அத்தியாயம்: 82
"மச்சா நீ ஜோஹிதாக்குன்னு நினைச்சி எவனுக்கோ இத்தன நாளா மெசேஜ் அனுப்பிருக்க. ஹாஹ்ஹா. " என வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான் அப்சத்.
" யாருக்குத் தெரியும் அந்த அன்நோன் பெர்ஷன் கிழவனா இருக்கலாம். கிழவியா இருக்கலாம். ஏன் கல்யாணமான பொண்ணாக்கூட இருக்கலாம். அந்தப் பொண்ணு போலிஸ்காரனோட பொண்டாட்டியா இருந்தா நம்ம மச்சான் நிலம. " எனக் கேலி செயதான் முருகு.
"உஉஉஊஊஊஊஊ. " என இருவரும் சொல்லிச் சிரிக்க, கோபமாக எழுந்த கார்த்திக் அவர்களை அடிக்கவில்லை மாறாக காசை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
" ஒரு வேளை அவமானம் தாங்காம விஷம் வாங்கிட்டு வந்து குடிக்க போறானோ.! " அப்சத்.
"இருக்கலாம். எதுக்கும் நாம இன்னைக்கி அவெங்கையால சாப்பிடாம இருக்குறது தான் நல்லது. ஏன்னா குடிச்சது போக மிச்ச விஷத்த சாப்பாட்டுல கலந்து நமக்கு குடுத்தாலும் குடித்திடுவான். "
"வாய்ப்பிருக்கு செஞ்சாலும் செய்வான். " என அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும் முன்னரே கார்த்திக் திரும்பி வந்தான், கையில் சிறிய பாக்கெட்டுடன்.
" என்ன மச்சான் இது?" அப்சத்
"இப்பல்லாம் பாய்ஷன பாட்டிலுக்கு பதிலா பாக்கெட்ல போட்டா விக்கிறானுங்க. கொண்டா பாப்போம். என்ன கலர் கலரா அட்ட மாதிரி இருக்கு. இத வாய்ல போட்டு மென்னா செத்திடலாமா?. " எனப் பிரித்து பார்க்க அது டாப்பப் கார்டுகள்.
முன்பு செல்ஃபோன் ரிசார்ஜ் செய்ய இது போன்ற கார்டுகளை தான் பயன்படுத்துவர். பத்து ரூபாய் முதல் கிடைக்கும். அந்த கார்டில் பின் புறம் இருக்கும் சில்வர் நிறத்தை சுரண்டினால் அதில் மறைத்து வைக்கப்பட்ட சில இலக்க எண்கள் கிடைக்கும். அதை நம் ஃபோனில் டயல் செய்யும் போது அந்த பணம் நம் செல்ஃபோனிற்கு ஏறும்.
கிட்டதட்ட ஐந்து கார்டுகளை வாங்கி வந்திருந்தான் கார்த்திக். " எதுக்கு டா இத்தன." முருகு.
" கார்டு வாங்கி போடுறதுக்குப் பதில் அந்த ஃபோன் கடைக்கு போய் ரீசார்ஜ் பண்ணிருக்கலாம்ல. " என கேள்வி கேட்டவர்களுக்குப் பதில் சொல்லாது தன் ஃபோனிற்கு ரீசார்ஜ் செய்தான்.
"என்ன பண்ண போற கார்த்தி?" அப்சத்.
" கால் பண்ண போறேன். " கார்த்திக்
"இந்த நம்பருக்கா! " முருகு.
"ம்... " என்றவன் அந்த எண்ணிற்கு டயல் செய்ய,
" அது ஜோஹிதா கிடையாது டா. அப்றம் எதுக்கு கால் பண்ற. " அப்சத்.
"யாருன்னு தெரிஞ்சிக்கிறதுக்காக. எனக்கு மெசேஜ் அனுப்புனது யாருன்னு தெரியணும். ஆறு மாசமா நான் அனுப்புற மெசேஜ்கள் யாருக்குப் போனதுன்னு தெரியனும். ஆறு மாசமா நான் அனுப்புன எல்லா மெசேஜ்ஜையும் படிக்கிறதுக்கு பதிலா… எம்டி மெஸ்ஏஜ் அனுப்புறதுக்கு பதிலா... wrong chat னு ஒரு மெசேஜ் அனுப்பிருக்கலாம்மே. நீங்க நினைக்கிற ஆள் நா இல்லனு அனுப்பிருக்கலாம்ல.
அதைப் பண்ணாம என்னோட நேரத்த வீணாக்குனவன நான் பாக்கணும். எம்டி மெசேஜ் அனுப்பி நேத்து நான் கண்ண என்னோட கனவ கலச்சது யாருன்னு தெரியணும்." என்றவனுக்கு நேற்று இரவு கிடைத்த நம்பிக்கை காணலாகியதை நினைத்து கோபம் தான் வந்தது. அதே கோபத்துடன் கால் செய்ய, அது எடுக்கப்பட்டது. ஆனால் யாரும் பேசாது அட்டன் செய்த உடனேயே கட் செய்யப்பட்டது.
"அந்த நல்ல காரியத்த செஞ்சவன பாரட்டணும்னா… முதல்ல நான் பேசுறேன். " என முருகு வாங்கி காதில் வைக்க, சத்தம் கூட இல்லை அந்தப் பக்கமிருந்து.
"ஃபோனு ஒர்க்காகலையா. இல்ல எங்காது கேக்கலயா. " முருகு.
"ரெண்டுமே இல்ல. அந்தப் பக்கம் இருந்து யாரும் பேசல. கட்டாகிருக்கும். "
"என்னடா இது?. அட்டன் பண்ணிட்டு கட் பண்றது. இதெல்லாம் யாரோட வேல. நவீன் வேலையா இருக்குமோ. உன்ன பைத்தியக்காரனா மாத்த அவெ கேம் விளையாடுறானோ. " அப்சத்.
"இருக்காது. நவீனுக்கு இந்த நம்பர் தெரியாது. இது ஜோஹிக்கும் எனக்கும் மட்டும் தெரிஞ்ச சீக்ரெட் நம்பர். " என மீண்டும் கால் செய்ய, இம்முறையும் அட்டன் செய்து கட் செய்ய, அவனின் காசு விரயமானது.
"பேசாம இருக்குறதுக்கு எதுக்கு அட்டன் பண்ணணும். காசு தான் வேஸ்ட். " என முருகுப் புலம்ப.
"இதோட முப்பது ரூபா ஆச்சி. எங்காச வசூல் பண்ணவாது நான் யாருன்னு கண்டுபிடிக்கிறேன். " என மற்றொரு கார்டை எடுத்து சுரண்டி ரீசார்ஜ் செய்தான்.
" மச்சான் மெசேஜ்ல ட்ரெய் பண்ணி பாரு. " அப்சத்
" அதை நைட் பாத்துக்கலாம். இன்னைக்கி நைட் அவன் தூங்கவே கூடாது. " எனத் திட்டமிட்டவன்,
இரவு முழுவதும் ஒரே மெசேஜ்ஜை திரும்ப திரும்ப அனுப்பினான். அதாவது தனக்கு பிறந்தநாள் என்றும்…உன்னைக் காண வேண்டும் என்றும்... ஒரு கோயிலை குறிப்பிட்டு அங்கு வரும் படியும் குறுஞ்செய்தி மீண்டும் மீண்டும் அனுப்பப்பட்டது.
"நீ வருகிறேன் என்று சொல்லு வரை நான் குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்த மாட்டேன். பொய் சொல்லவோ ஏமாற்றவோ முயல வேண்டாம். " என்று இன்னும் பலவற்றை விடிய விடிய அனுப்பிக் கொண்டே இருந்தான். அதற்கு பிரதிபலனாக அந்தப் பக்கம் இருந்து “ம்…” எனப் பதில் வந்தது. அதன் பின் மெசேஜ் அனுப்புவதை நிறுத்திவிட்டு புறப்பட்டு விட்டனர் நண்பர்கள் நால்வரும்.
கல்லூரி வளாகம்.
கேண்டீனில் அமர்ந்து நால்வரும் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
" என்ன மச்சான் நேத்து நல்ல சாப்பாடுல்ல. இந்த மாதிரி சாப்பாட்ட நான் வாழ்நாள்ல சாப்பிட்டதே இல்ல. மூச்சி முட்ட…. நல்ல சாப்பாடு. " என்றான் முரளி. நேற்று கோயிலுக்கு அவனையும் அழைத்து சென்றிருந்தனர்.
"தொன்ன தொன்னையா வாங்கி தின்னா அப்படி தான் மூச்சி முட்டும். ஓசில வாங்கி தின்னாலும் அளவா அவெ வயித்துக்கு மட்டும் திங்கணும். பஞ்சத்துல அடிபட்டவெ மாதிரி பதறி பதறி வாங்கித்தின்னா அப்படித் தான் இருக்கும். " முருகு கேலியாக.
" நீயும் தான் வாங்கி வாங்கி தின்ன. " என அப்சத் முருகுவிடம் சொல்ல.
" பட் சாப்பாடு நல்லா இருந்து. " முரளி
"அது சாப்பாடு இல்லடா பிரசாதம். இந்த மாதிரி கோயில்கள் தான் நம்மல மாதிரி பேச்சிலருக்கு கிடைச்ச வர பிரசாதம். கோயில் நம்ம வயிற்றையும் மனசையும் நிறைக்கும். " என்று கடவுள் ஆசிர்வதித்து போல் நின்றான் முருகு.
அனுமார் கோயிலில் தரப்பட்ட பிரசாத்தை வாங்க இரண்டு கைகளை மட்டும் தந்த இறைவனை திட்டிய படி பல முறை வாங்கி உண்டுள்ளனர். முருகு மட்டுமல்ல அப்சத்தும் முரளியும் தான். இந்த கார்த்திக் மட்டும் வந்த வேலையை பார்த்தான்.
"என்ன மச்சி. நேத்து கோயில்ல வச்சி பாத்துட்டியா. யாரு அது. உன்னோட கனவு கூட விளையாடுனது. " முரளி.
"எங்க... வைக்கப்போருக்குள்ள ஊசிய தேடுன கதை தான் நம்ம மச்சானோடது. நைட் கோயில் நட சாத்துற வரைக்கும் இருந்தோம். கிடைக்கல. "
"எது நைட் சாப்பாடா. " முரளி.
" ஆமா மச்சி. இனி தீர தீர பிரசாதம் வந்துக்கிட்டே இருக்குற மாதிரி ஒரு அஷ்டய வாலி வாங்கி வைக்கச் சொல்லி லெட்டல் எழுதி போடணும். "
"யாருக்கு. "
"ஆஞ்சிநேயருக்கு. " என அவர்கள் சொல்லி சிரிக்க, கார்த்திக் எதிலும் பங்கு கொள்ளாது வேடிக்கை பார்த்தான். அப்போது அந்த ஜோதிவாணி மதிய உணவுடன் ஒரு கல் பெஞ்சில் அமரும் காட்சி கண்ணிற்கு தெரிந்தது.
எதுவோ தோன்ற. "மச்சா ஃபோன் தான். " என அப்சத்திடம் கேட்க,
"கார்த்திக்…. மறுபடியும் அந்த நம்பருக்கு ஃபோன் பண்ணணும்னா ஒரு ரிங் மட்டும் குடு மச்சான். மிஸ்டுகால்லா… பேலன்ஸ் கம்மியா இருக்கு. ரீசார்ஜ் பண்ண சொன்னா எங்கப்பா துரத்தி துரத்தி அடிப்பாப்ல. பாத்துக்க. " எனத் தயங்கியபடி அவனிடம் குடுக்க. வாங்கி கால் செய்தான்.
அவன் யூகம் சரி என்பது போல் அவளின் பையில் இருந்த ஃபோன் அதிர்ந்தது. அதை எடுத்து சுற்றம் முற்றம் பார்த்தவள் வழக்கம் போல் அட்டன் செய்து கட் பண்ணி உள்ளே போட. கார்த்திக் உறுதி செய்தான்.
" ஐய்யையோ பேலன்ஸ் ஜீரோவா மாறிடுச்சா. " எனப் புலம்பிய அப்சத்தைக் கண்டு கொள்ளாது எழுந்து அவளின் அருகில் அமர்ந்தான் கார்த்திக்.
"எதுக்குடா அவா பக்கத்துல போய் உக்காந்திருக்கான். " முரளி.
" டாப்பப் பண்ண காச கரக்க வேண்டாமா. " முருகு.
" புரியல. "
"கார்த்திக் எதையோ கெஸ் பண்ணிருக்கான். வாங்க போய் பாத்திடலாம். " என அவர்களும் அந்த மேசைக்குச் செல்ல, பயந்து விட்டாள் பெண். திடீரென நான்கு பேர் வந்து அமரவும்.
'அவங்க இங்க உக்காந்து சாப்பிடப் போறாங்க போல. நாம வேற இடம் பாத்துக்கலாம். ' என எழுந்து கொள்ள, கார்த்திக் அவளின் கரம் பற்றி அமரச் செய்தான்.
" யார் நீங்க எதுக்கு கையெல்லாம் பிடிக்கிறீங்க. விடுங்க. " எனச் சிணுங்கிக் கொண்டே கண்ணீர் நீர் விட,
"முதல்ல நீ யாருன்னு சொல்லு. உங்கைக்கு அந்த செல்ஃபோன் நம்பர் எப்படி வந்துச்சின்னு சொல்லு. அப்றம் விடுறேன். "
"நீங்க எத பத்தி பேசுறீங்க. எனக்கு எதுவும் புரியல. ப்ளீஸ். கைய விடுங்க. "
" டேய் எதுவா இருந்தாலும் கைய விட்டுடுட்டு பேசுடா. பதில் சொல்லும். சொல்லிடுவேலம்மா. " என்ற முருகுவைக் கார்த்திக் முறைக்க, கரத்தை விடவில்லை அவன்.
" அப்ப ஜோஹிதா நம்பர் இவாகிட்ட தான் இருக்குன்னு சொல்றீயா. " என்றான் அப்சத்.
"உன்ன இத்தன நாள ஏமாத்துனது இவா தானா. ஏமாத்துக்காரி. அன்னைக்கே சென்னேன்ல இவப் பத்தி… உன்ன. " என ஆவேசமாக முரளி எழ, அப்சத் அடக்கினான். அவள் திருதிருவென முழித்தபடி நிலம் நோக்கி இருந்தாள்.
" எப்படி இந்தப் பொண்ணுகிட்ட தான் அந்த நம்பர் இருக்குன்னு சொல்ற. " என்ற அப்சத்தின் ஃபோனை வாங்கி கால் செய்ய அது அவளின் பையில் அதிர்ந்தது.
மெல்லிய இசையுடன் அது அதிர, அதை வாங்கி பார்த்தான் அப்சத்.
முருகு, "ஆமா மச்சி. இந்த நம்பரு இந்தப் பொண்ணுக்கிட்டதா இருக்கு. எப்படிக் கண்டுபிடிச்ச?"
" நேத்து நான் இவள கோயில்ல பாத்தேன். பேந்த பேந்த முழிச்சிட்டு ரொம்ப நேரம் அங்க உக்காந்திருந்தா. அப்ப சந்தேகம்… இப்ப உறுதியாகிடுச்சி. எப்படி உங்கைக்கு அந்த நம்பர் வந்தது. " கார்த்திக்.
"திருடீருப்பா வேற என்ன செஞ்சிருப்பா. காலேஜ் பெருசு. இங்க பல பணக்கார பசங்க படிக்க வருவாங்க. அவங்கள ஏமாத்தி ஆட்டையப் போடுறது இவளோட வேலையா இருக்கும். இவள மாதிரி ஆளெல்லாம் சும்மா விட கூடாது. மச்சான் இத இப்பவே பிரின்ஸிகிட்ட போட்டு குடுத்து சீட்ட கிழிச்சி அனுப்புவோம். " என்றான் முரளி.
"டேய் ஒரு சாதாரண விசயத்துக்காடா நீ பிரின்ஸி வரைக்கும் பொங்கி போற. ச்ச… அமைதியா இரு டா. நீ சொல்ற மாதியி இந்தப் பொண்ணு கிடையாதுன்னு உள்ளுக்குள்ள ஒரு பக்ஷி சொல்லுது. " முருகு.
" அப்ப அவளுக்கு இந்த நம்பர் எங்கருந்து கிடைச்சதுன்னு சொல்ல சொல்லு இல்லன்னா பிரின்ஸி ரூமுக்குக் கூட்டீட்டு கூட்டீட்டுப் போக வேண்டியிருக்கும். " என்ற கார்த்திக், கரத்தின் அழுத்தத்தைக் கூட்ட, அவள் வாயைத் திறப்பேனா நான் என்பது போல் நின்றிருந்தாள்.
அன்று கேலி பேசி பெண்களிடமும் எதிர்த்து பேசாது வாயை மூடிக் கொண்டு அடமெண்டாக நின்றிருந்த அவளின் முகம் நிறைவு வந்தது.
அப்பொழுது அது பரிதாபமாக தெரிந்தாலும், இப்பொழுது அது பிடிவாதமாகப் பட்டது.
" இவா கிட்ட என்னடா விசாரிச்சிட்டு. ஏய்... நட பிரின்ஸ்பால பாக்க. ம்... " என முரளி மிரட்ட,
"கடைல... சின்னு…. சின்னு கடைல வாங்கி தந்தான். ஃபோனும் அதுக்குள்ள இருக்குற நம்பரும் சின்னு தான் தந்தான்." என ஜோதி பதறிய படி கூறினாள்.
எங்களை புகாரளித்து கல்லூரியை விட்டு துரத்தி விடுவார்களோ என்ற பயம் நன்கு தெரிந்தது அதில்.
" ஆமா இந்த சின்னு யாரு. உன்னோட முறப்பையனா?. " முருகு
"இல்ல. "
"அப்ப யாரு?. " அப்சத்.
"அது... " எனக் கதை சொல்ல போக,
"டேய் எதுக்குடா தேவையில்லாதத பேசுறீங்க. ஏய்… எதுக்குடி மெசேஜ் அனுப்புனா.?" என்றான் கார்த்திக் கோபமாக.
"நான் அனுப்பல. "
"அப்றம் யாரு அனுப்புனா.?" அப்சத்.
" சின்ன பிள்ள எடுத்து விளையாண்டிருக்கும். "
"நைட் ஒரு மணிக்கா. " கார்த்திக்.
"ம்... ஒரு வயசு குழந்த. அதுக்கு விளையாட்டு காட்ட குடுத்தேன். அப்ப தெரியாம. சாரி… "
"அப்ப நீ தான் அனுப்பிருக்க. "
"தெரியாம… ஸாரி. ப்ளிஸ் என்னை விட்டுங்க. க்ளாஸ்க்கு டயம் ஆச்சி. " என மெல்லிய குரலில் சொல்ல,
" அதெப்படி விட முடியும். தெரியாம பண்ணிருந்தேன்னா நான் கால் பண்ணப்பவே அட்டன் பண்ணி நீங்க நினைக்கிற ஆள் நான் இல்லன்னு சொல்லிருப்ப. திமிரு பிடிச்சி போய் அட்டன் பண்ணி கட் பண்ணிருக்க மாட்ட. " கார்த்திக் தான் அது.
"ஏம்மா கட் பண்ண?. " முருகு பதமாகவே விசாரித்தான்.
"அது சின்னு தெரியாத நம்பர்ல இருந்து கால் வந்தா இப்படி தான் பண்ணணும்னு சொல்லிக்கான். "
"திரும்பவும் சின்னு. யாரந்த சின்னு. " முருகு.
"டேய்... " எனக் கார்த்திக் கத்த.
"உன்னால மச்சானுக்கு ஐம்பது ரூபா லாஸ். அதுனால தான் கோபமா இருக்கான். அதைக் குடுத்திட்டு நீ க்ளாஸ் போம்மா. " என்ற முருகு அவளை அதட்டி போகச் சொல்ல, அவனின் தலையில் தட்டினான் கார்த்திக்.
" லாஸ் அது மட்டுமாடா. "
" வேறென்ன. "
"இயர்ஸ். நான் ஜோஹிதாவ சமாதானம் பண்ண கிடைச்ச நாள்கள் மொத்தமும் வேஸ்ட். அது திரும்பி தர முடியுமாடா."
"முடியாது தா. அதுக்கு இந்த பொண்ண பிடிச்சி வச்சா என்ன பண்ணும். "
"எது இயர்ஸ்ஸா… ஃபோன் வாங்கி ஒரு வாரம் தான் ஆகுது. காலேஜ்ல படிக்க போறேன்னு…. "
"சின்னு தா வாங்கி தந்தான். அதானம்மா... " முருகு சொல்ல, அவள் இதழ்களைத் கடித்தபடி புன்னகையுடன் ஆம் எனத் தலையசைத்தாள்.
' இனி இது போல் கட் பண்ணி அடுத்தவெ காச கரியாக்க கூடாது. ' என்ற உபயோகமான அட்வைஸ்ஸை வழங்கி அவளைத் துரத்தி விட்டான் முருகு. அவனை அனைவரும் முறைக்க, ஜோதி ஓடி விட்டாள். விட்டாள் போதும் என்று.
"ஏய்… நாளைக்கி காச எடுத்துட்டு வந்து தர்ற. ஐநூறு ரூபா. " எனக் கார்த்திக் கத்த, அவள் திரும்பி திரும்பி பார்த்த படி ஓடினாள்.
அது கார்த்திக்கை கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
முறைப்பும் குழப்பமும் கலந்த பாவனையை முகத்தில் தாங்கிக் கொண்டு, இவர்களை திரும்பி திரும்பி பார்த்தவளை மனம் ரசித்தது.
" உம்பேரென்ன. " என்று கேட்கவும் வைத்தது.
பதில் சொல்லாது ஓடியவளின் முகம் இம்முறை பதிந்தது. மனத்தில் மட்டுமல்ல... உயிரிலும் தான்.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..