அத்தியாயம்: 95
மனத்தில் புதிதாய் முளைத்த காதலுடன் ஒரு வாரம் கழித்து கல்லூரிக்கு வந்திருந்தான் கார்த்திக்.
காதல் தான். அது தான் என்று முடிவே செய்து விட்டான்.
தன் சுய மரியாதையையும் தன்மானத்தையும் விட்டுக் கொடுத்தால் கூடப் பரவாயில்லை சமாளித்துக் கொள்ளலாம். காதலுக்காக என. ஆனா அந்த அவைகளை முற்றிலும் அழித்து விட்டு வரும் காதல்… வேண்டவே வேண்டாம். தன்னை விட்டு சென்றவள் சென்றவளாகவே இருக்கட்டும் என்றவனுக்கு ஜோதியின் மீது துளிர்விட்டிருக்கும் நேசம் இதமாய் தென்றல் காற்றாய் இனித்தது.
பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக அவனை ஒரு வாரம் சஸ்பென்ட் செய்திருந்தது கல்லூரி நிர்வாகம்.
கல்லூரிக்கு வர பெரிதாக எந்த விருப்பமும் இல்லை தான். ஆனால் வாணியைப் பார்க்க வேண்டும் அல்லவா. அதற்கு கல்லூரி மட்டும் தானே ஒரே வழி.
மூன்று நாட்களாக அவனைக் காண வந்தவள், ராஜியின் பேச்சைக் கேட்டு விலகியிருக்க முடிவு செய்து கார்த்தியைக் காண செல்லவில்லை. அவனிடம் இருந்து வந்த அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் மனத்தை கல்லாக்கிக் கொண்டு தவிர்த்தாள் அவள்.
அதனால் அவளை நேர்ல பாத்து என்னவென்னு கேட்டு விட்டுச் செல்லலாம் என வந்திருக்கிறான். கண்கள் கருவண்டாய் வாணியைத் தேடி பரபரத்தன.
பல நாள்கள் கழித்து கல்லூரிக்கு வந்த அவனுக்கு வரவேற்பு பலமாக இருந்தது. ஜெயில் அனுபவம் எப்படி இருந்தது எனக் கேலியாக கிண்டலாக சீண்டலாக பலர் வந்து அவனிடம் விசாரிக்க, அதையெல்லாம் அவன் கண்டு கொள்ளவில்லை. அது சிலரை வெறுப்பேற்றியது.
முருகுவுடன் பைக்கில் சிரிப்புடன் வந்திறக்கியவனைக் கண்கள் பொசுங்கி விடும் அளவுக்கு முறைத்தான் நவீன். ஜோஹிதாவுக்கும், கார்த்திக்கிடம் அப்படி நடந்து கொண்டிருக்க கூடாதோ என்ற தவிப்பு இருந்தது. ஆனால் நவீனின் கட்டு போட்ட கையைப் பார்க்கையில் வந்த பரிவு ஓடி விட்டது.
வாங்கிய அடியில் கை முற்றிலும் உடைந்து விட்டது நவீனுக்கு கார்த்திக்கால். எனக்கு ஆதரவாக பேசிய ஒரே காரணத்திற்காக அடித்துள்ளான் என்பது ஜோஹிதாவிற்கு கார்த்திக் மேலிருந்த கோபத்தை அதிகப்படுத்தியது. ஆனாலும் அவனின் நலம் பற்றி அப்சத்திடம் அவ்வபோது கேட்டுக் கொள்வாள்.
" அன்னைக்கி கண்ட படி பேசி போலிஸ்ல பிடிச்சிக் குடுக்குறப்போ இல்லாத அக்கற. திடீர்னு எப்படி இப்ப வந்துச்சாம். " எனக் காட்டமாகக் கேட்டான் முருகு.
" டேய், என்னதா இருந்தாலும் அந்தப் பொண்ணு நம்ம கார்த்தியோட லவ்வர் டா. அதா அவனப் பத்தி கேட்டுட்டு போது. அதுல என்ன தப்பிருக்கு?. " என்றான் அப்சத். இம்முறையும் இருவருக்கும் இடையே தூது அவன் தான்.
"லவ்வர் இல்ல. எக்ஸ் லவ்வர். அவா தான் விட்டுடுட்டு ஒரேயடியா போய்ட்டாளே. இன்னும் என்ன லவ்வர்ன்னு சொல்ற. "
"ஆனா கார்த்தி இன்னும் ஜோஹிதாவ தான் காதலிக்கிறான் மறந்திடாத. நம்மகிட்ட தான் வந்து ஐடியா கேப்பான். சமாதானம் பண்ண வழி சொல்லுங்கடானு. இந்தக் காதல் எதையும் பாக்குறது இல்ல. "
"ச்ச... என்ன எழவோ அந்தக் காதல் கண்றாவிலாம் வேண்டாம்னு எத்தன தடவ சொன்னாலும் கேக்குறானா. இவளுக அடிச்சி அவமானப்படுத்திட்டே இருப்பாளுகலாம். சூடு சொரனை, மானம், ரோசம் இதுல எதையுமே பாக்காம நாம பின்னாடியே போய் அடுத்த அவமானத்த வாங்கிட்டு வரணுமா. காதலுக்குக் கண்ணு மட்டுமில்ல காதலிக்கிறவனுக்கு ஐம்புலன்களும் இருக்கணும். ஆனா வேலை செய்ய கூடாது. " என வெறுப்புடன் சொன்னான் முருகு.
அவனுக்குக் கார்த்தியின் நலன் மட்டுமே முக்கியம். அவனை வாட்டி வதைக்கும் யாரையும் அவனுக்குப் பிடிக்காது. அதனால் ஜோஹிதாவைப் பிடிக்காது போனது. சில நாட்களாக இல்லை. சில வருடங்களாக.
"மச்சான் காலேஜ்ல முழுக்க தேடிட்டேன். எங்கடா அவ?" என்றான் கார்த்திக் உணவு இடைவேளையில்.
" யாரடா ஜோஹிதாவையா.?" என்ற அப்சத்தை, முருகுவைத் தவிர முறைக்க ஆள் இல்லை.
"ம்ச்... நான் அவளக் கேக்கல. ஜோதிய எங்கன்னு கேட்டேன்?"
"அவள எதுக்கு நீ பாக்கணும்? "
" இல்ல டா அவளுக்கு அடுத்தடுத்த வாரத்துல பரிச்ச வருதே. ஹால் டிக்கட் வாங்கிட்டாளா? எப்ப எக்சாம்னு கேக்கலாம்னு நினைச்சேன்." என அறியாதது போல் கேட்க, அப்சத் கார்த்தியை நம்பாது பார்த்தான்.
முருகு, "நேத்து அது காலேஜ்க்கு வரல. இன்னைக்கும் தான். எப்படியும் நாளைக்கி சன்டே... நம்ம வீட்டுக்கு வந்து தான ஆகணும் அப்பப் பிடிச்சி விசாரிப்போம். " என்றவன் எழுந்து வகுப்பிற்குச் செல்ல, கார்த்தி ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருக்காது அவளது அப்பாய்மெண்டிற்குப் பார்க்க சென்றான்..
அவனைத் தூரத்தில் பார்த்துவிட்ட வாணி ராஜியை இழுத்துக் கொண்டு வேறு பாதையில் செல்ல, ராஜி கார்த்தியைத் திட்டிக் கொண்டே வந்தாள்.
" நீ விட்டாலும் இந்தச் சன்டாளனால சும்மா இருக்க முடியாது போல. விடு டி கைய. இன்னைக்கி நான் பேசுற பேச்சில அவெ உம்பக்கம் தலை வச்சி கூடப் படுக்க மாட்டான். ****. இரு டா வாரேன். " என வாய்க்கு வந்த படி திட்டிக் கொண்டே கிளம்ப, வாணி தடுத்தாள்.
"ராஜி வேண்டாம். நீ அவனப் பாக்க கூடாது. குறிப்பாத் திட்டவேகூடாது. " என அடம்பிடிக்க,
"இதென்னடி கூத்தா இருக்கு. நீ அவனப் பாக்க கூடாதுன்னு நான் சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கு. நான் பாக்க கூடாது பேசக்கூடாதுன்னு சொல்ற?. " என்க. வாணி ‘நீ சத்தியம் பண்ணாத்தா விடுவேன்.’ என்பது போல் நடு ரோட்டில் அமர, பாவம் ராஜி இவளிடம் கேட்ட சத்தியத்தை அவளே செய்தாள்.. இன்று வரை கடைபிடிக்கவும் செய்கிறாள் என்றால் பாருங்களேன்.
அப்பார்ட்மெண்ட்டில் காணாதவனுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் சொல்லும் என எதிர்பார்க்க, ஏமாற்றம் தான். அவள் அங்கும் வரவில்லை. ஏன் என்றும் தெரியாது குழம்பியவன், ஒரு மெஜ்ஏஜ்ஜை அவளுக்கு அனுப்பினான். வேற ஒன்றுமில்லை உடல் நலம் சரியில்லை என்று அனுப்பினான். ஆனால் அதை வாணி நம்பவில்லை.
மூன்று நாட்கள் விடுமுறை எடுத்ததால் இன்று கல்லூரிக்கு வந்திருந்தாள். கார்த்திக்கை எப்படி எதிர்கொள்வது எனப் பல போராட்டங்கள் மனத்தில் நடக்க கார்த்திக்கிற்குக் காய்ச்சல் என்று கிடைத்த செய்தி உண்மையா? என முருகுவிடம் கேட்டு தெரிந்து கொண்டாள்.
"அது என்னன்னு தெரியலம்மா. நாலு பியர் தான் குடிச்சான். கூட கோழி வறுவலயும் வாத்து பிரியாணியையும் உள்ள இறக்குனான். ஆனா அதுக்கே மட்டையாக்கிட்டான். எனக்குத் தெரியாம வேற எதையும் வாங்கி உள்ள ஊத்திருப்பானா இருக்கும். அதான் தலை சுத்தி வாந்தி எடுத்து காய்ச்சல்ல படுத்திட்டான். ராத்திரியே மெடிக்கல் ஷாப்ல மாத்திர வாங்கி தந்தோம். போட்டுட்டு படுத்தவெ நாங்க கிளம்புற வர எந்திரக்கவே இல்ல.
நாங்க ரெண்டு பேரும் காலைல சாப்பாடு கூடச் சாப்பிடலன்னா பாத்துக்கயேன். ஆமா நீ என்ன கொண்டுவந்த?. அதே பழைய சோறா. பரவாயில்லை நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். " என அவள் கொண்டு வந்த டப்பாவை பிடிங்கிக் கொண்டு அனுப்பி வைத்தான்.
வாணிக்கு வகுப்பில் இருப்பு கொள்ளவில்லை. பர்மிஷன் கேட்டுக்கொண்டு அவனைப் பார்க்க ஓடி விட்டாள்.
ஆனால், வீட்டில் அவன் இல்லை. ஒரு வேளை மருத்துவ மனை செல்லும் அளவுக்கு காய்ச்சல் அதிகமாகி விட்டதோ!. எனப் பதறியவளின் காதுகளுக்குக் கார்த்திக்கின் குரல் கேட்டது.
" ஐய்யோ!! கைக்கு வந்த கேட்சு. அதப் போய் விடுறான் பாரு முட்டாபய. இவன எல்லாம் யாரு டீமுக்கு எடுத்தா. காசு குடுத்து சேந்திருப்பான் போல. அடுத்த கேட்சை ஒழுங்கா பிடிக்கல, நானே க்ரவுண்டுக்குப் போய் அவெ மூஞ்சிலயே குத்துவே. ஏய்… பிடிடா... பிடிடா..." எனக் கத்திக் கொண்டே கையில் இருந்த கடலை பொட்டலத்தைக் காலி செய்நபடி, எதிர் வீட்டில் தெரிந்த டீவியில் ஓசி மேட்ச் பார்த்துக் கொண்டு இருந்தான்.
" பொய் சொன்னியா கார்த்தி நீ எங்கிட்ட? ஏன்?. " என்ற வாணியின் குரல் கேட்க, திரும்பி பார்த்தான் கார்த்தி.
அவள் கோபமாக நின்று கொண்டிருந்தாள். அவளை ஏற இறங்க ஆசையுடன் ஒரு பார்வை பார்த்தவன்,
" உன்ன நான் பத்து மணிக்கே எதிர்பாத்தேனே. ஏன் லேட்டா வந்த? காலேஜ் போய், நான் சொன்னது உண்மையான்னு விசாரிச்சியா?" என நக்கலாகக் கேட்க,
" கார்த்தி, எங்கிட்ட ஏன் பொய் சொன்னன்னு கேட்டேன்? "
" அதா நான் சொன்னேனே. உன்னைப் பாக்கணும். அதுக்கு தான் பொய் சொன்னேன். " என்க, அவள் வந்த வழியிலேயே திரும்பி நடக்க தொடங்கினாள்.
" ஜோ… ஹே ஜோ… நாலு நாளா உன்னைப் பாக்கல. ஹோட்டலுக்கு வரல. காலேஜ்க்கு வரல. ஏன் நேத்து வீட்டுக்குக் கூட நீ வரல. அதா உன்னை வரவைக்கணும்னு பண்ணேன். ஊருக்கு எங்கையும் போயிருந்தீயா என்ன? " என அவனும் உடன் நடக்க,
"ம்ச்... நீ எதுக்கு என்னைப் பாக்கணும். அப்படியே பாக்கணும்னா இன்னைக்கு காலேஜ் வந்திருக்க வேண்டியது தான. ஏன் பொய் சொன்ன?" என்றவளுக்குக் கோபம் மட்டும் அடங்கவில்லை.
அவனுக்கு என்னானது ஏதானதோ என்ற பதைபதைப்பில் வந்தவளுக்கு அவன் தந்த பதில் உவர்ப்பாக இல்லை.
" பாக்க மட்டும்னா காலேஜ் சரியான இடம் தான். பட்… உங்கிட்ட கொஞ்சம் பேசணுமே. " என்றவனை நின்று முறைத்தாள்.
" அதுவும் தனியா... நீயும் நானும் மட்டும்… யாரோட டிஸ்டப்பும் இல்லாம…" என்று அவளின் காதில் குனிந்து மெல்லியக் குரலில் சொல்ல, அவளின் தேகத்தில் மயிர் கூச்சமெடுத்தது.
" எதுக்குத் தனியா பேசணும்? பேச என்ன இருக்கு? " என்றவளின் குரல் காற்றில் தேய்ந்து கரைந்து கொண்டே வந்தது.
"இருக்கு... நிறைய இருக்கு… ஆனா அத வீதில வச்சி பேச முடியாது.” என்றவன் ‘வீட்டிற்குள் வா.’ எனக் கண்களால் வீட்டைக் காட்டினான்.
' என்ன வீட்டுக்கா! இவெ பேச்சும் தோரனையும் சரியில்ல. அப்படியே திரும்பி ஓடீடு வாணி. 'என ஒரு மனம் சொன்னாலும்.
' ச்ச… கார்த்தி நல்லவெப்பா. இப்ப நீ ஓடினா எம்மேல உனக்கு நம்பிக்க இல்லையான்னு கேட்டு கோபப்படுவான். இதுக்கு முன்னாடி அவெ மட்டும் வீட்டுல தனியா இருக்கும் போது பாத்து பேசுனது இல்லையா. போ... போய் என்னன்னு கேட்டுட்டு வந்திடு. ' என்று ஒரு மனம் தள்ள, அவள் சிலை போல் சிந்தனையில் நிற்பது தெரிந்தது கார்த்தி அவளைப் கரம் பற்றி இழுத்துச் சென்றான்.
" சாப்பிட்டியா?" எனக் கேட்டவன் அறையைச் சுத்தம் செய்ய முயன்றான். படுக்கை முதல் அவர்கள் கலட்டி போட்ட துணி, ஏன் இரவில் அடித்த சரக்கு பாட்டில் கூட, உருண்டு கொண்டு தான் இருந்தது. அதைபீ பார்த்து முகம் சுருக்கியவள்,
"ம்… வீட்டுலயே ஆச்சி. எனக்கு எதுவும் வேண்டாம். " எனக் கையில் வெங்காயத்துடன் வந்தவனிடம் கூறினாள்.
'நமக்காக சமைக்க போறான் போல.' என்று வேண்டாம் என்க,
" நல்லது. சாப்பிடாம இருக்க கூடாது. இந்தா… இதக் கட் பண்ணி உள்ள இருக்குறத வச்சி எதையாது செஞ்சிவை. எனக்கு நல்ல பசி. ம்... அப்றம் சீக்கிரம் செய். நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வந்திடுறேன். " என அனைவருக்கும் பொதுவாக இருக்கும் பாத்ரூமிற்கு பேஸ்ட், ஃபரெஸ், துண்டு, வாளி, சோப்பு என அனைத்தையும் எடுத்துச் சென்றான்.
'இவனுக்கு வடிச்சி போடவா அவசர அவசரமா வந்தேன். பஸ்ல வந்தா லேட்டாகும்னு ஆட்டோ ரிக்சா பிடிச்சி வந்தேன். காசு தான் வேஸ்டு.’ எனப் புலம்பியவள் சமைக்க எதாவது இருக்கிறதா என தேடினாள்.
எதுவும் இல்லை, ரவையைத் தவிர. 'உப்மா போதும் இவனுக்கு. ' என நினைத்து சமைக்க, அதை இறக்கும் நேரம் உள்ளே வந்தான் கார்த்தி.
வாசம் பிடித்தே. "சூப்பரா இருக்கு. " என்க,
"சாப்பிடாமலேயே சொல்ற. " என்றவளுக்குச் சிறு சங்கட்டமாக இருந்தது. கைலி பனியனுடன் தலை துவட்டிய படி அவளின் அருகில் வந்து வானலியை எட்டிப் பார்த்து பாராட்டியவனை நிமிர்ந்தும் பார்க்காது, கடந்து சென்று தட்டை எடுத்து வைத்து பரிமாற அமர்ந்தாள்.
" மூக்குன்னு ஒன்ன எதுக்கு கடவுள் படச்சான்னு தெரியுமா?. வாசம் பிடிக்க. அது சொல்லும் எல்லாத்தையும். " என்றவனுக்கு அந்த உப்மா தேவாமிர்தமாக தெரிந்தது.
இரண்டாவது முறை ஒரு பெண்ணின் கையால் சமைத்து உண்ணப்போகிறான். முதல் அவனின் பாட்டி. தாய் தந்த எதையும் கையால் தொட்டது கூட இல்லை. தாயின் அத்தியாயம் முடிந்து போன ஒன்று. ஜோஹிதாவிற்குச் சமைக்க தெரியாது.
"ம்... நல்லா இருக்கு. " என ரசித்து உண்ண, அவன் கவனம் தட்டில் உள்ளதை உறுதி செய்து கொண்டு அவனை ரசிக்கத் தொடங்கினாள் வாணி.
உடலில் ஈரம் சொட்ட, சரியாக துடைக்காததால் வடிந்தோடிய நீரைத் துண்டால் துடைக்கச் சொல்லி மனம் அவளை உந்தித் தள்ளி, முடியாது தவித்தது. அவன் உணவை உண்ணும் போது, புருவங்கள் காட்டும் ஏற்ற இறக்கம், முகம் காட்டும் பாவனை என அனைத்தும் உள்ளுக்குள் சிரிப்புடனும் சிலிர்ப்புடனும் ரசித்துக் கொண்டிருக்க,
"இப்படியே உன்னை நான் பாக்கவச்சிட்டு தின்னா எனக்கு வயிறு வலிக்கும். இந்தா சாப்பிடு. " என ஒரு வாய் உப்புமாவை ஊட்டி விட எண்ணி கரத்தை வாயிருகே கொண்டு வர, அவள் பின்னால் சாய்ந்து மறுப்பைக் காட்டினாள்.
" எனக்கு வேணாம் கார்த்தி. "
"ஏன்?"
"ஏன்னா நான் சாப்பிட்டேன். "
"என்ன சாப்பிட்ட?"
"அது… அது... " என இழுக்க,
"உனக்குக் கோர்வையா பொய் செல்ல வராது ஜோ.. ட்ரெய் பண்ணாத. உன் பெரியம்மா பழைய சோறு தவிர வேற எதையும் உன்னோட கண்ணுல காட்டாதுன்னு தெரியும். அது உன் தொண்டைக்குள்ள இறங்காதுன்னும் தெரியும். ம்... " என மீண்டும் வர, அவள் தலையை இடம் வலமாக அசைத்து வேண்டாம் என உறுதியாக மறுத்தாள். அவன் உற்று நோக்கவும், அவனிடம் இருந்த பார்வையை நிலத்தில் பாய்ச்சி,
" வேண்டாம் கார்த்தி. நாம ஒன்னும் சின்ன பசங்க கிடையாது. நாம இப்படிப் பழகுறத பாக்குறவங்க. வேற… மாதிரி… சொல்றாங்க. " என்ற போது கண்ணீல் நீர் வந்து நின்றது.
" யாரு?”
“...” பதில் இல்லை அவளிடம்.
“என்ன சொல்றாங்க? " என அவனும் விடாது கேட்டு நீட்டியைக் கையை இறக்காது இருக்க,
" ம்ச்… உனக்குப் புரியுது தான. நான் என்ன அர்த்ததுல சொல்றேன்னு உனக்குப் புரியும் தான. அப்றம் ஏன் என்னைக் கேக்குற? நீ ஆம்பள. உனக்கு ஒன்னுமில்ல. ஆனா நான்... பலத சந்திக்க வேண்டி வரும். வேண்டாம் கார்த்திக்… இனி நாம பாத்துக்காம இருக்குறது தான் நல்லது."
"அப்படின்னு உங்கண்ணே முரளி சொல்லச் சொன்னானா?" என்க, அவள் அதிர்ந்து முழித்தாள்.
"அடுத்த மொற அவெ நமக்குள்ள என்னன்னு கேட்டான்னா, தைரியமா சொல்லு, நானும்… கார்த்தியும்… லவ் பண்றோம்ன்னு." என்றான் அவளின் நேத்திரத்தில் தன் பார்வையைக் கலந்த படி.
" கார்த்தி… நீ… என்ன சொல்ற.?" என்றவளுக்கு அவன் சொன்னதும் நாம் கேட்டதும் சரிதானா என்று சந்தேகமே பிறந்தது. திருதிருவென முழித்தபடி அவனையே விலகாத பார்வை பார்க்க, அவளுக்கு உணவு ஊட்டி விட்டவன்,
"I Love you ன்னு சொல்றேன் ஜோ. கேக்குதா. நான்… உன்னை… காதலிக்கிறேன்." என்றான் உதடுகள் திறக்காத புன்னகையுடன்.
அவளின் இதழில் ஒட்டியிருந்த உணவு விரலால் வருடி எடுத்தவன், ‘நீயும் என்னைக் காதல் செய்கிறாய் தானே?’ என்பது போல் பார்த்து விட்டு,
“ம்… சீக்கரம் முழுங்கு…” என்று அவள் வாய்க்குள் ஒதுக்கி வைத்திருந்த உணவால் உப்பியிருந்த கன்னத்தைத் தட்ட, அவளுக்குத் தான் உள்ளே இறங்கவில்லை.
உணவு மட்டுமில்ல. அவன் கூறிய வார்த்தையும் தான்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..