அத்தியாயம்: 6
டம........டம......... டம..........
டம ....... டம....... டம........
அதாகப் பட்டது என்னன்னா....
ஊருக்குள்ள நம்ம சேனையம்மன் கோவில்ல திருவிழா வருது...
வர்ர ஞாயித்துக் கிழம கொடியேத்தி...
அன்னைல இருந்த இருபத்தி ஓரு நாள்ல திருவிழாங்கோகோஓஓஓஓஓ...
தீச் சட்டி எடுக்குறவங்க..
விரதம் எடுக்குறவங்க..
முளைப்பாரி எடுக்குறவங்க..
எல்லாரும் வந்து காப்பு காட்டிக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ள படுறாங்கோ..
ஊருக்குள்ள எல்லாரும்..
சுத்தபத்தம இருந்து..
சண்ட சச்சரவு ஏதும் இல்லாமல்...
இந்த திருவிழாவ நடத்தி தருமாறு விழா கமிட்டி சார்பாக கேட்டுக் கொள்ளப் படுதுங்கோஓஓஓஓ…
என தண்டோரா அடித்த படியே வீதி வீதியாக சென்று அந்த கிராமத்தில் திருவிழா வருவதை ஊர் மக்களுக்குத் தெரிவித்தார் அந்த மனிதன்..
அவர் கடந்து சென்ற வழியில் இருந்தது அந்த அழகிய வீடு.. சுற்றி ஐந்தடி உயரத்திற்கு மதில் எழுப்பி பாதுகாக்கப் பட்டிருந்தது அந்த பழமை மாறா கட்டிடம்.. அதன் உள்ளே சென்றால் வலதுபுறம் வாகனங்கள் நிறுத்தும் இடம்.. அதில் ஸ்கார்பியோ கார்கள் , ஓபென் மாடல் ஜீப் மற்றும் சில இரு சக்கர வாகனங்கள் பெரிய செட்டில் நிறுத்தி வைக்க பட்டு இருந்தது..
இடதுபுறம் சிறிய தானியக் கிடங்கு போன்று இருந்தது.. மூட்டைகளும் டிராக்டர் வண்டிகளும் வரிசையாக அங்கு கிடத்தி வைக்கப் பட்டிருந்தது..
அகன்ற திண்னைகள் கொண்ட வீட்டின் நுழைவு வாயிலின் கதவுகளிலும் தூண்களிலும் இருந்த வேலைப்பாடு மிகவும் அழகாக இருந்தது.. வீட்டின் நடுவில் சூரிய ஒளி படுமாறு முற்றமும் அதில் சிறு துளசிச் செடியும் அணையா தீபம் ஒன்றும் ஏற்றப்பட்டு இருந்தது.. சமையல் அறை , பூஜையறை, படுக்கையறை என ஒரு கூட்டுக்குடும்பம் வாழ அனைத்து அம்சங்களும் நிறைந்த ஒரு அரண்மனை என்று செல்லலாம்..
வாசலில் ஊரின் முக்கியத் தலைவர்கள் அங்கு வந்திருந்தனர் திருவிழா பற்றி ஆலோசிக்க.. திண்ணையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்த வண்ணம் தங்களுக்குள் பேசி கொண்டு இருந்தவர்கள் சட்டென அமைதியானார்கள்.. காரணம் அங்கு வெள்ளை வேட்டி சட்டையுடன் கம்பீரமாக நடந்து வந்தார் சிவநாதன் ஐயா.. அனைவரையும் வரவேற்று உபசரித்தவர், திருவிழா குறித்த அவர்களின் உரையாடலில் கலந்துகொண்டார்..
" ஐயா இந்த மேளதாளம் , கரகாட்டம், ஒயிலாட்டம் இருபத்தி நாலு மணி நேரமும் அன்னதானம்.. இப்படி திருவிழாவுக்கு தேவையானதை எல்லாத்தையும் ஏற்பாடு செஞ்சாச்சுங்கையா.." ஒருவர்
" அப்புறம்.." நாதன்..
" ஆனா இந்த தோரண கட்டுற பசங்களத்தான் இன்னும் முடிவு பண்ணல.. அப்புறம் இந்த இருபத்தி ஒரு நாளும் ஊருக்குள்ள சாராயம் விக்கக் கூடாதுன்னு சொல்லியாச்சு.." மற்றவர்..
" நல்ல விசயம் தான்.. ஆனா வெளி ஊருல இருந்து வாங்கிட்டு வந்தா என்ன பண்றது ?. எல்லாத்தையும் கொஞ்சம் கட்டுப்பாட்டோட இருக்கச் சொல்லுங்க.. விக்கிறவன விட வாங்கி குடிக்கிக்கிறவனுக்கு தா புத்தி இல்லன்னு சொல்வேன்.." நாதன்..
"சரிதாம்பா.. பெருசுங்கள கூட சமாளிச்சுடலாம் போல இந்த இளசுங்க தொள்ள தாங்க முடிலப்பா.. இவனுங்கள அடக்க நம்ம தம்பியால் மட்டும் தான் முடியும்.. அதான் தரன் பாத்து இவனுங்கள சமாளிக்க சொல்லலாம்னு வந்திருக்கோம்.." மற்றவர்..
இவர்களின் உரையாடலுக்கு இடையில் ஒரு சலங்கை ஒலி குறுக்கிட அனைவரின் கவனமும் அங்கே சென்றது.. கையில் தண்ணீர் செம்பும் முகத்தில் பொலிவுடன் வந்தார் சிவநாதன் ஐயாவின் மனைவி
மலர்மங்கை.. சிரித்த முகத்துடன் அனைவரையும் வரவேற்று..
" நல்லா இருக்குறீங்களா ? திருவிழா வேலை எல்லாம் நல்லா போகுதா? ." என சம்பிரதாயமாக பேசிச் சென்றார்.
உள்ளே வந்தவர் தன் நகங்களுக்கு பாலிஷ் போட்டுக் கொண்டிடுந்த யுவதியிடம்.. " ஏய் உன்னைய நா என்ன பண்ணச் சொன்னேன்.. அத முடிச்சுட்டியா ? " என கடிய..
" அத்த நா நீங்க சொன்ன எல்லாஆஆ..... வேலையையும் முடிச்சுட்டேன்.. இப்பத்தா உக்காந்தேன்.. ஒரு பத்து நிமிஷம் சும்மா இருக்க விடுறீங்களா.. அத பண்ணு இத பண்ணுணு.. ச்ச.... ச்ச... " பெண்.. அவள் பெயர் இந்துமதி கிருஷ்ணம்மாளின் மகள்..
" நீ பண்ணுற வேலை எல்லாத்தையும் பச்சக் குழந்த கூட பண்ணிடும்.. ரொம்பத்தா அலுத்துக்கிற.. போ போய் சமயக்கட்டுல காபி போட்டு வைச்சுருக்கேன்.. வந்தவங்களுக்கு குடுத்துட்டு உன்னோட அத்தான கூட்டியா போ.." என்க..
அத்தான் என்ற உடன் முகம் மலர , அத்தை சொன்னதைச் செய்ய ஓடினாள்.. தன் அத்தானை அழைக்க மாடிப்படி ஏறும் நேரம் டிவியில் எம்ஜிஆர் பாடல் காதுகளை கிழிக்கும் அளவுக்குக் கேட்டது..
' யாருடா அது ' என்ற ரீதியில் திரும்பிப் பார்த்தாள்.. அங்கு ஊஞ்சலில் அமர்ந்தபடியே திரையில் தெரிந்த தன் மனம் கவர் நாயகனின் பாடலை கத்தி பாடிய படியே ரசித்துக் கொண்டு இருந்தார் நாச்சியம்மாள்..
அதோ அந்தபறவை போல வாழவேண்டும் இதோ இந்தஅலைகள் போல ஆடவேண்டும்........
ஒரே வானிலே...........
ஒரே மண்ணிலே..........
ஒரே வானிலே........
ஒரே மண்ணிலே.......
ஒரே கீதம் உரிமை கீதம்பாடுவோம்..........
" காலம் போன காலத்துல இதுக்கு வாழ வேண்டுமாம்ல… இதெல்லாம் இத்தன வயசுக்கு அப்றம் இருந்து என்ன செய்யப் போது.. " என சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே நாச்சியாரின் குரல் மீண்டும் கேட்க.
"ஐய்யோ இந்த கிழவி தொள்ள தாங்க முடியலையே யப்பாஆஆ...." என்க..
" இன்னும் நீ இங்க தான் இருக்குறியா.. உங்கிட்ட போய் சொன்னேன் பாரு என்னைச் சொல்லனும்.. " மலர் சமயலறையில் இருந்து குரல் கொடுத்தார்..
" ம்க்கும்.. இவுக சொன்னதும் என்னத் தவிர வேற யாரு செய்வா.. போய் அவுங்க பேரன்ட்ட ஏதாவது செய்யச் சொல்லுங்க.. உடனே அவுக மருமக வந்து கழுத்து மேலே நின்னு டான்ஸ் ஆடிடுவா.. இவங்க செல்றத செய்ற என்னையப் பாத்தா இவங்களுக்கு எப்படித்தான் தெரியுமோ.." என முணுமுணுத்து கொண்டே மாடி ஏறினாள்..
" ஏய் லூசு... ஏ இப்படி உனக்கு நீயே பேசீட்டுவர்ற.. அத்தான்ட்ட என்ன விசயம்னு சொல்லு பட்டுன்னு சரி பண்ணிடுறேன்.. " பிரகாஷ்.. சிவநாதனின் இரண்டாவது மகன்.. அதா வக்கீலுங்க..
" மரியாதையா போய்டு இல்லைன்னா.. "
" என்னவாம்... இல்லைன்னா என்னவாம்.. போ டி.. " என்றவனை முறைத்தவள்..
" என்ன டி போட்டு பேசாத..”
"பேசுன என்ன பண்ணுவ.. "
" வேணாம் டா.. நா சீரியஸ்ஸா சொல்றேன்.."
“நா வேண்ணா ஆம்புலன்ஸ்க்கு கால் பண்றேன்.. சீரியஸ் தா இருக்கியாம்ல..”
“ம்ச்.. நா மாமாட்ட உன்ன போட்டுக் குடுத்துடுவேன்.. "
" சொல்லித்தா பாரு.. அவரு என்னத்த பண்ணுவாருன்னு பாக்க நானும் ஆவலாத்தா இருக்கேன்.. " என்றவனை இதழ் திறந்து சத்தம் வெளியே வராது முணுமுணுக்க..
" என்ன மறுபடியும் உனக்கு நீயே பேசிக்கிறாயா.. இப்படியே பேசீட்டு ஊருக்குள்ள சுத்தீட்டு இருந்தா உன்ன நாய் புடிக்குற வண்டி ஏத்தி விட்டு பைத்தியக்கார ஆஸ்பத்திரில சேந்து விட்டுட்டு போக்கிட்டே இருப்பேன்.. ஜாக்கிரதையா இருந்துக்க.. "
" ஓஓஓ.. அப்படியா சங்கதி.. நீ எப்படி உன்னோட அரியர கிளியர் பண்ணுறன்னு நா பாக்குறேன்.. என்னைய தேவை இல்லாம பகச்சுக்கிட்டேல.. எப்படி உங்கைக்கு டிகிரி வருதுன்னு பாக்குறேன்.. " என்க. பயந்து விட்டான் போலும்..
" ஐய்யே.. இந்து நா விளையாட்டு சொன்னேன் டா.. எனக்கு இருக்குற ஒரே அத்த மக நீ, உன்னைய விட்டா எனக்கு யாரு இருக்கா.. உன்னோட பூந் தோட்டத்துக்கு என்ன உதவி பண்ணனுமோ அத அத்தான் ஃப்ரீயா செஞ்சு தாறேன்.. தண்ணீ ஊத்தனுமா.. இல்ல காஞ்ச இலய பொறக்கி போடனுமா.. எல்லாத்தையும் நா பாத்துக்கிறேன்.. கொஞ்சம் அந்த பரீட்சைக்கு மட்டும்.. ம்..ம்...ம். ஓகே டீல்.." சரணடைந்தான்.. ஏனெனில் அவள் தான் அவனின் டியூஷன் டீச்சர்..
" விட்டா கால விழுந்துடுவ போலேயே.. சரி சரி வா நா அத்தான கூப்பிட வந்தேன்.. " என அவள் முன்னேறிச் நடக்க..
" ஒரு டிகிரி வாங்குறதுக்கு இந்த சில்வண்டு கூடல்லாம் கூட்டுச் சேர வேண்டி இருக்கு.. ஆமா இப்ப என்ன சொன்னா அத்தானா அப்ப நா யாராம் இவளுக்கு.." என புலம்பிய படியே தன் அண்ணனைக் காணச்சென்றான்.
கதவை தட்டியவளுக்கு ' இதோ வாரேன் இந்து.. ' என்ற குரல் மட்டுமே கேட்டது..
" அண்ணா வர நேரமாகுமே.. "
" ம்ம் அப்படித்தான் போல.. பிரகாசு.."
" அது என்னடி கட்டிக்கப் போறவன பேர் சொல்லி மரியாத இல்லாம பேசுற.. ஒழுங்கா அத்தான்னு கூப்பிடு.. ஏன்டா நீயாவது சொல்ல மாட்டியா.. கேனச்சி மாறி பேச்சிட்டு இருக்கா.. பாத்திட்டு இருக்க... " என மகளை வசை பாடினார் கிருஷ்ணம்மாள்..
எதிர்த்து எதுவும் பேசாது முகம் சுருங்கி அங்கிருந்து சென்றாள் இந்து.. கீழே நாச்சியம்மாள் பேத்தியை பார்த்து.. " என்னடி இன்னைக்கு கோட்டா முடிஞ்சுசா இல்ல இன்னும் இருக்கா.." என கேலியாக கேட்க..
" அதெல்லாம் முடிஞ்சுருச்சு.. " என்றாள் சோகமாக..
" தெனோவும் நடக்குறது தான.. இதுக்கும் போய் மூஞ்சிய எட்டூருக்கு தூக்கி வச்சுருக்க.. "
" உங்க மக தான.. நீங்க கேக்க மாட்டீங்களா.. ஏ எம்பேத்திய தெனோமும் திட்டுறன்னு.. "
"அம்மியும் குழவியும் ஆகாசத்தில் பறக்கும்போது எச்சில் இலை எனக்கு என்ன கதி.. "
" ஏ அப்பத்தா நீ பெத்த புள்ளைங்கள்ல அத்த மட்டும் ஒரு தனிப் பிறவியாக இருக்காங்களே.. அது ஏ.. " பின்னாலேயே வந்த பிரகாஷ்..
" அப்படி என்னத்த பண்ணீட்டா எங்க அக்கா.." கவியரசன்..
" வா சித்தப்பு.. உன்னத்தா தேடீட்டு இருந்தேன்.. இவ்வளவு சீக்கிரமா எழுந்திரிக்க மாட்டியே.. என்ன திடீர்னு வந்து ஷாக் குடுக்குற.. "
" அட நீ வேற அத ஏன்டா கேக்குற ?". சலிப்பாக
" டேய் சின்னவனே காபி தண்ணீ ஏதாவது குடிச்சியா இல்ல வெறு வயித்துல தான் இருக்கியா?.. " தாயாய் அக்கறையுடன் கேட்டார்..
" இல்லம்மா.. இனிமே தா.."
" இல்லயா.. உன்னைய கவனிக்குறத விட அவளுக்கு என்ன வெட்டி முறிக்குற வேல இருக்கு.. எங்கடா அவ. " என மருமகளைத் தேட..
அவரின் மனைவியோ இவர்களை எல்லாம் முறைத்த படியே தொழுவத்திற்கு சென்றார்..
" அத்தையோட இந்த பார்வைக்கு என்ன அர்த்தம் பிரகாசு.." இந்து.
"ம்.. இவருக்கு காப்பி தண்ணீ குடுக்குறத விட.. மாட்டுக்கு தண்ணீ காட்டுறதே மேல்னு அர்த்தம்.. மாட்ட விட கீழ இறங்கிட்டாரு.." பிரகாஷ் என கண்சிமிட்டினான்..
" டேய் சும்மா இருக்க மாட்டிங்களாடா.." கவியரசன்..
அவர்கள் இருவரும் ஹைஃபை கொடுத்து கொண்டனர்..
" எதுவும் சண்ட போட்டிங்களாடா.. அவா முகமே சரி இல்ல.. என்ன ஆச்சு.. " நாச்சியம்மாள்..
" ஒன்னுமில்லம்மா... அது..." என ஆரம்பிக்கும் போது படியில் ஆள் இறங்கி வரும் ஆரவாரம் கேட்டு அமைதியாகினர்..
தன் கரும்பச்சை வண்ண முழுக்கை சட்டையை முழங்கைகளுக்கு மேலே மடித்து விட்டபடியே வந்தான் ரிஷி தரன்.. மூர்த்தியின் மகன்.. வேட்டி சட்டையில் பாந்தமாக இருந்த அவன் உடலே சொல்லியது அவன் ஒரு அக்மார்க் விவசாயி என்று..
" அப்பத்தா சாப்பிட்டாச்சா ? .." என்றான் அக்கறையுடன்..
" இல்லய்யா நீ இல்லாம நா என்னைக்கு சாப்பிட்டேன்.. வந்தவங்கள பாத்துட்டு வாப்பு எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்.."
" ம்ம் சரி அப்பத்தா.. என்ன சித்தப்பா பெரியவள அந்த ஸ்கூல்லே சேத்துடலாம்ல.. அப்ளிகேசன் ஃப்ரம் நா வாங்கிட்டேன்.. திருவிழா முடியவும் அங்க போய் படிக்கட்டும்.. "
" எனக்கு அது பிடிக்கலப்பா.. பொம்பளப்புள்ள அத போய் பத்து கிலோமீட்டர் தொலவுலயா சேக்குறது... இங்கையே படிக்கட்டும் பா.."
அழகிய புன்சிரிப்பு பூத்தவன்.. " அதேதா நானும் சொல்றேன் சித்தப்பா.. பொம்பளப்பிள்ள அதுக்கு தைரியம் வரனும்.. ஒருத்தியத்தான் வீட்ட விட்டு வெளியவே அனுப்பாம வளத்துட்டோம்.. அடுத்த புள்ளைங்களையாவது துணிச்சலா, எல்லாத்தையும் சமாளிக்குற மாறி வளக்க வேண்டாமா.. அதுக்கு பசங்களும் பொண்டுகளும் சேந்து படிக்கிற பள்ளிக்கூடத்துல படிச்சா தான் சரியா வரும்.. "
" என்ன இருந்தாலும் அவ்வளவு தூரம்.. பசங்க கூட..." இழுத்தார் மனமில்லாமல்..
" ஏன் தங்கச்சிய நானே பத்திரமா கூட்டிட்டு போய் கூட்டிட்டு வருவேன்.. நம்புங்க சித்தப்பா.."
" என்னைக்கு பா ஃப்ரம் குடுக்கனும்.. நா கையெழுத்து போட்டுத் தாறேன்.." என சம்மதத்தை மறைமுகமாகச் சொன்னார் அவர்..
" தரனு வெளிய ஆளுக ரொம்ப நேரம் காத்துட்டு இருக்காகைய்யா.. " மலர்..
" இதோ பெரிம்மா.. " என இந்துவையும் பிரகாஷையும் பாத்து தலையசைத்து விட்டுச் சென்றான் தரன்..
அசையாது இருந்த பிரகாஷை உழுக்கி " டேய் என்னடா அத்தான அப்படிப் பாக்குற.. விட்டா கடிச்சு சாப்பிடுவ போலயே.. " இந்து..
" செம ஸ்மார்ட் டா இருக்காருல அண்ணே.. நா பாம்பே போய் பெண்ணா மாறப்போறேன்.. மாறிட்டு.." என கைகளை பிசைந்தவாறு ஒரு மார்க்கமாக நிற்க..
" அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா ஆகிடுவாளா.. போடா போக்கெத்தவனே.. " என்றபடி நாச்சியம்மாள் உள்ளே சென்றார்..
புரியாமல் நின்ற இளையவர்களிடம்.. " நீ பொம்பளையா மாறுனாளும் உனக்கு அவன் அண்ணன் டா.." என்றார் கவியரசன்..
" ஐய்யோ.. மண்ட மேல இருக்குற கொண்டைய மறந்துட்டியேடா பிரகாஷு..." என இந்து சிரிக்க..
" ச்சீ இவ்ளோ தான.. நாங்கூட அத்தைக்கு தான்... " என கிருஷ்ணம்மாள் முகத்தில் மீசை வந்தது போல் கற்பனை செய்ய..
" சித்தப்பு வைல்ட் அனிமல்..." என கத்தவும் கிருஷ்ணம்மாள் வரவும் சரியாக இருந்தது..
" இன்னும் என்னடா வெட்டிப் பேச்சு.. சங்கத்த உடனே கலைங்கடா.... " என்பது போல் பிரிந்து சென்றனர்..
கிருஷ்ணம்மாள் வரும்போது கனகவள்ளி சமையலறையில் இருந்து தட்டு நிறைய உணவுடன் சத்தியமூர்த்தியின் அறைக்குச் சென்று கொண்டிருந்தார்.. அங்கு நடக்கும் எதற்கு சம்மந்தம் இல்லை என்பது போல் இருந்தது அது..
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..