அத்தியாயம்: 50
தேவ்வின் விருப்பமான இடம் இன்று வெறுப்பை உமிழும் இடமாய் மாறி இருந்தது. மூச்சை பிடித்துக் கொண்டு அடி ஆழத்தில் சுற்றி நீர் இருந்தாலும் தன் நாயகியின் குற்றம் சாட்டும் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.
‘என்னை லவ் பண்ண மாதிரி நடிச்சிருக்க’ என்ற அவளின் குற்றச்சாட்டை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. என் காதல் எப்படி அவளுக்கு நடிப்பாகத் தெரிந்தது என்ற ஆதங்கம் மேலோங்க நீரிலேயே மிதந்தான் ருத்ரா.
இரு வாரத்திற்கு முன் அவனின் மெயிலுக்கு வந்த வாசுவின் ரிசைனிங் மெயிலை பார்த்ததில் இருந்தே, அவனின் மனம் ஏன் என்ற கேள்வியை எழுப்பியது. ஆனால் அதற்கு அவள் தந்த பதில் பெரும் வலியைத் தந்ததுவிட்டது. எத்தனை மணி நேரம் அதில் முழுகிக் கிடந்தானோ தெரியாது.
"தேவா, என்னடா இது காலைல இருந்து இங்கையே கெடக்க. என்னாச்சி. " க்ரிஷ்.
" நத்திங். " என்றான் ஒற்றை வரியில்.
"எனக்குத் தெரியும் தேவா நீ சொல்லலன்னாலும். வாசு ரிசைனிங் மெயில் தான உனக்குப் பிரச்சன. கவலையே படாத வீட்டுல எல்லாருக்கும் அவள ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்குச் செக்கேண்ட் மேரேஜ்ஜா இல்லாம. வாசுவ உனக்கு ஃபஸ்ட் மேரேஜ்ஜாவே பண்ணி வைக்க எல்லாருக்கும் சம்மதம். நம்ம டாட் கூட நேத்து இதப்பத்தி பேசுனாரு.
மதன் அங்கிள்க்கு தான் சின்ன வருத்தம். பட் ராசாத்தி பாட்டிட்ட அமோக வரவேற்புனா பாரேன். உனக்கு வாசு கூட மேரேஜ் முடியவும் கார்த்தி மாமாவ இன்னொரு மகனா தத்தடுத்து அவரு வீட்டுலயே தங்கிக்க போகுதாம். இப்பவே ரூம் ஒதுக்கச் சொல்லிக் கேட்டுட்டு இருக்கு. " எனத் தம்பியை உற்சாகப்படுத்தும் படி பேசினான்.
நீரை விட்டு எழுந்து வந்தவன். க்ரிஷிடம் எதுவும் பேசாது செல்ல, " கல்யாணத்துக்கு அப்பறம் வைஃப் நம்ம கூட வேல பாக்கணும். நமக்குக் கீழ இல்ல. சோ, அவள ரிலீவ் பண்ணறதுதா நல்ல முடிவு. " என்க.
"யாருக்கு கல்யாணம்?"
"உனக்குத் தான்டா. "
"ம்ச்... யார் கூட? " என்றவனின் அருகில் எழுந்து வந்து அவனைச் சுற்றி சுற்றி வந்து அவனின் காதில் ஊதினான் க்ரிஷ்.
"ம்ச்… என்ன பண்ற க்ரிஷ்?"
"இல்ல தண்ணிக்குள்ளயே இருந்தா சில நேரம் காதுக்குள்ள தண்ணீ போய் அடச்சிக்கும். அதான் " என்க! அவனை முறைத்தான் தேவ்.
" உனக்குத் தான்டா கல்யாணம். பொண்ணு வாசவி கார்த்திகேயன். இவ்ளோ நேரம் நான் பேசுனத கேக்கலயா நீ. "
" அது தான் நடக்காதே. " என்றான் சிறு வெறுப்பாக.
" ஏன் நடக்காது? டாட் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கார்த்தி மாமாட்ட இதைப் பத்தி பேசுனாரு. "
" கண்டிப்பா அந்தாளுக்கு என்னை பிடிக்காது. அதுனால ஓகே சொல்லிருக்க மாட்டான். சரியா."
"எப்படி டா இப்படி கரெக்ட்டா தப்பா சொல்ற. " என்க, தேவ்வின் புருவங்களைச் சுருங்கின.
" என்ன சொல்லவர்ற? " என்றவனை அமர்த்தி…
" கார்த்தி மாமாக்கு வாசவிய உனக்குக் கட்டி வைக்க முழுச் சம்மதம். " எனக் காதில் கத்த, நம்ப முடியாது பார்த்தான் தேவ்.
"இப்பயும் நம்பலயா. இரு. நான் கார்த்தி மாமாக்கு கால் பண்றேன். " என்றவன் கார்த்திகேயனுக்கு ஃபோன் செய்தான்.
" சொல்லு க்ரிஷ். என்ன விசயம்.?" என்றான் கார்த்திக்.
"மாம்ஸ்… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க அப்பாட்ட பேசுனத பத்தி உங்கட்ட பேசணாம். உங்களுக்கு வாசவிய தேவாக்கு கல்யாணம் பண்ணித்தர சம்மதம் தானே. " எனக் கேட்க,
" நான் அதுக்கான பதில் அப்பவே சொல்லிட்டேனே க்ரிஷ். "
"மறுபடியும் சொன்னா உங்க அக்வுண்டல இருந்து யாரும் பணத்த எடுத்துக்க மாட்டாங்க. இது என்ன OTP யா. ஒருக்கத்தா சொல்லுவேன்னு அடம்பிடிக்க." என்க, அந்தப் பக்கம் இருந்து சிரிப்பு சத்தமாக வந்தது.
“ஆழகா சிரிக்கிறாருல…” எனத் தேவ்வின் காதில் சொல்ல,
“அதப் போய் ரசிக்கிறியே டா.’ என முறைத்தான் தேவ்.
"எனக்கு வாசுவோட சந்தோஷம் தா முக்கியம் க்ரிஷ். அவளுக்குத் தேவ் மேல இன்ட்ரஸ்ட் இருக்குன்னு எனக்குத் தெரியும். அதுனால எனக்கு அவங்கள கல்யாணங்கிற பேர்ல சேத்து வைக்கலாம்னு தோணுது. " என்ற கார்த்திகேயனின் குரலை நம்ப முடியாது தவித்தான் ருத்ரா.
'எப்படி இந்தாளு சம்மதிச்சான்?. '
கார்த்திக் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை மகளின் மீது தினிக்கவில்லை. வாசு சொன்னது உண்மை தான் என்றுணர்ந்தான் ருத்ரா.
" கார்த்தி மாம்ஸ் எங்க வீட்டுக்கு வாசு வரணும்னா டவுரி வேணும். உங்களால குடுக்க முடியுமா. "
" என்னோட எல்லாமே எம்பொண்ணுக்கு தான். எதுனாலும் கேளு. என்னால முடிஞ்சத தருவேன். "
" வாசுக்கு தங்கச்சி கிடைக்குமா? "
" வாட்... " எனக் கார்த்திக் கத்த, ருத்ராவிற்குமே 'என்னடா கேள்வி இது. ' என்றிருந்தது. இருவருக்குமே அதிர்ச்சி.
"அது வேற எதுக்குமில்ல. எனக்குத் தான் வாசு இல்லன்னு ஆகிடுச்சி. அட்லீஸ்ட் தங்கச்சி இருந்தாலாவது. " என இழுக்க, ருத்ரா அவனைத் துண்டால் அடித்தான்.
" க்ரிஷ், உன்னோட பையனுக்குன்னு சொல்லிருந்தேன்னா கூட யோசிச்சிருந்திருப்பேன். உனக்கு நோ சான்ஸ். " என்க, புன்னைகையுடன் அதை அணைத்து விட்டான் க்ரிஷ்.
"இதெல்லாமாடா அந்தாள்ட்ட பேசுவ. அந்தாளும் வெக்கமே இல்லாம பதில் சொல்லிட்டு இருக்கான். " ருத்ரா.
"ஏன் பேசக் கூடாதா. தப்பா. அதென்ன அந்தாளு. ஒழுங்கா மாமான்னு கூப்பிடுற. ஏன்னா அவரு உன்னோட மாமனாரு. ஷாட் ஃபாம்மா மாமான்னு கூப்பிடணும். " என்றவனை முறைத்துவிட்டு உள்ளே செல்ல,
"ஒரு நாள் இல்ல ஒரு நாள் வாசு சண்டைக்கி வருவா. அப்பத் தான் உன்னோட பேச்சோட வீரியம் தெரியும். உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு கார்த்தி மாம்ஸ் வீட்டுலயே இருந்தாலும் இருந்துடுவா. அப்படி இருந்தா உன்னோட நிலைமை. மேரேஜ் ஆகியும் நீ பேச்சுலர் தான். " எனக் க்ரிஷ் அவனைக் கேலி செய்தபடி பின் தொடர்ந்தான்.
"தன்யா, ஒரே ஒருக்க வாய்ப்பு குடு அவனுக்கு. எல்லாத் தப்பையும் டேனியலால சரி செய்ய முடியும்மா. " தாரிகா.
" இல்ல, அவனுக்கு நான் வாய்ப்பு குடுக்க விரும்பல. செஞ்ச தப்ப உணர்ந்தவனுக்கு தான் திரும்ப ஒரு வாய்ப்பு குடுக்க முடியும். என்ன தப்பு பண்றோம்னே தெரியாத அவனுக்குக் குடுத்தா அவெ மறுபடியும் அதே தப்பத்தான் செய்வான். அதுனால அவெ எனக்கு வேண்டாம். "
" தன்யா, நீ அவன விட்டு விலகி இருக்குறதா நினைச்சி உன்னை நீயே காயப்படுத்திட்டு இருக்க. ப்ளீஸ் எனக்காக ஒருக்க. " என்ற போதே ஃபோன் அணைக்கப்பட்டிருந்தது. சோர்வுடன் சோஃபாவில் அதை வீசி எறிந்தவள் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
தன்யாவின் வாழ்க்கையை நினைத்துக் கவலையாக இருந்தது தாரிகாவிற்கு. அது ஹாலைக் கடந்து சென்ற இருவரின் கண்ணிலும் பட்டது. கூடவே தாரிகாவின் கண்களில் கண்ணீரும் வர, க்ரீஷ் ஓடி விட்டான். மனைவியின் துயர் நீக்க.
" ஹனி ஏன் அழற. என்னாச்சி டா. " என அவளை அணைத்துக் கொண்டு கேட்க, ருத்ரா இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பி செல்ல நினைத்தான். ஆனால் செல்ல விடாது இருவரின் பேச்சை நின்று கேட்க வைத்தது தன்யாவின் பெயர்.
"க்ரிஷ், எனக்குத் தன்யாவ நினைச்சா பயம்மா இருக்கு. "
" ஏன்டா. அவளுக்குத் தான் டேனியல பிடிக்கலன்னு சொல்லிட்டால்ல. அப்றம் ஏன் அவ கம்பள் பண்ற. கட்டாயப்படுத்தி காதல வரவைக்க முடியாது ஹனி. "
"எஸ்... கரெக்ட் தான். பட் அவ்ளோ சின்சியரா லவ் பண்ணவங்க, எப்படி ஒரே செக்கேண்டுல வேண்டாம்னு உதறீட்டுப் போய்டுறாங்கன்னு தான் எனக்குப் புரியல.
உன்னோட படிப்பு முடியவும் நீ கிளம்புறேன் சொன்னப்ப நாம சண்ட போட்டோமே நியாபகம் இருக்கா. நீயும் நானும் பேசாம இருந்தோமே. அப்ப எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்ததுன்னு தெரியுமா. என்னால நீ இல்லாம வாழ முடியும்னு தோனல. அதான் நான் உங்கூடவே வந்துட்டேன். நம்ம லவ்வுக்காக, சேந்து வாழணும்கிறதுக்காக. " என்றவளுக்கு இந்தியாவை விட்டு க்ரிஷை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே இருப்பதில் விருப்பமில்லை.
இதனால் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் வந்தது. ஆனாலும் விட்டுக் கொடுக்காது அவளைச் சமாதானம் செய்து அழைத்து வந்தவன் அவளுக்கு இந்தியாவில் இருப்பது போன்ற ஒரு உணர்வைத் தர விரும்பி அனைத்தும் பார்த்துப் பார்த்து செய்வான். வருடத்தில் ஒரு மாதமாவது மதன கோபால் வீட்டிற்கு அழைத்துச் செல்வான். அப்போதும் அவளை விட்டு விட்டு ஊர் திரும்பமாட்டான். கூடவே இருப்பான். க்ரிஷ்ஷின் காதல் அப்படி.
" அவங்களுக்குள்ளயும் லவ் இருந்தா நிச்சயம் சேருவாங்க தன்யா. அது சேத்து வைக்கும்."
"எனக்கு அப்படி தோனல க்ரிஷ். அவங்க லவ்வ காப்பாத்த அவங்க எந்த ஒரு முயற்சியுமே செய்யல. அப்றம் எப்படி. இம்ப்ரஸ் பண்ணி லவ் பண்ண வைக்கிறதுல காட்டுற பிடிவாதத்தையும் முயற்சியயும் பிரிஞ்சிப் போய்ட கூடாதுங்கிறதுல காட்டுறதே இல்ல அவங்க. " எனச் சொல்லி வருந்த, க்ரிஷ் சமாதானம் செய்தான்.
அவளின் பேச்சு நம் தேவ்வை சிந்திக்க தூண்டியது. தன் காதலை காப்பாற்ற எந்த முயற்சியும் செய்யாது தோல்வியை ஏற்பதா.
தன் அறைக்குச் சென்றவன் தன் கீறல் விழுந்த மொபைல எடுத்தான். அதில் அவள் தனக்கு அனுப்பி குறுஞ்செய்திகளை ஒவ்வொன்றாகப் படிக்கத் தொடங்கினான்.
முதலில் அவள் அனுப்பிய பல மெஸ்ஏஜ்களை அவன் படிக்கவே இல்லை. பின் வரும் நாட்களில் அதை மனப்பாடம் செய்தான்.
"எனக்குப் பாய் ஃப்ரெண்ட்டா இருந்து எங்கூட அவுட்டிங் வரணும் நாலே நாலு ஃபோட்டோ அது மட்டும் போதும். என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் அதைக் காட்டி நான் வெறுப்பேத்தணும். அது மட்டும் போதும். எனக்குப் பாய் ஃப்ரெண்ட்டா இருப்பியா. ப்ளீஸ்… " எனக் கேட்டுச் சில பல எமோஜிக்களைப் போட்டு அவள் அனுப்பி மெஸ்ஏஜ்ஜை இப்போதும் படிக்கும் போதும் அவனின் தேகம் சிலிர்த்தது.
அவளின் டீபியில் இருந்த அவளின் முகத்தை ஸ்க்ரீன் சாட் எடுத்து வைத்திருந்தான் அவன். டின்ஏஜ் வயது வாசு. அதைத் தன் விரல்களால் வருடிப் பார்த்தவணுக்கு தான் சிறு வயதில் பழகிய வாணியின் நினைவு தான் வந்தது.
வாணியும் மூக்குத்தி அணிந்திருப்பாள், வாசு அணிந்திருந்திருப்பது போல். அது ருத்ராவைக் கவர்ந்தது. முதலில் வாணியின் நினைவில் தான் அவளுடன் பேசத் தொடங்கினான். ஆனால் அவளுடன் ஃபோனிலேயே பேசி பழகும்போது வாசு மீது காதல் தானாக வந்துவிட்டது. அவளின் வயதை மனதில் வைத்துத் தன்னை வெளிக்காட்டாது பழகினான்.
நேரில் சந்திக்கலாம் என்று சொல்லும்போது அவளுடன் எப்படி பேச வேண்டும் எனச் சின்னப் பையன் போல் கண்ணாடி முன் நின்று பேசிப் பார்த்தது இப்போது நினைத்தால் கூடச் சிரிப்பாக இருந்தது. தடுமாறாமல் அவளுடன் பேச வேண்டிய வார்த்தைகளை ஒரு பேப்பரில் எழுதியெல்லாம் வைத்திருந்தான்.
முதலிலேயே காதலை சொல்லி அவளைப் பயமுறுத்தக் கூடாது. நட்பாய் பழகிப் பின் மெல்ல மெல்ல தன் மனத்தை அவளுக்கு உணர்ந்த வேண்டும் எனப் பல திட்டங்கள் போட்டு வந்திருந்தான்.
ஆனால் எதையுமே செயல்படுத்த முடியவில்லை. அந்த காஃபி ஷாப்பில் அவள் மட்டும் இல்லாமல், கூடவே அவளின் தந்தையையும் அழைத்து வந்திருந்தாளே. கார்த்திகேயனை தவிர வேறு யாரா இருந்திருந்தாலும் ருத்ரா வாசுவிடம் பேசாது சென்றிருக்க மாட்டான்.
வாசு, கார்த்திகேயனின் மகள் என்பதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. 'எப்படி?. அந்தாளு மகளான வாசு? ச்ச… அவெ பொண்ணையா நான் லவ் பண்ணணும். வேண்டாம்… எனக்கு அந்தக் கார்த்திகேயனோட பொண்ணே வேண்டாம். ' என்று நினைத்தவனால் வாசுவை மறக்கவே முடியவில்லை. எத்தனை முயன்றும்.
அவளுடனான தொடர்பைத் துண்டித்திருந்தாலும் வாசுவைக் கண்காணிக்க அவன் தவறியது இல்லை. அவளின் மிடில் ஸ்கூல், ஹைஸ் ஸ்கூல், கல்லூரியென அனைத்திலும் அவள் செய்யும் சேட்டைகளைப் பார்க்க பார்க்க காதல் கூடிக் கொண்டே சென்றது.
வாசு மட்டும் கார்த்திகேயனின் மகளாக இல்லாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்காத நாளே இல்லை.
சிறுகச்சிறுக சேர்த்து வைத்த நாணயங்கள் ஒரே நாளில் காணாது சென்றால் அதைத் தேடாது விட்டுவிடுவோமா என்ன?. அது நம்முடையது. நம் கனவு. நாம் சேர்த்து வைத்தது. அதைத் தேட வேண்டும். கைச்சேரும் வரை நம் தேடலை நிறுத்துக் கூடாது.
அதேப் போல் தான் வாசுவின் மீது ருத்ரா கொண்ட காதல். பல ஆண்டுகளாகச் சிறுகச்சிறுக வந்தது. எப்படிக் கண் முன்னே கை நலுவிச் செல்வதை வேடிக்கைப் பார்ப்பது. கூடாது... மிஸ்டர் கார்த்திகேயன் கல்யாணத்தைப் பற்றி வாசுவிடம் பேசுவதற்கு முன் தான் இழந்த காதலை அவளிடம் கொண்டு வருவேண்டும். திருமணத்திற்காக அவன் என்னைக் காதல் செய்யக் கூடாது. காதலுக்காகத் தான் கல்யாணம் என்றிருக்க வேண்டும், என்று உறுதி பூண்டவன்,
முதல் வேலையாகத் திருமண பேச்சைச் சில மாதங்களுக்குத் தள்ளி போட்டான். பின் அவளைத் தன்னிடம் வரவைக்கும் வழியைத் தேடினான்.
எப்படி கார்த்திகேயனுக்காகத் தன் காதலை இழிவு படுத்தினாளோ… அதே போல் கார்த்திகேயனை எனக்காக உதரவேண்டு. தன்னால் அந்தக் கார்த்திகேயனை ஒரு முறையாவது அவளின் பார்வையிலிருந்து தரம் இறக்க வேண்டும். அதன் பின் தான் அவளைத் திருமணம் செய்ய வேண்டும்.
திட்டம் தீட்டினான். இம்முறை அது தோல்வியைச் சந்திக்கவே கூடாது என்ற உறுதியுடன் தீட்டப்பட்ட திட்டங்கள் அது.
கார்த்திகேயனின் மேல் இவனுக்கு அப்படி என்ன வன்மம் என்று தெரியவில்லை.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..