அத்தியாயம்: 92
எனக்காக…
நீ இருக்கிறாய்…
என்று நான் உணரும்…
ஒவ்வொரு நொடியும்…
அழகானவை…
எந்தன் விழி வழியே…
நான் காண்பதும்…
காண விரும்புவதும்…
உந்தன் முகம் மட்டுமே...
என் இதய சிறைக்குள்…
நிரந்தர கைதி…
நீ…
கவிதை வரிகள் கார்த்திகேயனுக்காகத் தேடி தேடி எழுதி வைத்தாள் வாணி.
என்று ராஜி, ஜோஹிதாவின் கணவன் என்றாளோ! அன்று தான் உணர்ந்தாள் கார்த்தி மீது அவள் வைத்திருக்கும் அன்பின் பெயர் காதல் என்று. ஜோஹிதாவின் கார்த்திக்காக, கார்த்தியை நினைக்கையில் மனம் அனலில் இட்ட புழுவானதைப் போல் வாடி வதைந்து மடிந்தது.
அவன் அவளை ஒரு நொடி கூடக் காதலாய்ப் பார்க்காத போதும், அவன் மீது அவள் கொண்ட காதல் பிறை நிலவாய் வளர்ந்தது. என்றாவது ஒரு நாள் முழுமை பெறும். பெறவில்லை என்றாலும் அதைப் பற்றிக் கவலை பட அவள் தயாராக இல்லை.
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்.
ஜோஹிதாவை நோக்கி இறைக்கப்பட்ட காதல் நீர் வந்து இப்போது சேந்திருக்கும் இடம் ஜோதிவாணி.
என்றாவது ஒரு நாள் தேவையற்ற களைகள் எடுக்கப்படும். கார்த்தியின் வாழ்வில் புதிதாக முளைத்த நாம் அகற்றப்பட்டு விடுவோம். அதுவரை கார்த்திகேயனின் காதல் நீரைப் பிறர் அறியாது பருகுவது தவறில்லையே.
அவனைக் காதலிக்கச் சொல்லி கேட்காத போது, அவனைத் தான் காதலிப்பதில் என்ன தவறு உள்ளது? என்ற எண்ணம் வாணியை ஆட்கொள்ள, ஒரு தலை காதலாக கார்த்தியுடன் அவள் இருக்கும் நாட்களை அனுபவிக்க தொடங்கினாள்.
விகல்பம் பார்க்காது கரம் பற்றும் கார்த்தியின் தொடுகையை அவள் உள்ளுக்குள் ரசித்தாள். தோளுறச அவனுடன் நீண்ட தூரம் நடக்க வேண்டி, தினமும் அவளின் காலை பொழுது விடியத்தொடங்கியது.
அவன் நடத்தும் பாடத்தில் ‘புரிந்ததா?’ எனக் கேள்விகளைக் கேட்டு, அதற்குப் பதிலைத் தவறாகக் கூறி கார்த்தியிடம் இருந்து கிடைக்கும் கொட்டுக்களுக்காகதீ தெரிந்த பதில்களும் தெரியாதவை ஆகியன.
உணவு இடைவெளியில் தனக்கு கார்த்தி தரும் உணவை வேகவேகமாக உண்கிறேன் என்ற பெயரில் உண்டு புரை ஏற இரும்முவதும் உண்டு. அவன் தலையில் தட்டி அக்கறையுடன் எடுத்துத் தரும் தண்ணீர் பாட்டிலுக்காகத் தினமும் நடிக்க தொடங்கினாள்.
கையில் சிறிய காயம் தான். ஆனால் அதை சுற்றி பெரிய துணியைக் கட்டிப் பலத்தக் காயம் எனக் காட்டி அவளுக்கு உணவூட்ட வைத்து சேவகம் செய்ய வைத்தாள் வாணி.
பல முறை வந்து சென்ற இடம் தான். கண்ணைக் கட்டி விட்டாள் கூடப் பறவை போல் தன் இருப்பிடத்தைச் சரியாகக் கண்டுபிடித்து விடவாள் தான்.
ஆனால், கார்த்தியுடன் இருக்கும் போது, வழித்துணையாய் அவன் உடன் வரும் போது, பாதை மாறி பேச்சும் சிரிப்புமாக இருவரின் பயணம் நீண்டது.
இரு வாரத்திற்கு ஒரு முறை சினிமா, வாராவாரம் தெருவில் பசங்களுடன் சண்டை போட்டு மட்டையை வாங்கி கிரிக்கெட் விளையாடுவது, கார்த்திக்கை உரசிக் கொண்டே அவனின் சமயலறையில் உணவு செய்வது என வாணிக்குக் கார்த்தியின் அருகாமையை அனுபவிக்க நிறைய இருந்தது.
காலமும் நேரமும் யாருக்காவும் காத்திருக்காது அல்லவா. அது தன் வேலையைக் கண கச்சிதமாகச் செய்ய, வாணியின் ஒரு தலை காதலுக்குப் பத்து மாதங்கள் முடிந்து விட்டன. இன்னும் இரு மாதம் சென்றால் கேக் வெட்டி கொண்டாடியிருப்பாள்.
அவள் ஏன் இரு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அவளுக்கு தான் கார்த்தியின் அருகாமை தினம் தினம் கொண்டாட்டத்தைத் தந்ததே. முன்னைவிட படிப்பில் நன்கு தேறியிருந்தாள்.
நன்மதிப்பெண் கிடைத்தால் கார்த்தி தான் அவளைத் தோளோடு அணைத்து உச்சந்தலையின் முடிக்கற்றையைக் கலைத்துப் பாராட்டுகிறானே. அப்பொழுது மதிப்பெண் வந்து தானே தீரும்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. இரவு பொழுதும் கூட. எப்பொழுதும் தன் தொண்டை தண்ணீர் வற்றும் அளவுக்குக் கத்தி வாணியை வசை பாடிக் கொண்டிருக்கும் சுப்பு இல்லை போலும். வீடே அமைதியாக இருந்தது.
வாணி மட்டும் தான் இருந்தாள். கார்த்தி வாங்கி தந்த சுடிதாரை அணிந்து கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் என்றால் அவன் மட்டுமல்ல முருகு அப்சத் என்று ஆண்கள் மூவரும் அவளின் ஆசைக்காக நான்கைந்து சுடிதார்களை வாங்கித் தந்திருந்தனர். தீபாவளிக்கு ஒன்று. பிறந்த நாளுக்கு ஒன்று வாங்கி அவளுக்குப் பரிசளித்திருந்தனர். )
" கொஞ்சம் சதை போட்டா நல்லா இருக்கும். கலரும் கொஞ்சம் வெள்ளையா இருந்திருக்கலாம். என்ன பண்ண! இனிமே நான் வெள்ளையா மாறணும்னா சுண்ணாம்ப எடுத்து மூஞ்சில பூசிக்கிட்டாத்தா உண்டு. ச்ச... ஏம்மா என்னை இவ்ளோ கறுப்பா பெத்த. உம்மகன மட்டும் வெள்ளையாத்தானப் பெத்து வளத்த. அது மாதிரியே என்னையும் வெள்ளையா பெத்திருந்தேன்னா கார்த்தி என்னை ஒரு சைடு பார்வையாது பாத்திருப்பான். ஹிம்... நான் குடுத்து வச்சது அவ்ளோ தான்." என்றவளுக்குச் சுடிதாரைக் கார்த்தியிடமும் முருகுவிடமும் காட்ட ஆசை வர, வேகமாக அவர்களின் இருப்பிடம் நோக்கி சென்றாள்.
அங்கு முருகு மட்டும் இருக்க, கார்த்திக்கும் அப்சத்தும் வெளியே சென்றிருந்தனர். முருகுவிடம் காட்டி அவனுடன் வாயாடிக் கொண்டிருக்கும் போதே இருவரும் வந்தனர், பைக்கில். வேகமாக அவனின் முன் வந்து தன் சுடிதாரின் டாப்ஸ்ஸை விரித்து பிடித்தபடி சுற்றி காட்டி
" கார்த்தி! நல்லா இருக்கா?. அப்சத் அண்ணா?. மொத தடவ இது மாதிரிப் போடுறேன். நல்லா இருக்கா?. " என இருவரிடமும் கேட்க, அவர்கள் சிரித்தனர். ஏனெனில் அவள் துப்பட்டாவைத் தாவணி போல் மடித்து தன் முன்னழகை மறைத்து பேண்டில் சொருகி இருந்தாள். சுடிதாரின் மேல் தாவணி.
மஞ்சளும் கருப்புமாய் பூ போட்ட பட்டியாலா என்று சொல்லப்படும் தொளதொள போண்ட். உடலை இறுக்காது அவளின் வளைவுகளை காட்டிக் கொடுக்கும் ப்ளைன் மஞ்சள் நிற டாப்ஸ். பேண்டிற்கு மேச்சாக துப்பட்டா. அத்தனையும் அழகாய் அவளைப் புதுவிதமாய் காட்டியது.
" துப்பட்டாவ இப்படி போடக் கூடாது. எடு அத. நான் சொல்லுற மாறி போடு… " என்றான் கார்த்தி.
" ம்ச்... நல்லாவே இருக்காது. நானும் போட்டு பாத்தேன். எனக்குப் பிடிக்கலப்பா. " என முகம் கோணி பதில் சொன்னாள் வாணி.
"பிடிக்கலயா!. இல்ல உங்க பெரியாத்தா எதாவது சொல்லும்னு பயப்படுறீயா. " என்றான் அப்சத்.
"நீங்க எதுவா வேணும்னாலும் வச்சிக்கங்க. அத அப்படிப் போடுறது எனக்கு கம்பட்டபில்லா இல்ல. அவ்வளவு தான். " என்றவள் கார்த்தி நிறுத்தி வைத்த பைக்கைச் சுற்றி சுற்றி வந்தாள்.
அது Yamaha கம்பெனியின் புதுவகை மாடல். கல்லூரிக்குச் செல்லும் போது அதைத் தொடமாட்டான். ஜோஹிதாவை ஃபாலோ செய்து பஸ்ஸில் தான் வருவான். விடுமுறை நாட்களில் இதை எடுத்துக் கொண்டு ஊர் சுற்றுவான். அப்சத்திடமும் பைக் உண்டு. எங்காவது செல்ல திட்டமிட்டால் அப்சத்தின் பின் வாணியும், கார்த்திக்கு பின் முருகுவும் செல்வர்.
வாணிக்கு அந்த பைக்கில் கார்த்திக்கின் பின் அமர்ந்து செல்ல வேண்டும் என்ற ஆசை உண்டு. ஒரு முறை அவளை வீட்டில் விட சொல்லி கேட்க, கார்த்தி சரி என்றான். அவள் வேகமாக பைக்கில் சென்று அமரப்பார்த்தாள்.
" ஏய்... ஏய்... என்ன பண்ற?"
"நீ தான ட்ராப் பண்றதா சொன்ன. ஏறி உக்காராம எப்படி என்னை ட்ராப் பண்ணுவ?. மேஜிக் மேனா நீ?." எனக் கேலியாகக் கேட்டாள்.
" நான் மேஜிக் மேன்லாம் கிடையாது. பொறு... அப்சத் பைக்க வாங்கிட்டு வர்றேன். " என்று விட்டு நடக்க,
"நான் இதுல உக்காந்தாத்தா என்னவாம்!. "
" இது என்னோட வைஃப்க்கான இடம். உனக்காது இல்ல. புரியுதா... " என்றான் அடிக்குரலில் இருந்து.
"புரியுது… புரியுது… ஆனா இன்னுமா நீ அந்த ஜோஹிதா கூட உங்கல்யாணம் நடக்கும்னு நினைச்சிட்டு இருக்க? " என்றவளை முறைத்தான் அவன்.
"இல்ல… நீயும் விடாம ஃபாலோ பண்ற. ஆனா உன்னை ஏறெடுத்து பாக்கவோ!. உன்னை மனுஷனா மதிக்கிறதோ மாட்டேங்கிறா!. அதான். " என்றவளின் தலையில் கொட்டு விழும்.
அப்போது கார்த்தி மீது காதல் இல்ல.
இப்போது…
மனைவியாக இல்லை என்றாலும் ஒரு முறையேனும் அதில் அவனுடன் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
" காய்லாங்கடைக்குப் போட்டா எவ்ளோ பேரிச்சம்பழம் தருவாங்கன்னு பாக்குறீயாம்மா நீ. " என் முருகு கேட்க, அவள் ஆம் எனத் தலையசைக்க, இருவரும் கார்த்திக்கை வம்பிழுத்து கேலி செய்தனர்.
"என்ன மச்சி போன வேலை முடிஞ்சதா? " முருகு.
" ஆல் மோஸ்ட். " அப்சத்.
" மச்சி நான் இத ஒரு ஜெராக்ஸ் எடுத்திட்டு வந்திடுறேன். " எனக் கார்த்தி புறப்பட வாணியும் உடன் வருவதாகச் சொன்னாள்.
கார்த்திக்கிற்கு இது கடைசி வருட படிப்பு. எனவே அவனுக்குப் பல ப்ராஜெக்ட் வேலைகள் இருந்தனர்.
" ஏய்! ராத்திரி நேரத்துல எதுக்கு ஊர் சுத்துற. ஒழுங்கா வீட்டுக்கு போ. " என அப்சத் வாணியைக் கண்டித்து துரத்தப் பார்க்க,
"உங்க பெரியாத்தா எங்க?. உன்ன ஊர் சுத்த விட்டுட்டு எப்படி சும்மா இருக்கு அது.? " என்றான் முருகு.
"இன்னைக்கி பெரிப்பாவுக்கு செக்கப்பு. அதுக்காக ஹாஸ்பிட்ட போயிருக்காங்க. வர பதினோரு மணி ஆகும். அதுவரைக்கும் எனக்கு விடுதலை. நான் சுதந்திரமா வெளில சுத்தலாம்." எனச் சொல்லி சிரிக்க, கார்த்தி உடன் அழைத்துச் சென்றான்.
பேசிக் கொண்டே இருவரும் நடந்து செல்ல, கையில் வைத்திருந்த காகிதத்தை நகல் எடுத்து விட்டு திரும்பும் போது மழை பொழியத் தொடங்கியது. காகிதத்தைச் சட்டைக்குள் மறைத்து வைத்தவன், மழை நீருடன் விளையாடத் தொடங்கியவளை இழுத்து கொண்டு ஒரு மரத்தடிக்கு சென்றான்.
"சொன்னா கேக்குறீயா?. பாரு பயங்கரமா மழை பெய்து. உன்னால தான் லேட். இல்லன்னா அப்பவே வீட்டுக்கு போயிருக்கலாம். என்னோட ஜெராக்ஸ்க்கு பேப்பருக்கு மட்டும் எதாவது ஆகட்டும். அப்றம் இருக்கு உனக்கு." எனத் திட்டிக் கொண்டே நின்றான் கார்த்திக்.
" நான் என்ன ஜோசியக்காரியா? மழை பெய்யுங்கிறத முன்னாடியே கணிச்சி குடையும் கையுமா வெளில வர. " என அவளும் முகம் திருப்பினாள்.
இருவரும் தொப்பலாக நனைந்திருந்தனர்.
"நல்லா வாய் பேச கத்துக்கிட்ட டி நீ?" அவளை முறைத்தபடியே சொன்னவன் காகிதத்தை பத்திரமாக ஒரு நெகிழி உரையில் போட்டு பத்திரப்படுத்தினான்.
அவளின் டி என்ற அழைப்பில் அவளின் தேகம் சிலிர்த்தது. அது அவளுக்குப் பிடித்தும் இருந்தது.
" வாயாடலன்னா உன்னை மாதிரி ஆளுங்கள சமாளிக்க முடியுமா? சொல்லு… " என்க, அவன் அவளை முறைத்தபடியே நெருங்கி வந்து, முகத்தில் வழிந்தோடிய மழைநீரை அவளின் துப்பட்டாவில் துடைத்து எடுத்தான். கூடவே தலையையும் துவட்ட, அவள் அவனின் முகம் பார்த்த படி இருந்தாள்.
கைக்கு எட்டும் தூரத்தில் தன் காதல் இருக்க, உரிமையுடன் தன் துப்பட்டாவில் சிகை கோதியவனை தெவிட்டாத காதலுடன் கண்டு கொண்டிருந்தாள் மங்கை.
அவள் பார்வை மாற்றாது பார்த்தபடியே நிற்க,
" ஏன் அப்படிப் பாக்குற?. என்னாச்சி?. " என்றவனுக்கு அவளின் பார்வை எதுவோ செய்திருக்க வேண்டும்.
சுற்றி வீசிய ஊதக் காற்றில் மங்கையின் பார்வை மட்டுமே சூடாக அவனின் மீது விழும் போது ஆடவனுக்கும் அசௌகரிகம் உண்டாகத்தானே செய்யும்.
அவள் பதில் சொல்லாது பார்வையையும் விலக்காது இருக்க,
"ஹேய்... ஜோதி... ஜோதி... " என அவளின் முகத்தின் முன் சொடக்கிட, அவள் புன்னகையுடன் நெளிந்தாள்.
" கார்த்தி... " என்றபடி அவனை நெருங்கி வர,
"என்ன?" என்றவன் அவளைப் பார்க்காது பார்வையைச் சுழல விட்டான். மனம் படபடவென அடித்துக் கொண்டது அவனுக்கு. அதை மேலும் துடிக்க விட விரும்பாது அவளின் முகம் பார்த்தை தவிர்த்தான்.
"ம்ச்… கார்த்தி. என்ன பாரு? " என் கன்னம் தொட்டு தன் பக்கம் திரும்பினாள் வாணி. அதைத் தட்டி விட்டவன்,
" என்ன ஜோதி வேணும்? " என எரிச்சலை முகத்தில் கொண்டு வந்து வினவ,
"எனக்கு ஒரு ஆச…" என்றாள் கண்கள் சுருக்கிக் கெஞ்சலாக.
"ஒன்னா… உனக்கு தான் ஓராயிரம் ஆசை இருக்கே."
"அதுல ஒன்னு தான் இதுவும். இப்ப உன்னால உடனே நிறைவேத்த முடிஞ்ச ஆசை. செய்வீயா?" என்க, என்ன? என்பது போல் அவன் புருவங்களை உயர்த்திக் கண்களால் கேட்டான் அவன்.
"அது… அது… " என அவனை மேலும் நெருங்கி வந்தாள்.
ஆடைகள் உரசிக் கொள்ளும் தூரத்தில், நாசியில் அவனின் பர்ஃயூமின் வாசனையை நுகர்ந்த கொண்டே, அவனின் முகத்திற்கு அருகில் வந்தவள் மெல்ல குனிந்து அவனின் காதில்,
" நான் உன்னோட மீசையத் தொட்டு பாக்கவா?" என ரகசியம் போல் கேட்டு வைக்க,
அவனோ, ‘இதுக்குத்தா இத்தன பக்கதுல வந்தியாம்மா நீ. இனி வராத. ஹாட் அட்டாகே வந்திருக்கும்.’ என்பது போல் பார்த்து விட்டு நெஞ்சி நீவியபடியே அவளை விட்டு விலகி நின்று கொண்டான்.
"ப்ளீஸ் கார்த்தி. எங்கப்பாக்கிட்ட இதே இதக் கேட்டிருக்கேன். ஆனா அவரு என்னை அடிச்சிட்டாரு. பிரம்பால நல்ல அடி முதுகுல. முதுகுல கோடு விழுந்திடுச்சு." எனப் பாவம் போல் சொல்ல,
" அடிக்காம... கேக்குறது எல்லாமே ஏட்டிக்கிப் போட்டியானக் கேள்வி. இதுல அடிச்சிட்டாருன்னு செண்டிமெண்ட் ஸீன் வேற. " என அவளுக்குக் கேட்காதுபடி முணுமுணுத்தான் கார்த்தி.
"கார்த்தி ப்ளிஸ். நீயாது தொட விடுடேன். அந்த முடிய மட்டும் தான் நான் தெடுவேன். உன்னைத் தொட மாட்டேன். ப்ளிஸ்... ப்ளீஸ்…. ப்ளீஸ்... " எனக் கெஞ்ச,
“ஏய்… விளையாடாத… போ அங்கிட்டு…” என்று பத்தி விடுத்தான் பார்த்தான். ஆனால் அவளின் நச்சல் தாங்காது சரி என்றான். பின் ஏன் சரி என்றோம் என்று வருந்தும் அளவுக்குச் செய்து வைத்திருந்தாள் மங்கை.
கார்த்தியின் ஆண்மையின் உணர்வுகளைத் தூண்டி விட வேண்டும் என்று வாணி ஒரு போதும் நினைத்தில்லை. அதற்கு முயன்றதும் இல்ல.
செடியில் மலர்ந்திருக்கும் பூவைப் போன்றது வாணியின் காதல். பூவை பறித்து, ரசிக்கிறேன் என்ற பெயரில் அதை கசங்கி நுகர்ந்து பார்க்க அவள் என்றும் துணிந்ததில்லை. தூர நின்று அது வாடி மடியும் வரை அதன் ஸ்பரிசத்தை உணர்ந்து, அதன் மணத்தை நுகர்ந்து, வண்ணமயமான அதன் நிறத்தை விழிகளில் நிரப்பி என எட்டித் தான் இருந்து அனுபவித்தாள் தன் காதலை.
ஆனால் தூரத்தே இருந்து ரசிக்கும் அவளின் நேசம், கலங்கரை விளக்கம் போல் தத்தளித்துக் கொண்டிருந்தும் ஆணின் மனத்தில் உள்ள காதலெனும் கப்பலை இவளை நேக்கி திருப்பும் என்று அவன் நினைத்திருக்க மாட்டாள்.
சம்மதம் கிடைக்கப் பெற்றதும் விரிந்த புன்னகையுடன் நெருங்கி வந்து நின்றவள், ஆணான அவனுக்குள் அந்த நெருக்கம் எவ்வித உணர்வைத் தரும் என்று யோசியாது,
தன் ஒற்றை விரலால் அடர்ந்து வளர்ந்திருந்த அவனின் மீசை முடிகளைத் தீண்டி பார்த்தாள். அவனுக்கு சிலிர்ப்பாக இருந்தது என்றால் அவளுக்கு வியப்பாய் இருந்தது.
" எப்படிக் கார்த்தி இத வளக்குற?. சாப்பிடும் போது டிஸ்டப்பா இருக்காது."
" இல்ல…" என்றவனின் குரலில் இருந்த மாற்றத்தைக் கவனிக்கவில்லை அவள்.
அவளுக்கு ஒரு ஆணின் மீசையைத் தொட்டுப் பார்க்கிறோம் என்ற குதுகளிப்பு மட்டும் இருந்தது.
“பல் தேக்கிற ப்ரெஸ் மாறியே இருக்கு. தலை முடிய விட இது ரஃப்பா இருக்கு." எனத் தன் கருத்தை சொல்லியவள் வாய் மூடாது தன் தந்தைக்கு இருக்கும் முறுக்கு மீசையைப் பற்றி பேசிக் கொண்டே இருத்தாள் விழி விரித்தபடி.
அவள் இயல்பாகத்தான் இருந்தாள். மனத்தில் தோன்றிய உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழப் பழகியவள் அப்படி மாற வில்லை என்றால் தான் ஆச்சரியம்.
ஆனால் கார்த்திக்…
அவனின் மனம் நிலையில்லாது துடிக்கத் தொடங்கியது.
Black hole… அதாவது கருந்துளை. இதை கேள்வியுற்றதுண்டா?
அது நம் அண்டவெளியின் ( univers ) ஒரு பகுதியாகும். கண்ணுக்குப் புலப்படாத இது, தன் எல்லைக்குள் வரும் அனைத்தையும் தன்னுள் இழுத்துக் கொள்ளும் அளவு அதீத ஈர்ப்பு சக்தி கொண்டதாகும்.
அது உண்மையா? பொய்யா? என யாரும் சோதித்தது இல்லை தான். அது உண்மை என்று உணர்ந்து கொண்டிருந்தான் கார்த்திகேயன். வாணியின் இரு கண் விழிகளின் இருக்கும் ஈர்ப்பு சக்கியானது அவனை அவளுள் இழுத்துக் கொண்டிருந்தது. முதல் முறை இத்தனை நெருக்கத்தில் அவளின் முகம் பார்க்கிறான்.
தன்னை தீண்டாத விலகி இருக்கும் விரல்களின் மீது கோபம் கூட வந்தது அவனுக்கு. திராட்சை போல் உருண்டோடிய கண்களில் இருந்து மீளவே முடியாது தவித்து போனான் அந்த ஆண்மகன்.
அவனின் தவிப்பை உணராது அவளோ சில நொடிகளில் அவனை விட்டு விலகி, "மழை நின்னுடுச்சி கார்த்தி வா போலாம். உன் ஜெராக்ஸ் காப்பிய பத்திரமா காப்பாத்தணும். " என அவனின் கரம் பற்றிச் சாலையில் இழுத்துச் சென்றான்.
பெண்ணவளின் தீண்டல் ஆடவனின் உடலில் மின்சாரத்தைப் பாயச் செய்தது.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..