அத்தியாயம்: 86
திருநெல்வேலி மாவட்டம். கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த கருப்பன்- பொன்னம்மாள் தம்பதியரின் மூத்த மகள் தான் ஜோதிவாணி. ஒரே ஒரு மகனும் உண்டு.
திருநெல்வேலி, வேலியிட்டு மறைக்கும் அளவுக்கு நெல் விளையும் பூமி அது. ஆனால் கடுகு அளவுக்குக் கூட நம் கருப்பனுக்கு நிலம் கிடையாது. பிறர் நிலத்தில் கூலி வேலை பார்ப்பவர் அவர்.
கருப்பனுக்கு உடன் பிறந்த பலர் இருந்தாலும் உதவிக்கு என யாரும் கிடையாது. உடன் பிறந்த சொந்தங்களின் நிலத்தில் தான் கலம் ஏந்தி வேலை செய்கிறார் அவர்.
மனைவி அங்குள்ள சிறிய கோயில் வாசலில் பூ விற்கிறார். ஏழ்மை தான். குடிசை வீடு தான். ஒரு வேளை அரிசி உணவு தான் ஆனால் சந்தோஷத்திற்குப் பஞ்சம் இல்லை. தாய் தந்தை என இருவரும் ஜோதிக்குப் பெண் பிள்ளை என்று பல கட்டுப்பாடுகள் விதித்தாலும் தம்பியின் ஆதரவு என்றும் அவளுக்கு உண்டு. அவள் மகிழ்ச்சியுடன் தான் இருந்தாள். எல்லாம் தந்தை இறக்கும் வரை.
வேலியைப் பாதுக்காக எனப் போடப்பட்ட மின் வேலி, அவளின் தந்தையையும் தம்பியையும் காவு வாங்கி சென்ற போது அவள் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்திருந்தாள்.
நல்ல மதிப்பெண் பெற்றாலும் படிக்க வைக்க யாரும் முன்வரவில்லை. இனி தாயும் அவளும் மட்டுமே என்ற நிலையில் கருப்பனின் உறவினர்கள் வயது வந்த பெண் ஜோதி மற்றும் உழைத்து ஓய்ந்து போய் காச நோயால் பாதிக்கப்படிருந்த அவளின் அன்னையின் பொறுப்பையும் தலையில் தூக்கி சுமக்கத் தயாராக இல்லை.
அப்போது அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியவர் தான் சுப்புலட்சுமி. பொன்னம்மாளின் தமக்கை. அவரின் குடும்பம் டெல்லியில் செட்டில் ஆகி இருந்தது.
"என்ன பண்ண! எம்புருஷென நம்பித்தான் அந்த டெல்லில அத்தன ரயிலும் ஓடுது. ஒரு நாள் அவரு இல்லன்னா அங்க எல்லாமே குளறுபடியால்ல ஆகிடும். அதுனால தான் ன் ஊரு பக்கமே வர முடியிறது இல்ல. அங்க அப்புட்டு பேரும் மத்தி மூளைக்காரனுங்க. எல்லாப்ப் பொறுப்பும் எம்புருஷெ தலைல தான்ன். தலைநகரமே எம்புருஷெ இல்லன்னா ஸ்தம்பிச்சில்ல போய்டும். " என ரயில்வே துறையில் கடைநிலை ஊழியம் செய்யும் தன் கணவன் தங்கவேலுவின் பெருமை பேசி திரிவார் சுப்புலட்சுமி.
கணவன் வாங்கும் கையூட்டின் புண்ணியத்தில் சில ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டுள்ளார் அவர். அதில் வீடு கட்டி வருமானம் பார்க்க வேண்டும் என்பது அவரின் லட்சியம்.
பணம் அதானே பிரதானம் என்பவர் அவர். நிலத்தைப் பார்வையிட அவ்வ போது ஊர் பக்கம் வந்து சொந்தங்களிடம் தான் அனுபவிக்கும் சுக போக வாழ்வையும் கணவனின் திறமையையும் பறை சாற்றிவிட்டு செல்வார்.
"சென்ட்ர்ல கவர்மென்ட் வேலைன்னா சும்மா. பல லட்சம் குடுத்து தான் வேலைல சேந்திருக்காரு. அத்தனையையும் எப்படிச் சம்பாதிக்கிறது. குடுக்குறவெங்கிட்ட வாங்கி தான் சம்பாதிக்கணும். தப்பில்ல அதெல்லாம். " என்பவர் பொன்னம்மாளுக்கு உதவ முன்வந்தற்குக் காரணம் உள்ளது.
" புருஷனையும் புள்ளையையும் தூக்கி குடுத்திட்ட... ஹிம்… ஆமா உம்மச்சாங்காரனும் கொளுந்தெங்காரனும் பிரச்சன பண்றாங்களாமே. அடுத்து என்ன பண்ண போற? " சுப்பு.
" என்னை என்னக்காப் பண்ண சொல்ற. வருமானம் வாய்க்குக் கூட பத்தாம இருக்கும் போதும். எப்படிக் கடங்காரனுக்குக் குடுக்குறது. இதுல எல்லாக் கடனையும் சொந்தக்காரங்க கிட்டயே வாங்கிருக்கு. காச எடுத்து வச்சாத்தான் புருஷெ பெணத்தையே எடுக்க விடுவோம்னு பிரச்சனை பண்ணி, இருக்குற கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கிட்டாங்க. இனி நாங்க செத்தாலும் எங்க பொணம் சுடுகாடு போய் சேராது. " என அழுத பொன்னம்மாளுக்கு நல்ல ஒரு யோசனை சொன்னார் சுப்புலட்சுமி.
" நீ எதுக்குடி அழுகுற. அதா முத்தா ஒரு பொம்பள பிள்ளைய பெத்துவச்சிருக்கேல்ல. பெத்த கடமைக்கு அது சம்பாதிச்சி குடுக்கும். " என்றார் சுப்பு.
" க்கும்... கூட்டீட்டுப் போன மகராசெ பொட்டையா பிறந்த இவளையும் சேத்து கூட்டீட்டு போகலயேன்னு தான் நான் கிடந்து தவிக்கிறேன். இதுக்குக் கல்யாணம் காட்சின்னு பாக்குற அளவுக்கு மனசுலயும் தெம்பில்ல, உழைச்சிக் கொண்டாந்துக் கொட்ட உடம்புலயும் தெம்பில்ல. பள்ளிக்கூடம் கூட முடிக்காத பொட்டச்சிக்கி என்ன வேலை கிடைச்சிடப் போது. அப்பனும் இல்ல. ஆத்தாலாலயும் ஒன்னும் பண்ண முடியாது. இனி இந்த கழுத நிலமை என்ன ஆகப்போதோ." என மார்பில் தட்டி அழ, ஜோதி பெண்ணாய்ப் பிறந்தற்காக வருத்தம் கொண்டாள்.
இந்நேரம் ஆணாயிருத்தால் தந்தையுடன் வேலை செய்து தாய்க்கு உதவியாய்க் குடும்பத்திற்குப் பாரமில்லாமல் இருந்திருக்கலாம் என்ற நினைப்பு வராத நாளே இல்லை அவளுக்கு.
"எந்த காலத்துல இருக்குறவ நீ. அங்க வந்து பாரு. ஆம்பள பசங்கள விட பொட்டைங்க தான் அதிகமாச் சம்பாதிச்சிட்டு திரியுதுக. எங்கூட அனுப்பு வை. ஒரே வர்ஷத்துல உங்கடன் மொத்தமும் அடச்சிடலாம். " என்க, பொன்னம்மாள் யோசித்தார்.
"தூண்டில்ல புழுவ போட்டு மீன பிடிக்கிறது கணக்கா அந்த ஊர்ல பிடிக்கிறதுக்குக் கொழுத்த மீனுங்க நிறைய உண்டு.
பணம் சம்பாத்திக்க, பிழைக்க, வாழன்னு ஆயிரம் வழி இருக்கு அங்க. இங்கையே கிடந்தா பூச்சி மருந்த குடிச்சிட்டு, அம்மையும் மகளும் உத்திரத்துல தொங்க வேண்டி தான் வரும். அப்புறம் உம்புருஷெ வாங்கி வச்ச கடனாளிங்கிற பேர நீங்க செத்ததுக்கு அப்றமும் தூக்கி சுமக்க வேண்டி வரும் பாத்துக்க. " சுப்பு.
"அப்படி என்ன வேலக்கா கிடைச்சிடப் போது."
"அது பட்டணம் டி. புருஷனும் பொண்டாட்டியும் சேந்து ஓடுனாத்தா குடும்ப வண்டி ஓடும். அந்த ஓட்டத்துல எங்கிட்டுக்கூடி வீட்டு வேலை செய்யுறது பிள்ள குட்டிகள மேக்கிறது. பெரிய பெரிய கட்டமெல்லாம் உண்டு அங்க. வீட்டு வேலை பாக்க தான் ஆள் கிடைக்கிறது இல்ல. எங்க ஏரியால நிறைய பேரு அந்த மாதிரி தான் வேலை பாக்குதுக. ஒரு நாலஞ்சி வீடு. போதுமே... கை நிறைய வருமானம் வரும். " என்க, பொன்னம்மாள் சரி என தலையசைக்காது யோசிக்க,
"உம்பொண்ணு பாதுக்காப்புக்கு நான் உத்திரவாதம் தாரேன். ஏன்னா உம்மக மட்டும் தனியா வீட்டு வேலைக்கி போகப்போறது இல்ல. கூட நம்ம ஊரு பொண்டுகளும் இருக்குங்க. கோழி அட சேருற மாதிரி ராவான வீடு வந்திடுங்க. தங்க எவ்வீடு, திங்க பல வீடுன்னு வேலை பாத்தா சம்பளம் மிச்சம் தான. " என்றபோது பொன்னம்மாளின் முகம் சற்று தெளியத் தொடங்கியது.
"அங்க வீட்டு வேலை பாக்குறவங்களுக்குன்னு தனி சங்கம் இருக்கும். எதாவது பிரச்சனன்னா புகார் எழுதி குடுத்தாப் போதும். சங்கம் பாத்துக்கும். பிறகென்ன பல்லகடிச்சிட்டு ஒரு ஐஞ்சி வர்ஷம் வேல பாத்தா உம்மகளுக்குத் தங்கத்துல நகை கூட செஞ்சி ஜாம்ஜாம்னு கல்யாணம் பண்ணி வைக்கலாம். " என ஆசை வார்த்தைகள் பல பேசி ஜோதியை டெல்லி அழைத்து வந்தார்.
ஜோதியை அழைத்துவருவதில் அவருக்கும் ஆதாயம் உண்டு. வீட்டில் வேலை செய்ய தேவையில்லை. ஐந்து வீடு என்பது பத்து வீடாக வேலை செய்ய வைத்தால் பணம் அதிகமாகக் கிடைக்கும். பாதியை பொன்னம்மாளுக்குக் கொடுத்து விட்டு மீதியை அவர் வைத்துக் கொள்ளலாம். வீடு கட்ட வேண்டும் அல்லவா… அதற்கு தான்.
சுப்புவைப் பாம்பாக நினைத்து எத்தி விடவும் முடியாது. பழுதாக நினைத்து தொத்திக் கொள்ளவும் முடியாது. ஏனெனில் அவர் கெட்டநல்லவர். அல்லது நல்லகெட்டவர்...
புரியவில்லையா...
பொன்னம்மாளுக்கு வாக்கு கொடுத்தது போல் ஜோதியின் பாதுகாப்பை அவர் உறுதி செய்தார். நல்ல இடமாய் பார்த்து, எவ்வித பாலியல் சீண்டல்களுக்கும் அவள் உள்ளாகாது குடும்பப் பாங்கான வீடுகளில் மட்டுமே பணிக்குச் சேர்ந்து விட்டார். தமிழ் பேசும் அவளைப் போன்ற சிலரை அவளுக்குக் காவலுக்கும் வைத்தாள்.
அதே நேரம் பணம் தான் அவரின் குறி. அவளின் உடலை விலை பேசாது, உழைப்பை ஓட்டுண்ணியாய் உறிந்து குடித்தார்.
காலையில் எழுந்து வீட்டில் இருவேளை உணவையும் செய்து முடித்துவிட்டு, நான்கு பெரிய கடைகளுக்கு முறைவாசல் செய்ய வேண்டும். பின் அப்பார்ட்மெண்ட்டில் மூன்று வீடுகளில் வேலை. பாத்திரம் தேய்ப்பது, சமையல் செய்வது தொடங்கி அவர்களின் பிள்ளைகள் கவனிப்பது வரை அவள் தான் செய்வாள். எட்டு மணிக்கு மேல் அருகில் இருக்கும் ஒரு கடையில் ஏரியா பெண்களுடன் சேர்ந்து எம்ராயிடரி வேலை செய்வாள்.
உறக்கம் என்பது ஐந்து மணி நேரம் மட்டுமே அவளுக்குக் கிடைத்தது. மூன்று ஆண்டுகளில் மகளின் சம்பாத்தியத்தில் கடனை அடைத்துவிட்ட திருப்தியில் பொன்னம்மாள் உலகை விட்டு செல்ல, ஜோதி பதினெட்டு வயதில் அனாதையாய் நின்றாள்.
சுப்புலட்சுமிக்கு சந்தோஷம் தான் இதில். இனி ஜோதியின் சம்பளம் முழுவதும் அவளுக்கு மட்டுமே கிடைக்குமே. ஒன்றல்ல ரெண்டு வீடுகள் கட்டிவிடலாம். எனத் திட்டம் போட்டு வேலைக்கு அனுப்பினார்.
"உனக்குச் சம்பாதிக்க வழி காட்டுனதே நான் தான். இருக்க இடம் தந்து, உடுத்த துணி தந்து அநாதையா இருக்க வேண்டிய உன்னிய நல்லபடியா பாத்துக்கிற எங்களுக்கு உன் சம்பாத்தியத்த தர்றதுல தப்பில்ல. " என்றபோது அவளுக்குத் தரப்பட்ட ஓட்டை பாயையும் வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும் பழைய கிழிந்த துணிமணிகளையும் அவளை பார்த்து சிரிக்கும்.
"வேலை பாக்குற இடத்துல கண்ட பயளுக வந்து பல்ல இளிச்சிட்டு பேசத்தான் செய்வானுங்க. பதிலுக்கு நீயும் பல்ல காட்டணும்னா பாத்ரூம்ல பூச்சி மருந்து வாங்கி வச்சிருக்கேன். அதக் குடிச்சிட்டு வீட்டுல ஒரு மூளைல படுத்திட்டே விட்டத்த பாத்துச் சிரிச்சிக்க. ஏன்னா உன்னோட வயசு அப்படி. ஊர் மேய்ய துடிக்கும். அப்படி ஆம்பள சுகம் கேட்டு எவெங்கூடையோ படுக்குறதுக்கு, விஷத்தக் குடிச்சிட்டு பொணமா படுத்திடு.
ஏன்னா இந்த ஏரியால மட்டுமில்ல. நம்ம ஊர்லயும் எனக்குன்னு நல்ல பேரு ஒன்னு இருக்கு. மக மாதிரி வளத்த பொண்ணு… ஊர் மேஞ்சான்னு தெரிஞ்சா எனக்கு தான் அசிங்கம். எம்மானம் போகும். அதுனால எல்லாத்தையும் அடக்கிட்டு வேலைய மட்டும் பாக்கணும். என்ன சரியா! இல்லன்ன கௌரவ கொலை தான் நடக்கும். " என அவ்வபோது ஜோதி கண்ணாடி முன் நின்றலே எச்சரிப்பார் அவர்.
பல கஷ்டங்கள்… பல கனவுகள்... பல ஆசைகள் என அனைத்தையும் வெளியே காட்டாது தன் இறக்கையை மடக்கிக் கொண்டு வளம் வரும் அவளின் சிறகு விரியும் இடம் என்றால் அது சிவரஞ்சனியின் வீடு. ருத்ராவின் அத்தை.
தன்யாவைப் பெற்றெடுத்திருந்த நேரம் அது. இரு குழந்தைகளை வைத்துக் கொண்டு கணவனுடன் சேர்ந்து பிஸ்னஸை கவனிப்பது கடினமாக பட, வீட்டு வேலைக்கு என ஒரு நாளில் பெரும் பகுதியை தங்களின் வீட்டில் செலவு செய்ய நம்பிக்கையான ஒருவரை வேலைக்குச் சேர்க்க முடிவு செய்தார் ரஞ்சினி.
புரணி பேசாது தானுண்டு தன் வேலையுண்டு என வளம்வரும் தமிழ் பெண்ணான ஜோதியை அதிக சம்பளம் பேசி தங்களுடன் இருக்க வைத்தார் ரஞ்சனி.
காலை சில கடைகளுக்கு முறைவாசல், பின் ரஞ்சனியின் வீடு, இரவு எம்ராயிடரி வொர்க் என்பது ஜோதியின் தினசரி வேலையானது.
ரஞ்சினி, ஜோதியை வேலையாளாக பார்க்காது வீட்டில் ஒருவராகவே பார்த்தார். புது துணி, தினமும் நல்ல உணவு என ஜோதியை நன்கு கவனிக்கவே செய்தார் அவர். அப்போது தான் ஜோதிக்கு ருத்ரா அறிமுகம் ஆனான்.
தாரிக்காவைப் போல் தன்னைக் கேலி செய்யாது. தன்னுடைய பேச்சை சரி எனக் கேட்கும் ஜோதியை, வாணிக்காவாக மிகவும் பிடித்து போனது அவனுக்கு.
க்ரிஷ், தாரிகா, ருத்ரா, தன்யா, எனச் சிறுவர்களுடன் மகிழ்ச்சியாக நாள்கள் செல்ல, மதன கோபால் சென்னைக்கு சென்று தொழில் செய்வோம் என்றார். ஜோதியையும் உடன் அழைத்தார் ரஞ்சனி. ஆனால் சுப்பு சம்மதிக்கவில்லை.
" பொன் முட்ட போடுற வாத்த யாரும் விக்க மாட்டாங்க. மேச்சலுக்குக் கூட்டீட்டுப் போனோமா கொண்டு வந்து விட்டோமான்னு இருக்கணும். விலை பேசக் கூடாது." என்றார்.
அவளுக்குப் புரியும் மொழியிலேயே பேசி ஜோதிக்கு, அந்தப் பணப்பேயிடம் இருந்து விடுதலை கிடைக்க வழி கூறியது ருத்ரா தான்.
" எனக்கு வாணிக்கா வேணும். " ருத்ரா.
" உனக்கு யாரும் அவங்கள வச்சிக்க குடுக்க மாட்டாங்க. " தாரிகா.
" பட் எனக்கு வேணும். எங்கூட நான் அமெரிக்கா கூட்டிட்டு போகப் போறேன். "
" நீ பேசுற தமிழயே அவங்களுக்குப் புரிஞ்சிக்க சில நிமிஷம் ஆகுது. இதுல தமிழே பேசாத நாட்டுக்கு அவங்கள கூட்டீட்டு போய் என்ன பண்ண போற.? "
"அது உனக்குத் தேவையில்ல. அத்தை, நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ, வாணிக்கா எங்கூடவே இருக்கணூம். "
" எப்படி முடியும் தேவா? அவங்க பெரியம்மா தான் விடா மாட்டேன்னு சொல்லிட்டாங்களே. அதுமட்டுமில்லாம வாணிய உன்னோட வீட்டுக்குக் கூட்டீட்டு போணும்னா கொஞ்சம் கொஞ்சமாச்சும் அவளுக்கு இங்கிலீஷ் தெரிஞ்சிருக்கணுமே." ரஞ்சினி.
" அப்ப அவங்களப் படிக்க வைங்க. கோர்ஸ் மாதிரி எதுலயாது சேத்துவிட்டு இங்கிலீஷ தெரிஞ்சி வச்சிக்கிட்டாங்கன்னா, அவங்களுக்கு டாட் கம்பெனில வேலை போட்டு தர்றோம்னு சொல்லி நம்ம கூடக் கூட்டீட்டுப் போய்டலாம். " என்ற அவனின் யோசனை சரியாகப் பட்டது ரஞ்சனிக்கு.
இங்கு வேலை செய்வதை விட வெளிநாட்டில் வேலை செய்தால் அதிக காசு கிடைக்கும் எனச் சுப்புவின் ஆசையைத் தூண்டி, ரஞ்சனி, ஜோதியைக் கல்லூரியில் சேர்த்து விட்டார். அதுவும் அவரின் செலவிலேயே நல்ல கல்லூரியாய்ப் பார்த்து சேர்த்து விட்டார்.
நாங்களே சேத்து விடுறோம் என்ற சுப்புவிடம் பணத்தைக் கொடுக்காது ஜோதியின் படிப்பிற்கான அனைத்து செலவையும் அவரே நேரடியாக செய்தார்.
"வாணிக்கா... நீ எங்கூட இருக்கணும்னா அதுக்கு நீ அமெரிக்கா வரணும். அங்க வந்து இருக்கணும்னா உனக்கு இங்கிலீஷ்ல பேச, படிக்க, எழுத தெரிஞ்சிருக்கணாம். காலேஜ் போய் எனக்காக அத நீ படிக்கணும். கோர்ஸ் முடியவும் டிகிரி சர்டிபிகேட் மாதிரி ஒன்னு தருவாங்க. அத வாங்கிட்டா நீ எங்கூடவே இருக்கலாம். ம்... வாங்கிட்டு வா. " என்றவன் அவளுக்கு பாஸ்போர்ட் முதல் கல்லூரி வரை அனைத்தையும் செய்து தர சொல்லி ரஞ்சினியிடம் கூறினான்.
இது ஜோதிவாணி அந்த கல்லூரியில் சேர்ந்த கதை. கார்த்திக் ஜோஹிதா படிக்கும் அதை கல்லூரிக்கு.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..