அத்தியாயம்: 28
ஐந்து பேர் அமர்ந்து வரக்கூடிய அந்தக் காரில் ஐந்து பேர்களும் அமர்ந்திருந்தாலும் காரில் பேரமைதி நிலவியது. தன்யா இருக்குமிடம் அமைதியா! என ஆச்சர்யப்படும் அளவுக்குத் தான் அமர்ந்திருந்தாள். அதுவும் யோசனையுடன்.
'யாரு இவங்க?. எதுக்கு இவங்கள கூட்டீட்டு வந்திருக்கான்?. இப்ப எங்க கூட்டீட்டு போறான்?. ச்ச... இவனுக்கு Fremont ல ஒரு லவ்வர் இருக்கா. இவெங்கூட வந்தா அவள பாத்து பேசி இவனுங்க ஆடுற காதல் ஆட்டத்த கலச்சி விட்டுடலாம்னு கெஞ்சி கூத்தாடி வந்தா! இவெ யாருன்னே தெரிய ஒரு குடும்பத்தோட Fremontக்கு போய்ட்டு இருக்கான். ஏ?. ' என்ற யோசனைதான் அது.
'அப்பக் கார்ல இருக்குறது தேவ் அப்றம் தன்யா, மத்த மூணு பேரும் யாரு.? '
'அது தெரியாமத்தாங்க நானும் அப்பத்துல இருந்து முழிக்கிறேன். கேட்டதுக்கு சொந்தக்காரங்கன்னு சொன்னான். நல்லா தமிழ் பேசுறாங்க. திருநெல்வேலில இருக்குறதா சொன்னாங்க. அங்க எப்படி எங்க சொந்தம்?. ம்...
சிவ் மாமாக்கு இந்தியால இருக்குற ஒரே சொந்தம் நாங்க மட்டும் தா. எனக்கே தெரியாம யாரு இவங்க என்னோட சொந்தக்காரங்க லிஸ்ட்டுல. புரிபடலயே. ஒருவேள மாமாக்கு இன்னோரு ஃபேமிலி இருக்குமோ!. ம்… ' எனத் தன்யா அவளின் சொந்தங்களின் முகத்தை மனத்திற்குள் கணக்கெடுப்பு செய்துகொண்டிருந்தாள்.
விடிந்து விடியாத அந்தக் காலையில் முகத்தில் ஒரு இன்ச் அளவுக்குச் சிமெண்ட் அப்பியது போல் பவுடரை அள்ளிப் பூசிக்கொண்டு தேவ்வின் அறை வாயிலில் நின்றாள் தன்யா.
"குட்மார்னிங் தேவ். இன்னைக்கி Thanksgiving day." என்றாள் உற்சாகமாக.
"அதுக்கென்னப்ப இப்ப. நீ சர்ச்சுக்கு போகப்போறியா என்ன.! " எனக் கேட்டவன் வெளியே செல்லத் தயாராகி கோர்ட் சூட்டில் நின்றான்.
"தேவ், நீ மறந்துட்டன்னு நினைக்கிறேன். எப்பையுமே இந்த நாள நாம கடலுக்குள்ள ஃபிஷ்ஷிங் போய்க் கொண்டாடுவோம். " என்றவள் அவனை ஏற இறங்க பார்த்து,
"நீ என்ன கோர்ட்டு போட்டு ரெடியாகிருக்க. வெளில போற ஆம்பளைய எங்க போறன்னு கேக்க கூடாதுதான். பட் அந்தக் கேள்விய மாத்தி எப்படி கேக்குறதுன்னு எனக்குத் தெரியல. ப்ளிஸ் நா கேள்வியே கேட்காம எனக்கான பதில் சொல்லிடேன். " என்றாள் அவள். அவளுக்குத் தெரியும் அவன் எங்குச் செல்ல உள்ளான் என்று. இருந்து வம்பாக வந்து கேட்கிறாள்.
நேற்று இரவே தேவ் சிவ்ராமிடம் Fremont ல் உள்ள OLA ஹோட்டலிற்கு செல்ல உள்ளதாகக் கூறியதை தன்யா ஒட்டு கேட்டு விட்டாள். அவனின் வழக்கமான செட்யூல்லிலிருந்து மாறி எங்கோ செல்கிறான் என்றால், ரகசிய காதலியைக் காணத்தானே. சோ… அவனின் நிழலா மாறி அந்த நாலு நாளும் அவனுடனேயே இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, சிறிய பெட்டியுடன் ஏதும் அறியாதது போல் கேள்வியுடன் நிற்கிறாள்.
"அப்பக் கண்டிப்பா நீ எங்கூட தா இருக்க போற. "
"ஆமா தேவ்."
"நாலு நாளும் எங்கூட தா. "
"எஸ் தேவ். எப்பையும் இந்த நாள்ல நா உங்கூட தான இருப்பேன். இந்த வர்ஷம் மட்டும் எப்படி தனியா. சொல்லு. "
"நீ கூட வர்றது ஓகே தா. பட் சில கண்டிஷன் இருக்கே. "
"என்னாதது. "
" நாலு நாளும் நீ நா சொல்ற இடத்துல தா இருக்கணும். ரிட்டன் போகக் கூடாது. போகவும் விடமாட்டேன். யோசிச்சிக்க. நா என்னோட வேலய பாத்துட்டு இருப்பேன். உனக்கு ஃபோர் அடிக்கும். உங்கூடவே இருக்கவும் முடியாது. உன்ன தனியா விடவும் முடியாது. ஹோட்டல்லயே அடஞ்சி கிடக்கணும். ஓகே வா. " என்க.
" எனக்கு ஓகே. நீயும் அந்த ஹோட்டல்லயே இருக்கும்போது நா ஏ ரிட்டன் வீட்டுக்கு வரணும். சந்தேகமா என்ஜாய் பண்ணப் போறேன். "
"உறுதியா தா சொல்றியா. " என மீண்டும் மீண்டும் கேட்கும் போதே பெண்ணவள் சுதாரித்திருக்க வேண்டும். இல்லையே தன்யா ‘எல்லாம் ஓகே’ என சொல்லிப் பூம்பூம் மாடுபோல் தலையசைத்து அவனுடன் புறப்பட்டு விட்டாள்.
காரில் ஏறி அமர்ந்தவள் வழக்கம்போல் தன் வாட்டர் ஃபால்ஸ் வாயைத் திறந்து அருவியாய் வார்த்தைகளைக் கொட்டி கதை அளந்து கொண்டே வர, கார் ஏர்போர்ட்டை அடைந்தது.
' Fremont ன்னு சொன்னான். நானும் கூகுள்ள கிட்ட கேட்டு எவ்ளோ நேரத்துல போய்டலாம்னு கணக்கெல்லாம் போட்டுப் பாத்தேனே. அது கார்ல போனா 6 மணி நேரம். டிரெயின்ல போனா 11 மணி நேரம். நடந்தே போனா 5 நாளுன்னு காட்டுச்சி. அவெ கார எடுக்கவும் கார்ல தா போகப்போறோம். எந்த டிஸ்டபென்ஸ்ஸும் இல்லாம அவெங்கிட்ட பேசிப் பேசி அவனோட ரகசிய சினேகிதி யாருன்னு கரந்திடலாம்னு பாத்தேன். பட். முடியல.
சரி ஃப்ளைட்ல போற அந்த 1.30 மணி நேரத்துலயாது தனியா அவெங்கூட இருக்கலாம்னு பாத்தா. அவெ ஒரு குடும்பத்த வெல்கம் பண்ணி அவெ பக்கத்துலயே உக்கார வச்சி பேசிட்டு இருக்கான். எனக்கு இடம் கூடக் குடுக்கல. நாலு சீட்டு தள்ளித் தூரமாத்தா உக்காந்திட்டு வந்தேன். அடுத்து கார்லயாது முன் சிட்ட பிடிக்கலாம்னு பாத்தேன். ஆனா. ச்ச. ' தன்யாவின் புலம்பல்கள்.
தன்யாவின் புலம்பல் நிஜமாகவே உண்மை தான். ஏனெனில் தேவ்விற்காக ஏர்போர்ட்டில் ஒரு குடும்பம் காத்திருந்தது. கணவன் மனைவி ஒரு குழந்தையென மூவரை தங்களுடன் அழைத்துச் சென்றான்.
அந்தக் குடும்பத்து தலைவியின் கால்கள் இரண்டும் வெட்டப்பட்டது போல் இருந்தது. இயந்திர நாற்காலியின் உதவியுடனும் கணவனின் உதவியுடனும் விமானம் ஏறிய அந்தப் பெண்ணுடனும் அவரின் கணவனுடனும் தேவ் பேசிக் கொண்டே வந்தான்.
அவர்களுக்கு எட்டு வயதில் ஒரு சிறுமி. அவளுக்கும் உடலில் ஏதோ பிரச்சனை போலும். தலை வலிக்கிறது என்று கூறி விமானத்தில் உறங்கிய படியே வந்தான். அதுவும் தேவ்வின் தோளில் சாய்ந்து கொண்டு.
சரி... விமான பயணம் தான் நமக்கு விபரீதமா முடிந்தது. காரிலயாது முன் சீட்டில உக்காரலாம் என ஆசையுடன் இருந்த தன்யாவிற்கும் அந்தச் சிறுமிக்கும் இடையே ஓட்டப் போட்டியே நடந்தது. பாவம் நம் தன்யா அவளுடைய ஆறுபது கிலோ எடையைத் தூக்கிட்டு நடந்து வருவது ஸாரி ஓடி வருவது கடினமாக இருந்ததால் தோல்வியைத் தழுவி பின் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள். பாவம் அவளைச் சமாதானம் செய்யக் கூட ஆள் இல்ல.
'குட்டி சாத்தான். இவ்ளோ நேரமா தூங்கிட்டு வந்ததுனால ரொம்ப ஆக்டிவ் வா இருக்கா போல. ' என வசை பாடிய படியே வந்தாள் தன்யா.
விமான நிலையத்தில் அவனைப் பிக்கப் செய்து, காரை ஜான் ஏற்பட்டு செய்திருந்தார். அவரே கையில் பலகையைத் தாங்கி விமானநிலையத்தின் வாசலிலேயே நின்று அழைத்து வந்தார்.
" வெல்கம். மிஸ்டர் ருத்ரதேவ். அண்டு ஹிஸ் ஃபேமிலி. " எனப் புன்னகையுடன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் ஜான்.
" எஸ் மிஸ்டர் ஜானீத்தன். ஹவ் இஸ் யுவர் டே." என்றவன் அவரை நலம் விசாரித்தது மட்டுமல்லாது அவருடன் தொழில் சம்பந்தமாகவும் பேசிச் சிரித்துக் கொண்டே வர, தன்யாவும் மற்றவர்களும் அமைதியாக இருந்தனர்.
'ச்ச இங்கையும் பிஸ்னஸ் பேசத்தா வந்திருக்கான்னு தெரிஞ்சிருந்தா இவெங்கூட வராமலயே இருந்திருப்பேன். ' இவள் புலம்பலை விடவில்லை போலும்.
அவெந்தா சொன்னானே.. நீ கேக்கல அதுக்கு யாரும்மா பொறுப்பு.
ஏமாற்றம். அது தன்யாவிற்கு மட்டுமல்ல வாசுவிற்கும் தான்.
காரில் வந்திறக்கியவர்களை பார்க்கையில், அவளின் கண்கள் சிவப்பு நிற மேலங்கியும் கரும்பு நிற சட்டை மற்றும் பேண்ட்டுடன் வசீகர புன்னகை சிந்தி வந்த தேவ்வை பார்க்கையில் சிறு ஏமாற்றம். ஏனெனில் ஒலிவியாவையும் மற்றவர்களையும் பார்த்துப் புன்னகைத்தபடியே அவர்கள் தந்த பூங்கொத்தை வாங்கிக் கொண்டு வாசு என்ற ஒரு ஜீவன் தன் கண்களுக்குத் தெரிந்ததை போல் காட்டிக் கொள்ளவில்லை அவன்.
'பின்னத் தமிழ் சினிமா பாட்டு தெரியல. தமிழ் எழுதத் தெரியலன்னு சொல்லி அவன ஒரு மணி நேரத்துக்கும் மேல வறு வறுன்னு வறுத்தெடுத்துட்டு. இப்ப கண்டுக்கலன்னு ஃபீல் பண்ணா எப்படி. ' என்று கேட்ட மனசாட்சியை க்ளோரஃபாம் கொடுத்து உறங்க வைத்துவிட்டாள் போலும்.
'பாஸ் தா. இல்லன்னு சொல்ல. அவனோட ஃபேமிலி ஆளால தா இந்த வேலையே கிடச்சது. அதையும் இல்லன்னு சொல்ல. அதுக்காகப் பாத்ததும் முகத்த திருப்பிக்கிட்டா என்ன அர்த்தம். ம்… பேச வேண்டாம் தெரிஞ்சவ மாறிக் காட்டிக்க கூட வேண்டாம். சின்ன சிரிப்பு. இல்ல என்ன பாத்ததுக்கான அடையாளமா புருவத்த ஏத்தி இறக்கி இருந்தா கூடச் சந்தோஷப்பட்டிருப்பேன். ஏதோ வெள்ளைக்கார வெங்காயம் மாறிப் பிகேவ் பண்றான். ' என மனம் சோர்ந்து போனது.
பல நாட்கள் கழித்து அவனை நேரில் பாக்கப் போவததால் நேற்று இரவு முழுவதும் உறங்கவில்லை அவள். காலையிலும் புத்துணர்வுடன் வெகு உற்சாகமாய் ஹோட்டலுக்கு வந்தவளை அவன் கண்டு கொள்ளாமல் சென்றது வருத்தத்தைத் தந்தது.
பாஸ் வந்திருப்பதால் ஒரு சிறிய மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டதிருந்தது. அவளும் பெரிய பதவியில் தானே உள்ளாள். அதனால் மீட்டிங் ஹாலுக்குள் செல்ல எதானிக்கும்போது ஜான் அவளைத் தடுத்தார்.
" வாசு, தேவ் ஸார் கூடச் சில கெஸ்ட் வந்திருக்காங்கள்ள. அவங்களுக்கு ரூம காட்டி வெல்கம் கிட் குடுத்து கொஞ்சம் கம்ஃபட்டபுல்லா பாத்துக்க. " என உத்தரவிட்டு விட்டுச் சென்றார் அவர்.
' ச்ச… அந்தச் சிவப்பு கோர்ட்டுல ஆளு பாக்கவே செம்….மையா இருந்தான். அந்த ப்ரவுன் கலர் கண்ணு. அதுல ஸ்டெயில்லா கண்ணாடி வேற போட்டாம, அந்தப் பங்க்கு முடிய ரப்பர் பேண்டுல கட்டி வேற வச்சிருக்கான். இப்பதா முகம் முழுசா இருக்கு. ஹிம்.
கொஞ்ச நேரம் அவனோட முகத்தையே பாத்துட்டு, எங்கூட பேசலன்னாலும் அவெ பேசுறதயாவது வாய் பாத்துட்டு இருக்கலாம்னு பாத்தா!. அதுக்கும் ஆப்பு வச்சிட்டு போறாரு. ' எனப் புலம்பியபடி வெய்டிங் ஹாலிற்கு சென்றாள்.
கதவைத் திறந்ததும் அவளின் மீது யாரோ வந்து மோத அவள் விழவில்லை. மோதிய ஆள் விழுந்தாள். அந்தச் சிறுமி தான்.
" ஸாரி ஆன்டி. நீங்கக் கதவ திறப்பீங்கன்னு நா எதிர்பாக்கல. " என்றாள் அந்தச் சிறுமி.
" ஓ... அதுக்கு எதுக்குடா ஸாரி. நானும் தா உங்கள பாக்கல. I am also sorry for that. நீங்கத் தா கீழ விழுந்திங்க. அடி எதுவும் பட்டிருக்கா." என அச்சிறுமியை கைகளில் அள்ளிக் கொண்டு கேட்க, அவள் இல்லை எனத் தலையசைத்தாள்..
" சோ ஸ்வீட். உங்க பேரு என்ன?. " எனக் கேட்க,
"ரோகிணி… ரோகிணி... " எனக் கத்தியபடி அச்சிறுமியின் தந்தை வந்தார். வந்தவர் வாசுவை பார்த்து அப்படியே நின்று விட்டார்.
" குட் ஆப்டர் நூன் ஸார். வெல்கம் டூ அவர் ஹோட்டல். " எனப் பணிவுடன் வரவேற்க, அவர் அசையவே இல்லை.
" ஏங்க, ரோகிணி எங்க.? அங்கயும் இங்கவும் ஓடீட்டு இருந்தா. பாத்திங்களா.!" எனக் கேட்ட படி அவரின் மனைவி வீல் சேரில் வர, அவரும் வாசுவை பார்த்து அதிர்ந்து போய் இருந்தார்.
" நீங்கத் தா ஜான் ஸார் சொன்ன கெஸ்ட்டா.! வாங்க மேம். நா உங்களுக்கு உங்க ரூம காட்டுறேன். லக்கேஜ் எல்லாம் நேரா உங்க ரூம்கே வந்திடும். ப்ளீஸ் கம் வீத் மீ. " என அந்த வீல் சேர உருட்டியபடி வாசு லிஃப்ட்டிற்கு செல்ல, மற்றவர்கள் வாசுவை தொடந்து சென்றனர்.
வாசு அந்த ஹோட்டலில் உள்ள வசதிகளைச் சொல்லிக் கொண்டே வர, " உன்னோட பேரு என்னம்மா. " என்றார் அந்தப் பெண் வாஞ்சையுடன் வாசுவை பார்த்தபடி.
" வாசவி ஆன்டி. "
"அப்பா பேரும்மா. " என அந்த ஆண் கேட்க,
" கார்த்திகேயன் அங்கிள். " என்றாள் பெருமையுடன்.
"அம்மா பேரும்மா. "
" ஜோஹிதா. "
" எத்தன வர்ஷம்மா இங்க இருக்கிங்கம்மா. அப்பா என்ன பண்றாரு. " எனப் பெண் பார்க்க வந்தவர்கள்போல் பல கேள்விகளைக் கேட்டு வாசுவிடம் உரிய பதிலையும் வாங்கிக் கொண்டனர்.
" ஆல் ஆர் ஓகே ஆண்டி. உங்களுக்கு லன்ச்சுக்கு இன்டியன் ஃபுட் ஆர்டர் பண்ணிருக்கேன். ஓகே தான அங்கிள். " என்றவள் இன்டர்காமில் உணவு ஆர்டர் செய்து விட்டு வெளியே சென்றாள்.
" என்ன நினைக்கிறீங்க முரளி. தேவ் தம்பி சொன்ன மாறி இந்தப் பொண்ணு அப்படியே நம்ம வாணி மாறியே இருக்குள்ள. " என்றார் மனைவி.
"ஆமா ராஜீ. நம்ம வாணி. " எனக் கண்ணீருடன் சொன்னார் முரளிதரன்.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..