அத்தியாயம்: 57
காலைக் கதிரவன் தன் பணியைச் சிறப்புடன் செய்ய, பொழுது புலர்ந்தது. கார்த்திக் இன்று மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் எழுந்தான். ஏனெனில் அவனுக்குச் சென்னையில் உள்ள ஒரு புகழ் பெற்ற இன்ஜினியரிங் காலேஜில் இடம் கிடைத்துள்ளது. ஒரு ரூபாய் கூடச் செலவு செய்யாது. யாரின் சிபாரிசும் இன்றி அவன் வாங்கிய மதிப்பெண்கள் அவனை அந்த இடத்தில் கொண்டு வந்து சேர்த்துள்ளது.
இன்று, கல்லூரியின் முதல் நாள். அவனுக்கு மட்டுமல்ல. ஜோஹிதாவிற்கும் தான். அவனைத் தினமும் பார்க்க ஏதுவாக அவனின் கல்லூரிக்கு அருகிலேயே வேறொரு கல்லூரியில் பிஏ இங்லீஸ் சேர்ந்துள்ளாள்.
டிரிங்... டிரிங்…
" ஹேய்… ஜோஹி, குட்மார்னிங். இதோ கிளம்பிட்டேன். பத்து நிமிஷத்துல அங்க இருக்குப்பேன்."
"... "
" ம்…"
"..."
"சரி. "
"..."
"ஓகே. நான் பஸ்ல வரல பைக்ல தான் வரப் போறேன். அப்சத் கூட. " என்றவன் ஃபோனை வைத்துவிட்டு தன் உடையிருக்கும் கப்போர்டை திறந்தான். மஞ்சள் அது ஜோஹிதாவின் விருப்ப நிறம். எனவே வெந்தய மஞ்சள் நிற சட்டையை எடுத்து அணிந்து அதற்கு மேச்சாக ஒரு ஃபார்மல் பேட்டை அணிந்து கொண்டு தன் அறையை விட்டு வந்தான்.
"ஐய்யா கார்த்தி! நீயாய்யா இது. அப்புச்சி கண்ணுக்கு நீ இன்னைக்கி அம்புட்டு அழகா தெரியுறியே ராசா. " என அவனின் கன்னம் தொட்டு வழித்தார் அவனின் பாட்டி. அவனின் தந்தையைப் பெற்றெடுத்தவர்.
" நல்லா இருக்கேனா! இன்னைக்கி தான் எனக்குக் காலேஜ் மொத நாளு. உம்பசங்க நாலு பேருல எவெ காலேஜிக்கி போயிருக்கான்… சொல்லு. அட்லீஸ்ட் அதுக பிள்ள குட்டிகளையாது படிக்க வச்சி பள்ளிக்கூடத்தத் தாண்ட விட்டிருக்கானுங்களா? " எனக் கேட்டபடி அவரின் அருகில் அமர,
"அதுங்கொல்லாம் மக்கு பயபக்கிங்க. உன்னை மாதிரி அறிவு அதுகளுக்குக் கிடையாது. உங்கப்பன் புத்திசாலித்தனமும் அழகும் அப்படியே உனக்கு இருக்கு ராசா. அவெந்தா அல்பாயிசுல போய்ட்டான். நீ நல்லா இருக்கணும்யா. அவெ போகாத உசரத்துக்கு நீ போகணும். " என வாழ்த்த, கார்த்திக்கிற்கு அவனின் தந்தையின் நினைவு வந்தது.
" கார்த்திக் நேரமாது. வந்து சாப்பிடு. " என அழைத்தாள் அவனின் தாய் வான்மதி.
"ம்ச்… எனக்கு வேண்டாம். " என்றவனை வான்மதி தடுக்கும் முன் பாட்டியின் குரல் நிப்பாட்டியது.
" ஐய்யா... ராசா... மொத மொத பெரிய படிப்பு படிக்கப் போற. வயித்துக்குள்ள எதையாது போட்டுட்டு போ ராசா. இந்த அப்புச்சிக்காக." என்க,
"வேண்டாம் அப்புச்சி. என்னோட ஃப்ரெண்டு வந்திடுவான். " என எழுந்தான்.
"அப்ப நானும் சாப்பிட மாட்டேன். நீ எப்ப வந்து எங்கண்ணு முன்னாடி உக்காந்து சாப்பிடுறியோ… அப்பத் தான் நானும் திம்பேன்." என முகம் திருப்ப, அவன் டைனிங் டேபிளில் இருந்த உணவைப் பார்த்தான். அவனுக்குப் பிடிக்கும் எனப் பூரியும் கிழக்கும் வைத்திருந்தார் வான்மதி. ஆனால் அவன் அதைத் தொடாது, சமையலறைக்குள் சென்றான்.
அடுப்பைப் பற்ற வைத்து இரும்பு கடாயை அதன் மேல் வைத்தான். அதில் சிறிது நல்லெண்ணெய் விட்டு உளுந்தும் கடலைபருப்பும் போட்டுத் தாளித்து வத்தல், பூண்டு, வெங்காயம், சிறுபெருங்காயம், கருவேப்பிலை மல்லித்தழை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கி, இறக்கும் முன் சிறு நிலக்கடலையை தோலுரித்து அந்தக் கடாயில் போட்டு தீயை அணைத்து விட்டான். சூடு ஆறியதும் உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்து எடுத்தான்.
அதே சமயம் மற்றொரு அடுப்பில் தோசையை வார்க்கத் தொடங்கினான். பேப்பர் ரோஸ்ட் என்பார்களே அதுபோல் காகிதங்களாக அதை மடித்து எடுத்து வந்து பாட்டியின் முன் வைத்தான். ஒரு வாய் விட்டுச் சுவைத்து விட்டு, கண்ணீர் விடத் தொடங்கினார் பாட்டி.
"ஏன் அப்புச்சி! காரமாவா இருக்கு?" என்க,
"இல்லய்யா. எனக்கு உங்கப்பன் நியாபகம் வந்துடுச்சி. அவனும் இப்படி தான் பத்து நிமிஷத்துக்குள்ள ஊருக்கே சமைக்க சொன்னாலும் படபடன்னு வேலையப் பாத்து, சுவையா, பக்குவமாச் சமைப்பான். அந்தப் பக்குவம் உனக்கும் இருக்கு. அதான் அப்பன மாதிரியே பொறந்திருக்கியேன்னு ஆனந்த கண்ணீரு. " என்க.
" நான் அப்பறமா வந்து உங்கண்ணீர தொடைக்கிறேன். இப்போதைக்கி நான் கிளம்பணும். இல்லன்னா அப்சத் என்னை விட்டுட்டு போய்டுவான். முதல் நாளே காலேஜ்ஜுக்குப் போகாம உங்கூட பல்லாங்குழி விளையாட உக்காந்திடுவேன்.. பாய். " எனப் பாட்டிக்கு மட்டும் சொல்லிவிட்டு சென்றான், தாயை திரும்பியும் பாராது.
வான்மதி என்ன என்று கேட்டால் மட்டுமே பதில் சொல்வான். மற்றபடி அவளுடன் பேசமாட்டான்.
அது கோபம். தாயின் மீதுள்ள கோபம். பல ஆண்டுகளாகவே இருக்கிறது.
ஒரு குடும்பம் நல்லபடியாக முன்னேற வேண்டும் என்றால் அதன் பொறுப்பு அந்த வீட்டு ஆணிடம் மட்டும் இல்லை. குடும்ப தலைவியிடம் தான் உள்ளது. இருவருமே சம அளவு உழைத்தால் மட்டுமே அவர்களின் தலைமுறை மகிழ்ச்சியுடன் வாழும்.
குடும்ப தலைவனுக்கு உதவியாகத் தலைவியும். தலைவிக்கு அனுசரனையாகத் தலைவனும் நடந்து கொண்டால் வாழ்க்கைச் சிறக்கும். ஆண் முடங்கினாலோ அல்லது பெண் முடக்கப்பட்டாலோ குடும்பம் குடும்பமாக இருக்காது. இது யாருக்கு பொருந்துதோ இல்லையோ கார்த்திக்கின் குடும்பத்திற்குச் சரியா பொருந்தும்.
வண்ண வண்ண கனவுகளுடன் தன் பதினைந்தாம் வயதில், முப்பது வயது அம்மையப்பனைத் திருமணம் செய்யும்போது அவர் ஒரு அரிசி ஆலையில் வேலையில் செய்துகொண்டிருந்தார். அத்தை மகள் தான். அம்மையப்பனின் தம்பியின் மீது காதல் வைத்திருந்தவளை பிடித்து அம்மையப்பனுக்குக் கட்டி வைத்து விட்டனர்.
வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்த போதும் திருமணம் முடிந்த கையோடு தன் மகனைத் தனிக்குடித்தனம் என்ற பெயரில் பக்கத்திலேயே தனி வீட்டில் குடி வைத்தார் அம்மையப்பனின் தாய். ஏனெனில் அவருக்கு வான்மதியின் எண்ணம் தெரியும். எனவே வான்மதியைக் கடைசி மகனிடமிருந்து சற்று விலக்கியே வைத்திருந்தார்.
ஆலைக்குக் காலை வேலைக்குச் சென்றால் இரவு தான் வருவார் அம்மையப்பன். வான்மதி அவரை அனுப்பி விட்டால் மாமியார் நாத்தனார் ஓரகத்திகள் என யாரின் தொந்தரவும் இல்லாமல் உடல் நோகாம படுத்துறங்குவார். வியர்வை சிந்தாது சோம்பி கிடப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும்.
கார்த்திக் பிறந்த சில நாட்களிலேயே அந்த ஆலை மூடப்பட்டது. இனியும் பிறரிடம் கையேந்தும் தொழிலாளியாக இல்லாது, சொந்தமாக எதையாவது செய்ய வேண்டும் என்று ஒரு கையேந்தி பவனை ஆரம்பித்தார் அம்மையப்பன். அவருக்குச் சமையல் கலைமீது பிரியம் இருந்தது. அவரின் கைமணம் பேசப்பட்டது.
வான்மதிக்கு நகை புடவை எனப் பகட்டு வாழ்க்கை மீது ஆவல். ஆனால் கடை வைக்கப் பணம் வேண்டும் என்று அதை விற்றுவிட்டார் அம்மையப்பன். அவளிடம் எதுவும் கேளாது.
அதுமட்டுமல்ல உணவகம் நடத்துவது என்றால் சும்மா இல்லை. காலை, விடியும் முன்னரே எழ வேண்டும். வாங்கி வரும் காய்கறிகளைத் தரம் பிரித்து நறுக்க வேண்டும். கைக் குழந்தையான மகனைக் கவனிக்க வேண்டும். குவியும் பாத்திரங்களைக் கழுவ வேண்டும். எல்லாத்திற்கும் வேலைக்கு ஆள் போட்டால், போட்ட முதலைக் கூட எடுக்க முடியாது. எனவே கணவனுக்கு உதவியாக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை வான்மதிக்கு. ஆனால் அது அவருக்குப் பிடிக்க வில்லை.
பிறந்ததில் இருந்தே வேலை செய்கிறோம். தாய் வீட்டில் தான் அந்தக் கொடுமை என்றால் வாக்கப்பட்டு வந்த வீட்டிலும் சும்மா இருக்க முடியவில்லை. குறுக்கு ஒடியும் அளவுக்கு வேலை இருக்கும். முதல் இரு மாதம் தான் பல்லைக் கடித்துக் கொண்டு அம்மையனுடன் வேலை செய்ய, பின் சண்டை போடத் தொடங்கி விட்டாள்.
"இந்தாடி நீ என்ன மாடத்து இளவரசியா. இல்ல வானத்துல இருந்து குதிச்சி வந்த தேவதையா. உக்காந்த இடத்துலயே நீ கண்ண காட்டுனதும் ஊழியம் பண்ண ஆளாளுக்கு ஓடிவர. நாமெல்லாம் அன்னாடம் காட்சி. வேலை பாக்கலன்னா பட்டினி தான் கொடக்கணும். போ... போய் வேலையப் பாரு. " என அதட்டுவார் மாமியார்.
ஆனால், அம்மையப்பன் எதுவும் சொல்லமாட்டார். சின்ன பெண்ணைத் திருமணம் செய்து வைத்து விட்டீர்களே அதுக்கு என்ன தெரியும். என்பார் அவர். வேலைக்கு ஆள் போட்டு மனைவியின் சுமையைக் குறைத்தார்.
அம்மையப்பனின் கை மணத்தில் அந்தக் கையேந்தி பவன் ஹோட்டாலாக மாறியது. சில வருடத்திலேயே அது மூன்று கிளைகளைத் தொடங்கு அளவிற்கு வளர்ச்சி கண்டது. அது அவரின் உடன் பிறப்புகளுக்குள் பொறாமையை உண்டு பண்ணியது.
செலவுக்கு எனப் பணம் கேட்டுச் சொந்தங்கள் வந்து சேர விரட்டி அடித்தாள் வான்மதி.
"நாங்களே இப்பத்தா கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி வந்துட்டு இருக்கோம். அதுக்குள்ள காசு தா பணம் தா-ன்னு பிச்சக்காரங்க கணக்க கையேந்திட்டு வாசல்லயே வந்து நிக்கிறீங்க. " என்ற பேச்சுச் சொந்தங்களைத் தூர நிறுத்தி வைத்தது.
கணவன் செக்கு மாடாய் சமயல் கூடத்தில் உழைக்க மனைவி பட்டும் நகையுமாய் ஜொலிக்கத் தொடங்கினாள். அம்மையப்பனுக்கு முதலுக்காகக் கொடுத்த நகைகள் பத்து மடங்காக வான்மதியின் உடலில் மின்னியது.
கண்ணாடியில் தன் முகம் காணும் போதெல்லாம் தன் அழகை கண்டு ரசிப்பாள் அவள். அது தவறு இல்லை தான். ஆனால் தனக்கு ஒரு கணவனும் குழந்தையும் இருக்கிறது என்று மறக்கும் அளவுக்கு அவளுக்குத் தன் அழகின் மீது மோகம் வந்தது தான் தவறு.
வயோதிகத்தின் காரணமாக முடி நரைத்து, உழைப்பின் காரணமாக வியர்வை வடிய அழுக்கேறிய கைலி பனியனுடன் வளம் வரும் அம்மையப்பனைக் கணவன் என்று கூற, ஏன் அவரைத் தன் அருகில் நெருங்குவதை கூட விரும்பமாட்டார் வான்மதி.
அவரின் அழகிற்கு ஏற்றக் கணவன் அம்மையப்பன் அல்ல என்ற எண்ணம் தன் அழகிற்கு இணையான வேறு ஆண்மகனை தேட வைத்தது.
அந்தத் தேடல் தான் ஒருவனை வான்மதியின் கண்களுக்குக் காட்டியது. அவர்களின் உணவகத்தில் அடிக்கடி வரும் பரமசிவம் அவளுக்குப் பழக்கம் ஆனான். கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அவனின் மீது வான்மதிக்கு மையம் வர, அது திருமணம் மீறிய உறவாய் மாறியது.
இதை அறியாத அம்மையம்மன் மனைவியை எப்பொழுதும் போல் சிறு பெண்ணாய் பார்க்க, வான்மதிக்கு அவரை ஏமாற்றுவது சுலபமாக இருந்தது.
அவரை ஏமாற்றலாம் ஆனால் மற்றவர்கள் ஏமாற மாட்டார்களே. அம்மையப்பனின் உடன் பிறப்புகளும் அதன் மனைவிமார்களும் வான்மதியை கையும் களவுமாகக் காட்டிக்கொடுக்க, அடி வெளுத்துவிட்டார் வான்மதியை. அவளும் சும்மா இல்லை. அம்மையப்பனிடம் உள்ள குறைகளைச் சொல்லி அவரை அவமதிக்க, வீடு சுடுகாடாய் மாறியது.
மனைவியின் கேவலமாக உறவைக் கண்டிக்க வக்கில்லாத பயெ... கட்டுன பொண்டாட்டிய சந்தோஷப்படுத்த தெரியாத ஆம்பள... கையாலாகாத ஆம்பள... என ஊராரின் ஏளன பேச்சு அம்மையப்பனைக் குடிகாரனாக்கியது. தொழிலில் கவனம் சிதற, விரைவில் அனைத்தையும் விற்று கடனாளியாகவும் ஆக்கியது.
கார்த்திக்கிற்கு அவை எதுவும் தெரியாது. தாயின் ஏளனப்பேச்சும். தந்தை குடிக்கிறார் என்று மட்டுமே புரிந்தது அந்த வயதில். அதைத் தான் கோபமாக இப்போதே வரை மனதில் பதிய வைத்திருக்கிறான்.
ஒரு முறை அந்தப் பரமசிவத்தை வீட்டிற்கு அழைத்து வந்த வான்மதியை உறவினர்கள் ஏச, அவள் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.
"அந்தச் சமயக்காரன கட்டீட்டு காலம் முழுக்க நான் வேலைக்காரியாவே சமயக்கட்டுக்குள்ள இருக்கணுமா என்ன? எனக்கும் வயசு இருக்கு. நானும் ஆம்பள சொகத்தோட வாழணும். ஆம்பளையா இருக்க முடியாத இந்தாளு கூட என்னால வாழ முடியாது. என்னை அத்து விடச் சொல்லுங்க. நானா எனக்குப் பிடிச்சவெ கூடச் சந்தோஷமா வாழணும்." என ஊரைக் கூட்டி பஞ்சாயத்து வைத்தாள் அவள்.
இதுவரை மறைமுகமாக இருந்த அவர்களின் உறவு, ஊரறிய மேடை ஏறியது. பரமசிவத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது அவன் அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினராகவும் அந்த ஏரியாவின் கவுன்சில்ராகவும் மாறியிருந்தான்.
அவனின் மனைவி மகன்களுக்கும் வான்மதி பற்றித் தெரிய, அவர்களை அடக்கி வைத்தான் பரமசிவம்.
ஊருக்குள் தலை காட்ட முடியாத சூழ்நிலையில் அவமானம் தாங்காது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அம்மையப்பன். அதன் பின் நிம்மதியாக வான்மதி பரமசிவத்துடன் அந்த ஊரை விட்டு வெளியேறிச் சென்னை வந்து சேர்ந்துள்ளார்.
அமைச்சரின் சின்ன வீடாக.
இவை எதுவும் கார்த்திகேயனுக்குத் தெரியாது. தந்தை இறப்பதற்கு முன் தாயுடன் பயங்கற சண்டை. 'குடிகாரன்… கடங்காரெ… கையாளாகாதவெ… சமயக்காரெ. கோழ... ' என்ற தாயின் ஏச்சு பேச்சு தந்தையை இந்த முடிவுக்குத் தள்ளியுள்ளது என்ற கோபம் தான் தாயுடன் இப்போது வரை பேசாமல் இருக்கிறான்.
தந்தையை ஏமாற்றி வேறொருவருடன் வாழ்கிறாள் என்பதை அவனை யோசிக்கக் கூட இல்லை. அவ்வபோது பரமசிவத்தைத் தன் வீட்டில் பார்த்திருக்கிறான். தாய்க்குச் சொந்தம் என்று மட்டுமே நினைத்தான்.
தந்தையின் உடலை நடு வீட்டில் வைத்துக்கொண்டு அவரின் அண்ணன் மனைவிகளும் தம்பி மனைவியும் பேசிய பேச்சு கார்த்திகேயனை உறவினர்களை விட்டுத் தூர துரத்தி விட்டது.
அந்தப் பாட்டி மட்டும் தான் கார்த்திகேயனின் ஒரே உறவாக நினைத்து வாழ்ந்து வருகிறான். இப்போது அவனின் கூட்டில் ஜோஹிதா இடம் பெற்றுள்ளாள்.
இருவர் மட்டுமே அவன் அறிந்த பெண்கள். அவனின் உலகம், ஜோஹிதாவுடன் தான் வாழும் வாழ்க்கை சிறப்புடன் இருக்க வேண்டும் என்ற ஆசைகளாலும் கனவுகளாலும் நிறைந்திருந்தது.
நல்ல பணியில் அமர்ந்து அவளை ராணி போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் தான் அவனைப் படிக்கத் தூண்டியது. பள்ளியாக முதன்மை மாணவனாக மதிப்பெண் பெற வைத்தது. நல்ல கல்லூரியில் சேர வைத்தது. எல்லாம் அவளுக்காகத் தான், என்றவன் கட்டிய கோட்டை, தகர்த்தெறியபட்டது அவளாலேயே.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..