அத்தியாயம்: 98
மெல்லிய இளங்காற்று வீசய அது அந்தி சாயும் நேரம். சூரியன் என்னும் ஒளிப்பந்து மெல்ல மெல்ல மலைகளுக்கு இடையே ஒளிந்து கொண்டிருந்தது. செல்லும் அது தனியாகச் செல்லாது, தந்து கொண்டிருந்த வெளிச்சத்தையும் சேர்த்தே கூட்டி செல்ல, மாலை பொழுது மலர்ந்து இரவை வரவேற்றுக் கொண்டிருந்தது.
காற்றில் இரு கரத்தையும் நீட்டி, பறப்பது போல் அல்லாது, காற்றில் நீந்துவது போல் அசைத்துக் கொண்டே வந்ததாள் வாணி.
"கார்த்தி இன்னும் ஸ்பீடா போக முடியுமா? " எனக் கத்தினாள் அவள்.
"கண்டிப்பா ஜோ. " என்றவன் ஆஸ்லெட்டரை திருக, பைக்கின் இரு சக்கரங்களும் அதி வேகத்தில் சுழன்றன. வெகு தூர பயணமாய்ச் சென்று கொண்டிருந்தனர் இருவரும்.
என்ன பயணம்? எப்பொழுது சென்றனர்?. எப்படி?. என்பதை அறிய கார்த்தி வாணியை பைக்கில் ஏற்றிக் கொண்டு கல்லூரியை விட்டு புறப்பட்ட காலை நேரத்திற்குச் செல்ல வேண்டும்.
" எங்க போறோம் கார்த்தி?"
"ஊர விட்டு. "
" ஹாங்… என்ன சொன்ன?"
"உன்னைக் கடத்தீட்டுப் போறேனேன்னு சொல்றேன்."
"விளையாடாத கார்த்தி. "
" விளையாடத்தாக் கூட்டீட்டு போறேன். " எனக் கண்ணாடியில் தெரிந்த அவளின் முகத்தைப் பார்த்து கண்ணடிக்க, அவள் செல்லமாக முதுகில் அடித்து, பைக்கை நிறுத்த சொல்லி அடம்பிடித்தாள்.
ஓரமாக நிறுத்தினான் அவன்.
"எங்க போறோம்னு சொல்லாம ஏறி உக்கார மாட்டேன். " எனக் கரங்களை கட்டிக் கொண்டு முகம் திருப்ப,
" நீயால்லாம் ஏற வேண்டாம். நானே உன்னத் தூக்கி உக்கார வைக்கிறேன். " என அவளைத் தூக்க இடையில் கரம் பத்திக்க,
" கார்த்தி... ப்ளிஸ்... எதுக்கு யாருமே இல்லாத ரோட்டுல போறோம். எங்க போறோம். பயம்மா இருக்கு கார்த்தி." எனச் சுற்றி முற்றி மரங்களைத் தவிர வேறு எதையும் காணாது வெளிரிய முகத்துடன் அவனின் கையில் துவள, அவளின் கையில் ஒரு நோட்டைக் கொடுத்தான் கார்த்திக். அதைப் பிரித்து பார்த்தவள்,
"இது எப்படி உங்கிட்ட கிடைச்சது கார்த்தி. " என்றவள் புன்னகையுடன் அந்த நோட்டை ஆசையாய் வருடினாள்.
"ஒரு நாள் ஒரு பொண்ணு போகிக்கி இதக் தூக்கி போட்டு கொளுத்த பாத்துச்சி. நான் பின்னாடியே போய்த் தீக்குள்ள இருந்த இத எடுத்து படிச்சி பாத்தேன். அந்தப் பொண்ணுக்கு உதவி செய்யணும்னு தோணுச்சி. செய்யலாமா? " என்றான் கள்ளப் புன்னகையுடன்.
அவன் சொன்னது புரியாது பார்த்தவளிடம், விளக்க தொடங்கினான்.
அது வாணியின் நோட் புக் தான். அவளின் ஆசைகள் அனைத்தையும் அப்சத் தான் நோட்டில் எழுதி வைக்க சொன்னானே. அதனால் ஒன் குயர் நோட்டில் உக்கார்ந்து உட்கார்ந்து எழுதி வைத்தாள். ஒன்று இரண்டு இல்லங்க, நோட்டில் பாதி பக்கத்துக்கு அவளோடைய ஆசையைத்தான் எழுதி வைத்திருந்தாள்.
காலை சூரிய உதயத்தைக் கையில் அவளுக்குப் பிடித்த கடுங்காப்பியுடன் ஆரம்பிப்பதில் தொடங்கி நள்ளிரவு நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டே வெட்ட வெளியில் படுப்பது வரை, அவளின் சிறு வயதில் இருந்து நிறைவேறாத அனைத்தும் அதில் இருந்தன.
முரளியின் பேச்சால், ‘நமக்கு அது எட்டாத விசயம். எனக்கு வாய்த்த வாழ்க்கை அவ்வளவு தான்.’ என ஏக்கத்துடன் சில மாதங்களுக்கு முன்பு தான் தூக்கித் தீயில் போட்டாள். அது தீக்கு முழுதாக இறையாகும் முன் எடுத்தவன் அவளின் கையெழுத்தில் மின்னிய அந்த நோட்டைப் பத்திரப்படுத்தினான்.
அப்போதே அதை நிறைவேற்ற திட்டங்களைப் போட்டு வைத்தான். காதலாய் அல்ல. இப்போது அதில் எழுதி இருந்த அத்தனையையும் நிறை வேற்ற சரியான நேரம் கூடி வந்தது. அதற்கு தான் காதலுடன் அழைக்கிறான்.
" உன்னோட ஒவ்வொரு ஆசையும் நிறைவேறுனதும் அதை அடிச்சிட்டே வரணும். இந்தா… " என அவளின் கையில் ஒரு பேனாவை கொடுத்து அழைத்து சென்றான்.
எங்கே என்றால்... குலுமணாலிக்கு.
ஹிமாச்சல் பிரத்தேசத்தின் சிறந்த சுற்றுலா தளம் அது. பனி நிறைந்த அந்த இடம் தேனிநிலவு ஜோடிகளுக்குப் பிடித்த இடம்.
அவன் விளையாடுகிறான். கல்லூரி முடியும் தருவாயில் தன்னைக் கொண்டு வந்து வாசலில் விட்டு விடுவான் என்று நினைக்க, பைக் எங்கும் நிற்காது இருளையும் பொருட்படுத்தாது செல்ல,
" கார்த்தி நீ நிஜமாவே பைக்ல குலுமணாலி வரைக்கும் போகப் போறீயா?" எனச் சந்தேகமாகவும் சிறு பயத்துடனும் கேட்டாள். சுப்புவிற்குத் தெரிந்தது, அவ்வளவு தான் ஆட்டுக்கறியை அறுத்து உப்பு தடவி வெயிலில் காய வைத்து செய்யப்படும் உப்பு கண்டம் போல் வாணியைக் கண்டமாக்கி விடுவாள்.
" அதென்ன போகப்போறீயா. நீயும் தான கூட இருக்க. போறோமான்னு கேளு?" என அவளின் வார்த்தைகளைத் திருத்தம் செய்ய,
" எனக்கு இப்பத் தமிழ் பாடம் எடுக்க இதுவா நேரம். ஒழுங்கா சொல்லு கார்த்தி. " எனச் சிடுசிடுக்க.
"என்ன பாத்தா ஜோக்கர் மாதிரி இருக்கா!. இல்ல பொய் பேசுறவெ மாதிரி இருக்கா? " எனக் கோபமாகக் கேட்க, அவன் அவளின் ஆசைகளை நிறைவேற்றுவதில் உறுதியுடன் இருப்பது தெரிந்தது.
" எவ்ளோ தூரம் போகணும். " மறைமுகமாக சம்மதம் சொன்னாள் சின்ன குரலில்.
"எங்க?"
"நீ சொன்ன இடத்துக்கு."
"குலுமணாலி…"
"ம்… அதுக்குத்தான்.”
“15 - 18 ஹவர்ஸ் ஆகும். க்ளைமேட் அப்றம் டிராபிக்க பொருத்து டயமிங் கொஞ்சம் மாறலாம். ஆனா டிரிப் உறுதியா போறோம்."
" என்ன!!" என அதிர்ந்து விழித்தவளிடம்…
" ஊர் திரும்ப நாலு நாள் ஆகும்." என்று கூறி அவன், அது எங்கிருக்கிறது, அங்கு என்னென்ன உள்ளது, எங்கெல்லாம் செல்ல போகிறோம் என்று சொன்னதும்,
" அத்தன இடத்தையும் பைக்லயேவா சுத்தி பாக்க போறோம். அவ்ளோ நேரமும் எப்படி பைக்லயே உக்காந்திருக்க முடியும். இப்பவே இருட்டீடுச்சி. இன்னும் போகணும்னு சொல்ற. நைட் எங்க தங்குவோம்?. சாப்பாடு?. அதெல்லாத்தையும் விட எங்க பெரியம்மாக்கு நான் என்ன பதில் சொல்வேன்? எப்பத் திரும்பி போவோம்? நல்லபடியா ஊர் திரும்புவோமா?" எனச் சோகமாக கேட்டு அவனின் முதுகில் சாயந்து கொண்டாள். அவன் மீண்டும் பைக்கை நிறுத்தினான்.
அது ஒரு ஹோட்டல். நல்ல உயர்தர விடுதி என்று சொல்லி விட முடியாது. நடுத்தரத்திற்கும் கீழ் தான். அதில் நிறுத்தி அவளை உணவுன்ன அழைக்க, அவள் உம்மென முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
" சாப்பிடு ஜோ. நாலு நாள்ல உன்னைக் கொண்டு போய் பத்திரமா வீட்டுல விட்டுறேன். நம்பு.." என்றவன் ரொட்டியைப் பிட்டு ஊட்டி விட்டான்.
" எதுக்கும் நீ எங்கிட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு இந்த ட்ரிப்ப ப்ளான் போட்டிருக்கலாம். நாலு நாள்னு சொல்ற. எங்க போனன்னு பெரியம்மா கேட்டா என்ன பண்ணுவோன். "
‘அவளுக்கு அவள் கவலை.’
"இப்ப உனக்கு அந்தச் சுப்பாத்தாவ நினைச்சாத்தான் பயமா?. எங்கூட தனியா இருக்கப்போறத நினைச்சி இல்லயா!" எனக் கேட்க, அவனின் வலது கரத்தில் தன் கையை கோர்த்தவள்,
" நீ எங்க கூப்பிட்டாலும் உங்கூடவே வர நான் எப்பவுமே ரெடி. நீ என்னை என்ன பண்ணாலும் அது எனக்கு பயத்த தராது. " எனத் தோளில் தலை சாய்க்க, அவளின் கரத்தை சுரண்டி ஹோட்டலில் ஓடிக் கொண்டிருந்த டீவியைக் காட்டினான் அவன்.
அதில் டெல்லி கலவரத்தைப் பற்றிய செய்தி வந்து கொண்டிருந்தது. அதில் அவர்களின் கல்லூரியை பற்றியும் சொல்ல... ஆ வென வாயைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தவளின் வாயை மூடி,
" அங்க இருந்திருந்தா உன்னால காலேஜ்ஜ விட்டு வெளிய வந்திருக்கவே முடியாது. கலவரம் அடங்க எப்படியும் ஒரு வாரம் ஆகும். சுப்பாத்தாவையும் மத்தவங்களையும் பொறுத்த வரை நீ காலேஜ்க்குள்ள தான் இருக்க. ஓகே வா.. " எனக் கேட்டான். அவளின் செல்ஃபோன் இசைத்தது. ராஜி தான். ஊருக்குள் நடக்கும் விசயத்தைச் சொல்லி பத்திரமாக இருக்க சொன்னாள்.
" உனக்கு எப்படிக் கலவரம் வரும்னு தெரியும்? " என அடுத்த கேள்வியை கேட்க,
" நீ அமிதாப்பச்சன்! நான் கோன் பனேக்கா க்ரேர்பதி விளையாட வந்திருக்கேன். நீ கேக்குற எல்லா கேள்விக்கும் பதில் சொன்னா எனக்கு ஒரு கோடி கிடைக்கும். சரியா? " என்க, அவள் புன்னகைத்தாள். அதை ரசித்து பார்த்தவன் உணவை அவளுக்கு முழுமையாக ஊட்டி விட்டான்.
அவனுடன் இருக்கப் போகும் நான்கு நாள்களை எண்ணியபடியே மகிழ்வுடன் ஹோட்டலை விட்டு வெளியேறினாள்.
" நீ டயர்டா இருக்கியா!" என்ற கார்த்தி பைக் சாவியைச் சுழற்றிய படி புருவங்களை ஏற்றி இறக்க,
" இல்லை… "
"அப்ப நைட் டிராவல் பண்ணலாமா? " எனக் கேட்க, இரவில் அவனுடன் பைக் பயணம் கேட்கவா வேண்டும் வேகமாக தலையசைத்தாள்.
நள்ளிரவு வரை பயணம் செய்தவர்கள் அருகில் இருக்கும் ஊருக்களில் சிறிய ஹோட்டலில் அறையெடுத்துத் தங்கினர். செல்லும் வழியெல்லாம் கிடைத்ததை உண்டு, பொழியும் மழையில் நனைத்து சேர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அங்கு வாணியின் உடலில் உள்ள முடிகள் அனைத்தும் சிலிர்த்து நின்றன.
பனி…
வெள்ளை மல்லிகைப்பூவைத் தரையில் கொட்டினார் போல் இருக்கும் அதைத் தொட்டு விளையாடுவது என்பது பலரின் கனவு. பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறாள். கற்பனையில் வெள்ளை மழைப் பாடலை யாருமில்லாது டூயட் ஆடியிருக்கிறாள். இப்போது நேரில் பார்ப்பது புதுவிதமாக இருந்தது.
குழந்தை போல் அதைக் கையில் ஏந்தியளைத் தன் கையில் வைத்திருந்த புகைப்பட கருவியில் படம் பிடித்தான் கார்த்தி.
பனியில் சறுக்கி விளையாடுவது முதல் அங்கிருக்கும் சாகச விளையாட்டுகள் அனைத்திலும் 'என்ன விட்டுடு… கார்த்தி எனக்கு பயமா இருக்கு.' என அடம்பிடித்தவளைக் கேலியும் கிண்டலுமாய், மிரட்டி, உளுக்கி இழுத்து செல்வது அவனுக்குப் பிடித்திருந்தது.
வெள்ளிக்கம்பியை உருக்கி ஊற்றினார் போல் ஓடிய ஆற்றின் மேல் மரக்கட்டைகள் பலவற்றைக் கயிறு கொண்டு பிண்ணி அமைத்திருந்த தொங்குப் பாலத்தில் பயத்துடன் கார்த்தியின் கரம் பற்றிக் கொண்டு நடந்தாள் என்றால், பாறை முகடுகளில் இடித்தோடிய ஆற்றில், ரப்பர் டியூப்பில் போட்டிங் செல்லும் போது உயிர் போய் வந்தது அவளுக்கு.
ஆகாயத்தில் பறப்பது தொடங்கி அந்த ஆகாயத்தை இரவில் ரசிப்பது வரை அவளுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்தான் கார்த்தி.
விறைக்கும் குளிரில் உரசிக் கொண்டு நடக்கையில் இருவருமே இந்த உலகில் இல்லை. ஒவ்வொரு நொடியையும் ரசித்து அனுபவித்து மகிழ்ந்தனர்.
"Hay... Jo… Are you happy now?" இரு கரத்தையும் தலைக்கு மேலே கட்டியபடி கட்டிலில் கிடந்த அவன் நிமிர்ந்து விட்டத்தைப் பார்க்க, அதில் நட்சத்திரங்கள் மின்னும் காட்சி அழகாய் தெரிந்தது.
"Yes... ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்த மாதிரிச் சந்தோஷமா நான் இருந்தது இல்ல. இப்ப இந்த நொடி செத்துப்போன்னு சொன்னா கூட… சாக நான் தயார். " என்றவளும் அவனின் கரத்தை தலையணையாக்கி வானில் தெரிந்த காட்சியை ரசித்தாள்.
“வாழ வான்னு கூப்பிட்டா! இவ சாகப் போறாளாம்…’ என்று விட்டு அவளின் தலையில் தட்டி தன்னோடு அணைத்து கொண்டான் கார்த்தி.
" கண்ட படி பேசாத ஜோ. இந்த உலகத்துல எந்த உயிரையும் கடவுள் தேவையில்லாம படைக்க மாட்டாரு. சின்னத் துரும்பா இருந்தா கூட அதுக்குன்னு சில கடமைய வச்சிருப்பார். நம்மோட கடம முடியாம பாதிலயே விட்டுட்டு போக கூடாது.
உனக்கும் சில கடம இருக்கும். அது முடியாம. நீயே நினைச்சாலும் உன்னோட உயிர மாயச்சிக்க முடியாது. " என்றவனின் டீசர் பட்டனைத் திருகி விளையாடத் தொடங்கினாள் வாணி.
இருவரும் ஒரே அறையில் தான் இரண்டு நாட்களாகத் தங்கி உள்ளனர். ஒரே கட்டிலில் தான் கிடந்தாலும் தன் உணர்வுகளுக்கு விடுதலை கொடுக்கவில்லை. இதுவரை.
" அப்ப எனக்கும் சில கடம இருக்கும்னு சொல்ற?"
"ம்… எங்கூடவே இருக்குறது. என்னோட கடைசி நொடி வர… உன்னை விட்டு எங்கயும் போகாம உன்னோட அன்பால என்னை உயிரோட வச்சிருக்குறதுக்கு." என்றவனுக்குள்ள உண்டான காதல் உணர்வானது உண்மை.
முட்டைக் கண் விரிய அவனின் முகத்தைத் தவிர வேறு எங்கும் பார்க்காது இருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டு தன் காதலை சொல்லி தன்னோடு அணைத்துக் கொண்டான் கார்த்திக்.
"முடியுமா கார்த்தி அது… உங்கூடவே நான் இருக்குறது."
"ஏன் அப்படி கேக்குற?"
" ஏன்னா! எங்க பெரியம்மா என்னை விடாது. அது நான் தூக்கி சுமக்குற பாவ மூட்டையா மாறிடுச்சி. இறக்கி வைக்கிறது அவ்வளவு சுலபம் இல்ல. அடுத்து... ம்…. அடுத்து... " என ஜோஹிதாவைப் பற்றி பேசாது தயங்க,
" ஜோ... ஒரு உண்மைய சொல்லவா!. என்னால ஜோஹியா மறக்கவே முடியல. என்னோட ஃபஸ்ட் லவ். சில விசயங்கள தவிர, எங்களுக்குள்ள நல்ல அன்டர்ஸ்டான்ட்டிங் இருக்கு. இப்பவும் அந்த லவ் அப்படியே தான் இருக்கு. " என்க, வாணி எழுந்து அமர்ந்து கொண்டாள்.
" என்னாச்சி ஜோ?" என்று கரம் பற்றி இழுக்க,
"ஒன்னுமில்ல. " என்றவளுக்குக் கார்த்தி ஜோஹிதாவிற்கு இடையில் தேவையற்றது வந்துவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றியது. அதை கார்த்தியிடம் மறைக்காது கூறினாள்.
" இல்ல ஜோ. நீ காரணம் இல்லை. அவளுக்கு அவளோட பிடிவாதம் தான் பெருசா இருக்கு. இப்பவும் நான் தான் அவளுக்காக விட்டுக் குடுக்கணும்னு நினைக்கிறாளே தவிர, எனக்காகன்னு உன்னை மாதிரி யோசிக்கவே இல்ல. ஆனாலும் எனக்கு அவள பிடிக்கும். உன்னையும் பிடிக்கும். லூசுத்தனமா இருக்குள்ள என்னோட பேச்சு.” என்றவன் இரு கருத்தையும் தலைக்கு அடியில் கொடுத்து விட்டத்தை வெறித்தான்.
“எனக்கே என்னை புரிஞ்சுக்க முடியல ஜோ. எனக்கு நீங்க ரெண்டு பேருமே முக்கியமா தெரியுறீங்க. நான் உன்னை விரும்புறதும் நிஜம். ஜோஹிதாவ விரும்புறதும் நிஜம். ஆனா யாராது ஒருத்தர் கிட்ட மட்டும் தான் உண்மையா இருக்க முடியும். அப்படி பாத்தா உங்கிட்ட தான் நான் நானா இருக்கேன். " என்றவன் மீண்டும் அவளைத் தன் நெஞ்சில் கிடத்தினான்.
ஜோஹிதா மீண்டும் வந்தாள் என்ன செய்வது என்று யோசிக்க கூட இல்லை அவன். வர மாட்டாள் என்று உறுதியாக நம்பினான். என்னை வெறுத்து விட்டாள். அவ்வளவு தான். என்று கார்த்திக்கும்.
திரும்ப கேட்டாள் அவளிடமே அவனைத் திருப்பி கொடுத்துவிடுவோம் என்று அவளும் நினைத்தாள்.
இங்கு மனித மனம் இருவருக்கும் இடையே பெண்டுலம் போல் ஆடியது. யாரை விட்டுக் கொடுப்பது. யாரைத் தேர்ந்தெடுப்பது. அந்தக் கேள்விக்கெல்லாம் விடை தேடாது, இந்த நொடி… அதை அனுபவிப்போமே… என்று நினைத்தனர் இருவரும்.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..