அத்தியாயம்: 35
சிறுவர்கள் பூங்கா.
அந்த விடுதிக்கு வந்து தங்குபவர்கள் ஜாக்கிங் வாக்கிங் செய்ய வட்ட வடிவ பாதைகள் அமைத்து, மத்தியில் சிறுவர்கள் விளையாட என ஊஞ்சல் ஷீ-ஷா சறுக்கல் என வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
அங்குள்ள ஷீ-ஷா வில் அமர்ந்திருந்தாள் தன்யா. அவளுக்கு நிகராகச் சிறு பெண் ரோகிணி எதிரில் உள்ள இருக்கையில் அமர்ந்திருக்க, ரோகிணி காற்றில் கால்களைத் தொங்க விட்டபடி உயரத்தில் இருந்தாள். தன்யாவோ தரையில் அமர்ந்திருப்பது போல் அமர்ந்து கையில் தோசை அளவுக்குப் பெரிதாக இருக்கும் ஒரு லாலிப்பாப்பைச் சுவைத்துக் கொண்டு இருந்தாள்.
"அத்தை, காலு வலிக்குது. கீழ இறக்கி விடுங்க. " என்றாள் பெண். அவளின் கையிலும் அதே அளவில் லாலிப்பாப்.
"முடியாது டி குட்டி சாத்தான். நானே இப்பத் தான் வசதியா செட்டில் ஆகிருக்கேன். அதுக்குள்ள எந்திரிக்க சொல்ற. கொஞ்ச நேரம் இரு அங்கேயே. " என்றவள் ரசித்து ரசித்துச் சுவைத்தாள் அந்த லாலிப்பாப்பை.
" அத்தை போதும். என்னைக் கீழே இறக்கி விட்டுட்டு என்னனாலும் பண்ணுங்க. ஒரு கைல கம்பிய பிடிச்சிட்டு ஒரு கைல லாலிப்பாப்ப சாப்பிடுறது கஷ்டமா இருக்கு. " என்க. தன்யா இறக்க மாட்டேன் என்று வம்பு செய்தாள்.
" அத்தை… அத்தை. " என ரோகிணி எங்கோ பார்த்துக் கத்த,
'அது யாரு நமக்கு தெரியாம இன்னொரு அத்தை. ' எனத் திரும்பிப் பார்த்தாள் தன்யா.
அங்கு, வாசு ராஜியைத் தள்ளியவாறே முரளியுடன் பேசிக் கொண்டு வந்தாள். முரளியின் முகத்தில் அத்தனை சந்தோஷம், வாசுவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு வருவதில். வாசுவின் சிறு வயது நினைவுகள். கல்லூரி கலாட்டாக்கள் என அனைத்தையும் கேட்டுக் கேட்டு மகிழ்ந்தார்.
ஒரு கட்டத்தில் சொன்னதையே திரும்பத் திரும்ப வாசு சொல்ல. அதையும் புதிதாகக் கேட்பது போல் கேட்டுச் சிரித்தார்.
‘மூணு நாளாப் பேசுறா. அவள் மட்டும் தான் பேசுறா. அப்ப வேற என்னங்க பேச முடியும். சொன்னதையே தான் திரும்பத் திரும்ப சொல்ல முடியும்.’
" என்னடி சப்போட்டுக்கு ஆளக் கூப்பிடுறியா. ஏன் உன் வாசு அத்தை வந்தா மட்டும் நான் உன்னை விட்டுடுவேனா. அவளே ஒரு ஊசி பட்டாசு. அவளால என்னை என்ன செய்ய முடியும். ம்… " என்றவள் ரோகிணியை இறக்கி விடவே இல்லை.
"அத்தை... அத்தை... " என ரோகிணி கை நீட்டி வாசுவை அழைத்துக் கொண்டே அழ.
" தன்யா என்ன பண்றிங்க?. கீழ இறங்குங்க. இது சின்னப் பிள்ளைங்க விளையாடுறதுக்கு. பெரியாளு உக்காந்தா தாங்காது. உடஞ்சி போய்டும். " என்றாள் வாசு பணிவாக. ஏனெனில் அவள் இப்பொழுது டியூட்டியில் இருக்கிறாள். இல்லையெனில் தன்யாவுடன் சண்டைக்குச் சென்றிருப்பாள்.
"ஓ!! அப்ப நான் குண்டா இருக்கேன்னு சொல்ல வர்றயா?. "
"இல்ல மேம். நீங்க இதுல விளையாடுற வயச தாண்டிட்டிங்கன்னு சொல்ல வர்றேன். அவ்ளோ தான். " என்றவள் ரோகிணியைக் கீழே இறக்கி விட, அவள் ஓடிச் சென்றாள் அவளின் அப்பா அம்மாவை நோக்கி. தன்யா சிறுமியை முறைத்துக் கொண்டு நின்றாள். ஆனால் வாசுவோ அவளை பார்த்துக் கண்சிமிட்டி சிரித்தாள்.
கடந்த மூன்று நாட்களில் இருவரும் நெருங்கிய நண்பிகளாக மாறி இருந்தனர். இருவருக்கும் இடையே பொதுவாகப் பல கருத்துக்கள் இருந்தது. முக்கியமாக இருவருக்கும் தமிழ் பாடல் வரிகளை ரசிக்கும் தன்மை இருந்தது. அது இருவரையும் நண்பிகளாக மாற்றி இருந்தது.
எட்டு மணிக்கு பிறகு வேலை முடிந்ததும், தன்யாவும் வாசுவும் கார்த்திகேயனின் ரெஸ்டாரன்ட்டுக்கு செல்வர். பேச்சும் சிரிப்பும் கேலியுமாக இருவரும் பொழுதைப் போக்குவர். தன்யாவிற்குக் கார்த்திகேயனையும் ஜோஹிதாவையும் பார்த்த உடனேயே பிடித்து விட்டது.
பத்து மணி, அது ருத்ராவின் நேரம். ஃபோனும் கையுமாக இருவரின் பேச்சு இருக்கும். குறுஞ்செய்திகள் மூலமாகவும் உரையாடல்கள் மூலமாகவும் தங்களின் காதலை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நேரில் பார்த்துப் பேசவில்லை. அவன் தான் முதலாளியாயிற்றே. வேலை நேரத்தில் வாசுவை நன்கு வேலை வாங்குவான். வேலை வாங்குவதில் எந்தக் குறையும் அவன் வைத்தது இல்லை. பின் வாங்கிய வேலைக்கு வாங்கிக் கட்டிக் கொள்வான். எல்லாம் ஃபோனில் தான்.
" ஹேய்! உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்னோட என்டர்டெயின்மென்ட்ட துரத்தி விட்டிருப்ப. " என்றபடி நடந்துச் சென்ற வாசுவைப் பின் தொடர்ந்து, கத்திக் கொண்டே தன்யா செல்ல.
"அது சின்னக் குழந்தை. அவங்க கூட தான் விளையாடணுமே தவிர அவங்கள வச்சி விளையாடக் கூடாது. " வாசு.
"அட்வைஸ்ஸு. ம்.. எல்லாம் என் நேரம் டி. இந்தத் தேவ்வ நம்பி வந்தேன். என்னோட உயிர் கேமராவ, இவெங்கூட இருக்கப்போறோம் அந்த நேரத்துல எதுக்கு டிஸ்டபென்ஸ்னு சொல்லி விட்டுட்டு வந்தேன். அவன க்ரெட் பண்ணி காதல் செய்யலாம்னு பாத்தேன். வந்ததுல இருந்து அந்த லேப்டாப்பையும் ஃபோனையுமே கட்டிட்டு இருக்கான்.
அட்லீஸ்ட் ஃப்ரீ டயத்துல வெளில எங்கையாது ஊர் சுத்த கூட்டீட்டு போவான்னு பாத்தா, அதுவும் செய்யாம, இந்த இத்துப்போன ஹோட்டல தவிர எங்கையும் போக விடாம அடச்சி வச்சி என்ன கொடும படுத்திட்டு இருக்கான். இடியட். " எனத் தேவ்வைத் திட்ட.
"இங்க யாரோ என்னைப் பாராட்டுற மாதிரி இருக்குதே. யாரு அது?. " என்றபடி வந்தான் தேவ். அனைவரும் நீச்சல் குளத்திற்கு அருகில் நின்றிருந்தனர். வாசு சிறு வெட்க சிரிப்புடன் ருத்ராவைப் பார்க்க, தன்யா கோபமாகப் பார்த்தாள்.
" உன்னைத் தான் திட்டீட்டு இருக்கேன். நீ ஒரு அரகென்ட்டுன்னு இப்பத் தான் கண்டு பிடிச்சேன். "
"ரொம்பச் சீக்கிரமா கண்டு பிடிச்சிட்ட வாழ்த்துக்கள். அப்றம் இன்னைக்கு நைட் ஒரு மேஜிக் சோக்கு போகப்போறோம். "
"நீயும் நானும் மட்டுமா தேவ். " என்றவளை தேவ் முறைக்க.
"இல்ல, நாம ரெண்டு பேரும் மட்டும் தனியா எங்கையாது போகலாம்னு நினைச்சேன். " என்றவளின் குரலில் நிஜமாகவே ஏக்கம் இருந்தது. அதை உணர்ந்தவன்.
"நாளைக்கி ராஜியும் முரளியும் கிளம்புறாங்க. அதுக்கு அடுத்த நாள் சின்ன வேலை இருக்கு. ரிட்டன் போகும்போது நாம கார்ல போகலாம். பேசிட்டே." என்க, பாய்ந்து வந்து அவனை அணைத்தாள் தன்யா.
"தேங்க்யூ தேவ். எனக்குத் தெரியும் நான் உனக்கு ஸ்பெசல்னு. கார்ல வச்சி… ம்... ம்... " என ஒரு மார்க்கமாகச் சிரித்தவளைப் பிடித்துத் தள்ளிவிட்டு விட்டுச் சென்றான் தேவ்.
"தேவ்… என்ன காப்பாத்து. தேவ்... " எனக் கத்தினாள் அவள். ஏனெனில் அவன் அங்கிருந்த குளத்தில் தள்ளி விட்டுச் சென்றிருந்தான், திரும்பியும் பாராது.
"தேவ், எனக்கு நீச்சல் தெரியாது. அது உனக்கே தெரியும் தான். அப்றம் ஏன் என்னை விட்டுட்டு போற. நான் கத்துறது கேக்குதா. ஆ... " எனத் தண்ணீரை வாயில் வைத்துக் கொண்டுத் தெளிவற்ற குரலில் கத்த.,
'செத்தா சொல்லி அனுப்புங்க. ' என்பது போல் கண்டு கொள்ளாது சென்றான் அவன்.
" ஹெல்ப்... தேவ்... ஹெல்ப் பண்ணு. "
"மே…ம். " என்றாள் வாசு.
" தேவ். "
"மேம். "
"அடச்சி வாய மூடி. நானே தண்ணீல மூழ்கிட்டு இருக்கேன். மேமு. மேமுன்டு. எனக்கு நீச்சல் தெரியாது. அவன் தான் வந்து என்னைக் காப்பாத்தணும். தண்ணீல தவிக்கிற என்னைத் தூக்கிட்டு போய் முதலுதவி செய்வான். அப்ப... அப்ப…"
" முத்தம் குடுப்பாரு. காதல் வந்திடும். சரியா? " என அருகில் நின்றுக் கொண்டுக் கேட்க.
"ஆமா, கரெட்டா சொல்லிட்ட. உனக்கு எப்படி தெரியும். "
" தன்யா மேம் சினிமா படத்த பாத்திட்டு தப்பு தப்பா ஃப்ளான் போடுறிங்க ஓகே. பட், தப்பா போடுற ஃப்ளான தப்பாவே செயல் படுத்துனா எப்படி மேம். தப்பாத் தான் இருக்கும். எந்திரிங்க தன்யா மேம். " எனக் கரம் நீட்ட,
'ஏது தப்பா எக்சிக்யூட் பண்றேனா!. என்ன சொல்றா!. ' என வாசுவின் முகம் பார்க்க,
" எந்திரிக்க முடியலயா ஆன்டி. நான் வேணும்னா ஹெல்ப் பண்ணவா. " எனக் கேட்டு ஒரு சிறுவன் கை நீட்ட, அப்போது தான் கவனித்தாள் அது சிறுவர்கள் விளையாட ஏதுவாக ஆழம் குறைவாகக் கட்டப்பட்ட குளம் என்று. இரண்டு அடி கூட இல்லாத குளத்தில் எப்படி மூழ்குவது. அசட்டு சிரிப்புடன் எழுந்து நின்றாள் தன்யா.
"நீங்க போட்ட ஃப்ளான் நடக்கணும்னா பக்கத்துக் குளத்துல குதிச்சிருக்கணும். அதோட ஆழம் ஏழடி. அப்பயும் கிஸ்லாம் பண்ண சான்ஸ் இல்ல. ஏன்னா அங்க ஒருத்தர் இருக்காரே. அவருதான் கார்டு. நீச்சல் குளத்துல தவறி விழுகுறவங்கள பாஞ்சி வந்து காப்பாத்துவாரு. டாக்டரும் கூட. உதவின்னு குரல் குடுத்தா உடனே குதிச்சிடுவாரு. " என உயர்ந்த நாற்காலியில் அமர்ந்திருந்த லைஃப் கார்டை காட்ட, வாசுவை முறைத்தபடி பின் தொடர்ந்தாள் தன்யா.
"ஹேய்... வாசு, உனக்கு இந்த ஊர்ல எல்லாரையும் தெரியுமா?. "
"இல்ல. ஒரு சிலர தான் தெரியும். ஏன் கேக்குற?"
"எனக்கு ஒரு டிரெக்டிவ் வேணும். கிடைக்கமா? "
"டிரெக்டிவ்வ யாராது பாக்கெட்ல வச்சிட்டு திரிவாங்களா.” என்றவளை தன்யா முறைக்க,
“ஆமா, உங்களுக்கு எதுக்கு டிரெக்டிவ்?"
"ஒருத்தன ஃபாலோ பண்ணி அவன் மறைக்க நினைக்கிற சில ரகசியத்தக் கண்டு பிடிக்கணும். "
" யார ஃபாலோ பண்ணணும்? எதைக் கண்டு பிடிக்கணும்?"
"இப்ப வந்து என்னைத் தள்ளி விட்டுட்டு போனானே. ஈவு இரக்கம் இல்லாத ருத்ரதேவ். எங்கத்தை மகன். அவனத்தான். " என்றாள் தன்யா.
ஏன் என்ற கேள்வியுடன் அவளின் முகம் பார்த்தாள் வாசு.
" அவனுக்கு இந்த ஊர்ல ஒரு ரகசிய காதலி இருக்கா! அவ யாருன்னு கண்டு பிடிக்கத் தான் அவன் பின்னாடியே வந்தேன். " என்றபோது வாசுவிற்கு சிரிப்பாக வந்தது. ரகசிய காதலி என்றதும் மனதிற்குள் பட்டாம்பூச்சி பூச்சிகள் பறக்க, தன்யாவைக் கவனிக்கலானாள்.
"எம்மாமன் மகன க்ரெட் பண்ண நினைக்கிற லேடி யாருன்னு கண்டு பிடிக்கணும். கண்டுபிடிச்சிட்டேன்னு வை."
"கண்டு பிடிச்சா? "
"அவள ஓட ஓட விரட்டி விட்டுடுவேன். என்னோட முறைப்பையன காதலிக்கிற உரிம எனக்கும் எங்கக்காவுக்கும் தான் இருக்கு. ஆல்ரெடி அவ காதலிச்சதுனால தான் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டா. நானும் ஆகணும்ல. அதுக்கு இவள ஊர விட்டுத் துரத்தி விடணும். " என்க.
"ஸாரி, உங்களுக்கு என்னால உதவ முடியாது. எனக்கு டிரெக்டிவ் யாரையும் தெரியாது. வேற யார்கிட்டனாலும் ஹெல்ப் கேட்டுக்கங்க. " என்றவள் நலுவிச் சென்றாள்.
"இவ ஏன் இந்த நெளி நெளியுறா. ம்... இதையும் கண்டு பிடிக்கிறேன். எல்லாத்தையும் ஒத்தயாளா நின்னு கண்டுபிடிக்கிறேன். " என்றபடி சென்றாள் தன்யா.
மாலை மேஜிக் ஷோவிற்கென குஷியாகக் கிளம்பினர் தன்யாவும் ரோகிணியும். தேவ் அவர்களை இறக்கி விட்டுச் சென்று விட்டான்.
" எங்களுக்கு பிக்கப்-டிராப் வேலை பாக்கத்தான் இந்த ஊர்ல இன்னும் சுத்திட்டு இருக்கியா. " எனத் தன்யா கேலி செய்ய, தேவ் அவளின் தலையில் தட்டி விட்டு, புன்னகையுடன் சென்றான்.
ராஜியும் முரளியும் இன்னும் வாசுவின் பொறுப்பில் தான் உள்ளனர். முரளி, ராஜி, வாசு, கடைசியா தன்யா என வரிசையாக அமர்ந்து ஷோவைப் பார்க்க, குதுகலமாக இருந்தது. ரோகிணி மட்டும் ஓரிடத்தில் இல்லாது தன்யா, வாசு என இருவர் மடியிலும் மாறி மாறி அமர்ந்தாள்.
" குட்டி சாத்தான். ஒரு இடத்துல உக்காரு. " எனத் தன்யா திட்ட, வாசுவின் மடியை விட்டு இறக்கவில்லை ரோகிணி.
ஆர்வமாகவும் ஆச்சர்யமாகவும் அந்தக் கண்கட்டி வித்தைகளைப் பார்த்தனர். அந்தரத்தில் மிதக்கும் மனிதன். உடலில் பல கத்திகளைச் சொருகியும் புன்னகை சிந்தும் பெண். அவை எல்லாம் பெரியவர்களைக் கவர்ந்தது என்றால் சிறியவர்களைக் கவர தொப்பிக்குள் இருந்து முயலை எடுப்பது, சாக்லேட் மழை பொழியச் செய்தது என ஷோ கலைகட்டியது.
ஷோவை வெகு மும்மரமாகப் பார்த்துக் கொண்டிருந்த தன்யாவின் கரத்தை யாரோ வருடுவது போல் தோன்ற, திரும்பி அருகில் இருந்த ஆளைப் பார்த்தாள் தன்யா.
ஆண் என்று வரிவடிவமாகத் தெரிந்தது. ஆனால் முகம் சரியாகத் தெரியவில்லை. ஒருவித க்ரே கலரில் டீசர் அணிந்திருந்தான் அந்த ஆண்.
கரத்தை விலக்கிக் கொண்டு வாசுவின் பக்கம் சாய்ந்து ஷோவை தன்யா பார்த்தாள். அவ்வபோது அருகில் இருந்தவனையும் திரும்பிப் பாராது கடைக்கண்ணால் அவனின் முகம் பார்க்க முயன்றாள். பாவம் அவளுக்கு முகம் தெரியவே இல்லை.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..