அத்தியாயம்: 58
மெரினா கடற்கரை.
"கார்த்திக் அந்தப் பையன அவனுங்க நின்ன இடத்துலயே சைக்கிள் ஓட்டச் சொன்னாங்க. அப்றம் ஒருத்தன ரஜினி டயலாக்க விஜயகாந்த் ஸார் பேசுனா எப்படி இருக்கும்னு பேசிக் காட்ட சொன்னாங்க.
பாக்கவே சிரிப்பா இருந்தது. என்னைக் கூட ஒரு அக்காளுங்க கூப்பிட்டு பத்துத் திருக்குறள் சொல்ல சொல்லிச் சொன்னாங்க. எனக்கு ரெண்டுக்கு மேல தெரியல. வச்சி ஓட்டி எடுத்துட்டாங்க. ‘நீயெல்லாம் எப்படிப் பன்னண்டாப்பு பாஸ்ஸானியோ. உனக்குத் தமிழ் பாடம் உண்டா இல்லையா’ன்னும் கேட்டு என்னைச் செம்மையாக் கேலி பண்ணாங்க தெரியுமா." எனத் தன் முதல் நாள் அனுபவத்தை ஜோஹிதா சொல்ல, அதைக் கேட்கும் மனநிலையில் தான் கார்த்திக் இல்லை.
"நானும் சிந்துவும் அங்க சிலர ஃப்ரெண்டா பிடிச்சிருக்கோம். சில ஃப்ரபசர் கூட நல்லா பேசுனாங்க. நல்லா இருந்தது காலேஜ். உன்னோட ஃபஸ்ட் டே எப்படிப் போச்சி கார்த்திக்?. கார்த்திக்? " என அவனை உளுக்க,
"மோசமா போச்சி. ரொம்ப மோசமா. "
"என்னாச்சி? "
" இன்னைக்கி நான் என்னோட சீனியர் ஒருத்தன அடிச்சிட்டேன். "
" என்ன!! ஏன்?. என்னாச்சி? உன்னைக் கூப்பிட்டு ராக் பண்ணான்னா?" என்க,
"இல்ல... ராக் பண்ணல. ஆனா... " என்றவன். "ம்ச்... அத விடு. கம்மிங் சாட்டர்டே என்னோட பர்த் டே. எங்கயாது வெளில போலாமா? கோயிலுக்குப் போய்ட்டு அப்படியே எங்கயாது சாப்டுட்டு, சீக்கிரம் உன்னை வீட்டுல விட்டுடுறேன். எனக்கு உங்கூட இருக்கணும் போல இருக்கு." என ஆசையுடன் கேட்க,
" இல்ல, கார்த்திக் அன்னைக்கி எங்க வீட்டுல ஒரு விஷேசம். என்னால வர முடியாது. " என்றவளை அவன் முறைக்கவும்,
"அன்னைக்கி காலேஜும் கிடையாது. உஷா வேற இங்க இல்ல. சோ, பொய் சொல்லிட்டு வர்றது கஷ்டம். எப்பயும் போலக் காலைல நம்ம க்ரவுண்டுல பாக்கலாமே."
"நான் எப்பக் கூப்பிட்டாலும் இதே மாதிரி ஏதாவது காரணம் சொல்லு. எப்பதா நீ என்னோட பைக்ல உக்காந்து வரப்போற? " எனச் சிறிய காட்டமாக வந்தது குரல். அவள் அமைதியாக இருக்கவும்,
"நாம லவ் பண்ண ஆரம்பிச்சி ரெண்டு வர்ஷம் ஆகப்போது ஜோஹி. நியாபகம் இருக்கா உனக்கு?. இதுவர இந்தப் பீச்ச தவிர எங்கயும் வர மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம் ஜோஹி?. எம்மேல நம்பிக்கை இல்லையா.? " என்றான் ஆயாசமாக.
"அப்படில்லாம் இல்ல கார்த்திக். எனக்கு உங்கூட ஊர் சுத்தணும் ஆசையெல்லாம் இல்ல. உன்னோட கைப் பிடிச்சிட்டு நடந்தா மட்டும்போது. உன்னைக் கட்டிப்பிடிக்கணும். முத்தம் குடுக்கணும்னு தோணுனதே இல்ல. "
"ஆனா எனக்குத் தோணுது ஜோஹி. " என்றவனின் குரலில் ஏக்கங்கள் நிறைந்திருந்தன. இதுவரை அவளின் கரம்பற்றி நடந்தவன் அடுத்த நிலையாய் எட்ட, அணைக்க சொல்லித் தூண்டிவிட்டது மனம்.
" கார்த்திக் அப்படிப் பாக்காத. " என முறைத்தவளின் கையில் ஒரு செல்ஃபோனைத் தினித்தான்.
" என்ன கார்த்திக் இது?. "
" ஃபோன். உங்க வீட்டுல உங்கண்ணே வச்சிருக்குறதா சொன்னேல. "
"ம்… அவெங்கிட்ட தான் நான் பாத்துட்டு தர்றேன்னு கேட்டேன். குடுக்கவே மாட்டேன்ட்டா. பட் இது நல்லா இருக்கு. சிம் போட்டாச்சா. "
" ம்…. ********** உன்னோட நம்பர். இதுல எங்க வீட்டு லேண்ட் லயன் நம்பர ஸ்டோர் பண்ணிருக்கேன். இனி நாம பேசிக்கலாம். தனியா. " எனக் கண்சிமிட்ட, ஜோஹிதா முகம் சிவந்து வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.
சிறிது நேரம் கடற்கரையின் அலையில் கால் நனைத்து விட்டு இருவரும் வீட்டிற்குச் சென்றனர். அப்போதும் ஜோஹிதா ஆட்டோவில் சென்றாலே தவிர அவனின் பைக்கில் ஏற வில்லை.
கார்த்திக் இன்று காலை நடந்ததை நினைத்தபடி பைக்கை ஓட்டினான். கல்லூரியில் ராக்கிங் நடைபெறுவது சகசமான ஒன்று தான். ஆனால் இன்று நடந்தது மாணவர்களுக்கு மத்தியில் நடக்கும் ராக்கிங் போன்று தெரியவில்லை. தன் மீது உள்ள தனிப்பட்ட தாக்குதல் என்று தோன்றியது கார்த்திக்கிற்கு.
அந்த மாணவனுக்கு எப்படி என் குடும்பத்தைப் பற்றி தெரியும்? எப்படி அவன் என் தந்தையை கேலியாகப் பேசலாம்? பல ஆண்டுகளுக்குப் பின் கேட்கிறான் அந்தக் கேலிப் பேச்சை. அதான் அம்மையப்பனை ஊரே சேர்ந்து சொல்லியதே 'கையாலாகாத ஆம்பளை'. அதைத்தான் அந்த மாணவனும் சொன்னான்.
கல்லூரி முடித்து மாலை நேரம் வீட்டிற்குச் செல்லத் தன் பைக்கை எடுத்த கார்த்திக்கின் முன் சில இளைஞர்கள் வந்து நின்றனர். அவர்கள் அவனின் பைக் சாவியைப் பிடுங்கிக் கொண்டு, சாவி வேண்டும் எனில் ஒரு பெண் ஆசிரியரிடம் கடிதம் கொடுக்கச் சொல்லிச் சொல்ல, கார்த்திக் மறுத்தான்.
" என்னால பண்ண முடியாதுண்ணா. நீங்கச் சொல்ற விதமே சரியில்ல. அதுல கண்டிப்பா நீங்கத் தப்பு தப்பாத்தா எழுதிருப்பீங்க. அதுனால முடியாது. " என மறுத்துச் சாவியை கேட்க, அவர்கள் கட்டாயப்படுத்தினர். ஆனாலும் அவன் உறுதியாக மறுக்க,
" இவனால முடியாது டா. ஏன்னா இவனும் இவெ அப்பன மாதிரிக் கையாலாகாத ஆம்பள. கல்யாணம் பண்ண பொண்டாட்டிய முழுசாச் சந்தோஷ படுத்த தெரியாத அப்பனுக்குப் பிறந்தவெ நிச்சயம் ஆம்பளயா இருக்க வாய்ப்பே இல்ல. அவன மாதிரியே பொட்டையாத்தானீ இருப்பா…ஆ. " எனச் சொல்லி முடிக்கும் அவனின் தாடையில் விழுந்தது ஒரு குத்து.
அந்த மாணவனுக்காகப் பலர் வந்து கார்த்திக்குடன் சண்டை போட்டாலும் கார்த்திக்கின் மீது ஒரு அடி கொடுக்க கூட அங்கு யாரும் இல்லை என்பது தான் உண்மை. அது பெரும்பிரச்சினையாக மாறிக் கல்லூரி முதல்வர் அவனைக் கூப்பிட்டுக் கண்டித்தார்.
முதல் நாளே இப்படிப் பெயர் வாங்கியது அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. அந்த மாணவன் யார் என்ற யோசனைதான் வெகுநேரமாக மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. முருகுவின், வீட்டிற்குச் சென்று அவனுடன் சிறிது நேரம் இருந்து விட்டு நடந்தவைகளை மறந்து வீட்டுக்குச் சென்றால் அங்கு அவனுக்காக ஒரு கூட்டமே காத்திருந்தது.
கார்கள்… எக்கச்சக்கமாக வந்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்தன. அதன் அருகில் கரை வேட்டிக் கட்டிய சிலர் நின்றுக் கொண்டு கார்த்திக்கை முறைத்து பார்த்தனர். ஏன் என்று புரியாது அவர்களை விலக்கிக் கொண்டு உள்ளே செல்ல, அவனின் வீட்டைப் பலர் வாசலில் நின்று வேடிக்கைப் பார்த்தனர். என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தலைகாட்டியக் கூட்டம் அது.
உள்ளே ஹாலில் பரமசிவம் கோபமாக அமர்ந்திருந்தார். " ஹாய் அங்கிள். கர வேட்டிய பாத்ததும் நீங்கதான்னு நினச்சேன். ஆமா, நீங்க ஊர்ல இல்லன்னு கேள்வி பட்டேன். எப்ப வந்திங்க? " என்றபடி கார்த்திக் தன் நேட்டுகளை சோஃபா வீசி வெகு சாதாரணமாகப் பேசினான். அவனுக்குத் தான் பரமசிவத்திற்கும் தன் தாய்க்கும் உள்ள உறவு தெரியாதே!
தாய்க்கும் தந்தைக்கும் சதா சண்டை வந்து கொண்டே இருப்பதால் ஊர் அப்படிப் பேசுகிறது என்னெண்ணியவனுக்கு தாயின் தகாத அந்த உறவு தெரியவே இல்லை. அவனுக்கு அந்தக் கோணத்தில் யோசிக்கக் கூடத் தோன்றவில்லை.
பரமசிவத்துடன் கார்த்திகேயனுக்கு நல்ல பழக்கம் இருந்தது. கட்சி ஆள் என்று அவனே சில உதவிகளைக் கேட்டிருக்கிறான். அவரும் செய்வார். வான்மதிக்காக.
"காலைல தான் வந்தேன். நானும் சில விசயம் உன்னைப் பத்தி கேள்வி பட்டேன். உண்மையா? "
"எதப் பத்தி அங்கிள்? " என்றவன் வீட்டிற்குள் நோட்டம் விட, பாட்டி கிளம்பி விட்டார் என்று அறிந்து கொண்டான்.
" காலேஜ்ல என்ன தகராறு?"
"அதுக்குள்ள நியூஸ் வந்துடுச்சா!. அது ஒன்னுமில்ல அங்கிள். ராக்கிங் தான். கொஞ்சம் அதிகமாவே கேலி பண்ணான்னா அதா லைட்டா தட்டுனேன். அதுக்குள்ள மூக்குல ரத்தம் கொட்ட ஆரம்பிச்சிடுச்சி. பிஞ்சி மூக்கு போல. பால்வாடி பையங்கணக்கா இருந்தான். கேட்டா மெக்கானிக் இஞ்சினியராம். " என்று நகைக்க,
" யாரு டா பால்வாடி பையன்?. இப்ப நான் உன்னை அடிக்கிற அடில நீ உயிரோட நடமாடவே கூடாது டா. " எனக் கார்த்திக்கிடம் அடிவாங்கிய மாணவன் உள் அறையிலிருந்து வந்து கார்த்திக்கின் மீது பாய,
அந்தோ பரிதாபம், இந்த முறையும் அவனுக்குத் தான் பாதிப்பு அதிகம். கார்த்திக்கை அடிக்கிறேன் என்று தன் கையைச் சுவற்றில் குத்திக் கொண்டான். கோபத்தில் அவன் அடிக்க, அவனைத் தடுக்க எனக் கார்த்திக் தாக்க,
இருவரும் சண்டை போட்டுக் கொள்ள வெளியே இருந்த கரை வேட்டி வீட்டிற்குள் வேக வேகமாக வந்தது. அனைவரும் பிடித்து இழுத்து கார்த்திக்கை வெளியே கூட்டி வந்தனர். தெருவிற்கு.
வலியில் சுருண்டு போய்க் கிடந்த மகனைக் கண்ட அவனின் தாய் தன் வெண்கல தொண்டையைத் திறத்தார்.
" உனக்கு எவ்வோ திமிரு இருந்தா எம்மகன எங்கண்ணு முன்னாடியே அடிப்ப!. பிடிங்கடா அவன. இழுத்துட்டு போய் நாய் மாதிரிக் கட்டி வைங்க. அநானாத நாய்ன்னு பாவம் பாத்தா உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணிட்டு வந்து நிக்கிது. தூ. " எனக் கண்டமேனிக்கு அவனையும் அவனின் குடும்பத்தையும் பற்றி ஏசி பேச, கார்த்திக் வான்மதியை பார்த்தான். சரியாகப் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் அவனின் தாய் அவள் தானே. பெற்றவள் உயிரோடு இருக்க அநாதை என்பதா எனப் பார்த்தான்.
ஆனால் வான்மதி அமைதியாக நின்றாளே தவிர எதுவும் சொல்லவில்லை. அது கார்த்திக்கைப் பாதிக்க அவனும் திமிறாது அமைதியானான்.
பெற்ற தாய் இருக்கும் போதே தன்னை அனாதை என்ற அவரை எதுவும் சொல்லவில்லையே ஏன் என்ற கேள்வியுடன் அவனின் பார்வை தாயின் முகத்தைத் தவிர வேறு எங்கும் செல்லவில்லை.
கண்கள் தாயைக் கண்டாலும் காதுகளில் அந்தப் பெண்ணின் குரல் விழுந்து கொண்டே இருந்தது.
"ரவுடி பயெ... கண்ட மேனிக்கி எம்புள்ளை அடிச்சிட்டு இருக்கான். உக்காந்து அத வேடிக்கை பாத்துட்டு இருக்க. நீயெல்லாம் ஆம்பளையா. த்தூ.
இன்னும் இந்தக் குடும்பத்துக்குப் படியளந்தன்னா, உனக்குக் கொல்லி போடக் கூடப் பிள்ளை இருக்காது. ஆம்பள பையன் மாதிரியா இருக்கான். நல்ல வளந்த மலமாடு மாதிரி இருந்துட்டு எம்பையன கை நீட்டி அடிச்சிட்டான்.
வேற யாராவதா இருந்தா இன்னோரம் எம்புள்ள மேல கை வச்சவன பொதச்சிட்டு தான் வேற வேலை பாத்திருப்ப. வப்பாட்டி மகனெனு பாசம் பொத்துட்டு வடியுதோ!.
இதுவர உன்னையும் இந்தக் கேடுகெட்ட சிறுக்கி அவளையும் சும்மா விட்டு வச்சிருக்கேன்னா அதுக்கு காரணம் இருக்கு. இவ கூடக் கொஞ்சி கொழாவுனதுக்கு அப்றம் தான் உனக்குக் கட்சில நல்ல பதவி கிடைச்சது. அதுக்காகத்தான்….
கஞ்சிக்கி விழியில்லாத நமக்கு, வீடு வாசல்னு வந்தது அந்தப் பதவியால. அந்த ஒரு காரணத்துக்காகத் தான் உன் சின்ன வீட்ட நான் எதுவும் சொல்லாம இருந்தேன். எப்ப எம்புள்ள மேலயே கை வச்சானோ… இனி இத சும்மா விடமாட்டேன். " என்றவள் தன் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு கார்த்திக்கின் முன் வந்து நின்றாள்.
"இதோ பாரு நீ அனுபவிக்கிற வீடு வாசல் எல்லாமே எம்புருஷனோடது. உடம்பு மட்டும் தான் உங்கப்பெ கெடுத்தது. அத வளக்க தீனி போட்டது அந்தாளு. திங்கிற சோத்துக்காவது விஷ்வாசமா நடந்துக்க. இன்னொரு மொற எம்பையெ மேல கைய வச்ச அவ்வளவு தான். டேய் வாடா. ஒரு ஒன்னத்துக்குமாகாத வெறும்பயெங் கையால அடி வாங்கிட்டு வந்து நிக்கிற. " என நடு ரோட்டில் கத்தி விட்டு மகனை இழுத்து செல்ல, மனைவியைத் தொடர்ந்து அந்த அமைச்சரும் சென்றார்.
அதுவரை கண்ணிருந்தும் குருடனாகத் திரிந்திருக்கிறோம் என்பது கார்த்திகேயனுக்கு அவமானமாக இருந்தது. உறங்கும் நேரம் தவிர வேறு நேரம் வீட்டில் இல்லாது போனதையும், வீட்டில் என்ன நடக்கிறது என்று கவனியாது இருந்த தன் முட்டாள் தனத்தை அறவே வெறுத்தான் கார்த்திக். கூனி குறுகி நின்றவனின் முன் வந்த வான்மதி.
"நீ ஏன் கார்த்திக் அந்தப் பையன அடிச்ச? அடக்கிறது தான் அடிக்கிற எந்திரிச்சி நடக்கவே முடியாத மாதிரி அடிச்சிருக்கலாம்ல. பாதி உசிரா கிடந்தாத்தா… அவெ ஆத்தாக்காரி அடங்கிருப்பா. சரி வா வீட்டுக்குள்ள போலாம். உனக்குப் பிடிக்கும்னு நான் சுய்யம் செஞ்சி வச்சிருக்கேன். " எனச் சர்வ சாதாரணமாக அழைக்க,
"உங்களுக்கும் அந்தாளுக்கும் என்ன உறவு. " எனக் கேட்டான் கார்த்திக்.
"ஏன் அது இத்தன நாளா உனக்குத் தெரியாதாக்கும். உனக்குத் தெரியும்னு தான் நான் நினைச்சேன். ஹிம். என்ன பண்ண. அந்தப் பொம்பளய தொரத்தி விட்டுடுட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னத நம்பி முந்தி விரிச்சேன். ஆனா அவ வெவரமா அந்தாள பிடிச்சில்ல வச்சிருக்கா. எத்தன நாளைக்கின்னு நானும் பாக்குறேன். " என்று புலம்ப.,
"உங்களுக்குக் கொஞ்சங்கூட உறுத்தவே இல்லையா? நீங்கப் பண்ணிட்டு இருக்குறது தப்புன்னு தோனவே இல்லயா." என்றவன் தாயை அருவருப்பான பார்வை பார்த்தான்.
"எதுக்கு உறுத்தணும்? பொண்டாட்டிய சந்தோஷமா வச்சிக்கிறேன்னு சொல்லித்தா ஒவ்வொரு ஆம்பளையும் கல்யாணம் பண்ணிக்கிறான். அவளுக்கு வேண்டியத செஞ்சி, கேக்குற வாங்கி குடுத்து, உடம்பு நோகாம பாத்துக்கிறவெந்தா ஆம்பள.
உங்கப்பெ கூட இருந்த வர மாடு மாதிரி உழைச்சேன். கழுத மாநிரி வீட்டு பொறுப்பத் தூக்கி சுமத்தேன். ஆனா அந்தச் சமையக்காரெ என்னை வேலக்காரி மாதிரித் தான் வச்சிருந்தான். ராத்திரி கூடப் பக்கத்துல படுக்காம திரியுறவெங்கூட எப்படிக் குடும்ப நடத்த முடியும்?
அதான் அவனுக்குப் பொண்டாட்டியா இருக்குறத விட, காசிருக்குறவனுக்கு வப்பாட்டியா வாழ்ந்திடலாம்னு முடிவு பண்ணிட்டேன். நீ எதுவும் கவலப்படாத. உனக்கு வேண்டிய ஆடம்பர வாழ்க்கைய அமச்சிக் குடுத்து உனக்கு நல்ல வசதியான பொண்ணா பாத்து கட்டிவக்கிறேன். அது என்னோட பொறுப்பு. " எனத் தன்னை பற்றியும் தன் சுகத்தைப் பற்றியும் மட்டுமே யோசிக்கும் அவளைத் தாயாக ஏற்க இயலாது வீட்டை விட்டு வெளியேறினான்.
அந்த எம்எல்ஏவின் பணம் எதுவும் தனக்குத் தேவையில்லையென அனைத்தையும் துறந்தவன், பாட்டியை பார்க்கச் செல்லாது முருகுவின் வீட்டில் தங்கினான்.
இதுவரை கார்த்திக்கின் பின்னால் இருக்கும் கரைவேட்டிகளின் சேவை தேவைப்படலாம் என்று ஜோஹிதா கார்த்திக்கின் காதலைக் கண்டு கொள்ளாது இருந்த யாதவ் குடும்பம் இப்போது அதைக் கலைக்கத் தொடங்கியது.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..