அத்தியாயம்: 7
படுக்கை அறைக்குள் நுழைந்த கார்த்திகேயனின் மனம் யோசனையில் இருந்தது. ருத்ரதேவ்வின் இந்த வருகைக்குப் பின் எதாவது காரணம் இருக்குமோ என்பது தான் அது. ஊர் விட்டு ஊர் வந்து உயிர் வாழத் தொழில் நடத்துபவர்கள் தினமும் சந்திக்கும் பிரச்சினைகள் ஆயிரம் ஆயிரம். அனைத்தையும் சமாளித்து வந்தால் முன்னேற்றம் உறுதி. அதற்கு ஓர் உதாரணம் தான் கார்த்திகேயன்.
ஆறு மாத குழந்தையாக வாசவியை கையில் ஏந்திக் கொண்டு மனைவியுடன் விமானம் ஏறி வந்தவன் அவன். எத்தனை அவமானங்கள், எத்தனை உதாசினங்கள், எத்தனை ஏமாற்றங்கள் என எத்தனை எத்தனையோ பார்த்து விட்டான். பயம் என்பதெல்லாம் கிடையாது. எது வந்தாலும் தட்டி தூக்கி போட்டு விட்டுச் சென்று விடும் அளவுக்கு மன தைரியம் உண்டு.
இப்போதும் ருத்ரதேவ் என்ன செய்வான் என்று தானே யோசிக்கிறானே தவிர அவனைக் கண்டு பயந்து அல்ல. என்ன வேண்டுமாலும் செய்யட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ற உறுதியுடன் படுக்கையில் படுக்க, ஜோஹிதா வந்தாள்.
" கார்த்திக் எனக்கு என்னமோ பயமா இருக்கு." என்றாள் அவள்.
"ஏ ஜோஹிதா?. "
" அந்தச் சிவ்ராம் குடும்பத்த நினைச்சி. " என்க, அவன் அழகாய் ஒரு புன்னகை சிந்தினான்.
" மிஸ்ஸஸ் பீட்டர் சொன்னாங்க. அவரோட ஹோட்டல்ல எழுதி வாங்க அந்தக் குடும்பம் செஞ்சத. கடைசியா கன் ஃபயர்லாம் ஆகிடுச்சின்னு. " என்றவள் அவனின் அருகில் அமரும் முன் கதவைத் திறந்து கொண்டு வாசு ஓடி வந்து கார்த்திக்கின் அருகில் படுத்துக் கொண்டாள்.
"ரொம்ப நேரம் ஆச்சி சீக்கிரம் தூங்கணும். " என்றபடி தந்தையின் அருகில் படுக்க,
"ஏய் குட்டி பிசாசு. உனக்குன்னு ஒரு ரூம் இருக்குல்ல. அங்க போகாம எதுக்கு இங்க வந்த. " என்றாள் ஜோஹிதா.
"அங்க பயம்மா இருக்கு ஜோஹிம்மா. இங்கன்னா நீ இருப்ப. கார்த்திப்பா இருப்பாரு. " என்றவள் கார்த்திக்கின் வலது பக்கம் சென்று அவனை அணைத்தபடி படுத்துக் கொண்டாள்.
" பயம்மா!. உனக்கா?. அந்தக் கதையெல்லாம் எங்கிட்ட விடாத. பயமாம்ல பயம். நா பயப்பட மாட்டேன்ம்மா சொல்லி அடம்பிடிச்சி பத்து வயசுலேயே தனி ரூம் வாங்கிகிட்ட. ஆனா ஒரு நாள் கூட அதுல தனியா தூங்குனது இல்ல. அப்றம் எதுக்கு டி உனக்குத் தனி ரூம். "
"என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் தனி ரூம்ல தா தூங்குறேன்னு சொல்லிப் பெரும பேசுவாங்க. அதா நமக்கும் ஒன்னு வேணும்னு சொல்லித் தனி ரூம் வாங்கி கிட்டேன். பட் அதுல தூங்க எனக்குப் பிடிக்கல. நா கார்த்திப்பா பக்கத்துல தா தூங்குவேன். உங்களுக்கு எதுவும் கஷ்டமா கார்த்திப்பா. " எனத் தந்தையை பார்த்துக் கேட்க, அவன் இல்லை எனத் தலையசைத்து மகளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
"கஷ்டம் அவனுக்கு இல்ல. எனக்குத் தா. எரும வயசாகுது. இன்னும் அப்பா கூட தா தூங்குவேன்னு சொல்ற. நாளைக்கி கல்யாணம் ஆனா என்னடி பண்ணுவ. உன்ன வளத்த எங்கள கொற சொல்லமாட்டாங்க. " எனச் சண்டைக்கி நின்றாள் ஜோஹிதா.
" மாட்டாங்க. ஏன்னா என்ன வளக்குறது கார்த்திப்பா. அப்றம் கல்யாணம். நடக்கும்போது பாத்துக்கலாம் ஜோஹி. " என ராகம் பாட, ஜோஹிதா அவளை முறைத்தாள்.
"நா ஒன்னும் முழுசா உங்க புருஷன எடுத்துக்க மாட்டேன். நா வலது பக்கம் நீங்க இடது பக்கம். எதுக்கு நமக்குள்ள சண்ட. இது நம்ம கார்த்திப்பா ஜோஹி. ஈக்குவெல்லா பங்கு பிரிச்சிக்கிவோம். " என்றவள் தாய்க்கு இடம் கொடுத்தாள்.
"உன்னோட இடத்த நா பிடிக்கமாட்டேன். என்னோட இடத்துக்கு நீ வரக் கூடாது. டீல் ஓகேவா. " என சொல்லித் தன் தந்தையை அணைத்தபடி உறங்கிக் போனாள் பெண்.
அவளின் பேச்சைக் கேட்ட ஜோஹிதாவிற்கு எதுவோ ஒன்று தோன்ற, தலையணையை எடுத்துக் கொண்டு செல்ல இருந்தவளை கார்த்திகேயன் தடுத்தான்.
"அவ சின்னப் பொண்ணு ஜோஹிதா. அவா சொல்றத பெருசா எடுத்துட்டு போய்க் கோயிச்சிக்கிற. வா. " என்க ஜோஹிதா படுத்தது கொண்டாள். கார்த்திக்கை நெருங்கி அல்ல. படுக்கையின் ஓரத்தில், கணவனைப் பார்த்தபடி. கார்த்திகேயன் மகளைத் தட்டி கொடுத்தபடி உறங்கி விட்டான்.
இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள். ஒரே வயதினரும் கூட. இருபத்தி மூன்று வயது இருக்கும் அவர்களுக்குத் திருமணம் முடிந்தபோது. வாசு பிறக்கும்போது இருபத்தி நான்கு தான் இருக்கும். அப்போதே அமெரிக்காவிற்கு வந்து விட்டனர். இருபது ஆண்டுகள் முடிந்து விட்டது அமெரிக்கவாசியாக மாறி. முதலில் ஒரு நட்சத்திர விடுதியில் வேலை பார்த்த கார்த்திக், பின் இந்த ஊரில் சொந்தமாகக் கடை வைத்து நடத்தும் அளவுக்கு உயர்ந்து விட்டான்.
இந்த நாற்பத்தி நான்கு வயதில் பொறுப்புள்ள தாய் தந்தையாக இருக்கின்றனர். கார்த்திகேயன் தான் எல்லாம் ஜோஹிதாவிற்கு மட்டுமல்ல, வாசுக்கும் எல்லாம் அவன் தான். மகளிடம் அவன் தந்தை போல் என்றும் நடந்து கொண்டதே இல்லை. தோழனாய் தான் பழகுவான். பார்ப்பவர்கள் பெரும்பாலும் கார்த்திக்கை வாசுவின் அண்ணன் என்று தான் சொல்வர்.
ஆனால் ஜோஹிதாவிற்கும் வாசுவிற்கும் உள்ள உறவு வெறும் அன்னை மகள் என்று மட்டுமல்லாது, ஜோஹிதாவிற்கு மாமியார், நாத்தனார், சில நேரம் மல்லுக்கு நிற்கும் மருமகளும் அவள் தான். இருவரும் இருக்கும் இடம் அது வாக்குவாதம் நிறைந்த இடமாகத் தான் இருக்கும்.
" என்னம்மா தங்கச்சி!. எம்மருமக இன்னும் ஜாக்கிங்க முடிச்சிட்டு வரலயா?. மணி எட்டாகப்போதே!. இதுக்கப்றம் குளிச்சி, சாப்டு, கிளம்பி பட்டம் வாங்க போக வேண்டாமா. " என்றபடி வந்தார் முருகானந்தம். கார்த்திக்கின் தோழன்.
" வரலண்ணா. இன்னேரம் எந்த ரோட்டுல நின்னு ஆடிட்டு இருக்காளோ. வர வர அவா பண்ற சேட்டைக்கி அளவே இல்ல. எல்லாம் நீங்களும் கார்த்திக்கும் குடுக்குற இடம். அதா அந்த வாயாடிச் சொன்ன பேச்ச கேக்காம சுத்துறா. " என மகளை ஜோஹிதா திட்டியபடியே, முருகனுக்கு காஃபி கலந்தாள்.
"பிள்ளைய ஏம்மா திட்டுற. அது சின்னப் பொண்ணு. இந்த வயசுல தாம்மா எந்தக் கவலையும் இல்லாம நிம்மதியா இருக்க முடியும். அப்றம் வேல குடும்பம் குழந்தன்னு பொறுப்பு வந்துடுச்சின்னா கவலையும் சேந்து வந்திடும். "
"நா எத பத்தி சொல்றேன்னு உங்களுக்கு நல்லா தெரியும். சமாளிக்காதிங்க. நீங்களும் நேத்து அவ கூடத் தா இருந்திங்க. " என காட்டமாகக் கேட்க,
"அது... அது... அந்தப் பையந்தாம்மா வம்பு பண்ணான். " என மலுப்ப, அவரின் மனைவி உஷா வந்தார்.
" வம்பு பண்ணா கை நீட்டிடுறதா. காலைலயே வந்து அந்தப் பையனோட அம்மா சண்ட போட்டுட்டு போது. ஆம்பளப்பசங்களோ இல்ல பொம்பளப்பிள்ளையோ யார் வம்பிழுத்தா என்ன? இவா பேசாட்டிக்கி வந்திட வேண்டியது தான. ஆம்பளப்பையன மூக்கு வாய் வீங்குற அளவுக்கு அடிச்சிக்கா. அத மனசுல வச்சிட்டு நாளைக்கி இவா தனியா இருக்கும்போது எதாவது பண்ணிட்டான்னா!. காலம் கெட்டு கடக்கு. நம்ம ஊருக்குள்ள நிறை சைக்கோ கொலகாரனுங்க சுத்துறதா மேயர் நேத்து தா சொன்னாரு. அவளுக்கு எதுக்கு தேவையில்லாத வம்பு. " என உஷாவும் ஜோஹிதாக்கு ஆதரவாகப் பேச,
"ம்மா... வாசுவ எதுவும் சொல்லாத ம்மா. அந்த மேத்யூ தா வந்து வந்து வாசுவ தொந்தரவு பண்ணான். நாங்களும் எத்தன நாள் தா பொறுக்குறது. அதுமட்டுமல்லாம அவெ நேத்து நம்ம கட வாசல்ல அவனோட ஃப்ரெண்டுகள கூட்டீட்டு வந்து பிரச்சன பண்ணான். அதா வாசு அடிச்சா. அதுல என்ன தப்பு இருக்கு. " என்றான் உஷாவின் பதினைந்து வயது மகன். அஸ்வின்.
" அடிங்க!. வாய மூடுடா. ஜோஹிதா நா சொல்றேன்னு தப்ப எடுத்துக்காத. நாம வளக்குறது பொம்பளப்பிள்ள. அதுக்கு எது ஒன்னுன்னாலும் நம்மளால தாங்கிக்க முடியாது. அதுனால அதட்டி ஒடுக்கி வள. பொம்பளப்பிள்ளைக்கி எதுக்கு கராத்தே. நேத்து பாத்தேன் நம்ம பார்க்ல புட் பால் விளையாண்டுட்டு இருக்கா. இப்ப கூட ஜாக்கிங் போகச் சொன்னா டான்ஸ் ஆடிட்டே போறா. இதுக்கு கார்த்திக்கும் சப்போட்டு. " என வாசுவை பற்றி மிகப் பெரிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார் உஷா.
உஷா ஜோஹிதாவின் தோழி. இந்த உஷா முருகன் தம்பதியினர் இல்லை என்றால் ஜோஹிதா கார்த்திக்கின் நிலை என்னவாகிருக்கும் என்று கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. ஏனெனில் அவர்களின் உதவியால் தான் இந்த இடம். உணவகம். வேலையென அனைத்தும் கிடைத்தது. உஷாவிற்கு வாசவியும் ஒரு மகள் தான்.
அவர் கூறுவது ஒருவகையில் உண்மை தான். வாசுவிற்கு தரையில் கால் வைத்து நடந்து பழக்கம் இல்லை. எப்பொழுதும் குதித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருப்பாள். இப்போது கூடக் கார்த்திக்கின் அருகில் காதில் ஒரு ப்ளூடூத்தை மாட்டிக் கொண்டு, மற்றொன்றை கார்த்திக்கின் காதில் வைத்தவள் பாடலை அலற விட்டபடி நடனமாடிக் கொண்டே பார்க்கை வளம் வருகிறாள்.
இந்தக் கார்த்திக் இருக்கிறானே, அவன் மகள் செய்யும் அனைத்தையும் சிரிச்சிக்கிட்டே அவளுக்கு இணையாக ஆடிக் கொண்டு இருப்பான்.
“கார்த்திப்பா. இந்தப் பாட்டு சூப்பரா இருக்கு. " என நடு ரோட்டில் நின்று ஆட. கூட வில்லியமும் வந்து சேர்ந்து கொண்டான். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மூவரும் பூங்காவைச் சுற்றி விட்டு, வீடு திரும்ப உஷா கார்த்திக்கை முறைத்தாள்.
"இப்ப தா கார்த்திக் உன்ன பத்தி சொல்லிட்டு இருக்கேன். வாசுவ அதட்டி வைங்கன்னு. " உஷா.
"அவள பாத்துக்க தா நாங்க இருக்கோமே அப்பறம் எதுக்கு அவள இத செய்யாத அத செய்யாதன்னு அதட்டணும். அவளோட விருப்பப்படி அவ வளரட்டும். ஜோஹிதா ப்ளாக் டீ. " என்றபடி கார்த்திக் நாளிதழைப் பிரிக்க, முருகானந்தம் மனைவியைப் பார்த்து நக்கலாகச் சிரித்தான். உஷா இருவரையும் முறைத்தபடியே சமயலறைக்குள் சென்றாள்.
" சூப்பர் மாமா. கரெக்டா சொன்னிங்க. இந்த அம்மா எப்ப பாத்தாலும் அத பண்ணாத இத பண்ணாதன்னு. நொய்நொய்ன்ட்டு. " அஸ்வின்.
" தொனதொனன்டு உங்கள எதையாது சொன்னாத்தான அது அம்மா. இல்லன்னு நீங்க அவங்கள மதிக்கக் கூட மாட்டிங்க. " என்றான் கார்த்திகேயன்.
"கார்த்திப்பா... கார்த்திப்பா... உங்களுக்குப் பார்ச்ல். இந்தியால இருந்து வந்திருக்கு. " என ஒரு பெரிய கவரை முன்னும் பின்னும் ஆட்டிப் பார்த்தபடி வந்தாள் வாசு.
" குட்மார்னிங் ஆண்டி. என்னைய பத்தின இன்னைக்கான ரிப்போர்ட் முடிஞ்சதா?. இல்ல இன்னமும் பாக்கி இருக்கா?. " எனச் சமையலறையில் தலையை நீட்டி உஷாவை கேலி செய்ய, அவரும் அவளுடன் மல்லுக்கு நின்று சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர்.
" யாரு மச்சி அனுப்பிருக்கா?. பெரிய பார்ஷலா இருக்கு!. " எனக் கவரை பிரிக்காமல் அமர்ந்திருந்த கார்த்திக்கிடம் கேட்க,
" எப்பையும் வர்றது தா. இத நீயே உங்கையால குப்ப தொட்டில போட்டுடு. " என்றவன் முகத்தில் என்ன மாறியான உணர்வு இருக்கிறது என்று கணிக்க முடியவில்லை. அத்தனை இறுக்கமாக இருந்தது.
" இந்த லெட்டர் எதுக்குன்னு எனக்குத் தெரியும் மச்சான் நீ கொஞ்சம் உன்னோட பிடிவாதத்துல இருந்து இறங்கி வாயே. என்ன தா இருந்தாலும் அது நம்ம நாடு. நம்ம ஊரு. நாம படிச்ச காலேஜ் டா. "
" எனக்கு யாரும் வேண்டாம். திருப்ப நா இந்தியா போறதுக்கு தயாரா இல்ல மச்சான். அந்த நாடு எனக்கு எக்கச்சக்கமான வலிய தந்திருக்கு. எல்லாத்தையும் எங்கிட்ட இருந்து பறிச்சிடுச்சி. வேண்டாம் முருகா. என்ன நானே காயப்படுத்திக்க விரும்பல. வழக்கம்போல் டொனேஷன் தர்றேன். அத தவிர என்னால எதுவும் பண்ண முடியாது. " என்றான் வலி நிறைந்த குரலில்.
" மச்சான் உங்கிட்ட யாரும் பிச்சை கேக்கல. நாம படிச்ச காலேஜ் டா அது. அத மூடப்போறாங்க. ஒரே ஒருக்க அங்க படிச்ச எல்லாரும் ஒன்னு சேரணும்னு தா இந்த விழாவே ஏற்பாடு பண்ணிருக்கு. ஒரே ஒருக்க மச்சான். வாடா. " எனக் கெஞ்ச,
" என்னால முடியாது. நா இந்தியா பக்கமே திரும்பிப் பாக்க விரும்பல. " என காராறாகக் கூறிச் சென்றான் கார்த்திகேயன்.
பிறந்து வளர்ந்த நாட்டைப் பார்க்க, என்ன அவனுக்கு அத்தனை வலி.?
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..