே ஒரு க்ளோஸ் ஃப்ரெண்ட் வச்சிருக்கிறவனையும், ஊரெல்லாம் ஃப்ரெண்டா வச்சிருக்கிறவனையும், எனக்கு ஃப்ரெண்டாவும் தங்கச்சி புருஷனாவும் ஆனதுனால வந்த வினை இது. "
"மச்சான் புரியுற மாறிப் பேசு. படிக்கிறவங்க கொலம்புவாங்கல்ல. " விக்ரம்.
" இது யாரு வேலன்னு. நாங்க சொல்லன்னாலும் உன்னோட ஃப்ரெண்டு தரன பத்தி தெரியாதாக்கும். அந்த இம்சை அரசனால நம்ம மூணு பேருக்கும் இந்த நிலம. ச்ச... கூடப்பிறந்த அண்ணெங்கிறதுக்காக அவெ ஃப்ரெண்டுக்கெல்லாம் வேல பாக்க வேண்டி இருக்கு. " விஜய்.
" என்னங்கடா, சொன்ன வேலய முடிக்காம வாய் பேசிட்டு இருக்கிங்க. என்ன முடிஞ்சதா. மாப்ள, ராக்கெட்ட சரியான இடத்துல வச்சிட்டியா. பத்த வச்சா எல்லாம் ஒரே நேரத்துல மேல போய் வெடிக்கும்ல. " எனச் சந்தேகம் கேட்டபடி வந்தான் ரிஷி தரன்.
" வெடிக்கும் வெடிக்கும். அப்படி வெடிக்கும்போது அது மேல ஏறி உக்காந்துக்க. நாங்க நிம்மதியா இருப்போம். " விஜய் கடுப்புடன் பேச,
"மாப்ள அந்த வெல்லமண்டிக்காரெ ஃபோன் நம்பர் உனக்குத் தெரியும்ல. நா அனுப்புற வீடியோவ ஃபார்வேர்டு பண்ணி விடு. பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு புது மாப்பிள்ளையோட பவுசு தெரியட்டும். " என்க, விஜய் தரனை முறைத்துக் கொண்டே வேறிடம் பார்த்துச் சென்றான்.
' விஜய்க்கு அடுத்த மாசம் கல்யாணம். பொண்ணு பாத்து பேசி முடிச்சது ரிஷிதரன் தான். ரிஷியின் பேச்சிற்கு மதிப்பு குடுத்து தான் தன் பெண்ணை விஜய்க்கு தருவதாகப் பெண்ணின் தகப்பன் சொல்லிட்டு போயிருக்காரு. அதான் திருமணம் முடியும் வரை ரிஷியின் பேச்சைக் கேட்க வேண்டிய சூழ்நிலை விஜய்க்கு. '
" என்ன ஒரு கொல வெறிப் பார்வ. ஏன்டா உந்தம்பி மட்டும் என்ன முறைச்சிட்டே திரியுறான். நானும் அவனுக்கு நல்லது தா செய்றேன். ஆனாலும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறான். நீ கொஞ்சம் சொல்லேன். " என விக்ரமை பார்த்துச் சொல்ல, விக்ரம் தரனை ஏற இறங்க பார்த்தான்.
" அப்படி என்னப்பா நல்லது செஞ்சிட்ட, எந்தம்பி உங்கிட்ட பயபக்தியோட நடந்துக்க. " விக்ரம், தம்பியை விட்டுக் கொடுக்காமல்.
" ம்ச்… அடுத்த மாசம் நடக்க போற உந்தம்பி கல்யாணத்துக்கு காரணம் யாரு. " சம்பத்.
" யாரு. "
" இவெந்தான… எ மச்சாந்தான… முப்பது வயசாகப்போற உந்தம்பிக்காகப் பொண்ணு வீட்டுல பேசி, வேல வெட்டிப் பாக்காத உந்தம்பியோட அரும பெருமைய எல்லாம் விளக்கிச் சொல்லி வெல்லமண்டி சுந்தரம் கிட்ட யாரு பொண்ணு கேட்டு பேசுனா மச்சான்… நம்ம மச்சான். " சம்பத்.
" இத்தன வர்ஷமா அவெ கல்யாணம் ஆகாம சுத்துனதுக்கும் காரணம் இவெந்தா. வர்ற ஒன்னு ரெண்டு பேரும் ஊருக்குள்ள விசாரிச்சி, எந்தம்பி இவெங்கையால அடிவாங்குன கதைய கேட்டுடுட்டு திரும்பிப் பாக்காம போய்றானுங்க. அதுனால அடிச்ச அவனே பொண்ணு பாத்து முடிக்கிறான். அது தப்பில்ல. அத பெருமையா பேசுற பாரு. இது தா தப்பு. " விக்ரம்.
" சரி அலுத்துக்காத மச்சான். எல்லாம் நா சொன்ன மாறித் தயார் தான. " எனக் கேட்க.
" எல்லாம் தயார் தா மாப்ள. ஆனா எனக்கு ஒன்னு மட்டும் புரியல. எதுக்காக இந்த ஏற்பாடுன்னு." சம்பத்.
"ஒரு சர்ப்ரைஸ் ஹரிக்கி குடுக்கலாம்னு தோனுச்சி. " என்றவனின் முகத்தில் மென்மையான புன்னகை வந்தது.
" என்ன எழவு சர்ப்ரைஸ்ஸோ. " விஜய் முறைக்க அவனின் தலையில் தட்டினான் விக்ரம்.
" ஏய் ஒன்னத்துக்கும் ஆகாத உன்னோட ஃப்ரெண்டுக்காகக் கூடப்பிறந்தவனயே அடிக்கிறேல்ல நீ. கல்யாணம் முடியையும் மொத வேலயா சொத்த பிரிச்சிட்டு தனிக்குடுத்தனம் போணும். " என்ற தம்பியைக் கவனியாது.
"ஹேய், சர்ப்ரைஸ்னு சொல்லவும் தா நியாபகம் வருது. மச்சான், ஹப்பி பெர்த் டே மச்சான். உனக்கும் அவனுக்கும் இன்னைக்கி தான பிறந்த நாளு. " எனத் தரனை அணைத்துக் கொள்ள, சம்பத் முழித்தான். ஏனெனில் இதுவரை பிறந்த நாள் என்ற ஒன்றை ரிஷி கொண்டாடியதே இல்ல. ஏன் அந்த தினத்தைப் பற்றி பேசக் கூட மாட்டான். அதனால் சம்பத்திற்கு ரிஷியின் பிறந்த நாள் தெரியாது. இப்போது கௌதமிற்காக ஏற்பாடு செய்துள்ளான்.
" பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சான். ஏன்டா சொல்லவே இல்ல.. " என உரிமையுடன் சம்பத் கோபித்துக் கொள்ள, அவனிடம் இதுவரை நாங்க சேர்ந்து கொண்டாடிய பிறந்த நாள் கதைகளைக் கூறினான்.
" கொண்டாட நினைச்சது சரித்தா. ஆனா எல்லாரும் பன்னெண்டு மணிக்கி தான அத கொண்டாடுவாங்க. மணி அத தாண்டிடுச்சே. அப்ப எப்படி சர்ப்ரைஸ் தருவ. எப்ப தருவ. " விஜய்.
" டேய் பன்னெண்டு மணிக்கி எதுக்கு டா கொண்டாடணும். எத்தன மணிக்கி பிறந்தோமோ அப்ப தா கொண்டாடணும். அது தா சுவாரசியமா இருக்கும். " ரிஷி.
"அதுனால. " மூவரும் சேர்ந்து கேக்க,
" சரியா ஒன்னு பதினெட்டுக்கு ஹரி பிறந்தான். அப்ப அவன இங்க வரவச்சி இதெல்லாத்தையும் வெடிச்சி கொண்டாடலாம். "
" அதுவரைக்கும். " சம்பத்.
" பேசிட்டு இருப்போம்." என்ற ரிஷியை முறைக்க மட்டும் தான் முடிந்தது.
" சரி கரெக்ட் டயத்துக்கு கௌதம இங்க யாரு போய்க் கூட்டீட்டு வருவா. " விஜய்.
"அவனா வருவான். " என்றவன் அதற்கும் ஏற்பாடு செய்திருந்தான்.
சிறுவயதில் உடன் இருந்தவரை மகிழ்ச்சியுடன் கொண்டாடியது இல்லை இருவரின் பிறந்தநாளையும். ஆனால் ஹாஸ்டலில் வைத்து விமர்சையாகக் கொண்டாடுவர். அதுவும் நள்ளிரவு ஒன்று பதினெட்டுக்கு. எந்தக் கிழமையாக இருந்தாலும் ஹாஸ்டலுக்கு வந்துவிடுவான் தரன். அவனின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்து உறங்கிக் கொண்டிருக்கும் கௌதமை பயங்காட்டி எழுப்பி, காட்டிற்குள் அழைத்துச் செல்வான். பட்டாசு வெடித்து தான் கொண்டாடுவர், இருவரின் பிறந்த நாளையும்.
ஏன்டா பிறந்த நாள் தான. அத ஏ பட்டாசு வெடிச்சி கொண்டாடணும்னு. கேக் தான வெட்டணும்னு உங்களுக்குத் தோனலாம். அதுக்கு ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்கு. ஃப்ளாஷ் பேக்கு உள்ள ஃப்ளாஷ்பேக்கான்னு நீங்கக் காண்டாகுறது புரியுது. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க.
தீபாவளி சமயத்தில் மூர்த்தி இருவருக்கும் தனியே தனியே கவர் போட்டுப் பட்டாசுகளை தருவார். ரிஷிக்கி தன் தந்தை வாங்கி தந்ததை கௌதம் வெடிப்பது பிடிக்காது. எனவே அவனின் பங்கு பட்டாசில் தண்ணீரை ஊற்றி விட்டு வெடிக்க விடாமல் செய்வான். அதுமட்டுமல்ல தன்னுடையதை கௌதமின் கண்முன் அவனுக்கு ஆசை காட்டி வெடிப்பதில் சிறு சந்தோஷம். அந்தக் குணம் வளர்ந்த பின் மறைந்தது. அதன் பின் கௌதம் ஹாஸ்டலுக்கு சென்று பகிர்ந்து கொள்ளுதல் என்ற பண்பை ரிஷி வளர்த்துக் கொண்டான்.
நள்ளிரவில் கண் முழித்து நடமாடும் வார்டனை பயங்காட்டி ஏமாற்றி கௌதமை அவர்கள் வழக்கம்போல் சந்திக்கும் அருவி கரைக்கு அழைத்து வருவான். பின் வானில் ராக்கெட்டுகளை இருவரும் சேர்ந்து வெடிப்பர். ஒரே நிறத்தில் ஆடை அணிந்து, கேக் வெட்டி, வெட்டிய கேக்கை முகத்தில் தடவி, ஹாஸ்டல் திரும்பும் வழி முழுவதும் சிறு சிறு வெடிகளைக் கையால் பிடித்து எரறிந்தபடி நடப்பர். மீசை முளைக்கும் வயதில் பியர் பாட்டிலுடனும் ஒரு பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
"உனக்கு எப்படிடா இது கிடைச்சது. " கௌதம்.
"சொன்னா என்ன செய்யப்போற. காசா தரப்போற. இல்லல்ல அப்றம் எதுக்கு உனக்கு. " ரிஷி.
"பட் இது தப்பில்ல. " கௌதம்.
"தப்பு தா. பட் எப்படி இருக்கும்னு ட்ரெய் பண்ணிப்பாக்கலாம்ல. " என்று முதல் முறை வாங்கி வந்து, அதன் சுவை பிடிக்காமல் கீழே ஊற்றி. வாந்தி எடுத்து என அவர்களின் அட்டகாசம் அதிகமாக இருந்தது… அந்த நள்ளிரவு கொண்டாட்டத்தை இருவரும் இத்தனை நாட்களாக மிஸ் செய்தனர்.
இப்போதும் அதைத் தான் செய்யப் போகிறான். ரிஷிக்கு உதவி செய்ய அங்குப் பிரகாஷ் உள்ளான். ஏதேதோ காரணங்களைச் சொல்லி கௌதமை மொட்டை மாடியில் உறங்க அழைத்த பிரகாஷ். கௌதம் உறங்கியதும் ரிஷியிடம் சென்று விட்டான். இப்போது தனித்து உறங்கிக்கொண்டிருந்த கௌதமை சரியாக ஒன்று பதினெட்டு மணிக்கி எழுப்ப ஆங்காங்கே மாடியில் அலாரம் செட் செய்து வைத்த கடிகாரத்தை மறைத்து வைத்திருந்தான். அது தன் வேலையைச் செய்ததால் கௌதம் உறக்கம் கலைந்து எழ வைத்தான் ரிஷி.
மணி ஒன்னு பதினெட்டு. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனின் காதுகளைக் கிழிக்கும் வண்ணம் ஓசை கேட்க, விரைத்து எழுந்தான் கௌதம். எழுந்ததும் கண்கள் அந்த இருளில் தம்பி தேட, அவன் கிடைக்கவில்லை. ' இவன நம்பி வந்தேபாரு. ச்ச. ' என எழுந்து தன் அறைக்குத் திரும்ப, அறையின் வாசலில் ஒரு கிஃப்ட் ஃபாக்ஸ் இருந்தது. தேதியையும் மணியையும் பார்த்தவன், ஆவலாக அந்தப் பாக்ஸை ஓப்பன் செய்ய, அரண்டு விட்டான் கௌதம்.
ஏனெனில் அந்தப் பெட்டியில் ஸ்பிரிங் என்று சொல்லப்படும் திருகு சுருளில் ஜோக்கர் என்ற கோமாளியின் உருவத்தை அடைத்து வைத்திருந்தான் ரிஷி. ஃபாக்ஸ்ஸை திறந்த கௌதமின் முகத்தில் வந்து அடித்தது அந்தக் கோமாளி. அதன் சிரித்த முகத்தை பார்த்துக் கடுப்பானவன்,
"இது அவெ வேலையாத்தா இருக்கும். இடியட்… கிஃப்ட் வச்சிருக்கான் பாரு கேணத்தனமா. இந்த மாறிக் கோணல யோசிக்க அவனால மட்டும் தா முடியுது. ச்ச. " எனத் தன் அறையைத் திறக்கப்போக, சில நொடிகள் மௌனித்தான்.
"கிஃப்ட் கைக்கு வந்ததுக்கு அப்றம் நாங்க எங்க போவோம். ம். " எனத் தங்களின் கடந்த காலத்தை நினைத்தபடி, அறைக்குள் செல்லாமல் டேமை நோக்கித் தன் பைக்கை எடுத்து வந்தான் கௌதம்.
வந்து நின்ற அவனை வானில் வானவேடிக்கைகளுடன் வரவேற்றான் ரிஷி.
" ஹப்பி பெர்த் டே ண்ணா" என ஆர்ப்பரித்துக் கத்திய பிரகாஷின் குரல் அந்த இருளில் எதிரொலித்தது. ரிஷி கையில் கவருடன் வந்து கௌதமிற்காகப் புதிய உடையை நீட்டினான்.
" பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷி. " என்றவனுக்கு கண்ணீர் துளித்தது.
" Wish you the same. இது உனக்கு. " என இருவரும் உடைமாற்றி வந்து வாங்கி வந்த கேக்கை வெட்ட, பிரகாஷும் சம்பத்தும் அதை இருவரின் முகத்தில் தடவி அந்த இடத்தைக் கலவரமாக்கினர்.
கௌதம் ரிஷியின் கையில் ஒரு கிஃப்ட்டை கொடுத்தான். அதைத் தன் வண்டியின் முன் பக்கம் வைத்திருந்தான்.
"என்ன ஹரி இது. "
" உனக்குத் தா. இத குடுக்க நா கிட்டத்தட்ட பத்துவர்ஷத்துக்கு மேல காத்திருந்திருக்கேன். " என்றவனை விசித்திரமாகப் பார்த்தபடி கவரை பிரிக்க அதில் இருந்தது புல்லாங்குழல். அதைக் கௌதம் தன் கையால் மூங்கில் மரத்தை வைத்து செய்துள்ளான். ரிஷிக்கு இசை என்றால் பிடிக்கும். ரிஷியை வெறுப்பேற்ற என அவன் வாங்கி வைக்கும் டிரம்ஸ், புல்லாங்குழல், மவுத்தார்கன், விளையாட்டு கீபோர்ட், இவை அனைத்தையும் கௌதம் போட்டு உடைத்து விட்டுவான். ரிஷியுடன் பழக ஆரம்பித்த நாளிலிருந்து இந்தப் புல்லாங்குழலை தானே தன் கைகளால் செய்து அவனுக்குப் பரிசளித்தான். மனம் புளகாங்கிதம் அடைய கௌதமை அணைத்து கொண்டான் ரிஷி.
நள்ளிரவை வெளிச்சமாக்கியது அவர்கள் பற்ற வைத்த ராக்கெட்.
" வானவேடிக்க நல்லா இருந்தது ரிஷி. ரொம்ப நாளுக்கு அப்றம் இதெல்லாத்தையும் நாம சேந்து அனுபவிக்கிறோம். தேங்க்ஸ். எல்லாத்துக்கும். "
"க்கும்… பத்த வச்சி வெடிக்கிறது நாங்க. ஆனா பேரு மட்டும் இவனுக்கு. என்ன கொடுமட இது. " விஜய்.
" அதான. " பிரகாஷ்.
" இப்ப என்ன உன்னையும் வந்து கட்டி பிடிக்கச் சொல்லவா. டேய் மச்சான் உந்தம்பிக்கும் கட்டிபிடி வைத்தியம் பண்ணுவியாம். காஞ்சி போய்க் கெடக்கான். " எனச் சம்பத் குரல் கொடுக்க, கௌதம் பிரகாஷை வந்தணைத்தான்.
இதுவரை இருவர் மட்டுமே கொண்டாடிய நிகழ்வு இன்று புதிய நண்பர்களுடனும் உறவுடனும் சேர்ந்து கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருந்தது கௌதமிற்கு.
" எல்லாம் முடிஞ்சிச்சா. நா போலாமா. " சடைத்துக் கொண்டே விஜய் கேட்க,
" என்னடா அவசரம் அதா விடியப் போது. இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்தும் நம்ம தோப்புக்கு போய்க் கிணத்துல ஒரு குளியல போட்டுட்டு போவோம். " விக்ரம்.
" உங்கூட வந்ததுக்கு கிணத்து தண்ணிதா கிடைக்கும்னு இலைமறை காய் மறைவா சொல்றியாக்கும். " விஜய்.
" வேறென்ன வேணும் உனக்கு. " சம்பத்.
" மச்சான் ஸார். ஒரு துண்டு கேக்க வயித்துக்குள்ள இறக்கவா விஜய் இவ்ளோ நேரம் நின்று பனில வேல பாத்தான். வேற ஏதாவது சூடா கிடைச்சா விஜய் சந்தோஷமா இருப்பான். அவங்கூட நானும் ஹப்பியா இருக்குலாம். ஹாட்டா எதாவது கூல்டிரிங்க்ஸ் இருக்கா. " எனப் பிரகாஷ் கேட்க,
"டேய் நாங்க உனக்கு அண்ணென்டா. நாங்களே உனக்குச் சரக்கு வாங்கி குடுத்து கெட்ட பழக்கத்த பழக்குனோம்னா வீட்டுல இருக்குறவங்க என்ன சொல்வாங்க. இந்த ஊரு தா என்ன சொல்லும். " கௌதம்.
" என்ன வேணும்னாலும் சொல்லிட்டு போட்டும். அத பத்தி நாளைக்கி கவல பட்டுக்கலாம். இப்ப சரக்கு வேணும். " பிரகாஷ்
" இன்னேரம் வெயின் ஷாப் மூடிருக்குமே டா. எப்படி சரக்கு கிடைக்கும். "
" அது எங்க பிரச்சன இல்ல. சரக்கு இருக்கா இல்லையா. எங்களுக்கு வேணும். எங்க தொண்டைய சரக்கால தா நாங்க நனைப்போம். என்னடா சொல்ற." விஜய் பிரகாஷை பார்த்துக் கேக்க, அவனும் விஜய்க்கு துபாம் போட்டான்.
" அதெல்லாம் கிடையாது. வந்த வழியிலேயே திரும்பி வீட்டப் போய்ச் சேருங்க. " விக்ரம்.
இருவரும் முணுமுணுத்தபடி திருப்பி நடக்க, ரிஷி அவர்களைத் தடுத்தான். சரக்கு கிடைக்க போகும் ஆவலில் திரும்ப, ரிஷி தூரத்தில் நிறுத்தி வைத்திருந்த தன் பைக்கை எடுத்து வரச் சொன்னான்.
" இப்ப அத எதுக்கு எடுத்துட்டுவரணும். நா சும்மா நின்னுடக் கூடாதே. விரட்டி விட்டுட்டே இருப்பான்.… ச்ச. " விஜய் சொல்ல.
"எங்கண்ணே சொன்னா அதுல ஐநூறு அர்த்தம் இருக்கும். நா போய் எடுத்துட்டு வர்றேன்ணே. " பிரகாஷ் சென்றான்.
"பைக்கோட சைடுல ஒரு பேக் இருக்கு அத எடுத்துட்டு வா. " எனத் தன் அண்ணன் சொன்ன பேக்கில் கை வைக்க,
"விஜி பாட்டில் விஜி. அதுவும் சரக்கு பாட்டில். " கத்தினான் பிரகாஷ்.
" இன்னேரம் கட இருக்காதே நம்மல காய விட்டுடுவானோன்னு பயத்துட்டேன். பரவாயில்ல நீ கூட நல்லவெந்தா. " என விஜய் ரிஷியின் தோளில் தட்டிவிட்டு பேக்கில் கை வைத்தான்.
அதில் எண்ணி வைத்தது போல் இரண்டே இரண்டு பாட்டில்கள் மட்டுமே இருந்தன. அடித்துப் பிடித்து அதைக் காலி செய்து, பெட்ரோல் போட்ட வண்டியை ஓட்டாது. உருட்டிய படியே போதையில் வீடு வர,ஹரிணி கோபமாக நின்றிருந்தாள்.
இவர்களை வரவேற்க தான். அவள் மட்டுமல்ல. அங்கிருந்த ஆண்களின் மனைவிமார்கள் அனைவரும் நின்றிருந்தனர். கையில் ஆளுக்கொரு கட்டையுடன்.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..