அத்தியாயம்: 34
காலை உணவிற்காக மேஜையில் அப்பா மகள் என இருவரும் அமர, ஜோஹிதா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு பரிமாறினார்.
" நான் எங்கையும் போகலை. ஸாரி. நான் அதிகமாவே பேசிட்டேன். உங்ககிட்டையும் உஷா ஆன்டி கிட்டையும், வெரி வெரி ஸாரி. " எனச் சின்னக் குரலில் சொல்ல, ஜோஹிதா முறைத்தார்.
"அதுவரைக்கும் நான் அமைதியாத்தான் பேசிட்டு இருந்தேன். அந்த உஷா ஆன்டி தான் ஆம்பளை பொம்பளைன்னு பேச்ச டைலர்ட் பண்ணி விட்டாங்க. அதான். பேசிட்டேன். ஸாரி ஜோஹிம்மா. " என்க, அவளின் தட்டில் திணை அடையை வைத்துவிட்டு கிச்சனுக்குள் சென்றார்.
"கார்த்திப்பா ஜோஹிதாம்மா பேச மாட்டேங்கிறாங்க. " எனக் குற்றம் சுமத்தினாள் பெண்.
" உங்கம்மா எப்படி சமாதானம் செஞ்சா சமாதானம் ஆவாளோ அப்படி சமாதானம் படுத்து. " என்க, எழுந்து சமையலறைக்குள் சென்று அன்னையைப் பின்னாலிருந்து கட்டியணைத்தாள் வாசு.
" ஜோஹி இனி உங்ககிட்டையும் கார்த்திப்பாட்டையும் கேக்காம எதுலையும் சேர மாட்டேன். பெரிய பெரிய முடிவ நானே எடுக்கமாட்டேன். ப்ராமிஸ். " என்க, மகளை விலக்கிவிட்டு நாற்காலியில் அமர்ந்து அமைதியாகத் தன் தட்டை நிரப்பத் தொடங்கினாள் ஜோஹிதா.
"நான் தான் மாட்டேன்னு சொல்றேன்ல. மாட்டேன்... பேசாம இருக்காத ஜோஹிம்மா. கஷ்டமா இருக்கு. " என முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு சொல்ல, ஜோஹிதா புன்னகைத்தாள்.
அவளின் காதுகளில் மகளின் குரல் கேட்கவில்லை. மாறாக ‘ஜோஹி ஏ உம்முன்னு இருக்க. கோபம்னா சண்டை போடு. திட்டு ஏன் அடிக்கக் கூட செய். ஆனா பேசாம மட்டும் இருக்காத ஜோஹி. ரொம்ப கஷ்டமா இருக்கு. ' என்ற ஒரு குரல் கேட்டது.
"சரி சரி... மூஞ்சிய அப்படி வைக்காத. காலங்காத்தலயே உன்னோட நரி முகத்தைக் காட்டுனா நாள் நல்லா எப்படி இருக்கும்… ம். " என சொல்லிப் புன்னகைக்க,
" ஐ!! ஜோஹிம்மா சிரிச்சிட்டாங்க. ஹே… ஆனா, என்னைப் பாத்தா நரி மாதிரியா இருக்கு. "
"ஆமாண்டி. சாதா நரி இல்ல குள்ள நரி."
" ஜோஹிம்மா. " எனச் சிணுங்க,
"இந்தா இத கொண்டு போய் உஷா வீட்டுல குடுத்துட்டு வா. இன்னைக்கி விரதம்னு சொல்லிக் கறி சமைக்க மாட்டா. இதுல அண்ணாக்கும் அஸ்வினுக்கும் இருக்கு. குடுத்துட்டு நீ வேலைக்கி கிளம்பு. "
" மாம்ஸ் வீட்டுல இருக்காருல. " எனக் கேட்க, ஜோஹிதா ஆம் எனத் தலை அசைத்தாள்.
"அப்பாடா! அப்ப நான் போறேன். இல்லைன்னா உஷா ஃபேன் என்னை மூலை முடுக்குல பறக்க விட்டுட்டும். பை ஜோஹிதாம்மா. லவ் யூ கார்த்திப்பா." எனத் தாயை அணைத்துவிட்டும், தந்தைக்கு ஒரு முத்தத்தையும் தந்துவிட்டு சென்றாள் பெண்.
தன்னுடன் எதுவும் பேசாது பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு, ரெஸ்டாரன்ட்டுக்கு கிளம்பி வரும் மனைவியை ஒரு பார்வை பார்த்தான். அதன் பொருள் யாராலும் சொல்லிவிட முடியாது.
இருவரின் உறவும் புரிந்து கொள்ள முடியாத படியே இருக்கிறது.
மத்திய உணவு நேரம் சற்று கூட்டம் அதிகமாக இருக்க, மாலையில் தான் இடைவேளை கிடைத்தது இருவருக்கும்.
" கார்த்திக் இன்னைக்கி நீ ஆடிட்டரைப் பாத்து பேசுறதுக்கு அப்பாய்மெண்ட்ட வாங்கிருந்தேன்னு சொன்ன. எப்ப?" என்றபடி வந்தாள் ஜோஹிதா, சமயற்கூடத்திற்குள்.
" ஈவ்னிங் சிக்ஸ் ஓ க்ளாக். " என்றவன் மும்மரமாக எதையோ சமைத்துக் கொண்டு இருந்தான்.
" டயம் என்னாச்சி தெரியுமா? ஃபைவ் தர்ட்டீ. உம்பொண்ணு சொல்லுற மாதிரி உனக்குச் சமையக்கட்டுக்குள்ள வந்துட்டா நேரம் போறதே தெரிய மாட்டேங்கிது. " என்க, கார்த்திக் அவளை நிமிர்ந்து பார்த்தான். காலையில் நடந்தவை அவனின் சிந்தனையில் இருக்கிறது என்பதை மனைவியால் உணர முடிந்தது.
" அது… வாசு எனக்கும் பொண்ணு தான் கார்த்திக். ஒரு வேள அவள் ஆம்பளைப் பையனா பிறந்திருந்தாலும் பைலட் ஆகப்போறேன்னு சொன்னால் கண்டிப்பாக நான் உடனே சம்மதிக்க மாட்டேன். பயப்படுவேன். எனக்கு என்னோட குழந்தையோட பாதுக்காப்பு தான் முக்கியம். மத்ததெல்லாம் அடுத்து தான். நான் எந்த வகையிலையும் அவளுக்குப் பாலின பாகுபாடு பாக்க மாட்டேன்." என்றவள் கார்த்திக்கிடம் ஒரு விசிட்டிங் கார்ட்டை நீட்டி.
" இந்தா இதை உம்பொண்ணுகிட்ட கொடுத்து முதல்ல காரை ஓட்டச் சொல்லு. உஷா தான் தந்ததா. இங்கருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரைக்கும் ஆக்ஸிடென்ட் ஆகாம காரும் அவளும் பத்திரமா வந்து சேந்தா. அவள் பைலட் ஸ்கூல்ல சேர்ந்து படிக்கட்டும். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஒரு வேள சின்னதா ஒரு கோடு கார்ல விழுந்தாலும். முடியாது தான்.
கார் ஓட்டும்போது நானும் கூட இருப்பேன். அப்பாவும் மகளும் என்னைக் கலட்டி விட்டுட்டு போகலாம்னு பாத்திங்க. அப்றம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. " என்றவளை கார்த்திக் மௌனமான புன்னகையுடன் பார்த்தான். இதில் ரசனை இல்லை தான். ஆனால் அவளின் பேச்சு வேறு ஒன்றை நினைவு படுத்தும்படி இருந்தது.
" எனக்குப் பைக் ஓட்டணும்னு ஆசை. சுத்தி நிழலே விழாத அளவுக்கு நெருக்கமா வளந்த மரத்துக்கு மத்தியில நைட் டயம் யாருமே இல்லாத ரோட்டுல, எனக்குப் பிடிச்சவங்க கூட கை கோர்த்து நடக்கணும். பஸ்ல புட் போல்ட் அடிக்கணும். ஓடுற டிரெயின்ல இருந்து குதிச்சி இறங்கணும்.
எனக்குப் பிடிச்ச சூப்பர் ஸ்டார் படத்த முதல் நாள் முதல் காட்சி பாக்கணும். நடுரோட்டுல நின்று டான்ஸ் ஆடணும். எங்க போறன்னு கேள்வியே யாரும் கேக்காம பைக்ல இந்தியா முழுக்க சுத்தணும். ரோட்டுல இறங்கி கிட்டிபுல்லு, கோலி குண்டு, சைக்கிள் டயர் உருட்டி விளையாடணும். ஜீன்ஸ் பேண்ட், ஸ்கெட், சுடிதார்ன்னு புதுசு புதுசா போடணும். அப்புறம். " எனத் தாடையில் விரலால் தட்டி தட்டி ஒவ்வொன்றாகச் சொல்ல,
" ஏம்மா இதெல்லாத்தையும் நோட்டு புத்தகம் போட்டு எழுதி வச்சிருக்கலாம்ல. பாரு கேட்டவுடனே யோசிச்சி யோசிச்சி சொல்றதுக்கு கஷ்டமா இருக்கு. போய்ப் பேனாவையும் நோட்டையும் எடுத்துட்டு வந்து எழுது. " என ஒருவன் கேலி செய்ய,
" ஆமா எழுதி என்ன பண்ண சொல்ற?. " மற்றவன்.
" புது கடை திறப்பு விழாக்கு நோட்டீஸ் போடுற மாதிரி நம்ம தங்கச்சியோட ஆசையைக் காப்பி எடுத்துத் தெரு தெருவா போட்டிட வேண்டியது தான். ஒரு பயலும் மதிச்சி படிக்கமாட்டான் தான், ஆனா சின்னப் பயலுங்க பேப்பர் ராக்கெட் செஞ்சி விளையாடவாச்சும் உதவும். " எனச் சொல்லிக் கேலி செய்ய,
"ஏன் என்னைக் கிண்டல் பண்றிங்க. என்னோட ஆசை எல்லாம் ஒரு நாள் நிறைவேறும். நீங்கச் சொன்ன மாதிரி எல்லாத்தையும் நான் எழுதி வைக்கத்தான் போறேன். " என்றாள் பெண்.
" ஒவ்வொரு ஆசையும் நிறைவேற நிறைவேற, அதை நேர் கோடு போட்டு அடிச்சிக்கிட்டே வரப் போற. சரியாம்மா. " என்க, ஆம் என வேகவேகமாகத் தலையசைத்தாள். அதற்கும் அவர்கள் அவளைக் கேலி செய்ய,
" இதெல்லாம் உனக்குப் பேராசையா தெரியலை. பைக் ஓட்டுறது ஓகே. அப்புறம் கடைசியாகச் சொன்ன கிட்டி புல்லு, கோலிக்குண்டு டிரெஸ்ஸு கூட ஓகே. ஆனா நடுவால சொன்ன எதுவுமே நடக்காதேம்மா. "
"ஏன்… ஏன் நடக்காது.?" பெண்.
" ஓடுற டிரெயினு… புட்போல்டு பஸ்ஸு இதெல்லாம் பசங்க பண்றதும்மா. உன்னால எப்படி? "
"உங்களுக்கு ரெண்டு கை ரெண்டு காலு தான இருக்கு. நீங்களே பஸ்ல கம்பிய பிடிச்சிட்டு தொங்கும்போது நாங்க ஏன அதைப் பண்ணக் கூடாது. "
" ஏய் என்ன உலறுற.? பொம்பளப்பிள்ளை எப்படி இருக்கணுமோ அப்படி தா இருக்கணும். வந்துட்டா ஜீன்ஸ் பேண்டு, பைக் ரேஸ்ஸுன்னு. சும்மா முறுக்கிக்கிட்டு ஆம்பளப்பசங்க கூடப் போட்டி போடாம அடக்க ஒடுக்கமா நடந்துக்க. அப்பதான் உனக்குக் கல்யாணம் ஆகும். இல்லைன்னா முதிர் கன்னியா செத்துடுவ. " என அதில் ஒருவன் காண்டுடன் கத்தி அவளைத் துரத்தி விட்டான்.
சோகமாக அமர்ந்திருந்த அவளைக் கார்த்தி சென்று சமாதானம் செய்ய, " என்னை மாறிப் பொண்ணுங்களுக்கு ஆசையே இருக்க கூடாதா கார்த்தி. எங்களுக்குக் கனவுகான. சந்தோஷமா இருக்க அனுமதி இல்லையா. அப்பா அம்மா பேச்ச மட்டும் தான் தா கேக்கணும். கூடப்பிறந்தவங்களுக்கு எல்லாத்தையும் விட்டுக் குடுக்கணும். கல்யாணம் பண்ணி புருஷனுக்கு பிள்ளைப் பெத்து கொடுக்குற மிஷினாவும், குழந்தைங்களை வளக்குற ஆயாவாவும் மட்டும் தான் பொண்ணுங்க கடைசி வர இருக்கணுமா?. தனிப்பட்ட முறைல எந்த ஆசையும் கனவும் இருக்க கூடாதா?. " என அழ, அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான் கார்த்திக்.
"அப்படில்லாம் இல்லடா. " என்க.
" பொண்ணுங்கிற காரணத்துக்காக என்னை அடச்சி வச்சி வளக்குறது எனக்குப் பிடிக்கலை கார்த்தி. அடுத்த ஜென்மத்துலயாது நான் ஆம்பளையா பிறக்கணும்னு ஆசை படுறேன். அந்த ஆசையாது நிறைவேறணும். " என்றாள் பெண்.
"ஐய்யையோ! அப்படியொரு முடிவ மட்டும் எடுத்திடாத. அப்றம் நாடு தாங்காது. முக்கியமா நான். " என்றவன் அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்து,
"உன்னோட எல்லா ஆசையையும் நிறைவேற்றத் தான் அந்தக் கடவுள் என்னை உன் கண்ணுல காட்டிருக்குறதா நினைச்சிக்கோ. உடனுக்கு உடனே இல்லைன்னாலும். உயிர் இருக்குற வர உன்னோட எல்லா ஆசையையும் நான் நிறைவேத்துவேன். " என்க, பாய்ந்து வந்து அவனை அணைத்தாள் பெண். அவளின் தலையைத் தடவிக் கொடுத்தவன் வெறும் வாய் வார்த்தையாக அதைச் சொல்லவில்லை.
ஆறு மணிக்கி மேல் உறங்காதே. கால்களை நீட்டி அமராதே. காலை வேளையில் அடுப்படியில் வேலை செய்தே ஆக வேண்டும். அதன் பின்னும் பள்ளிக்குச் செல்ல முடியாது. தினமும் ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று இரு பானைகளில் நீர் நிரப்பித் தலையிலும் இடையிலும் சுமந்து கொண்டுவந்தபின் தான் பள்ளிக்குச் செல்லவேண்டும். பள்ளி முடிந்தாலும் விளையாடச் செல்லக் கூடாது. வீட்டிற்கு வந்து தந்தையின் தொழிலுக்கு உதவியாக இருக்க வேண்டும்.
இதில் எப்படி தன் ஆசைகளையும் கனவுகளையும் அடைவது. பெண் என்பதால் அவள் கடைபிடிக்க வேண்டிய கடமைகள் நிபந்தனைகள் எனப் பல உண்டு. ஆனால் அவளுக்கு விதிக்கப்பட்ட எந்த ஒரு தடையும் அவளின் தம்பிக்கு இல்லை. என்ன இருந்தாலும் அடுத்த வீட்டிற்கு செல்லப் போகிறவள் தானே என உணவு உடையில் கூடப் பாகுபாடு காட்டும் குடும்பத்தில் வளர்ந்தவளுக்கு ஆசைகள் ஆயிரம். அதை நிறைவேற்றத் துடித்தது கார்த்தியின் மனம்.
விடாது பேசிக் கொண்டே இருந்த ஜோஹிதாவின் குரல் கூடக் கார்த்திக்கை நிகழ் காலத்திற்கு இழுத்து வரவில்லை. அந்தப் பெண்ணின் நினைவிலேயே அடுப்பில் இருந்த உணவைத் தட்டிற்கு மாற்ற,
"முதல்ல உம்மகளை சரியா நடக்க சொல்லு. தரையில கால் ஊனி சரியா நடக்க தெரியாதவ பறக்கப் போறாளாம். " என்றபடி கார்த்திக் சமைத்த பதார்த்தத்தை வாயில் போட்டுச் சுவைக்க,
" ம்... கார்த்திக் வர வர உன்னோட கை வண்ணம் வேற மாதிரி இருக்கு. செம்ம போ. " என அவனின் தோளில் குத்த,
"நிஜம்மா நல்லா இருக்கா ஜோ? " எனக் கேட்டான், அவளின் முகம் பாராது.
வாயில் போட்ட உணவு அங்கிருந்த டிஸ்யூ பேப்பரில் துப்பி எடுத்தவள் அதைக் குப்பைதொட்டியில் போட்டு விட்டு அங்கிருந்து சென்றாள், கண்ணில் நீருடன். காலையில் கலங்காத கண் இப்போது கலங்கியது.
"என்ன மச்சான் சிஸ்டர் அழதிட்டே போற மாதிரித் தெரியுது. காலைல வேற பட்டாசு சத்தம் அதிகமா இருந்ததா என்னோட பையன் சொன்னான் என்னாச்சி. " என்றபடி வந்தார் முருகன்.
"எல்லாம் என்னோட நேரம். எதெல்லாம் செய்யக்கூடாதுன்னு நினைக்கிறேனோ, அதெல்லாம் செய்றேன். எதெல்லாம் மறக்கணுமோ அதெல்லாம் மறக்காம ஃபாலோ பண்றேன். ச்ச... லைஃப் ஏன் மச்சான் இத்தனை வயசுக்கு அப்புறமும் இவ்ளோ டஃப்பா போகுது. " என்றவன் உடையை மாற்றச் சென்றான்.
"அதுக்கு ஒரு பரிகாரம் இருக்கு." என்று அவர் பேசத் தொடங்கும் போதே, கார்த்திக் வெளியே வந்தான்.
"எனக்கு வேல இருக்கு. நான் ஆடிட்டரைப் பார்க்க அப்பாய்மெண்ட் வாங்கிருக்கேன். லேட்டான மறுபடியும் வாங்கணும். பை. " என்று ஒரு ப்ரிப்கேஸ்ஸை எடுக்க,
"டேய் டேய். நான் என்ன சொல்லப்போறேன்னு தெரிஞ்சே நீ எஸ்கேப் ஆகுற பாத்தியா. நீ கேக்கலன்னாலும் நான் பரிகாரத்த சொல்லுவேன்டா. ஒரே ஒருக்க இந்தியா வந்திட்டு போ. எல்லாம் சரியாகிடும். "
"முடியாது. என்னை விட்டுடு. நான் எங்கையும் வரலை."
" நான் டிக்கெட் போட்டுட்டேன். நாலு டிக்கெட். " என்றபோது யார் யாருக்கு என்ற கேள்வியுடன் திரும்பி நண்பனைப் பார்க்க,
" என்னோட ஃபேமிலியும் ஜோஹிதாவும் போறோம். அவளும் எத்தனை நாள் தான் உன் மூஞ்சிய மட்டுமே பார்த்து சகிச்சிட்டு இருப்பா. அதான் அவளோட அம்மாவ பாக்கலாம்னு கூட்டீட்டு போறோம்."
"ஜோஹிதா கேட்டாளா அவள் அம்மாவ பாக்கணும்னு. "
"இல்லை. ஆனா உஷா சொன்னா அவங்களுக்கு உடம்பு சரி இல்லைன்னு. அதான் நான் டிக்கெட் போட்டுட்டேன். " என்றவனிடம்,
"என்னையும் எம்பொண்ணையும் கூப்பிடாத வரச் சந்தோஷம். " என்றபடி சென்று விட்டான் கார்த்திகேயன்.
'என்ன செஞ்சா இவன் நம்ம கூட டெல்லிக்கி வருவான். ம்... ஒரு ஐடியாவும் கிடைக்க மாட்டேங்குது. சரி கிடைக்கிற வரப் பொறுமையா இருப்போம். ' முருகனின் மைண்ட் வாய்ஸ்.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..