அத்தியாயம்: 87
மூன்று பேர் கைக் கோர்த்து ஒன்றாக நடக்க முடியாது அந்த தெருவில். அத்தனை குறுகலானது. ஆனால் அங்கு கிடைக்காதப் பொருளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வணிகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
சிறு சிறு தீப்பெட்டிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தது போல் இருக்கும். அந்தக் கடைவீதியின் ஒரு கடைக்குள் தான் வாணி நுழைந்தாள். மணி எட்டைத் தாண்டி விட்டது. தாமதத்திற்குத் திட்டு விழும் என்ற பதட்டத்துடன் நுழைய,
அந்தக் கடை முதலாளியோ அவளை ஆக்ரோஷமாக முறைத்து ஹிந்தியில் பாராட்டி மழை பொழிந்து உள்ளே அனுமதித்தார்.
" என்னடி வழக்கத்துக்கு மாறாத் தாமதமா வந்திருக்க?. என்னாச்சி.? " ராஜேஸ்வரி.
உடன் பணிபுரிபவள். வாணியின் தோழி. வாணி வேலை செய்யும் அதே அப்பார்ட்மெண்ட் தான் ராஜியும் வேலை செய்கிறாள். அருகருகே இருப்பதால் குரல் குடுத்ததும் ஓடி வந்து விடுவாள் ராஜி. நெருங்கிய தோழிகள். வாணி எதையும் ராஜியிடம் மறைத்தது இல்லை.
இங்கு தங்கி வேலை பார்க்கும் ராஜியின் வருமானத்தை எதிர்பார்த்து ஒரு குடும்பமே காத்திருக்கிறது. இரு மாதங்களுக்கு ஒரு முறை அவளின் அப்பா, அம்மா, தம்பி, தங்கை, அக்கா என ஆறு பேர் கொண்ட தன் குடும்பத்தைப் பார்த்துவிட்டு வருவாள்.
' அவளின் வருகையை எதிர் நோக்கியாவது ஒரு குடும்பம் இருக்கிறது. ஓரிரு வாரமேயானாலும் அந்த இயந்திர வாழ்க்கையில் இருந்து அவளுக்கு விடுதலையும், குடும்பத்தாரின் அரவனைப்பும் கிடைக்கிறது. ஆனால் எனக்கு என்று எந்தச் சந்தோஷங்களும் கிடையாதே… ஏன்? ' என வாணி வருந்துவது உண்டு.
"ஒன்னுமில்ல… " என்றாள் வாணி ஒன்றை வரியில்.
" என்னடி மூஞ்சி சுண்டக்காக் கணக்காச் சுருங்கிப் போய்க் கிடக்கு. ஏன் உன் பெரியத்தாகாரி எதுவும் சொன்னாளா என்ன?. இருக்காதே. இன்னைக்கி சம்பள நாள். வீட்டு அடுப்புல இன்னேரம் கறி கஞ்சி கொதிச்சிட்டு கிடக்கும். உன் பெரியாத்தா மனசு குளுந்தில்ல கிடக்கும். " எனக் கேள்வியும் அவளே பதிலும் அவளே என்பது போல் பேச, வாணி எதுவும் சொல்லாது ஊசியைக் கையில் எடுத்துக் கொண்டு தன் கை வண்ணத்தை அந்தச் சேலையில் காட்டத் தொடங்கினாள். அவளின் முகம் வாடியிருப்பதைக் கண்டு,
" காலேஜ்ல எதுவும் பிரச்சனையா?. அந்தப் பிள்ளைங்க மறுபடியும் தகராறு பண்ணுச்சிங்களா?. பெரிய டீச்சர்ட்ட சொல்லி சரி பண்ணிட்டதா ரஞ்சனி மேடம் சொன்னாங்களே!. மறுபடியும் பிரச்சன பண்ணாங்களா.? இல்ல புதுசா யாரும் வம்பு வளத்தாங்களா? " என வரிசையாகப் பல கேள்விகளை எழுப்ப,
" ம்ச்... வேலய பாரு ராஜி. யாரு வந்து என்னத்த வளத்தா என்ன?. வேலை பாத்தாத்தா சோறு. காசில்லன்னா ஏன் பெரியம்மா நடு ரோட்டுல வெட்டி போட்டாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல. அதுக்கும் பணம் மட்டும் தான் குறி. " என்றாள் சோகமாக.
கார்த்திக் தான் பணம் கேட்டிருந்தானே. அவனுக்குக் கொடுக்க வேண்டி தன் சம்பளத்தில் இருந்து அதைக் கேட்க, சுப்பு கரண்டியால் அவளை வெளுத்து வாங்கி விட்டார். அதான் சோகமும் சோர்வும். ஏன் என்று விடாது கேட்ட ராஜியிடம் நடந்த அனைத்தையும் கூறினாள் வாணி.
"ஒரு செய்திய அனுப்புனதுக்கா ஐநூறு ரூபா!. இது அநியாயமா இல்ல. உங்கிட்ட காசு கேட்டவெ எவன்னு எங்கிட்ட காட்டு. அவெ மேல சைக்கிள ஏத்தி மண்ட மயிர ஒன்னு ஒன்னா ஆஞ்சி எடுத்திடுறேன். " ராஜி.
" அவெங்கேட்டதுல கூட எனக்கு வருத்தம் இல்ல. சொல்லப்போனா தப்பு எம்மேல தான். ஏன்னா அவனோட காதலிய சமாதானம் செய்ய செய்தி அனுப்பிருக்கான். அது மாத்தி எனக்கு வந்திருக்கு. நான் தான் புத்தி கெட்டு போய் ரொம்ப நாள அனுப்புறானேன்னு, அவனுக்கு ஒன்னுமில்லாத அந்தச் செய்திய அனுபினேன். அவெ அவனோட காதலி தான் அனுப்புனான்னு கனவு கண்டு ஏமாந்திட்டான். "
"அதுக்கு பைன் கெட்டப் போறீயா.?"
" அப்படி நினைச்சி தான் தரலாம்னு பெரியம்மா கிட்ட காசு கேட்டேன். அது கரண்டிய காய வச்சி சூடு போட்டுடுச்சி. "
"எங்க டி?. "
"தொடைல. " என அணிந்திருந்தப் பாவாடையை லேசாக தூக்கி காட்ட,
"அடி சண்டாளி. நல்லா இருப்பாளா அவ. உடம்பு முழுக்க புண்ணு வந்து அதுல புழு பிடிச்சி சாவ. காயம் ஆழமா இருக்கே. இரு மருந்த எடுத்திட்டு வாரேன். " என எழ,
" வேண்டாம் ராஜி. இந்தாளுக்கும் எனக்கும் ஆவாது. நாம பேசுறத பாத்தா சரியா வேலை பாக்கல, ஓப்பி அடிக்கிறான்னு என் பெரியாத்தாட்ட ஒத்த வார்த்த சொல்லிடுவான். அப்றம் அவ்வளவு தா. இப்பத் காசுக்கு என்ன பண்ணன்னு தெரியாம முழிக்கிறேன்." என்ற வாணியின் கையில் காசை தினித்தாள் ராஜி.
" இதக் குடுத்து அவெ கடன மட்டுமில்ல அவனையே தலை முழுகிடு. அப்பதான் சரியா இருக்கும். நீ காலேஜ் போறது படிக்க. அத மட்டும் நியாபகம் வச்சிக்க. உன்னைச் சின்னு அவெ வீட்டுக்குக் கூட்டீட்டுப் போறேன்னு சொல்லிருக்கான் மறந்திடாத. உங்க பெரியப்பாவ வேற வேலைல இருந்து தூக்கிட்டாங்க. இப்ப மொத்த குடும்பமும் உன்னைத்தான் நம்பி உக்காந்து திங்கிது.
முதல்ல உங்கப்பா கடன் சுமை. அப்றம் இவனுங்க. நாளைக்கி கல்யாணம் பண்ணிக்க போறவெ. அடுத்து பிள்ள குட்டி. கடைசிவரைக்கும் உன்னை ஓட விட்டுட்டேத்தா இருப்பாங்க. அதுனால இந்த சாக்கடைல இருந்து விடுதலை வேணும்னா ஒழுங்கா டிகிரிய வாங்கி அமெரிக்கா போகுற வழிப்பாரு. " என்ற ராஜியின் பேச்சு வாணியைத் தேற்றியது.
பணி முடிந்து இரவு பதினொரு மணிக்கு மேல் வீடு திரும்பிக் கொண்டு இருந்தவளை வழி மறித்தான் முரளி.
" என்ன புதுசா ஆளாலெல்லாம் பிடிச்சிருக்க போலயே! கருப்பா எரிஞ்சி போன தீக்குச்சி மாதிரி இருக்குற உம்பின்னாடி எவனும் வரமாட்டான்னு தெரிஞ்சி நீயே பயளுக பின்னாடி சுத்த ஆரம்பிச்சிட்ட போல. ஆம்பள பொறுக்கியா நீ. " என வாணியைப் பார்த்து கேட்க, அவள் காதை மூடிக்கொண்டு அழத் தொடங்கி விட்டாள்.
" ஏய்!. என்ன பேச்சு பேசுற.? மரியாத பேசு. இல்லன்னா கால்ல கடக்குறத கலட்ட வீசிடுவேன் பாத்துக்க. " என எகிறினாள் ராஜி.
" உனக்கும் எனக்கும் பேச்சு கிடையாது. பேசாம மூடிட்டு இரு. ஏய்!. எதுக்குடி அவனுக்கு மெசேஜ் அனுப்புன. அவெ யாருன்னு தெரிஞ்சிதா அனுப்புனீயா? எத்தன நாளா நடக்குது இந்த ரகசிய உறவு. " கோபமாக கேட்டான்.
" இல்லை. எனக்கு யாருன்னு தெரியாது. தெரியாம போய்டுச்சி. " என்றாள் அழுகுரலில்.
" தெரியாம எப்படி டி போகும்? ம்… அதுவும் ராத்திரி நேரத்துல அனுப்பிருக்க. முதல்ல உங்கைக்கு எப்படி ஃபோன் வந்துச்சி?." என அதைப் பிடுங்கி நோண்டி பார்த்தவன், அதில் சின்னுவின் நம்பரும், இரவு சின்னுவிடம் பேசிய பதிவும் இருந்தது.
"அந்தச் சின்னப்பையன சாக்கா வச்சி படிக்கிறேங்கிற பேர்ல ஊர் சுத்திட்டு திரியுற. இது என்னைக்கு எங்காத்தாலுக்குத் தெரியுதோ அன்னைக்கி உனக்கு இருக்கு, கெடா விருந்து. கொண்டா... இனி எவெங்கிட்டையும் நீ தெரிஞ்சி கூடப் பேசக் கூடாது. " என ஃபோனை பிடுங்கிச் சென்றான் முரளிதரன்.
சுப்புவின் தவப்புதல்வன்.
அண்ணன் முறைதான். ஆனால் அண்ணன் என்று அழைத்தால், " உங்காத்தா என்னைப் பெத்தாளா? இல்ல எங்காத்தா உன்னியப் பெத்தாளா? ரெண்டுமே கிடையாது. அதுனால அண்ணெ நொண்ணேன்னுட்டு வந்த பாத்துக்க. " என மிரட்டி துரத்தி விடுவான் முரளி.
அவனுக்கு வாணியைப் பிடிக்கவே பிடிக்காது என்று சொல்லிவிட முடியாது. அவளுக்கு எனத் தாய் தந்தை இருக்கும் போது தங்கை என்று விரும்பி பழகுவான் தான். ஆனால் எப்பொழுது அவனின் வீட்டில் வந்து தங்கினாளோ அப்போதிலிருந்து அவளைப் பிடிக்காது போய்விட்டது.
அவர்களின் வீடோ சிறியது தான். சுப்பு படிக்கட்டுகளுக்கு இடையே இருக்கும் சிறிய பகுதியை வாணிக்கு என ஒதுக்கீடு செய்திருந்தார். அது முரளியின் இடம். வீட்டிற்குத் தெரியாது தம், தண்ணி, இதர பல என தன்னைச் சந்தோஷமாக வைத்திருக்கும் இடம். என்று இவள் வந்தாளோ அன்றே பறி போனது. வீட்டில் சுதந்திரமாக இருக்க முடியாது போனது அவனுள் ஆத்திரத்தை தந்தது. அது கோபமாக மாறி அவள் மேல் காட்டுகிறான்.
பணியில் அஜாக்கிரதையாக இருந்ததால் அவனின் தந்தையைப் பணி இடை நீக்கம் செய்யதுள்ளனர். பாதி வருமானம் தான். சைடு வருமானமும் இல்லாததால் அவள் வருமானத்தில் தான் அவர்கள் உண்டு வாழ்கின்றனர். படிப்பு போக மாதம் சம்பளம் தருவதாக ரஞ்சனி சுப்புவிடம் பேசித்தான் அந்தப் கல்லூரியில் சேர்ந்தார். அது தெரியாது வாணியை வீட்டின் சுமை என்று நினைத்தான். வெறுக்கவும் செய்தான்.
"உன் சம்பாத்தியத்துல வயிறையும் வாயையும் வளத்திட்டு… எப்படிப் பேசிட்டுப் போறான் பாரு. திமிரு பிடிச்சவெ. " என ராஜி வசை பாட, வாணிக்கு முரளி சொல்வது சரி என பட்டது.
எனவே காலையில் கல்லூரிக்குச் சென்றதும் முதல் வேளையாகக் கார்த்திக்கை அவனின் வகுப்பில் பார்த்து பணத்தைக் கொடுத்துவிட்டு, "ஸாரி… தெரியாம நடந்திடுச்சி. இனி அப்படி நடக்காது. " என்று விட்டு திரும்பிப் பார்க்காது நடக்கத் தொடங்க,
" ஹே…. ஹேய்… ஜோ… ஜோதி... நில்லு. " எனக் கத்தினான் கார்த்திக்.
"போற அவள எதுக்கு மச்சான் கூப்பிடுற? " என முரளி கடுப்புடன் கேட்க, முரளியைக் கவனியாது வாணியின் பெயரை சுருக்கி சொல்லி கத்தி அழைக்க, அவள் முரளியை பார்த்தபடி நடந்து வந்தாள்.
முதல் நாள் கல்லூரிக்குப் புதிது. புரியாத மனிதர்கள்… அறியாத படிப்பு… எனத் திருதிருவென முழித்தபடி இருந்தவள் முரளியைப் பின் தொடர்ந்து தான் கார்த்திக்கின் வகுப்பில் சென்று அமர்ந்தாள்.
அப்போதே சொல்லிவிட்டான் முரளி. " எம்பின்னாடி வந்து அண்ணே நொண்ணேன்னு கூப்பிட்டு காலேஜ்ல எம்மானத்த வாங்குன உன்னைக் கொன்னு போட்டிருவேன். அந்த காலேஜ்ஜ பொருத்தவர நீ யாரோ நான் யாரோ. உனக்கு என்ன ஆனாலும் எனக்குக் கவல இல்ல. எந்த சூழ்நிலையிலும் நீ என்னைத் தேடி வரக்கூடாது. " என்று மிரட்டியவனை இப்போது பார்த்தபடி வர,
கார்த்திக் அவளின் கையில் அந்த பணத்தை வைத்து, ஐம்பது ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டான்.
" உங்காசு ஒன்னும் எனக்குத் தேவையில்ல. சும்மா விளையாட்டுக்குத் தான் அப்படிக் கேட்டேன். பட் நீ தருவன்னு நினைக்கல. உன்னைப் பயமுறுத்திருந்தேன்னா ஸாரி. " என்க, ஆண் மகன்களுக்குக் கூட மென்மையாக பேச வருமா? என நினைத்த வாணி அப்போது தான் அவனின் முகம் பார்த்தாள்.
ஏனெனில் இதுவரை அவள் கேட்ட ஆண்களின் குரல் ஒன்று வழிஞ்சலாக இருக்கும்… அல்லது கோபமாக கரடுமுரடாக இருக்கும். கார்த்திக்கின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை நிமிர்ந்து அவனைப் பார்க்கச் சொல்லி சொல்லியது.
மாநிறம்... அடர்ந்த புருவம். கூர்மையானப் பார்வை கொண்ட கண்கள். அதில் வருத்தம் தெரிந்தது. இதழ்களில் உறைந்திருக்கும் புன்னகை வசீகரத்தைத் தந்தது. கருகருவென முடி மட்டுமல்லா அவனின் மீசையும் அடர்ந்து வளர்ந்திருந்தது. கிள்ளி பிடிக்க முடியாத அளவுக்கு லேசாக வளர்ந்திருந்த தாடி.
அடர் நீல நிற சட்டையில் சில்வர் நிறத்தில் மெல்லியதாய் கோடுகள். க்ரே கலர் பேண்ட். கழுத்தில் தொங்கிய ஐடி கார்ட்டை கூடச் சட்டை பாக்கெட்டுக்குள் போட்டு ஸ்டெயில்லாக நிற்பது போல் தெரிந்தான் அவளின் கண்களுக்கு.
ஜோஹிதாவுடன் சண்டை போட்ட பின் கார்த்திக் சோகத்தில் நன்கு உண்டு உறங்கி, உடல் வைத்து விட்டது. அப்பொழுது பென்சில் பாடியாக இருந்தவன் இப்பொழுது சிக்ஸ் பேக் வைத்து ஹீரோ போல் மாறி விட்டான்.
பெண்ணவள், அவனின் தலை முதல் கால் வரை தன் பார்வையால் ஸ்கேன் செய்ய, முதல் முறை ஒரு ஆணை ரசித்து பார்க்கிறாள் வாணி. அவள் தன்னை எடை போடும் பார்வை பார்க்கவும், அவளின் முகத்தில் அருகில் சொடக்கிட்டு கவனத்தைக் கவர்ந்தான் கார்த்திக்.
" பாத்து முடிச்சிட்டியா?. நான் போலாமா?" எனப் புன்னைகையுடன் கேட்க, முரளி அவளை முறைத்தபடி நின்றான். அதைக் கண்டவள் அவனுக்குபீ பதில் ஏதும் சொல்லாது ஓடியே விட்டாள்.
______
"ஐய்யோ எனக்கு இன்னைக்கான நாளையே பிடிக்கல. " என்றான் கார்த்திக்.
"ஏண்டா ஜோஹிதா மறுபடியும் உன்னைக் கூப்பிட்டு வச்சி கொஞ்சினாளா?. " என முருகு கேட்க, கார்த்திக் அவனை எட்டி உதைத்தான்.
"ஐய்யோ அம்மா…" எனக் கத்திய முருகுவைப் பார்த்து அப்சத் சிரித்தான்.
"உனக்கு வாய் இருக்கே… அது நம்ம வண்டலூர் ஜூ அளவுக்குப் பெருசா இருக்கு. " என்று நண்பனைக் கேலி செய்தவன்,
"அவன விடு கார்த்தி. என்னாச்சி இன்னைக்கி? உனக்குப் பிடிக்காத மாதிரி என்ன நடந்தது?" என்ற அப்சத்திடம் காலையில் நடந்ததைச் சொல்லி,
"ம்ச்…. அந்தப் பொண்ணு காச திருப்பி தரும்னு நான் நினைக்கவே இல்லை மச்சான். கைல குடுக்கவும் ஒரு மாதிரி ஆகிடுச்சி. வில்லன் மாதிரி கராரா நடந்துக்கிட்டோமோன்னு ஒரு ஃபீல்"
"மாதிரில்லாம் இல்ல. அவளுக்கு நீ வில்லன் தான். " என முருகு சொல்ல, மீண்டும் சண்டை போட்டனர் இருவரும்.
" அப்றம் என்ன நினைச்சி நீ அந்தப் பொண்ணுக்கிட்ட காச கேட்ட?" அப்சத்.
"என்னன்னா... என்னால குடுக்க முடியாது. நான் எதுக்கு தரணும்னு கேட்டு வாயாடி சண்ட போடும்னு நினைச்சேன். பட்... நடக்கல அது. வந்து காச குடுத்திட்டு போய்டுச்சி. ரொம்ப கஷ்டமா இருக்கு."
"அப்ப உங்கிட்ட ஐநூறு இருக்கு. நாம ஏன் அதக் கொண்டாடக் கூடாது. " என முருகு ஆனந்தப்பட,
" சும்மா இருடா... அவ்ளோ கஷ்டப்படுறவரு, கூட்டத்துல செயின திருடீட்டு ஓடுற திருடன பிடிக்கிற மாதிரி சுத்தி வளச்சி ஏன் அந்தப் பொண்ணுக்கிட்ட விசாரிக்கணும்.?"அப்சத்.
" கரெட்டு மச்சான். " என்ற முருகுவைக் கார்த்திக் முறைக்க,
"பண்றதெல்லாம் பண்ணிட்டு கஷ்டமாம் கஷ்டம். மூடீட்டு தூங்கு. நாளைக்கி காலேஜ்ல எதோ விழான்னு சொன்னானுங்களே. அது என்னன்னு தெரியுமா உனக்கு?. " என்றான் முருகு
" ஆமாண்டா. ஃபவுண்டர்ஸ்டேன்னு. இந்த காலேஜ யாரு ஆரம்பிச்சாங்கன்னு, எதுக்கு காட்டினாங்க? எப்படின்னு அறுக்கப்போறானுங்க... ச்ச... " அப்சத் அப்சட்டாகிச் சொல்ல,
" நம்மல விட மச்சான் நிலம தான் கஷ்டம். ஏன்னா வரப் போறா ஆளுக எல்லாத்தையும் இவெந்தா வரவேற்று, ஸ்பீச் குடுக்கப் போறானாம். வரப்போறவங்க ஃபீல் பண்ற அளவுக்கு ஒரு ஸ்பீச்ச ரெடி பண்ணி வச்சிருக்கான். பாவம் அதகீ கேக்குற அவனுங்களுக்கு இங்கிலீஸ்ஸே மறந்து போய்டும்." என முருகு கேலி செய்ய, கார்த்திக் அவனின் மேல் ஏறி குத்த, அப்சத்தும் சேர்ந்து கொண்டான்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..