அத்தியாயம்: 97
"ஹலோ… அப்சத்?. " எனத் தயக்கத்துடன் வந்தது குரல்.
"அப்சத் இருக்கான். நீ யாரும்மா?" அவனின் தாய்.
"எம்பேரு ஜோஹிதா. நான் அவனோட க்ளாஸ் மெட். அவெங்கிட்ட கொஞ்சம் பேசணும். இருக்கானா?" என்க,
"இருக்கான்ம்மா. கூப்பிடுறேன். " என்றவர், அவனை அழைக்க, அவன் வரும் சத்தம் கேட்டது.
" ஹலோ… ஜோஹிதா!"
"நான் உடனே உன்ன பாக்கணும்."
"நாம எப்பயும் பாக்குற க்ரவுண்டுக்கு வந்திடு." என்று அவன் ஃபோனை வைத்தான்.
"யாருடா அது?." என்ற கேள்வியுடன் அவனின் அக்காக்கள் நிற்க, நண்பனின் காதலி எனச் சொல்லிவிட்டு முருகுவை அழைத்துக் கொண்டு க்ரவுண்டிற்குச் சென்றான்..
"அப்சத், கார்த்திக் எங்க? சென்னைக்கி வரலயா? இப்பவும் டெல்லில தான் இருக்கானா? ஏன் உங்க கூட வரல? " எனப் படபடப்புடன் கேள்விகளை அடுக்க,
"அது எதுக்கு உனக்கு? " என முருகு காட்டமாகக் கேட்டான்.
"டேய் சும்மா இருடா. " என நண்பனை அடக்கியவன்,
"ஜோஹிதா, அவெ இன்னும் அங்க தான் இருக்கான். கான்ட்ராக்ட் முடிய ரெண்டு மூணு நாள் இருக்குங்கிறதுனால விட்டுட்டு வந்தோம். "
" ஏன் அந்த ரெண்டு நாளும் இருந்து அவனையும் கூடவே கூட்டீட்டு வந்திருக்கலாம்ல? "
"அவெ என்ன ஐஸ்கூல் பையனா?. ஸ்கூல் முடியிற வர வாசல்ல காத்திருந்து கையப் பிடிச்சிக் கூட்டீட்டு வர." என்ற முருகுவை ஜோஹிதா முறைக்க,
" அது... அவெ தான். " என இழுத்தான் அப்சத்.
"எங்க தங்கிருக்கான்?. ரெண்டு மூணு நாள்னா இப்ப முடிஞ்சிருக்குமே? நீங்க ஊருக்கு வந்தே பத்து நாள் ஆச்சே! ஏன் இன்னும் ஊருக்கு வரல?. "
" ம்… அது முடிச்சிருச்சி தான். ஆனா ஏன் வரலன்னு அவெங்கிட்ட தான் கேக்கணும். அவங்க சொந்தக்காரங்க வீட்டுல தான் இப்போதைக்கி இருக்கான். "
"அவனோட ஃபோன் நம்பர் *** தான. நான் ட்ரெய் பண்ணேன் அவெ எடுக்கல. "
"எதுக்கு எடுக்கணும்? நீ எடுத்தியா? உனக்கு அவெ எத்தன முறை கால் பண்ணிருப்பான். அப்பெல்லாம் முறுக்கிட்டு தான நின்ன. இப்பையும் அப்படியே இரு." என் வெடுக்கென்று பேசினான் முருகு.
"டேய் ஏண்டா!!"
" சும்மா இருடா!. நீ இவளப் பாக்கத்தா கூட்டீட்டு வந்தேன்னு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன். பொண்ணா இது. இவளா வந்து காதல அவெங்கிட்ட சொன்னப் போ, என்னெல்லாம் யோசிச்சான்னு தெரியுமா!
இவ சுகமா! சொகுசா! வாழ வைக்கணும் விடிய விடிய படிச்சான். என்னென்ன பண்ணா இவ அப்பா வீட்டுல இருந்த மாதிரியே இவள வாழ வைக்க முடியும்னு பாத்து பாத்து செஞ்சான். இவ கூட எப்படி எல்லாம் வாழணும், இவ குடும்பத்த எப்படியெல்லாம் சமாளிக்கணும்னு எல்லாத்தையும் இவளுக்காக யோசிச்சான். அப்றம் தான் இவளோட காதல ஏதுக்கவே செஞ்சான்.
ஆனா இவ!! குடும்பத்துல இருக்கறவங்க பேச்ச கேட்டு சண்ட போட்டுட்டு போய்ட்டா. காதலிக்கும் போது அந்தக் குடும்பத்திட்ட பர்மிஷன் கேட்டுட்டு வந்து காதலிச்சிருக்க வேண்டியது தான. ஏன் செய்யல?
காதலிக்கும் போது வர்ற சந்தோஷத்த ஏத்துக்கிட்டிங்கல்ல. அப்ப பிரச்சன வரும் போது கிடைக்கிற கஷ்டத்தையும் கூட இருந்து ஏத்துக்கணும்ல. அப்படி ஏத்துக்க முடியாதுன்னா காதலிக்கவே கூடாது. ஏன் அடுத்தவெ வாழ்க்கைய காதல்கிறேங்கிற பேர்ல கெடுக்குறீங்க?" எனக் காட்டமாக கத்த, ஜோஹிதா அமைதியாக இருந்தாள்.
"இப்ப கார்த்தி எங்க? நான் அவன பாக்கணும். " எனச் சிறிய குரலில் அவள் சொல்ல,
" மேடம் நீங்க அவன தொலைச்சிட்டீங்க. வீட்டுச் சாவிய தொலைக்கிற மாதிரித் தொலச்சிருந்தா கூடத் தொலச்ச இடத்திலேயே தான் இருக்கும். போய் எடுத்துக்கலாம். ஆனா நீங்க தொலச்சது உங்கள உயிர நினைச்ச ஒருத்தன. சும்மா தேடுனாலாம் கிடைக்க மாட்டான்.
பேசாட்டிக்கி உங்களுக்கு ஏத்த மாதிரி உங்க வீட்டுல மாப்பிள்ள பாத்து வச்சிருப்பாங்க. அவனக் கட்டிக்கிட்டு சந்தோஷமா வாழுங்க. எங்க கார்த்திக்க விட்டுடுங்க. இப்பதான் உங்கள மறந்திட்டு நிம்மதியா இருக்கான். சும்மா சும்மா மூஞ்சிய காட்டி அதா கெடுத்திடாதீங்க. " என ஜோஹிதாவிடம் கூறியவன், திரும்பி அப்சத்தை பார்த்து,
" நீ நின்னு நிதானமா பேசிட்டு வா. நான் போறேன்." என்றவன் நொடியும் நிற்காது நடந்தான்.
' இவளுக்க டயம் பாஸ்க்கு காதலிக்கிறதுக்கு எம்மச்சான்ந்தா கிடைச்சானா. ' என முணுமுணுத்து கொண்டே முருகு சென்றது இருவரின் காதிலும் நன்கு கேட்டது.
" நீ எதுவும் நினைச்சிக்காத ஜோஹிதா. அவெ அப்படி தான். மனசுல எதையுமே வச்சிக்க மாட்டான். படபடன்னு பேசிடுவான். நீ வீட்டுக்கு போ. கார்த்திக்கிட்ட நான் பேசிட்டு உனக்கு தகவல் சொல்றேன். "
"உடனே நீ டெல்லிக்கி போக முடியுமா அப்சத்?. "
"ஏன் ?"
"டில்லில கலவரமாம். ஊரடங்கு போட்டிருக்காங்களாம். நம்ம காலேஜ் பக்கத்துல இருக்குற எதோ ஒரு வழிபாட்டு தளத்த எரிச்சிட்டாங்களாம். அவன பத்திரமா இருக்கானா இல்லையான்னு தெரியல. ஒரு மாசமா நான் அவன பாக்கல. ப்ளீஸ் நீ அவனப் பாத்து கையோட கூட்டீட்டு வர முடியுமா? " எனக் கண்ணீருடன் கேட்க, ‘சரி…’ எனத் தலையசைத்தான் அப்சத்.
அவள் சொன்னது போல் கலவரம் தான். அது மதக் கலவரம். மத்திய நேரத்தில் மலமலவென ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள, கல்லூரியில் இருந்த மாணவர்களின் நலன் காக்கும் பொருட்டு வந்திருந்த மாணவர்களை வெளியே விடாது கல்லூரியிலேயே தங்கிக் கொள்ள நிர்வாகம் ஏற்பாடு செய்து தந்தது. அந்தக் கலவரம் அடங்கும் வரை நாங்கள் பார்த்துக் கொள்வதாக, மாணவர்களின் பெற்றோருக்குத் தகவலும் அனுப்பியது அந்த நிர்வாகம்.
தலைநகரில் கலவரம் என்னும் தீ கட்டுக்குள் வர ஒரு வாரம் எடுத்துக் கொண்டது. அப்சத், கார்த்திக் நலமாக உள்ளான் என்பதை மட்டும் சொன்னான். எங்கே இருக்கிறான் என்பதை சொல்லவில்லை.
" எனக்கே அவெ சொல்லல ஜோஹிதா. நல்லா இருக்கேன். வந்திடுறேன்னு மட்டும் தான் சொன்னான். கால் பண்ண சொல்றேன். " அப்சத்.
மனம் பதைபதைத்து. எதுவோ தவறாக, தான் விரும்பாத ஒன்று நிகழ உள்ளதை மனம் சொல்லிக் கொண்டே இருக்க, ஜோஹிதா சிந்தித்தபடியே வளம் வந்ததாள். அவளை அப்படியே விட கூடாது என விகாஸ்ஸும் அவளின் தந்தையும் சேர்ந்து மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்.
நவீன் தான் அது. எப்படி எப்படியோ பேசி விகாஸ்ஸான் மனத்தை வென்று விட்டான்.
பெண் பார்க்கும் படலம் நடக்க, அவளைத் தயாராகி வரச் சொன்னான் விகாஸ்.
"எதுக்கு இதெல்லாம் பண்றீங்க. நான் தான் கார்த்திக்க தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேனே. " என ஜோஹிதா அவன் தந்த புடவையைத் தூக்கி எறிய,
" உனக்காக எதையும் விட்டுக்குடுக்க தயாரா இல்லாத ஒருத்தெங்கூட எப்படி நீ வாழுவ? அவன மறந்திட்டு நாங்க பாக்குற பையன கல்யாணம் பண்ணிக்க. அது தான் உனக்கு நல்லது. உன்னோட அப்பாம்மா உனக்கு நல்லது தான் செய்வாங்க. "
" அப்ப கார்த்திக்க தான மாப்பிள்ளையா கூட்டீட்டு வந்திருக்கணும். எனக்கு அவன தான் பிடிச்சிருக்கு. " என உறுதியாக கூறினாள் அவள்.
'இதைக் கார்த்தியிடம் சொல்லாது இவனிடம் சொல்லி என்ன பயன்?. '
" ஜோஹிதா அடம்பிடிக்காத. ரெடியாகு. " என்க, அவள் எழுந்து ஹாலுக்கு வந்தாள்.
" வணக்கம் அங்கிள். நான் தான் நீங்க பாக்க வந்த பொண்ணு. ஏன் அலங்காரம் பண்ணாம வந்திருக்கேன்னு பாக்குறீங்களா!. எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்ல. நான் வேற ஒருத்தர விரும்புறேன். அது உனக்கு தெரியும் தான நவீன். அப்றம் எந்த நம்பிக்கைல அப்பாம்மாவ கூட்டீட்டு வந்த.” என் நவீனைப் பார்த்து கேட்டவள்,
“தட்ஸ் ஓகே. இப்ப நீங்க போகலாம். இனி பொண்ணு பாக்கணும்னா! முதல்ல பொண்ண பாத்து கல்யாணத்துல விரும்பம் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சிட்டு வந்து கேளுங்க. இல்லன்னா நீங்க தான் அவமானப்படுற மாதிரி இருக்கும்." என வந்தவர்களை நேருக்கு நேராக பேசி துரத்தி விட்டாள்.
விகாஸ், கோபத்தில் அவளைக் கன்னத்தில் அறைந்து திட்ட, அவள் கோபமாக தன் அறைக்குள் சென்று தாழிட்டாள். மூன்று நாட்களாகியும் திறக்கவில்லை. உணவு உண்ணாது அவள் பிடிவாதம் பிடிக்க, மகளுக்காகப் பெற்றவர்கள் தான் பணிந்து போயினர்.
"நீ அந்த பையன கல்யாணம் பண்ணிக்கிறதுல எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லம்மா. " என்றவர்களை அழைத்துக் கொண்டு டில்லி வந்தாள் அவள்.
உடனே கார்த்திக்கைப் பார்த்து தங்களின் கல்யாணத்திற்குத் தன் குடும்பம் எவ்வித நிபந்தனையும் இடவில்லை என்று சொல்ல வேண்டும். குடும்பமே அவனிடம் சென்று தங்களின் திருமணத்தைப் பற்றி பேச வேண்டும் என்று அனைவரையும் இழுத்து சென்றவளுக்குத் தெரியாது அங்கு நடந்து கொண்டிருப்பது.
கலவரம் அடங்கி இயல்பு நிலை திரும்பி இருந்தது. வழக்கம் போல் அனைத்தும் செயல் பட, விகாஸ்ஸை அழைத்துக் கொண்டு கார்த்திக்கிற்காகக் காத்திருந்தாள் ஜோஹிதா.
அவனும் வந்தான்... பைக்கில்…
அவனின் பின்புறம் ஜோதிவாணி.
ஜோதியின் கரம் கார்த்தியின் இடையை இறுக பற்றி இருந்தது. அவன் ஒற்றை கையால் அதைத் தட்டி கொடுத்து, பின் பக்கமாகச் சாய்ந்து அவளின் சிகை கலைத்து விளையாட, அவனின் கரத்தைத் தட்டி விட்டு, முதுகில் செல்லமாக ஒரு அடி போட்டவள், அவனின் முதுகில் ஒன்றிக் கொண்டு முகத்தைப் புதைத்தாள்.
பைக்கின் பின் சீட். அந்த இடம் தன் மனைவிக்காது என்பவன் அதில் ஒரு பெண்ணை ஏற்றிக் கொண்டு வருகிறான் என்றால், இருவரும்... இருவரும்... அதற்கு மேல் நினைத்து பார்க்க மனத்தில் தெம்பில்லை.
" நீ ஏதோ ரெண்டு வர்ஷமா அவெ உனக்காகக் காத்திருக்கான்னு சொன்ன. பாத்தா அப்படி தெரியலயே. எப்ப உந்தலை மறையும், எப்ப வேற ஆள பிடிப்போங்கிற மாதிரி இருக்கு, அவனோட செயல். " என்ற விகாஸ்ஸிற்குச் சந்தோஷம் தான். இனி தங்கையின் பக்கம் வர மாட்டான். அவளும் அவனை நினைத்துக் கொண்டு பிடிவாதம் பிடிக்க மாட்டாள்.
உடைந்த கண்ணாடி பாத்திரம் போல் ஆனது ஜோஹிதாவின் மனம்.. அவனின் மீது கோபம் உள்ளது தான். அதைச் சில ஆண்டுகளாகக் காட்டிக் கொண்டும் இருக்கிறாள் தான். ஆனால்… அதற்காக அவன் மீது கொண்ட காதலை எப்படி மாற்றிக் கொள்வது.
அது மாறாது அப்படியேத்தான் இருந்தது. ஆனால் அவனின் காதல் மாறி இருந்ததே. மலர் விட்டு மலர் தாவும் வண்டாய் இவள் இல்லையெனில் அவள் என்று பறந்து விட்டானே.
கூடாது… அப்படி பறக்க விடக் கூடாது. அவனை பார்த்த நொடியில் இருந்து தன்னுள் உண்டாகியிருந்த காதலை இழக்கக் கூடாது. அதை அடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க தொடங்கினாள். விட்டு கொடுக்க கூடாது… தன் காதலை யாருக்காகவும் யாரிடமும் விட்டுக் கொடுக்க கூடாது அதிலும் அந்த வேலைக்காரியிடம் கூடவே கூடாது என்ற பிடிவாதம் வந்தது.
___________
செவ்வாய்க் கிழமை.
வழக்கம் போல் தன் புத்தகங்களை பையில் எடுத்து வைத்துக் கொண்டு புறப்பட தயாராக இருந்தாள் வாணி.
" க்கும்... இந்த ** லாம் படிக்கலன்னு யாரு கேட்டா!. வீட்டுல வேலை பாக்க படிச்சிருக்கணுமா என்ன! இவ சீவி சிங்காரிச்சி மினுக்கிக்கிட்டு போகுறத பாத்தா பத்திட்டு எரியுது. என்ன பண்ண காச வாங்கியாச்சி. ச்ச… ஒன்னு கெடக்க ஒன்னு ஆகட்டும் அப்றம் இந்தச் சுப்பு யாருன்னு காட்டறேன் அந்தப் பங்களாகாரிக்கி. " எனச் சிவரஞ்சனியைத் தான் திட்டி கொண்டு இருந்தாள்.
ரஞ்சனி, மாதா மாதாம் வேலை பார்க்காமலேயே வாணிக்குச் சம்பளம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். வாணி கல்லூரிக்கு செல்லவில்லை எனில் அது நிறுத்தப்படும்.
" இவ வீட்டுல வேலை பாத்தப்ப குடுக்கிற சம்பளத்த விட, பாக்காதப்ப தர்ற சம்பளம் தான் அதிகம். அந்த ஒன்னுக்காத்தா இந்த *** காலே…ஜீக்கி அனுப்பேறேன் காலேஜீக்கி... க்கும்… இல்லன்னா எம்முன்னாடி மினுக்கிகிட்டு நடக்க விட்டுடுவேனா என்ன!. காலு ரெண்டையும் உடச்சி அடுப்புல வச்சிட்ட மாட்டேன். வீணா போன எம்புருஷனுக்கு வேலை வெட்டி இல்லாம போச்சு. பெத்தது தறுதலையா சுத்துது. பங்களா வீடு கட்டுற எங்கனவ இந்தச் சிறுக்கியால மட்டும் தான் நிறவேத்த முடியும். ஹிம்… அந்தப் பங்களாகாரி தர்றத வச்சி தான் கட்ட முடியும்." எனப் புலம்பிய படியே இருந்தார் சுப்பு.
இதனால் தான், சுப்புவாள் வாணியை அடிக்க, உதைக்க, காயப்படுத்த மட்டுமே முடிந்தது. கல்லூரிக்குச் செல்வதை நிறுத்த முடியாது போனது.
"அந்தப் பங்களாகாரி இவள வெளிநாடு கூட்டுட்டு போக திட்டம் போட்டு காசு தர்றான்னு தெரியாத அளவுக்கு ஒன்னும் இந்த சுப்பு முட்டாளா இல்ல. அத எப்படி முறியடிக்கணும்னு எனக்கு நல்லா தெரியும். " என்ற சுப்புவின் கருவல் வாணிக்குக் கேட்காது போனது. கேட்டிருந்தாலும் அவளால் ஒன்றும் செய்ய முடியாது என்பது வேறு விடயம்.
கையில் கட்டுடன் அமர்ந்திருந்த முரளி அவளை முறைத்து பார்க்க, அவனைக் கண்டு கொள்ளாது வீட்டை விட்டு வெளியேறினாள் வாணி.
கட்டா…
ம்… கட்டு தான்… நம் கார்த்தி தான் காரணம். இருவரும் பழகுவதைக் கண்டு கார்த்திக்கிடம் சென்று வாணியைப் பற்றித் தரக்குறைவாக பேச, அவன் கையை உடைத்து அனுப்பி விட்டான்.
அவன் தான் அவளின் அண்ணன் என்று மறைத்தது, வாணியின் தலை முடியை பிடித்து இழுத்துச் சென்றதை நேரில் பார்த்தது, இப்போது அவளை வேசி போல் சித்தரித்து பேசுவது எனக் கார்த்திக்கிற்கு ஆத்திரம் கொண்டு அடிக்க பல காரணங்கள் இருந். அவனை உயிருடன் விட்டதே பெரியது.
என்றுமில்ல குதுகலத்துடன் வாணி கல்லூரி செல்ல, வாசலில் கார்த்தி நின்று கொண்டிருந்தான்.
" ஹாய் கார்த்தி. " என்றவளின் கையில் ஒரு கவரை தினித்தான். அதில் இருந்தது சுடிதார். ‘இதை ஏன் இப்போது தன்னிடம் தருகிறான்?’ எனப் புருவம் சுருக்கி யோசித்தவளிடம்,
" லாஸ்ட் பீரியட்குள்ள எக்ஸாம் முடிச்சிட்டு, இத மாத்திட்டு கேட் பக்கத்தில நில்லு. "
" எதுக்கு கார்த்தி?"
" வாடின்னா வா. சும்மா சும்மா ஏன் எதுக்குன்ட்டு. வா…" என்றவன் சொன்னது போல் உடையை மாற்றிக் கொண்டு வந்த அவளுக்குப் பெரிய அதிர்ச்சி.
கார்த்தி, அவனின் பைக்குடன் நின்று கொண்டிருந்தான். அத்தோடு அவளை அதில் ஏறும் படி சொல்ல, அவளுக்கு ஆனந்த அதிர்ச்சியாகிப் போனது.
" கார்த்தி... நானா! பின்னாடி உக்கார?. "
"இங்க வேற யாரு இருக்கா!. ஏறு சீக்கிரம். " எனத் துரிதப்படுத்தினான். அவள் விழி விரிய அந்த பைக்கைச் சுற்றி சுற்றி வந்தாள்.
அந்த பைக்கில் அவனுடன் பயணம் செல்வது அவளின் ஆசைகளில் ஒன்று. அதை நிறைவேறிய சந்தோஷத்தில் நிற்க,
" ஜோ நேராச்சி. ஏறு…" எனக் கத்த,
"ஆனா கார்த்தி. "
" எதுவா இருந்தாலும் பைக்ல போகும் போது சொல்றேன். ஏறு. " என்றான் சிறு கோபத்துடன். அந்த பைக்கில் இருபுறமும் கால் போல் ஏறி அமர்ந்தாள் வாணி. பைக் பறந்தது.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..