அத்தியாயம்: 59
"அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க கார்த்திக்? " என்றாள் ஜோஹிதா.
" தெரியல. இப்போதைக்கி முருகு வீட்டு மாடில ஸ்டே பண்ணிருக்கேன். சீக்கிரம் எதாவது பண்ணணும். சம்பாதிக்கணும். அப்பத்தா நாம சந்தோஷமா வாழ முடியும். "
"நிச்சயம் நாம சந்தோஷமா வாழுவோம். பட் உனக்குக் கிடச்ச இன்ஜினியரிங் சீட்... அத எதுக்காக விட்டுக் குடுத்து ஒரு கேட்டரிங் காலேஜ்ல சேரணும். ஏ கார்த்திக்? ".
"என்னோட அப்பாவோட ஆசை ஜோஹி, ஒரு பெரிய ஹோட்டல் திறக்கரும்ங்கிறது. அதுல நல்ல சாப்பாட்டு, நம்ம பாரம்பரிய உணவு, வித்தியாசமான சுவை கொண்ட உணவு, அந்த ரெஸ்டாரன்ட் வர்ற எல்லா மக்களுக்கும் சாப்பாடு நியாயமான விலைல குடுக்கணுங்கிறது அவரோட ஆசை. இனி அது தான் என்னோட லட்சியம்.
சமையலும் ஒரு கலை தான ஜோஹி. இத்தன வர்ஷமா வீட்டுல பொண்ணுங்க செய்றது இல்லயா. அவங்க செஞ்சி நாம சாப்பிட்டா அது அன்பு. நாங்களா செஞ்சி பரிமாறும்போது அவமானமா மாறிடுமா என்ன? இந்தச் சமையல் கலைய அவமானமா நினைச்சி தான எங்கப்பாக்கு அந்தப் பொம்பள துரோகம் பண்ணுச்சி. இனி அது தா என்னோட அடையாளமா மாறப்போது ஜோஹி. " என்றவனுக்கு தன் தந்தையின் வழியைப் பின்பற்றி முன்னேற வேண்டும் என்ற உறுதி வந்தது.
"ஆனாலும்… இன்சினியரிங் காலேஜ் பலரோட கனவு. அது கிடைச்சும் நீ வேண்டாம்னு சொல்றது எனக்குப் புதுசா தெரியுது கார்த்திக். அந்தச் சீட் உன்னோட நல்ல மார்க்கால கிடைச்சது. அந்தப் படிப்ப படிச்சிட்டு நீ என்னோட செஃப் கனவ நிறைவேத்தலாமே. " என அழுத்திச் சொல்ல,
" இல்ல ஜோஹி. அத முடிச்சிட்டா... ஏதாவது வேலை கிடைக்கும். சம்பாதிச்சே ஆகவேண்டிய சூழ்நிலைல கிடைச்ச வேலைய விட்டுடத் தோணாது. நல்ல சம்பளம் கிடைச்சா அதுவே லைஃப்னு அது பின்னாடி ஓட ஆரம்பிச்சிடுவோம். அப்றம் கல்யாணம் குழந்தன்னு வாழ்க்கை கடந்து போய்டும். வயசாகிடும். அப்றம் எதுக்கு இதெல்லாம்னு கிடைச்ச வேலைய பாக்க போய்டுவோம். அப்றம் நா நினைச்ச மாறி லைஃப் அமையுறது கஷ்டமா மாறிடும். "
" ஆனாலும்... "
"உனக்கு என்னைப் பிடிக்கும் தான ஜோஹி? "
"என்ன கார்த்திக் இது?. முட்டாள் தனமா கேள்வி கேக்குற. "
"இல்ல... நீ விரும்புறது என்னதாங்கிறப்ப. நான் இன்சினியர் இருந்தா என்ன? செஃப்பா இருந்தா என்ன.? " என்க ஜோஹிதாவின் முகத்தில் சிறு வருத்தம் வந்தது.
"நான் என்னோட சொந்த முயற்சில முன்னேற விரும்புறேன் ஜோஹி. அந்தாளு மட்டுமில்ல. வேற யாரோட உதவியும் இல்லாம முன்னேறணும். இத்தன நாளா அந்த அசிங்கத்துக்குள்ள வாழ்ந்திருக்கேனு நினைக்கும்போது அருவருப்பா இருக்கு.
சில நேரம் எனக்குத் தோணும் என்ன படிக்க வச்சது அந்தாளு காசுலதான்னு. அவெ போட்ட சாப்பாடுனால வளந்த உடம்புன்னு. கத்திய எடுத்துக் கிழிச்சிக்கலாமானு. " என்றவனின் வாய் மூடி அணைத்துக் கொண்டாள் கண்ணீருடன்.
"அப்படிலாம் பேசாத கார்த்திக். என்னால நீ இல்லாம, யோசிச்சி கூடப் பாக்க முடியல. நீ எது பண்ணறதா இருந்தாலும் என்னை மனசுல நினைச்சிட்டு முடிவெடு. I love you கார்த்திக். நான் உன்னை மட்டும் தான் விரும்புறேன். உன்னோட படிப்பையோ, வேலையையோ இல்ல." என்றவளின் காதல் உண்மை.
தன் தாயை முன்னிலைப் படுத்தி தன்னை விட்டுச் சென்று விட்டுவாளோ என்ற பயம் கார்த்திக்கிற்குத் தோன்றாமல் இல்லை. ஆனால் எதையும் ஜோஹிதாவிடம் மறைக்கவும் இல்லை.
கார்த்திக் ஒரு திறந்த புத்தகம். அவனை யார் வேண்டுமானாலும் எளிதாகப் படித்து விடலாம். ஜோஹிதாவால் அவனை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
'அப்படி புத்தமாக இருப்பதாலோ என்னவோ அவனின் வாழ்க்கையை அவனால் எழுத முடியாது பலரால் எழுதப்பட்டது. '
ஜோஹிதாவிடம் பிறர் தன்னைப் பற்றிக் கூறி தவறாகச் சித்தரிப்பதை விட, தானே அவளுக்குத் தன்னைப் புரிய வைக்க வேண்டும் என்று கார்த்திக் அனைத்தையும் அவளிடம் சொல்லி, தன் தந்தையின் கனவை நிறைவேற்றக் கேட்டரிங் கல்லூரியில் சேர்ந்தான்.
அதில் ஜோஹிதாவிற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அவள் விரும்புவது கார்த்திக்கை மட்டும் தான். அவன் பணக்காரனாக ஏழையா என்றெல்லாம் அவள் பார்க்கவே இல்லை. முழுதாகக் கார்த்திக் எப்படி இருக்கிறானோ அப்படியே அவனை ஏற்றாள். காதல் செய்கிறாள்.
பார்ட் டயம் ஜாப் என்ற பெயரில் சில உணவகங்களில் இரவு நேரம் வேலைக்குச் சேர்ந்தான் கார்த்திக். தன்னால் முடிந்த வரை பிறரிடமிருந்து சமையல் திறனைக் கற்றுக் கொண்டான். தான் சமைக்கும் உணவுகளை ஜோஹிதாவிற்கு தந்து மகிழ்வான்.
அவளுக்கும் அது பிடித்திருத்தது. அவனின் கையால் சமைத்து ஊட்டி விடும்போது காதலுடன் அதை அனுபவித்து உண்ணுவாள். இருவரின் நேரமும் எதிர்கால சிந்தனைகள் பற்றி யோசியாது சென்றது.
தன் படிப்பிற்கு என அவனே சம்பாதித்தான். வீடு, இப்போதும் முருகுவின் மொட்டை மாடி தான். ஆனால் வாடகை கொடுத்து இருக்கிறான்.
அவனின் தந்தை அவனுக்கு என விட்டுச் சென்ற சில நிலம் மற்றும் தாத்தாவின் சொத்தை விற்றது எனச் சில லட்சங்கள் கையில் கிடைக்க ஏற்பாடு செய்தார் அவனின் பாட்டி. அதை அப்படியே வைப்பு நிதியாக வங்கியில் வைத்து அதன் வட்டியை வாடகையாகச் செலுத்தி செலவுக்கும் வைத்துக் கொண்டான்.
இரு ஆண்டுகள் எவ்வித பிரச்சினையுமின்றி சென்றன. யாதவ் குடும்பத்தினர் கார்த்திக் பற்றி ஜோஹிதா அறிந்து கொண்டதால் அவனை விட்டு விலகி விட்டாள் என்று நினைத்தனர். அதற்கு ஏற்றார் போல் இருவரும் நேரில் சந்தித்து வெகுநேரம் பேசிக் கொள்ளவே இல்லை. அவர்கள் தான் ஃபோனில் மணிக்கணக்கில் பேசித் தங்களின் காதலை தொடர்ந்து கொண்டு தானே இருந்தனர். மாதம் ஒரு முறை பீச். தினமும் அவன் சமைக்கும் உணவை அவளின் கையில் சேரும்படி கல்லூரி வாட்ச்மெனை கரெக்ட் செய்து வைத்திருந்தான்.
அதை அந்தக் குடும்பம் முற்றிலும் எதிர் பார்க்கவில்லை.
ஒரு முறை அவளின் அறைக்குச் சென்ற விகாஸின் கண்களுக்கு அந்த செல்ஃபோன் மாட்டியது.
"என்ன ஜோஹிதா இது?. யாரு குடுத்தா இத.?" விகாஸ் காட்டமாகக் கேட்க,
" கார்த்திக் குடுத்தான் அண்ணா. " கூலாகப் பதில் சொன்னாள் தங்கை.
"நீ இன்னும் அந்தத் தரங்கெட்டவெங்கூட பேசிட்டு தான் இருக்கியா? அவெ உன்னைப் பாக்க வர்றது இல்ல பேசுறது இல்லன்னு சிந்து சொன்னத உண்மன்னு நான் நம்பியிருக்க கூடாது. அவெங்குடும்பமே பணம் பறிக்கிற குடும்பம். காசு இருந்தா போதும் நாய் மாதிரி வால ஆட்டிட்டு போய்டுவானுங்க. ***." கோபமாகக் கார்த்திக்கை திட்ட,
"போதும் நிறுத்து. அவன எதுவும் சொல்லாத. நீ நினைக்கிற மாறி ஆள் கிடையாது அவெ. நானும் அவனும் லவ் பண்றோம். தேவையில்லாம அவனப் பத்தி எங்கிட்ட தப்பு தப்பா பேசாத. அப்றம் நடக்குறதே வேற. " என விழி விரித்து மிரட்டலாகச் சொல்ல, அவளின் உறுதி விகாஸ்ஸை சிந்திக்க வைத்தது.
"நான் அவன அப்படிச் சொல்லல ஜோஹிதா. அவனோட அம்மா அப்படித்தான இருந்தாங்க. அப்ப மகெ மட்டும் வேற மாதிரியா இருப்பான்?. " என்று அவன் சொல்லும் போதே ஜோஹிதா கத்தத் தொடங்கி விட்டாள். அவளின் காட்டுக்கத்தலில் இருந்தே அவளின் பார்வையில் கார்த்திக்கை நேரடியாக மட்டம் தட்ட கூடாது, வேறு மாதிரித் தான் இதை செய்ய வேண்டும் என்று அவனை இவளிடமிருந்து பிரிக்க வேறு வழியை யோசித்தான்.
ஆற்று நீரில் அடித்துச் செல்லப்படும் படகை, வெறும் கயிற்றை மட்டும் பிடித்துக் கொண்டு அதிரடியாக மீட்க இயலாது. ஆற்று நீரின் வேகம் குறைவாக இருக்கும் பகுதிக்கு வர விட்டுக் கரையின் பக்கம் இழுத்து நீரை விட்டு வெளியேற்ற வேண்டும். அதைப் போல் தான் கார்த்திக்கிடமிருந்து ஜோஹிதாவை பிரிக்க வேண்டும்.
" நான் சொல்ல வர்றத தப்பா புரிஞ்சிக்கிட்ட பாப்பா. கார்த்திக் நம்ம எல்லாருக்குமே நல்ல பழக்கம். உங்கண்ணே தர்ஷனோட க்ளோஸ் ஃப்ரெண்டும் கூட. அப்படி இருக்குறப்போ அவனப் பத்தி யாரும் இங்க தப்பாச் சொல்லமாட்டாங்க. என்ன அவெ பைத்தியக்காரதனமா சமையக்காரனாகுறேன்னு சொல்றது தான் கஷ்டமா இருக்கு. "
"ஏன் அதுவும் நல்ல வேலை தான. " என்றாள் வெடுக்கென. ஆனாலும் அவளின் முகம் அவனின் செயலுக்கான விருப்பமின்மையை காட்டியது. அவள் மறுத்தும் அதைச் செய்திருக்கிறான் என்பதால் அவனின் செயலில் அவளுக்கு உடன்பாடு இல்லை. அது இருவரின் வீக்னஸ் பாய்ட்டாகப் பட்டது விகாஸ்ஸிற்கு.
"நான் இல்லன்னு சொல்லல பாப்பா. ஆனா நாளு பேர் முன்னாடி உன்னோட புருஷன அறிமுகம் படுத்தும்போது சமயக்காரென்னு சொன்னா நல்லாவா இருக்கும். சொல்லு.
பாப்பா காதல் வேணும்னா எதையும் பாக்காம வரலாம். ஆனா கல்யாணம் அப்படி இல்ல. ஏற்கனவே பெத்தவங்க சரியில்ல. இப்ப இருக்குறதுக்கு வீடும் இல்லை. நாளைக்கி உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த மொட்டு மாடில்லயா குடும்பம் நடத்துவீங்க. சொல்லு. படிப்பு முடியல. வேலை அமையல. அப்படியே அமஞ்சாலும் எவ்ளோ வாங்கிற போறான்.
அவன நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா அவெங்கூட குடும்பம் நடத்த வேலைக்கி போய்த்தா ஆகணும். காலைல எழுந்து அவனுக்குச் சாப்பாடு செஞ்சி, வேலைக்கி போய், வீட்டுக்கு வந்து, வீட்டு வேலய பாத்து, அதுக்கு இடைல குழந்த குட்டி, அதுக்கு செலவு. இதெல்லாத்தையும் தாங்குவியா நீ. சொல்லு?
வீட்ட எதிர்த்துக் கல்யாணம் பண்ணா உனக்கு உதவி செய்ய நம்ம குடும்பத்துல இருந்து யாரும் வரமாட்டாங்க. அவனுக்கும் யாரும் கிடையாது. ரெண்டு பேர் மட்டும் தான் சமாளிக்க முடியுமா? " என்க ஜோஹிதாவின் முகம் யோசனையில் ஆழ்ந்தது.
விகாஸ் செல்வதும் சரிதானே. காதலுக்கு வேண்டுமானால் காசு தேவையில்லை தான். ஆனால் கல்யாணம் குடும்பம் என்றால் காசு இன்றியமையாதது அல்லவா.
அவளின் தெளிந்த மனத்தை விகாஸ் கல்லை விட்டு எறிந்து குழம்பிய குட்டை போல் மாற்றி அதில் தங்களுக்கான ஆதாயத்தைத் தேட தொடங்கினான். அவன் மட்டுமல்ல அவனின் குடும்பமே அதைச் செய்தது. கரைப்பார் கரைக்க கல்லே களையும்போது ஜோஹிதாவின் மனம் அவ்வளவு உறுதியானதா என்ன?
வீட்டில் உள்ள அனைவரும் ஜாடை மாடையாகத் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பேசினர்.
" உங்களுக்குத் தெரியுமாக்கா நம்ம பார்வதி மக ஒருத்தன ஓடிப்போய்க் கட்டிக்கிட்டாளே. அவமானம் தாங்க முடியாம பார்வதி கூடத் தூக்கு போட்டுச் செத்தாளே. "
"ஆமா… ஆமா... பார்வதி. பெத்த மக ஊரறிய அசிங்கப்படுத்திட்டு போகும்போது சாகத்தா செய்வா. ஆமா அவளுக்கு என்ன இப்ப?. "
"என்னவா… வயித்துல மூணு மாச பிள்ளைய வச்சிட்டு பொறந்த வீட்டுக்கும் போக முடியாம. புருஷன் வீட்டு ஆளுங்க பக்கமும் போக முடியாம தவிக்கிறாளாம்? "
"எப்படி விடுவாங்க. நாங்க கல்யாணம் பண்ணியே தீருவோம்னு ஒத்த கால்ல நின்னு குடும்பத்த அவமானப்படுத்திட்டு ஓடிப் போனதுக தான அதுக. அதுகள எப்படி வீட்டுக்குள்ள சேப்பாங்க. ஆமா எதுக்கு அதுகளுக்கு திடீர்னு பெத்ததுக மேல பாசம் வந்துச்சாம்."
" பாசமாது வேஷமாது. அவெ பிள்ளத்தாச்சியா இருக்குற இவள விட்டுடுட்டு வெளிநாடுல போய் உக்காந்திருக்கான். சம்பாதிக்கணுமாம். ஆனா அந்தப் பிள்ள... கவனிக்க ஆள் இல்லாம கஷ்டப்படுது. எவ்ளவு செல்லமா வளத்தா அவ அம்மா. இப்ப… ஹீம். சரியான வேல வெட்டி இல்லாதவன கல்யாணம் பண்ணா இப்படி தான் நடக்கும்?" என ஜோஹிதாவின் காதுபட வேறு யாரையோ பேசுவது போல் பேசினர்.
இந்த விகாஸ் வேறு கார்த்திக்கிடம் சென்று ஜோஹிதாவை விட்டு விடும் படி பேச, தனக்கு இருக்கும் ஒரே உறவு ஜோஹிதா மட்டும் தான் என்று ஆன பிறகு அவளை எப்படி விட்டுக் கொடுக்கச் சொல்லிக் கேட்கலாம் என்ற கோபம் எழ, விகாஸை அடித்துவிட்டான் கார்த்திக்.
"நான் வேற எதுவும் கேக்கல பாப்பா. சமையக்காரனா ஆகாம வேற வேலை தேடச் சொல்லிச் சொன்னேன். நல்ல வேலைல இருந்தாத்தான் நம்ம வீட்டு ஆளுங்கள சம்மதிக்க வைக்க முடியும்.
நம்மக்கிட்ட ஆயிரம் வேலை இருக்கு நம்ம ஸ்வீட் ஸ்டால். அதக் கூடத் தர நாங்க ரெடியா இருக்கோம். உனக்கும் சொந்தம்னு யாரும் கிடையாது. அதுனால நீ எங்க வீட்டோட மாப்பிள்ளையா இரு போதும்ன்னு சொன்னேன். இதுவர கஷ்டத்தையே பாக்காத எங்க வீட்டு இளவரசி நல்ல இருக்கணுங்கிற ஆசைல தான் சொன்னேன். ஆனா அவெ... " எனப் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு பேண்டேஜ் ஒட்டிய தன் நெற்றியைத் தடவியபடி சென்றான்.
என்ன நடந்தது என்று இரு பக்கமும் விசாரிக்காது விகாஸ் சொன்னதை உண்மையென நம்பினாள் ஜோஹிதா. தனக்காகப் பேசிய விகாஸை ஏன் அடித்தாய் என்று கார்த்திக்கிடம் சண்டை போட, அது அவர்களின் முதல் சண்டையாய் மாறி ஜோஹிதாவை கண்ணீர் வடிக்கச் செய்தது.
அதன் பின் இருவருக்கும் இடையை தினமும் வாக்குவாதமும் சண்டையும் கண்ணீரும் மட்டுமே இருந்தது.
"எங்க குடும்பத்துக்குன்னு சில பழக்க வழக்கம் இருக்கு கார்த்திக். அது எல்லாத்தையும் தாண்டி நம்ம கல்யாணத்த விகாஸ் அண்ணே நடத்தி வைக்கிறேன்னு சொல்லும்போது. நீ கொஞ்சம் விட்டுக் குடுக்க கூடாதா கார்த்திக். எல்லாம் நம்ம கல்யாணத்துக்கு தான. எனக்கு வயசு ஆகுதுன்னு நேத்து வீட்டுல பொண்ணு பாக்குறத பத்தி பேசுனாங்க. " என்க, கார்த்திக் எதற்கும் இசைந்து கொடுக்கவில்லை.
விளைவு இருவரும் பிரிய நேர்ந்தது. முதல் அத்தியாயத்தில் கடற்கரையில் பிரிந்து சென்ற ஜோடிகள் இவர்கள் தான் என்று இன்னேரம் கண்டு பிடித்திருப்பீர்கள் என்று அறிவேன்.
ரயில்வே ஸ்டேஷன்க்கு வர முடியாம பிரிந்து போன அந்த ஜோடி யாரென்று உங்களுக்கு எதாவது ஐடியா இருக்கிறதா?
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..